சென்னை- திருவல்லிக்கேணியில் உள்ள சிவாலயத்துக்கு 1970-ஆம் வருடம் விஜயம் செய்தார் அந்த மகான். ஊரே திரண்டு வந்து அவரை தரிசித்து ஆசீர்வாதம் பெற்றது. அப்போது உரை நிகழ்த்திய மகான், ''இந்த ஆலயத்தில் உள்ள ஈஸ்வரனுக்கும் அம்பிகைக்குமான திருநாமங்கள் அழகுற அமைந்திருப்பதுடன், பொருத்தமாகவும் உள்ளன'' என்று சிலாகித்துச் சொல்ல... மொத்தக் கூட்டமும் ரசித்துச் சிலிர்த்தது!
அந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் திருநாமம் - ஸ்ரீகாமகலா காமேஸ்வரர்; அம்பாளின் திருநாமம் - ஸ்ரீகாமகலா காமேஸ்வரி. பெயர்ப் பொருத்தம் குறித்துச் சிலாகித்து வியந்தவர்... காஞ்சி மகாபெரியவர்!
ஈஸ்வரனுக்கும் ஈஸ்வரிக்கும் இப்படியான திருப்பெயர்கள் அமையக் காரணம் என்ன?
அசுரன் சூரபதுமனின் கொடுமைகளால் கடும் அவதிக்குள்ளா னார்கள் தேவர்கள். அந்த அசுரனை அழிக்கும் வல்லமை சிவ மைந்தன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு. அதற்கு, சிவ- பார்வதி இணைந்து, முருகப் பெருமானின் அவதாரம் நிகழவேண்டும்.
ஆனால் சிவனாரோ... சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் ஆகிய முனிவர்களுக்கு ஞான உபதேசம் அருளிய படி, கண்கள் மூடி மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்தார். இந்த நிலையில் இருந்து அவர் எழுந்தால்தானே தங்களுடைய விருப்பம் நிறைவேறும்; அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த தேவர்களுக்கு, மன்மதனின் நினைவு வந்தது. அவனை அணுகி, ஈசன் மீது காம பாணம் தொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
முதலில் தயங்கிய மன்மதன், ஒரு நல்ல காரியத்துக்காகத்தானே தேவர்கள் தன்னிடம் உதவி கோரி வந்துள்ளனர் என்கிற எண்ணத் தில், அதற்கு ஒப்புக்கொண்டான். சிவனார் இருக்கும் இடத்துக்கு வந்தவன், அவர் மீது மலரம்பு தொடுத்தான். கண் விழித்த சிவனார், மன்மதனின் செயல் கண்டு கோபம் கொண்டார். நெற்றிக்கண் திறந்து அவனை எரித்துச் சாம்பலாக்கினார். அதையறிந்த ரதிதேவி, தன் கணவனை மன்னித்து, உயிர்ப்பிக்குமாறு சிவ- பார்வதியிடம் கண்ணீர்மல்க வேண்டினாள். அவள் மேல் இரக்கம் கொண்ட சிவபெருமான், ''இனி உன் கணவன், உனக்கு மட்டும் உருவம் உடையவனாகவும், மற்ற வர்களுக்கு அனங்கனாகவும் (அங்கம் இல்லாதவன்) திகழ் வான்'' என அருளினார்.
இப்படி, காமனாகிய மன்மதனை அழித்துக் காலன் ஆனதால், சிவபெருமானுக்கு காமகாலன் எனும் பெயர் அமைந்தது. இதுவே பின்னாளில், ஸ்ரீகாமகலா காமேஸ்வரர் என்றா னதாகச் சொல்வர்.
புராணச் சிறப்புமிகு திருநாமத்துடன் இந்த ஈஸ்வரன் குடியிருக்கும் கோயில், திவ்யதேசமாம் திருவல்லிக் கேணியில் அமைந்திருப்பது கூடுதல் விசேஷம். ஒரே தலத்தில் பார்த்த சாரதியையும் பரமேஸ்வரனையும் தரிசிக்கக் கிடைக்கும் வாய்ப்பு, நாம் செய்த பாக்கியம்தான்!
ராஜகோபுரத்தைத் தரிசித்தபடி, உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம். வலப் பக்கத்தில் சுவாமி ஐயப்பனும் ஸ்ரீஆஞ்சநேயரும் அருள்கின்றனர். அடுத்து கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்திதேவரை தரிசித்து, உள்ளே கருவறையை நோக்கினால்... ஆதி அந்தம் இல்லாத பரஞ்ஜோதியாம் ஸ்ரீபரமேஸ்வரன், லிங்கத் திருமேனியராக- காமகலா காமேஸ்வரராக அருள் தரிசனம் தருகிறார். காசி க்ஷேத்திரத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கமாம் இது. அதிலும், ஸ்வேத பாணலிங்கமாக... ரேகையுடன் கூடிய வெண் சிவப்பு மேனியராக இவர் திகழ்வது விசேஷ அம்சம் என்கிறார்கள்.
ஸ்வாமியின் சந்நிதிக்கு வலப்புறம் ஸ்ரீபாலவிநாயகரும் இடப்புறம் ஸ்ரீபாலசுப்ரமணியரும் காட்சி தருகின்றனர். நான்கு திருக்கரங்களுடன் வேலும் மயிலுமாகக் காட்சி தரும் ஸ்ரீபாலசுப்ரமணியருக்கு, செவ்வரளிப் பூ சார்த்தி, மனதாரப் பிரார்த்தித்தால், ரத்தச் சோகை உள்பட, உடலில் உள்ள அத்தனை நோய்களும் குணமாகும் என்கிறார்கள் பக்தர்கள்.
ஸ்வாமி சந்நிதிக்கு வலப் புறத்தில் அமைந்திருக்கிறது அம்பாளின் சந்நிதி. நான்கு திருக் கரங்கள்; பவித்திர முடியுடன் கூடிய ஜடாமகுடத்துடன் அழகுத் திருக்கோலம் காட்டுகிறாள் அம்பாள். சிரசு மேற்குப் பக்க மும், இடுப்பு கிழக்குப் பக்கமும், வலது திருப்பாதம் மேற்குப் பக்கமுமாக சற்றே வளைந்து, திரிபங்க சொரூபமாக... அம்பிகை யின் தரிசனம் அற்புதம்! இந்த அன்னையின் எதிரில் ஸ்ரீசக்ர மேருவும் அமைக்கப்பட்டி ருப்பது சிறப்பு.
பிராகாரத்தில் நர்த்தன கணபதியின் தரிசனம்; அர்ச்சனை செய்து, அருகம்புல் சார்த்தி இவரை வணங்கினால், திருமணத் தடை அகலும்; வீட்டில் விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை.
அதேபோல், இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதுர்கையும் சாந்நித்தியம் மிகுந்தவள். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றிவைத்து இந்தத் துர்காதேவியை வழிபட, காரியத் தடைகள் நீங்கும்; தைரியம் பிறக்கும்!
உள்ளம் நிறைந்த பக்தியுடன் இந்த ஆலயத்துக்கு வந்து, அகில நாயகனாம் ஸ்ரீகாமகலா காமேஸ்வரரையும், கருணை நாயகியாம் ஸ்ரீகாமகலா காமேஸ்வரியையும் மெய்யுருக தரிசித்து, மனதார வழிபட்டால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர்; இல்லறம் செழிக்கும்; வாழ்வு வரமாகும்!
No comments:
Post a Comment