தேவகுருவின் சாபத்தால் ஒரு முறை தனது கலைகளை இழந்தான் சந்திரன். எனவே, ‘சிவபெருமானை தியானித்து தவமிருப்பதே சாபத்தைப் போக்கும் வழி!’ என்று தீர்மானித்தான். அதனால் பூலோகத்துக்கு வந்து தவத்துக்கு ஏற்ற இடம் தேடினான்.
அப்படியாக கோமுகி நதிக்கரையில் அமைந்ததும், பாவங்களைப் போக்க வல்லதுமான சோமாண்டார் கோவிலை அடைந்தான். நதிக்கரையில் இருந்த நந்தவனம் ஒன்றிலிருந்து பூப்பறித்து வந்து, அர்ச்சித்து ஈசனாரை பூஜித்தான். தொடர்ந்து தவத்தில் ஆழ்ந்தான்.
காலம் கனிந்தது. சந்திரனது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், ரிஷபாரூடராக அவன் முன் காட்சி தந்தார். ‘இழந்த கலைகளை மீண்டும் பெறக் கடவது!’ என்று சந்திரனுக்கு அருளிய சிவபெருமான், ‘‘குருவின் சாபத்தை நீக்கி, யாம் அருளியதன் அடையாளமாக இந்தத் திரு விடத்தில் எம்மை பிரதிஷ்டை செய்து வழிபடுக!’’ என்றும் கட்டளையிட்டார். அவ்வாறே சந்திரன், இங்கு ஸ்ரீசோமநாதீஸ்வரர் என்ற திருநாமத்தில் சிவபெருமானையும் ஸ்ரீலோகாம்பிகை என்ற திருநாமத்தில் அம்பிகையையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.
தொன்மை வாய்ந்த இந்த ஸ்ரீசோமநாதீஸ்வரர் ஆலயம் கி.பி. 917-ல் முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டது. அவனது காலத்துக்குப் பிறகு வேறு சில சோழ மன்னர்களாலும், திருமலை நாயக்கர்களாலும் இந்த ஆலயம் பராமரிக்கப்பட்டதைக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் நுழைவாயில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. நுழைவாயிலைக் கடந்ததும் பலிபீடம். அதை அடுத்து நந்தி தேவர் மண்டபம். கொடி மரம் இல்லை. இங்கிருந்து பிராகார வலத்தை ஆரம்பிக்கலாம்.
நந்தி தேவர் மண்டபத்துக்கு இடப் பக்கம் ஆதி விநாயகர் வீற் றிருக்கிறார். அடுத்து தென்மேற்கு மூலையில் கோடி விநாயகர் தரிசனம் தருகிறார். அவரைத் தொடர்ந்து ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் வள்ளி- தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்ரமணியர் ஆகியோரை தரிசிக்கலாம்.
வடமேற்கு மூலையில் உள்ள அம்மன் சந்நிதி பாழடைந்திருக்கிறது. அதனுள் இருக்கும் அம்மன் விக்கிரகமும் சிதிலம் அடைந்திருக்கிறது. தற்போது புதிதாக அம்மன் விக்கிரகம் ஒன்றை மூலவருக்கு அருகிலேயே வைத்து வழிபடுகின்றனர். இந்த சந்நிதியைக் கடந்தால் வட திசையில் சண்டிகேஸ்வரர் மற்றும் கால பைரவர் சந்நிதிகள்.
பிராகார வலத்தின்போதே விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகிய கோஷ்ட மூர்த்திகளையும் தரிசிக்க முடிகிறது. ஆலயத்தின் வடமேற்கு மூலையில் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் மூத்த (ஜேஷ்டா) தேவியின் புடைப்புச் சிற்பங்கள் இரண்டு உள்ளன. இது பல்லவர்களால் நிர்மாணிக் கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிராகார வலம் முடித்து மூலவரை தரிசிக்க அர்த்த மண்டபத்துக்குள் நுழைந்தால், வலப் புறம் ஸ்ரீசிவகாமி அம்மை சமேத ஸ்ரீசிதம்பரேஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்துவிட்டு உள்ளே சென்றால் கருவறையில் மலர்மாலை அலங்காரத்துடன் தீப ஒளியின் நடுவே அருட் ஜோதியாக தரிசனம் தருகிறார் ஸ்ரீசோம நாதீஸ்வரர். அவருக்கு சற்று முன், வலப் புறத்தில் ஸ்ரீலோகாம்பிகை அம்மன். ஆலய அர்ச்சகர் சபேச குருக்கள் இந்த ஆலயச் சிறப்பை விவரித்தார்:
‘‘இந்தக் கோயிலின் கருவறை விமானம் சுமார் 30 அடி உயரம் கொண்டது. விமான உச்சியில் அந்தக் காலத்தில் அமைத்துள்ள பொற்கலசம், இன்றும் பொலி வுடன் பிரகாசிக்கிறது. சந்திரன் பூஜித்து அருள் பெற்ற தலம் ஆன தால் ஜாதகத்தில் சந்திர திசை நடை பெறும் பக்தர்கள், சோம வாரம் மற்றும் பிரதோஷ காலங்களில் இங்கு வந்து வழிபட்டால் அதிக பலன் கிடைக்கும்.’’
ஆதிசங்கரர் இங்கு வந்து வழி பட்டுச் சென்றதாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. போதுமான நிதி வசதி இல்லாததால் அம்மன் சந்நிதியும், சந்திர தீர்த்தமான கோயில் திருக்குளமும் பாழடைந்துள்ளன.
பிரதோஷ வழிபாடும் சோம வார வழி பாடும் இங்கு சிறப்பாக நடை பெறுகின்றன. தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் கள்ளக்குறிச்சிக்கு பேருந்து வசதி உண்டு. இங்கிருந்து சோமாண்டார்குடிக்கும் தனியே பேருந்து வசதிகள் உள்ளன.
|
Wednesday, 2 August 2017
சாபம் நீங்க சந்திரன் தவம் இருந்த தலம் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment