‘தரும மிகு சென்னை’ என்றார் வள்ளலார் பெருமான். எத்தனை விதமான தர்மங்கள் உண்டோ, அத்தனையும் சென்னை மாநகரத்தில் அந்தக் காலத்தில் செழிப்போடு விளங்கியதையே வள்ளலார் ஸ்வாமிகள் இப்படிச் சொன்னார். மனிதனை, மனிதனாக வாழ வைக்கும் கல்வி நிலையங்கள்... வறியவர்களின் நிலை கண்டு கலங்கி, உதவிய வள்ளல்கள்... பக்தியையும் பண்பாட்டையும் அருளிய திருத்தலங்கள்... இப்படி சென்னை மாநகரத்தில் எதற்குமே பஞ்சம் இருந்ததில்லை!
என்றும் அழியாத செல்வமான கல்வியை பிறருக்கு அருளிய வள்ளல்களும், தங்களிடம் இருக்கும் பொருள்களைப் பிறருக்கு அள்ளித் தந்த வள்ளல்களும், கிடைத்தற்கரிய ஞான பொக்கிஷத்தை ஈந்த அருள் வள்ளல்களும் அன்றைய சென்னை மாநகரத்தில் அதிகம். அறம் வளர்க்க மனம் வேண்டும். ஆன்மிகம் தழைக்க ஆலயம் வேண்டும். சென்னை மாநகரத்தில் அறமும் ஆன்மிகமும் தழைத்தோங்கியுள்ளன. சைவமும் வைணவமும் செழித்து வளர்ந்த பூமி சென்னை. கணபதி வழிபாடும் அம்மன் வழிபாடும் இந்த நகரில் ஏராளம்.
இங்குள்ள ஆலயங்களில் வருடத்தின் எல்லா நாட்களுமே திருவிழா நாட்கள்தான். இந்த சென்னை நகர ஆலயங்களின் பெருமைகளையும் புகழையும் விளக்குவதே, ‘சென்னை நகரத்தின் சீர்மிகு கோயில்கள்’ என்ற இந்தப் பகுதி...
வாருங்கள், தரிசனம் செய்வோம். சக்திக்கே முதல் மரியாதை! எனவே, ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலில் இருந்தே நமது தரிசனத்தை ஆரம்பிப்போம்.
‘‘எங்க அப்பா அடிக்கடி சொல்வார்... ‘கோயிலுக்கு வர்ற எல்லாப் பெண்களுக்கும் தவறாம பிரசாதம் கொடுத்து அனுப்பு. ஏன்னா, அம்பாள் எந்த ரூபத்துலேயும் வரலாம். பணக்காரியாவோ... பிச்சைக்காரியாவோ வரலாம்... பொறுமை இல்லாம இருக்கலாம்... ‘கொஞ்சம் தள்ளி உக்காந்திண்டிருக்காளே... கைக்கு எட்டற தொலைவுல அவா இல்லையே’னு அலட்சியமா இருந்துடாதே... எல்லார்கிட்டயும் போய் சிரிச்ச முகத்தோட பிரசாதம் கொடு. இது வெறும் குங்குமம் மட்டும் இல்லே... ஒவ்வொருத்தரோட குடும்பம் செழிச்சு வளர அம்பாள் தரும் மங்கலச் சின்னம்!’னு சொல்வார். அதை நானும் என் சகோதரர்களும் இன்னமும் கடைப்பிடிச்சுண்டு வர்றோம்.
ஆலய வழிபாடுகள் பத்தி கோயில் அறங் காவலர்கள்கிட்ட பேசிண்டிருப்பேன். திடீர்னு ஒரு பெண்மணி வந்து, ‘சாமீ... குங்குமம் குடுங்க’னு கேப்பார். உடனே அவருக்கு குங்குமம் கொடுத்து அனுப்பிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப் பேன்!’’ என்றார் சண்முகம் சிவாச்சார்யர். இவர் சென்னை- காளிகாம்பாள் ஆலயத்தின் பிரதான அர்ச்சகர்களுள் ஒருவர். இவரின் தந்தை அமரர் டி.எஸ். சாம்பமூர்த்தி சிவாச்சார்யர். கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக் கும் மேற்பட்ட கும்பாபிஷே கங்களை நடத்தி வைத்தவர்.
சென்னை நகரின் பரபரப்பான தம்புச் செட்டித் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீகாளிகாம்பாள் திருக்கோயில். எந்த நேரமும் குடும்பத்தினர், அலுவலகம் செல்வோர் என்று தாய்மார்கள் கூட்டம் இங்கு அதிகமாகவே இருக் கும். எல்லோருக்கும் ஒரே வரிசைதான். அவசரமாக அலுவலகம் செல்பவர்களுக்கெனத் தனியாக ‘ஃபாஸ்ட் ட்ராக்’ (இப்படித்தான் சொல்கிறார் சண்முகம் சிவாச்சார்யர்). அதாவது காளிகாம்பாளைச் சற்றுத் தள்ளி நின்று தரிசித்து, அங்கிருக்கும் அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் வாங்கிக் கொண்டு விறுவிறுவென்று செல்லலாம். இன்னொன்று- ஸ்லோ ட்ராக். இங்கு வந்திருக்கும் பக்தர்கள் நிதானமாக அம்பாளுக்கு முன்பாகத் தரையில் அமர்ந்து தரிசனம் செய்யலாம். ஆரத்தி காட்டியதும் அர்ச்சகர் வெளியே வந்து பிரசாதம் தருகிறார்.
எந்தவிதப் பாகுபாடும் இன்றி எல்லோரையும் தன்பால் ஈர்க்கும் சக்தி வாய்ந்தவள் இந்த காளிகாம்பாள். முக்காலங்களையும் அறிந்து பக்தர்களைக் காப்பவள் என்ற பொருளில் ‘காளிகாம்பாள்’ எனலாம். பொதுவாக காளி என்றால், செக்கச் சிவந்த விழிகளும், கோரப் பற்களும், நீளமாகத் தொங்கும் செந்நிற நாக்கும், கழுத்தில் மண்டை ஓடுகளால் ஆன மாலையும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இங்கு குடி கொண்டிருக்கும் அன்னை காளிகாம்பாளோ அமைதியே வடிவானவள். அவளின் சாந்த சொரூபத்தையும் சிரித்த முகத்தையும் இடைவிடாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
அம்பாளை தரிசிக்குமுன், ஆலய வரலாற் றைத் தெரிந்து கொள்வோம்.
இந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீகாளிகாம்பா ளின் பூர்வீகம், தற்போது இருக்கும் இந்த தம்புச்செட்டித் தெரு அல்ல. இந்த காளிகாம்பாள் ஆதியில் குடி கொண்டிருந்த இடம்- தற்போது அரசு அலுவலகங்கள் நிறைந்த செயின்ட் ஜார்ஜ் கோட் டைப் பகுதி. சுமார் 400 வருடங்களுக்கு முன் வியாபார நிமித்தமாக சென்னைக்கு வந்த ஆங்கிலேயர்கள், தங்கள் வசதிக்கேற்ப சில இடங்களை விலைக்கு வாங்கி, வணிகப் பொருட்கள் மற்றும் தங்க ளது பாதுகாப்புக்காகக் கோட்டை- கொத்தளங்கள் கட்டிக் கொண்டனர். அப்படி கட்டப்பட்ட ஒன்றுதான் செயின்ட் ஜார்ஜ் கோட்டை.
இங்கு கோட்டை- கொத்தளங்கள் வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிலிருந்தே இந்தப் பகுதியில் கோயில் கொண்டிருந்தவள் அருள்மிகு காளிகாம்பாள். அப்போது, இந்த காளிகாம்பாளை ‘சென்னம்மா’ என்றும் ‘சென்னம்மன்’ என்றும் பக்தர்கள் அழைத்தனர். இந்த அம்பாளுக்கு, சென்னம்மன் என்ற பெயர் வந்தது எப்படி?
கோயில் இருந்த கடலோரப் பகுதியில் வசித்த மீனவரும் பிற இனத்தவரும் தங்கள் காவல் தெய்வமான இந்த அம்மனுக்கு அன்றாடம் செந்தூரம் அர்ப்பணித்து வழிபட்டு வந்தனர். இதனால், ‘செம்மேனி அம்மன்’ என்னும் பொருள் கொண்ட ‘சென்னம்மா’ என்ற பெயரில், ஆரம்பத்தில் இந்த அம்மனை அழைத்ததாகச் சொல்கிறார்கள். இந்த பெயருக்கு இன்னொரு விளக்கமும் உண்டு. வங்காள விரிகுடா கடல் பகுதியில் அப்போது ‘சென்னா’ என்ற ஒரு வகை மீன் அதிகம் காணப்பட்டது. அதனால் இந்தப் பகுதி மீனவர்களின் வலைகளில் அவைதான் அதிகமாகச் சிக்கு மாம். எனவே, ‘சென்னா’ மீன் போன்ற அழகிய கண்களை உடையவள் ஆதலால், இந்த அம்பாளுக்கு ‘சென்னம்மன்’ என்று பெயர் வந்ததாகவும் சொல் கிறார்கள். (ஆங்கிலேயர்கள் புதிதாக கோட்டை- கொத்தளங்கள் கட்டிய பின் சென்னம்மன், ‘கோட்டம்மன்’ என்ற புதுப் பெயர் பெற்றதாகவும் கூறுவர்). ‘சென்னம்மன்’ என்ற இந்த அம்பாளின் பெயரில் இருந்தே மதராஸுக்கு ‘சென்னை’ என்ற பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். போகட்டும். வரலாற்றுக்குள் அதிகம் போகாமல் வழிபாட்டுக்கே மீண்டும் வருவோம்.
சென்னம்மன் குடியிருந்த கோயில் இடத்தையும் வளைத்துக் கோட்டை- கொத்தளங்கள் கட்டி விட்ட தால், மக்கள் முன்பு போல் அங்கு சென்று அவளை வழிபட முடியவில்லை. கோட்டைக்குள் எளிதில் நுழைய முடியாத அளவுக்கு ஆங்கிலேயர்களின் கெடுபிடி அதிகம். இதனால் சென்னை நகரத்தில் வசித்த பக்தர்கள் ‘நினைத்த நேரத்தில் சென்று வழிபட முடியவில்லையே...’ என்று வருந்தினர். எனவே, சென்னம்மன் ஆலயத்துக்குப் பொறுப்பாக இருந்து வந்தவர்களிடம், ‘‘எங்களைக் காக்கும் காவல் தெய்வத்தை அடிக்கடி வந்து வழிபட முடியவில்லை. எனவே, நாங்கள் சுலபமாக எப்போது வேண்டுமானாலும் வந்து சென்னம்மாவை வழிபடுவதற்கு ஆங்கிலேய அதிகாரிகளிடம் பேசி, ஒரு நல்ல வழியை ஏற்படுத்திக் கொடுங்கள்!’’ என்று கோரிக்கை வைத்தனர்.
அதனால் ஆலயப் பொறுப்பாளர்கள், ஆங்கிலேய அதிகாரிகளைச் சந்தித்து இது குறித்துப் பேசினர். சென்னம்மன் கோயில் தங்களது கோட்டைக்குள் இருப்பது அவர்களுக்கும் சங்கடமாகவே இருந்தது போலும். அதனால், ‘‘வாருங்கள்... இது சம்பந்தமாக நாங்களே உங்களிடம் பேசலாம் என்று இருந்தோம். சென்னம்மன் கோயில், கோட்டைக்குள் இருப்பதால் எங்களுக்கும் சிக்கல்கள். உங்களாலும் சரியாக வழிபட முடியவில்லை. உங்களது முறைப்படி வழிபாடு தொடர வேண்டுமானால், இந்த அம்பாளை கோட்டைக்கு வெளியே எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல் லுங்கள். புதிதாக கோயிலை நிறுவிக் கொள்ளுங் கள். அதற்குத் தேவையான ஒத்துழைப்பையும் உதவியையும் நாங்கள் தருகிறோம்!’’ என்றனர் ஆங்கிலேய அதிகாரிகள்.ஆலயப் பொறுப்பாளர்களும் இதற்கு உற்சாகத்துடன் ஒப்புக் கொண்டனர். அதன் பிறகுதான் கோட்டைக்குள் இருந்த கோயில், இப்போதுள்ள பகுதிக்கு இடம் மாறியது. இந்த இடத்தில் ஆலயம் கட்டப்பட்ட பிறகே சென்னம்மன், ‘ஸ்ரீகாளிகாம்பாள்’ என அழைக்கப்பட்டாள். சரி, இனி ஆலய தரிசனம்.
கிழக்கில் பிரதான வாயில். ராஜ கோபுரம். தாண்டி யதும் அர்ச்சனைப் பொருட்கள் விற்கும் கடைகள். உள்ளே நுழைந்தவுடன் வலப் பக்கம் சுதையினால் ஆன பிரமாண்ட ஸ்ரீப்ரத்யங்கிராதேவி. அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் இந்தச் சந்நிதி முன் ஹோமம் நடைபெறுகிறது. செவ்வாய்க் கிழமைதோறும் மாலை சுமார் 6 மணி அளவில் பெண்களுக்கு பூஜிக்கப்பட்ட ‘ரட்சை’ தருகிறார்கள். உடல் நலம் குன்றியோர், மகப்பேறு வேண்டுவோர், உத்தியோகம் கிடைக்க விரும்புவோர் என அனைவரும் இங்கு வந்து ‘ரட்சை’ பெற்றுச் செல்கிறார்கள். இதற்குத் தனியாகக் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. ‘‘காளிகாம்பாளுக்கு தினமும் அபிஷேகம் செய்த மஞ்சள், மகப்பேறு இல்லாதவர்களுக்கு அம்மனின் பிரசாதமாகத் தரப்படுகிறது. இதை உட்கொண்டால், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது சத்தியம். அப்படிப்பட்டவர்கள் எங்களிடம் வந்து, மஞ்சள் பிரசாதம் பெற்றுச் சென்று பலன் அடைந்து வருகிறார்கள்!’’ என்கிறார் காளிதாஸ் சிவாச்சார்யர்.
ஸ்ரீப்ரத்யங்கிராதேவி சந்நிதிக்கு அருகில் இருந்து உற்சவர் காளிகாம்பாளை தரிசிக்க முடிகிறது. பிராகாரத்தில் ஏராளமான சந்நிதிகள். இடச் சுற்றின் துவக்கத்தில் சத்ரபதி சிவாஜி மற்றும் சுப்ரமணிய பாரதியார் காளிகாம்பாளை வழிபடும் காட்சி சுதைச் சிற்பமாக உள்ளது. மராட்டிய மாவீரன் சிவாஜி 3.10.1677 அன்று இந்த ஆலயத்துக்கு விஜயம் செய்து அம்பாளை தரிசித்துச் சென்றாராம். முகலாயர்கள் மற்றும் சுல்தான்களுடன் இடைவிடாமல் போராடிய சத்ரபதி சிவாஜி, ஒரு தீவிர அம்பாள் பக்தர். தென் னகப் படையெடுப்பின்போது அவர் காஞ்சி, செஞ்சி, பறங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளை வென்று சென் னைக்குள் அடியெடுத்து வைத்தார். அப்போது அவரும் அவர் படை வீரர்களும் தங்கிய இடம் இந்த காளிகாம்பாள் கோயிலை ஒட்டிய பகுதிதான் என்கிறார்கள்.
தனது வெற்றிகள் பலவற்றுக்குக் காரணம் அன்னை பவானியின் அருளே என்று பரிபூரணமாக நம்பியவர் சிவாஜி. எனவே, தனது வெற்றியைச் சமர்ப்பிக்கும் பொருட்டு, ஸ்ரீகாளிகாம்பாளின் காலடியில் தனது வீர வாளை வைத்து வணங்கிச் சென்றாராம்.
மகாகவி சுப்ரமணிய பாரதியார், தம்புச் செட் டித் தெருவில் இருந்த பத்திரிகை அலுவலகம் ஒன்றில் சில காலம் பணிபுரிந்தார். அப்போது அடிக்கடி இங்கு வந்து காளிகாம்பாளை உளமாரத் தொழுது, அவள் மேல் பாடல்கள் பாடி தனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளார். அடுத்து, ஸ்ரீஸித்தி விநாயகர் சந்நிதி. இவர் வெள்ளிக் கவசம் அணிந்து காணப்படுகிறார். ஆலயத்தின் மேற்கில் ஒரு வாசல். சூலம், கொடிமரம். துவார பாலகியர். சூலத்தில் பிரார்த்தனைக்காகச் செருகப்பட்ட எலுமிச்சம் பழங்கள். அடுத்து வள்ளி- தேவசேனாவுடன் வட கதிர்காம முருகன். இங்கே ஆயிரக்கணக்கான முறை திருப்புகழ் பாராயணம் நடந்திருக்கிறது. மயில் வாகனம். பலிபீடம். அடுத்து, ஸித்தி-புத்தி விநாயகர், உற்சவர் ஷண்முகர், அகோர வீரபத்திரர்- மாகாளி, நாகேந்திரர், விராட் விஸ்வபரப்ரம்மம், காயத்ரிதேவி, உற்சவர் துர்காதேவி, அருணாசலேஸ்வரர், நவக்கிரகம், நடராஜர்- சிவகாமி, பள்ளியறை என்று சந்நிதிகள் நீள்கின்றன.
அகோர வீரபத்திரருக்கு இங்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன. எட்டுக் கரங்களு டன் காட்சி அளிக்கும் இவர் பில்லி- சூன்யம் போன்றவற்றில் இருந்து பக்தர்களைக் காக்கிறார். பௌர்ணமி மற்றும் சில விசேஷ தினங்களில் வெற்றிலை மாலை சார்த்தி இவரை வழிபட்டால், தீய சக்திகள் நம்மை விட்டு நீங்கும்.
அதேபோல் காயத்ரி மாதா சந்நிதி. கண் கவரும் வடிவம். சாதாரணமாகப் பிற ஆலயங்களில் காணக் கிடைக்காத சந்நிதி. இந்த அன்னை முன் அமர்ந்து காயத்ரி மந்திரம் ஜபிப்பது சிறப்பு.
விஸ்வபரப்ரம்மம்_ அதாவது விஸ்வகர்மா. தேவ சிற்பியான விஸ்வகர்மாவின் வம்சத்தவர்தான் ஆலய அறங்காவலர்களாக இருப்பதால், சமீப காலத்தில் விஸ்வகர்மாவுக்கும் ஒரு சந்நிதி ஏற்படுத்தி வழிபட்டு வருகிறார்கள். அமாவாசை தினங்களில் மாலை நேரத்தில் இவருக்குச் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
பிராகார வலம் முடிந்து அன்னையை தரிசிக்கச் செல்கிறோம். பதினாலு கால் மண்டபத்தில், மகாலட்சுமி- காளிகாம்பாள்- சரஸ்வதி என முப்பெரும் தேவியரும் அருள்பாலிக்கின்றனர். காளிகாம்பாளின் இருபுறமும் மகாலட்சுமியும், சரஸ்வதியும் சாமரம் வீசும் கோலத்தில் காட்சி தருகின்றனர்.
அன்னை காளிகாம்பாளின் கருவறை. அமைதி நிரம்பிய சந்நிதி. மேற்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள் அன்னை.
வலது மேல் கரத்தை அங்குசமும், இடது மேல் கரத்தை பாசமும் வலது கீழ்க்கரத்தை நீலோத்பல மலரும் அலங்கரிக்கின்றன. இடது கீழ்க்கரம் வரத முத்திரை காட்டுகிறது. இடக் கால் மடக்கி, வலது கால் பாதம் தாமரை மலர் மீது படிந்தவாறு காணப்படுகிறது. இதை அர்த்த பத்மாசன கோலம் என்கிறார்கள்.
மகாலட்சுமி மற்றும் சரஸ்வதியை தன் இரு கண்களாகக் கொண்டவள் என்பதால் காமாட்சி என்றும் இந்த அன்னையை அழைப்பதுண்டு. ஆகவே, காளிகாம்பாளை வழிபட்டால், கல்வி செல்வத்துடன் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அன்னை சந்நிதி முன் அவளது நாமத்தை ஜபிக்கும் போது இனம் புரியாத பரவசத்தை நம்மால் உணர முடிகிறது. தினந்தோறும் இந்த அன்னையை தரிசிக்க பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். அன்னையின் திருவுருவத்துக்கு முன் ஸ்ரீசக்ர அர்த்தமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்ரீசக்ரத்தில் பீஜாட்சர மந்திரம் உள்ளது. இந்த அன்னை ஸ்ரீசக்ர மந்திராதிபதியாக திகழ்கிறாள். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அன்னையை தரிசிப்பது பெரும்பேறு.
உள்ளேயே ஸ்ரீகமடேஸ்வரர் மற்றும் பரிவார தேவதைகளின் சந்நிதிகள்.
இந்தக் கோயிலில் நவராத்திரி, சித்திரை வசந்த நவராத்திரி, வைகாசி பிரம்மோற்சவம், ஆடிப் பெருவிழா போன்ற பல வைபவங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன. வைகாசி பிரம்மோற்சவத்தில், 9-ஆம் நாளன்று நடைபெறும் கிண் ணித் தேர் இங்கு பிரபலம். வெண்கலக் கிண்ணிகளால் செய்யப்பட்ட இந்தத் தேரில் அம்மன் பவனி வருவது கண் கொள்ளாக் காட்சி. ஆங்கிலேயர்கள் இந்த ரதத்தை வெண்கலக் கோப்பை ரதம் ( Brass Cup Chariot ) என்று வியப்புடன் அழைத்தனராம்!
இங்கு தினந்தோறும் ‘நவாவர்ண பூஜை’யும் சிறப்பு தினங்களில் கன்னி பூஜை, கோ பூஜை, திருவிளக்கு பூஜை போன்றவையும் நடைபெறுகின்றன.
கருணை பொங்கும் அன்னை காளிகாம்பாளை தரிசித்து விட்டு வெளிவரும் பக்தர்கள் முகத்தில் நம்பிக்கை ஒளி விடுகிறது. பின்னே, அன்னையின் அருள் பார்வை பக்தர்கள் மீது பட்ட சுகத்தை விட வேறென்ன வேண்டும்?!
No comments:
Post a Comment