பி ரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்த வழிபாட்டைச் செய்வது தவறு. பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.
பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.
சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.
திருக்கயிலாயத்தில் ஸ்வாமிக்கு முன்னர் ‘சடாட்சரக் கழி’ எனும் விசேஷமான கோலுடன் திகழ்பவர் அதிகார நந்தி. இவர் எழுந்தருளியுள்ள தலங்களில் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்புடையது. கயிலாயத்தில் உள்ள நந்திகணங்கள், நந்தி வாகனங்களின் தலைமை மூர்த்தியாகத் திகழ்பவர்தான் அதிகார நந்தி. இவர், தம் தேவி சுயம்பிரபையுடன் எழுந்தருளியுள்ள திருமழப்பாடி, திருகோகர்ணம் போன்ற தலங்கள் விசேஷமானவை. பிரதோஷ நேரத்தில் அதிகார நந்தி உள்ள ஆலயங்களில் பிரதோஷ மூர்த்தி வலம் வரும்போது இவரது சந்நிதியின் முன்பாக, ‘தீப சேவை’ நடப்பதுடன், பிரதோஷ நடன முறைகளை மாற்றி மாற்றி ஆடுவதும் மரபு.
அம்பிகையை நோக்கி வலப் புறம் சற்றுத் திரும்பியோ அல்லது வலப் புறக் காது சற்று உயர்ந்த நிலையிலோ உள்ள நந்தீஸ்வரரிடம், பிரதோஷ பூஜை முடிந்ததும் நமது கோரிக்கைகளை அவரது வலக் காதில் உரைக்க வேண்டும் என்பது ஐதீகம்.
இடப் புறம் நந்தியின் காது உயர்ந்திருப்பின், அவரவர் திருமணம், மற்றும் தாம்பத்ய வாழ்க்கைப் பிரச்னைகளை அவரிடம் எடுத்துரைக்கலாம்.
|
Wednesday, 2 August 2017
பிரதோஷ வழிபாடு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment