இறை பக்தியின் பெருமையையும் வழிபடுவதன் மூலம் கிடைக்கும் நற்பலன்கள் பற்றியும் உலகத்தாருக்கு உணர்த்த வேண்டி, வானுலகில் வாழ்ந்து வரும் தேவர்களும் மகரிஷிகளும் அவ்வப்போது மண்ணுலகம் புறப்பட்டு வந்திருக்கின்றனர். அவர்கள், புண்ணிய மகான்கள் பலர் அவதரித்த இந்த பூலோகத்தில் பல க்ஷேத்திரங்களை நாடிச் சென்று தரிசித்துள்ளனர். அங்கெல்லாம் இறைவனின் திருவுருவ மேனியைக் கண்டு வணங்கித் தொழுதுள்ளனர்.
அவனது கண நேர தரிசனம் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கடும் தவமும் இருந்தனர். உலக நலன் ஒன்றையே பெரிதாகக் கருதி, தங்களை வருத்தி தவம் இருந்த அந்த அமரர்களின் அன்புக்கு இரங்கி, அவர்கள் முன் தோன்றி அருளையும் வரத்தையும் வாரி வழங்கினார் இறைவன்.
வருணன், அக்னி பகவான், வாயு பகவான், சூரிய பகவான், சந்திர பகவான் போன்றவர்கள் இப்படி மண்ணுலகம் வந்து இறைவனை வணங்கி வழிபட்டுப் போனதாகப் புராணம் சொல்கிறது. இவ்வளவு ஏன், தேவர்களின் தலைவனான தேவேந்திரன் எனப்படும் இந்தி ரனும் மண்ணுலகம் வந்து தீவிரமான சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருக்கிறான்.
அப்படி இந்திரன் வழிபட்ட ஒரு லிங்கம்தான் ஸ்ரீஐராவதேஸ்வரர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொழில் நகரமான ஓசூருக்கு அருகே அத்திமுகம் என்ற கிராமத்தில் பழைமை யின் பொலிவுடன் காணப்படுகிறது இந்த ஐராவ தேஸ்வரர் ஆலயம். பெங்களூரில் இருந்து ஓசூருக்கு 40 கி.மீ. தூரம். ஓசூரில் இருந்து அத்திமுகம் கிராமத் துக்கு 22 கி.மீ. தொலைவு.
ஆயிரம் வருடப் பழைமை கொண்ட இந்தக் கோயில் ஹொய்சாளர்கள் காலத்தில் கட் டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில், அழகான கட்டட அமைப்பும், சிற்ப நேர்த்தியும் அவர்களது பெருமையையே பறை சாற்றுகின்றன. 12-ஆம் நூற்றாண்டில் ஓசூரை ஆண்ட கன்னட ஹொய்சாள மன்னர் ஸ்ரீராம நாதா, இந்த ஐராவதேஸ்வரர் ஆலயத்துக்கு நன் கொடைகள் கொடுத்துள்ளதாகக் கல்வெட்டுத் தகவல் கூறுகிறது.
பசுமை பொங்கும் அழகிய கிராமமான அத்திமுகம், ஓங்கி உயர்ந்த மலைகளுக்கும் காடுகளுக்கும் நடுவே அமைந்துள்ளது. தனது வாகனமான ஐராவதம் எனும் யானை மீது ஏறி இந்திரன் இங்கு வந்து வழிபட்டதால், இந்த லிங்கம் ஐராவதேஸ்வரர் என வழங்கப்படுகிறது. ‘ஹஸ்தி’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு யானை என்று அர்த்தம். யானை (ஐராவதம்) இங்கு சிவபெருமானை வழிபட்டதால், ‘ஹஸ்திமுகம்’ என்று இந்த ஊர் அழைக்கப்பட்டு இப்போது அத்திமுகம் ஆயிற்று. இந்த ஊருக்கு இந்தப் பெயரை இந்திரனே வைத்ததாகச் சொல்லப்படுகிறது! சுயம்பு லிங்கமான ஐராவதேஸ்வரரின் பின்புறம் சற்றுத் தள்ளி, நின்ற திருக்கோலத்தில் அருள்மிகு காமாட்சி அம்மன் அருள் பாலித்து வருகிறார். இந்த ஆலயத்தில் முதன் முதலாக எழுந்தருளியவர்கள் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீஐராவதேஸ்வரர். எனினும், தற்போது மூலவராக அமர்ந்திருப்பவர் அருள்மிகு அகிலாண்டவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஅழகேஸ்வரர். பிராகார வலம் வரும்போதுதான் ஸ்ரீஐராவதேஸ்வரர் சந்நிதியை தரிசிக்க முடிகிறது. ஏன் அப்படி?
பிரதான மூலவராக ஐராவதேஸ்வரர் இருந்தாலும் பிற்காலத்தில் இந்தப் பகுதியை அரசாண்ட மன்னர்கள், அகிலாண்டவல்லி அம்பாளையும் அழகேஸ்வரரையும் பிரதானப்படுத்தி ஆலயம் அமைத்திருக்கிறார்கள்.
ஆலயத்தை தரிசனம் செய்வதற்கு முன், இந்திரன் இங்கு வந்து பூஜித்த கதையைத் தெரிந்து கொள்வோமா?
தி ரேதா யுகத்தில் விருத்திராசுரன் என்கிற ஓர் அரக்கன், பூலோகத்தில் அட்டகாசம் செய்து வந் தான். இவனது கொடுமையான செயல்களினால் பூலோகத்தில் தவம் இருந்த முனிவர்கள் மற்றும் ரிஷிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ‘இவன் செயல்களை இதற்கு மேல் தாங்க முடியாது!’ என்கிற ஒரு கட்டத்தில் முனிவர்கள் ஒன்றாகத் திரண்டு, தேவர்களின் தலைவனான இந்திரனிடம் சென்று முறையிட்டனர். ‘தவம் இருந்து வரும் முனிவர்களுக்குத் தொல்லை தருகிறானா? அந்த அரக்கன் இனி உயிருடன் இருக்கவே கூடாது!’ என்று கடும் கோபத்துடன் சீறிய இந்தி ரன், தனது வாகனமான ஐராவதம் எனும் யானையின் மீதேறி பூலோகம் வந்தான்.
அரக்கனான விருத்திராசுரனுக்கும் தேவர்களின் தலைவனான இந்திரனுக் கும் கடும் போர் நிகழ்ந்தது. இதன் இறுதியில் அரக்கன் கொல்லப்பட்டான். தேவர்களும் முனிவர்களும் மகிழ்ந்தனர். அரக்கன் அழிக்கப்பட்டதால், இந்திரனுக்கும் அவனது வாகனமான ஐராவதத்துக்கும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. ‘என்ன பரிகாரம் செய்தால் இந்த தோஷம் நீங்கும்?’ என இந்திரன் குழம்பியபோது ஓர் அசரீரி எழுந்தது. ‘அகஸ்திய நதிக் கரை ஓரத்தில் (ஐராவதேஸ்வரர் ஆலயத்துக்கு அருகே இன்றும் காணப்படுகிறது அகஸ்திய நதி) ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, அதை 48 நாட்கள் வழிபட்டால் உனது தோஷமும், உனது வாகனமான ஐராவதத்தின் தோஷமும் நீங்கும். நலம் பெறுவீர்கள்!’ என்று அந்த அசரீரி குரல் சொன்னது.
இதை அடுத்து அகஸ்திய நதிக்கரை ஓரமாக ஒரு சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான் இந்திரன். தினமும் அதிகாலை நேரத்தில் அகஸ்திய நதியில் இந்திரனும் ஐராவதமும் நீராடி, சிவலிங்கத்தை வணங்கி வந்தனர். இப்படி 48 நாட்கள் வணங்கிய பின்னர் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அப்போது அவனுக்கு சிவபெருமான் காட்சி தந்து அருள் புரிந்தார். தனக்கு அருள் புரிந்த இந்த ஈஸ்வரன், நிரந்தரமாக இங்கேயே குடி கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களின் அனைத்துப் பாவங்களையும் நீக்கி மோட்சம் தந்து அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான் இந்திரன். முக்கண்ணனான அந்த பரமேஸ் வரனும் அதற்கு இசைந்து இங்கேயே குடி கொண்டு, தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இன்றும் அருள் பாலித்து வருகிறார். அந்த ஈஸ்வர மூர்த்தியே ஸ்ரீஐராவதேஸ்வரர் என தற்போது அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஐராவதேஸ்வரர் லிங்கத் திருமேனியில் சுயம்புவாகத் தோன்றியிருக்கும் யானையின் முகம், பக்தர்களைப் பரவசப்பட வைக்கிறது. லிங்கத் திருமேனியின் முன்புறம் ஐராவதத்தின் முகம் தெளிவாகத் தெரிகிறது.
இனி, ஆலய தரிசனம் செய்வோம்.
ராஜ கோபுரம் இல்லை. தரை மட்டத்தில் இருந்து சுமார் 20 அடி ஆழத்தில் இந்த ஆலயம் காணப்படுகிறது. ஸ்ரீஅழகேஸ்வரர் சந்நிதிக்கு நேராக- அதாவது ஆலயத்துக்குள் நுழையும் முகப்பில் ஒரு கருங்கல் மண்டபம். தூண்களில் பூத கணங்கள், லட்சுமி நரசிம்மர், அம்மன் உருவம் என்று சில சிற்பங்கள். பூவேலைப் பாட்டுடன் கூடிய இரண்டு தூண்கள். இந்த மண்டபத்தின் மேற்புறக் கருங்கல் தளம் லேசாகச் சரிந்து காணப்படுகிறது. எனவே, பல வருடங்களுக்கு முன்பே இந்த முகப்பு வாயிலைப் பயன்படுத்துவது நின்றுபோனது (பிரதான வாயில் பயன்படுத்தப்படாமல் போய் விட்டதால், அதற்கு எதிராகவே மளமளவென வீடுகளைக் கட்டி ஆக்கிரமித்து விட்டார்கள் உள் ளூர்க்காரர்கள்!). இதற்கு வலப் புறமாக ஒரு தற்காலிகப் பாதையை அப்போது ஏற்படுத்தினார்கள். அதுதான் இன்றும் ஆலயத்துக்குள் நுழையும் பிரதான வழியாக இருந்து வருகிறது.
உள்ளே இறங்கியதும் வன்னி மரம். தீப ஸ்தம்பம். பலிபீடம். நந்தி மண்டபம். நான்கு கால் மண்டபம். நந்தி தேவர் சுரத்தின்றிக் காணப்படுகிறார். பிரதோஷ கால பூஜைகள் இங்கு நடைபெறுவதில்லையாம். இது குறித்து ஆலய அர்ச்சகரான சிவகுமார் தீட்சிதர் நம்மிடம், ‘‘இந்தக் கிராமத்தில் விவசாயம்தான் பிரதான தொழில். பிரதோஷ காலத்தில் மாலை நேரத்தில் கோயிலுக்கு யாருமே வர மாட்டார்கள். அதனால் தான் பல வருடங்களாவே பிரதோஷ கால பூஜைகள் இங்கு நடைபெறுவதில்லை. கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது... என்றாலும், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று ஊர் சார்பாக இங்கு அபிஷேகமும் பஜனையும் நடந்து வருகிறது’’ என்றார். அர்ச்சகரான இவருக்கு அரசாங்கம் தரும் ஊதியம் எதுவும் கிடைப்பதில்லையாம்.
இடச்சுற்று முடியும் இடத்தில் ஒரு மேடையில் விநாயகர், நாகர்கள், நாககன்னி போன்றோரின் உருவங்கள். அருகிலேயே பெரிய புற்று. பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறதாம். மிகப் பெரிய பாம்பு ஒன்று இதில் வசித்து வருகிறதாம்.
இதை அடுத்து ஒரு மண்டபத்தில் விநாயகர் வீற்றிருக்கிறார். வலம் வரலாம். விமானம் இல்லை. உடனே அடுத்து ஒரு மண்டபம். நான்கு தூண்கள். முருகன் சந்நிதி. ஆறுமுகங்கள். பன்னிரண்டு கரங்கள். இடக் கால் மடக்கி வலக் காலைத் தொங்க விட்டுக் கொண்டு மயில் வாகனத்தின் மேல் அமர்ந்திருக்கிறார். மயிலின் வாயில் பாம்பு. அருகே வள்ளி, தெய்வானை. மிக அழகான விக்கிரகங்கள். பல வருடங்களாக வள்ளி மட்டும்தான் முருகனின் வலப் பக்கம் இருந்தாராம். ஏனோ தெரியவில்லை, முருகனின் இடப் பக்கம் இருக்க வேண்டிய தெய்வானை இல்லை. ‘தெய்வானை இல்லாமல் முருகன் இப்படி இருப்பது நல்லதல்ல’ என்று உணர்ந்தவர்கள், நான்கு வருடங்களுக்கு முன்தான் தெய்வானை விக்கிரகத்தைச் செய்து வள்ளி- தெய்வானை சமேதராக முருகனை வைத்திருக்கிறார்கள்.
முருகன் சந்நிதிக்கு விமானம் உண்டு. செங்கல் சுதையால் ஆன விமானம். ஏகத்துக்கும் சேதத்துக் குள்ளாகி இருக்கிறது.
இதை அடுத்து வருவது ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஸ்ரீஐராவதேஸ்வரர் சந்நிதி. சுமார் ஐந்தடி பள்ளத்தில் இந்த சந்நிதி அமைந்துள்ளது (சூரிய வெளிச்சத்தை முகம் பார்க்கும் ஒரு கண்ணாடியில் வாங்கி, அதை இந்த இறை உருவங்களின் மேல் விழ வைத்துக் காண்பிக்கிறார் அர்ச்சகர்) இந்த ஆலயத்தில் உருவான ஆதி லிங்கம் இதுதான். தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் போவதற்காக இந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி. அவனது வாகனமான ஐராவதம் யானையின் திருவுருவை நினைவுபடுத்தும் விதமாக இந்த ஐராவதேஸ்வரர் லிங்கத் திருமேனியின் முன்பக்கம் யானையின் முக அமைப்பு சுயம்புவாக உருவாகி உள்ளது. ‘‘இந்த லிங்கத் திருமேனியை தரிசித்தாலே போதும். இதுவரை நாம் செய்த பாவங்கள் அனைத்தும் பனியென விலகி விடும்!’’ என்கிறார் சிவகுமார் தீட்சிதர். இந்த சந்நிதியின் உள்ளேயே அப்பர் மற்றும் மாணிக்கவாசகரின் சிலா விக்கிரகங்கள் இருக்கின்றன. ஸ்ரீஐராவதேஸ்வரர் லிங் கத் திருமேனி முதலில் வீற்றிருக்க, அதன் பின்புறம் கம்பீரமாக நின்ற கோலத் தில் அருள் புரிகிறார் ஸ்ரீகாமாட்சி அம்பாள். விமானம் இல்லை.
இதை அடுத்து பிராகார வலத்தில் வருவது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்பிகை சந்நிதி. நந்திதேவர். தனி மண்டபம். விமானம் இல்லை. அபயம், வரதம் தாங்கிய நான்கு கரங்கள். சுமார் ஐந்தடி உயரம். சப்த மாதாக்களில் இருவர் துவாரபாலகிகளாக வீற்றிருக்கின்றனர். துவாரபாலகிகள் இல்லாததால் எங்கேயோ கிடந்த இந்த சிலா விக்கிரகங்களைக் கொண்டு வந்து இப்படி வைத்திருக்கிறார்கள்.
பிராகார வலத்தில் அடுத்து வருவது, வரிசையாக பத்துத் தூண்கள் தாங்கி நிற்கும் பெரிய மண்டபம். இதில் ஐந்து சந்நிதிகள். ஒவ்வொரு சந்நிதியிலும் ஒவ்வொரு லிங்கம். அதற்கு முன்பாக (வெளியே) ஐந்து நந்திதேவர்கள். வெவ்வேறு அளவுகளிலான லிங்கத் திருமேனிகள். ஒவ்வொன்றும் சதுரபீட ஆவுடையார் மேல் அழகா கக் காட்சி அளிக்கின்றன. இந்த மண்டபம் மிகவும் பாழடைந்து காணப்படுகிறது.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை போன்ற மூர்த்தங்கள். இவர்களில் பிரம்மா கோஷ்ட மூர்த்தியின் இடது தோள் பக்கம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தன் விரலால் சுண்டிக் காண்பித்தார் ஆலய அர்ச்சகர். ‘ணங்’கென்று வெண்கல உலோகத்தைத் தட்டினால் வரும் ஓசை போல் துல்லியமாகக் கேட்கிறது. துர்க்கையின் முன்னால் பெரிய வேல் ஒன்று காணப்படுகிறது. ஸ்ரீஅழகேஸ்வரர் சந்நிதியின் உள் கட்டுமானம் முழுக்கக் கருங்கல்லால் ஆனது.
உள் பிராகார வலம் முடிந்து இப்போது ஸ்ரீஅழகேஸ்வரருக்கு எதிரே நிற்கிறோம். கருவறை, அர்த்த மண்ட பம், மகா மண்டபம் என அமைந்துள்ளது. அழகேஸ்வரருக்கு நேர் எதிரே நந்திதேவர் காட்சி தருகிறார். நாகாபரணம் தரித்த சிவலிங்க பாணம். அல்லல்கள் போக்கி ஆனந்தத்தைத் தரும் அழகேஸ்வரர். அற்புத தரிசனம்.
நவராத்திரி, தை மாதத்தில் சூரிய வழிபாடு, கார்த்திகை தீபம், மார்கழி மாத அதிகாலை வழிபாடு, மகர சங்கராந்தி, நவராத்திரி போன்ற சந்தர்ப்பங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் துர்க்கையை வழிபட பக்தர்கள் வந்து போகின்றனர்.
தற்போது பெங்களூரில் இருந்து அவ்வப் போது இந்த ஆலயத்துக்கு வரும் அன்பர்கள் உதவி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் கொடுத்த நன்கொடையால்தான் ஸ்ரீஅழகேஸ் வரர் விமானமும் முகப்பு கோபுரமும் கட்டப் பட்டுள்ளது. ஆலயத்துக்கான பணிகள் ஏராளம் இருக்கிறது. அன்புள்ளம் கொண்டவர்களை எதிர்பார்த்து ஸ்ரீஐராவதேஸ்வரரும், ஸ்ரீஅழகேஸ்வரரும் ஒருசேரக் காத் திருக்கிறார்கள்.
கண்களை விட்டு அகலாத அற்புத வடிவம் கொண்ட ஆலய மூர்த்தங் கள்... பாவங்களைப் போக்கும் ஸ்ரீஐராவதேஸ்வரர்... இதமான தரிச னம் தரும் பஞ்சலிங்க சந்நிதிகள்... சிற்பப் பெருமையைப் பறை சாற்றும் ஹொய்சாளர்கள் காலக் கட்டமைப்பு... இன்னும் எத்தனை எத்தனையோ பெருமைகள்!
பெருமையும் பழைமையும் வாய்ந்த இந்த ஆலயத்தைத் தேடிப் போய் நம்மால் ஆன உதவிகள் செய்வது, நமக்கும் நம் சந்ததிகளுக்கும் புண்ணியம் தேடித் தரும் என்பதில் சந்தேகம் இல்லை!
|
Wednesday, 2 August 2017
அத்திமுகம் ஐராவதேஸ்வரர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment