Wednesday, 2 August 2017

திருப்பராய்த்துறை


கொந்தளித்துக் கொண்டிருந்தார் சாரு விடங்கர். அவரைவிட அதிக ஆத்திரத் தில் இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஏகவில்லியும் ஆசாரண்ணனும் புற்களைக் கீற்றுகளாகக் கிள்ளிப் போட்டுக் கொண்டிருந்தனர்.
‘என்ன திமிர்! என்ன இறுமாப்பு! எப்படி நம்மை ஏமாற்றி விட்டான் அந்தக் கூத்தாடி!’ மோகினியின் அழகில் தாங்கள் மயங்கிப் போன கையாலாகாத்தனத்தின் மீது கோபம் வர, தங்கள் மீதே சினம் பொங்க, மெல்லவும்... விழுங்கவும் முடி யாமல் விழித்தனர்.
‘‘கடமை தவறாது கர்மம் இயற்றினால் முக்தி கிட்டும் என்பதைச் சாத் திரங்களே ஒப்புக் கொள்ளும்போது, தோத்திரம் எதற்கு?’’ _ கண்கள் நிலை குத்தி தூர திசையைப் பார்த்துக் கொண்டிருந்த ஏகவில்லி, ஏகத்துக்கும் பொருமினார். தொடர்ந்து, ‘‘இந்தப் பெண்களுக்கு எங்கு போயிற்று புத்தி? நமது சரிவுக்கு நம் பத்தினிகள் என்ற பெயரில் இருக்கும் இந்தச் சனியன்களே காரணம்!’’ என்றார்.
ஏகவில்லியை வேகமாக இடைமறித் தார் சாருவிடங்கர்: ‘‘அப்படிச் சொல்லாதீர் சுவாமி. பத்தினி என்ற பெயரே இவர்களுக்குப் பொருந் தாது. நம்மைப் படுகுழிக்குள் தள்ளி விட்ட பாவிகள்!’’
‘‘ஓட்டாண்டி வந்தானாம்... கையில் கப்பரையைப் பார்த்தவர்கள், அவன் அழகில் வசப்பட்டார்களாம். தங்களையும் அறியாமல் உடையும் உள்ளமும் நழுவி நின்றார்களாம்... கேவலம் கேவலம்.’’
சுழன்று சுழன்று அடித்த ஆத்திரத்தின் வேகம் ஏகவில்லியையும் பற்றிக் கொள்ள, மெள்ள எழுந்து குறுநடை போட்டார் ஆசாரண்ணன். என்னதான் தத்தம் மனைவி யரைப் பழித்தாலும், கோபப்பட்டாலும், ஏதோவொன்று நெருடியது அவருக்கு. ‘ஆண் கள் நாம் மாத்திரம் என்ன செய்தோம்?’ ஆசாரண்ணனின் சிந்தனைக் குதிரை பின்னோக்கிப் பாய்ந்தது.
அந்திச் சூரியனின் மஞ்சள் கீற்றுகள் மண்ணில் கோலம் போட்டுக் கொண் டிருந்த நேரம். அனுஷ்டான ஹோமம் முடிகிற வேளை. எல்லையில்லாப் பேரெழிலுடன் அந்தப் பெண் வந்தாள். எங்கிருந்து வந்தாள் என்று அறிய முடியாதபடி, ஒயிலாக நடந்து, மயிலாக வந்தாள். கருங்கூந்தல் கற்றைகள் கழுத்திலும் தோளிலும் துள்ளி விளையாட, மீனொத்த விழிகள் இங்குமங்கும் அலைபாய, அந்த நுண்ணிடையாள் தளிர்நடையிட்டு வந்தபோது, மரங்கள்கூட சலசலப்பை நிறுத்திவிட்டுப் பார்த்தன. இலைகளுக்குக்கூட இமை கொட்டவில்லை. மஞ்சள் கிரணங்கள், அவளின் கரிய மேனியில் வண்ணக் கோலங்களை வாரி இறைத்த போது, விண்ணும் மண்ணும் ஒருசேர அவள் காலடியில் தண்டனிட்டன. இடை சரித்துத் திரும்பிய அவள், இதழ்க்கடையில் மென் மையாக முறுவலித்துக் கொண்டே, வலக் கரம் உயர்த்தி மரக்கிளையைப் பற்றியபோது, அவளின் கண்கள் மண்ணையளந் தன; கரங்களோ விண்ணை அளந்தன.
இத்தனை பேரெழிலுக்கு முன்னால்... ஹோமமாவது ஒன்றாவது! ஹோம கர்மங்களில் ஈடுபட்டிருந்த அத்தனை பேரும் _ ஆசாரண்ணன், ஏகவில்லி, சாருவிடங்கர் உட்பட...

ஏன், கர்மப் பிதாமகனாகத் திகழும் பெரியபெருமாள் திருவிடங் கத் தில்லையப்பன் சுவாமி கள் உட்பட அத்தனை பேரும் அனுஷ்டானத்தை அப்படியே விட்டு விட்டுத் திரும்பிப் பார்த்த னர். ஆசாரண்ணன் அமர்ந்திருந்த பக்கமாக வந்த அந்த ஆரணங்கு, பராய் மரத்துக் கிளை ஒன்றைக் கையில் ஏந்தியபடி, சாருமதி நதிக் கரை நோக்கி நடந்தாள். அன்னம் நடந்ததா? அழகு மயில்தான் ஆடி வந்ததா?
கையில் நெய்க்கரண்டியைப் பிடித்திருந்த திருவிடங்கத் தில்லை யப்பனார், உத்தரீயம் நழுவுவது தெரியாமல் எழுந்து நின்றார். முதுமையின் அடையாளமே தெரியாமல் நிமிர்ந்திருந்த முது கெலும்பு, இப்போது இன்னும் மிடுக்கோடு உயர, இரண்டே எட்டில் வனிதையின் அருகே வளைந்து நின்றார்.
‘‘அண்ணன் சுவாமி’’ - காற் றைக் கிழித்துக் கொண்டு ஒலித்த யாககேசியின் குரல் ஆசாரண் ணனை நிகழ்காலத்துக்குக் கொண்டு வர, ஏகவில்லியும் சாருவிடங்கரும் திரும்பினர்.
‘‘அண்ணன் சுவாமிகளே, அடுத்தென்ன செய்வது? யோசித்தீர்களா?’’ - யாககேசியின் கேள்வியையும் மீறி, ஆசாரண்ணனின் சிந்தனை மீண்டும் பின்னோக்கிப் பாய யத்தனித்தது.
மோகினிப் பெண்ணாள் (அதுதான் அவள் பெயராம்) மோகம் காட்டி நிற்க, அனுஷ்டானங்களை யும் கர்ம காரியங்களையும் மறந்து, பேராசான் தில் லையப்பனார் முதற்கொண்டு எல்லோரும் மயங்கிப் போக... ஒரு பக்கம் கர்மானுஷ்டானங்கள் பாழ்பட்ட அதே வேளையில்...
‘சந்தியா வேளையில் பிச்சையா?’ என்று முனிபத்தி னிகள் கண் விரித்து நோக்க, கையில் ஓடேந்திக் கொண்டு, வெள்ளை வஸ்திரம் மேலும் மெருகூட்ட, சடாமுடிகள் காற்றில் கலைந்தாட, செந்நிற மேனி சித்திர லாவண்யம் செய்ய, முனி குடில் களின் முன்னிலையில் நின்றது அந்த நெடிய உருவம்.
ஐயம் (பிச்சை ) இடுவது கர்ம காரியச் சிறப்பு என்ப தைக் காலம் காலமாகத் தெரிந்து வைத்திருந்த முனி குடும்பத்துப் பெண்களல்லவா! பிச்சையிட வந்தவர்கள், அன்னத்தை மட் டுமா இட்டார்கள்; தங்கள் அகங்களையு மல்லவா அந்தக் கோணல் ஓட்டில் கொட்டினார்கள்! பிச்சை வாங்க வந்தவனா அவன் - நீண்ட முகத்தின் ஒய்யாரமென்ன, வளைந்த புருவங்களின் வார்ப்பென்ன, குவிந்த உதடுகளின் வலஞ்சுழியென்ன, நீட்டிய கரத்தில் தெரியாமல் தெரிந்த நேசமென்ன, கால் தூக்கி நடந்தபோது விரலால் தீண்டி விரிகருணை காட்டிய பாதங்களென்ன - முன் துகில் நழுவுவதும், முத்துச்சரம் தெறிப்பதும், வளை நழுவி வீழ்வதும், உடற்கூடு உன்மத்தத்தில் உருகுவதும் புரியாமல், கண்ணும் மனமும் கசியக் கசிய, காற்றினும் மெலிதாகி, ககனத்தில் பறந்தனர் முனிபத்தினியர்.
