அப்படியோர் அற்புதமான பாக்கியத்தை, நம் எல்லோருக்கும் பெற்றுத்தரும் புண்ணிய திருத்தலம், திரிசூலம்.!
அலுமினியப் பறவைகளான விமானங்களின் களமான சென்னை- திரிசூலத்தில், மலைகளுக்கு நடுவில், அருளாட்சி நடத்துகிறார் அருள்மிகு திரிசூலநாதர். சுற்றிலும் மலைகள் திகழ, கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இவரது ஆலயம்.
ஆலய அமைவிடமும், அதன் கம்பீரமும் பரவசப்படுத்துகிறது. கருவறை நுழைவாயிலில் துவாரபாலகருக்கு பதிலாக சிவ பாலகர்களே காட்சி தருவது சிறப்பு. ஆமாம்... இங்கே கருவறை நுழைவாயிலின் ஒருபுறம் விநாயகரும் மறுபுறம் முருகப்பெருமானும் அருள்பாலிக்க, கருவறையில் லிங்கத் திருமேனியராகத் தரிசனம் தருகிறார் சிவனார். இங்கே, இன்னொரு சிறப்பு... சிவனாருக்கு அருகில், தெற்கு நோக்கியபடி, பொன் கவசம் அணிந்து, அருளும் பொருளும் அள்ளித் தருகிறாள் அம்பிகை ஸ்ரீதிரிபுர சுந்தரி!
முன்னொரு காலத்தில், சிவனார் ஸ்ரீதிரிசூலநாதர் எனும் திருநாமத்தில் தனிச்சந்நிதியிலும், ஸ்ரீதிரிபுரசுந்தரி எனும் திருநாமத்துடன் அம்பிகை தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியிலும் காட்சி தந்தனர். பிறகு, அந்நியப் படையெடுப்பின்போது, ஸ்ரீதிரிபுரசுந்தரியின் விக்கிரகத் திருமேனியில், இடது கைக் கட்டை விரல் உட்பட, பல பாகங்கள் சேதப் படுத்தப்பட்டதாம். இப்படிப் பின்னம் அடைந்துவிட்ட விக்கிரகத்தை வைத்து வழிபடவேண்டாம் என எண்ணிய ஊர்மக்கள், சந்நிதியில் இருந்து அந்த விக்கிரகத் திருமேனியை அகற்றிவிட்டு, புதிதாக அம்பிகையின் விக்கிரகத்தை வடித்து, சந்நிதியில் பிரதிஷ்டை செய்தனர்.
அன்றைய இரவில், அர்ச்சகரின் கனவில் வந்த சிவனார், ''இதென்ன கொடுமை?! உங்களின் தாய், மனைவி, மகள் எவருக்கேனும் இதுபோன்ற நிலை வந்தால், அவர்களை ஒதுக்கி வைத்து விடுவீர்களா? உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா? அப்புறப் படுத்திய திரிபுரசுந்தரியை, எனக்குப் பக்கத்திலேயே வைத்துவிடுங்கள்'' என்று அசரீரியாகச் சொல்ல... திடுக்கிட்டுக் கண் விழித்தார் அர்ச்சகர்.
ஆக... ஸ்ரீதிரிசூலநாதர் கோயிலில் இரண்டு அம்பிகையரை தரிசிக்கலாம். புதிதாக வடிக்கப்பட்ட அம்பிகையின் திருநாமமும் ஸ்ரீதிரிபுரசுந்தரிதான். கையில் அட்சமாலையும் தாமரையும் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தரும் ஸ்ரீதிரிபுரசுந்தரியை தரிசித்து வழிபட்டால், ஞானத்தையும் செல்வத் தையும் வாரி வாரி வழங்குவாள் என்பது ஐதீகம்!
வெள்ளிக் கிழமைகளில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருளும் அம்பாளைத் தரிசிக்க, கண் கோடி வேண்டும்!
தனது படைப்புத் தொழிலுக்கு எந்த இடையூறும் வரக்கூடாது; பணிகள் செவ்வனே நடைபெற வேண்டும் என நான்கு மலை களையும் அரணாகக் கொண்டு (நான்கு மலைகளை நான்கு வேதங்கள் என்றும் சொல்வர்), சிவபெருமானை எண்ணி, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து தவத்தில் ஈடுபட்டார். இவரின் தவத்தில் மகிழ்ந்த சிவனார், இவருக்குத் திருக்காட்சி தந்து அருளினார்.
அடர்ந்த வனமும் ஓங்கி உயர்ந்த மலையும் கொண்டு திகழ்ந்த இந்தப் பகுதி, திருச்சுரம் எனவும், இங்கேயுள்ள ஈசனின் திருநாமம், திருச்சுரமுடையவர் என்றும் அழைக்கப்பட்டது. பின்னர், இதுவே திரிசூலம் என்றும், திரிசூலநாதர் எனவும் மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். சிவனாரின் திருக்கரத்தில் உள்ள சூலாயுதத்தில் தங்கியிருக்கும் மூன்று சக்திகளைக் குறிக்கும் வகையில் ஸ்ரீதிரிசூலநாதர் எனப் பெயர் அமைந்ததாகவும் சொல்வர். பிரம்மா வழிபட்டதால், இந்தத் தலம் பிரம்மபுரி என்றும் வழங்கப்படுகிறது. கோயிலின் தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்.
உக்கிரத்துடன் காட்சி தரும் ஸ்ரீதுர்கை, இந்தத் தலத்தில் சாந்தமும் கருணையுமாக காட்சி தருகிறாள். ஆதிசங்கரரின் திருப்பாதுகைச் சந்நிதியும் இங்கே உள்ளது.
மனைவியைவிட்டு ஒருபோதும் பிரியாமல், அவள் எந்த நிலையில் இருந்தாலும் ஏற்றுக்கொண்ட ஸ்ரீதிரிசூல நாதரையும் ஸ்ரீதிரிபுரசுந்தரியையும் வணங்கி வழிபட்டால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; குடும்பம் சிறக்கும்; சந்ததி செழிக்கும்; பிரிந்தவர்கள் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை. 'அன்பே பிரதானம்' என உணர்த்தும் வகையில், ஆதிசிவன் தன் மனைவி உமையவளுக்கு அருகில் இடம் கொடுத்த இந்தத் தலத்துக்கு வாருங்கள்; 'அன்பே சிவம்' என்பதை உணர்வீர்கள்!
நாக யக்ஞோபவீத கணபதி!
கோஷ்டத்தில், ஒரே கல்லால் ஆன நாக யக்ஞோபவீத கணபதி, தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். தாமரைப் பீடத்தில், வலது காலை குத்திட்டு, இடது காலை மடித்தபடி, நாகத்தையே பூணூல்போல் தரித்த நிலையில் அருள்புரியும் இந்த விநாயகரை வணங்கினால், நாக தோஷம் முதலான தோஷங்கள் யாவும் நீங்கும் என சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள். அருகில், வீராசனத்தில் காட்சி தரும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியும் சிறப்பானவர். இவரை வியாழக்கிழமைகளில் வணங்கி வழிபட... குழந்தைகள் கல்வி-கேள்வியில் சிறந்து விளங்குவார்களாம்.
|
No comments:
Post a Comment