அவர்கள் இருவர். ஒருவர் வயதில் பெரியவர்; இன்னொருவர் இளையவர். பெரியவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. அதைக் கேள்வியாக்கினார். அவரது கேள்விக்கு, அடுத்தவர் பதில் சொன்னார்.
‘‘இவர்தாம் ஈசனாயிற்றே; இவரை எதற்கு இடையன் வெட்டினான்?’’- இது முதியவரின் வினா.
‘‘என்னதான் இருந்தாலும், வாடகை கொடுக்காமல் குடி இருந்தால், வெட்ட மாட்டானா?’’- இது இளையவரின் விடை.
யாரைப் பற்றி, இந்தக் கேள்வி-பதில் என்று பார்க் கிறீர்களா? எல்லாம் அந்த ஆதிப் பரம்பொருளாம், சிவபெருமானைப் பற்றித்தான். இந்த இருவருமாகச் சேர்ந்து பாடிய பாடல், நிந்தா (ஏசுவது போல் துதிக் கும்) ஸ்துதியாக அமைந்தது.
வேயீன்ற முத்தர் தமை வெட்டினார் ஓரிடையன் தாயீன்ற மேனி தழும்புபட - பேயா கேள் எத்தனை நாளானாலும் இடையன் பொறுப்பானோ அத்தனையும் வேண்டும் அவற்கு.
ஆமாம்; எங்கும் இருந்தாலும், சில ஊர்களில் சற்று அதிகப் படியாகத் திருவிளையாடல் புரிந்திருப்பார் அல்லவா? அப்படியரு திருத் தலத்து இறைவனைத்தான் இரட்டைப் புலவர்கள் இப்படிப் பாடினர்.
சிவனுக்கு இடப் புறம் அம்பிகை எழுந்தருள்வது வழக்கம். ஒரு சில தலங்களில் அம்பிகை, ஐயனுக்கு வலப் புறம் எழுந்தருளியிருப்பார். மதுரையில், சொக்கேசருக்கு வலப் புறம் மீனாட்சியம் மையின் சந்நிதி அமையும். திருவாதவூரில், வேத நாயகருக்கு வலப்புறம் ஆரண வல்லியம்மை சந்நிதி அமையும். அம்பிகை ஐயனுக்கு வலப் புறம் எழுந் தருளியுள்ள திருத்தலம் ஒன்று, சென்னைக்கு அருகி லேயே இருக்கிறது. சிறப்பு மிக்க அந்தத் திருத்தலம் செல்வோம் வாருங்கள்.
திருப்பாசூர் திருத்தலம். திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் திருவள்ளூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், திருவாலங்காடு சாலை பிரியும் இடத்தில் அமைந்துள்ளது இந்தத் தலம். கிழக்கே திருவள்ளூர், மேற்கே திருவாலங்காடு, வடக்கே பூண்டி, தெற்கே திருவிற்கோலமான கூவம் என்று நாற்புறமும் சிறப்புமிகு திருத்தலங்கள் சூழ்ந்திருக்க, நடு நாயகமாக விளங்கும் திருப்பாசூர் மிகச் சிறிய ஊர்.
‘கரிகாலன் எப்படி இந்தக் கோயிலைக் கட்டினான்?’ என்ற கேள்வி எழுகிறதா... வாருங் கள், அந்தக் கதையைத் தெரிந்து கொண்ட பின், உள்ளே போவோம்.
கரிகாலன் காலத்தில், தொண்டை மண்டலத்தை உள்ளிட்ட நிலப்பகுதி, சோழ சாம்ராஜ்யத்தில் அடங்கியிருந்தது. இப்போது, திருப்பாசூர் இருக்கும் இடம், அப்போது பெரிய மூங்கில் காடு. பாசு என்றால் மூங்கில். மூங்கில் காட்டிலிருந்த ஒரு புற்றின் மீது பசுவொன்று, தினந்தோறும் பாலைப் பொழிந்தது.
இதைக் கண்ட வேடர்கள் (இடையர்கள் என்றும் சொல்லப் படுகிறது) சிலர், புற்றை வெட்டிப் பார்த்தனர். புற்றின் அடியிலிருந்து சிவலிங்கம் வெளிப்பட்டது. வேடர்கள் வெட்டியபோது, கோடரி பட்டு சிவலிங்கத்தின் மேல் பகுதியிலும், பக்கவாட்டிலும் தழும்பு ஏற்பட்டது. இந்தச் செய்தி, கரிகாலனிடம் தெரிவிக்கப்பட... கரிகாலன் இந்தக் கோயிலைக் கட்டியதாக வரலாறு. (இந்த வர லாற்றுக்குத் துணை சேர்ப்பதாக வேறு பல செய்திகளும் உள்ளன. திருமழிசைப் பகுதியில் உள்ள ஒத்தாண்டேஸ்வரர் ஆலயமும் கரிகால் சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும்.)
மிக மிக அமைதியாகக் காட்சி யளிக்கிறது திருப்பாசூர் கோயில். ராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்து வெளிப் பிராகாரத்தை அடைகிறோம். விசாலமான இடம். வலம் வருவதற்கு வசதி யாக, கற்கள் பதித்த பாதை. வலம் வருவோமா?
இந்தப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. தெற்குச் சுற்றைக் கடந்து... மேற்குச் சுற்றில் நுழைந்தால், நெடுகிலும் நந்தவனம். வடக்குச் சுற்றையும் நிறைவு செய்து கிழக்குச் சுற்றில் திரும்புகிறோம்.
வெளிப் பிராகாரத்தின் தென்கிழக்கு மூலையில், அலங்கார மண்டபம் மற்றும் யாக சாலை. சுற்றி வந்து, மீண்டும் தெற்குச் சுற்றில் ராஜ கோபுர வாயிலை அடைகிறோம். எதிரிலேயே கோயிலுக்குள் நுழையும் வழி. மக்கள் உள்ளே செல்ல இந்த வாயிலையும் வழியையுமே பயன்படுத்துகின்றனர்.
வணங்கிக் கொண்டே உள்ளே நுழைகிறோம். முதலில் முன் மண்ட பம். இங்கு நின்று, இடப் புறம் திரும்பினால், அம்பாள் சந்நிதி தெரிகிறது. கிழக்குப் பார்த்த சந்நிதி. முன் மண்டபத்தைத் தாண்டி முக மண்டபம். பின்னர் அர்த்த மண்டபம். அதற்கும் உள்ளே அம்பாள் சந்நிதி. விசாலமான இந்த சந்நிதி வாயிலில் துவாரபாலகியர்.
அம்பாள் நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். அபய- வர ஹஸ்தம் ஆகியவற்றுடன், ஒரு கையில் பாசம்; மற்றொரு கையில் அங்குசம். மெல்லிய புன்னகையுடன் அருள் வழங்கும் இந்த அம்பாளின் திருநாமம் சற்றே வித்தியாசமானது. அருள்மிகு தங்காதலி அம்பாள். பசுபதி நாயகி, பணைமுலை நாச்சியார், மோகனாம்பாள் என்றும் திருநாமங்கள் உண்டு.
அம்பாளே இறைவனைப் பூஜித்த தலம் இது. அம்பாள் பூஜித்த அழகைப் பார்த்து மயங் கிய இறைவனார், ‘தம் காதலி’ என்று அம்பிகையைப் பற்றிக் குறிப் பிட்டாராம். அதனால், அம்பாள் தங்காதலி ஆனார். அம்பாள் சந்நிதியைத் தனியாக வலம் வரலாம். கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை.
பூத்தவளை, புவனம் பதினான் கையும் காத்தவளை, பின் கரந்த வளை நெஞ்சார வணங்கி, வலம் வந்து மீண்டும் முக மண்டபம் அடைகிறோம். பழைய பாணிக் கட்டு மானம் நன்கு விளங்குகிறது.
முன்மண்டபம் அடைந்து விடுகி றோம். உள் வாயில் வழியாகச் சென்றால், அடுத்திருப்பது கிழக்கு நோக்கிய செல்வமுருகன் சந்நிதி. வள்ளி- தெய்வானை சமேதராகக் காட்சி தரும் மயிலுடனாய சுப்ரமணியர். எதிரிலும் மயில். அருகிலேயே நவக்கிரகங்கள் உள்ளனர்.
அடுத்திருக்கும் இன்னொரு வாயிலைத் தாண்டிப் போனால், கிழக்கு நோக்கிய சோமாஸ்கந்தர் சந்நிதி. பக்கத்து மண்டபத்தில் வாகனங்கள்.
சோமாஸ்கந்தரை வழிபட்டு, அடுத்த உள்வாயில் வழியாக மூலவர் சந்நிதி நோக்கிச் செல்ல யத்தனிக்கிறோம். இங்கு ஒரு விநோதம்! சிறிதும் பெரிதுமாகப் பதினோரு விநாயகர்கள். மும்மூன்று விநாயகர்கள் மேலும் கீழுமாக இரண்டு வரிசை; இன்னொரு தனி வரிசையில் ஐந்து விநாயகர்கள். கீழ் வரிசையில் நடுவில் இருப்பவர் வலம்புரியார். இந்தச் சந்நிதிக்கு ‘விநாயகர் சபை’ என்றே பெயர். பக்கத்தில் ‘வினை தீர்த்த ஈஸ்வரர்’ எனும் சிவலிங்கத் திருமேனி. என்ன வினை? யாருடைய வினை?
திருமால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருமேனியே வினை தீர்த்த ஈஸ்வரர் திருமேனியாகும். இந்த நிகழ்ச் சியை நினைவூட்டுவதற்காக, இந்தத் திருமேனிக்கு முன், பெருமாளும் எழுந்தருளியிருக்கிறார். ஆதிசேஷன்... அதன் நடுவே பெருமாள். இத்தகைய திருமேனியாகப் பெருமாளைக் காண்பது வெகு சிறப்பாக உள்ளது. சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தபோது, முதலில் விநாயகரை வழிபடுவதற்காக, விநாயகர் சபையை பெருமாள் ஏற்படுத்தினார் என்று கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.
ஒரே இடத்தில் பதினோரு விநாயகர்கள் (ஏகாதச விநாயகர்கள்) இருக்கும் அழகை ரசித்துக் கொண்டே, அடுத்த வாயிலைக் கடக்கிறோம். இன்னொரு பெரிய மண்டபத்தில் நிற்கிறோம். எதிரே பார்த்தால் நடராஜ சபை. இடப் புறம் திரும்பினால், மூலவர் சந்நிதி.
மூலவர் சந்நிதிக்குத் திரும்புகிறோம். இங்கிருக்கும் வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால், பெரிய பிராகாரம். பிராகாரத்தை வலம் வருகிறோம். சந்நி திக்கு நேர் எதிரே சிறிய நந்தி. தென்கிழக்கு மூலையில் சூரியன். தெற்குச் சுற்றில் திரும்பியவுடன் சப்த கன்னியர். வாராஹி உள்ளிட்ட ஏழு கன்னியர் சிலைகள் அழகுடன் நேர்த்தியாக உள்ளன. அடுத்து சைவ நால்வர்.
இந்த இடத்துக்குப் பிறகு உள் பிராகாரத்துக்குக் கூரை இல்லை. இப்போது தெற்குச் சுற்றில் இருக்கிறோம் இல்லையா? மூலவர் சந்நிதியை வலம் வந்து, வடக்குச் சுற்றின் பாதியை அடையும்போது, மீண்டும் கூரை இருக்கும் பகுதிக்கு வந்து விடுகிறோம்.
சில கோயில்களில் இத்தகைய அமைப்பைப் பார்க்கலாம். உள் பிராகாரத்தின் பாதிப் பகுதி, கூரையமைப்புடன் இருக்கும். மீதிப் பகுதி, கூரை இல்லாமல் இருக்கும். இதனால் மூலவர் விமானத்தை, உள் பிராகாரத்தில் இருந்தபடியே, முழுமையாக தரிசிக்க முடியும். தொண்டை மண்டலக் கோயில்கள் பலவற்றில் இப்படிப்பட்ட கட்டு மானத்தைக் காண முடிகிறது.
வடக்குச் சுற்றிலும் பாதியை அடைந்து விட்டோம் இல்லையா?! இங்கு ஐயப்பன், வீரபத்திரர், சொர்ண பைரவர் சந்நிதிகள். வீரபத்திரர் படுகம்பீரமாக உள்ளார். அடுத்து, வாகன சமேதராக நின்ற திருக்கோலத்தில் சொர்ண பைரவர் காட்சி தருகிறார். இடி, திரிசூலம், உடுக்கை, பாசம் ஆகியவற்றைத் தாங்கிய நான்கு திருக்கரங்கள். செல்வம் அருள்கிற சொர்ண பைரவர், வந்த செல்வத்தைப் போகாமல் காப்பாற்றக் கூடியவரும் ஆவார்.
உள் பிராகார வலத்தை நிறைவு செய்து, மூலவர் சந்நிதிக்கு எதிரில் வருகிறோம். சிறிய நந்தி. அவரை வழிபட்டுவிட்டு, முன் மண்டபம் அடைகிறோம். அர்த்த மண்டபத்துக்குள் நுழைவதற்கு முன்பாக, ஸ்ரீசக்கரப் பிரதிஷ்டை காணப்படுகிறது. ஆதிசங்கரர் வந்தபோது, நோய்களாலும் பஞ்சத்தாலும் இந்த பகுதி பீடிக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.
மக்களின் துன்பம் ஒரு புறம்; மக்களை திசை திருப்பும் மதங்களின் ஆதிக்கம் இன்னொரு புறம். இரண்டையும் சீர் செய்ய, இங்கே ஸ்ரீசக்கரத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளார். இப்போதும், ஸ்ரீசக்கரத் துக்குதான் முதல் பூஜை. அதன் பின்னரே, மூல வருக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீசக்கர ஸ்வரூபமான சிவசக்தியை வணங்கி, அர்த்த மண்ட பம் அடைகிறோம். உள்ளே கருவறையில், கம்பீரமான அருள்மிகு வாசீஸ்வரர்.
சாம்பல் பூசுவர், தாழ்சடை கட்டுவர், ஓம்பல் மூது எருது ஏறும் ஒருவனார், தேம்பல் வெண்மதி சூடுவர், தீயதோர் பாம்பும் ஆட்டுவர் பாசூர் அடிகளே!
என்று நாவுக்கரசு பெருமானார் பாடிப் பரவிய வாசீஸ்வரர். சுயம்புத் திருமேனி. சதுரபீட ஆவுடையார் மீது எழுந்தருளியிருக்கிறார். ஆவுடையார் இடப்பட்டதுதான்; மேலேயுள்ள லிங்க பாணம் சுயம்பு! கோடரி வெட்டுப்பட்டதற்கு அடையாளமாக மேலேயும் பக்கவாட்டிலும் வெட்டுக் காயங்கள் தெரிகின்றன. லிங்க பாணம் மழுமழு வென்றில்லாமல், கரடுமுரடாக இருக்கிறது.
அருள்மிகு வாசீஸ்வரர் என்று பெயர் வரக் காரணம் என்ன? நாவுக்கரசர், பாசூர் அடிகள் (பாசூர் என்பது ஊர்ப்பெயர்) என்று தானே பாடுகிறார்- வேறேதும் காரணம் உண்டா? சுவாரஸ்யமான கதை ஒன்று இந்தப் பகுதியில் வழங்குகிறது.
பசு வழிபட்டதால் பசுபதீஸ்வரர். எல்லாம் உடையவரானதால், உடைய வர். பாசுக் (மூங்கில்) காட்டின் நாதர் என்பதால் பாசூர்நாதர் என்று வேறு பல திருநாமங்களும் வழங்கப் படுகின்றன. ‘பட அரவு அது ஒன்று ஆட்டிப் பாசூர் மேய பரஞ்சுடர்’ என்றும் பாடுவார் நாவுக்கரசர். நாகத்தை ஆட்டி அடக்கிய இறைவன் என்பது பொருள். இதற்கும் ஒரு தல வரலாறு கூறப்படுகிறது.
சோழ சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட பகுதியாக இருப்பினும் இந்தப் பகுதி, குறும்பர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. குறும்பர்களுக்கும் கரிகாலனுக்கும் ஏற்பட்ட பகைமையில், குறும்பர் அரசன் தந்திர சக்தியால் கரிகாலன் மீது பாம்பை ஏவினான்.
கரிகாலன், பாசூர் இறைவனிடம் முறையிட, பாசூர் மேய பரஞ்சுடரானவர், அந்தப் பாம்பைத் தம் கையில் பிடித்து அடக்கினாராம். வாசி என்பதற்குக் கோடரி என்றும் ஒரு பொருள் உண்டு. கோடரி பட்டதால், வாசீஸ்வரர் என்ற பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். வேயீன்றநாதர் என்றும் (வேய்- மூங்கில்) கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
தவறு செய்தவரையும் திருத்திப் பணி கொள்ளும் அருள்மிகு வாசீஸ்வரரை வணங்கி, மூலவர் கருவறையை வலம் வருகிறோம். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர்.
தட்சிணாமூர்த்தி திருமேனியில் எழில் கொஞ்சுகிறது. காலடியில் முயலகன் தலை நிமிர்த்திக் கிடக்க, தட்சிணாமூர்த்தி அமைதியே வடிவாக விளங்குகிறார்.
மூலவருக்கு நேர் பின்புறம் உள்ள லிங்கோத்பவர் திருமேனியும் துல்லிய மாகச் செதுக்கப்பட்டுள்ளது. லிங்கத்தின் (அடி முடி தேடிய கதை) அடி தேடிச் செல்லும் வராகம் (திருமால்) வெகு அழகாக இருக்கிறது. வராகத்தின் கரங்க ளில் சங்கும் சக்கரமும் இருக்கின்றன.
திருமுடி தேடும் அன்னம் (பிரம்மா) தாழம்பூவோடு பேசிக் கொண்டிருக்கிறது. கோஷ்டமூர்த்த துர்க்கையும், இந்தத் தலத்தில் சிறப்பு மிக்கவர்தாம். இவர் பிரயோக சக்கரம் ஏந்திய விஷ்ணுதுர்க்கை.
திருப்பாசூர் திருக்கோயிலின் கட்டுமானம், பல்லவர் பாணியும் சோழர் பாணியும் இணைந்தாற்போல இருக்கிறது.
உள் பிராகாரச் சுற்றில், திருமாளிகைப் பத்ததி போன்ற அமைப்பைப் பார்க்கலாம். அதே நேரம் மூலவர் கருவறையைச் சுற்றி இருக்கும் இடம், ஆழமில்லாவிட்டாலும், அகழி அமைப்பை நினைவூட் டுகிறது. மூலவர் விமானம், மேல்பகுதியில் கஜபிருஷ்ட அமைப்பில் உள்ளது; கீழ்ப்பகுதி அப்படியில்லை.
கருவறை வெளிப்புறச் சுவரெல்லாம் கல்வெட்டு மயம். வலம் வரும்போது, சண்டேஸ்வரர் தனி மண்டபத்தில் அமர்ந்துள்ளார். அவரிடமும் நாம் வந்திருக்கும் செய்தியை அறிவித்துவிட்டு, வலத்தை நிறைவு செய்கிறோம்.
மீண்டும் பாசூர் பெருமானை வழிபட்டு, முன்மண்டபம் வந்து தெற்கு நோக்கிய நடராஜர் சபையை அடைகிறோம். லேசாகக் கன்னம் நிமிர்த்தி ஆடும் அம்பலவாணர் - இவர் பஞ்சலோக நடராஜர். அருகில் சிவகாமி அம்மையும் மாணிக்கவாசகரும் உள்ளனர்.
நடராஜர் சபையிலேயே உற்சவ மூர்த்தங்களும் உள்ளன. பாசூர் அம்மன் எனும் ஊர்க்காவல் தெய்வத்தின் உற்சவத் திருமேனியும் உள்ளது. பாதுகாப்புக் கருதி, அம்மன் சந்நிதியில் இருக்க வேண்டிய ‘பள்ளியறை அம்ம’னும் இங்கு எழுந்தருளியுள்ளார்.
பெரிய பேழை ஒன்று, பள்ளியறை யாகக் காட்சியளிக்கிறது. நாள்தோறும் நடைபெறும் பள்ளியறை பூஜைகளும் இங்கேயே நடை பெறுகின்றன.
பரமனாரை நடராஜத் திருக்கோலத்தில் வணங்கி, வெளியே வருகிறோம்.
திருப்பாசூர், ஒரு காலத்தில் சான்றோர்கள் நிறையப் பேர் வாழ்ந்த பகுதியாக இருந்துள்ளது.
‘தொண்டை மண்டலம், ஈக்காடு கோட்டம், காக்கலூர் நாட்டுத் திருப்பாசூர்’ என்பது இவ்வூருக்குக் கல்வெட்டுகளில் காணப்படும் பெயர். ராஜராஜ சோழன் காலத்திலும், குலோத்துங்க சோழன் காலத்திலும் கோயிலுக்கு நிவந்தமளித்த கல்வெட்டுகள் நிறைய உள்ளன.
தங்காதலி உடனாய வாசீஸ்வரரை வணங்கி வெளியே வருகிறோம். வெளிப் பிராகாரத்தில், புதிய தாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சொர்ண காளி விக்கிரகம் கருத்தைக் கவர்கிறது.
கோயிலின் வடகிழக்குப் பகுதியில், (வெளிப் பிராகாரத்துக்கு வெளிப்புறமாக) இருந்த நூற்றுக்கால் மண்டபத்தில்தான் விலங்கு பூட்டிய காளி சிற்பமும் இருந்துள்ளது. இப்போது மண்டபமும் சிற்பங்களும் சிதைவான நிலையில், கோயிலுக்கு வெளிப்புறமாக உள்ளன.
அருகிலேயே குளம் இருந்ததற்கு அடையாளமாக ஒரு பள்ளம் உள்ளது. இதுதான், சோம தீர்த்தம். இதில் மூழ்கித்தான், திருமால் தமது வினை தீரப் பிரார்த்தித்தாராம். 1986-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது (நந்திதேவ ரால் விலங்கு பூட்டப்பட்ட காளி, பின்னர் தனது உக்கிரத்தைக் குறைத்துக் கொண்டு, எல்லோருக்கும் செல்வம் வழங்கும் சொர்ண காளி ஆகிவிட்டாள்.) சொர்ண காளிக்கு புதிய திருமேனி செய்யப்பட்டு, பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்தக் கோயிலுக்குச் சோம தீர்த்தம் தவிர, மங்கள தீர்த்தம் என்றொரு தீர்த்தமும் உண்டு. ஊருக்கு வெளியில் உள்ள இதிலும் இப்போது நீர் இல்லை.
பாசூர் என்பதற்கு மற்றொரு பெயர்க் காரணத்தையும் சான்றோர் பெருமக்கள் குறிப்பிடுகின்றனர்.
‘பாசித்தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே!’ என்று பாடுகிறார் ஞானசம்பந்தர். பாசு என்பது பசுமையைக் குறிக்கும். நீர்வளம் மிகுந்து விளங்கிய பகுதியானதால், பாசி படர்ந்து காணப்பட்டமையின், பாசூர் என்று இவ்வூர் அழைக்கப்பட்டதாம்.
புண்ணியாவர்த்தம், குடாரண்யம், மாணிக்கபுரி, பிரளயகாலபுரம், மாயாபுரி, தங்காதலிபுரம், அபயபுரம், சோமபுரம், பரஞ்சுடரானபுரம், மங்களமாபுரி, மால்வினை நாசபுரம் என்னும் பற்பல பெயர்களைக் கொண்ட பாசூர், இப்போதும் பசுமையான பகுதியாகவே திகழ்கிறது.
இயற்கையும் இறைமையும் இணைந்து அமைதி தரும் திருப்பாசூரிலிருந்து பிரிய மனமின்றிப் பிரிகிறோம்.
அபூர்வப் பேறு!
திருப்பாசூர் ஒரு பிரார்த்தனைத் தலமாகும். திருமால் மட்டுமின்றி சந்திரனும் தனது வினை தீர இங்கு பிரார்த்தித்து உள்ளான்.
பரத்வாஜர், பிருகு முனிவர், சுகர், கலைக் கோட்டு முனிவர் (ரிஷ்ய சிருங்கர்), விசுவாமித்திரர், வியாசர் ஆகியோர் இங்கு வழிபட்டுள்ளனர்.
சொர்ண காளியும் சொர்ண பைரவரும் இங்கு எழுந்தருளியுள்ளனர். வெகு அபூர்வமாகவே கிடைக்கும் பேறு இது. சொர்ண காளியும் சொர்ண பைரவரும் தம்மை மனதார வழிபடுபவர்களுக்கு அதிகாரம், செல்வம், ஆட்சிச் சிறப்பு, கவுரவம், புகழ் ஆகியவற்றை வாரி வாரி வழங்குவார்கள்.
|
No comments:
Post a Comment