‘‘குடுமித்தேவா, பத்திரமாக இரு... விரைவில் வந்து விடுகிறேன்!”- திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு திண்ணன் போவதை நோக்கியபடி புன்முறுவலித்தார் பரமனார். இதோடு பல முறை சொல்லி விட்டான். இரண்டடி போவான்; திரும்பி வருவான். உச்சி முகர்வான்; ஆலிங்கனம் செய்து கொஞ்சுவான். ‘‘பத்திரமாக இரு... சீக்கிரம் வந்து விடுகிறேன்!’’ என்பான். இரண்டடி நடப்பான்; திரும்பத் திரும்ப இப்படியே காலையிலிருந்து பல முறை செய்து விட்டான்.
ஒரு வழியாகத் திண்ணன் மலைச்சரிவில் நடந்து போவதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமானின் சிந்தையில், கடந்த சில நாட்களது நிகழ்வுகள் நிழலாடின. அன்பு என்றால் இப்படியும் ஓர் அன்பா?
முதன் முதலில் வந்து பார்த்தபோதே, திண்ணன் அன்பில் கரைந்து நின்றான். உடலும் மனமும் உருகி நின்றான். கணத்துக்குக் கணம், அவனது அன்பு அதிகப்பட்டதே தவிர, குறையவில்லை. வாய் நிறைய நீர் முகந்து வந்து அபிஷேகம் செய்வதும், கொண்டையில் செருகிக் கொணர்ந்த மலர்களை எடுத்து அர்ச்சிப்பதும், மாமிசத்தைத் தன் வாயில் போட்டு அதக்கிப் பதப்படுத்திப் படைப்பதும்.... சிவபெருமானுக்கு வியப்பாக இருந்தது!
நேற்றும் இப்படித்தான் கை நிறைய இறைச்சி கொண்டு வந்தான். ‘அது சாப்பிடும் பக்குவத்தில் இருக்கிறதா?’ என்று பார்ப்பதற்காக வாயில் போட்டு அதக்கிப் பார்த்தான். குழந்தைகளுக்குச் சோறூட்டும் தாயைப் போலக் கண்களை உருட்டி உருட்டி அவன் மாமிசத்தைப் பக்குவப்படுத்தும் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்ததால், அவன் படைத்ததைப் பரமனார் சாப்பிடவில்லை. துடித்து விட்டான். ‘‘குடுமித்தேவா! என்ன குடுமித்தேவா? நன்றாயில்லையா? ஏன் சாப்பிடவில்லை? பசிக்குமே... சாப்பிடு குடுமித்தேவா!” என்று மனமுருகியதை இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது.
ஆஹா! அதோ, சிவகோசரியார் வருகிறார். வரும்போதே கண்கள் கோபத்தால் சிவக்கின்றன. ‘ஹ்ம்... இன்று என்ன நடக்கிறது, பார்ப்போம்!’
உள்ளே வந்து நின்ற சிவகோசரியார் கோபம் பாதியும் வருத்தம் பாதியுமாக அலறினார். “ஐயனே! என்ன இது கொடுமை! இப்படி யாரோ செய்கிறார்களே! தினந்தோறும் தங்கள் திருமுன்பு ஊன் இறைத்து, குருதி சிதறி... அபசாரம்!” சிவகோசரியார் பதறிப் பரிதவித்தார்.
“இது நியாயமா? முக்கண்ணா! உனக்குப் போய் மூன்று கண்களா... கண்ணே இல்லையா? இதைப் பார்த்துக் கொண்டு என்ன செய்கிறாய்? உனக்குப் பார்வையும் போய் விட்டதா?” _ சிவலிங்கத் திருவடியில் தன் தலையை முட்டிக் கொண்டு சிவகோசரியார் கதறுகிறார்.
“சிவகோசரி, பதறாதே. யாம் சொல்வதைக் கேள்!”
“என்ன கேட்பது? இந்தக் கொடுமையைக் கேட்பது யார்? அநுசிதத்தை (அநுசிதம்: தகுதி இல்லாத செயல்) தண்டிக்காமல் என்ன பேச்சு?” கோபத்துடன் சரசரவென்று வேலை செய்தார் சிவகோசரியார். பொன்முகலி ஆற்றில் இருந்து புது நீர் கொண்டு வந்தார். அபிஷேகப் பிரியருக்குப் புது நீராட்டினார். புதுத் துணி அணிவித்தார். அர்ச்சித்தார். எல்லாவற்றையும் லேசான மனத்தாங்கலோடு செய்துவிட்டு, வருத்தம் தீராமலேயே தன் குறையை அந்த ஆண்டவனிடம் முறையிட்டுப் புறப்பட்டார்.
சிரித்துக் கொண்டார் சிவனார். ‘இன்று இரவு முக்கியமான பணி இருக்கிறது.’ அதற்குள் திண்ணன் வருகிற ஓசை கேட்டது. ‘பணி கிடக்கட்டும். திண்ணனது ஆட்ட பாட்டத்தையும் கொஞ்சலையும் கொஞ்சம் அனுபவிக்கலாம்!’
இ ரவு நேரம். மெள்ள சிவகோசரியாரின் முதுகில் தட்டினார் சிவபெருமான். அலறிக் கொண்டு எழுந்த சிவகோசரியார் பதறி வரவேற்றார்: “ஐயனே! வாரும் வாரும்!”
“சிவகோசரி, ஒரு முக்கியமான தகவலைச் சொல்லவே வந்தோம். இரண்டு நாட்களாக வருந்துகிறாயே... அநுசிதம் அநுசிதம் என்று. அதைச் செய்வது யாரென்று உனக்குத் தெரிய வேண்டும், அவ்வளவுதானே. நாளை அதையும் பார். நாளை வந்து எமது உருவத்துக்குப் பின்னால் ஒளிந்து கொள். அதைச் செய்பவன் வருவான். நீயே பார்த்துக் கொள்!”
“ஐயனே! இதென்ன, கொடுமைக்காரனைத் தண்டிக் காமல், ஏதோ கண்ணாமூச்சி விளையாடுகிறீர்!”
“ஆம் சிவகோசரி. கண்ணைப் பொத்திக் கண்ணாமூச்சி ஆட வேண்டிய தருணம் வந்து விட்டது. ஆனால், ஒன்று. அதைச் செய்பவனைச் சாதாரணமாக எடை போடாதே. அவன் உடல், உயிர், மூச்சு, சொல், செயல்- எல்லாமே எமக்கான அன்பால் நிறைந்தவை. பார், சிவகோசரி, நாளை வந்து பார்!”
மறு நாள்.
வேகவேகமாக வந்தான் திண்ணன். சிவகோசரியும் அவனுக்கு முன்னதாக வேகவேகமாக வந்து சிவலிங்கத்தின் பின்னால் ஒளிந்து கொண்டார். ‘வசதி. நல்ல நெட்டைச் சிவலிங்கம். பின்னால் ஒளிந்து கொண்டால் யாருக்கும் தெரியாது!’
தான் ஒளிந்து கொள்ளப் போகும்போது, சிவன் லேசாகச் சிரிப்பதைப் பார்த்தார் சிவகோசரியார். ஆனாலும் ஒளிந்து கொள்ள ஓடினார்.
கையில் ஊன் தாங்கி, தோளில் வில் தொங்க, கொண்டையில் மலர்களோடு வாய் நிறைய நீர் நிரப்பி, வேக வேகமாகக் கண்களில் மின்னும் கரிசனத்தோடு வருகிறான். ஊன் வாசம் குடலைப் புரட்டினாலும் சிவகோசரியாருக்கு ஒரு சந்தேகம் வருகிறது. ‘வாயில் நீரை வைத்துக் கொண்டு, மலைப்பாங்கில் ஓடி வருகிறானே... எப்படி இவனால் மூச்சு விட முடிகிறது?’
அவர் மனதில் ஓடுவதைப் புரிந்து கொண்ட மகாதேவன் பதில் சொல்கிறார்: “அவன் மூச்செல்லாம் நம் பக்கம் அன்பென்று சொன்னேனே, சிவகோசரி!”
அதற்குள் “குடுமித்தேவா!” என்ற திண்ணனின் கூக்குரல் கேட்டுப் பறவைகளும் விலங்குகளும் அசையாமல் நின்றன.
“குடுமித்தேவா, என்ன ஆயிற்று? ஏன் உன் கண்ணில் ரத்தம்? யார்... என்ன செய்தார்கள்?” இங்கேயும் அங்கேயுமாக திண்ணன் பாய்ந்தான்.
வில்லும் அம்பும் தெறித்து விழ, மலர்கள் சிதற, தண்ணீர் பீச்சியடிக்க... ஊன் துண்டங்கள் அங்கும் இங்கும் உதிர்ந்தன.
திண்ணனின் தவிப்புக்கு எல்லையே இல்லை. ‘‘என்ன செய்வேன்? ரத்தம் கொட்டுகிறது. எப்படி நிறுத்துவது? குடுமித்தேவா!” - இப்படியும் அப்படியும் தடுமாறுகிற திண்ணன், திடீரென்று வெளியே ஓடினான். மலைச் சரிவில் பாய்ந்தான்.
நிகழ்ந்துவிட்ட சம்பவத்தின் கொந்தளிப்பிலிருந்து மீளாத சிவகோசரியார், சிவபெருமானைப் பார்த்தார்.
“குடுமித்தேவா!” _ மீண்டும் திண்ணனின் குரல். மின்னல் வெட்டுவது போல ஓர் அசைவு. உள்ளே ஓடி வந்த திண்ணன், கைகளில் எதையோ பிசைந்து கொண்டிருந்தான். சிவகோசரியார் தலையை இழுத்துக் கொள்ள, கைகளிலிருந்து பச்சிலைக் கூழை அப்படியே சிவபெருமானின் ரத்தம் கொட்டும் கண்ணில் பிழிந்தான்.
“இந்தப் பச்சிலையை வைத்துக் கட்டினால் எந்தக் காயமும் ஆறிவிடும். எங்கள் கூட்டத்தில் அப்படித்தான் செய்வோம்!’’ _ சொல்லிய திண்ணன் ஆர்வத்துடன் பார்த்தான். ரத்தம் கொட்டுவது நிற்கவில்லை.
திண்ணனால் பொறுக்க முடியவில்லை. “நிற்கவில்லையே? காத்து கருப்பு என்ன தெரியவில்லையே”- திடீரென்று ஏதோ தோன்றியது போல் ஓர் எம்பு எம்பிக் குதித்தான்.
“தெரியும்... வழி தெரியும்! ஊனுக்கு ஊன். உறுப்புக்கு உறுப்பு!”- சுற்றுமுற்றும் பார்த்த திண்ணன், கீழே கிடக்கும் அம்பைத் தேடி எடுத்தான். வலக் கையில் அம்பைப் பிடித்தபடி சிவபெருமானின் அருகில் வேகமாக வந்தான். தன் வலப் புறக் கண்ணின் அருகில் அம்பை வைத்தான். வேகமாகக் கண்ணைத் தோண்டி எடுத்தான். எடுத்த வேகத்திலேயே அந்தக் கண்ணை இறையனாரது குருதி கொட்டும் கண்ணின் மீது அப்பினான்.
சிவனின் கண்ணில் கொட்டும் குருதி நின்றது. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய திண்ணன், குதித்தான். ஓடினான். துள்ளினான். தன் ஒரு கண்ணில் (கண் இருந்த இடத்தில்) ரத்தம் பெருகிக் கொண்டிருக்க... மற்றொரு கண்ணைக் கொட்டிக் கொட்டிக் குடுமித்தேவரின் முகத்தைப் பார்த்தான். ரத்தம் நின்று விட்டது!
திண்ணனின் மகிழ்ச்சியும் சிவகோசரியாரின் வியப்பும் நெடுநேரம் நீடிக்கவில்லை. குடுமித்தேவரின் அடுத்த கண்ணிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது.
“ஐயோ! என்ன இது?” _ ஒரு பக்கம் திண்ணனுக்குத் தவிப்பு. இன்னொரு பக்கம் ஒரு வித மகிழ்ச்சி. இப்போதுதான் ரத்தத்தை நிறுத்த கைவசம் மருந்து தயாராக உள்ளதே!
வலக் கையில் அம்பைப் பிடித்துக் கொண்டு, இடது கையைத் தன் இடது கண்ணின் மீது அடையாளம் வைத்துக் கொண்டு தயாரான திண்ணனுக்கு, நெஞ்சில் ஒரு நெருடல்.
‘இரண்டாவது கண்ணையும் எடுத்து விட்டால் எனக்குக் கண் தெரியாமல் போய்விடுமே! அப்புறம், குடுமித்தேவருக்கு எப்படிக் கண்ணைச் சரியாகப் பொருத்துவது?’ தவித்த திண்ணன் ஒரு வழி கண்டுபிடித்தான். ‘இரண்டு கைகளும் ஒவ்வொரு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, காலை வைத்து அடையாளம் கொள்ள வேண்டியதுதான் வழி’ என்று தீர்மானித்த திண்ணன், தன் காலை எடுத்துக் குடுமித்தேவரின் கண்ணருகில் ஊன்றிக் கொண்டு, தன் இடது கண்ணைத் தோண்ட முற்பட்டான்.
சிவகோசரியார் பதறினார். சிவபெருமானும் பதறினார். சிவபெருமானின் பதற்றம் குரலில் வெடித்தது: ‘‘நில்லு கண்ணப்பா! நில்லு கண்ணப்பா! நில்லு கண்ணப்பா!’’ திண்ணன் என்ற பெயரை மாற்றி, ‘கண்ணப்ப’ என்றழைத்தார் பரமனார். கண்ணை எடுத்து அப்பியதால் கண்ணப்பர். அது மட்டுமில்லை, குழந்தையின் கண்ணுக்கு ஊறு விளைந்தால், தன் கண்ணையே எடுத்து அங்கு வைக்கும் அப்பாவின் வாஞ்சையன்றோ திண்ணனின் வாஞ்சை! அதனாலும், கண் அப்பர்!
கண்ணப்ப நாயனாரின் பிரதேசமான பொத்தப்பி நாடு, இப்போது வட தமிழ்நாட்டிலும் தெற்கு ஆந்திராவிலுமாக இருக்கிறது. சுவர்ணமுகி என்றழைக்கப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருத்தலம் திருக்காளத்தி!
_ கண்ணப்பர் அப்பிய கண் தாங்கி, சிவபெருமான் திருக்கோலம் காட்டும் திருக்காளத்தி!
_ பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாக, வாயுலிங்கத் தலமாக ஒளிரும் திருக்காளத்தி!
_ ஸ்ரீ எனும் சிலந்தியும், காளம் எனும் பாம்பும், ஹஸ்தி எனும் யானையும் வழிபட்டு உய்வு பெற்ற திருக்காளத்தி!
_ ஸ்ரீவித்யா பீடம் ஒரு மலையாக, அந்த மலை மீது முருகப்பெருமான் ஞானப்பண்டிதனாகக் காட்சி தரும் திருக்காளத்தி!
_ உத்தரவாகினியாகப் பொன்முகலி ஆறு பாயும் திருக்காளத்தி!
_ ராகு,கேது ஆகிய சாயா கிரகங்கள் தீமை அடக்கப்பட்டு, நல்ல கிரகங்களாக நன்மை வழங்கும் திருக்காளத்தி!
_ ஞானம் தரும் நாயகியாக அம்மன் அருள் வழங்கும் திருக்காளத்தி!
_ வணங்கியோருக்கெல்லாம் சிவஞானம் வழங்கும் தட்சிணாமூர்த்தியாக, ஐயன் திருக்கோலம் கொண்டு இலங்கும் திருக்காளத்தி!
_ சைவ நால்வரும் பாடிப் பரவி வழிபட்ட திருக்காளத்தி!
_ ‘கயிலை பாதி; காளத்தி பாதி’ என்று நக்கீரர் பெருமையுடன் போற்றிய திருக்காளத்தி!
_ காளத்தியைத் தரிசித்தாலே திருக்கயிலையைத் தரிசித்ததற்கு ஒப்பாகும் என்பதான திருக்காளத்தி!
தரிசனம் செய்யச் செல்வோமா?
செ ன்னையிலிருந்து சுமார் 110 கி.மீ. தொலைவிலும், திருப்பதியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இந்தத் தலம் அமைந்துள்ளது. ரேணிகுண் டா- கூடூர் மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையமான காளத்தி, ரயில் வண்டிகளாலும் பேருந்துகளாலும் பிற ஊர்களோடு நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மக்கள் வழக்கில், ‘காளாஸ்திரி’ என்று வழங்கப்படும் காளத்தியை அடைகிறோம்.
ஊருக்குள் நுழைந்து செல்லும்போது, மிக உயரமாகக் காட்சி தரும் காலிகோபுரம் கண்ணில் படுகிறது. ஏழு நிலைகளுடன் கம்பீரமாகத் திகழும் இந்தக் கோபுரம், 16-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயரால் கட்டப் பட்டது.
இந்தக் கோபுரம் உயரமாக இருந்தாலும் இது கோயிலின் வாயிலில் இல்லை. இதற்குப் பக்கவாட்டில் இன் னொரு கோபுரம். ஐந்து நிலைகளுடனும் பதினோரு கலசங்களுடனும் இருக்கும் இந்த பிக்ஷசாலா கோபுரமே, கோயிலின் பிரதான வாயில்.
பிக்ஷசாலா கோபுரத்தின் முன்புறம், இடது பக்கம் துர்க்கை சந்நிதி; வலது பக்கம் விநாயகர் சந்நிதி. வழிபட்டு உள்ளே நுழைந்தால், வலது பக்கத்தில் காசிவிஸ்வநாதருக்கு ஒரு சிறு கோயில். இந்தக் கோபுரத்தின் அருகில், ஊர்க்காரர்களுக்கு அன்னதானம் செய்யும் வழக்கம் இருந்ததால் (பி¬க்ஷ இடும் வழக்கம்), இது பிக்ஷசாலா கோபுரம் என்றழைக்கப்பட்டதாக உள்ளூர்க்காரர் ஒருவர் கூறினார். இங்கிருந்து தொடங்கிக் கோயிலின் வெளிப்பிராகாரத்தில் வலம் வருகிறோம்... இல்லை இல்லை... இடம் வருகிறோம்!
ஆமாம்! இந்தக் கோபுரத்தி லிருந்து தெற்கு கோபுர வாயில் வரை பிராகாரத்தில்தான் நடக்கிறோம். ஆனால், பிர தட்சிணமாக இல்லாமல், மாற்றுத் திசையில் அப்பிரதட்சிணமாக நடக்கி றோம்.
பிக்ஷசாலா கோபுரத்திலிருந்து தொடங்கி, நீளமாக உள்ள பிராகாரத்தில் நடக்கிறோம். பாலஞானாம்பிகா கோபு ரத்தை அடையும்வரை பிராகாரத்தின் இரு புறமும் நிறையக் கடைகள். மூன்று நிலைகளைக் கொண்ட பாலஞானாம்பிகா கோபுரத்தினுள் நுழைந்தால், வலப் பக்கம் வள்ளி- தெய் வானை சமேத சுப்பிரமணியர் வேல் தாங்கி தரிசனம் தருகிறார். இடப் பக்கம், மேற்கு நோக்கிய சந்நிதியில், நின்ற திருக்கோலத்தில் பாலஞானாம்பிகையும் அருகில் சிவலிங்கத் திருமேனியும்.
நியாயமாக, இந்த கோபுரத்தைத்தான் கிழக்கு வாயில் என்று சொல்ல முடியும். பிக்ஷசாலா கோபுரம், கோயிலுக்கு வட கிழக்கில் சற்றே கோணல் முகமாக அமைந்துள்ளது. பாலஞானாம்பிகா கோபுரமோ, வடக்குத் திருச்சுற்றின் தொடக்கத்தில் கோயிலின் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கிறது. கிருஷ்ண தேவராயர் கட்டிய ஏழு நிலை கோபு ரத்தைத் தவிர, பிற கோபுரங்கள் யாவற் றையும் கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழ மன்னன் கட்டினான்.
பாலஞானாம்பிகா கோபுரத்தைத் தாண்டிப் பிராகாரத்தில் நடக்கிறோம். நமக்கு இடப் பக்கம், கோயிலின் உள் மதில்; வலப் பக்கம் சில கடைகள். உள் மதிலை ஒட்டினாற்போல, சிறு சிறு மண்டபங்களில் லிங்கங்கள்; அடுத்து பாதாள விநாயகர் சந்நிதி.
சுமார் 20 படிகள் கீழிறங்கிச் சென்றுதான் 35 அடி ஆழத்தில் உள்ள பாதாள விநாயகரை தரிசிக்க முடியும்! இவர் ஏன் கீழிறங்கிப் போனார்?
எப்படி இருந்தாலும் திருமலைக்குத் தெற்குப் பகுதியில் புறப்படும் பொன்முகலி (சென்னை- திருவள்ளூர்-திருத்தணி மார்க்கமாக திருமலை செல்லும்போதும், பொன்முகலி ஆற்றைக் கடக்க வேண்டி வரும்), வடகிழக்காகப் பாய்ந்து, காளத்திநாதருக்கும் காளத்தி மலைக்கும் மேற்கில், தெற்கு-வடக்காகப் பாய்கிறது. பின்னர், கிழக்கு நோக்கிப் பாய்ந்து கடலில் கலக்கிறது. இவ்வாறு வடக்கு நோக்கிப் பாய்வதால், பொன்முகலி இங்கு உத்தரவாகினி. பாதாள விநாயகரை வணங்கி வழிபட்டு, மீண்டும் பிராகாரம் அடைகிறோம். இந்தச் சந்நிதிக்கு எதிரில், வடக்கு கோபுரம். மூன்று நிலை களுடன் கூடிய இது, சிவய்ய கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இதன் வழி யாகத்தான் சுவாமி புறப்பாடு நிகழும்.
பாதாள விநாயகர் சந்நிதிக்கு எதிர்ப் புறமாக ஒரு மண்டபம் உள்ளது. சிவ ராத்திரி மண்டபம். அதற்கு அடுத்து, இன்னொரு சிறிய மண்டபம். கூர்ந்து கவ னித்தால், இரண்டு கால்கள் மட்டும் வெளியே இருக்கும்படி, சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட மண்டபம் என்பது புரியும். முன்பெல்லாம், ‘காளத்தி போய் வந்தேன்’ என்று யாராவது சொன்னால், ‘இரண்டு கால் மண்டபம் பார்த்தாயா?’ என்று கேட் கிற வழக்கம் உண்டு. கடைகளும், சமீப காலக் கட்டுமானங்களும் சேர்த்து இந்த மண்டப அழகை முழுவதுமாக வெளியே தெரியாமல் மறைத்து விட்டன.
கார்த்திகைத் தீபத் திருநாள் சிவபெரு மானுக்கான நாள். அன்று எல்லா சிவன் கோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படும் (உயரமான இடத்தில் தீபமேற்றினால் ஊருக்கெல்லாம் தெரியும் என்பதற்காக, பனை மரத் தண்டு நட்டு அல்லது உயரமான தண்டு நட்டு, அதன் மீது தீபம் ஏற்று வார்கள். சொக்கனுக்கான பனை- சொக்கப்பனை. இது காலப்போக்கில் சொக்கப்பானை என்று ஆகிவிட்டது). திருக்காளத்தியிலும் சொக்கப்பனை கொளுத்தப்படும் இடமே, நாம் பார்க்கும் மண் பள்ளம். எள்ளை இடித்துப் பொடியாக்கி, அதையே நீர்விட்டுப் பிசைந்து அகல் தீபமாக்கி, அதில் எண்ணெய்த் திரியிட்டு, பனை மரம் நட்டு, அதன் மீது வைத்து ஏற்றுவார்கள். அகல் விளக்கும் சேர்ந்து எரிந்து போகும். அந்தக் கரியை எடுத்து சுவாமிக்குக் கறுப்புப் பொட்டாக அணிவிப்பது வெகு விசேஷம்.
மேற்குச் சுற்று, தெற்குச் சுற்றுக்குள் திரும்பும் இடத்தில், வலப் பக்கம் மூன்று நிலையுள்ள மற்றொரு கோபுரம். இதுவே திருமஞ்சன கோபுரம் என்று அழைக்கப்படும் மேற்கு கோபுரம். கோபுரத்திலிருந்து படிகளின் வழியே கீழிறங் கினால், நேரே பொன்முகலி ஆற்றை அடையலாம். ஆற்றங்கரையிலிருந்து கோபுரத்தை அடைய மொத்தம் 27 படிகள். இருபத்தேழு நட்சத்திரங்களைக் குறிப்பதாக ஐதீகம். சுவாமிக்கு அபிஷேக நீர் இந்த வழியே எடுத்து வரப்படும். திண்ணனார் இந்த வழியேதான், வாயில் நீரேந்தி வந்தார் என் கிறார்கள்.
இந்தக் கோபுரத்தைப் பார்த்தபடி நின்றோமானால், கோபுரத்தை ஒட்டி நமக்கு வலது புறத்தில் தேவார மண்டபமும் புஷ்ப மண்டபமும் உள்ளன; நமக்கு இடது புறத்தில், அஞ்சம்சி விநாயகர் சந்நிதி; இந்தச் சந்நிதியைத் தனியாக வலம் வரும் வசதி உண்டு. அதென்ன அஞ்சம்சி? பஞ்ச சந்தி விநாயகர்தான், அஞ்சம்சி விநாயகர் ஆகிவிட்டார்.
தெற்குச் சுற்றுக்குள் திரும்புகிறோம். அப்பாடா! ஒரு வழியாக, கோயிலின் உள் வாயில் இருக்கும் பிராகாரச் சுற்றுக்கு வந்து விட்டோம். திருமஞ்சன கோபுரமான வடக்கு கோபுரத்திலிருந்து ஏறி வந் தால், நேர் எதிரில் பார்ப்பது மாதிரி எதிர்சேவை மண்டபம்.
தெற்குச் சுற்று என்பது மிக விசாலமான இடம். கோயிலின் தெற்கு கோபுரத்திலிருந்து உள் நுழைந்தால், இங்குதான் வந்து சேர வேண்டும். தெற்கு கோபுரத்துக்கும் (தக்ஷிண காலி கோபுரம் எனப்படுகிறது), நாம் இப்போது நிற்கும் எதிர்சேவை மண்டபத்துக்கும் இடையில் நிறைய நிறைய மண்டபங்கள்.
எதிர்சேவை மண்டபத்துக்கு அருகில் அடுத்தடுத்து ஜலகோடி மண்டபமும், அச்சுத ராயலு மண்டபமும் -- இவற்றைத் தாண்டி நூறு கால் மண்டபம். கிருஷ்ண தேவராயர்
கட்டிய இந்த நூறு கால் மண்டபத்தில், இப்போது ராகு கேது சாந்தி பரிகார பூஜைகள் நடத்துவிக்கப்படுகின்றன. தெற்கு கோபுரத்திலிருந்து உள்ளே வந்தால், வலது பக்கத்தில், சண்டி ஹோம மண்டபமும், துர்க்கை சண்டி சந்நிதிகளும் உள்ளன. அடுத்து சில விற்பனை நிலையங்கள், குருக்கள் மண்டபம், ஆதிகும்பேஸ்வர சந்நிதி ஆகியவை வரிசையாக உள்ளன. நூறு கால் மண்டபத்துக்கும் தெற்கு கோபுரத்துக்கும் இடையில் உள்ள மண்டப பாணிக் கட்டடம், தேவஸ்தான அலுவலகமாகச் செயல்படுகிறது. பக்கத்தில் உற்சவ மண்டபம். ஊஞ்சல் கம்பிகளோடும் வெகு அழகான சிற்பங்களோடும் காட்சி தருகிறது. பக்கத்திலேயே, தல மரமான கல் லால மரம்.
கோயிலின் உள் வாயிலை நெருங்கி விட்டோம். எதிர்சேவை மண்டபத்துக்கும், உள் வாயிலுக்கும் இடையில் ஒரு மண்டபம். மண்டபத்தில் ஒரு சிறிய சந்நிதி. சந்நிதிக்குள் அஷ்டோத்திர லிங்கம். வணங்கி வழிபட்டுவிட்டு, உள் வாயிலின் முன் நிற்கிறோம்.
கம்பீரமான கொடிமரம். ஒரு கொடிமரமா? இல்லை, இரண்டு கொடிமரங்கள். செப்புக் கவச மிட்ட கொடிமரம் ஒன்று; கல்லால் ஆன கொடி மரம் மற்றொன்று. கல் கொடி மரத்தின் உயரம் 60 அடி. ஒரே கல்லால் ஆனது.
‘நமச்சிவாய வாழ்க!’ என்று சிவன் திருநாமம் செப்பிக் கொண்டே உள்ளே நுழைகிறோம்.
உண்ணாவரு நஞ்சம் உண்டான் காண் ஊழித்தீ அன்னான் காண் உகப்பர் காணப் பண்ணாரப் பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் அண்ணாமலையான் காண் அடியார் ஈட்டம் அடியிணைகள் தொழுதேத்த அருளுவான் காண் காளத்தியான் அவன் என் கண்ணுளானே!
என்று வாயார, மனதாரப் பாடிக் கொண்டே காளத்திநாதர் ஆலயத்துக்குள் நுழைகிறோம். நாம் நுழைவது தெற்கு வாயில். நேர் எதிரே, கொள்ளை எழிலோடு தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.
ஆறுமுகக் கடவுளை தரிசித்துவிட்டுப் படியிறங் கினால், உள் பிராகாரத்துக்குள் இறங்கி விடுகிறோம். ஒரு புறம் விசாலமாக உள்ள உற்சவ அலங்கார மண் டபம். காளத்தீஸ்வரர், ஞானப் பூங்கோதையார், கண் ணப்பர், பரத்வாஜர், விநாயகர், ஆறுமுகர் என்று பற்பல உற்சவத் திருமேனிகள்.
உள் பிராகாரத்தின் தெற்குச் சுற்றில்தான் தட்சிணா மூர்த்தி கொலுவீற்றிருக்கிறார். மண்டபத்தில் ஏறி விநாயகரையும் முருகரையும் வழிபட்டு வந்ததால், நாம் இப்போது மேற்குச் சுற்றுக்குள் வந்து விட்டோம்.
மூலவர் சந்நிதிக்குள் நுழைகிறோம். தனிப் பிராகாரத்தோடு கூடிய சந்நிதி. மூலவருக்கு எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியும் கம்பீரமாக வீற்றிருக்கிறார்கள். நிமிர்ந்து பார்க்க... ஆஹா... ஆஹா... ‘காலமார் முகலி வந்து அணைதரு காளத்தி நீலமார் கண்டன்’ நீள்கோலம் காட்டுகிறார். காளத்தியப்பர், காளத்தீஸ்வரர், வாயுலிங்கேஸ்வரர், குடுமித் தேவர், தென் கயிலைநாதர், கணநாதர், ஐங்குடுமித் தேவர், ஐந்து கொழுந்து, கல்லாலடியார், மலைமேல் மருந்து, காளத்திக் கற்பகம், பொன்முகலித் துறைவர் என்றெல்லாம் திருநாமங்கள் கொண்ட இறையனார், சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். சிவலிங்கம் தான் சுவாமி. ஆனால், எப்போதும் அவர்மீது தங்கக் கவசம் சார்த்தப்பட்டிருக்கும்.
ஸ் வர்ணமுகி ஆறு, காளத்தியில் உத்தர வாகினியாகப் பாய்கிறது. தெற்கிலிருந்து வடக் காகப் பாய்ந்தால் உத்தரவாகினி என்று பெயர். வாரணாசியில், கங்கை உத்தரவாகினியாகப் பாய்கிறாள். உத்தர வாகினியாகப் பாயும் இடங்களில், பித்ரு கடன் செய்வதும், அஸ்தி கரைப்பதும் விசேஷம்.
முனிவர்கள் பலர், ஸ்வர்ணமுகியில் நீராடி நின்று வழிபட, அவர்கள் கிழக்குப் பார்த்து நிற்க, அவர்களுக்குக் காட்சி கொடுப் பதற்காகவே, காளத்தீஸ்வரர் மேற்கு நோக்கித் திரும்பியதாக ஐதீகம்.
|
நாம் பார்க்கும்போது பட்டை பட்டையாகத் தெரிகிறதே, அதுவே கவசம். 9 பட்டைகள் கொண்ட இந்த கவசத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
மாலைகளையும் இந்தச் சட்டத்தின்மீதே சார்த்து வார்கள். கவசத்தை வைக்கும்போதும் எடுக்கும்போதும் மூலவரின் மீது கை பட்டுவிடக் கூடாது. கவசத்தை எடுத்துவிட்டுப் பார்த்தால், மூலவரின் முழு அழகும் கண்களை நிறைக்கும். கிட்டத்தட்ட நான்கடி உயர முள்ள லிங்கம், அடிப் பாகத்தில் பருத்திருந்தாலும், முனை நோக்கிக் குறுகிக்கொண்டே போகிறது. இப்படி உயரமாக நீண்டிருப்பதைப் பார்த்துவிட்டுத்தான், ‘குடுமித் தேவர்’ என்று கண்ணப்பர் அழைத்தார் போலும்! கவசம் நீக்கப்பட்ட நிலையில், சிவலிங்கத் திருமேனியின் அற்புதத்தைக் காணலாம்.
காளாஸ்திரி என்று இன்று மக்கள் வழங்கினாலும், இந்தத் தலம் ஸ்ரீகாளஹஸ்தி என்பதாகும். ஸ்ரீ - சிலந்தி; காளம் - பாம்பு; ஹஸ்தி - யானை. திரேதா யுகத்தில் சிலந்தியன்று, வாயுலிங்கேஸ்வரரை பூஜித்தது. தனது வலை இழையைக் கொண்டு சிவலிங்கத்துக்கு விதானம் அமைத்துக் கோயில் கட்டியது. சிவபெருமான், வேண்டுமென்றே விளக்குச் சுடரைப் பெரிதாக்கி, சிலந்தியின் விதானத்தை அழியச் செய்தார். வருத்தத்தில் அமிழ்ந்த சிலந்தி, அந்த விளக்கிலேயே வீழ்ந்து மாயத் துணிந்தது. துவாபர யுகத்தின் தொடக்கத்தில் பாம்பு ஒன்று ரத்தினங்கள் கொண்டும், யானை ஒன்று இலைகள் கொண்டும் இந்தப் பெருமானை வழிபட்டன. ஒன்றுக்கொன்று போட்டி. இரண்டும் ஒன்றையன்று தாக் கிக் கொண்டு உடல் பிறவி நீத்தன.
எந்தப் பிறவியாயினும், எந்த நிலைமையாயி னும், அன்பு செலுத்தினால் அதை ஏற்றருளும் பரமேஸ்வரன், மூன்று ஜீவன்களையும் ஏற்று, முக்தி அருளினார். மூன்று ஜீவன்களின் உடல் ஸ்வரூபங்களையும், சிவலிங்கத் திருமேனி யில் தாங்கினார். அடியில் சிலந்தி, நடுவில் யானைத் தந்தங்கள், மேலே நாகத்தின் ஐந்து தலைகள் ஆகியன உள்ளன.
சிவபெருமான் முக்கண்ணன். கோபத்துக்கான நெற்றிக் கண்ணை, சாந்த நிலையில் அவர் திறப்ப தில்லை. காளத்தி நாதருக்கோ, மற்ற இரண்டு கண்க ளும்கூட அவருக்குச் சொந்தமானதில்லையாம். எப்படித் தெரியுமா? ஐயனின் இடப் பாகம், எப்போதும் அம்மைக்குச் சொந்தம். எனவே, இடக் கண் அம்மையின் கண். இங்கே வலக் கண்ணோ, கண்ணப்பர் அப்பிய கண்! சிவலிங்கத் திருமேனியில், வலப் புறம், திண்ணன் கண் அப்பிய வடுவைக் காணலாம்.
மேற்கு நோக்கிய இந்த மூலவ ருக்கு, ஆவுடையார் பின்னர் செய்து சேர்க்கப்பட்டது. சதுர பீட ஆவுடையார். காளத்திநாதனைக் கண்ணுளானாகக் காண எத்தனைக் கோடி கண்கள் வேண்டும்! எண்ணி எண்ணி மகிழ்ந்து தொழுகிறோம்.
சந்நிதியில், மூலவருக்குப் பக்கத்தில் மனோன்மணி சக்தியின் திருமேனி. கீழேயே, காளத்தீஸ்வரரின் போகத் திருமூர்த்தம். நான்கு கரங்களுடன், மானும் மழுவும் ஏந்தி, அபய- ஹஸ்த- சிம்மகர்ண முத்திரைகள் தாங்கி, சுகாசனத்தில் காட்சி தருகி றார் போகமூர்த்தி. கைகூப்பித் தொழுபவராக கண்ணப்பரும் (மூலவர் சிலை) இங்கேயே நிற்கிறார். கண்ணுளானும் கண்ணப் பரும் ஒருசேரக் காணக் கிடைக்கும் தரிசனத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் திரும்புகிறோம்.
காளத்தீஸ்வரர் சந்நிதியில் திரு நீறு பிரசாதம் தர மாட்டார்கள். பதிலாகத் தீர்த்தம் கிடைக்கும். கண்ணப்பர் அபிஷேகம் செய்த தலமல்லவா! அதனால், பச்சைக் கற்பூரத்தைப் பன்னீரில் அரைத் துத் தீர்த்தத்தில் கலந்து, சங்கி னால் எடுத்துப் பிரசாதமாக வழங்குகிறார்கள். கண்ணப்பர் செய்த அபிஷேகம், கங்கை போன்று புனிதமானது என்பதால், கங்கை நீரைத் தவிர வேறு எந்த அபிஷேகமும் மூலவருக்கு இல்லை. மற்ற அபிஷேகங்கள், ஆவுடையாருக்கு மட்டுமே செய் யப்படும்.
காளத்திநாதரையும், உள்ளே நிற்கும் காளத்தி வேடரையும் பார்த்துக் கொண்டே கொடி மரம் அருகே வருகிறோம். கொடி மரத்தின் அருகே இருக்கும் சாளரம் பக்கத்தில் வந்து நின்று, உள்ளே இருக்கும் மூலவரை தரிசிப்பது மரபு.
‘நெறியே நின்றடியார் நினைக்கும் திருக்காளத்தியுள் அறிவே!’’ என்று சுந்தரர் பாடியதை எண்ணி நிற்கிறோம். மூலவர் சந்நிதியின் உள்ளே.... என்ன இது? விளக்குச் சுடர்கள் ஏதோ காற்று வந்து மோதியதுபோல, இப்படி வேகமாக ஆடுகின்றன? இரண்டு சுடர்கள் மட்டுமே இப்படி, இந்த வேகத்தில்... மற்ற சுடர்கள் நிதானமாக இருக்க, இவற்றுக்கு மட்டும் ஏன் இந்த வேகம்? ஆடி... ஆடி...
காளத்தீஸ்வரரை வணங்கிக் கொண்டே நாம் நிற்கும் உள் பிராகா ரத்தில் (மேற்குச் சுற்று) வலத்தைத் தொடர்கிறோம். இந்தப் பிராகாரத்தில், திருமாளிகைப் பத்ததி மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களில் வெவ்வேறு சந்நிதிகளும் உள்ளன. மூலவருக்கு எதிர்த்தாற்போல, பார்வதி சமேத பரமேஸ்வரர் உற்சவத் திருமேனியாக எழுந்தருளியுள்ளனர். அடுத்து வள்ளி-தெய்வயானை உடனாய சுப்ரமணியர், காசி விஸ்வநாதேஸ்வரர், ராமேஸ்வர லிங்கேஸ்வரர். தாண்டி வந்தால், வில் ஏந்தி கனகம்பீரமாக நிற்கிறார் பக்த கண்ணப்பர். தொடர்ந்து வரிசையாக வல்லபை கணபதி, லட்சுமி கணபதி, சக்தி கணபதி. அடுத்து கிருஷ்ணதேவராயர் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்லப்படும் லிங்கத் திருமேனிகள். திருமலை வேங்கடேஸ்வரப் பெருமாள். ராமரும் சீதையும் ஆஞ்சநேயரும் சப்தரிஷிகளும் பிரதிஷ்டை செய்த லிங்கங்கள்.
கிட்டத்தட்ட மேற்குச் சுற்றின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். சனீஸ்வரர் மட்டுமே தனியாக நிற்கிறார். இது கிரக தோஷ நிவர்த்தித் தலம். ராகு, காளத்தீஸ்வரரிடத்தில் அடைக்கலமாகிக் கிடக்கிறான். கேதுவை, அம்பாள் தம் இடுப்பில் ஒட்டியாணமாக அணிந்துள்ளார். எனவே, இங்கு நவக்கிரகங்களுக்குத் தனிச் சந்நிதி இல்லை.
மேற்குச் சுற்றிலிருந்து வடக்குச் சுற்று திரும்பும் மூலையில், கனக துர்க்கையம்மன் சந்நிதி. வடக்குச் சுற்றில் திரும்பியவுடன் நடராஜர் சபை. இரண்டு நடராஜத் திருமேனிகள், இரண்டு சிவகாமியம்மைத் திருமேனிகள். மாணிக்கவாசகரும் உள்ளார். தொடர்ந்து அறுபத்துமூவர். முருகர். சிவ லிங்கங்கள். கிழக்குச் சுற்றுக்குள் திரும்பும் முன், கால பைரவர். கிழக்குச் சுற்றில் திரும்பி விடுகிறோம். ஞானப்ரசூனாம்பாள் எனும் திருநாமம் கொண்ட அம்பாள் சந்நிதியின் வாயிலை அடைகிறோம்.
காளத்தி கோயிலின் அமைப்பு விசேஷமானது. ஐயன் சந்நிதியும் அம்மன் சந்நிதியும் அடுத்தடுத்து இணையாக உள்ளன. ஐயன் சந்நிதி மேற்குப் பார்த்தது. அம்மன் சந்நிதி கிழக்குப் பார்த்தது. இரண்டையும் சுற்றித்தான் உள் பிராகாரம் இருக்கிறது. தவிர, இரண்டு சந்நிதிகளிலும் தனித் தனி உள் சுற்றுகள் உண்டு. இந்த அமைப்பினால், ஐயனுக்கு வலப் புறத்தில் அம்மன் எழுந்தருளியிருக்கும் ஒரு சில கோயில்களில் இதுவும் ஒன்றாகிறது.
ஞானப்பூங்கோதை, ஞானக்கொழுந்து, ஞானசுந் தரி, ஞானப் பேரொளி, சிற்புட்கேசி, வண்டார் குழலாள் என்று பற்பல பெயர்களில் அழைக்கப்படும் அம்பிகையின் சந்நிதி. உள்ளே நுழையும் இடத்தில் உயரமான அலங்காரத் திருவிளக்கு. சிம்ம வாகனம். இதைத் தொட்டு வணங்கச் சொல்கிறார்கள். ஈசனின் சந்நிதியில் நந்திதேவரைத் தொடக் கூடாது. ஆனால், அம்பாள் சந்நிதி சிம்மத்தைத் தொட்டு வணங்க வேண்டும். இவ்வாறு வணங்கினால், நினைத்த காரியம் கைகூடும் என்று நம்பிக்கை.
அம்பாள் சந்நிதிக்குள் நுழைகிறோம். நின்ற திருக்கோலத்தில் ஞானப்ரசூனாம்பிகை. இரண்டு திருக்கரங்கள். அம்பிகையின் இடுப்பில் ஒட்டியாண மாகக் கட்டப்பட்டிருக்கும் கேது. அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் தங்கப் பாவாடை சார்த்தப்பெறும். அம் பாளுக்கு முன்னால், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்த மேரு. ஞானப்ரசூனாம்பிகை, ஞானமும் அறிவும் வடிவானவள். இவளை வணங்கினால், கிரக தோஷங்கள் தீரும்; அறிவு கூடும்.
அம்பிகை பரமேஸ்வரி, இங்கே ஞானப்ரசூனாம் பிகை ஆனது எப்படி?
கயிலாயத்தில் ஒரு நாள். சிவ பஞ்சாட்சர மந்தி ரத்தைத் தனக்கு உபதேசிக்கும்படி, ஐயனிடம் அம்மை வேண்டினாள். ஒப்புக் கொண்ட ஐயனும், அம்மையை மௌன நிலைமைக்குப் போகச் செய் தார். ஆனால், ராஜச குணம் தலை தூக்கத் தன் பணிப்பெண் மாலினியிடம் தான் உபதேசம் பெற இருப்பதை அம்பிகை கூறிவிட்டாள். இதனால், மானுடப் பெண்ணாகும்படி சபிக்கப்பட்டு பூமிக்கு வந்தாள். நாரத ரிஷி சொன்னதற்கேற்ப, ஸ்வர்ணமுகி நதி தீரத்தை அடைந்து, வாயுலிங்கத்துக்கு அருகில் அமர்ந்து தவம் செய்தாள். காற்றை மட்டுமே சுவா சித்து, அகன்ற வில்வ இலைகளால் பூஜித்து, தவம் செய்தாள். தனது தவத்தைக் காக்க, துர்க்கையைக் காவல் வைத்தாள். வேண்டுமென்றே இறையனார் பிரளய வெள்ளத்தை ஏற்படுத்த, துர்க்கை அந்த நீர் முழுவதையும் தன் உள்ளங்கையில் ஏந்திக் குடித்தாள். அம்பாள் கடுந்தவம் புரிய, தை மாதப் பௌர்ணமி அன்று இறையனார் பிரத்தியட்சமாகி, சாத்விக குணம் நிரம்பப் பெற்றிருந்த தன் நாயகிக்குப் பஞ்சாட்சரியை உபதேசித்தார். அம்பிகை, மானுடப் பெண்ணாக, இரண்டு கரங்களுடனே, ஞானப்ரசூ னாம்பிகா ஆனாள். ஹஸ்தஸ்த ஸாகர என்றழைக்கப் படும் துர்க்கை (பிரளய சமுத்திரத்தைக் கரத்தால் குடித்தவள்), கருமை நிறம் மாறித் தங்க நிறம் பெற்றாள். அதனாலேயே, கனக துர்க்கா ஆனாள். அம்பாளை வணங்கித் தொழுகிறோம். சந்நிதியைத் தனியாக உள் வலம் வரலாம். கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை.
பிராகாரத்தில் லிங்கங்கள். அடுத்து உயரமாக ஒரு லிங் கம். பிரசன்ன ஸ்ரீகாளத்தீஸ் வரர் என்று எழுதி வைக்கப் பட்டுள்ளது. இங்குமொரு காளத்தீஸ்வரரா? முகலாயப் படையெடுப்பின்போது, மூல வரும் கோயில் செல்வங்களும் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க, ஆங்காங்கே பற்பல வழிகள் கையாளப்பட்டன. காளஹஸ்தியிலும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். மூலவருக்கு முன்னால் அதே மாதிரியான ஒரு லிங்கத் திருமேனியை பிரதிஷ்டை செய்து மூலவரை மறைத்துவிட்டார்கள். படையெடுத்து வந்தவர்கள், நகல் மூலவரை உடைத்துச் சிதைத்து, ஒன்றும் கிடைக்காமல் போய் விட்டார்கள். பின்னர், நகல் மூலவரை பிராகாரத்தில் கொண்டு வந்து வைத்துவிட்டு, அசல் மூலவரைத் திறந்து விட்டார்கள். வந்தவர்கள் கண்களுக்குப் பிரசன்னமாகத் தெரிந்ததால், இவர் பிரசன்ன காளத்தீஸ்வரர் ஆனார் போலும்!
அடுத்து பெரிய ஸ்படிக லிங்கம். ஆதிசங்கரர் பிரதிஷ்டை. அருகிலேயே அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர். கூடவே, ஒரு பைரவரும்! பிராகாரத்தின் தெற்குச் சுற்றில் திரும்புகிறோம். திரும்பும் மூலையில், சுவரில் புடைச்சிற்பங்களாக, ஸ்ரீ, காளன், ஹஸ்தி ஆகியோரும் கண்ணப்பரும் இருக்கிறார்கள். பிரா கார வலம் முடிந்து விட்டது. இப்போது, முதலில் பார்த்த தட்சிணாமூர்த்தி எதிரில் வந்து விட்டோம். கண் கொள்ளாப் பேரெழிலுடன் காட்சி தரும் தட் சிணாமூர்த்தி. வலக் காலடியில் முயலகன், லேசாகத் தலை நிமிர்த்திக் கிடக்கிறான். இடக் கால், வலக் காலின் மீது வீராசனமாக வைக்கப்பட்டிருக்கிறது. சின்முத்திரை காட்டி உபதேசிக்கும் மௌன குரு. அதரங்களில் பொங்கி வழியும் புன்னகை.
காளத்தியில் தட்சிணாமூர்த்தி வெகு வெகு விசேஷம். கோயிலுக்குள் நுழையுமுன், தெற்கு வாயி லில் பார்த்தோமே கொடிமரம், அது தட்சிணாமூர்த் திக்கான கொடிமரம். குருக்ஷேத்திரத்தில், சூரிய கிரகண காலத்தில் ஒரு நாள், முனிவர்கள் பலரும் ஒன்று கூடினர். ஸனந்தனர், ஸனத்குமாரர், பராசரர், சாண்டில்யர் என்று பலரும் கூடியிருக்க, பிரம்ம ஞானம் பற்றிய சர்ச்சை எழும்பியது. தங்களின் ஐயங்களை அவர்கள் பரமனாரிடம் எழுப்ப, காளத்திக்கு அவர்களை வரச் சொன்னார் பரமனார். ஸ்வர்ணமுகி நதி தீரத்தை அடைந்து அவர்கள் காத்திருக்க, அவர்களுக்குக் கல்லால மரத்தின் கீழ் தட்சிணா மூர்த்தி காட்சி கொடுத்தார். எனவே, இந்தத் திருத்தலத்தின் தலமரம் கல்லாலம் (விழுதுகள் இல்லாத ஆல மரம்) எனப்படுகிறது. காளத்திக்கு இரண்டு தல மரங்கள். மகிழ மரம் ஒன்று. மற்றது கல்லாலம். கோயில் பிராகாரத்தில், தெற்கு கோபுர வழியில், மகிழ மரம் இருக்கிறது. தட்சிணா மூர்த்தியை வணங்கி விட்டு வெளியே வர யத்தனிக்கிறோம். எதிர் மண்டபத்தில் (நாம் உள்ளே நுழைந்தபோது சங்கல்ப விநாயகரை தரிசித்தோமே, அந்த மண்டபத்துக்கு எதிர்ப் புறத்தில்) மிருத்யு லிங்கேஸ்வரர் சந்நிதி.
தர்மபிரஜா எனும் நாட்டின் அரசனான மிருத்யுஞ்சயன் என்பவன், முனிவர் சாபத்தால் எலும்புக் கூடாக மாறிப் போனான். உற்றார் உறவி னரை இழந்து, அலைந்து திரிந்தான். ஸ்வர்ணமுகி ஆற்றங்கரையில் வந்து தங்கி, புனித நீராடி, வில்வ இலைகள் கொண்டு அர்ச்சித்து வர, அவனுக்கு உடலையும் உயிரையும் வழங்கி, சுற்றாத்தாருடன் இணைந்து வாழச் செய்து அரசாட்சியையும் மீண்டும் கொடுத்தார் மகாதேவர். மிருத்யுஞ்சயன் வழிபட்ட மிருத்யுலிங்கேஸ்வரர் இங்கு கோயில் கொண்டுள்ளார். இப்போதும்கூட, இங்கு ஓர் ஐதீகம் உண்டு. பஞ்சம் ஏற்பட்டால், இந்தச் சந்நிதியின் வாயிலைத் தற்காலிகமாக அடைத்து, ஆற்றுநீர் கொணர்ந்து லிங்கம் மூழ்கும்வரை ஊற்றி வைத்தால், உடனடியாக மழை பெய்யுமாம்.
கோயிலை விட்டு வெளியே வருகிறோம். தெற்கு கோபுரம் (தக்ஷிண காலி கோபுரம்) வழியாக வெளியே வந்தால், இடப் புறம் கண்ணப்பர் மலை. இதுவே தக்ஷிண கயிலாய மலை. காளத்தியை தரிசித்தால், கயிலாயத்தை தரிசித்த பலன் கிட்டும். நக்கீரதேவ நாயனார், ‘கயிலை பாதி காளத்தி பாதி’ என்று பாடி உள்ளார். கயிலாயமே, தெற்கில் காளத்தியாக இருப்ப தாகக் கணக்கு.
கண்ணப்பர் மலை என்றே அழைக்கப்படும் கயிலாய மலைமீது ஏறுவதற்கு வசதியான படிகள் உள்ளன. மேலேறிச் சென்றால், கண்ணப்பருக்கு ஒரு சந்நிதி. கண்ணப்பர் வழிபட்ட சிவனாருக்கு ஒரு சந்நிதி. வில்லேந்தி நிற்கிறார் கண்ணப்பர். மலையிருந்து பார்த் தால், கீழே உள்ள காளத்தீஸ்வரர் திருக்கோயிலும், ஊரும் வெகு தெளிவாகத் தெரிகின்றன. சொல்லப் போனால், கோயிலின் முழுமையான அமைப்பையும் அழகையும் மேலிருந்து பார்க்கும்போதுதான் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த மலையிலிருந்து வடக்கே பார்த்தால், எதிரே ஒரு மலை. அது துர்க்காதேவி கோயில் கொண்டிருக்கும் கனகாசலம் (இதே கனக துர்க்கைதான், விஜய நகரத்திலும் கோயில் கொண்டிருப்பதாக ஐதீகம்).
சற்றே கிழக்காகப் பார்வையைத் திருப்பினால், மற்றுமொரு மலை. முருகப் பெருமான் எழுந்தருளியிருக் கும் குகக் குன்று. எல்லா விதமான வித்தைகளையும் ஒரு மலையாக்கி, அதன் மீது வித்தைகளுக்கும் அதிபதி யான முருகனை வீற்றிருக்கச் செய்தார் பரமனார். இப்படி ஞானவித்யா பீடத்தில் வீற்றிருக்கும் இந்த முருகனை வழிபடுபவர்களுக்கு சகல ஞானமும் கிட்டும். ஓங்காரப் பிரணவத்துக்குப் பொருள் தெரியாமல், முருகனால் சிறை வைக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட பிரம்மா, சரஸ்வதியின் உந்துதலால், இங்கு வந்து முருகனிடம் பிரணவப் பொருள் கற்றதாக வரலாறு. வடக்கே துர்க்கை, தெற்கே காளத்தீஸ்வரர், நடுவில் முருகன் என்று இந்த மூன்று மலைகளுமே சோமாஸ்கந்த வடிவில் காட்சி தருகின்றன.
கண்ணப்பர் மலை மீது கற்களைச் சுற்றி வந்தால், சரிவில் மணிகண்டேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. பக்கத்திலேயே மலையைக் குடைந்து ஏற்படுத்தப்பட்ட மணிகர்ணிகா மண்டபம். அந்திம காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை இந்த மண்டபத்துக்குக் கொண்டு வந்து, வலப் புறமாக ஒருக்களித்துப் படுக்கச் செய்தால், பின்னர் அவர்களின் உயிர் பிரியும்போது, உடல் தானாகவே திரும்பி, உயிர் வலக் காது வழியா கப் பிரியும் என்றும் ஆன்மா முக்தி அடையும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. இதை நிறையக் குடும் பங்கள் செய்து வருகின்றன.
ஏன்? காளத்திக்குள் நுழைந்தாலே, முக்தி நிச்ச யம் என்பதும் காலங்காலமாக இருக்கும் நம்பிக்கை. நதி- நிதி-பர்வதம் என்பார்கள். ஸ்வர்ணமுகி நதி -பார்வதி பரமேஸ்வர நிதி- தென் கயிலாய பர்வதம் என்று பொருள். காளத்தித் தலத்தில் காலடி பட்டுவிட்டால், நதி- நிதி- பர்வத தரிசனம் கிட்டிவிட்டால், முக்தி கிடைத்துவிடும். இது, ஸ்ரீ காளஹஸ்தி பிரவேச முக்தி என்றே அழைக்கப்படுகிறது.
உளமாரத் தொழுது காளத்தியப்பரிடம் விடைபெற்று அகல்கிறோம்.
No comments:
Post a Comment