Wednesday, 2 August 2017

நற்பலன் தரும் மூன்றாம் பிறை தரிசனம்!

 
ண்பது வயது நிறைவு பெற்றவரை, ‘ஆயிரம் பிறை கண்டவர்’ என்பார்கள். அவரிடம் ஆசி பெறுவதை பெரும் பாக்கியமாகவும் கருதுகிறோம். இந்த ‘பிறை காணுதல்’ என்றால் என்ன?
அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் வானில் தெள்ளிய கீற்றுப் போன்று தென்படும் மூன்றாம் பிறை நிலவை தரிசிப்பதையே பிறை காணுதல் என்கிறார்கள். இவ்வாறு ஆயிரம் பிறைகளுக்கு மேல் தரிசனம் பெற்று நடமாடும் தெய்வமாக நம்மிடையே திகழ்ந்தவர் காஞ்சி ஸ்ரீபரமாச்சார்யாள் ஸ்வாமிகள்.
வானில் மிகக் குறைந்த கால அளவில் தென்படும் இந்த மூன்றாம் பிறை தரிசனம், தெய்வீக சக்தி வாய்ந்தது. உண்மையில், இது இறை தரிசனமாகக் கருதப்படுகிறது. காரணம், ஈஸ்வரனே தன் திருக்கரங்களால், தன் சிரசில் எடுத்துச் சூடியது இந்த மூன்றாம் பிறை. அதனால் அன்று நாம் வானில் பார்ப்பது சிவபெருமானின் சிரசே. இதன் பின்னணியில் சுவாரஸ்யமான ஒரு கதை உண்டு.
தட்சனது சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்த சந்திர பகவான், அவற்றை மீண்டும் பெறுவதற்காக இறைவனை தியானித்துத் தவம் செய்தார். இந்த தவத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். எனவே, அவர்கள் ஒன்று திரண்டு தங்களின் தந்தை தட்சனிடம் சென்று சாபத்தைத் திரும்பப் பெறுமாறு வற்புறுத்தினர்.
ஆனால் தட்சனோ, ‘‘அறியாமையால் சந்திரனுக்கு சாபம் அளித்ததால், எனது தபோ பலனும் புண்ணியமும் குறைந்து விட்டன. அதனால் கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெறும் வல்லமை எனக்கு இல்லை’’ என்றான்.
இதனால் கலக்கமடைந்த இருபத்தேழு மனைவியரும் சூரிய மண்டலத்தில் அமர்ந்து கடுமையான தவத்தில் ஈடுபட்டனர். அவர்களது தவத்துக்கு மகிழ்ந்த ஈஸ்வரன் அவர்கள் முன்பு தோன்றினார். ‘‘நீங்கள் வேண்டும் வரம் என்ன?’’ என்று கேட்டார். ‘‘நாங்கள் உத்தமமான இந்த தெய்வீக நிலையிலேயே இருக்க விரும்புகிறோம்!’’ என்று அவர்கள் பதில் அளித்தனர்.
இறைவனும் அவ்வாறே வரம் அருளினார். அக்கணமே அவர்கள் வானில் சுடர் விடும் இருபத்தேழு நட்சத்திரப் பிழம்புகளாகப் பிரகாசித்தனர்.
அப்போதுதான் சந்திர பகவானின் தவமும் கனிந்தது. இறைவருள் தரிசனமும் அவருக்குக் கிட்டியது. இறைவன் அவரிடம், அவரின் மனைவியரின் தற்போதைய நிலையை எடுத்துரைத்தார்.
இதனால் சந்திர பகவான் மகிழ்ச்சி அடைந்தாலும், தன் தேவியரை ஸ்தூல உருவத்தில் காண முடியாததற்காக வருத்தம் அடைந்தார். கருணை வடிவினரான சர்வேஸ்வரன், இருபத்தேழு நட்சத்திர தேவியருக்கும், அவர்களின் முந்தைய தோற்றத்தை வழங்கினார். இதனால் மகிழ்ந்த சந்திர பகவான் மீண்டும் தன் தேவியருடன் சேர்ந்து தவமியற்றி, சிவபெருமானின் சிரசில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறு பெற்றார். அப்போது பதினாறு கலைகளையும் இழந்த சந்திரன், மாதத்தில் 15 நாட்கள் தனது கலைகள் வளர்வதாகவும், அடுத்த 15 நாட்கள் தேய்வதாகவுமான மாறுபட்ட வரம் பெற்றார்.
மனித மனதை ஆட்சி செய்யும் கிரக மூர்த்தியான சந்திர பகவானை மூன்றாம் பிறையன்று தரிசித்தால், குடும்பத்தில் பரஸ்பர ஒற்றுமை, மனசாந்தி, நோய் நொடியற்ற ஆரோக்கியம் மற்றும் தீர்க்கமான கண் பார்வை உட்பட எண்ணற்ற நற்பலன்கள் பெறலாம்.

No comments:

Post a Comment