Saturday, 5 August 2017

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூரில் விசித்திரமான அந்த வழக்கு ஆரம்பமானது! 'இந்த இளைஞரைப் பார்த்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது. இதற்குமேல் வாதாட சக்தியில்லை என்பதுபோல நிற்கிறாரே!' - ஊர் சபையின் தலைவர் நல்லியனார் யோசித்தபடியே திரும்பிப் பார்த்தார்.
முதியவரோ அமைதியாக அமர்ந்திருந்தார். சுருங்கிய கண்களென்றாலும், என்னவொரு கூர்மை! நெடுநெடுவெனும் உயரமும், வறட்சி கண்டாலும் செம்மையுடன் பளபளத்த மேனியும், தூக்கிச் செருகிய குடுமியும், பேசும்போது பூணூலைத் தள்ளி விட்டுக்கொண்ட அலட்சியமும்... அடடா! சண்டை போட வந்தவர் போலவே இல்லை.
முதியவரின் எழிலில் மூழ்கித் திளைப்பதில் இருந்து வெளியில் வந்த நல்லியனார், நனவுலகின் கட்டுப்பாட்டுக்குள் புகுந்தார். வழக்கை முறையாக நடத்தவேண்டும். நல்ல வேளை, நேசனாரும் மருதத்துறையாரும் உடன் இருக்கிறார்கள். சற்றும் பிசகாமல் நீதி கூறுவதில் வல்லவர்கள். ஊரே திரண்டிருக்கிறது; அனைவரும் பொதுச்சபையின் நெறிகளுக்குக் கட்டுப்படுபவர்கள்.
வழக்காடிகளைத் திரும்பிப் பார்த்தார் நல்லியனார். ஒரு பக்கத்தில் சினத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு நிற்கும் இளைஞர்; மற்றொரு பக்கத்தில் ஆன்று அவிந்து அடங்கியவராக முதியவர். இளைஞர், தன் பெயர் 'நம்பி ஆரூரர்' என்று குறிப்பிட்டார். இவரைப் பற்றிச் சிறிதளவு கேள்விப் பட்டிருக்கிறார்கள். திருநாவலூரைச் சேர்ந்தவர்; திருக்கோயிலில் சிவலிங்கம் தொட்டு பூசனை செய்யும் ஆதி சைவராகப் பிறந்த இவர் மீது, கோவல் அரசரான முனையரையருக்கு அபரிமிதமான அன்பு; ஏறத்தாழ சொந்த மகனாகவே வளர்க்கிறார் என சுற்றுவட்டார ஊர்களில் பிரசித்தம். முதியவர் யாரென்று தெரியவில்லை; ஆனாலும், இந்த ஊர்தான் என்கிறார்.
நல்லியனாரின் சிந்தனைகளைக் கிழித்துக்கொண்டு பேச்சுக் குரல்கள் வலுத்தன.
முதியவரின் வாதம் இது ''நாவலூர் ஆரூரர் எனக்கு அடிமை; இவருடைய தந்தையின் தந்தை, ஓலை எழுதிக் கொடுத்திருக்கிறார்; தானும் தனது வழித்தோன்றல்களும் அடிமைகள் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.''
இளைஞரின் வாதம் இது ''இதுவரை கேட்டிராதது; அந்தணரான இந்தப் பெரியவருக்கு மற்றொரு அந்தணர் அடிமையாக முடியாது. வயதானவர் ஏதோ உளறுகிறார்.''
இரு பக்கங்களையும் மீண்டும் நோக்கிய நல்லியனார், வழக்கின் செயல்முறையைத் தொடங்கினார் ''பெரியவரே! இவர் உமக்கு அடிமை என்பதை நீர் மெய்ப்பிக்கவேண்டும். ஆட்சி, ஆவணம், அயலார் காட்சி ஆகிய மூவகை அத்தாட்சிகளில் ஏதேனும் ஒன்றைக் காட்டுவீராக!''
''என்ன... என்ன... மூவகை அத்தாட்சியா?''
''ஆம் பெரியவரே! எந்த வழக் காயினும் மூவகை அத்தாட்சிகளில் ஒன்றேனும் தேவை. இவ்வளவு வாதாடுகிறீரே, உமக்கு இது தெரியாதா?''
''சரி சரி... என்ன வகைகள் வேண்டும், சொல்வீர்?''
