Saturday, 5 August 2017

காரமடை - ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர்


கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில், சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது காரமடை. இந்த ஊரின் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்.
சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது மதுரை மீனாட்சியம்மன் ஆலயம். அந்த அளவுக்குப் பெரியது இல்லை என்றாலும்... எட்டு யானைகள் விமானத்தை தாங்கி நிற்பது போன்ற சிற்ப வேலைப்பாடுகளும், அழகிய விமானமும், கருவறை மண்டபச் சுவர்களில் உள்ள ரிஷபாரூடர், விநாயகர், யாளிகள் போன்ற சிற்பங்களும் மதுரை கோயிலின் சிற்ப அழகுக்கு இணையானவையாக திகழ்கின்றன. அன்பர்கள் பலரும், இந்தத் தலத்தை கொங்கு நாட்டு மதுரை என்றே போற்றுகின்றனர். இங்கே... செந்நிற மேனியராக, நீள்வட்ட வடிவ லிங்கபாணத்துடன் அபூர்வ தரிசனம் தருகிறார் ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீலோகநாயகி.
கன்னட தேசத்தை ஆட்சி செய்து வந்தவர் வீரநஞ்சராயர். தெய்வ பக்தியும், சிற்பக் கலையில் ஆர்வமும் கொண்ட இந்த மன்னர்... சுமார் 1,700 ஆண்டுகளுக்குமுன் வனமாக திகழ்ந்த இந்தப் பகுதியில், சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டாராம்.
காலங்கள் ஓடின. மதுரையை அரசாண்ட திருமலை நாயக்கர், தன் முதுகில் 'ராஜ பிளவை' எனும் கட்டியால் அவதிப்பட்டார். மூலிகை வைத்தியம் செய்து கொள்வதற்காக கொங்கு தேச வனப்பகுதிக்கு வந்தார். அதேநேரம், இந்தப் பகுதியில் ஸ்ரீரங்கநாதர் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த இடத்துக்கு வந்த மன்னர், திருப்பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, மண்ணில் இருந்து சிவலிங்கம் முதலான விக்கிரகங்கள் கிடைத்தன. அவை, மன்னர் வீரநஞ்சராயரால் ஸ்தாபிக்கப்பட்டவை என்பதை அறிந்த திருமலை நாயக்கர், சிலைகளை பிரதிஷ்டை செய்து புதிய ஆலயம் ஒன்றை எழுப்பியதாகச் சொல்கிறது தல புராணம். இந்த ஆலயத்துக்கு வந்து, ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரரை வழிபட்டால், நோய்கள் குணமாகும்; சகல சௌபாக்கியங்களும் பெருகும் என்பது ஐதீகம்.
மகாசிவராத்திரி விழா, இங்கே பிரமாண்டமாக நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு துவங்கி, மறுநாள் அதிகாலையில் (பிரம்ம முகூர்த்தம்) வரை நடைபெறும் சிவராத்திரி பூஜையை தரிசிக்க ஆயிரக் கணக்கானோர் கூடுவர். அப்போது, ஆயிரம் லிட்டருக்கும் அதிகமாக சிவனாருக்கு பாலபிஷேகம் நடைபெறுமாம்!
மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள், பௌர்ணமி அன்று தம்பதியாக வந்து ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரரை தரிசிக்கின்றனர். அடுத்து ஸ்ரீலோகநாயகியின் சந்நிதியில், கணவர் புதிய தாலியை மனைவியின் கழுத்தில் அணிவிக்க... பழைய தாலியை உண்டியலில் சமர்ப்பிக்கின்றனர். இதனால் மாங்கல்ய தோஷம் நீங்கி, நீண்ட ஆயுளுடன் வாழ்வர் என்பது ஐதீகம்!
சிவனாரின் கோஷ் டத்தில், ஸ்ரீசிவதுர்கை இருப்பது விசேஷம். ராகு காலத்தில் இந்த தேவியை வழிபட்டால், தள்ளிப்போன திருமணம் விரைவில் நடந்தேறும்; எதிரிகள் தொல்லை நீங்கும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை!

No comments:

Post a Comment