‘‘ஏதாவது செய்துதான் தீர வேண்டும்’’ - கடுங் கோபத்துடன் ஒலித்த சாருவிடங்கரின் குரலுக்குக் கட்டுப்பட்ட ஆசாரண்ணன், யாககேசி அமர்ந்திருந்த பாறைமீது தானும் அமர்ந்தார். செய்தி இவ்வளவுதான். கர்மங்களைச் செய்தாலே முக்தி கிடைக்கும்; பக்தியோ கடவுள் நம்பிக்கையோ பணிவோ தேவையில்லை என்று கருதிய தாருகா வனத்து முனிவர்கள், சரியான பாடம் கற்றுக் கொண்டார்கள்.
பக்தியும் இறை ஞானமும் தேவையில்லை என்று நினைத்தது மட்டுமல்ல; தங்களையும் தங்களது கர்ம பலத்தையும் விட்டால், வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்கிற ஆணவமும் அவர்களைப் பிடித்தாட்டியது. தத்தம் மனைவியரின் கற்புதான், தெய்வப் பெண்டிரின் கற்பை விடவும் சிறப்பானது என்றுகூட இறுமாப்புக் கொண்டனர்.
‘திறமையும் மேன்மையும் இருந்தாலும், பணிவு இல்லை என்றால் பயன் இல்லை’ என்ற பாடத்தை, இவர்களுக்குப் புகட் டத் தீர்மானித்த பரம்பொருள், விளையாட்டுக் கோலம் காட்டி விந்தை புரிந்தது. உலகெல்லாம் அளந்த உம்பர் கோமானாம் மகாவிஷ்ணு, மோகினி வடிவம் கொண்டார்; நெற்றிக்கண் நாயகரோ, பிட்சாடனராக மாறினார்.
இறுமாப்பில் இருந்த முனிவர்கள், மோகினி யின் பால் கொண்ட மோகத்தால் தங்களது விரத மேன்மையை இழந்தனர். இன்னொரு பக்கம், பிட்சாடனரைக் கண்ட அவர்களின் மனைவியர், நிலையும் தன்மையும் மறந்தது கண்டு தவித்தனர். எப்படியென்றாலும், தங்களது செருக்கில் ஓட்டை விழுந்து நின்றனர். ஆசாரண்ணன் எழுந்தார்; ‘‘அபிசார யாகம் செய்வோம்.’’
படமெடுத்தாடும் பாம்புகள் போல, நால்வரும் மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டே சென்றனர். அபி சார யாகத்துக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகின. பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு. தாருகா வனத்து முனிவர்கள் யாகம் இயற்றினர். யாகத்தில் பற்பலவற்றை வருமாறு செய்தனர். வந்தவற்றைச் சிவபெருமான் மீது ஏவினர். புலி வந்தது; தோலை உரித்து ஆடையாக அணிந்தார். திரிசூலம் வந்தது; ஆயுதமாக ஏந்தி னார். மானும் மழுவும் வந்தன; கரங்களில் தாங்கினார். பாம்புகள் வந்தன; ஆரங்களாகப் பூண்டார். நெருப்பு வந்தது; துணையாகக் கொண்டார். பூத கணங்கள் வந்தன; சேனையாக்கினார். உடுக்கை வந்தது; ஒலித் துத் தாளமிட்டார். முயலகன் என்னும் அபஸ்மாரம் வந்தான்; கீழே சாய்த்து அவன் மீதேறி நடனமாடினார்.
தங்களுடைய எந்தத் தீங்கும் சிவனாரிடம் அண்ட முடியவில்லை என்பதை உணர்ந்த முனிவர்கள், அவரைப் பணிந்தனர். தவ றுக்கு வருந்திய முனிவர்களை மன்னித்து, அவர்கள் மேலும் தவம் செய்து கடவுளை வணங்கி பேறு பெற வழி சொன்னார் சிவபெருமான்.
