திருக்கண்களை மெள்ளத் திறந்தார் சிவபெரு மான். நந்திதேவர், சிறிது நேரமாகச் சுற்றிச் சுற்றி வருகிறார். எம்பெருமான் எப்போது திருக்கண்களைத் திறந்து நோக்குவார் என்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்து சிவபெருமான், நந்திதேவரை ஏறிட்டுப் பார்த்தார்.
“பிரம்ம தேவர் வெகுநேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்!”- நந்திதேவர்.
உள்ளுக்குள் நகைத்துக் கொண்ட சிவபெருமான், அவரை வரச் சொல்லி, கைகளால்
சமிக்ஞை காட்டி னார். ‘பாவம், பிரம்மா. பிரளயம் நெருங்க நெருங்க, அவரது தவிப்பு அதிகமாகி விட்டது!’
உள்ளே வந்து, அடிபணிந்து நின்ற பிரம்மாவை ஆதூரத்துடன் அணைத்துக் கொண்ட சிவபெருமான், அவரை அருகிலிருந்த ஆசனத்தில் அமர வைத்தார்.
“திசைமுகரே... என்ன கலக்கம்?”
“பிரளயம் நெருங்குகிறது பிரபோ. அடுத்த சிருஷ்டிக்கானவற்றை எங்கே வைப்பது என்று புரியவில்லை.”
“கவலைப்படாதீர்கள். வழி சொல்கிறோம். மாறுதலின்றிச் செயல்படுங்கள்.”
ம று சிருஷ்டி தொடங்கும்போது என்னென்ன தேவைப்படுமோ, அவற்றையெல்லாம் சிவபெருமான் சொன்னபடியே, சொன்ன இடத்தில் வைத்தார் பிரம்மா.
சிறிது மண்ணெடுத்தார்; அதில் அமுதம் விட்டுப் பிசைந்தார். மண்ணைக் குழைத்துக் கலசமாக்கினார். கலசத்தில் அமுதத்தை ஊற்றினார். அமுதத்துக்குள் சிருஷ்டி பீஜத்தைப் புதையச் செய்தார். பீஜத்தைச் சுற்றிலும் வேதங்களை வைத்தார். இன்னும் சிறிது அமுதம் ஊற்றி, கலசம் முழுவதும் நிரம்பும்படி செய் தார். கலசத்தில் மாவிலைக் கொத்தைச் செருகினார். தேங்காயை மேலே வைத்தார். புனித நூலும் தர்ப்பையும் சார்த்தினார்.
வில்வ இலைகளையும் சந்தனத்தையும் கொண்டு கலசத்தை பூஜித்தார். கல சத்தை ஓர் உறியில் வைத்துக் கட்டினார். உறியோடு சேர்த்துக் கொண்டு போய், மேரு மலையின் தெற்குப் பகுதியில் ஓரிடத்தில் வைத்து விட்டார்.
சி றிது காலம் கழிந்த பின் (துவாபர யுக முடிவில்), பிரளயம் ஏற்பட்டது. எல்லாமும் பிரளயத்தில் மூழ்கி அழிந் தன. மேரு மலையின் தெற்கிலிருந்த உறி நழுவி, பிரளய நீரில் தென்திசை நோக்கி நகர்ந்தது. நெடுந்தூரம் சென்ற பின்னர், கலசத்தின் தர்ப்பையும் மாவிலைகளும் கீழே விழுந்தன. அங்கு வன்னி மரங்களும் லிங்கமும் தோன்றின. சமிவனம் என்று அந்த இடத்துக்குப் பெயர் ஏற்பட்டது; லிங்கமும் சமிவனே சர் என்ற பெயர் கொண்டது. அமுதக் கலசமோ தென்கிழக்காக நகர்ந் தது. கலசத்தைக் கட்டியிருந்த உறி (சிக்கம்), கிழக்குத் திசையில் விழுந்தது. அங்குதான் சோமநாதர் கோயில் உரு வானது. தேங்காய், இன்னும் சிறிது தென்கிழக்கே விழுந்து லிங்கமாக உருவானது. அதுவே நாரிகேள லிங்கம் (அபிமுகேசம்) என்று பெயர் பெற் றது. இன்னும் சற்றுத் தள்ளி வில்வம் விழுந்து லிங்கமும் தோன்றியது. இதுவே நாகேஸ்வரர் கோயிலானது. கலசத்தைச் சுற்றியிருந்த புனித நூல் (பூணூல்) விழுந்து சிதறிய இடத்தில் தோன்றிய லிங்கம் உபவீதேசர் (இப்போதைய கௌதமீசர்) ஆனது. அமுதக் கலசம் பிரளய நீரில் மிதந்து, குறிப்பிட்ட இடத்தை அடைந்த பின்னர், சிவபெருமான் வேடன் வடிவம் தாங்கினார். தமது வில்லும் அம்பும் எடுத்து நாணேற்றினார். அம்பு, அமுதக் கலசத்தைக் கிழித்துக் கவிழ்த்தது. கலசத் தின் வாய்ப் பகுதி விளிம்பு, தெறித்து விழுந்தது. அதுவே குடவாயில் என்னும் திருத்தலமானது. சிவபெருமான் நின்று அம்புப் பிரயோகம் செய்த இடம், பாணபுரி (பாணாதுறை) ஆனது; ஈசனோ பாணபுரீசர் ஆனார். கலசம் குப்புறக் கவிழ்ந்ததால், அதிலிருந்த அமுதம் நான்கு திசை களிலும் பெருகிப் பாய்ந்தது. இரண்டு இடங்களில், குளமாகவும் அமுதம் தேங்கி நின்றது. இரண்டு குளங்களும் முறையே பொற்றாமரைக் குளமாகவும் மகாமகக் குளமாகவும் அழைக்கப்படுகின்றன.
அமுதக் கலசம் தங்கிய இடம் என்பதால், இந்தத் திருத்தலம் கும்பகோணம் ஆனது. இலக்கியங்களில் குடமூக்கு (கும்பத்தின் மூக்குப் பகுதி - அமுதம் வழிந்த பகுதி) என்று குறிப்பிடப் பட்டாலும், மக்கள் வழக்கில் கும்பகோணம்தான். குடமூக்கின் வழியாக, நாற்புறமும் அமுதம் பரவியதால், இது கும்பகோணம் என்று குறிப்பிடுவார் மகாகவி பாரதியார்.
பி ரளயத்துக்குப் பின், அமுதக் கலசம் தங்கி நிலைபெற்று, கும்பகோணமும் பிற தலங்களும் உருவான நிகழ்வுகள், மாசி மாதத்தில் நடந்ததாகப் புராணங்களும் ஆகமங்களும் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பிரம்மா, மாசி மாதத்தில் இங்கு இறை வன்- இறைவிக்கு பெருவிழா நடத்தினார். அப்போது முதலே மாசி மாதம் என்றால், கும்பகோணத்தில் கொண்டாட்டம்தான்!
கு டமூக்கு என்னும் கும்பகோணத் திருத்தலம் போவோம், வாருங்கள்!
குடந்தை என்றும் குடமூக்கு என்றும் கல்வெட்டுகள் வழங்கும் கும்பகோணம்...
பதினான்கு தீர்த்தங்களும் பதினான்கு திருக் கோயில்களும் உள்ளதாக வர்ணிக்கப்படுவதும், 7-ஆம் நூற்றாண்டில் மூலைக்கூற்றம் என்று பெயர் பெற்றிருந்ததுமான கும்பகோணம்...
ஆண்டுதோறும் மாசி மகத் திருவிழா வும், இன்னும் சிறப்பாக, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகப் பெரு விழாவும் நடைபெறும் கும்பகோணம்...
9-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் சோழ அரசர்களின் தலைநகரமாகத் திகழ்ந்த கும்பகோணம்...
ஆராவமுதத்து ஆழ்வார் என்று பெருமா ளுக்கே ஆழ்வார் திருநாமம் கூறும் பெருமையும், ‘ஸெளந்தர்யம் பிரசித்தம்’ (அழகே பிரபலம்) என்று வைணவ உரைகளில் குறிப்பிடும் பெருமையும், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான பெருமையும், திவ்ய தேசங்களிலேயே ‘உபய பிரதான திவ்ய தேசம்’ (மூலவருக்கு எவ் வளவு முக்கியத்துவமோ அவ் வளவு முக்கியத்துவம் உற்சவருக்கும் உண்டு. இரட்டை முக்கியத்துவம் என்பதுதான் உபய பிரதானம்) என்ற புகழ் மிக்க கும்பகோணம்...
எங்கு செய்த பாவத்தையும், இல்லாமல் செய்யும் தன்மை கொண்டது என காசி காண்டம் புகழும் கும்பகோணம்...
அறுபத்துமூவருள் ஒருவரான மூர்க்க நாயனார் வாழ்ந்த... அப்பரும் சம்பந்தரும் அருணகிரிநாதரும் வள்ளலாரும் பாடிப் பரவிய கும்பகோணம்...
ஆஹா! எத்தனை பெருமைகள்... அந்த அற்புத நகரத்துக்குத் திருவுலா செல்வோமா?
கும்பகோணத்தில் பற்பல கோயில்கள் உண்டு. இவற்றுள் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில்கள் மூன்று. குடமூக்கு (கும்பேஸ்வரர் கோயில்), குடந்தை கீழ்க்கோட்டம் (கும்பகோணம் நாகேஸ்வரம் கோயில்), குடந்தைக் காரோணம் (பலருடைய எண்ணப்படி சோமேஸ்வரர் கோயில்; காசி விசுவநாதர் கோயில் என்றும் கூறுவதுண்டு) ஆகிய மூன்றுள், குடமூக்குக்கு ஞானசம்பந்தரின் பதிகமும், நாவுக்கரசரின் பதிகமும் உள்ளன. குடந்தை கீழ்க் கோட்டத்துக்கு நாவுக்கரசரின் பதிகம் உள்ளது; குடந்தைக் காரோணத்துக்கு ஞான சம்பந்தரின் பதிகம் உள்ளது.
‘குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்து அரனைக் குறுகலாமே’
என்று அப்பர் பெருமான் பாடியருளிய கும்ப கோண ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் முன்னால் நிற்கிறோம். கும்பகோணத்தின் தலைமைக் கோயில் என்றே இதைக் குறிப்பிடலாம். கும்பகோணத் திரு நகரின் நடுநாயகமாக விளங்கும் இந்தக் கோயில், சுமார் 750 அடி நீளம், 252 அடி அகலம் கொண்டு பெரியதொரு செவ்வகமாக விளங்குகிறது. கடை கண்ணிகள் சூழ்ந்திருப்பதால், வெளியிலிருந்து பார்த் தால் தெரியவில்லையே தவிர, கோயிலின் மொத்தப் பரப்பளவு சுமார் நான்கு ஏக்கராம்!
தெற்குத் திசை தவிர, பிற திசைகளில் கோபுரங் களைக் கொண்டுள்ள இந்தக் கோயிலின் கிழக்கு ராஜ கோபுரம், ஒன்பது நிலைகளுடன் உயரமாக ஓங்குகிறது. அழகழகான பொம்மைகளோடு காட்சியளிக்கும் 128 அடி உயர ராஜ கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால், கோயிலின் வெளிப் பிராகாரத்தை அடை கிறோம். விசாலமான- விசேஷமான பிராகாரம். ஆதி விநாயகர் சந்நிதி, ஆதி சிவன் சந்நிதி, தண்டபாணி சந்நிதி, கும்பமுனி சந்நிதி, சட்டைநாதர் சந்நிதி என்று பற்பல சந்நிதிகள் நிறைந்த பிராகாரம் இது.
அதென்ன ஆதிவிநாயகர்? அமுதக் கலசம் தங்கிய இடத்தில், மண்ணையும் அமுதத்தையும் குழைத்து லிங்கம் ஏற்படுத்தி, அதனுள் தாமே புகுந்து, சிவ பெருமான், ஆதிகும்பேசர் ஆனார். அம்பிகையும் உடன் தோன்றி மங்க ளாம்பிகை ஆனார். அம்மையும் அப்பனும் இங்கு எழுந்தருள்வதற்கு முன்னால், தாமும் முன் தோன்றி அவர்களை வழிபட்டு நின்றாராம் விநாயகர். எனவே, ஆதிவிநாயகர் என்று பெயர் பெற்றார்.
இதே பிராகாரத்தில், அகத்தியராம் கும்பமுனியும் எழுந்தருளியுள்ளார். கும்பத்திலிருந்து தோன்றியவர் என்ப தால் கும்பமுனி என்றும், கலச முனி என்றும், குட முனி என்றும் அழைக் கப்படுகிற அகத்தியருக்குப் பொதிய மலைச் சித்தர் (பொதிய மலையில் தங்கியதால்) என்றும், குறு முனி (குள்ளமாக இருப்பதால்) என்றும் பெயர்கள் உண்டு. அக ஒளி (உள் ஒளி) பெற்றவர் என்பதால், சித்தர்கள் இவரை அகத்தியர் என்று அழைத்தார்கள்.
முத்தமிழ் அறிஞர்- இசைவாணர்- அஷ்டமா ஸித் திகள் கைவரப் பெற்றவர்- சிவபெருமானிடமும் முரு கப் பெருமானிடமும் நேரடி உபதேசம் பெற்றவர்- காவிரி தோன்றக் காரணமானவர்- தமிழ் மொழியை உலகுக்கு அளித்தவர், உலகைச் சமன்படுத்தியவர் என்று இவருடைய பெருமைகள் ஏராளம். பேரகத் தியம், சிற்றகத்தியம், பெருந்திரட்டு, ஆயுர்வேத பாடியம், வைத்திய சிந்தாமணி, சத்திசாலம், சண்முக சாலம் போன்ற நூல்களை இவர் இயற்றினார் என்று சொல்லப்படுகிறது. தமிழ் இலக்கண நூலான அகத்தியம் கிடைக்கவில்லையாயினும், அதன் பாடல்கள் பல, பல உரையாசிரி யர்களால் எடுத்தாளப்பட்டுள்ளன. அந்தக் கால மருத்துவர்கள், மூலிகைகளைப் பறிக்கும்போது, அகத்தியரின் பெயரைச் சொல்லி ஆசி பெற்றுத்தான் பறிப்பராம். அகத்தியர் கோயில் கொண்டிருப்பதால், கும்பகோணத்துக்கு முனியூர், அகத்தியன் பள்ளி, அகஸ்தீஸ்வரம் ஆகிய பெயர்களும் வழங்கப்படு கின்றன. லோபாமுத்திரை மணா ளரும், ஸ்ரீராமனுக்கு அருள் வழங்கியவருமான அகத்தியரை வழிபட்டு மீள்கிறோம்.
இதே பிராகாரத்தில்தான், தல மரமான வன்னி மரம் அமைந்துள்ளது. மங்கள தீர்த்தம் எனப்படுகிற குளத்தின் கரையில் நிற்கிறோம். புனிதம் நிறைந்த இதன் கரையில் உள்ள வசந்த மண்டபத்தில்தான், வைகாசி மாதம் நடைபெறும் கல்யாண உற்சவத் தின்போது, ஐயனும் அம்மனும் ஒருசேரக் காட்சி கொடுப்பார்கள். வெளிப் பிராகாரத்திலிருந்து அடுத்த பிராகாரத்துக்குள் நுழைவதற்கான மூன்று நிலை கோபுரம் வழியாகப் புகுகிறோம். நுழைவு வாயிலில், இடப் புறம் முற்றவெளி விநாயகர்; வலப் புறம் பாலதண்டாயுதபாணி. வணங்கி உள்ளே சென்றால், எதிரே கொடி மரம். கொடி மரத்தில் அருள் வழங்கும் விநாயகர். இரண்டாம் பிராகாரத்தில் வலம் வரும் போது, லட்சுமி நாராயணப் பெருமாளை வழிபடலாம். கொடி மரத்துக்கு வடகிழக்கில் எழுந்தருளி சேவை சாதிக்கும் பெருமாள் வெகு விசேஷமானவர்.
இந்தப் பிராகாரத்திலிருந்து உள் பிரா காரத்துக்குச் செல்லும் வழிக்கு முன்பாக உள்ள முன் மண்டபம், மங்கள விலாச மண்டபம் என்றும் அலங்கார மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. எழிலான வேலைப்பாடுகளோடு கூடிய தூண்கள் பரவசப்படுத்துகின்றன.
வலப் பக்கம் உள்ள நவக்கிரகச் சந்நிதியை வணங்கியவாறு உள் பிராகார வாயிலை அடைகிறோம். வாயிலின் ஒரு பக்கம் வல்லப கணபதி; மற்றொரு பக்கம் வள்ளி- தேவசேனா சமேத முருகப் பெருமான். வாயிலுக்கு முன்பாக கனகம்பீரமாக வீற்றிருக்கும் நந்திதேவரையும், நுழைவாயிலின் இடப் புறத்தில் காட்சி தரும் அதிகார நந்தியையும் வணங்கிவிட்டு உள் பிராகாரத்தை அடைகிறோம்.
உள் பிராகாரத்தில் எதிரே அருள் முகம் காட்டு கிறார் அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர்.
மேற்குத் திருச்சுற்றில் மேலும் தொடர... பிட்சாடனர், சண்முகர், கார்த்திகேயர், அக்ஷய லிங்கம், கோடி லிங்கம், அன்னபூரணி, கஜலட்சுமி, சரஸ்வதி, ஜேஷ்டாதேவி ஆகியோர் வரிசையாக அருள் பாலிக்கின்றனர். வடக்குச் சுற்றில் திரும்பும்போது, அம்பாள் சந்நிதியையும் சேர்த்து வலமாக வந்து விடுகிறோம். அம்பிகையின் சந்நிதி. அருள் மிகு மங்களாம்பிகை என்னும் மங்களநாயகி.அவரை வழிபட்டபடி, உள் பிராகார வலம் தொடங்கு கிறோம். கிழக்குச் சுற்றில்தானே நிற்கிறோம். முதலில் சூரியன். தெற்குச் சுற்றில் திரும்ப... சைவ நால்வரும் பின்னர் வரிசையாக அறுபத்துமூவரும் தரிசனம் தருகிறார்கள். அடுத்து வீரபத்திரர். பின்னர் சப்தகன்னியர். அதற்கும் பின்னர் அட்ட லிங்கங்கள். தென்மேற்கு மூலையில், கொள்ளை அழகுடன் காட்சி தரும் வலஞ்சுழி விநாயகர்.
