Wednesday, 2 August 2017

குறைகள் போக்கும் குரு ஸ்தலம்!



ஒ ரு முறை நான்கு வேதங்களும் தனித் தனியே பரமேஸ்வரனிடம் சென்று தத்தம் குறைகளைக் கூறி அழுது தொழுது நின்றன. அப்படி அவை சென்று இறைவன் திருவடிகளை வணங்கித் துதித்த இடம்தான் தென்குடித்திட்டை என்று அற்புதமாகப் பாடுகிறார் திருஞானசம்பந்தர். அது மட்டுமா! இது குமரவேள் தந்தையார் தலம். அருளாளர்களும் ஞானிகளும் விரும்பி வழிபடும் தலம் என்றெல்லாம் போற்றுகிறார் அவர்.
தென்குடித்திட்டை எனப்படும் திட்டை திருத்தலம் நோக்கிச் செல்வோமா?
ஆற்றின் நடுவில் ஒரு மேடாக மணல் இருந்தால் அதைத் ‘திட்டு’ என்பர். மலைமேட்டையும் திட்டு எனலாம். காவிரியின் கிளை நதியான வெட்டாற்றுக் கும், வெண்ணாற்றுக்கும் இடையில் இந்த ஊர் திட் டாக இருப்பதால் ‘திட்டை’ என்று பெயர் வந்ததாகக் கூறுவர்.
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் இருப் புப் பாதையில் தஞ்சையை அடுத்து வரும் ரயில் நிலையம் ‘திட்டை’. ரயில் மார்க்கமாக வந்தால் தஞ்சையில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவு. அங்கிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் திட்டை ஊர் அமைந்துள்ளது. தஞ்சையிலிருந்து திருக் கருகாவூர் (ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அம்மன் அமைந்த தலம்) செல்லும் பஸ் வழி தடத்தில் திட்டை உள்ளது. தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது (நகரப் பேருந்து எண்கள்: 34, 48-ஏ, 454, T.V.M ).
கிழக்கு நோக்கி அமைந்த மிகச் சிறிய கோபுரம். சுற்றிலும் செங்கற்களால் கட்டப்பெற்ற மதில். உள்ளே நுழைந்தவுடன் கருங்கல்லால் ஆன கொடி மரம். இந்தக் கோயிலின் சிறப்பு- இங்குள்ள கணபதி, முருகன், சிவன், அம்பிகை ஆகிய அனைத்து சந்நிதி விமானங்களும் கருங்கல்லால் ஆனவையே! அற்புதமான சிற்ப வேலைப்பாடு. கோயிலுள் இரு புறம் துவார கணபதியையும், தண்டபாணியையும் வழிபட்டு, முன் மண்டபம் தாண்டி உள்ளே சென்றால் கருவறையில் மூலவர். சிறிய சிவ லிங்கத் திருமேனி. சதுர ஆவுடையாருடன் காட்சியளிக்கிறார். சுவாமி சுயம்பு மூர்த்தி. அவரது திருமேனியில் கோடுகள் உள்ளன.
கருவறையுள் மேலேயுள்ள பிரம்மரந்திரத்தில் (சுவாமி உச்சியின் மேல் விதானத்தில் உள்ள கல்) இருந்து சிவலிங்கத் திருமேனியில் 25 நொடிக்கு ஒரு முறை நீர் சொட்டுவது ஆச்சரியமாக உள்ளது. ஆதிகாலத்தில் சுவாமி விமானத்தில் சந்திரகாந்தக் கல் இருந்ததாகவும் 1924-ஆம் ஆண்டில் இந்த விமானத்தைப் பழுது பார்த்தபோது அந்தக் கல்லை அப்படியே வைத்து திருப்பணி செய்யப்பட்டது என்றும் கூறுகிறார்கள். சந்திரனில் உள்ள ஈரத் தன்மையை ஈர்த்து அதைத் தேக்கி வைத்துச் சொட்டும் தன்மையுடையது சந்திரகாந்தக் கல். எனவே, இவ்வாறு நிகழ்கிறது என்கின்றனர். மூலவர் திருநாமம் பசுபதீஸ்வரர். உலகில் உள்ள உயிர்கள் என்னும் பசுக்களுக்கு ஒரே பதியாக (தலைவனாக) விளங்குபவர் பரமசிவன். ஆதலால், இவர் பசுபதீஸ்வரர். இவரை பூஜித்து பிரம்மஞானிகளுள் தலைசிறந்தவராக அனுக்கிரகம் பெற்றார் வசிஷ்டர். எனவே, இந்தத் தல இறைவனுக்கு வசிஷ்டேஸ்வரர் என்றும் தலத்துக்கு வசிஷ்டாஸ்ரமம் என்றும் பெயர்கள் உண்டு.
நந்தினி, கமலினி ஆகிய இரு தெய்வப் பசுக்கள், தங்கள் தாய் காமதேனுவைப் போன்று தாங்களும் சர்வசக்தி பெற்றிட திட்டை இறைவனை வணங்கி சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகிய சகல வல்லமைக ளைப் பெற்றனவாம். இதனால் இங்கு உறையும் ஈஸ்வரருக்கு தேனுபுரீஸ்வரர் என்றும், நாகராஜன் பூவுலகைத் தாங்கும் திறத்தையும், ஆயிரம் படங்களைக் கொண்ட ஆதிசேஷனாக இறைவன் அருள் செய்த மையால் நாகேஸ்வரர், அனந்தேஸ்வரர் என்ற திருநாமங்களும் உண்டு.
வெளிப் பிராகாரத்தில் உள்ள கோஷ்டங் களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். தவிர பாலசுப்ரமணியர், கஜலட்சுமி, நடராஜர் சந்நிதிகளும் உள்ளன.
கோயிலின் முன் வலப் புறம் தெற்கு நோக்கி உலகையெல்லாம் அருளாட்சி செய்யும் உலகநாயகியம்மை சந்நிதி அமைந்துள்ளது. இந்த அம்பிகையை தினமும் வழிபட்டு வந்த சுகந்த குந்தளா எனும் பெண், உயிரிழந்த தன் கணவனை அம்பிகையின் அருளால் மீண்டும் உயிர் பிழைக்கச் செய்து, நித்திய சுமங்கலியாக வாழ்ந்தாள். எனவே, அம்பிகைக்கு சுகந்த குந்த ளேஸ்வரி என்றும் பெயர். மங்களா எனும் பெண்ணுக்கு விதவை நிலை நீங்க அருள் புரிந்ததால், அம்பிகை மங்களேஸ்வரி என்றும் அழைக்கப் பெறுகிறாள்.
அம்பிகை சந்நிதிக்கு வெளியே உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிக்குரிய உருவங்கள் கல்லில் செதுக்கப் பட்டுள்ளன. புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுர காளியம்மன் மகாமேருவும், லிங்கமும் மர பீடத்தில் உள்ளன.
நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு விசேஷமான திருக்கோயில் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளது. குருபகவான் அருள்பாலிக்கும் தலங்களுள் இந்தத் தலம் சிறப்பாக உள்ளது. பிரம்மனின் மைந்தனான குரு, இந்தத் தல இறைவனுக்குக் கொன்றை மலர் மாலை அணிவித்து, முல்லை மலராலும், வெள்ளெருக்கு மலராலும் அர்ச்சித்து வரம் பெற்றார். திருமணம் ஆக வேண்டி பிரார்த்தனை செய்பவர்களுக்கும், மற்ற தோஷ நிவர்த்திகளுக்கும் குருபகவான் அனுக்கிரகம் செய்கிறார். குறைகளோடு வருபவர்களின் பாரம் நீக்கி, குளிர்ந்த மனதோடு அனுப்புகிறார் இந்த குரு பகவான்.
சிவபெருமானைப் போன்று இவருக்கும் காளை மாட்டு வாகனம் உண்டு. தந்தை பிரம் மனைப் போல இரு கரங்களில் ஜப மாலையும், கமண்டலமும் கொண்டு, முன் வலக் கரத்தில் அபய முத்திரையும், முன் இடக் கரம் யோக தண்டம் ஏந்திய நிலையிலும் காட்சியளிக்கிறார்.
இவரை சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரத்தன்றும் மற்றும் ஒவ்வொரு மாதமும் வரும் அதே நட்சத்திரத்திலும் பூஜிப்பது விசேஷம். கடலை மாவி னால் மாவிளக்கு ஏற்றி, இவருக்கு விருப்பமான பம்பளிமாஸ், நார்த்தைப் பழம், தயிரன்னம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்வதும் சிறப்பு. இங்கு வியாழக் கிழமைகளிலும், குருப் பெயர்ச்சியன்றும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்தத் தலத்துக்கு மற்றொரு சிறப்பு என்னவென்றால், நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானும் இந்தத் தலத்தில் இறைவனை வழிபட்டு, கிரகநாதனாக அமர்ந்தார்.
கோயிலுக்கு வெளியே எதிரில் உள்ள சூலதீர்த்தம் எனும் சக்ர தீர்த்தம் முக்தியை அளிக்கக் கூடியது. மிகப் பெரிய குளம். படித்துறையுடன் நன்றாக உள்ளது.
தல விருட்சம் மாலதி என்னும் மல்லிகைக் கொடி. அம்பிகை உலகநாயகியின் அருளால் சகல தேவ மங்கையர்களும் முல்லை, மல்லிகை ஆகிய கொடிகளாகவும், வில்வம், அரசு, புரசு ஆகிய மரங்களாகவும் இருந்து இந்தத் தலத்து இறைவருக்கு தொண்டு செய்கிறார்கள்.
கயிலாயம், கேதாரம், காசி, ஸ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்பு மூர்த்தங்கள் தல வரிசையில் 22-வது தலமாக விளங்குவது தென் குடித் திட்டை. ‘தக்ஷிண குடித்வீப க்ஷேத்திரம்’ என்று இந்தத் தலத்தை தல புராணம் போற்றுகிறது.
‘‘தென்குடித்திட்டை போன்று ‘வட குடித்திட்டை’ என்ற பெயரில் ஒரு தலம் உண்டோ?’’ என்று காஞ்சி மகா ஸ்வாமிகள் ஒரு முறை வினவினார். ‘‘நன்னிலம் அருகில் வடகுடித்திட்டை உள்ளது என்றும், தென்குடித்திட்டையில் ஸ்வயம்பூதேஸ்வரர் என்னும் ஜோதிர் மகாலிங்கம் உள்ளது போல் வடகுடியிலும் மகாலிங்கசுவாமி அருள்பாலிக்கிறார்!’’ என்றும் அவரே பதில் உரைத்தார்.
இந்தத் திருக்கோயிலில் மாறவர்மன் திரிபுவன சக்ரவர்த்தி குலசேகர பாண்டி யன் மற்றும் சாளுவ நரசிம்மராயர் காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன.
தஞ்சைப் பெருவுடையார் கோயிலை அடிப்படையாகக் கொண்ட சப்த ஸ்தானத் தலங்களில் திட்டைத் தலமும் ஒன்றாகும்.
1926-ஆம் ஆண்டில் நாட்டுக்கோட்டை நகரத்தாராகிய பலவான்குடி ராம. கு. ராம. ராமசாமி செட்டியார் இந்தக் கோயிலைக் கற்கோயிலாகக் கட்டியதாக அறிய முடிகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த தென்குடித்திட்டை பெருமானை வழிபடுவோர் மற்றும் திருமுறை ஓதுவோர் பாவங்கள் நீங்கி புண்ணியப்பேறு பெறுவர் என்கிறார் திருஞானசம்பந்தர்.
தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக் கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள் ஞானமார் ஞானசம்பந்தன செந்த மிழ் பானலார் மொழிவலார்க்கு இல்லையாம் பாவமே.

No comments:

Post a Comment