பிரதோஷ நாளில், சூரியாஸ்தமனத்துக்கு முன்னதாக இருக்கும் மூன்றே முக்கால் நாழிகை நேரத்தில் சிவ தரிசனம் செய்வது மிகவும் புண்ணியம். சிவ பக்தராகத் திகழ்ந்த வாமதேவ முனிவர், பிரதோஷ நாளில் சிவனாரை வழிபட்டு, பிரதோஷ நாளிலேயே முக்தி பெற்றார். எனவே, பிரதோஷ நாளில், வாமதேவர் வழிபட்ட தலத்தில் நாமும்
வழிபடுவது, எல்லா வித நன்மைகளையும் தரும். திருமணத் தடைகள் நீங்குவதற்கும், செல்வம் சேர்வதற்கும், நிம்மதி பெருகுவதற்கும், வாமதேவர் வழிபட்டுப் பேறு பெற்ற திருஅரசிலி திருத்தலத்தில், பிரதோஷ வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது. வாருங்கள், திருஅரசிலி செல்வோம்.
போன நூற்றாண்டின் கிராம வாடை இன்னமும் தொலைந்து போகாத சிறிய ஊர். ஊர் நடுவில் கோயில். கோயில் எதிரில் தீர்த்தம். குளமாகக் காணப்படும் இந்தத் தீர்த்தத்துக்கு வாமதேவ தீர்த்தம் என்று பெயர். தீர்த்தக் கரையில் அரச மரம் (ஸ்தல விருட்சம்).
தம் வலக் கண்ணிலிருந்து உதித்த மரத்துக்கு அபிஷேகம் செய்து பூவுலகில் நட்டு வைத்த விஷ்ணு, மரங்களுள் தலையாயது எனக் காட்டுவதற்காக, அதற்கு அரசு என பெயரிட்டார் என்று புராணங்கள் கூறும். அரச மரம், மும்மூர்த்திகளின் வடிவமாக வணங்கப்படுகிறது. தினமும் ஒரு முறை அரச மரத்தை வலம் வந்தால், வினைகள் அணுகாது. வாரம் ஒரு முறை வலம் வந்து வழிபட்டால், மும்மூர்த்திகளின் அருளும் கிட்டும். அரச மரத்தை வழிபட்டு, நேர் எதிரில் இருக்கும் ராஜ கோபுரத்துள் நுழைகிறோம். இந்தக் கிழக்கு ராஜ கோபுரமே கோயிலின் பிரதான வாயில். சிறிய கோயில்தான். இருந்தாலும், மனோ ரம்மியமான அமைதியுடன் உள்ளத்தை வசப்படுத்துகிறது.
பிராகாரத்தை வலம் வந்துவிட்டுப் பின்னர் உள்ளே செல்வதுதானே நமது வழக்கம். அந்த வழக்கப்படியே, பிராகார வலத்தைத் தொடங்குகிறோம். தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதி. வடமேற்குப் பகுதியில் வள்ளி - தெய்வானை சமேத ஆறுமுகர், தனிச் சந்நிதியில் வேலும் கொடியும் ஏந்திக் காட்சி தருகிறார். பிராகாரத்தின் வடக்குச் சுற்றில், சண்டிகேஸ்வரரின் சந்நிதியைத் தாண்டி வந்தால், ஒரு கிணறு. அதையும் தாண்டி, நவக்கிரகங்கள். நவக்கிரகங்களை வணங்கிவிட்டு, அம்பாள் சந்நிதி பின்புறமாக வந்தால், மதிலை ஒட்டினாற்போல, வடகிழக்கு மூலையில் வாகன மண்டபம். இந்த இடத்தில் திரும்பினால், கிழக்குச் சுற்றுக்குள் நுழைகிறோம். முதலில் பார்த்தோமே நந்தி மண்டபம், அங்கு வந்து விடுகிறோம்.
மானசீகமாக அந்தக் காட்சியை அகக்கண்ணில் அனுபவித்துக் கொண்டே நந்தி மண்டபத்தின் தெற்குப் பகுதிக்கு வருகிறோம். தெற்குத் திருச்சுற்றுக்கு அருகில் ஒரு வழி செல்கிறது. இந்த வழியே இரண்டு படிகள் ஏறிச் சென்றால், வடக்கு நோக்கியபடி, சைவ நால்வர் பெருமக்கள் நிற்கிறார்கள். வேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத் துறை விளங்க, பக்திப் பாடல்களைப் பாடிக் கொடுத்த அந்தப் பெரு மக்களை வணங்கி, அவர்களுக்கு எதிரில் உள்ள வாயில் வழியே நுழைகிறோம். மூலவர் கருவறை முன்மண்டபத்தை அடைகிறோம். நால்வருக்குக் காட்சி வழங்குகிற நிலையில், முன்மண்டபத்தில் தெற்கு நோக்கிய நடராஜர். நடராஜரை வணங்கி நமக்கு இடப் புறமாகத் திரும்புகிறோம்.
நேரே பார்க்க... அருள்மிகு அரசிலிநாதர் - கிழக்கு நோக்கியவராக தரிசனம் தருகிறார். அரச மரத்தைத் தனது இல்லமாகக் கொண்டவர் என்பதால், அரசிலிநாதர் என்று இவர் பெயர் பெற்றாராம். அரசிலீஸ்வரர், அச்வதேஸ்வரர் (அச்வதா மரம் - அரச மரம்) என்றும் திருநாமங்கள் உண்டு. கல் வெட்டுகளில் அரசிலி ஆளுடையார் என்றும் அரசிலி ஆலாலசுந்தரர் என்றும் இந்த சுவாமியின் பெயர் காணப்படுகிறது. குட்டையான ஆவுடையாரின் மீது குட்டையான பாணம். மொத்தத்தில் சிவலிங்கத் திருமேனியே தாழ இருக்கிறது.
வாமதேவ முனிவர் இந்த இடத்தில் தீர்த்தம் ஒன்று அமைத்து, அரசடிச் சிவனாரை வழிபட்டார். எனவேதான், அரசடித் தீர்த்தம், வாமதேவ தீர்த் தம் என்றழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர், திருவொற்றியூர், திருமயிலை போன்ற தொண்டை நாட்டுத் திருத்தலங்களை தரிசித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். தென்திசை நோக்கிப் போகும் பாதையில், அச்சிறுப்பாக்கம் சென்று வழிபட்டுவிட்டு, அரசிலியை அடைந்தார். அழகிய திருப்பதிகம் ஒன்றை, இந்தத் தலத்துக்குப் பாடினார்.
வண்ண மால்வரை தன்னை மறித்திடல் உற்ற வல்லரக்கன் கண்ணும் தோளும் நல்வாயும் நெரிதரக் கால்விரலூன்றிப் பண்ணின பாடல்வகை நரம்பால் பாடிய பாடலைக் கேட்டு அண்ணலாய் அருள் செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே!
பெரிய கயிலை மலையைப் பெயர்த்து விடலாம் என்று நினைத்துத் தூக்கிய ராவணனின் கண்ணும் தோளும் வாயும் முகமும் முறிந்து போக, தம் கால் பெருவிரலை லேசாக அழுத்தினார் சிவனார். அழுத்தப்பட்டுத் தவித்த ராவணன் தனது வீணையை மீட்டி சாமகானம் இசைத்தான். அவன் பாடிய பாடலைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருளினார் இறையனார். வாள் கொடுத்தார்; வரம் கொடுத்தார். இறைவனுடைய மலையைத் தான் பெயர்த்து விடலாம் என்று அகந்தையில் இறுமாந்தவனுக்குக்கூட, வாளும் வரமும் கொடுத்துப் பெருமைப் படுத்திய வான்கருணை வள்ளல் இருக்கும் இடம் அரசிலி. ராவணனுக்கே அருளிய வள்ளல் நமக்கும் அருள மாட்டாரா என்ன!
சிறிய திருமேனியாக நின்று சிந்தை குளிர வைக் கும் அரசிலிநாதரை வணங்குகிறோம். உள்ளே சென்ற அதே பக்கவாட்டு வழியே வெளியே வருகிறோம். மூலவர் கருவறைக்குச் செல்வதற்கு இவ்வாறு பக்க வாட்டு வழி இருக்கும் அமைப்பு, பல்லவப் பிரதேசக் கோயில்கள் பலவற்றில் காணப்படுகின்றன. மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் தெற்கு முகம் பார்த்த நடராஜர் சபை இருக்கும். நடராஜரை நிரந்தரமாக தரிசித்தபடி, முன்மண்டபத்தின் பக்க வாட்டில், வடக்குப் பார்த்துக் கொண்டு நால்வர் பெருமக்கள் நிற்பர். பக்கவாட்டு வழியாக வந்து, அடியார் பெருமக்களாம் நால்வரை வணங்கி, முன் மண்டபம் நுழைந்து நடராஜரைப் பணிந்து, பின்னர் மூலவரை தரிசிக்க வேண்டும். அடியாரை முதலில் வணங்கித்தான் ஆண்டவனை வணங்க வேண்டும் என்கிற விதிக்கு ஏற்பவும், அருவுருவச் சிவலிங்கத் திருமேனியையும் ஆடல்வல்லானையும் ஒருசேர வணங்குகிற விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதத்திலும் இவ்வாறு அமைக்கப்பட்டது என்று எடுத்துக் கொள்வதில் தவறில்லை. பிரதோஷ காலத்திலும் மற்ற நேரங் களிலும், நந்திதேவரையும் மூலவரையும் அடுத்தடுத்தோ, ஒருசேரவோ வணங்க வேண்டும் என்றால் என்ன செய்வது? அதற்கும் வசதியாகத்தான், கருவறை முன்மண்டப முன் சுவரில் சாளரம் அமைத்திருக்கிறார்கள். ஒழிந்தியாப்பட்டுத் திருக் கோயிலைப் பொறுத்தவரை, சாளரத்தின் வெளிப்புறம் நந்தி மண்டபம்; உள்புறம் முன் மண்டபம். மூலவர் தரிசனம் நிறைவடைந்து வலம் வரவேண்டுமே. மீண்டும் பிராகாரத்தை வலம் வருகிறோம். கோஷ்ட மூர்த்தமாக எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தி கொள்ளை அழகு. தனி விமானத்துடன் காட்சி தருகிறார். பின் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு. சிரவையாதீனம் கௌமார மடாலய ஸ்ரீதண்டபாணி சுவாமிகள், இந்தத் தலத்தின் பேரிலும், குறிப்பாக இந்த மகாவிஷ்ணு பேரிலும் பாடல்கள் பாடியுள்ளாராம். வடக்குக் கோஷ்டத்தில் பிரம்மாவும் துர்க்கையும். துர்க்கை சந்நிதிக்கு அடுத்து, விசேஷமாக வைஷ்ணவி சந்நிதியும் உள்ளது.
கோஷ்டச் சுவர்களில் பற்பலக் கல்வெட்டுகள். இந்த ஊரைப் பற்றிய கல்வெட்டுச் செய்திகளில், ஜயம்கொண்ட சோழமண்டலத்து ஓய்மானாட்டு அரசிலி என்றும் ஜயம்கொண்ட சோழமண்டலத்து ஒழுகறை என்றும் பெயர்க் குறிப்புகள் உள்ளன. சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப் படை என்பதன் தலைவன் நல்லியக்கோடன் என்னும் அரசன். மிகப் பெரிய கொடை வள்ளலான இவன், ஓய்மானாட்டி னன் என்றழைக்கப்பட்டான். ஓய்மானாடு என்பது இப்போதைய திண்டிவனம், தென்னாற்காடு பகுதி களாகும். வாழ வேண்டிய முறைப்படி மக்கள் வாழ் கின்றனர் என்பதைச் சிறப்பித்துச் சொல்லும் விதம் சில காலத்துக்கு ஒழுகறை என்ற பெயரும் இந்த ஊருக்கு இருந்திருக்கிறது. ஒழுகறைப்பட்டு என்பதே ஒழிந்தியாப்பட்டு என்றாகி இருக்க வேண்டும்.
நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் தரிசனம் தரும் அம்மனுக்கு பெரியநாயகி என்றும் அழகியநாயகி என்றும் திருநாமங்கள். அரசிலி திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை ஒட்டி பத்து நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறும். இதில் ஏழாம் நாள் விழா, மிகவும் விசேஷம். ஒழிந்தியாப் பட்டில் வாழ்ந்த ஜயலட்சுமி என்னும் பெண்மணி, திருஞானசம்பந்தர் திருமடம் ஒன்றைக் கட்டி இருக் கிறார். இந்த மடம், கோயிலுக்குத் தெற்குப்புறம் அமைந்துள்ளது. மடத்தின் அறக்கட்டளையிலிருந்து சிறப்பாக நடைபெறும் ஏழாம் நாள் உற்சவத்தில், சுவாமிக்கு என்ன வாகனம் தெரியுமா? அரச மரம்!
- ‘தேர்ந்தவர்கள் தத்தமது மதியால்சாரும் அரிசிலியூர்
உத்தம மெய்ஞான ஒழுக்கமே’ என்று ராமலிங்க வள்ளலார் பாடியது நினைவில் தட்ட, அதைப் பாடியபடியே வெளியே வருகிறோம்.
No comments:
Post a Comment