அடுத்த நாள் அதிகாலை... மணி சுமார் மூன்று இருக்கும். பொன்னேரி செல்வதற்காக பெரியவாள் தயாராக இருந்தார். பல்லக்குத் தூக்கும் ஊழியர்களும் தயாராக இருந்தனர். மடத்துச் சிப்பந்திகளும் சிஷ்யகோடிகளும் உரத்த குரலில் நாம கோஷம் எழுப்ப, யாத்திரை புறப்பட்டது. விடியாத அந்த வேளையில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்துடன் பிரதான சாலையில் யாத்திரை போய்க் கொண்டிருந்தது. பிரதான சாலையில் பிரிந்து செல்லும் ஒரு கிளைச் சாலையைக் கடக்கும்போது, ‘‘இங்கு எங்கோ ஓரிடத்தில் ரிஷி ஒருவர் பிரதிஷ்டை செய்த சிவத்தலம் இருக்கிறது. அங்கே தரிசித்தால் ஆத்ம திருப்தி கிடைக்கும். கங்கை நதி பொங்கிய கிணறு ஒன்றும் அந்த ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது. அங்கு ஸ்நானம் செய்வது கங்கையில் ஸ்நானம் செய்வதற்குச் சமம். நான் அங்கு செல்ல வேண்டும்!’’ என்று சிப்பந்திகளிடம் சொன்னார்.
பெரியவாள் குறிப்பிட்ட அந்தத் திருத்தலம், அரியதுறை என்பதை அறிந்த மடத்துச் சிப்பந்திகள், ‘வெகுதூரம் உள்ளே செல்ல வேண்டுமே... இப்போது அங்கு சென்றால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்த மற்ற நிகழ்ச்சிகள் தாமதம் ஆகுமே?’ என்கிற கவலையில், ‘‘அப்படி ஒரு திருத்தலம் இந்தப் பக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. திட்டமிட்டபடி நமது நிகழ்ச்சிகளைத் தொடருவோம் பெரியவா!’’ என்று சொன்னார்கள். இதன் பின் பல்லக்கு தனது பயணத்தைப் பழையபடி தொடர்ந்தது. சில தப்படிகள்தான் போயிருக்கும். திடீரென பல்லக்கை நிறுத்தச் சொன்னார் மகா பெரியவாள். பல்லக்குத் தூக்கிகள், ‘என்னவோ ஏதோ’வென்று பல்லக்கை இறக்கித் தரையில் வைத்தனர். அவ்வளவுதான்... அடுத்த கணம் கீழே இறங்கிய மகா பெரியவாள், பல்லக்கு வந்த வழியில் திரும்பி நடந்தார். அவரது வேகமான நடைக்கு ஈடு கொடுக்க முடியாத மடத்துச் சிப்பந்திகள், ஓட்டமும் நடையுமாக அவரைத் தொடர்ந்தனர். ‘‘மன்னிக்கணும் பெரியவா... இந்த க்ஷேத்திரத்துக்குப் போறதுங்கறது நம்ம திட்டத்துல இல்லே... இங்கே போனா மத்ததெல்லாம் தாமதமாயிடும். அதனாலதான் அப்படிச் சொன்னோம்!’’ என்று சொல்லி, மன்னிப்புக் கேட்டனர் அந்தச் சிப்பந்திகள்.
கங்கை பொங்கியதாகச் சொல்லப்படும் கிணற்றில் நீராடினார். ரோம மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த வரமூர்த்தீஸ்வரரை வழிபட்டு ஆனந்தப்பட்டார். இங்கு உறையும் அம்பிகையாம் மரகதவல்லியையும் தரிசித்து இன்புற்றார்.
இனி, அரியதுறைக்குச் செல்வோம். மகரிஷிகளில் ஒருவராகவும் சித்தர்களில் ஒருவராகவும் விளங்கியவர் ரோம மகரிஷி. பதினெண் சித்தர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படுபவர் இவர். பிரம்மா வின் பேரன் என்று பல நூல்களில் வர்ணிக்கப்படுபவர். காகபுசுண்டர் என்ற மகரிஷிக்கும் வகுளாதேவி என்பவருக்கும் பிறந்தவர்.
வரமூர்த்தீஸ்வரரை ரோம மகரிஷி இங்கு பிரதிஷ்டை செய்தது ஏன்?
நான்முகனாகிய பிரம்மா முன்னொரு காலத்தில் பெரிய யாகம் ஒன்றைச் செய்யத் தீர்மானித்து பூலோகம் வந்தார். அகில உலக நாயகனாம் சிவப் பரம்பொருளை வேண்டி நடத்தப்படும் இந்த யாகத்துக்கான இடத்தைத் தேடி அலைந்தார். இறுதியில், அவர் தேர்ந்தெடுத்தது காளகூடாசன க்ஷேத்திரம் (சயன கோலத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் சுருட்டப்பள்ளி திருத்தலம்). யாகத்துக்கு வேண்டிய அக்னியை உருவாக்குவதற்காக தீக்கடைக் கோலாகிய அரணியைக் கொண்டு கடைந்தனர்.
அப்போது அதிலிருந்து கங்கை நதி பெருக்கெடுத்து ஓடியது. அந்த நதியே அரணி நதி என வழங்கப்பட்டு, தற்போது ஆரணி நதி ஆகி இருக்கிறது (இந்த ஆரணி நதிக் கரையில் தான் வரமூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது). இந்த யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரோம மகரிஷியும் இன்னும் சில முனிவர்களும் இங்கு வந்தனர்.
கடும் தவம் இருந்தார். வருடத்துக்கு ஒரு முறை மூச்சு விட்டார். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே உணவு உண்டார். அந்த அளவுக்குக் கடும் தவம். இப்படி நூறு வருடங்கள் ஓடியும் சிவபெருமான் அவருக்குக் காட்சி தரவில்லை. இதனால், தனது தவத்தை மேலும் கடுமை ஆக்கினார். வருடத்துக்கு ஒரு முறை விடும் மூச்சையும், உட்கொள்ளும் உணவையும் நிறுத்தினார். விளைவு- அவர் தவத்தால் விளைந்த அக்னியானது அவரிடம் இருந்து வெளிப்பட்டது. கபாலத்தைக் கீறிக் கொண்டு மேலெழும்பிய அக்னியானது தேவலோகத்தில் இருந்த தேவர்களைக் கொளுத்த ஆரம்பித்தது. துடித்துப் போன தேவர்கள் அனைவரும் பிரம்மாவி டம் சென்று முறையிட்டனர். ரோம மகரிஷியின் தவத்தைக் கட்டுப் படுத்தும் வழி அறிந்த பிரம்மதேவன் கயிலாய மலை சென்றான். அங்கு உறையும் முக்கண்ணனாம் சிவ பெருமானிடம் அனைத்தையும் விளக்கிக் கூறினார். ரோம மகரிஷிக்குக் காட்சி தர வேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்ந்த சிவபெருமான், பார்வதிதேவியுடன் இடப வாகனத்தில் எழுந்தருளி காட்சி தந்தார்.
‘‘வரமூர்த்தீஸ்வரர் ஆலயம் கலிகாலத்தில் பெருமை கொண்டதாக விளங்கும். இங்கு வந்து வணங்கும் அடியார்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைக்கும்!’’ என பிரம்மதேவர் திருவாக்கு மலர்ந்துள்ளார்.
அதன் பின் ரோம மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமே- வரமூர்த்தீஸ்வரர். பொதுவாக, லிங்க வகைகள் ஏழு என்பார்கள். அவையாவன: சுயாம்புவம் (சுயமாகத் தோன்றுபவை), தேவிகம் (அம்பிகையால் பூஜிக்கப்பட்டவை), திவ்யம் (தேவர்களால் வழிபடப்பட்டவை), மானுஷம் (மனிதர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டவை), ராட்சஸம் (அரக்கர்களால் வணங்கப்பட்டவை), ஆர்ஷம் (மகரிஷி மற்றும் சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை), பாணம் (பாணாசுரனால் வழிபடப்பட்டவை). இவற்றுள், ரோம மகரிஷியால் அரியதுறையில் அமைந்துள்ள வரமூர்த்தீஸ்வரர், ஆர்ஷ லிங்கமாகும். சதுர பீட ஆவுடையாரின் மேல் பாணம் அமைந்துள்ளது. வரமூர்த்தீஸ்வரரின் மகிமை பற்றி கூர்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமாயண காலத்தில் இருந்தே இந்தத் தலம் சிறப்புடன் விளங்குகிறது. ராமரும் சீதையும் தங்கள் வனவாசப் பயணத்தின் பொருட்டு பொதியமலை செல்லும்போது அத்திரி- அனுசூயா தம்பதியின் ஆசிரமத்தில் தங்கிச் சென்றதாக ராமாயணம் சொல்கிறது. போற்றத் தகுந்த இந்த ரிஷி தம்பதியின் ஐந்தாவது மகனாகப் பிறந்தவர் முகுந்தன் (ஏனைய நான்கு புதல்வர்கள்- துர்வாசர், தத்தாத்ரேயர், பிரமகீர்த்தி, சந்திரன்). தன் பெற்றோரின் சமாதிக்குப் பிறகு, தவத்துக்கான சந்தர்ப்பமும் குருவும் அமையாததால் ஒவ்வொரு க்ஷேத்திரமாக அலைந்து கொண்டிருந்தார் முகுந்தன். அப்போதுதான் வரமூர்த்தி க்ஷேத்திரம் பற்றிக் கேள்விப்பட்டு இங்கு வந்தார். ரோம மகரிஷியின் சிவத் தொண்டை நேரில் காணும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற முகுந்தன், அவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். தன்னிடம் வந்து அடைக்கலமான முகுந்தனிடம், இந்தத் தலத்தின் பெருமைகளை விரிவாக எடுத்துச் சொன்னார் ரோம மகரிஷி.
மறு நாள் அதிகாலை... அரணி நதி என்று சொல்லப்படும் பிரம்மாரண்ய நதியில் நீராட தன் குருநாதர் ரோம மகரிஷியுடன் சென்றார் முகுந்தன். உடன் நீராட வந்த பிற முனிவர்கள் கரையில் இருந்தனர். அப்போது குருநாதர் ரோமரை வணங்கி, அரணி நதியில் இறங்கி மூழ்கி எழுந்தார் முகுந்தன். என்னே அதிசயம்! காசி நகரில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீகால பைரவர் அரியதுறை நதிக் கரையில் முகுந்தனுக்குக் காட்சி அளித்தார். ரோமரும் உடன் இருந்த முனிவர்களும் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ‘நமசிவாய’ கோஷம் எழுப்பினர். அப்போது பைரவருக்குப் பின்னால் இருந்து வெண்மை நிறத்தில் நுரை பொங்கும் நீரானது பெருத்த ஓசையுடன் பீரிட்டுக் கிளம்பி, முகுந்தனை நீராட்டி அரணி நதியில் கலந்தது. முகுந்தனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு கங்கை நதி தோன்றிய இந்தத் துறை மிகவும் அரிதானது என்கிற பொருளில் இந்தத் தலத்துக்கு ‘அரியதுறை’ என்ற பெயரை ரோம மகரிஷியும் உடன் இருந்த முனிவர்களும் சூட்டினர். அதுவரை வரமூர்த்தி க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்தத் தலம், அதன் பின் அரியதுறை ஆன கதை இதுதான்!
இனி, ஆலய தரிசனம் செய்வோம்.
முதலில் குளுமையாக நம்மை வரவேற்பது ஆலயத் திருக்குளம். பசுமை பொங்க, நீர் நிரம்பிக் காட்சி தருகிறது. ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன் இடப் பக்கம் ஒரு சிறு பாதை பிரிந்து செல்கிறது. இதில் நடந்தால், ரோம மகரிஷியின் சிலா விக்கிரகம் ஓர் அரச மரத்தடியில் நமக்குக் காட்சி தருகிறது. சென்னை கொளத்தூரில் வசிக்கும் ராஜா என்கிற அன்பர் சில வருடங்களுக்கு முன் இந்த ரோம மகரிஷியின் சிலையை பிரதிஷ்டை செய்தார். ராஜா நம்மிடம், ‘‘ஒவ்வொரு வருடமும் ரோம மகரிஷியின் திருநட்சத்திரமான ஆவணி சுவாதியில் இங்கு சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது’’ என்றார்.
முதலில், விநாயகர். அதன்பின், ஸ்ரீபாலசுப்ரமண்யர் சந்நிதி. சண்டிகேஸ்வரர். பிராகார வலம் வரும்போதே வரமூர்த்தீஸ்வரரின் கோஷ்ட மூர்த்திகளையும் தரிசிக்கலாம். கணபதி, முயலகனை மிதித்துக் கொண்டு சனகாதி முனிவர்களுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காண இயலா ஸ்ரீஅண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை போன்றோரின் திருவுருவங்களை தரிசிக்கிறோம்.
பழுதுபட்ட பழைய கொடிமரம். பலிபீடம். நான்கு கால் மண்டபத்தில் வீற்றிருக்கும் நந்திதேவர்... இவற்றைத் தாண்டி கோயிலினுள் நுழையும்போது வலப் பக்கம் பைரவர்கள் தரிசனம். முகுந்த ரிஷிக்குக் காட்சி தந்த மணல் வடிவிலான பைரவர் மற்றும் சிலா விக்கிரக பைரவர் ஒருவர்.
உள்ளே நுழைகிறோம். இது பெரிய அளவிலான ஒரு மண்டபம். ஈஸ்வரர், அம்பாள் மூலவர் சந்நிதிகள் இங்கு அமைந்துள்ளன. சிவகாமி அம்மையுடன் கூடிய நடராஜரும் இங்கு வீற்றிருக்கிறார். பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்ற ரிஷிகளுடன் மாணிக்கவாசகரும் காணப்படுகிறார். சூரியன், சந்திரன், ஸ்ரீராமர், நாகர்கள் என இங்கு சிலா விக்கிரகங்கள். இந்த மண்டபத்துத் தூண்களில் ஏராளமான சிற்பங்கள்.
முதலில், அம்பிகை தரிசனம். ஸ்ரீமரகதவல்லி. பச்சைக் கல் திருமேனி. சுமார் நான்கடி உயரத்தில் தெற்குத் திசை நோக்கிப் புன்னகையுடன் காணப்படும் அழகான கோலம். அங்குசம் மற்றும் பாசத்தை மேற் கரங்களில் கொண்டு கீழ்க் கரங்களில் அபயம்- வரதத்துடன் விளங்குகிறாள் இந்த அம்மன். மிகுந்த நேர்த்தியுடன் பச்சைக் கல்லில் வடிக்கப்பட்ட இந்த அம்மன் உருவம், காண்பவர் கண்களைக் கவரும். இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த அம்மன் உருவம், ஆதியில்- அதாவது ஆலயம் இங்கு அமைந்தபோது இடம் பெறவில்லை. வரமூர்த்தீஸ்வரர் மட்டும்தான் கோலோச்சிக் கொண்டிருந்தார். பிற்பாடு ஒரு கட்டத்தில் இங்கு வந்து அமர்ந்தவள்தான் ஸ்ரீமரகத வல்லி. அம்பிகை இங்கு வந்த கதை என்ன?
இதை ஏற்று அரசனும் அரசியும் வரமூர்த்தி க்ஷேத்திரம் புறப்பட்டனர். அங்கு தவம் இருக்கும் ரோம மகரிஷியைக் கண்டு விழுந்து வணங்கி அவர் பாதம் பற்றி தங்கள் குறை கூறிக் கண்ணீர் விட்டனர். மகரிஷியும் தியானம் செய்து அரசனை நோக்கி, ‘உனக்கு ஒரு மகள் சீக்கிரத்தில் தோன்றுவாள்’ என்று கூறி ஆசீர்வதித்தார்.
அரசனும் அரசியும் அந்தப் பெண் குழந்தையை எடுத்து உச்சி மோந்து தங்களுடன் அழைத்துச் சென்றனர். மரகதக் கொடி போல் அவள் விளங்கிய தால் அவளுக்கு மரகதவல்லி என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர். சித்திரசேனனுக்குப் பெண் குழந்தை என்றால் கொள்ளைப் பிரியம். எனவே, அவள் மேல் பாசத்தைக் கொட்டி வளர்த்தான்.
உரிய வயது வந்ததும் மரகதவல்லிக்கு சுயம்வரம் நடத்தினான் மன்னன். சுயம்வர நாளன்று பல தேசத்து மன்னர்களும் வந்திருந்தனர். மரகதவல்லியும் மணமாலையைக் கையில் எடுத்துக் கொண்டு மண்டபத்துக்குள் நுழைந்து அன்னமென நடந்து வந்தாள். உடன் வந்து கொண்டிருந்த அவளின் தோழி ஒருத்தி ஒவ்வொரு நாட்டு மன்னர்களின் பெருமைகளையும் திறமைகளையும் எடுத்துச் சொல்லி வந்து கொண்டிருந்தாள். ஆனால், திடீரென மரகதவல்லியின் விழிகள் அரண்மனை வாசலை நோக்க... அங்கே அழகிய இளம் வாலிபன் ஒருவன் தேரில் வந்து கம்பீரமாக இறங்கினான். எவ்விதத் தயக்கமும் இன்றி சுயம்வர அரங்கத்துக்குள் நுழைந்து மரகதவல்லியின் கரத்தைப் பற்ற... மரகதவல்லியும் அந்த இளைஞனின் அழகில் மயங்கி அவனுக்கு மாலையிட்டாள். அவ்வளவுதான்! அடுத்த கணமே அந்த அழகிய வாலிபன், மரகத வல்லியுடன் தேரில் ஏறிப் பறந்தான்.
இந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் அதிர்ச்சி ஆனார்கள். பின் ஒருவாறு சுயநினைவுக்கு வந்து, தேரைத் துரத்தினர். அரசனும் அரசியும் அமைச்சர்களும் இளவரசியைக் கடத்தியவன் யார் என்று புரியாமல் முதலில் தவித்துப் பின் அவர்களும் தேரைத் தொடர்ந்தனர். எவரும் நெருங்கா வண்ணம் அதி விரைவாக வந்த அந்தத் தேர் வரமூர்த்தி க்ஷேத்திரம் வந்து ரோம மகரிஷியின் பர்ணசாலைக்குள் நுழைந்தது. அதைத் துரத்தி வந்தவர்களை நந்தியம்பெருமான் அதிகார நந்தியாக மாறி பிரம்பால் அடித்துத் துரத்தினார். தேரைத் தேடி வந்த அரசனும் அரசியும் அந்தக் கோயிலுக்குள் நுழைந்தபோது அவர்களுக்கு மகேஸ்வரனும் உமாதேவியாரும் திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்து அருள் புரிந்தனர். சித்திரசேனனுக்கு அப்போதுதான் இது நாள் வரை தனக்கு மகளாக வளர்ந்தது உமையம்மையான பார்வதிதேவியே எனப் புரிந்தது. இது நாள் வரை தன் மகளாகத் தோன்றி, வாழ்ந்த மரகதவல்லிக்கு சித்திரசேனன் ஒரு சந்நிதியை ஆலயத்துக்குள் அமைத்து மகிழ்ந்தான்.
அம்மையின் தரிசனம் முடிந்து இடப் பக்கம் திரும்பி அப்பனை தரிசிக்கப் போகிறோம். துவாரபாலகரைக் கடந்து அர்த்த மண்டபம். கருவறை. மகா மண்டபத்தில் பலிபீடம், நந்தி. சதுர பீட ஆவுடையார். ரொம்பப் பெரிதாக வும் இல்லை; சிறிதாகவும் இல்லை. ரோம மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத் திருமேனி, பிரம்மாவின் கூற்றுப்படி கலியுகத்தில் நம்மையெல்லாம் காக்க கிழக்கு நோக்கி அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது. இதே மண்டபத்தில் ஆலய உற்சவர் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அம்மன் சந்நிதிக்கு எதிரே மேலே விதானத்தில் நாகம், பல்லி போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவற்றை தரிசித்து அம்மனையும் ஒரு சேர தரிசித்தால் தோஷங்கள் எதுவும் நம்மை அண்டாது என்று கூறப்படுகிறது. எனவேதான், இந்தக் கோயிலில் நவக்கிரக சந்நிதி இல்லை என்கிறார்கள்.
ஆலய அர்ச்சகரான சண்முக குருக்கள் நம்மிடம் சொன்னார்: ‘‘கடைசியாக 1965-ஆம் வருடம் இந்த வரமூர்த்தீஸ்வரர் ஆலயத்துக்குக் கும்பாபிஷேகம் நடை பெற்றது. நாற்பது வருடங்கள் ஓடிப் போய்விட்டன. இப்போது ஊர் மக்கள் ஒத்துழைப்புடனும் ஆன்மிக அன்பர்களின் உதவியாலும் தை மாதம் கும்பாபிஷேகம் நடத்தலாம் என்று இருக்கிறோம். அந்த வரமூர்த்தீஸ்வரர்தான் அருள வேண்டும்!’’
பிரம்மோற்சவம், தெப்போற்சவம், தேரோட்டம் என்று முன்னொரு காலத்தில் கோயில் கோலாகலமாக இருந்ததாம். சமீப காலத்தில்தான் எல்லாமே ஒன்றன்பின் ஒன்றாகத் தடைப்பட்டிருக்கின்றன.
சித்த மரபைச் சேர்ந்த ரோம மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்ததுமான இந்த வரமூர்த்தீஸ்வரர் க்ஷேத்திரத்தை தரிசித்து அருள் பெறுவது நமக்கெல்லாம் பெரும் பேறு என்றுதான் சொல்ல வேண்டும்!
|
Wednesday, 2 August 2017
ரோம மகரிஷி தவமிருந்த தலம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment