உ த்தரமேரூர்- காஞ்சிபுரம் சாலையில், உத்தரமேரூரில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ள திருத்தலம் திருமாகறல். சிறிய ஊர். நடுவில் கம்பீரமாக... ஆனால், படுஅடக்கமாக அமைந்த கோயில்.
கோயிலின் பிரதான வாயிலில் நிற்கிறோம். கோயிலுக்கு முன்பாக உள்ள இடம், கிட்டத்தட்ட ஊர் விளையாட்டு மைதானமாகவே செயல்படுகிறது. வலை கட்டிப் பந்தாடும் சிறுவர்களையும் இளைஞர்களையும் தாண்டிப் போனால், 5 நிலை கிழக்கு ராஜ கோபுரம்.
அமைதியான சூழலில், இன்னும் ஆழமான அமைதியை அளிக்கும் கோபுரத்தை அண்ணாந்து பார்த்து வணங்கியவாறு, உள்ளே நுழைகிறோம். விசாலமான பிராகாரம், சுத்தமாக இருக்கிறது. வலம் வரலாமா?
ராஜ கோபுரத்துக்கு நேர் உள்புறம் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம். பலிபீடத்துக்கு முன்பாகவே, விநாயகர் வீற்றிருக்கிறார். இவர்தாம் கொடிமரத்து விநாயகர்.
வலம் தொடங்கும்போதே, கிழக்குப் பிராகாரத்தின் தெற்கு மூலையில் அக்னி தீர்த்தம். கரையில் சைவ நால்வர். இந்தத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், எம பயமும் தொல்லைகளும் நீங்கும். தீர்த்தத்துக்கு அருகில், நாலு கால் மண்டபம். விழாக் காலத்தில், இங்குதான் சுவாமி எழுந்தருள்வார். வலம் வருவதற்கு வசதியாக தரை பாவப்பட்ட பிராகாரம். தெற்குச் சுற்றில் ஒரு சிறிய திட்டிவாசல் (கதவிலேயே இடம்பெற்றிருக்கும் மற்றொரு சிறிய கதவு); சேயாற்றுக்குச் செல்ல, வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறது போலும். பிராகாரத்தில் தனியாகச் சந்நிதிகள் ஏதும் இல்லை. வடக்குச் சுற்றை நிறைவு செய்து, கிழக்குச் சுற்றில் திரும்பும் பகுதியில், அலங்கார மண்டபமும் வாகன மண்டபமும் உள்ளன. வெளிப்பிராகார வலத்தை நிறைவு செய்து விட்டோம். அடுத்த வாயிலில், இரு புறமும் உள்ள விநாயகரையும் முருகரையும் வணங்கிக் கொண்டே உள்ளே நுழைகிறோம்.
உள் சுற்றுப் பிராகாரம்; தென்கிழக்கு மூலையில் ஆறுமுகர் சந்நிதி. வள்ளி- தெய்வானை சமேதராகப் பன்னிரு கரங்களுடன் அருள் பாலிக்கும் ஆறுமுகன். எதிரில் கிழக்குப் பார்த்த சோமாஸ்கந்தர் சந்நிதி. தெற்குச் சுற்றில் அதிகார நந்தியும் அறுபத்துமூவர் மூலவர் விக்கிரகங்களும் வெகு எழிலாகக் காணப்படுகின்றன.
தென்மேற்கு மூலையில் வலம்புரி விநாயகர். வடமேற்கு மூலையில் வள்ளி- தெய்வானை உடனாய முருகர், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார். பிராகார வலத்தில் வடக்குச் சுற்றில் நடக்கிறோம். மூலவர் சந்நிதிப் பக்கவாட்டு வாயிலைத் தாண்டி வந்தால், சந்நிதிச் சுவரை ஒட்டினாற்போல ஒரு கிணறு.
வடகிழக்கு மூலையில், தெற்குப் பார்த்த நடராஜர் சந்நிதி. அருகில் சிவகாமியம்மை நின்று தாளம் போட, மாணிக்கவாசகர் மெய்ம்மறந்து பார்த்திருக்க... ஆனந்தத் தாண்டவம் ஆடும் அம்பலவாணரை வணங்குகிறோம். அடுத்து, பள்ளியறை. அதை ஒட்டினாற்போல பைரவர் சந்நிதி. உண்மையில் இந்தப் பகுதியில் வலம் வரும்போது, அம்மன் சந்நிதி பின்புறமாக அம்பாளையும் பிரதட்சிணம் செய்தாற்போல வந்து விடுகிறோம். அம்பாள் சந்நிதிச் சுவரை ஒட்டி நவக்கிரகச் சந்நிதி.
மெள்ள மூலவர் சந்நிதிக்குள் நுழைகி றோம். சில படிகள் ஏறி, முன் மண்டபத்துள் புகுகிறோம். நீண்ட மண்டபம். ஒரு பக்கம் முழுவதும், உற்சவர் விக்கிரகங்கள். மூலவர் கருவறையை நோக்கி வீற்றிருக்கும் நந்தி.
முன் மண்டபத்தில் நின்று உள்ளே நோக்க... பாணம் சிறுத்துக் குறுகியவரா கக் காட்சியளிக்கும் மூலவர் _ மாகற லீஸ்வரர்.
அதென்ன பெயர்? மாகறல்? மாகறம் என்றால் உடும்பு. மாகறன், மலையன் என்று இரண்டு அசுரர்கள் இருந்தார்களாம். அவர்கள் வழிபட்ட தலம். அவர்களுக்காக உடும்பு வடிவத்தில் இறையனார் காட்சி கொடுத்தார் போலும். ஊருக்கும் மாகறல் என்றே பெயர் அமைந்து விட்டது. ‘ஜயம்கொண்ட சோழ மண்டலத்துப் பொற்கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல்’ என்றே இந்த ஊரைப் பற்றிக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பிற்காலத்திலும், மன்னர் ஒருவருக்கு உடும்பு வடிவத்தில், இந்த ஊர் சுவாமி காட்சி கொடுத்துள்ளார்.
அதென்ன கதை?
இந்த ஊருக்குக் கிழக்கில், இரண்டு கி.மீ. தொலைவில், வேணுபுரம் என்றோர் இடம். முன்னொரு காலத்தில் வேணுபுரத்தில் ஓர் அதிசயப் பலா மரம் இருந்ததாம். இனிப்பும் சுவையும் நிரம்பிய பலா, நாள்தோறும் இந்த மரத்தில் காய்த்துத் தொங்குமாம். இந்தப் பகுதி மக்கள் அந்த அதிசயப் பலாவை, நாள்தோறும் எடுத்துச் சென்று தில்லை நடராஜ பெருமானுக்குப் படைப்பார்களாம். நடராஜ பெருமானுக்குப் படைத்த பின்னர், சோழச் சக்ரவர்த்தியான ராஜேந்திர சோழ மன்னருக்கும் பலாவைக் கொண்டு போய்க் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாள் தொடங்கிய செயல், தினசரிப் பழக்கமாகவே மாறியது. அப்போதெல்லாம் காட்டு வழிதானே! செல்லும் வழியில் பயம் வேறு. இந்த ஊர்க்காரர்களோ, நித்தமும் சிதம்பரத்திலிருந்து மன்னரைக் காண, தஞ்சை வரை செல்ல வேண்டியிருந்தது. வழிப் பயணம் - வசதிக் குறைவு - ஏற்படும் செலவு... இப்படிப் பல இடர்ப்பாடுகளைத் தம் ஊர்ப் பெரியவர்கள் ஏற்பதைக் கண்ட இளைஞர் ஒருவர், ஒரு நாள் ஆத்திரப்பட்டு, அதிசய பலா மரத்தைத் தீயிட்டுக் கொளுத்தினார். பலா பற்றியெரிந்தது. பழம் நிவேதனத்துக்குப் போகவில்லை; மன்னருக்கும் செல்லவில்லை.
மன்னர் ஆள் அனுப்பிப் பலாவைப் பற்றி விசாரித்தார். செய்தி அறிந்தார். இளைஞரைப் பிடித்தார். ‘ஊர் நன்மைக்காகச் செய்தேன்; வேண்டு மென்றால் தண்டியுங்கள்!’ என்று இளைஞர் பதில் கொடுக்க, பெரிய தண்டனை கொடுக்க மனம் இல்லாத மன்னர், இளைஞரையும் அவரைச் சேர்ந்த வர்களையும் இரவோடு இரவாக அழைத்துப் போய், பொழுது விடியும்போது எங்கிருக்கிறார்களோ, அவர்களை அங்கேயே விட்டு விடுமாறு பணித்தார். அவர்கள் மீண்டும் ஊர் திரும்பக் கூடாது என்றும் ஆணையிட்டார்.
இளைஞர் விடப்பட்ட இடமே ‘விடிமாகறல்’ என்னும் பெயர் பெற்றது. திருவள்ளூர் தாண்டி, திருத்தணி வழியில் விடிமாகறல் உள்ளது.
இதற்குப் பின், இன்னொரு சம்பவம் நடந்ததாம். ராஜேந்திர சோழ மன்னர், எலுமிச்சை மரங்கள் அடர்ந்த மாகறலுக்கு வரும்போது, தங்க மயமான உடும்பு ஒன்று அங்கு ஓடியதாம். உடும்பை விரட்டிக் கொண்டே மன்னர் செல்ல, புற்றுக்குள் நுழைந்து விட்ட உடும்பின் வால் பகுதி மட்டும் கண்களுக்குத் தெரிந்ததாம். உடும்பின் வால் பகுதி லிங்க பாணமாக மாறி காட்சி தந்தது. மாகறல் வரலாறு இதுதான் என்று உள்ளூரில் சொல்கிறார்கள். இந்தச் சம்பவம் நடந்திருக்கக் கூடும்; இதற்கு, அகச்சான்றுகளோ ஆவண- ஆதாரங்களோ இல்லை.
ஆனால், இந்தச் சம்பவத்துக்குப் பின்னர்தான் ‘மாகறல்’ என்ற பெயர் வந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், இந்தத் தலத்தைப் பற்றி ஒரு பதிகம் பாடியுள்ளார். மாகறலைத் திருஞானசம்பந்தர் வர்ணிப்பது அழகோ அழகு!
திருவத்திபுரமாம் செய்யாற்றில் ஆண் பனையைப் பெண் பனை ஆக்கிய ஞானசம்பந்தப் பெருமான், அதன்பின் பற்பல பதிகளை தரிசித்துக் கொண்டே திருமாகறல் வந்து சேர்ந்தார். மங்கை பாகரைப் பாடினார்.
நீள்கொடி கண் மாடமலி நீடு பொழில் மாகறல்... என்றும் மலையின் நிகர் மாடமுயர் நீள் கொடிகள்வீசுமலி மாகறல்... என்றும் காலையடு மாலை வழிபாடு செய்து மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல்...
- என்றும் ஞானசம்பந்தப் பெருமானின் பதிகம் பேசுகிறது.
ஞானசம்பந்தர் காலத்தில் மாட மாளிகைகள் கொண்ட ஊரோ என்னமோ, இப்போதொன்றும் ஊர் அப்படி இல்லை. ஆனாலும், அழகும் அமைதியும் இருக்கத்தான் செய் கின்றன. சரி. விஷயம் என்ன தெரியுமா? ஞானசம்பந்தர் காலத்திலேயே இது மாகறல்தான். முதலாம் ராஜேந்திர சோழன் (ராஜராஜனின் மகன்), 10-ஆம் நூற்றாண்டுக் காலத்தவர்.
ஏற்கெனவே மாகறலீஸ்வரராகப் பலருக்கும் அருள் பாலித்துக் கொண் டிருந்த பெருமான், மன்னருக்கும் உடும்பு வடிவில் தோன்றி சிறப்பான அருள் வழங்கியிருக்க வேண்டும். சிவலிங்க பாணத்தில் உடும்பு தழுவிய குறியன்று தென்படுகிறது. மன்னருக்குக் காட்சி கொடுத்து அழைத்து வந்த உடும்பு, லிங்கம் இருந்த இடத்துக்குள் புகுந்திருக்க வேண்டும். இதைக் குறிக்கும் வண்ணமாகவே, மாகறலீஸ்வரருக்கு, பாரத்தழும்பர் என்றும் ஒரு திருநாமம் உள்ளது.
திரிபுவனச் சக்ரவர்த்தி ராஜராஜ சோழன், திரிபுவனச் சக்ரவர்த்தி குலோத்துங்க சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆகியோரும் சுந்தர பாண்டிய மன்னர், கம்பண்ண உடையார் போன்றோரும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர். அகஸ்தீஸ்வரம் உடையார், மாகறல் உடைய நாயனார், அகஸ்தீஸ்வர நாயனார் என்றெல்லாம் சுவாமிக்குக் கல்வெட்டுத் திருநாமங்கள் காணப்படுகின்றன.
மூலவரை மீண்டும் நோக்குகிறோம். சிறிய சிவலிங்கத் திருமேனி. சதுர பீட ஆவுடையார். லிங்க பாணம் உடும்பின் வால்போல குறுகலாகக் காணப்படுகிறது. பாணம் சுயம்பு; ஆவுடையார்தான் கட்டப்பட்ட பகுதி.
‘மாகறலில் அன்பர் அபிமானமே’ என்று வள்ளலார் வியந்து போற்றும் மாகறலீஸ்வரரைக் கண்குளிர தரிசிக்கிறோம். அடைக்கலம் தந்த நாதர், பரிந்து காத்தவர், பாரத் தழும்பர், புற்றிடம் கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலம் காத்தவர், ஆபத்சகாயர், அகஸ்தீஸ்வரர், திருமாகறலீஸ்வரர், தடுத்தாட் கொண்டவர், உடும்பீசர், மகம் வாழ்வித்தவர் ஆகிய பன்னிரு நாமங்கள் இவருக்கு உண்டு. மூலவர் சந்நிதியில் ஒரு புறம் போகசக்தி. பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டு மூலவர் சந்நிதியை மீண்டும் வலம் வருகிறோம்.
கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணா மூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்கை ஆகியோர். தனி மண்டபத்தில் சண்டிகேஸ்வரர். தொண்டை மண்டலக் கோயில்கள் பலவற்றில் காணப்படும் அகழி அமைப்பு இங்கும் உள்ளது.
மூலவர் விமானம் சிறப்பானது. கஜபிருஷ்ட (யானையின் பின்பகுதி) அமைப்பு கொண்டது. மூலவரை வணங்கிக் கொண்டே அம்மன் சந்நிதிக்குச் செல்கிறோம். இவர் நின்ற திருக்கோல நாயகி. புவனநாயகி, திரிபுவனநாயகி என்பவை அம்மையின் திருநாமங்கள்.
மாகறல் திருக்கோயிலில், ‘சிவசிவ ஒலி மண்டபம்’ என்ற ஒன்றைத் திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம் அமைத்துள்ளது. இங்கு சிவ ஜபம் செய்வதும், திருமுறை பாராயணம் செய்வதும் மிகச் சிறப்பா னவை. மீண்டும் ஒரு முறை வெளிப் பிராகாரத்தில் வலம் வருகிறோம். மூலவரின் கஜபிருஷ்ட விமானம், நடராஜர் விமானம், அம்மன் சந்நிதி விமானம் ஆகியவை வெகு ஜோராகக் காட்சி தருகின்றன. கோயிலின் தல மரமான எலுமிச்சை, கோயில் பிராகாரத்தில் உள்ளது.
அப்படியே சேயாற்றுக்கும் போகலாமா? சேயாறு? செய்யாறு என்று மக்கள் வழக்கில் புழங்குவது தான் சேயாறு. சேயான முருகப்பெரு மானால் ஏற்படுத்தப்பட்ட ஆறு. சேயாற்றின் கரையில் உள்ள ஊர் மாகறல். இந்தத் திருக்கோயிலின் இரண்டு தீர்த்தங்களுள் ஒன்று அக்னி தீர்த்தம்; மற்றது சேயாறு. சேயாற்றங்கரை மண்டபத்தில் தான், தல விநாயகரான பொய் யாப் பிள்ளையார் இருக்கிறார். இந்த விநாயகருக்காக ஒரு தனிப் பாடலே உண்டு.
வெய்யாக் கதிரவன்முன் இருள்போல வினையகற்றும் கையானே யான்தொழ முன் நின்று காத்தருள் கற்பகமே செய்யாற்றின் வடபால் இருக்கின்ற செங்கண்மால் மருகா பொய்யா விநாயகனே திருமாகறல் புண்ணியனே!
சேயாற்றின் கரையில் நின்று மாகறல் ஆண்டவ னின் விமானத்தைப் பார்க்கிறோம். ஞானசம்பந்தர் விழி முன் தெரிகிறார். இந்தத் தலத்துக்கு அவர் பாடிய பதிகத்துக்கே ‘வினை தீர்க்கும் பதிகம்’ என்று பெயர். பழங்காலம் மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் மட்டுமல்லாமல், சமீப காலச் சிறப்பும் இந்தத் தலத்துக்கும், பதிகத்துக்கும் உண்டு. சேலத்தில் சுப்பராயப் பிள்ளை என்று ஒருவர்; அவருடைய 84-வது வயது வாக்கில், கீழே விழுந்து அடிபட்டதால், வலது தொடை எலும்பும் விலா எலும்புகளும் முறிந்து போயின. வேறு காயங்களும் ஏற்பட, இடுப்புக்குக் கீழே செயலற்ற நிலையில், மருத்துவ முறைகள் பயனற்றுப் போக, திருமுறை பாராயணம் செய்துள்ளார். சைவத் திருமுறையில் கயிறு சார்த்திப் பார்த்தாராம் (திருமுறைகளில் ஏதாவது ஒரு பகுதி யில் கயிற்றை வைத்துப் பிரிப்பார்கள். அதில் எந்தப் பகுதி வருகிறதோ அதைப் பாராயணம் முதலாக அனுபவத்தில் கொண்டு வருவார்கள்). இந்தத் தலப் பதிகம் வந்ததாம். இங்கேயே வந்து தங்கிப் பாராயணம் செய்து வழிபட, பூரண குணம் பெற் றுள்ளார். இது 1940-50களில் நடந்துள்ளது.
இந்தக் கோயிலின் அறங்காவலரான வேலூர் எம். நடராஜ முதலியார் குடும்பத்திலும் பற்பல நல்ல நிகழ்வுகளுக்கு இந்தத் தல ஈசரே காரணம் என்று நம்புகிறார்கள். பிள்ளைப் பேறு இல்லாதவர்கள், இங்கு வந்து வழிபட்டு, அங்கப் பிரதட்சிணம் செய்தால், மகப்பேறு வாய்க்கும்; இன்றளவும் பலரும் செய்து பயன் பெற்று வருகிறார்கள்.
திங்கட் கிழமைகளில் இங்கு தரிசனம் செய்வது, எல்லை யற்ற நற்பலன்களைத் தரும். வினை தீர்க்கும் பதிகத்தை ஓதிக் கொண்டே, ‘எங்கள் வினை யாவும் போக்கி அருளும் பரம னாரே!’ என்று பணிந்து வணங்கி, விடை பெறுகிறோம்.
No comments:
Post a Comment