இதே போல் திருமாலின் வாகனம் ‘பட்சிராஜன்’ எனப்படும் கருடன். திருமால் எழுந்தருளியுள்ள வைணவ ஆலயத் திருவிழாக்களில் அவரை கருட வாகனத்தில் எழுந்தருள வைத்து உலா வரச் செய்கின்றனர். இது ‘கருட சேவை’ எனப்படுகிறது.
திருமால் மற்றும் சிவாலயங்களில் பெரும்பாலும் ஒரே நேரத்தில் விழா கொண்டாடப்படுவதில்லை. ஆனால், அபூர்வமாகச் சில சிவா-விஷ்ணு ஆலயங்களில் ஒரே நேரத்தில் விழா கொண்டாடப்படுகிறது. அப்போது சிவனை இடப வாகனத்திலும், திருமாலை கருட வாகனத்திலும் எழுந்தருள வைத்து அலங்கரித்து, ஏக காலத்தில் தீபாராதனையும் நடத்தப்படுகிறது. இது சைவ-வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது
இப்படிப்பட்ட விழா நடைபெறும் தலங்களில் ஒன்று சென்னையை அடுத்துள்ள பொன்னேரிக்கு மேற்கே அமைந்துள்ள ஆயர்பாடி. இங்கு கரிகிருஷ்ணப் பெருமாள் என்கிற திருமால் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கே கும்பமுனிமங்கலம் (கும்மங்கலம் என்றும் அழைப்பர்) எனுமிடத்தில் அகஸ்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இங்கு சித்ரா பௌர்ணமியன்று ஆயர்பாடிப் பெருமாள் அதாவது கரிகிருஷ்ணப் பெருமாள் கருட வாகனத்திலும், கும்பமுனிமங்கலம் அகஸ்தீஸ்வரர் ரிஷப வாகனத்திலும் ஊரை வலம் வந்து, ஊரின் மையத்திலுள்ள கடைவீதியில் எதிரெதிராக நிற்க... இருவருக்கும் ஏக காலத்தில் தீபாராதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சம்.
அகத்திய முனிவரும் பரத்வாஜ முனிவரும் ஒன்றாகத் தவம் செய்தனர். அவர்களின் தவத்துக்கு மகிழ்ந்த சிவபெருமான் உமையவளுடன் இடப வாகனத்திலும், திருமால் கருட வாகனத்திலும் அங்கு காட்சியளித்தனர். அதாவது இரண்டு தவசீலர்களும் ஒரே நேரத்தில் சிவனையும், திருமாலையும் தரிசித்து மகிழ்ந்ததை நினைவுகூரும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது என்கிறது இந்த ஊரின் தல வரலாறு.
சிவபெருமானும் திருமாலும் எதிரெதிரே சந்திப்பது ‘சந்திப்பு உற்சவம்’ என்று அழைக்கப்படுகிறது. சித்ரா பௌர்ணமியன்று நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கன்யாகுமரிக்கு அருகிலுள்ள சுசீந்திரம், மும்மூர்த்தித் தலம் எனப்படுகிறது. இங்கு தாணுமாலயன் என்ற நாமத்துடன் எழுந்தருளி இருக்கும் சிவலிங்கத்தில் மும்மூர்த்திகளும் ஒன்றி இணைந்துள்ளனர் என்பது ஐதீகம். (இது சக்திபீடங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.)
தாணு என்றால் சிவபெருமான்; மால் என்றால் திருமால்; அயன் என்றால் பிரம்மதேவன்.
இந்த ஆலயத்தில் நடைபெறும் ஒவ்வொரு பிரதோஷ விழாவிலும் இடப வாகனத்தில் சிவபெருமானும், கருட வாகனத்தில் திருமாலும் இணைந்து ஆலயப் பிராகாரத்தில் பவனி வருவது குறிப்பிடத் தக்கது. இது வேறெந்த ஆலயத்திலும் நடைபெறுவதில்லை.
குமரி மாவட்டம் திருவிதாங்கோடு சிவாலயத்தில் தெற்கிடம், வடக்கிடம் என்கிற இரு பகுதிகள் உள்ளன. வடக்கிடத்தில் சிவபெருமானும், தெற்கிடத்தில் திருமாலும் கோயில் கொண்டுள்ளனர். இங்கு மார்கழி மாதத்தில் இரு சந்நிதிகளிலும் கொடியேற்றப்பட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் அரியும், அரனும் இரு யானைகளில் ஒன்றாக வருவது கண் கொள்ளாக் காட்சியாகும்!
|
Wednesday, 2 August 2017
பிரதோஷ உலா வரும் சிவன் - பெருமாள் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment