Friday, 4 August 2017

திருப்புறம்பயம்



பார்வதியின் பரபரப் பைப் பார்த்துப் புன்னகைத்தார் பரமனார். செல்வ மகனின் பிறந்த நாளாயிற்றே... அம்மைக்குப் பரபரப்பு இருக்காதா? உணவுத் தயாரிப்பை மேற்பார்வையிடுவதும், பூத கணங்களுக்கு ஆணையிடுவதும், இல்லத்தை அலங்காரம் செய்வதும், அவ்வப்போது சக்தி கன்னிகை களை வேலை வாங்குவதும்... அம்பாளின் துறுதுறுப்பில், சிந்தாமணி கிருகம் (அம்பிகையின் இருப்பிடம்) கூடுதலாகப் பிரகாசிப்பது போலத் தோன்றியது.
விநாயகனுக்கு விந்தையான ஒரு வழக்கம் உண்டு. அவனது பிறந்த நாளில் தும்பிக்கையையும், காதுகளையும், எருக்கம்பூ மாலை கொண்டு அம்மா அலங்காரம் செய்ய வேண்டும். அப்பா, அறுகம்புல் தொட்டு ஆசீர்வாதம் செய்ய வேண்டும். நந்திகேஸ்வரர் கொண்டு வந்து படைக்கும் மோதகத்தை முருகனுக்கும், மூஞ்சூறுக்கும், மயிலுக்கும் தன் கைகளாலேயே ஊட்டி விட வேண்டும். பின்னர், மாமாவும், மாமியும் வைகுந்தத்திலிருந்து வந்தவுடன், அண்ணனும் தம்பியுமாக ஆடிப் பாட வேண்டும்.
எல்லா ஏற்பாடுகளும் கனகச்சிதமாக நடந்தன. சக்தி கன்னிகைகள் தொடுத்தும், பிணைத்தும் வைத்திருந்த எருக்கம்பூ மாலைகளைக் கொண்டு, கணேசனின் தும்பிக்கையில் ஒரு புதிய சோலையையே பார்வதி உருவாக்கி விட்டாள்.
கணேச ஜயந்தி என்றால் கணங்களுக்கும் கொண்டாட்டம்தான். பாட்டும் கூத்தும் கரை புரளும். அத்தனை பேரும் அடித்துக் கொண்டிருந்த கொட்டத்தைப் பார்த்து மனம் குளிர்ந்தார் மகேசனார்.
‘ஆயிற்று. இன்னும் சிறிது நேரத்தில் எல்லோரும் வரத் தொடங்கி விடுவார்கள்.’ பரமனார் எண்ணும்போதே மோதகத் தட்டோடு வந்து நின்றார் தேவியார். ‘உங்களது பாம்பணிகளைச் சற்று அடங்கி இருக்கச் சொல்லுங்கள்; வருபவர்களைப் பயமுறுத்தி விடப் போகின்றன.’
சிரித்துக் கொண்டே நாகத்தின் தலையில் கையை வைத்து பரமனார் தடவ... வணங்கிக் கொண்டே பிரம்மாவும் சரஸ்வதியும் உள்ளே நுழைந்தார்கள்.
வாயிலை நோக்கிப் பார்வையைச் செலுத்திய பரமனார், கழுத்தில் புரளும் பாம்பு பதறிப் போக, கபகபவென நகைத்தார். எல்லோரும் அந்தத் திசையையே நோக்கினர்.
வேறொன்றும் இல்லை. திருக்கயிலாயத்தின் அணுக்கர் திருவாயிலையும் நந்தி திருவாயிலையும் தாண்டி, முதல் வாயிலில் மயிலும், மூஞ்சூறும் நின்று கொண்டிருந்தன. வைகுந்தபதியும், மகாலட்சுமியும் எப்போது வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு... அவர்கள் கொண்டு வரும் லட்டுகளும் மோதகமும் தந்த பரிதவிப்பு.
லட்சுமித் தாயாரிடம் கண் ஜாடை காட்டி விட்டு, மகாவிஷ்ணுவின் முன்னால் போய் மூக்கை நீட்டினான் கணேசன்.
அவனுக்கு மிகவும் பிடித்தமான குறும்பு. முருகன் குறும்புத்தனம் செய்யும் போதெல்லாம், அவன் மூக்கைப் பிடித்துப் போலிக் கண்டிப்பு காட்டுவார் மாமா. உடனே அவர் முன்னால் போய் நிற்பான் விநாயகன். ‘எங்கே என் மூக்கைப் பிடித்திழுங்கள் பார்க்கலாம்!’ என்று கண் சிமிட்டுவான். நீண்டு கிடக்கும் தும்பிக்கை மூக்கைப் பார்த்து விழிப்பார் மாமா. பார்வதியும் லட்சுமியும் கைகொட்டி நகைப்பார்கள். முறைத்துக் கொண்டே மகாவிஷ்ணு திரும்புவார். ஒன்றும் தெரியாதது போல ஓடி வந்து, சிவனாரின் பின்புறம் ஒளிந்து கொள்வான் கணேசன்.
இப்போதும் கணேசன் அதையே செய்ய யத்தனிக்க... ‘‘அண்ணா! தேன் தேன்!’’ என்று மெல்லிய குரலில் முருகன் நினைப்பூட்டினான்.
சிட்டாகப் பறந்து காணாமல் போன கணேசன், கண நேரத்தில் மீண்டும் தோன்றினான். காதுகள் இரண்டிலும் கிளிஞ்சல் குண்டலங்கள், தும்பிக்கையில் ஆங்காங்கு முத்துச்சிப்பிகள்; கையில் மோதகத்துக்கு பதிலாகப் பெரிய சங்கு. தன் தலைவன் புறப்பட்டு விட்டதைப் பார்த்த மூஞ்சூறு, ரிஷபத்தின் வாலை ஒரு சுண்டு சுண்டி விட்டு ஓடி வந்து தயாராக நின்றது.
‘‘புறம்பயப் புறப்பாடா?’’ என்று கேட்டுக் கொண்டே செல்ல மருமகனுக்குத் தேனெடுத்து ஊட்டினாள் லட்சுமி.
‘‘தேனுக்கு இப்போதே பிள்ளையார் சுழியா?’’ என்று கிண்டலடித்தான் குமரன்.
‘‘இந்த முறை எவ்வளவு தேன் மருமகனே?’’ என்று மகாவிஷ்ணு கேள்வியெழுப்ப, பதிலுக்கு தும்பிக்கையை ஒரு சுழற்றுச் சுழற்றினான் கணேசன்.
‘‘ஆண்டுக்கு ஆண்டு கூட்டம் அதிகப்படுகிறது. பூலோக விடியற்காலை தாண்டிய பின்னரும் கூட்டம் நீளுகிறது!’’ என்று சற்றே தூக்கலான பெருமையுடன் சிவபெருமான் விளக்க... மகாவிஷ்ணுவும், முருகனும் இரு புறமும் நின்று தும்பிக்கையை மெள்ளத் தொட... அம்மா- அப்பாவையும், மாமா- மாமியையும், நந்தி தேவரையும் வணங்கிவிட்டு, தம்பியைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் புறப்படத் தயாரானான் விநாயகன்.
பிள்ளையார் சதுர்த்தி நாளன்று இரவெல்லாம் திருப்புறம்பயத்தில் நடைபெறும் தேன் அபிஷேகத்தை ஏற்றுக் கொள்ளத்தான் விநாயகன் புறப்பட்டிருந்தான்.
திருப்புறம்பயத்தில் தேனபிஷேகப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிற விநாயகருக்கு, பிரளயம் காத்த பிள்ளையார் என்ற திருநாமமும் உண்டு.
முன்னொரு காலத்தில், உலகமெல்லாம் பிரளயம் சூழ்ந்தது. பிரளய வெள்ளம் அனைத்து இடங்களையும் அழித்துவிட, பொங்கி ஆர்ப்பரித்து வந்த அலைகள் ஆணவ ஆட்டம் போட.... ஓரிடத்தில் மட்டும் பிரளய வெள்ளம் ஒன்றும் செய்ய முடியவில்லை, உள்ளே புகக் கூட முடியவில்லை.
அந்த இடம் மட்டும் நீருக்குப் புறம்பாக நிற்கக் காரணம்? பெருகி வந்த நீரையெல்லாம் தடுத்துத் தன் வசப்படுத்திக் கொண்டு வீற்றிருந்தார் விநாயகப் பெருமான். பிரளயம் காத்த விநாயகர் என்று பெயர் பூண்டார். அந்த இடமும் திருப்புறம்பயம் என்று பெயர் கொண்டது.
மகன் விநாயகருக்கு, பிரளயம் காத்த திருநாமம் என்றால், அப்பா சிவனாருக்கோ சாட்சி சொன்னதால் திருநாமம். அதென்ன கதை என்கிறீர்களா? வாருங்கள், கதை கேட்க திருப்புறம்பயம் போகலாம்.
விரித்தனை திருச்சடை அரித்தொழுகு வெள்ளம் தரித்தனை அதன்றியும் மிகப் பெரிய காலன் எருத்திற உதைத்தனை இலங்கிழையோர் பாகம் பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்...
என்று திருஞானசம்பந்தர் பாடினார். சோழநாட்டுப் பகுதியில், விஜயமங்கை உள்ளிட்ட தலங்களை தரிசித்துக் கொண்டே சென்ற ஞானசம்பந்தருக்கு, புறம்பயத்தைக் காணக் காண விருப்பம் அதிகமானதாம். இந்தளப் பண்ணில் இனிமையான பதிகம் பாடிக் கொண்டே புறம்பயப் பெருமானை வணங்கினார்.
பழையாறையில் இறைவனை வணங்கிய பின்னர், காவிரி நதியின் கரையில் உள்ள திருத்தலங்களை வணங்கினார் திருநாவுக்கரசர். திருப்புறம்பயத்துக்கு அவர் பாடியுள்ள பதிகம், அற்புதப் பாக்கள் நிறைந்தது. பெண் ஒருத்தி. அவளை தினந்தோறும் சந்திக்கும் சுவாமி, ஒவ்வொரு நாளும் தமது ஊரை ஒவ்வொன்றாகச் சொல்கிறார். கூடல் (மதுரை) என்கிறார். கொடுங்கோளூர் என்கிறார். கண்டியூர் என்கிறார். கடைசியில் ஒரு நாள், புறம்பயம் என்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறார். புறம்பயநாதர் அதன் பின் வராததைக் கண்டு, பிரிவாற்றாமையில் நலியும் அந்தப் பெண், தோழிக்கு அவருடைய பெருமைகளைக் கூறுகிறாள்.
பாகேதும் கொள்ளார் பலியும் கொள்ளார் பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப் போகாத வேடத்தர் பூதம் சூழப் புறம்பயம் நம்மூர் என்று போயினாரே...