தாருகா வனத்து முனிவர்கள் பல்லாண்டுக் காலம் தவம் செய்த திருத்தலம் - அவர்கள் மனம் நெகிழ்ந்து பணி செய்து முக்தி பெற்ற திருத்தலம் எங்கே இருக்கிறது?
பக்கத்தில்தான்... போவோமா?
திருச்சி - கரூர் மார்க்கத்தில் உள்ளது திருப்பராய்த்துறை. திருச்சி- ஈரோடு இருப்புப் பாதையில், எலமனூரில் இறங்கியும் இந்த ஊரை அடையலாம். திருச்சியிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.
தாருகா வனத்துக்கும் திருப்பராய்த்துறைக்கும் என்ன சம்பந்தம்? இரண்டும் ஒன்றுதான். பராய் மரத்துக்குச் சம்ஸ்கிருதத்தில் ‘தாருகா விருட்சம்’ என்று பெயர். பராய் மரக் காட்டில் இறையனார் எழுந்தருளி இருப்பதால், பராய்த்துறை எனப்படுகிறது. ஆதிப்பரமனார் ஓடு ஏந்திய பிட்சாடனராக கால்களைத் தரை யில் பதித்து நடந்த தலம்.
திருப்பராய்த்துறை திருக்கோயி லின் முன்வாயிலில் நிற்கிறோம். கிழக்கு வாயில். ஆலயத்தின் முன்புறம் அழகான மண்டபம். மண்டபத்தின் மேல் முகப்பில், ரிஷபாரூடர், சுதைச் சிற்பமாக எழுந்தருளி அருள் வழங்குகிறார். அடுத்துள்ள கோபுரம் ஏழு நிலை களோடு கம்பீரமாகக் காட்சி தரு கிறது. ஒரு பக்கத்தில் தீர்த்தக் குளம். இன்னொரு பக்கம், வசந்த மண்டபம் என்றழைக்கப்படும் கல் மண்டபம் (இந்த மண்டபத்தில்தான் விவேகானந்தர் பெயரிலான தொடக்கப்பள்ளி நடைபெறுகிறது).
முகப்பு விநாயகரை வழிபட்டு உள்ளே நுழைந்தால், செப்புக் கவசமிட்ட கொடிமரம்; பலிபீடம். நந்தியும் வீற்றிருக்க, இது நந்தி மண்டபம். மண்டபத் தூண்களில், தேவாரப் பெரியோர்களின் திருவுருவமும் மாணிக்கவாசகர் திருவுருவமும் அமைக்கப்பட்டுள்ளன.
வெளிப் பிராகாரம் பெரியது. வலம் வந்து இந்தப் பிராகாரத்தில் உள்ள விநாயகரையும் தண்டபாணியையும் வழிபட்டு, அடுத்த கோபுரத்துள் நுழைகிறோம். ஐந்து நிலைகளைக் கொண்ட உள் கோபுரத்தைத் தாண்டினால், நேரே மூலவர் சந்நிதி தெரிகிறது.
தொண்டு பாடியும் தூமலர் தூவியும் இண்டை கட்டி இணையடி ஏத்தியும் பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக் கண்டு கொண்டடியேன் உய்ந்து போவனே
என்று அப்பர் பெருமான் பாடிய பராய்த்துறை பெருமானைப் பாடிக் கொண்டே பிராகாரத்தை வலம் வருவோமா? வரிசையாக வலம்புரி விநாயகர், சப்தமாதாக்கள், அறுபத்துமூவர். தொடர்ந்து சோமாஸ்கந்தர். அடுத்து பஞ்சபூத சிவலிங்கங்கள். அடுத்து பிட்சாடனர்; இந்தத் தலத்துக்கே உரியவரல்லவா; பிட்சாடனரைச் சிறப்பாக வணங்கித் தொடர்ந்தால் பிரம்மா, துர்க்கை, கஜலட்சுமி, பன்னிரு கை வேலரான சண்முகர்.
வழிபட்டுக் கொண்டே பிராகார வலம் செய்ய, நவக்கிரகச் சந்நிதியை அடைகிறோம். சனீஸ்வரர் மட்டும் காக்கை வாகனத்தோடு காட்சி தருகிறார். பைரவரையும் வழிபட்டு, பின்னர் நடராஜர் சபை முன் நிற்கிறோம்.
“பராய்த்துறை மேவிய பரனே போற்றி’’ என்று மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் பாடுகிறார்.
துவாரபாலகர்களை வணங்கிக் கொண்டே மூலவர் கருவறைக்குள் புகுகிறோம். கிழக்கு நோக்கிய மூலவர். அழகான சிவலிங்கத் திருமேனி.
நீறு சேர்வதோர் மேனியர் நேரிழை கூறு சேர்வதோர் கோலமாய்ப் பாறு சேர் தலைக்கையர் பராய்த்துறை ஆறு சேர்சடை அண்ணலே - செல்வ மல்கிய செல்வர் பராய்த்துறைச் செல்வர்மேல் சிதையாதன செல்வன் ஞானசம்பந்தன் செந்தமிழ் செல்வமாம் இவை செப்பவே - என்று
திருஞானசம்பந்தப் பெருமான் பாடிப் பரவுகிற பராய்த் துறை நாதர்- ‘தாருகாவனேஸ்வரர்’ என்றும் ‘செல்வர்’ என்றும் இவருக்குத் திருநாமங்கள் உண்டு.தாருகா வனத்து முனிவர்கள் தந்த தீமைகளை ஏற்று, அபஸ்மாரத்தையும் ஆணவத்தையும் அடக்கி, பதிலுக்குச் சிவஞானம் என்னும் பெருஞ்செல்வத்தைத் தந்ததனால், இவர் ‘செல்வர்.’

ப ராய்த்துறை நாதரை பணிந்து வணங்கி, மீண்டும் பிராகார வலம் வருகிறோம். கோஷ்டத்தில் விநாயகர்; தட்சிணா மூர்த்தி. தட்சிணாமூர்த்தி தனி சந்நிதியில் இருப்பதுபோல மண்டபத்தில் வீற்றிருக்கிறார். சிங்கங்கள் தாங்குவது மாதிரி வேலைப்பாடு கொண்ட அழகிய தூண்கள். கல்லால மரம், அகலமாகப் பெரிதாக வனப் போடு திகழ்கிறது. வீராசன தட்சிணாமூர்த்தி, அழகோ அழகு!
மேற்கு கோஷ்டத்தில் அர்த்த நாரீஸ்வரர். வடக்கு கோஷ்டத்தில் பிரம்மாவும் துர்க்கையும். தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர். ஐயனை வணங்கி அம்பாள் சந்நிதிக்கு வருகிறோம். தெற்கு நோக்கிய சந்நிதி. அம்பாளுக்கு, பசும்பொன் மயிலாம்பாள் என்றும் ஹேமவர்ணாம்பிகை என்றும் திருநாமங்கள்.
அம்பாளின் திருநாமம் கவனிக்கத் தக்கது. பராசக்திக்கு ‘ஹைமவதி’ எனும் திருநாமம் உண்டு. ‘ஹிமவான் மகள்’ என்பதால் ஹைமவதி. தங்கம் போன்று பிரகாசிப்பவள்

என்பதால் (ஹைமம், ஹேமம்- தங்கம்) ஹைமவதி. உபநிடதத்தில்தான் இந்தப் பெயர் முதன் முறையாகக் காணப்படுகிறது. தேவேந்திரனும் தேவர்கள் பிறரும் ஈசனை உணரத் தெரியாமலும் ஞானம் இல்லாமலும் ஆணவத்தில் செருக்குண்டபோது, அவர்களுக்கு ஈஸ்வர வித்யையை உபதேசிப்பதற்காகத் தோன்றினாள் அம்பிகை. தங்க வண்ணத்தில் பளபளத்துக் கொண்டு தோன்றிய அவளுக்கு ‘உமா ஹைமவதி’ என்று பெயர்.
தேவர்களுக்கு, சிவஞானத்தை உணர்த்தத் தோன்றினாள் அங்கு; இங்கு பராய்த்துறையிலும் சிவஞானத்துக்கு வழிகாட்டுவதால்தானோ என்னவோ ஹேமவர்ணாம்பிகை என்று திருநாமம்! பசும்பொன் மயிலாம்பாள் என்ற தமிழ்ப் பெயரைச் சொல்லச் சொல்ல நா மணக்கிறது. அம்பாளை வழிபட்டு மீண்டும் பிராகாரம் வருகிறோம். திருப்பராய்த்துறை என்ற பெயரைச் சொன்னாலே நினைவுக்கு வருவது ஒன்று உண்டு.
குடகு மலைப் பகுதிகளில் உற்பத்தியாகிப் பாய்ந்து வருகிற காவிரிப் பெண், தனது உபநதிகளுடன் சேர்ந்து, மிகவும் அகலமானவளாக மாறுகிற இடம் திருப்பராய்த்துறை. அகண்ட காவிரி என்ற பெயர், இங்குதான் ஏற்படுகிறது.
இங்கிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிற காவிரி, சுமார் அரை கி.மீ. தொலைவில் காவிரியாகவும் கொள்ளிடமாகவும் பிரிந்து விடு கிறாள். அதன் பின்னர், நிறையக் கிளை நதிகளும் கால்வாய்களும் ஏற்பட்டு விடுகின்றன.
எனவே, காவிரி நல்லாளின் முழுமையான மகிமையும் பரிமாணமும் திருப்பராய்த்துறையிலேயே உள்ளது என்பது பெரியோர்களின் நம்பிக்கை. வருடம் முழுக்க காவிரியில் நீராடினாலும், துலா (ஐப்பசி) ஸ்நானத்துக்குச் சிறப்பு உண்டு. சூரியன், துலா ராசிக்குள் பிரவேசிக்கும் மாதம் ஐப்பசி. இந்தச் சந்தர்ப்பத்தில், பருவ மாற்றம் காரணமாகக் காவிரியில் நீர் வரத்தும் அதிகரிக்கும்; நீர் சற்றே கலங்கி பல்வேறு தாதுக்களைத் தாங்கி வரும். இதனால் தாதுக்களின் சக்தியும் கலங்கிய மண்ணின் வளமும் அதிகரிக்கும். இந்தக் காலகட்டத்தில், காவிரியில் ஸ்நானம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தருவதாகும்.
துலா நீராடல், தமிழகத்தில் இரண்டு இடங்களில் இரண்டு சந்தர்ப்பங்களில் பிரசித்தமானது. ஒன்று, ஐப்பசி மாதத் தொடக்கத் தில் நடைபெறும் முதல் முழுக்கு; அடுத்தது, ஐப்பசி மாதக் கடைசியில் நடைபெறும் கடை முழுக்கு. ஐப்பசி முதல் தேதி, திருப்பராய்த்துறையில் முதல் முழுக்கும், கடைசித் தேதி மயிலாடுதுறையில் கடை முழுக்கும் போடவேண்டும் என்பது ஐதீகம்.
கொங்கு நாட்டுப் பகுதிகளைத் தாண்டும் வரை, காவிரி அடிக்கடி திசை மாறிக் கொண்டு, வளைந்து நெளிந்து கொண்டு, குண்டும் குழியும் ஏறி வருகிறாள். கொடுமுடிப் பகுதியில், காவிரிப் பெண் முழுவதுமாகக் கிழக்கு நோக்கித் திரும்புகிறாள். அதன் பின்னர் அவளின் ஆர்ப்பாட்டமும் சற்றே குறைகிறது.
இளம் பெண்ணாகத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந் தவள், கிழக்கே திரும்பிப் பாயும்போது, தாய்மையின் வாத்சல்யத்தோடு அகன்று அரவணைத்துப் பல்கிப் பெருகி விடுகிறாள். ‘நாடெங்குமே செழிக்க, நன்மை யெல்லாம் சிறக்க, நடந்தாய் வாழி காவேரி!’ என்று அவள் நடந்து வருவதும், வருபவர்களை அன்புடன் அரவணைப்பதும் அகண்ட காவிரியாக மாறுகிற திருப்பராய்த்துறைப் பகுதியில்தான் நடக்கிறது. அதனால்தான் இங்கு, துலா முதல் முழுக்கிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
காவிரி தல புராணத்தின்படி, காவிரி, அகத்தியரின் மனைவி. லோபாமுத்திரை என்பதும் இவள் பெயரேயாகும். அகத்தியரிடம் பல வரங் களைப் பெற்று, அவற்றைப் பலருக்கும் வாரி வழங்கும் நிலையில் அகண்ட காவிரி என்று அழைக்கப்படுகிறாள்.
‘சூரியன் துலா விஷ§வை அடை யும்போது பசுவின் நாக்கு போன்ற தன்மையைக் கொண்ட இலைகளோடு கூடிய பராய் மரத்துப் பராய்த்துறைத் தலத்தில் காவிரி நீராடினால், பாவங்கள் தொலையும்’ என்று பிரம்மோத்தர காண்டம் என்னும் நூல் தெரிவிக்கிறது.
துலா ஸ்நானத் திருநாளில், அருள்மிகு ஹேமனேஸ்வரி சமேதராகத் தாருகா வனேஸ்வரர், ரிஷப வாகனத்தின் மீது எழுந்தருள்வார். துலா மாசமான ஐப்பசி பிறக்கிற வேளையில் அகண்ட காவிரியில் திருமஞ்சனம் ஆடுவார். அதே தருணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே நீராடுவார்கள்.
‘இந்தியாவின் தூளியும் காற்றும் புனிதமானவை; இந்தியாவே ஒரு புண்ணிய தீர்த்தம்’ என்றார் சுவாமி விவேகானந்தர்; இந்தியத் தீர்த்தங்களுள் ஒரு புண்ணிய தீர்த்தமாம் திருப்பராய்த்துறையின் புனிதத் தூளியை அனுபவித்த பெருமிதத்தோடு மீண்டு வருகிறோம் (தூளி என்றால் ‘பாதம் பட்ட இடம்’ என்று பொருள் கொள்ளலாம். தன் பக்தர்களின் பாதம் பட்ட தூளியை- அதாவது மண்ணை எடுத்து வைத்து ஸ்ரீகண்ணபிரான் தினமும் பூஜை செய்வதாக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு).
திருப்பராய்த்துறையின் பெருமைகளுள் ஒன்று, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம். கோயம்புத்தூர் பிரதேசப் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள செங்குட்டைப்பாளையம் எனும் கிராமத்தில் தோன்றிய சிறுவன் சின்னு. தத்துவம், விஞ்ஞானம், கணிதம் ஆகியவற்றைப் பயின்று, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஈடுபாடு கொண்டு, நாட்டுப் பணி செய்ய வேண்டும் என்ற விருப்பத்தோடு இருந்த சின்னுவுக்கு, ஸ்ரீசிவானந்த சுவாமிகளின் அருள் கிட்டியது. சிவானந்தரின் சீடராகி ‘திரியம்பக சைதன்யர்’ ஆனார் சின்னு.
சேரன்மாதேவி வ.வே.சு. ஐயரோடு கிட்டிய தொடர்பு, அகத்தியர் ஆலயத்தில் தவ வாழ்க்கையை ஏற்படுத்தியது. பின்னர், உதகையில், ஸ்ரீசிவானந்தர் இவருக்கு சந்நியாச தீட்சை அளித்து ‘சித்பவானந்தர்’ என்னும் திருநாமம் தந்தார். உதகையில் பத்து ஆண்டுகள் இருந்த பின்னர், குருநாதர் அருளின்படி திருப்பராய்த்துறை அடைந்தார். ஆரம்பக் கல்விப் பணிகளில் ஈடுபட்டார்.
கால் ரூபாய் மூலதனத்தில் காவிரியின் தென் கரையில் தபோவனத்தை உருவாக்கினார். கல்விப் பணி, பதிப்புப் பணி, ஆன்மிகப் பணி, சமூகப் பணி என்று பல தளங்களில் இயங்கி வரும் தபோவனம், ஆர்ப்பாட்டம் இல்லாத சிவஞானத்தின் அடையாளமாகவே திகழ்கிறது. திருப்பராய்த்துறை ஈசனிடம் விடை பெற்றுத் திரும்புகிறோம்.

No comments:

Post a Comment