''ஆட்சி, அதாவது பழக்கத்தில் அல்லது அனுபவத்தில் இருக்கும் அத்தாட்சி வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்த வரையிலும், அந்தணனுக்கு அந்தணன் அடிமையாகும் வழக்கம் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் காட்டுவீர். இல்லை யாயின், இவர் உமக்கு அடிமை என்பதற்கான ஆவணம் ஏதேனும் காட்டுவீர். அயலார் காட்சியாக ஏதேனும் இருப்பினும் காட்டுவீர்.''
''ஐயன்மிர், எம்மிடம் அயலார் காட்சியில்லை; ஏனெனில், இது பலகாலம் முன்னர் நிகழ்ந்தது. அக்காலத்தவர் எவரும் இக்காலம் பூமியில் இல்லை. ஆயினும் அத்தாட்சியாய், இவன் தாத்தன் எழுதிக்கொடுத்த ஓலை உண்டு.''
''பெரியீர், சற்றே விளக்கமாகச் சொல்வீர்! நாவலூர் ஆரூரரிடம் அந்த ஓலையை நீர் முன்பு காட்டியபோது, அவர் அதை வாங்கிக் கிழித்துவிட்டதாகச் சொன்னீரே! அதற்காக அவரை ஏசவும் செய்தீர். இப்போது எங்கே போவீர் ஓலைக்கு?''
''அடடா, அதைக் கேட்கிறீரா? கவலையில்லை. இவன் கிழித்தது படி ஓலை; அதாவது, மூல ஓலையில் இருந்து நகலெடுத்த படி ஓலை. எம்மிடம் மூல ஓலை வெகு பத்திரமாக உள்ளது. ஆயின், மீண்டும் இவன் மூல ஓலையையும் கிழிக்கமாட்டான் என்று என்ன நிச்சயம்? தாங்கள் பாதுகாப்பு தருவதாக இருப்பின், காட்டுவேன்!''
''இந்தச் சபை தவறு அறியாத சபை ஐயா! கண்டிப்பாகப் பாதுகாப்பு தருவோம். ஓலையை அத்தாட்சியாக்குவீர்.''
முதியவர் தமது மடிசஞ்சியிலிருந்து மூல ஓலையை எடுத்து நீட்ட, ஊர்க் கணக்கர் அதை வாங்குவதற்காக நகர... நாவலூர் ஆரூரர் விதியை நொந்தபடி பெருமூச்சு விட்டார்.
சடையனார்- இசை ஞானியார் தம்பதியின் மகனாக, ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்த அவரை, திருமுனைப்பாடி கோவலூர் அரசர் நரசிங்க முனையரையர் தம்முடைய செல்லப்பிள்ளையாக வளர்த்தார். குறித்த வயது வந்து விட்டது என்பதால், திருமணம் பேசினார்கள். புத்தூரில் சடங்கவி சிவாச்சார்யர் என்பவரது மகளைத் தன் மகனுக்கு மணமுடிக்கச் சடையனார் விழைந்தார். மணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணச் சடங்குகளை நிறைவேற்றியபடி, நேற்று குதிரை ஊர்வலமாகப் புத்தூருக்குச் சென்றார் ஆரூரர்.
இன்று காலை, மணநாள் சடங்குகளை நிறை வேற்றிய பின்னர், மண பீடத்தில் அமர்ந்திருந்தார். எங்கிருந்துதான் வந்தாரோ தெரியாது... இந்தக் கிழவனார் வந்தார். ''அடே நம்பீ, உனக்கும் எனக்கும் ஒரு வழக்கு உண்டு. தீர்த்த பின்னரே, நீ திருமணம் செய்யலாம்'' என்றார்.
'என்ன வழக்கு என்று சொல்லுங்கள்; தீர்த்த பின்னர் தொடர்வேன்' என்று வாக்கிட்டது தவறாகிவிட்டது. 'என்னவோ... எனது பாட்ட னாராம்; இவருக்கு அடிமை ஓலை எழுதிக் கொடுத்தாராம்..!' சொன்னவுடன், பகபகவென்று சிரித்தேவிட்டார் ஆரூரர்.
கிழவனாருக்குச் சினம் பொங்கிவிட்டது. 'சிரிக்காதே' என்று கடிந்துகொண்டார். சிரிக்கவில்லை; ஆனால், 'அந்தணனுக்கு அந்தணன் அடிமை என்று சொல்ல, நீர் என்ன பித்தனா?' என்று வினவாமல் இருக்கமுடியவில்லை. 'நான் பித்தன் இல்லை, பேயன்; போயேன், என்னவானால் என்ன? நீ எனது அடிமை' என்று விதண்டாவாதம் செய்வதைக் கிழவனாரும் விடவில்லை. அதற்கு மேல், 'என்னி டம் ஓலை இருக்கிறதே' என்ற பீற்றல் வேறு!
ஓலையைக் காட்டுங்கள் என்றதும், உன்னிடம் காட்ட மாட்டேன் என்று அங்கலாய்த்தார். வந்த ஆத்திரத்தில், ஆரூரர் அவர்மீது பாய, அவர் ஓட... துரத்திப் பிடித்த ஆரூரர், அவருடைய கையிலிருந்த ஓலையை வாங்கிக் கிழித்துப்போட்டார்.
அப்படியாவது சிக்கல் தீர்ந்ததா என்றால் இல்லை; தொடர்கிறது. 'ஓலையைக் கிழித்துவிட்டான்' என்று கிழவனார் ஓலமிட, புத்தூர்க்காரர்கள் பரிதவித்தனர்.
இதென்ன, ஊரில் இதுவரை இல்லாத விநோத வழக்கு? கிழவனாரை எந்த ஊர் என்று வினவினார்கள். வெண்ணெய்நல்லூர் என்று அவர் சொன்னதும், அவர்கள் யோசித்தனர். வயதோ மிக அதிகம்போல் தெரிகிறது; வழக்காடி வழக்காடி அனுபவப்பட்டவர் போலவும் பேசுகிறார்;
கொண்டுவந்த சிக்கலோ எங்கும் கேட்டறியாதது; 'பேசாமல் ஒன்று செய்யுங்கள். உங்கள் வழக்கை வெண்ணெய்நல்லூருக்கே கொண்டு போங்கள்' என்றனர். தந்தை, தாய், ஏன்... நரசிங்க முனையரையரால்கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. இதோ, வழக்கு இப்போது வெண்ணெய்நல்லூர் மன்றில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
கணக்கர் படித்து முடித்துவிட்டார்.
அரியதான மறைகளைக் கற்றுத் தெளிந்த ஆதி சைவ அந்தணனாகிய ஆரூரான் எனும் யான் எழுதிக் கொடுக்கும் உடன்படிக்கை யாதெனில், பெருமுனிவரும் வெண்ணெய்நல்லூர் வாழ்பவருமான பித்தன் எனும் அந்தணருக்கு, யானும் எனது வழிவழி மரபில் வருகின்ற யாவரும், வழி வழியாக அடிமை செய்வோமென, மனமும் சொல்லும் ஒருப்பட்டு, இந்த அடிமைச் சாசனத்தை இசைவுடன் தருகிறேன். இதற்கு ஆதாரமாக என் கையெழுத்து.
நல்லியனாரும் நேசனாரும் ஓலையை வாங்கிப் பார்த்தனர்; பின்னர் அவையோரிடம் கொடுத்தனர். கையெழுத்து இட்டவரின் ஒப்பமும் சாட்சிக் கையெழுத்து இட்டோரின் ஒப்பமும் முறையாக உள்ளனவா என்று சோதித்தனர். சரியாகவே இருந்தன. நாவலூர் ஆரூரரைப் பரிதாபத்துடன் நோக்கினர். 'ஐயா, இந்த ஓலையில் இருப்பது தங்களின் பாட்டனார் கையப்பமா என்று பார்த்துவிடுங்கள்' என்று கூறினர்.
முதியவர் குறுக்கிட்டார் 'இவன் பாட்டனார் கையப்பம் இவனுக்குத் தெரியுமா? அவர் எழுதிக் கையப்பம் இட்ட வேறு ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதனைக் கொணரச் சொல்லி, ஒப்பிடுவீர். பிறகு உமது தீர்ப்பை மொழிவீர்.'
ஆரூரரின் பாட்டனார் (அவர் பெயரும் ஆரூரர் என்பதேயாகும்) எழுதிக் கையப்பம் இட்ட பிற ஓலைகளைக் கொண்டு வந்தனர்; ஒப்பிட்டனர். கைச்சாத்து பொருந்தியது. முதியவர் வழக்கில் வென்றார் என்பதை உணர்ந்த ஊரார், அவருடன் செல்லும்படி ஆரூரருக்குத் தீர்ப்புரைத்தனர்.
சபை கலைந்தது. நேசனாரும் மருதத் துறையாரும் ஏதோ தயங்கினார்கள். அவர்களின் பார்வை நல்லியனாருக்குப் புரிந்தது. வெண்ணெய் நல்லூர்க்காரர் என்கிறார்; ஆனால், இந்த முதியவர் எந்த இல்லத்தைச் சேர்ந்தவர் என்று புரியவில்லையே! ஐயத்தைக் கேட்டேவிட்டனர்.
உடனே அந்த முதியவர், ''ஒருவருக்கும் எம்மைத் தெரியவில்லையா? அப்படியானால் உடன் வாரும்'' என அழைக்க, அவரைத் தொடர்ந்து நாவலூராரும் பிறரும் போயினர்.
வேகவேகமாக முன்னால் நடந்த அந்த முதியவர், அருள்துறை கோயிலை அடைந்து உள்ளே சென்றார். அவருக்குச் சற்று பின்னதாகக் கோயில் வாயிலை அடைந்த சிலர், 'சரி, அவர் வரட்டும்' எனக் காத்திருந்தனர்.
நொடிகள் கடக்க, நாவலூராருக்கு ஏதோ நெருடியது. கூட்டத்திலிருந்து பிரிந்து கோயிலுள் நுழைய முற்பட்டார். ஆலய வாயிலை அவர் அடைய, விண்ணில் பேரொளிக் கீற்று..! ரிஷப வாகனத்தில், பரமேஸ்வரரும் பார்வதியும் காட்சி தந்தனர்!

விண்ணில் தோன்றிய பேரொளியைப் பார்த்து நாவலூரார் வியந்து நிற்க... ரிஷப வாகனத்தில் அம்மையும் அப்பனும் காட்சி அளித்தனர்.
'நம்பி ஆரூரா! நமக்குத் தொண்டனாகக் கயிலையில் இருந்த நீ, அங்கு மாதர் மீது காதல்கொண்டாய். அதனால் உன்னை பூமியில் பிறக்கப் பணித்தோம். பூவுலகப் பற்றுகள் பற்றிவிடாமல் காப்பாற்றும்படி வேண்டினாய். ஆகவேதான், திருமணக்கட்டுக்குள் நீ சென்றிடாதபடி, உன்னைத் தடுத்தோம்' என்று அசரீரி ஒலித்தது.
சுந்தரர் என்று அழைக்கப்படும் நம்பி ஆரூரரிடம், இறைவனாரே வழக்காடி வென்ற தலம்; அசரீரி கேட்டு ஆரூரர் உருகி நிற்க, 'சொற்றமிழால் நம்மைப் பாடுக' என்று அந்த ஐயன் ஆணையிட்ட தலம்; 'யாதறியேன் யான்? என்னென்று பாடுவேன்?' என்று மனம் கசிந்து ஆரூரர் தவிக்க, 'முதன்முதலில், பித்தா என்றழைத்தாய். அப்படியே பித்தா என மீண்டும் அழைத்துப் பாடு' என்று சிவனார் செவ்வுரை பகர்ந்த தலம்; 'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' எனத் துவங்கி, பின்னர் பற்பல தலங் களிலும் தேவாரப் பாடல்களைப் பாடிய சுந்தரர், தமது தேவாரத்தைத் தொடங்கிய தலம்; 'உம்முடைய ஊர் எது?' என்று கேட்டோர்க்கு 'வெண்ணெய்நல்லூர்' என்றும், 'இல்லம் எங்கே?' என்று கேட்டோர்க்கு, அருள்துறை ஆலயத்தையும் இறைவனாரே காட்டியருளிய தலம்; சடையப்பவள்ளல் தோன்றி வாழ்ந்த தலம்; பிற்கால சைவப் பெரியார்களுள் சிறப்பு மிக்க மெய்கண்ட தேவர் வாழ்ந்து உபதேசம் பெற்ற தலம்... எனப் பல்வேறு பெருமைகள் கொண்டது திருவெண்ணெய்நல்லூர்!
திருக்கோவிலூரிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவிலும் உள்ள இந்த ஊரின் பெயர் திருவெண்ணெய்நல்லூர் என்றாலும், ஆலயத்தின் பெயர் அருள்துறை என்பதாகும்.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அழகு மிளிர ஒளிர்கிறது. பழைய ஆவணங்களைக் காணும்போது, ராஜகோபுரம் பின்னர் கட்டப்பட்டதென்று தெரிகிறது.
சுந்தரர் பாடும்போது, 'பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறை' என்று பாடுகிறார். ஆகவே, கோயிலுக்கு வடக்காகத் தென்பெண்ணை ஆறு ஓடவேண்டுமே என்று தேடுகிறோம். ஊருக்கு வடக்காக ஒரு சிறிய ஆறு; அநேகமாக நீர் வரத்தில்லை; மலட்டாறு என்கிறார்கள். சுமார் 3 மைல் வடக்கில்தான் பெண்ணையாறு ஓடுகிறது. பழைய பெண்ணை யின் இப்போதைய பெயர்தான் மலட்டாறு. சரியாகச் சொன் னால், அது மலட்டாறு இல்லை; மலாட்டாறு. இந்தப் பகுதிகளுக்கு, 'மலாடு நாடு' எனும் பெயரொன்று நிலவியது. மலையமான் நாடு என்பது மருவி, அவ்வாறு அழைக்கப்பட்டது. மலாடு நாட்டின் ஆறு மலாட்டாறு; தண்ணீர் ஓடாத தால், மலட்டாறு எனும் பெயரும் பொருத்தம்தான்.
வெண்ணெய்நல்லூர் எனும் பெயருக்கும் சுவாரஸ்யமான காரணம் உண்டு. அம்பிகை, இந்தத் தலத்தில் வெண்ணெயால் கோட்டை கட்டி, அதனுள் பஞ்சாக்னி வளர்த்துத் தவம் செய்தாளாம்.
கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்று, லேசாக வலது புறம் திரும்பினால், நூற்றுக்கால் மண்டபம். 'வழக்கு வென்ற அம்பலம்' என்று இது வழங்கப்படுகிறது. வழக்காடியாக வந்து, இறைவனார் வெற்றி பெற்றதை நினைவூட்டும் மண்டபம். குலோத்துங்க மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர், சிதிலப்பட்டுக் கிடந்த ஆலயம், பக்தர்களின் அன்பாலும், காஞ்சி காமகோடி பீடாதிபதி திருப் பணிக் குழுவின் ஆதரவாலும் கட்டுமானங்கள் சீர் செய்யப் பட்டு, இப்போது அற்புதமாகக் காட்சி அளிக்கிறது.
செப்புக் கவசமிட்ட கொடிமரம். கொடிமர விநாயகரை வணங்கி, வலம் வருகிறோம். உயரத்தில், அலங்கார மண்டபத் துக்கு மேலே, சிறிய கோயில் போன்று ஸ்ரீதடுத்தாட் கொண்டார் சந்நிதி. சுதை வடிவத்தில், ரிஷபாரூடராக சிவனார் எழுந்தருளியுள்ள சந்நிதி. மேலே ஏறிப் போக வசதியில்லை; அந்த மூர்த்தத்துக்குப் பூஜைகள் இல்லை. உள்ளே நுழைந்த பெரியவர் எங்கே என்று தேடிவந்த சுந்தரருக்கு, ரிஷபாரூடராக இறைவன் காட்சிக் கொடுத்ததை நினைவூட்டு வதே ரிஷபாரூடர் திருமேனி. திடீரென்று தோன்றி, உடனே மறைந்து போனாரில்லையா, அதனால் அவருக்குப் பூஜைகள் இல்லை என்பது விளக்கம்.
தடுத்தாட்கொண்டாரை தரிசித்தபடியே பார்வையைத் திருப்பினால், கையில் ஆவண ஓலையுடன் காட்சி தருகிறார் சுந்தரர் (உற்ஸவர்). பிராகாரத் திருச்சுற்று மாளிகையில், வரிசையாக அறுபத்து மூவர்; தொடர்ந்து சோமாஸ்கந்தர்; சப்த மாதர்; சம்பந்தர்; விஷ்ணு; அருள் நந்தி சிவம் மற்றும் மெய்கண்ட தேவர் திருமேனிகள். உள்பரப்பில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோரது சந்நிதிகள்.
பிராகாரத்தில் உள்ள பொல்லாப் பிள்ளையார், முழு உருவம் இல்லை; புடைப்புச் சிற்பம். உளியினால் செதுக்கப்படாத (பொல்லப்படாத- எனவே, பொல்லா) சுயம்பு மூர்த்தியான இவர், வலம்புரி விநாயகர். தல விநாயகரான இவர், அருள் மிகுந்தவர். 13-ஆம் நூற்றாண்டில் அவதரித்தவரும், சிவஞான போதம் எனும் சைவப் பெருநூலை இயற்றியவருமான மெய்கண்ட தேவர், தமது 5-வது வயதில், இந்தப் பிள்ளையாரின் அருளுக்குப் பாத்திரமானவர். இன்றைக்கும் இந்தப் பிள்ளையாரின் மகத்துவம் பிரசித்தம். வாய் பேசாத குழந்தைகளை இங்கு அழைத்து வந்து, பொல்லாப் பிள்ளையார் சந்நிதியில் நிறுத்தி வழிபடுவர். இவ்வாறு தினந் தோறும் செய்ய... சில நாட்களிலேயே பேசாத பாலகரும் பேசத் தொடங்குவர்.
பிராகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் நவக்கிரகச் சந்நிதி. வாகனங்களுடன் எழுந்தருளியுள்ளனர். அடுத்து, தெற்குச் சுற்றிலுள்ள பக்கவாயில் வழியாக மூலவர் சந்நிதிக்குச் செல்கிறோம். பிராகாரத்தில், கொடிமரத்தின் நேர் முன்பாகச் சாளரம் அமைந்துள்ளதால், பக்கவாயில் வழியாகத்தான் செல்லவேண்டும். உள்ளே, கிழக்கு நோக்கி அருள் கிறார் அருள்துறைநாதர். இவர்தாமே முதிய வேடம் தாங்கி வந்து, ஆரூரரின் திருமணத்தைத் தடுப்பதுபோல தடுத்து... அடடா, உயிர்களைக் கடைத்தேற்ற எத்தனை நாடகங்கள்... எத்தனை வேடங்கள்! இவருக்கு அருளாளர் என்றும் பெயர். வடமொழியில், கிருபாபுரீஸ்வரர். ஒருகாலத்தில், இந்தப் பகுதி மூங்கில் காடாக (வேணு வனம்) இருந்ததால், வேணுபுரீஸ்வரர். சுந்தரர் காலத்துக்குப் பின், இந்த ஸ்வாமிக்குப் பெயர்கள் கூடிவிட்டன; தடுத்தாட்கொண்டார், ஆட்கொண்டநாதர், பித்தனெனப் பாடச் சொன்னார், பித்தர், பித்து வேலை செய்சித்தர் என்றெல்லாம் அழைக்கப் படலானார். திருவெண்ணெய்நல்லூர் உடையார், அருள்துறை ஆள்வார் என்பவை கல்வெட்டுகளில் காணப்படும் திருநாமங்கள்.
அருள்துறைநாதர் என்று ஸ்வாமிக்கும், அருள் துறை என்று ஆலயத்துக்கும் பெயர்கள் வரக் காரணம்..?
ஆணவத்துடன், சிவனுக்கு எதிராகத் தவம் செய்தனர் தாருகாவனத்து முனிவர்கள். யாகத்தி லிருந்து அவர்கள் தோற்றுவித்தவற்றைத் தமக்குள் தாங்கிக்கொண்டார் சிவனார். தங்களது தவற்றை உணர்ந்த அவர்கள், மன்னிப்புக் கேட்டனர். அவர்களை மன்னித்து, இறைவனார் அருள் செய்த தலமே, அருள்துறை ஆனது. கிருபை புரிந்தவர், கிருபாபுரீஸ்வரர் ஆனார்.
'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' என்று தொடங்கி, பதிகம் பாடினாரே சுந்தரர்... அந்தப் பாடல்களிலெல்லாம் இறுதி வரி, 'ஆளாய் இனி அல்லேன் எனலாமே' என்றே அமையும். 'முன்பே உனக்கு அடிமையாகிவிட்டேன்; அறியாமல், இனி உன் அடிமையல்லேன் என்று எதிர்வழக்காட லாமா?' என்று கேட்பதுபோல் கேட்டு, 'நான் உன் அடிமை' என்று உறுதி செய்யும் முறை. சுந்தரரின் அந்த மனப்போக்கு, அருள்துறை அருளாளரின் முன் நிற்கும்போது நமக்கும் உண்டாகிறது!
கயிலாயத்தில் ஆலால சுந்தரராக இருந்தவரே, நம்பி ஆரூரராக அவதரித்தார். மலர் பறிக்க நந்தவனம் சென்ற ஆலால சுந்தரர், இறைவியின் சேடிப் பெண்களான அநிந்திதை, கமலினி ஆகியோரைக் கண்டு, அவர்கள் மீது விருப்பம் கொண்டார். காதல்
மயக்கம் மூவரையும் சூழ்ந்தது. இல்லற விருப்பம் கொண்டதால், அந்த மூவரையும், பூவுலகில் தென் னாட்டில் தோன்றி, இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்ந்து, பின்னர் கயிலைக்கு வரச்சொன்னார் சிவனார். அப்போது, 'பூவுலகில் பிறந்து வாழுங்கால் செய்வது எது, தவிர்ப்பது எது என்று அறியாமல் பிழை செய்தால், தடுத்து ஆட்கொள்ள வேண்டும்' என்று இறைவனிடம் விண்ணப் பம் வைத்தார் சுந்தரர்.
புத்தூரில் சடங்கவி சிவாச்சார்யர் மகளைத் திருமணம் செய்யப் புகுந்தபோது, அந்தப் பெண் அநிந்திதை, கமலினி ஆகிய இருவரில் ஒருவரும் இல்லையே என்பதால், முதியவராக வந்த
சிவனார், சுந்தரரைத் தடுத்தாண் டார். 'அன்றே யான் உனக்கு அடிமை, இப்போது இல்லை என்பது எப்படி?' என்று பழையதையும், புதியதையும் இணைத்துத்தான் சுந்தரர் பாடினார். என்ன இருந்தாலும் ஆன்மா பழையதுதானே!
'அருள்துறைநாதா! இந்த உயிரும் ஆன்மாவும் உனது அடிமைகளல்லவா, ஆண்டுகொண்டு அருள்வாய்' என்றே நாமும் பணிந்து நிற்கிறோம். சுவாமி கருவறை கோஷ்டங்களில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு, துர்க்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர். இவர்களை தரிசித்து வலம் வந்து, மீண்டும் அருள்துறைநாதரை வணங்கி, வெளிப் பிராகாரம் வந்து, அம்பிகை சந்நிதியை அடைகிறோம்.
நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்கிறாள் ஸ்ரீவேற் கண்ணி அம்மை. மங்களாம் பிகை என்றும் ஒரு பெயர் உண்டு.
பள்ளியறையும், உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங் களும் உள்ளன. நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவை கலந்து விளக்கேற்றி இவளை வழிபட்டால், பிள்ளைப்பேறு கிட்டும். வணிகத்தில் வெற்றியையும், அலுவலில் உயர்வையும் தருவாள் அம்பிகை. அம்பாளுக்கு முன்னர் சிம்ம வாகனம், வீராவேசமாக நிற்கிறது. மகிஷனை வதைத்ததால், அம்பிகையின் உருவம் கறுத்தது. தம்முடைய கோர வடிவத்தைப் போக்கவும், நல்வடிவம் பெறவும்தான், வெண்ணெய் கோட்டை கட்டி, அக்கினி வளர்த்துத் தவம் செய்தாள். சங்க நிதி, பதுமநிதி ஆகியவற்றை ஏந்தி, ஸ்ரீசக்கர ரூபினியாகவும், சிம்ம வாகினியாகவும் அம்பாள் இங்கே விளங்குகிறாள். கறுத்த உருவம் மாறி, மங்கள வடிவம் பெற்றதால், மங்களாம்பிகை ஆனாள்.
கோயிலுக்கு வெளியே- தெற்குப் புறத்தில் தண்ட தீர்த்தம் உள்ளது. பெண்ணையாறு, தண்ட தீர்த்தம் ஆகிய இரண்டும் இந்தத் தலத்துக்கான தீர்த்தங்கள். தண்ட தீர்த்தத்தை சக்கர தீர்த்தம் என்றும் சொல்வர்.
திருவெண்ணெய்நல்லூரில், ஒருபக்கம் அருள்துறை சிவாலயம்; இன்னொரு பக்கம் ஸ்ரீவைகுண்டநாதப் பெருமாள் கோயில். இரண்டுக்கும் சேர்த்து, ஒரே தீர்த்தம். வீதிஹோத்ர மகரிஷி என்பவர், சிவபக்தி மிகுந்தவர். இவருக்காக, தம்முடைய தண்டத்தை ஊன்றி தீர்த்தத்தைச் சிவனாரே உருவாக்கினார் என்பது வரலாறு. ஆகவே, இது தண்ட தீர்த்தம். சுதர்சன சக்கரத் தைக் கொண்டு மகா விஷ்ணு ஏற்படுத்தினார் என்றும் ஒரு கதையுண்டு; ஆகவே, சக்கர தீர்த்தம்.
தீர்த்தத்தைப் போலவே, ஊருக்கும் இரண்டு பெயர்கள். பற்பல சாசனங்களில், திருவெண்ணெய்நல்லூர் என்றே காணப்பட்டாலும், பேச்சுவழக்கில் திருவோணநல்லூர் என்றும் சொல்வர். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒவ்வொரு தலத்துக்குச் சென்று யாகம் செய்த சாண்டில்ய மகரிஷி, திருமாலின் நட்சத்திரமான திருவோணத்துக்கு இதுவே தக்க தலம் என்று இங்கு வந்து யாகம் செய்தார். திருமாலுக்கு உகந்த தலம் என்பதால், திருவோணநல்லூர். பெருமாள் கோயிலில், பெரிய திருவடியான கருடன் இருக்கவேண்டிய சந்நிதியில், சாண்டில்யரே நிற்கிறார்!
பங்குனி உத்திர பிரம்மோற்சவமும், ஆடி சுவாதிப் பெரு விழாவும் வெகு விசேஷம். சுந்தரர் திருமணம் கொள்ள வந்தது, திருமணத்தைத் தடுத்தது, தடுத்தாட் கொண்டது ஆகிய நிகழ்ச்சிகள், ஆடி சுவாதி உற்ஸவத்தில் நடைபெறுகின்றன. தல மரம் மூங்கில் என்றாலும்,
இப்போது இல்லை. கோயிலில் இன்னும் சில சிவலிங்கங் களும் விசேஷமானவை. அர்ஜுனன் பூஜித்து பிள்ளைப் பேறு பெற்ற விஜயலிங்கம், தேவேந்திரன் பூஜித்த சுந்தர லிங்கம், விஷ்ணு பூஜித்த சங்கரலிங்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மயிலேறியவராக, அருணகிரிநாதருக்கு முருகன் காட்சி கொடுத்த தலமும் இதுதான். சாட்சாத் தர்ம தேவனே சிவனுக்கு முன்னிருக்கும் நந்தியாக இங்கு எழுந்தருளியிருப்பதாகவும் ஐதீகம்.
மெய்கண்டாரின் பள்ளிப்படைக் கோயில் (சமாதிக் கோயில்), வடக்கு வீதியில் இருக்கிறது. சடையப்ப வள்ளலும் வடக்கு வீதியில் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள் (அது, இந்த வெண்ணெய்நல்லூர் இல்லை; வேறு என்று சொல்பவர்களும் உள்ளனர்).
அருள்துறை கோயிலுக்கு முன்பாக, எதிர்ப்புறத்தில் சுந்தரர் சந்நிதி. உள்ளே போகாமல், ஏன் வெளியே சந்நிதி? ஆவணம் காட்டிய கிழவனாரைத் தொடர்ந்து வந்த சுந்தரர், அப்படியே திகைத்து நின்றாரல்லவா, அதனால், அவர் நின்ற ஐதீகத்தில் இங்கேயே சந்நிதியாம்! அருகில் சென்று நோக்கு கிறோம். ஏதோ வித்தியாசமாக... சுந்தரர் போலில்லையே! 'இது சுந்தரர் திருமேனி இல்லை, கையில் தாளத்துடன் நிற்கும் ஞானசம்பந்தர்' என்று கி.வா.ஜ அவர்கள் குறிப்பிட்டிருப்பது நினைவுக்கு வருகிறது.
18-ஆம் நூற்றாண்டில், இந்தப் பகுதியில் நிறையப் போர்களும் முற்றுகைகளும் நடை பெற்றன. அப்போது இங்கே களேபரம். அதுவரைக்கும் சுந்தரர் கோயில் என்பது தெருக் கோடியில்தான் இருந்ததாம். களேபரத்தில், அந்தக் கோயிலை இடித்துவிட்டனர். பின்னர், புதியதாகக் கட்டியபோது, கோயி லுக்கு முன்பாகக் கட்டிவிட்டனர். அதே களேபரத்தில், சுந்தரர் எங்கேயோ காணா மல் போய்விட, ஞானசம்பந்தரையே சுந்தரர் ஆக்கிவிட்டார்கள். அப்படியே நினைத்து வழிபாடும் நிலைத்துவிட்டது. இந்தச் சந்நிதியின் விமானத்தில், சுந்தரர் வாழ்க்கை யோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் பலவும் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
பரவாயில்லை; சுந்தரர், ஞானசம்பந்தர், இன்னும் பற்பல அடியார்கள்... யாராயினும் யாவரும் அந்தப் பரம்பொருளின் பக்குவம்தான்! என்ன ஒன்று... மறுபடியும் மடிசஞ்சியைக் கட்டிக்கொண்டு, 'சுந்தரர் சிலையின் மூல புகைப்படம் எம்மிடம் உள்ளது; இது ஞானசம்பந்தர் என்பதை ஆட்சியிலும், ஆவணத்திலும், காட்சியிலும் காட்டுவோம்' என்று கூறிக்கொண்டு, என்றைக்கு அந்தப் பரம்பொருள் வழக்காட வரப்போகிறாரோ?!

No comments:

Post a Comment