Saturday, 5 August 2017

காசிக்கு நிகரான திருப்பட்டூர்


'என் சிவனே... என் செய்வேன் நான்!' என்று எண்ணியபடி கவலை படர்ந்த முகத்துடன், அந்த மலையில் அமர்ந்திருந்தார் வியாக்ரபாதர். 'நித்தியப்படி பூஜையைத் தொடர்ந்து செய்கிறேனே... இன்றைக்கு என்ன திடீரெனத் தடங்கல்?' என்று அருகில் வில்வ இலைகளைப் பறித்து வைத்துக் கொண்டு, சோகத்தில் ஆழ்ந்திருந்தார்.
முனிவர் அல்லவா வியாக்ரபாதர்? சிவபெருமானையே சிந்தையில் நிறுத்தி, சிவநாமம் சொல்லி, பூஜை செய்பவராயிற்றே? 'மரத்தில் ஏறி வில்வத்தைப் பறிக்க வசதியாக, புலிகளின் கால்களைப் போல் என் கால்கள் மாறவேண்டும். விறுவிறுவென மரமேறி, வில்வங்கள் பறித்து, உன்னை குளிரச் செய்ய வேண்டும்' என்று கேட்க... அப்படி வரம் வாங்கியவராயிற்றே? குறிப்பாக, முனிவர்களுக்கு ஏது சோகமும் கவலையும்?
சிவனாரின் லிங்கத் திருமேனிக்கு வில்வம் சார்த்த வேண்டும்; முன்னதாக... லிங்கத்துக்கு திருச்சின்னங்கள் இடவேண்டும்; அதற்கும் முன்பு லிங்கத்துக்கு வஸ்திரம் சார்த்தவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சிவனாரை நீராட்ட வேண்டும்; நீரால் அபிஷேகிக்க வேண்டும். ஆனால், திருப்பிடவூர் வனத்தில் நீர்நிலைகள் யாவும் வற்றிவிட்டன. நேற்றைக்குக் கூட கொஞ்சமே கொஞ்சம் இருந்த தண்ணீரைக் கொண்டு அபிஷேகம் செய்து பூஜைகள் செய்தாயிற்று. விடிந்ததும் பார்த்தால், மொத்த நீரையும் பூமி உறிஞ்சி விட்டதே! இந்தக் கவலையில்தான் அமர்ந்திருந்தார் வியாக்ரபாதர்.
மெள்ள சிவலிங்கத்தை ஏறிட்டார். 'இதுவும் உன் திருவிளையாடலா? என்னை சோதிக்கிறாயா?' என்று உள்ளுக்குள் கேட்டார். குனிந்து பூமியைப் பார்த்தார்; வானத்தை ஏறிட்டார். மெல்லிய சந்தோஷம் பரவியது. அங்கே... தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு இந்திரனின் வாகனமான ஐராவதம் எனும் யானை பறந்தோடி வந்து கொண்டிருந்தது. ஐராவதத்தை அழைத்தார் வியாக்ரபாதர். மெள்ள தரையிறங்கியது ஐராவதம். ''என் சிவனுக்கு நித்தியப்படி பூஜை செய்ய வேண்டும். கையில் வைத்திருக்கும் தீர்த்தத்தை கொஞ்சமேனும் கொடேன்'' என்று கெஞ்சினார். ஆனால் ஐராவதம், ''நானும்தான் என் சிவனுக்கு நித்தியப்படி பூஜை செய்ய வேண்டும். இந்தத் தீர்த்தம், ஜம்புகேஸ்வரருக்கு!'' என்று தீர்த்தம் தரமறுத்த ஐராவதம், விருட்டெனப் பறந்தது. இதில் ஆவேசம் அடைந்த வியாக்ரபாதர், தனது புலிக்கால்களால் அப்படியே பாறையைப் பிடுங்கி வீசினார். அந்த இடமே பள்ளமானது. அங்கிருந்து மெள்ள ஊற்றெடுத்தது கங்கை நீர். ஆம்... வியாக்ரபாத முனிவருக்காக, கங்கா தீர்த்தத்தையே அங்கே உண்டு பண்ணினார் சிவனார்! அடுத்து, பள்ளம் முழுவதும், கங்கையால் நிரம்பியது. ஆனந்தத்தில் கூத்தாடினார்!
முனிவரின் பக்தியை ஐராவதமும் இந்த அகிலமும் உணரவேண்டும் அல்லவா?
அங்கே... தீர்த்தத்துடன் வந்த ஐராவதத்திடம், ''என்ன... தாமதமாக வந்திருக்கிறாய்?'' என்று ஜம்புகேஸ்வரர் கேட்க... வழியில் வியாக்ரபாதர் மறித்து, அபிஷேகத்துக்கு தண்ணீர் கேட்ட விவரத்தைச் சொன்னது ஐராவதம். பிறகு ஜம்புகேஸ்வரரின் லிங்கத் திருமேனியை நீராட்ட முனைந்தது. 'நில்... உடனே அவரிடம் இந்த நீரை வழங்கிவிட்டு வா!' என்று இறைவன் உத்தரவிட்டார். ஆடிப்போன ஐராவதம், திருப்பிடவூருக்கு பறந்து வந்தது. முனிவரின் பெருமையை உணர்ந்து சிலிர்த்தது. ''மன்னியுங்கள்! இந்த சிவலிங்கத்துக்கு நானே அபிஷேகிக்கிறேன்'' என்றபடி, லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வணங்கியது.
இதையடுத்து வியாக்ரபாதரின் நித்திய பூஜைக்காக, வற்றாமல், வறண்டு போகாமல் அப்படியே இருந்தது கங்கா தீர்த்தம். 'புலிப்பாய்ச்சி தீர்த்தம்' எனப்படும் தீர்த்தக் குளத்தை இன்றைக்கும் காணலாம். ஐராவதம் எனும் யானை, ஜம்புகேஸ்வரருக்காக தீர்த்தம் கொண்டு சென்ற தலம் திருச்சி திருவானைக்கா.
சரி... புலிப்பாய்ச்சி தீர்த்தம் கொண்ட திருத்தலம்?
அந்தக்காலத்தில் திருப்பிடவூர், திருப்படையூர் எனப்பட்டு, தற்போது திருப்பட்டூர் என்று அழைக்கப்படும் தலத்தில் உள்ளது ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயம். தன் பக்தனுக்காக கங்கையையே இங்கே கொண்டு வந்த இறைவன் என்பதால் ஸ்வாமிக்கு காசிவிஸ்வநாதர் என்று திருநாமம்; அம்பாள்- ஸ்ரீவிசாலாட்சி.
தெற்கு நோக்கிய மூன்றடுக்கு கோபுரம்; உள்ளே நுழைந்ததும் வியாக்ரபாதரின் திருச்சமாதி அமைந்துள்ளது (வியாக்ர பாதருக்கு பல இடங்களில் சமாதி இருப்ப தாகச் சொல்வர்). சமாதியின் மேல், துளசி மாடம் அமைக்கப்பட்டு, அதில் ஒருபக்கம் வியாக்ரபாதரின் உருவமும் மற்றொரு பக்கத்தில் பதஞ்சலி முனிவரின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு, கிழக்குப் பார்த்த வாசலும் உண்டு. இந்த வாசலில்தான் அமைந்துள்ளது புலிப்பாய்ச்சி தீர்த்தக்குளம். வற்றாத கங்கையாக... பித்ரு தோஷம் முதலான சகல தோஷங்களையும் தீர்க்கும் தீர்த்தமாக திகழ்கிறது என்று சிலிர்க்கின்றனர் பக்தர்கள். கிழக்கு வாசல் வழியே நுழைய, அழகிய நந்தி, பலிபீடம். உள்ளே, கிழக்கு நோக்கி அருள்கிறார் ஸ்ரீகாசிவிஸ்வநாதர். தெற்குப் பார்த்தபடி அருளும் பொருளும் அள்ளித் தருகிறாள் ஸ்ரீவிசாலாட்சி. ஆலயத்தின் இன்னொரு சிறப்பு... ஸ்வாமி சந்நிதியில் இருந்தபடியே அம்பாளையும் தரிசிக்கலாம்!
வியாக்ரபாதருக்காக, கங்கையையே தீர்த்தமாகக் கொண்ட திருத்தலம் அல்லவா? எனவே திருப்பட்டூர் ஆலயம் காசிக்கு நிகரான தலம் என்பர். இன்னொரு கதையும் சொல்கின்றனர்.
பக்தர் ஒருவர், தன்னுடைய தந்தையார் இறந்து விட... அவருடைய அஸ்தியை துணியில் கட்டி எடுத்துக் கொண்டு, காசி நோக்கி பயணப்பட்டாராம். வழியில், இந்தப் பகுதியை நெருங்கும் போது, இருட்டி விடவே, அங்கேயே தங்கினார். விடிந்ததும் பார்த்தால், தந்தையின் அஸ்தியில் இருந்து மல்லிகையின் மணம் வீசியதாம்! குழம்பித் தவித்தார் அன்பர். அப்போது, 'இதுவும் காசிக்கு நிகரான தலம்தான்; இங்கேயுள்ள தீர்த்தமும் கங்கைதான்! எனவே இந்தத் தீர்த்தத்திலேயே அஸ்தியைக் கரைத்துவிடு' என அசரீரி கேட்டதாம். பிறகு இங்கேயே அஸ்தி கரைத்துச் சென்றார் என்கிறது ஸ்தல வரலாறு. இதனால் திருப்பட்டூர், காசிக்கு நிகரான தலமாக திகழ்கிறது என்றும் சொல்வர்.
திருப்பட்டூர் வந்து, புலிப்பாய்ச்சி தீர்த்தக் குளத்தில் நீராடி அல்லது தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு, வியாக்ரபாதரின் சமாதிக்கு அருகில் விளக்கேற்றி, கண் மூடி பிரார்த்தித்து வழிபடுங்கள். பிறகு, ஸ்ரீகாசி விஸ்வநாதரையும் ஸ்ரீவிசாலாட்சி அம்மையையும் வணங்கி விட்டு, அப்படியே அருகில் உள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று, ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை வணங்க வேண்டும்.
ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் விசேஷம்... இங்குதான் தனிச்சந்நிதியில் இருந்தபடி பக்தர்களின் தலையெழுத்தை நல்லவிதமாக மாற்றி அருளுகிறார் ஸ்ரீபிரம்மா  இன்னொன்று... வியாக்ரபாதருடன் சிவ பூஜை செய்து ஈசனின் திருவருளைப் பெற்ற பதஞ்சலி முனிவரின் சமாதி, இந்தக் கோயிலின் உள்ளே அமைந்துள்ளது.
கல்வி- ஞானங்களில் சிறக்கவும், பித்ரு தோஷம் நீங்கவும் அனைத்து நலனும் கிடைக்கவும் திருப்பட்டூர் தலத்துக்கு வந்து, ஸ்ரீவியாக்ரபாதர், ஸ்ரீபதஞ்சலி முனிவர் ஆகிய முனிவர் பெருமக்களையும் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் மற்றும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரையும் ஸ்ரீபிரம்மாவையும் வணங்கி வழிபடுங்கள்; வளம் பெறுவீர்கள்!
வியாக்ரபாதருக்கு விளக்கேற்றுங்கள்!
ங்கே, புலிப்பாய்ச்சி தீர்த்தத்தில் நீராடி விட்டு அல்லது சிரசில் தண்ணீர் தெளித்துக் கொண்டு, வியாக்ரபாதரின் சமாதிக்கு அருகில் (மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது... என்ற எண்ணிக்கையில்) விளக்கேற்றி வழிபட... பித்ரு தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கும்; ஐஸ்வரியங்கள் பெருகும். கோயில் வாசலிலேயெ பூஜைப் பொருட்கள் கிடைக்கின்றன.
சிறப்பு வழிபாடு!
வியாக்ரபாதருக்கு திங்கள், வியாழன் ஆகிய நாட்களிலும் பௌர்ணமி தோறும் மாலை 5 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் வியாழக் கிழமைகளில் ஸ்ரீபிரம்மாவுக்கு காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். எனவே வியாழக்கிழமை அன்று தரிசிக்க வரும் பக்தர்கள், வழக்கம்போல் வியாக்ரபாதர் சமாதி கொண்டிருக்கும் காசிவிஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று தரிசித்து விட்டு, பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு வந்து பிரம்மாவுக்கு நடைபெறும் அபிஷேக- ஆராதனையில் பங்கேற்பது போல், முன்கூட்டி வருவது நலம்!
நவக்கிரகம் இல்லை!
லயத்தில் நவக்கிரகங்களுக்கு சந்நிதி இல்லை. சூரியன் தன் கிரணங்களால் வழிபடும் சிவத் தலங்களில் இதுவும் ஒன்று. அதுவும் எப்படி?
சூரியக் கதிர்கள் இங்கேயுள்ள புலிப்பாய்ச்சி தீர்த்த நீரில் பட்டு, அந்த வெளிச்சமானது இறைவனின் மீது விழுமாம்! எனவே ஸ்ரீகாசிவிஸ்வநாதரை வழிபட... கிரக தோஷங்கள் விலகும். தவிர, ஒரே இடத்தில் நின்றபடி ஸ்வாமி மற்றும் அம்பாளை வணங்கலாம். ஆகவே களத்திர தோஷம் விலகி திருமணம் விரைவில் நடந்தேறும் என்கின்றனர்.
எங்கே இருக்கிறது?
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி
சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் உண்டு; ஆனாலும் குறைவுதான்! தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் எனும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பட்டூருக்கு ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோவில் செல்லலாம்.
கோயில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 7 முதல் 12 மணி வரை. 
மாலை 4 முதல் 6 மணி வரை.

No comments:

Post a Comment