Friday, 4 August 2017

கிருஷ்ணாம்பேட்டை ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர்


மது தேசத்தில் எத்தனையோ ஆலயங்கள்... எல்லா இடங்களிலும் உள்ள இறைவன் ஒருவனே ஆனாலும் ஆங்காங்கே பிரதிஷ்டையான அவனுக்கு வெவ்வேறு நாமாக்கள். மன்னர்கள் கட்டிய ஆலயங்கள்... மகரிஷிகள் பிரதிஷ்டை செய்த விக்கிரகங்கள் என்று அவை, காலத்தை வென்று கம்பீரமாக நிலைத்து நிற்கின்றன. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான அந்த ஆலயங்கள் இன்றைக்கும் பொலிவுடன் விளங்கி வருகின்றன. அங்கே குடி கொண்டிருக்கும் இறை வடிவங்கள், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றன. ஒவ்வோர் ஊரிலும் இறைவன் குடி கொண்டிருப்பதற்கு வெவ்வேறு வகையான காரணங்களும், ஆலயம் எழும்பியதற்குப் புராண ரீதியான ஐதீகங்களும், சில இடங்களில் வரலாற்றுக் கதைகளும் கூட உள்ளன.
சென்னப்பட்டினம் எனப்படும் சென்னை நகரில் சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஊடுருவிய அந்நியர்கள், அதிகாரத்துடன் தங்களது கலாசாரத்தையும் இங்கு பரப்பினர். இதனால், மேற்கத்திய பாணியிலான அவர்களது வாழ்க்கை முறை, நம்மையும் தொற்றிக் கொண்டது. எனினும், நமக்கே உரித்தான ஆன்மிகக் கலாசாரம் நம்மிடமிருந்து முற்றிலுமாக அழியவில்லை. நமது ரத்தத்துடன் கலந்த இறை பக்தி, நம்மிடமிருந்து அற்றுப் போகவில்லை. நம்மிடையே எத்தனையோ கலாசாரங்களும் நாகரிகங்களும் ஊடுருவினாலும் பரம்பரை பரம்பரையாக நம் முன்னோர் போற்றி வளர்த்த வேதங்கள் மூலமாகவும், அவற்றைப் பரப்பிய மகான்கள் மூலமாகவும் நமது மண்ணில் ஆன்மிகம் செழித்தே வளர்ந்துள்ளது!
சென்னை மாநகரில் மயிலாப்பூரும் திருவல்லிக் கேணியும் ஆதி காலம் தொட்டே ஆன்மிகம் பரப்பும் அருள் பூமியாகத் திகழ்கின்றன. மயிலாப்பூரில் கபாலீஸ்வரரும், திருவல்லிக்கேணியில் பார்த்த சாரதி ஸ்வாமியும் பிரதானமாக விளங்க... மேலும் ஏராள மான ஆலயங்கள் இந்த இரு பிரதேசங்களிலும் பரவலாக அமைந்து பக்தர்களது ஆன்மிக ஆர்வத்தை வளர்த்து வருகின்றன.
திருவல்லிக்கேணி- கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் மேதை நடேசன் சாலையில் உள்ள தீர்த்தபாலீஸ்வரர் ஆலயமும் இவற்றுள் ஒன்று. சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட பழைமை வாய்ந்தது இந்த ஆலயம். சமுத்திரக் கரையோரம் அமைந்துள்ள ஆலயம்; ஒரு காலத்தில் மகேஸ்வரன் சந்நிதிக்கு நேர் எதிரே கிருஷ்ணாம்பேட்டை மயானம் இருந்ததாம். இப்படி ஒரு புறம் சமுத்திரமும் மறு புறம் மயானக் கரையும் கொண்டு சிவாலயம் விளங்குவது சிறப்பான அமைப்பு என்கிறார்கள்.
இங்குள்ள ஈஸ்வரருக்கு, ‘தீர்த்தபாலீஸ்வரர்’ என்ற திருநாமம் ஏற்பட்டது எப்படி? அதற்கும் ஒரு புராணக் கதை உள்ளது...
இமவான் மகளான பார்வதிதேவிக்கும், கயிலை வாசனான மகேசனுக்கும் வடக்கே திருமணம் நடந்த போது, இந்த நிகழ்ச்சியைக் கண்டு இறையருள் பெறுவதற்காக தேவர்கள், முனிவர்கள் மற்றும் ரிஷிகள் பெருமளவில் கூடினர். இதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. விளைவு- தென்திசையில் உள்ள ஜீவன்கள் தவித்தன. இதை அறிந்த ஈசன், அகத்திய முனிவரை அழைத்து, ‘‘உடனே தென்திசை செல்லுங்கள். உலகம் சமமாக விளங்கச் செய்யுங்கள்!’’ என்று பணித்தார்.
மகேசனின் உத்தரவை மறுப்பார் உண்டோ? எனினும், ஒரேயரு காரணத்துக்காகத் தயங்கினார் அகத்தியர். ‘‘இறைவா... உம் திருமணக் காட்சியைக் காணவே யாம் இங்கு வந்துள்ளோம். இந்த நிலையில் அதைக் காணாமல் நான் இங்கிருந்து கிளம்புவது சரியாகுமா?’’ என்று கேட்டார். ‘‘கவலை வேண்டாம் அகத்தியரே... எமது திருமணக் கோலம் நீவிர் செல்லும் திருத்தலங்களில் உமக்குக் கிடைக்கும்!’’ என்று அருளினார் இறைவன்.
அதன் பின் அகத்தியர் தென்திசை நோக்கி நகர்ந்து வந்தார். தென் திசையும் தாழ்ந்தது. இறைவனின் திருமணமும் இனிதே நிறைவேறியது. இறைவன் சொன்னபடியே அகத்தியருக்குப் பல தலங்களில் திருமணக் கோலத்தில் காட்சி தந்தார் ஈசனார். அப்படி அகத்தியர் பயணம் வரும்போது வழிபட்ட ஒரு தலம் தான் தீர்த்தபாலீஸ்வரர். தான் செல்லும் வழியில் சமுத்திரக் கரை ஓரத்தில்- அழகாக அமைந்த இந்த ஆலயத்தில் சில நாட்கள் தங்க விரும்பினார் அகத்தியர். அப்போது அவருக்கும் உடல் நலம் குன்றியது.
எனவே, இறைவனிடம் வேண்டினார். ‘‘நான் இன்னும் பல திருத்தலங்களை தரிசிக்க வேண்டி இருக்கிறது. என் உடல் நலனைக் குணமாக்கி அருள் செய் இறைவா!’’ என்று பிரார்த்தித்தார். தினமும் அதிகாலையில் சமுத்திரத்தில் நீராடி, அங்கிருந்து நீர் எடுத்து வந்து இறைவனின் லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்து, அவன் திருப்பாதம் தொழுதார். பிறகு, அந்த அபிஷேகத் தீர்த்தத்தையே பிரசாதமாக உட்கொண்டார்.
இப்படித் தொடர்ந்து நாற்பத் தெட்டு நாட்கள் செய்தார். ஒரு மண்டலம் பூர்த்தி ஆனதும் அகத் தியர் பூரண குணமடைந்தார். இறைவனின் தீர்த்தப் பிரசாதத்தை உட்கொண்டு அகத்தியர் உடல் நலம் தேறியதால், இங்குள்ள ஈஸ்வரர், ‘தீர்த்தபாலீஸ்வரர்’ எனப்பட்டார். தீர்த்தம் பாலிக்கும் ஈஸ்வரரே, தீர்த்தபாலீஸ்வரர். ஆன்மிக அன்பர்கள் இந்தத் தலத்தை நோய் தீர்க்கும் தலம் என்கிறார்கள். தீராத நோயால் அவதியுறுவோர் இங்கு வந்து வழிபட்டால், அகத்தியரின் நோய் தீர்த்த ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர் அருளால் நோய் நீங்கி நலம் பெறலாம் என்பது ஐதீகம்.
தீர்த்தபாலீஸ்வரர் என்ற பெயருக்கு இன்னொரு சுவாரஸ்யமான காரணமும் சொல்கிறார்கள். முன் காலத் தில் தமிழகப் பகுதிகளில் ‘கடலாடும் விழா’ என்றொரு விழா சிறப்பாக நடைபெறுவது உண்டு. ஒவ்வொரு வருடமும் ஆலயத்தின் முக்கியத் திருவிழாவின்போது உற்சவர் விக்கிரகம் மேள தாளத்துடன் உலாவாகப் புறப்பட்டு, கடற் கரையை அடையும். அப்படிக் கடலில் தீர்த்தம் கொடுக்கப் புறப்பட்டு வரும் கபாலீஸ்வரர், கிருஷ்ணாம்பேட்டையில் உள்ள இந்த ஆலயப் பகுதியில் சற்று நேரம் தங்கி விட்டுச் செல்வாராம். எனவே, இந்த ஆலயத்தில் உள்ள ஈஸ்வரரை ‘தீர்த்த கபாலீஸ்வரர்’ என்று அழைத்தனராம். அந்தப் பெயரே பிறகு மருவி தீர்த்த பாலீஸ்வரர் என்று ஆனதாம்.
மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் ஓகோவென்று கோலோச்சிக் கொண்டு இருந்தாலும் அவருக்கே இல்லாத ஒரு சிறப்பு இந்த தீர்த்தபாலீஸ்வரருக்கு உண்டு. அது என்ன?
மயிலாப்பூர் பகுதியில் ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீவெள்ளீஸ் வரர், ஸ்ரீகாரணீஸ்வரர், ஸ்ரீவிருபாட்சீஸ்வரர், ஸ்ரீமல்லீஸ்வரர், ஸ்ரீவாலீஸ்வரர், ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர் என்ற பழம் பெருமை வாய்ந்த ஏழு சிவாலயங்கள் உள்ளன. மாசி மக தீர்த்தவாரிக்கு இந்த ஏழு சிவாலயங்களில் இருந்தும் உற்சவர்கள் புறப்பட்டுக் கடற்கரையில் தீர்த்தம் கொடுக்கச் செல்வார்கள். இவர்களில் தீர்த்தபாலீஸ்வரர் முதலில் கடலில் இறங்கித் தீர்த்தம் பாலித்த பின்னரே, மற்ற ஆலய உற்சவர்கள் கடலில் இறங்குவார்கள். இந்த ஒரு சிறப்பினாலும் இவர் தீர்த்தபாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
பல்லவர் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டு இருக்கலாம் என்கிறது ஒரு குறிப்பு. ஆலயத்தின் பரம்பரை அறங்காவலராக (தர்மகர்த்தா) தற்போது இருப்பவர் சேனாபதி குருக்கள். அற்புதமான இந்த சிவாலயத்துக்குக் கடந்த 25.06.07 அன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்துள்ளது.
‘அருள்மிகு தீர்த்தபாலீஸ் வரர் சன்மார்க்க சபை’யின் தலைவர் பார்த்தசாரதி மற்றும் அதன் அங்கத்தினர்களது ஒத்துழைப்புடன் இந்தக் கும்பாபிஷேகப் பணிகள் நடந்தேறின. இதற்கு முந்தைய கும்பாபிஷேகம் 1987-ல் நடந்தது. அப்போது வாரியார் ஸ்வாமிகள் உட்பட ஆன்மிக அன்பர்கள் பெருமளவில் இதில் கலந்து கொண்டுள்ளனர். சுமார் இருபது வருடங்கள் கழித்து, அடுத்த கும்பாபிஷேகம் தற்போது நடந்துள்ளது.
முந்தைய கும்பாபிஷேகத்தின்போது (1987) ஒரு சுவையான சம்பவம். கும்பாபிஷேகத்துக்காக ஆலயத் திருப்பணிகளைத் தொடங்கலாம் என்று சம்பந்தப் பட்டவர்கள் முடிவெடுத்த நேரம்... அப்போது தீர்த்தபாலீஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சகராகப் பணி புரிந்த காளஹஸ்தீஸ்வர குருக்கள், சடையாண்டி நாயக்கர் மற்றும் கன்னியப்ப செட்டியார் ஆகிய மூன்று ஆன்மிக அன்பர்கள் சேர்ந்து உத்தரப்பிரதேச லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கினர். சீட்டை வாங்கும்போதே, ‘இதற்கு ஒருவேளை ஏதேனும் பரிசு விழுந்தால் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயத் திருப்பணிகளைத் தொடங்க ஒரு தொகையைத் தந்து விட வேண்டும்’ என்று முடிவெடுத்துவிட்டு தீர்த்த பாலீஸ்வரரையும் பிரார்த்தித்துக் கொண்டனர்.
அடுத்து நடந்ததுதான் அதிசயம்... இவர்கள் வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு ஒரு பெரும் தொகை பரிசாக விழுந்தது. பணம் கைக்கு வந்த பின் தாங்கள் ஏற்கெனவே முடிவெடுத்தபடி, தீர்த்தபாலீஸ்வரர் ஆலயத் திருப் பணிகளைத் துவங்குவதற்காக ஒரு லட்ச ரூபாயை நன் கொடையாக அளித்தனர். அதை வைத்துத்தான் திருப்பணி வேலைகள் துவங்கினவாம்.
இனி, ஆலய தரிசனம்.
மேதை நடேசன் ரோட்டி லேயே ஆலய நுழைவாயில் இருக்கிறது. கிழக்கு நோக்கிய சிவாலயம். ராஜ கோபுரம் இல்லை. முகப்பில் ஒரு சிறு கோபுரம். தாண்டியவுடன் பலிபீடம். பிரதோஷ நந்திதேவர். முதலில், பிராகார வலம் வருவோம்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணா மூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மதேவர், துர்கை ஆகியோர் தரிசனம் தருகிறார் கள். வலத்தின்போது முதலில் சிதம்பர விநாயகர் சந்நிதி. தனி சந்நிதி. பலிபீடம். மூஷிக வாகனம். இதை அடுத்து ஒரு மேடையில் அரச மரமும் வேம்பும் இணைந்து காணப்படுகின்றன. இங்கே லிங்கத் திருமேனி, அம்பாள் வடிவம், நாகர்கள் போன்றவற்றை தரிசிக்கலாம். தொடர்ந்து வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமணியர், பலிபீடம்- மயில் வாகனத்துடன் தரிசனம் தருகிறார். அடுத்து, சண்டிகேஸ்வரர். பிராகார முடிவில் ஆஞ்சநேயர், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள்.
வலம் முடிந்து. துவங்கிய இடத்துக்கு வந்து விட்டோம். நேரே- அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர். மூலவர் சந்நிதிக்குள் நுழையுமுன் ஒரு மண்டபம். இங்கே முகப்பில் அகத்தியருக்கு அருள் புரியும் தீர்த்தபாலீஸ்வரரது சுதை வடிவம் காணப் படுகிறது.
தீர்த்தபாலீஸ்வரருடன் கடலில் தீர்த்தம் தரும் மற்ற ஆறு சிவாலய அம்மை- அப்பனின் தோற்றங் களையும் சுதையில் வடித்திருக்கிறார்கள்.
ஈஸ்வர தரிசனத்துக்காக உள்ளே நுழைகி றோம். சைவ நால்வர், சூரியன், லட்சுமி நாராய ணர், கால பைரவர் போன்றோரின் தரிசனம் இங்கு கிடைக்கிறது. அடுத்து, அகத்தியரின் நோய் தீர்த்த அப்பன். அகத்தியர் பூஜித்த லிங்கத் திருமேனி. ஆனந்தமான தரிசனம். அடுத்து அருகிலேயே, தென்முகம் நோக்கி அம்பாள் திரிபுரசுந்தரி. தனி பலிபீடம். சிம்ம வாகனம். அழகு ததும்பும் முகம். இந்த அம்மனுக்கு மார்கழி மாதத்தில் வெந்நீர் அபிஷேகம் செய்து ரத்ன கம்பளம் அணிவிப்பார்கள்.
கடற்கரை ஓரத்தில் அம்மன் இருப்பதால், அந்தக் காலத்தில் இப்படி ஒரு நடை முறையைச் செய்து வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. திருமணப் பிரச்னை, குடும்பப் பிரச்னைகளுக்கு திரிபுர சுந்தரியை வேண்டித் தொழுதால் நிவாரணம் கிடைக்குமாம். பிரதோஷம், நவராத்திரி, சிவராத்திரி உட்பட அனைத்து வைபவங்களும் இங்கு சிறப்பாக நடக்கின்றன. ஸ்தல விருட்சம்: வில்வம், வன்னி. தல தீர்த்தம்: சமுத்திர நீர்.
ஆரவாரமான சாலையில் அமைந்துள்ள அமைதி ததும்பும் இந்த ஆலய ஆண்டவனை தரிசித்து இன்புறுவோம்!
தகவல் பலகை
தலத்தின் பெயர் : கிருஷ்ணாம்பேட்டை (ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் அருகே)
மூலவர் : அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபாலீஸ்வரர்
சிறப்பு : அகத்தியரின் நோயைத் தீர்த்த இறைவன்.
அமைந்துள்ள இடம் : மயிலையில் ‘சென்னை சிட்டி சென்டர்’ என்ற பிரமாண்ட கட்டடத்துக்கு எதிரே உள்ள மேதை நடேசன் சாலையில் ஆலயம் அமைந்துள்ளது.
எப்படிச் செல்வது?: சென்னையின் முக்கியப் பேருந்து நிலையங்களில் இருந்து திருவல்லிக்கேணி வழித்தடத்தில் செல்லும் பேருந்தில் ஏறி, ஐஸ் ஹவுஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். இங்கிருந்து 5 நிமிட நடை தூரத்தில் உள்ளது ஆலயம். மயிலை- கடற்கரை பறக்கும் ரயிலில் பயணித்தால் கலங்கரை விளக்கம் நிறுத்தத்தில் இறங்கி, 10 நிமிட நடை தூரம்.
ஆலய முகவரி:
அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் 
160, மேதை நடேசன் சாலை, 
கிருஷ்ணாம்பேட்டை, 
சென்னை - 600 005.

No comments:

Post a Comment