‘சாப்பாடும் சோறு- குழம்பும் வாங்கிக் கொள்ளாமல், கண்ணுக்குள்ளே தமது திருவுருவத்தை விட்டு விட்டுப் போய்விட்டாராம்!
திருஇன்னம்பர் எனும் திருத்தலத்தில் தங்கியிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருப்புறம்பயம் போக வேண்டும் என்று ஆசை மிக, பதிகம் பாடிக்கொண்டே சென்றார். மூவரும் தேவாரம் பாடியருளிய திருத்தலம்.
வணிகப் பெண் ஒருத்திக்காக, இந்தவூர் இறைவனார் மதுரைக்குப் போய் சாட்சி சொன்ன பெருமைக்கு உரிய திருத்தலம். கரும்படு சொல்லியாகவும், முருகனை இடுப்பில் ஏந்திய குஹாம் பிகையாகவும் அம்பாள் எழுந்தருளிய திருத்தலம்.
துரோணர், இறையனாரை வணங்கி அசுவத்தாமா எனும் மகனைப் பெற்ற திருத்தலம். சனகாதி முனிவர்களுக்கு பிரம்மஞானத்தை, தட்சிணாமூர்த்தி உணர்த்திய திருத்தலம்.
தட்சிணாமூர்த்திக்கு மேலே சட்டைநாதரும் அருள் காட்சி தரும் அழகுத் திருத்தலம். கல்யாண மாநகர் என்றும் ஆதித்தேஸ்வரம் என்றும் அழைக்கப் பெறும் திருத்தலம். ராஜேந்திரசிம்ம வளநாட்டு அண்டாற்றுக் கூற்றம் என்று கல்வெட்டுக் குறிப்புகளில் சுட்டப்படும் திருத்தலம்.
கும்பகோணத்துக்கு அருகில் இருக்கிறது, திருப்புறம்பயம் என்று இப்போது அழைக்கப்படும் இந்தக் காவிரி வடகரைத் தலம்.
கும்பகோணம்- திருவையாறு சாலையில் மேலக்காவிரி, கொட்டையூர் தாண்டி புளியஞ்சேரி என்னும் இடத்தில் வலப்புறமாக ஒரு சாலை திரும்பும். அந்த வழியே 2 கி.மீ. சென்றால், முதலில் இன்னம்பர் வரும். தொடர்ந்து 3 கி.மீ. சென்றால் திருப்புறம்பயத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து புறம்பயத்துக்கு நகரப் பேருந்து வசதி உண்டு. சுமார் 10 கி.மீ. தொலைவு. திருப்புறம்பயத் திருக்கோயில். கிழக்கு ராஜ கோபுரம். ஐந்து நிலைகள் கொண்ட இதுவே, பிரதான வாயில். கோபுரத்துக்கு எதிரில் (வடகிழக்கில்) தீர்த்தக்குளம். இந்தப் பிரம்ம தீர்த்தமே கோயிலின் முக்கியமான தீர்த்தம்.
பிரம்ம தீர்த்தத்துக்குக் கிழக்கில் நந்தவனம் உள்ளது. உள்ளேயும் ஒரு தீர்த்தம் உண்டு. சப்தசாகர தீர்த்தம் என்று பெயர். பிரளய காலத்தில், பொங்கிப் பெருகிய ஏழு கடல்களும் (சப்த சாகரம்) இந்தத் தீர்த்தத்துக்குள் அடங்கி நின்று விட்டனவாம்.
திருப்புறம்பயத்துக்கு இன்னும் இரண்டு தீர்த்தங்கள் உண்டு. ஊருக்குக் கிழக்கே ஓடுகிற மண்ணியாறு மற்றும் வடக்கே, சிறிது தொலைவில் பாயும் கொள்ளிடப் பேராறு ஆகியவையும் தீர்த்தங்களே.
பிரம்ம தீர்த்தக் கரையில் நிற்கிறோம். தெற்குக் கரையில்- கோயிலின் நுழை வாயிலுக்கு எதிரில், தட்சிணாமூர்த் திக்குத் தனிச் சந்நிதி.
கம்பீரமான ராஜ கோபுரத்துள் நுழைய... உள் மாடத்தில் நர்த்தன விநாயகர். வணங்கி உள் புக... விசால மான பிராகாரம். வாயிலுக்கு நேரே பலிபீடம், நந்தி, கொடிமரம். ஆர அமர பிராகாரத்தை வலம் வரலாம்.
தெற்கு, மேற்கு, வடக்குச் சுற்றுகளில் தனிச் சந்நிதிகள் இல்லை. வடகிழக்கு மூலையில், தெற்கு முகமாக அம்பாள் சந்நிதி. பிரதான வாயிலில் நாம் நுழையும்போதே, இந்த அம்பாள் சந்நிதியை வலப் புறத்தில் காணலாம்.
உள் பிராகாரத்திலேயும் அம்மன் சந்நிதி ஒன்று உண்டு. வெளிப்பிராகாரத்தில், இப்போது நாம் உள்ளே நுழைகிற இந்த அம்பாள் சந்நிதியை, ஒரு தனிக் கோயில் என்றே சொல்லலாம். அம்பாளின் திருநாமம் அருள்மிகு குஹாம்பிகை. குஹனான முருக னின் தாயார் என்று பொருள்.
அம்பாளை வணங்கித் தலை நிமிரும்போதுதான், இத்தகைய அழகான திருநாமத்துக்கான காரணம் புரிகிறது. இடையில் ஆறுமுகனைத் தூக்கி வைத்துக் கொண்டு காட்சி கொடுக்கும் தாய். முகமெல்லாம் வாத்சல்யம் பொங்கித் ததும்ப, கருணை முகம் காட்டும் தாய். ‘முருகனுக்கென்ன; பூவுலகக் குழந்தைகளும் எமக்கு இப்படித்தான்!’ என்று சொல்லாமல் சொல்வது போல் தோன்றுகிறது. இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. சாம்பிராணித் தைலம் மட்டுமே சார்த்தப் பெறும். பௌர்ணமி நாளில், அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் உண்டு. தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறவும், பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்குப் பிள்ளைப்பேறு வாய்க்கவும், கருவுற்ற பெண்களுக்கு சுகப் பிரசவம் நிகழவும், அருள்மிகு குஹாம்பிகையை வழிபடுவது மிகுந்த பயன் தரும்.
வெளிப் பிராகாரத்தில், கிழக்குச் சுற்றில் கொடிமரம் அருகில் ஒரு நந்தி. அதே போல, தெற்குச் சுற்றில் திரும்பியவுடன், அங்கேயும் ஒரு நந்தி. உள்ளே இருக்கும் அம்மன் சந்நிதிக்கு எதிரேதான் இந்த நந்தி.
வெளிப் பிராகார வலத்தை நிறைவு செய்து, உள்ளே நுழை கிறோம். சிறிய மண்டபம் போன்ற அமைப்பு. வலப் பக்கத்தில், அம்பாள் சந்நிதி. நேரே சென்றால், உள்வாயில். விநாயகரும் தண்டாயுதபாணியும் இரு புறமும் இருக்க, வணங்கி உள்ளே நுழைந்தால், உள் பிராகாரம்.
இதுவும் சற்று விசாலமானதுதான். கிழக்குச் சுற்றிலிருந்து தெற்குச் சுற்றுக் குள் திரும்பும் மூலையில், கோயில் உக்ராணம். அடுத்து, சைவ நால்வர். தேவார மூவர் மட்டுமல்லாமல் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரும் புறம்பயத்தைப் பாடியுள்ளார்.
சைவப் பெரியார்கள், ஒருசேர ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். திருப்புறம்பயத்தில் சிவனார், அறம் உரைத்தார் என்பதுதான் அது!
‘புத்தகம்கைக்கொண்டு புலித்தோல் வீக்கி புறம்பயம் நம்மூரென்று போயினாரே’ என்றார் நாவுக்கரசர்.
‘திறம் பயன் உறும்பொருள் தெரிந்து உணருநால்வர்க்கு அறம் பயனுரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்’ என்றார் ஞானசம்பந்தர். ‘புறம்பயம் அதனில் அறம் பல அருளியும்’ என்றார் மாணிக்கவாசகர்.
திருக்கோயிலுக்குள் நுழையும்போதே, பிரதான வாயிலுக்கு எதிரில், பிரம்ம தீர்த்தக் கரையில், தட்சிணா மூர்த்தி, தனிக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக் கிறார். இந்தத் தலத்தில், சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தைச் சிவனார் உரைத்தார் என்பதால், இங்கே இவர் மிகவும் விசேஷம். தடைப்பட்ட கல்வி, சரியாகப் படிப்பு வராதது போன்றவற்றுக்கு இவரிடம் பிரார்த்தித்தால் தடைகள் நீங்குவது நிச்சயம். உள்பிராகாரத்தில் சைவ நால்வரிடத்தில் நிற்கிறோம். அவர்கள் பாடிய பதிகங்களையும், அவற்றில் கூறப்பட்டுள்ள தலப் பெருமைகளையும் மனதில் தேக்கிக் கொண்டே நகர்கிறோம்.
பிராகாரத்தில், திருமாளிகை சுற்றமைப்பு. தமிழகத்தின் பல கோயில்களில், இதைப் போன்ற மாளிகை சுற்றமைப்பைக் காண முடியும். கோயிலுக்கு கம்பீரத்தையும், எழிலையும் கூட்டுகிற இந்த அமைப்பு, பிராகார வலம் வருபவர்களின் மனதில் அமைதியையும், மென்மையையும் சேர்க்கிறது. தென்மேற்கு மூலையில், விநாயகர். மூஞ்சூறுடனும், சொக்க லிங்கத்துடனும் கூடிய நேத்ர விநாயகர். அடுத்து சோமாஸ்கந்தர் சந்நிதி. மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரில், அருள்மிகு சுப்பிரமணியர் சந்நிதி. தொடர்ந்து லிங்கங்கள். அடுத்து மஹாலட்சுமி சந்நிதி. தொடர்ந்து, விசுவாமித்திரரும் அகத்தியரும் பூசித்த லிங்கங்கள்.
வடக்குப் பிராகாரத்தில் நடந்து வந்து, வடகிழக்கு மூலையை அடைந்தால், நடராஜ சபை. சிவகாமி அம்மையோடு அருள் வழங்குகிறார். கிழக்குச் சுற்றில் திரும்பினால், சூரியனும், சந்திரனும். அருகிலேயே, நவகிரகச் சந்நிதி. பரிவார தேவதைகளை வணங்கிவிட்டு, உள்ளே நுழைகிறோம்.

தி ருப்புறம்பயத் திருக்கோயிலின் உள் பிராகாரம் தாண்டி, மூலவர் சந்நிதி நோக்கிப் போவதற்கு முற்படுகிறோம். பெரிய முகப்பு மண்டபத்தில் நுழை கிறோம். முகப்பு மண்டபத்தின் வலப் புறத்தில் வாகனங்கள் இருக்க... இடப் புறம்... ஆஹா! இதோ, கோயில் கொண்டிருக்கிறார் பிரளயம் காத்த விநாயகர்.
சிறிய சந்நிதியானாலும் சாந்நித்தியம் சொல்லி மாளாது. லம்போதரனை, அம்பிகை சுதனை, ஆனந்த நாதனை வணங்கி நிற்கிறோம். மூர்த்தமெல்லாம் தேனூறிக் காட்சி தரும் செம்மைத் திருக்கோலத்தை மனக் கண்ணில் தரிசித்தபடி, ‘ஐங்கரா... அருள் தா!’ என்று வணங்குகிறோம். விநாயகரை வழிபட்டு, முகப்பு மண்டபத் திலிருந்து, மகா மண்டபத்துள் நுழைகிறோம்.
மகாமண்டபத்தில் சிறிய நந்தி; வலப் பக்கம் உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. அர்த்த மண்டபம் போகிற வழியில், ஒரு விநாயகர். அடுத்து துவார பாலகர்கள். அர்த்த மண்டபம் தாண்டிப் பார்வையைச் செலுத்தினால்...

என்ன பாக்கியம்! அருள்மிகு சாட்சி நாதேஸ்வரர். பெரிய பாணத்துடனும், வட்ட ஆவுடையாருடனும் காட்சி தருகிற சாட்சிநாதேஸ்வரர். சாட்சீஸ்வரர், புன்னைவன நாதர் என்றெல்லாம் கூட இவருக்குத் திருநாமங்கள் உண்டு. இவருக்கு சாட்சிநாதேஸ்வரர் என்று ஏன் பெயர் வந்தது? சுவாரஸ்யமான வரலாறு அது!
கன்னிதன் மன்றல்கரியினை மாற்றாள் காணஅக் கண்ணுதல்அருளால் வன்னியும்கிணறும் இலிங்கமுமா ஆங்கு வந்தவாறு அடுத்தினி உரைப்பாம்...
- என்று இந்தக் கதையை, திருவிளையாடல் புராணம் கூறும். தனவணிகர் ஒருவர் இருந்தார். இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு வாழ்க்கை நடத்திய இவருக்கு, நெடுநாட்களாகக் குழந்தை இல்லை; ஆண்டுகள் பல கழிந்து, அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பூங்கொடி போன்ற அந்தப் பெண்ணை, மதுரை நகரில் வாழும் தன் மருமகனுக்கு என்று வளர்த்தார். மருமகனோ, ஏற்கெனவே திருமணம் ஆனவர். இருப்பினும், அவருக்கே இந்தப் பெண் என்பதில் வணிகர் உறுதியுடையவராக இருந்தார்.
இதற்கிடையில், வணிகரும் அவர் மனைவியும் இறந்து போக, அந்தப் பெண் தனித்து விடப்பட்டாள். விவரம் தெரிந்த ஊர்க்காரர்கள், மருமகனுக்குச் செய்தி தெரிவித்தனர். மதுரையிலிருந்து வந்த மருமகன், விஷயமெல்லாம் அறிந்து, தனக்காகக் காத்திருந்த பெண்ணை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். மதுரைக்குச் சென்று திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்தனர். அதனால், சுற்றத்தார் சிலரை முன்பாக அனுப்பி வைத்து, பெண்ணும் மணாளனும் அவர்களுக்குப் பின்னால் சென்றனர். வழியில், திருப்புறம்பயம் அடைந்தனர். அங்கு தங்கினர். சிவபெருமானை வணங்கி, வன்னி மரத்தடியில் உணவு சமைத்து உண்டனர்.
... புறம்பய மூதூர் எய்தி அங்கிறை கோயிலின் முன்னிக் கூலநீராடி அங்குத் தங்கியவன்னி மாடே போனகம் செய்து சமைத்து உண்டெல்வாய்
உணவு உண்ட பின்னர், வணிக மருமகனார் கோயிலில் உள்ள படிகளில் தலைவைத்து உறங்கினார். அப்போது பாம்பு ஒன்று அவரைத் தீண்ட... இறந்துபோனார்! சுற்றி நின்ற ஏவலாளர் கதறினர். அந்தப் பெண் துடித்துத் தவித்தாள்; அழுதாள்; புலம்பினாள்.
பிறந்த நாளிலேயே இவருக்குத்தான் என்று குறிக்கப்பட்ட அந்தப் பெண் பரிதவித்தாள். அந்த ஊருக்கு அந்த நேரத்தில் வந்திருந்த திருஞானசம்பந்தரின் செவிகளில், பெண்ணின் அழுகுரல் கேட்டது. என்னவென்று விசாரித்தறிந் தார். அங்கு வந்து இறந்து கிடந்தவரைக் கண்டு, அருள் செய்து, மரணத்திலிருந்து எழுப்பி, அவர்களை அங்கேயே மணம் செய்து கொள்ளும் படி கூறினார். ‘சொந்தக்காரர்கள் மற்றும் ஊர்க் காரர்களது சாட்சியம் இல்லாமல் எப்படி மணம் முடிப்பது?’ என்று வணிக மருமகன் கேட்க, ‘வன்னி மரமும் லிங்கமும் கிணறும் சாட்சி’ என்று கூறி விடுகிறார். அவர்களும் மணம் செய்து கொண்டனர் (திருவிளையாடல் புராணத்தில் உள்ளபடி). ஊர் சென்றார்கள். இரு மனைவியருடனும் செல்வந்தர் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினார். இருவருக்கும் பிள்ளைகள் பிறந்தனர்.
மூத்த மனைவியின் பிள்ளைகள் கொடியவர்கள். அவர்களால், இரண்டு தாய்மார்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. சண்டையின் போது, இளையாளின் திருமணத்தைப் பற்றி அவதூறாகப் பேசி விட்டாள் மூத்தாள். தனது திருமணத்தில் மூன்று சாட்சிகள் உண்டென்று இளையாள் சொல்ல, மூத்தாள் பரிகசித்துச் சிரித்தாள். சாட்சிகள் இங்கே வருமா?
மனம் பொறுக்க முடியாத இளையாள், சிவனாரை வேண்டினாள். மறு நாள் மதுரை திருக்கோயிலின் வடகிழக்குத் திசையில், வன்னியையும் கிணற்றையும் அழைத்துக் கொண்டு எழுந்தருளினார் லிங்கமூர்த்தி.
கரிகண் மூன்றும் ஒல்லை வந்து இறுத்த கோயில் உத்தர குணபால் எல்லை...
மனம் வாடிக் களைத்த பெண்ணுக்கு- மனித சாட்சியங்கள் இல்லாத அந்தப் பெண்ணுக்காக ஊர் விட்டு ஊர் சென்று சாட்சி கொடுத்தவராயிற்றே - அதனால்தான், அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் ஆனார். வன்னி மரம் ஒன்று கோயிலுக்குள் உள்ளது. இங்கு வன்னிக்குச் சிறப்பு என்றாலும், தலமரம் புன்னைதான்.
ஒரு காலத்தில் புன்னை மரங்கள் நிறைந்து விளங்கியதால், இந்தப் பகுதி புன்னை வனம் அல்லது புன்னாகவனம் என்று அழைக்கப்பட்டது. அதனால், இங்குள்ள சுவாமியும் புன்னைவன நாதர் ஆனார்.
சாட்சிநாதேஸ்வரரை வணங்கி நிற்கிறோம். வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றையும் மறந்து திருப் புறம்பயம் தொழலாம் என்றார் சுந்தரர்.
பதியும் சுற்றமும் பெற்றமக்களும் பண்டையாரலர் பெண்டிரும் நெதியிலிம்மனைவாழும் வாழ்க்கையும் நினைப்பொழி மட நெஞ்சமே மதியம்சேர் சடைக்கங்கையானிட மகிழுமல்லிகை செண்பகம் புதிய பூமலர்ந்தெல்லி நாறும் புறம்பயத் தொழப் போதுமே!
புறம்பய நாதரை வணங்கி வெளியில் வருவதற்குப் பக்க வாட்டு வழிகள் இருந்தாலும்கூட, மீண்டும் மகா மண்டபம் வந்து, உள் பிராகாரத்தை அடைகிறோம். மூலவரை வணங்கிய பின்னர், உள் பிராகார வலம் வருவது நமது வழக்கம் அல்லவா?
பிராகார வலம் வந்து கொண்டே கோஷ்ட மூர்த்தங்களை தரிசித்து விடலாம். தட்சிணாமூர்த்திக்குத் தனி மண்டபம் அமைக்கப்பட்டுக் கோலாகலமாக இருக்கிறது. ஆனால், பக்கத்தில் திரும்பினால்... உடைந்து, சிதிலப்பட்ட, பின்னமான சிற்பங்கள் பலப்பல. தட்சிணாமூர்த்தியை வணங்கித் திரும்பினால், குறுகலான படிக்கட்டு வழி. எங்கே போகிறது?
‘சட்டைநாதர் சந்நிதிக்குச் செல்லும் வழி’ என்று எழுதிப் போட்டிருக்கிறது. ஒருவர் ஏறும்போதுகூட சற்றே கடினமாக இருக்கும் அளவுக்குக் குறுகலான படிக் கட்டு; இருந்தாலும், ஏதோ ஓர் அமைதி மனதை ஆட்கொள்கிறது. ஏறி எட்டிப் பார்த்தால்... கோபமும் சாந்தமும் ஒருங்கே கலந்தவரான அருள்மிகு சட்டைநாதர்.
அருள்மிகு சட்டைநாதர் எனும் வடிவம் சிவபெருமானின் ஓர் அம்சம். பைரவ அம்சம் என்றும் சொல்வார்கள். நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார் அல்லவா திருமால்? அதற்குப் பின்னரும் நரசிம்மத்தின் உக்கிரம் தணியவில்லை. ரத்த வாடையும் கலந்ததால், நரசிம்மத்தின் கொட்டம் மிதமிஞ்சியது. நரசிம்மத்தின் முன்பு தோன்றி, அதன் அட்டகாசத்தை அழித்து, அதன் தோலையே எடுத்துப் போர்த்திக் கொண்டார் சிவபெருமான். இப்படிச் சட்டையாகப் போர்த்திக் கொண்ட வடிவமே சட்டைநாதர் வடிவம்.
சட்டைநாதர் சந்நிதி எந்தக் கோயிலில் இருந்தாலும், சற்றே உயரத்தில் ஏறி வழிபடும் விதத்தில் அமைந்திருக்கும். மூர்த்தி தெற்கு முகமாக இருப்பார். இவருக்கு அபிஷேகம் இருக்காது. புனுகுச் சட்டம் சார்த்துவார்கள். வெள்ளிக்கிழமை இரவுகளில், சட்டைநாதருக்கு முன்னால் இருக்கும் பலிபீடத்துக்கு அபிஷேகம் நடக்கும். நெய்வடை இவருக்கு மிகவும் பிடித்த நைவேத்தியம். சீர்காழியில் சட்டைநாதர் பிரசித்தம். மற்ற சில தலங்களிலேயும் சட்டைநாதரை (இப்போது திருப்புறம்பயத்தில் தரிசிப் பது போல) தரிசிக்கலாம்.
சட்டைநாதரை வணங்கிவிட்டுத் திரும்புகிறோம். என்ன திவ்வியமான காட்சி! ஆமாம், சட்டைநாதருக்காக உயரே ஏறினோம் இல்லையா, அதனால், இப்போது கோயில் மேல் தளத்துக்கு அருகில் நிற்கிறோம். நிற்கும் இடத்தில் இருந்தவாக்கில் சுற்றிப் பார்த்தால்... ஆஹா! மொத்தக் கோயிலும், கோயில் தளமும் கூரையும் கண்களை முற்றிலுமாக நிறைக் கின்றன.
சட்டைநாதரை நினைத்துக் கொண்டே இறங்குகிறோம். மூலவருக்கு நேர் பின்னால், லிங்கோத்பவர். சுற்றி வர, வடக்கு கோஷ்டத்தில் அருள்மிகு பிரத்யட்சநாதர். அருகிலேயே அர்த்த நாரீஸ்வரர்.
தனி மண்டபத்தில், சண்டேஸ்வரர். திருப்புறம்பயம் திருக்கோயிலைச் சுற்றிவரும்போது, அதன் பரிமாணங்கள் பிரமிக்கச் செய்கின்றன. சற்றுப் பெரிய கோயில் என்றே சொல்லலாம்.
தமிழகத்தில் நடைபெற்ற போர்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது, திருப்புறம்பயப் போர். கி.பி.885-வாக்கில் இந்தப் போர் நடை பெற்றது. பல்லவப் பேரரசின் வாரிசுகளான அபராஜிதனுக்கும் நிருபதுங்கனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், திருப்புறம்பயப் பெருவெளியில், வாரிசுரிமைப் போராக வெடித்தது. பாண்டியர்களோடு கூட்டுச் சேர்ந்த நிருபதுங்கன் தோல்வியைத் தழுவ, முதலாம் ஆதித்த சோழனோடும் கங்க அரசன் முதலாம் பிருத்விபதியோடும் கூட்டுச் சேர்ந்த அபராஜிதன் வெற்றிவாகை சூடினான் (திருப்புறம்பயப் பள்ளிப்படையைப் பற்றி அமரர் கல்கி எழுதுவாரே... நினைவிருக்கிறதா?) அது வரை, எல்லையும் வளமையும் குன்றியிருந்த சோழ அரசு, ஆதித்த சோழனின் இந்த வெற்றிக் கூட்டணியால் வளரத் தொடங்கியது.
திருப்புறம்பயப் போரில் வெற்றி பெற்ற அபராஜிதன், பின்னர் ஆதித்த சோழனால் வெல்லப்பட்டான். ஆதித்தன் தனது ராஜ்யத்தை விரிவுபடுத்துவதற்குத் திருப்புறம்பயம் பெரிய தூண்டுகோலாக அமைந்தது. சோழப் பேரரசு அமையக் காரணமான முதலாம் ஆதித்த சோழன், சேரமான் பெருமாள் நாயனாரின் (அறுபத்துமூவருள் ஒருவர்) மகன் ஸ்தாணு ரவியிடம் (ராஜா ரவிவர்மா திரிபுவன சக்ரவர்த்தி குலசேகரதேவன்) நட்பு பூண்டிருந்தான்.
திருப்புறம்பயப் போரில், தான் பெற்ற வெற்றியின் விளைவாக, அதுவரை செங்கல் கோயிலாக இருந் ததைக் கருங்கல் கோயிலாக, ஆதித்தன் கட்டுவித்தானாம். பிராகாரத்தில் வந்து நிற்கும்போது, ஆதித்த சோழனும், கங்க பிருத்விபதியும், அபராஜிதனும், ஸ்தாணு ரவியும், சேரமான் பெருமாளும் கண் முன்னால் உலா போகிறார்கள். தமிழகக் கோயில்களும், கோயில் நிலங்களும், எவ்வளவு ஆழ்ந்த பொருள் நிறைந்தவை!
வெளிப் பிராகாரத்தைச் சுற்றி வந்து, சிறிய மண்டபம் போன்ற ஒன்றின் வழியாக உள் பிராகாரத்துக்குள் நுழைந்தோம் இல்லையா, அந்த மண்டபத்துக்கு வந்து விடுகிறோம்! வெளிப் பிராகாரத்தில், தெற்குச் சுற்றுப் பகுதியில் நந்தி ஒன்று இருக்கிறதே... அதற்கு எதிரில் நிற்கிறோம். இங்குதான் அம்பாள் சந்நிதி. தெற்குப் பார்த்த சந்நிதியில் கொலு வீற்றிருக்கும் அருள்மிகு கரும்படு சொல்லியம்மை. அம்பாளின் திருநாமம் சற்று வித்தியாசமாக இருக்கிறதா? கரும்பை வெல்லும் இனிமையான மொழியாள் என்று பொருள். சம்ஸ்கிருதத்தில், இக்ஷ§வாணி என்பர்.அம்பாள் சந்நிதிக்கு முன்னால், மகா மண்டபமும் அர்த்த மண்டபமும் உள்ளன. மகா மண்டபத்தில் பள்ளியறை. அம்பாளுக்கே ‘யாழைப் பழித்த மொழியாள்’ என்றொரு பெயர் உண்டு. இனிமையான சொற்களைக் கூறும் ஜகன்மாதா, இன்னும் கூடுதலான இனிமையோடு, திருப்புறம்பயத்தில் அருள்கிறாள்.
‘அம்பிகே! அகிலாண்டகோடி பிரமாண்ட நாய கியே! அருள் புரிவாய் தாயே!’ என்று வணங்கியபடி திருப்புறம்பயத்தை விட்டு வெளியில் வருகிறோம்.
தேன் அபிஷேக பிள்ளையார்
விநாயகர் மோதகம் சாப்பிடுவார்; லட்டு சாப்பிடுவார்; அதிரசம் சாப்பிடுவார்; தேன்? ஆமாம்; தேனும் அருந்துவார்! குடம் குடமாகத் தேன் அருந்து வார். விநாயக சதுர்த்தித் திருநாளன்று திருப்புறம்பயம் போய்ப் பார்த்தால் தெரியும்.
கும்பகோணம்- திருப்புறம்பயம் என்று சொன்னால், உடனே எல்லோருக்கும் நினைவு வருவது ‘தேனபிஷேக விநாயகர்’ தாம்! சாதாரண நாட்களில் திருப்புறம்பயம் திருக்கோயிலில் அப்படியன்றும் கூட்டம் கிடையாது. ஆனால், விநாயக சதுர்த்தியன்று மாலை, சிறிது சிறிதாகத் தொடங்குகிற கூட்டம், இரவு 10 மணி வேளைக்குக் கோயில் கொள்ளாமல் வழியும். இரவு முழுவதும் கூட்டம் அதிகமாகுமே தவிர குறையாது! ‘தேனபிஷேக விழாக் குழு’வினர் ஒவ்வொரு வருடமும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோயிலின் வெளிப்பிராகாரமும் சுற்றிடமும் அடையாளம் தெரியாத அளவுக்கு நிரம்பி வழியும் பக்தர்கள்! எல்லோர் கையிலும் பாத்திரம் அல்லது புட்டி; அதில், விநாயகரின் அபிஷேகத்துக்காகக் கொண்டு வந்துள்ள தேன்! விடிய விடிய விநாயகருக்குத் தேன் அபிஷேகம் நடைபெறும்.
அபிஷேகம் என்றால் என்ன நினைக்கிறீர்கள்? இறைவன் திருமேனிமீது ஊற்றும் தேன், அப்படியே வழிந்து, கீழே ஓடும் என்றுதானே? அதுதான் இல்லை!
தேனினும் இனிய பிரணவ ஸ்வரூபனுக்கு, லிட்டர் லிட்டராக, கிலோ கிலோவாகத் தேனைச் சொரிவார்கள். எவ் வளவு ஊற்றினாலும், எத்தனை கொட்டினாலும், துளிக்கூட கீழே வழியாது. விநாயகப் பெருமான் எல்லாவற்றையும் குடித்துவிட்டுப் பிரகாசமாக வீற்றிருப்பார். தேன் எல்லாம் விநாயகர் திருமேனிக்குள் உறிஞ்சப்பட்டு விடும். எனவே, ‘தேனபிஷேகப் பிள்ளையார்’ என்றும், ‘தேன் குடித்த விநாயகர்’ என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறார், அருள்மிகு சாட்சி நாதேஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பிரளயம் காத்த விநாயகர்.
‘‘தேன் அபிஷேகம் நடைபெறும் போதே, சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், விநாயகர் ‘ஒரு மாதிரி’ சிவந்து, தேன் வண்ணமாக, செம்மையும் பழுப்புமாகக் காட்சி கொடுப்பார். இரவெல்லாம் தேனபிஷேகம் நடைபெற்ற பின்னர், காலை தரிசனத்தின்போது, விநாயகரை வணங்குவது கண் கொள்ளாக் காட்சி. தேனபிஷேக நாளில், ஆண்டுதோறும் கூட்டம் அதிகமாகி வருகிறது’’ என்கிறார் கோயில் அர்ச்சகரான தண்டபாணி குருக்கள்.
பிரளய வெள்ளத்தைத் தடுப்பதற்காக எழுந்தருளிய விநாயகர், கடல் பொருட்களால் ஆனவர். சிப்பி, கிளிஞ்சல், கடல் நுரை போன்ற பொருட்களை வைத்து, தேவேந்திரன் விநாயகர் திருமேனியைப் பிடித்து வைத்து வழிபட்டதாக ஐதீகம். திரவத்தை உறிஞ்சும் தன்மை மேற்குறிப்பிட்ட பொருட்களுக்கு உண்டு. கடல்நுரை விநாயகர், சற்றே கெட்டித் தன்மையுள்ள தேனை அப்படியே உறிஞ்சிக் கொண்டு விடுகிறார்.
ஒரு விஷயம்.... விநாயகர் பீடத்தின் மீதோ, சுற்றுப் பகுதியிலோ, தேன் சுவடும் கிடையாது; தேனைச் சுவைக்க வரும் எறும்புகளும் கிடையாது. அதனால்தான், எதையும் விட்டு வைக்காமல், விநாயகரே தேனைக் குடித்து விடுகிறார் என்கிறார்கள். அதுவும் ‘மெகா ஸ்ட்ரா’ வேறு (வேறென்ன... தும்பிக்கைதான்!) அவரிடத்தில் உண்டு.

No comments:

Post a Comment