சுவாமி சந்நிதிக்கு வடக்குப் புறத்தில் (சுவாமிக்கு இடப் புறத்தில்), கிழக்குப் பார்த்த தனிச் சந்நிதி. அம்பாள் அழகென்றால்... கொள்ளை அழகு! தாமரைப் பீடத்தில், நின்ற திருக்கோலத்தில் அருள் வழங்கும் சதுர்புஜ நாயகி. அம்பாளின் கரங்கள் சற்றே வித்தியாசமானவை. வலது மேல் கரத்தில் கெண்டி, இடது மேல் கரத்தில் ஜப மாலை, வலது கீழ்க் கரம் அபய ஹஸ்தம், இடது கீழ்க் கரம் ‘ஊரு ஹஸ்தம்’ (தொடை மீது ஊன்றியபடி). பல கோயில்களில் விஷ்ணு துர்க்கை இவ்வாறு ‘ஊரு ஹஸ்தம்’ தாங்கியிருப்பதைக் காணலாம் (திருப்பதி வேங்கடேசப் பெருமாள் ஊரு ஹஸ்தம் கொண்டிருப்பார்).
இதழ்க் கடையோரங்களில் தவழும் இனிய புன்னகை அப்படியே வசப்படுத்துகிறது. இதையெல்லாம் விட இன்னோர் அற்புதமும் இருக்கிறது. அம்பாளின் திருப்பாதங்களைக் காண்கிறோம். வலப் பாதத்தை, இடப் பாதத்தை விட லேசாக முன்னால் வைத்து, பக்தர்கள் கூப் பிட்ட குரலுக்கு ஓடி வரத் தயாராக நிற்கிறாள் அம்பிகை.
ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலின் அம்பாள் சந்நிதி சிறப்பு வாய்ந்தது. அம்பிகையின் அருள் பீடங்களில் ஒன்றாகவும், மந்திர பீடமாகவும் திகழ்கிறது இது. இதனாலேயே, அம்பாளுக்கு மந்திர பீடேஸ்வரி என்றொரு திருநாமமும் உண்டு. அமுதக் குடத்தை உடைத்து, பின்னர், மண்ணையும் அமுதத்தையும் குழைத்து லிங்கம் செய்தாரல்லவா சாட்சாத் சிவபெரு மான். தாமே அந்த லிங்கத்துக்குள் ஆவிர்பவித்து, பின்னர், தாமே பூஜையும் செய்தாராம். எனவே, ஆதி கும்பேஸ்வரர் சுயம்புவானவர் மட்டுமல்ல; தம்மைத் தாமே பூஜித்தவரும் ஆவார் (இந்தக் காரணம் பற்றியே, பிரம்மோற்சவப் பெருவிழாவில், ஐந்தாம் நாள் பூஜையில், தன்னைத்தானே பூஜை செய்யும் வைபவம் நடைபெறுகிறது). அனைத்து மந்திர சக்திகளையும் ஒன்று சேர்த்த சிவபெருமான், அதையே பீடமாக்கினார். அன்னை பார்வதி தேவியை, அந்தப் பீடத்தில் எழுந்தருளச் செய்தார். அம்பிகையும், ‘மந்திர பீடேஸ்வரி மங்களாம்பிகை’ என்ற திருநாமத்துடன் எழுந்தருளி அருள் பாலிக்கிறாள்.
அம்பாளின் சக்தி பீடங்கள் 51 என்று வணங்கப்படுகின்றன (69 மற்றும் 108 என்றும் சில கணக்குகள் உண்டு). காமகிரி பீடம், ஜாலாந்திர பீடம், ஒட் யாண பீடம், பூரணகிரி பீடம் என்னும் நான்கு பீடங்கள் மிகுந்த சிறப்பு பெற்றவை. இந்த நான்கும் ஒன்று சேர்ந்து மந்திர பீடமாகும்.
மங்கலங்களைத் தருவதால், ‘மங்கலை’ என்றும் அழைக் கப்படும் மந்திரபீடேஸ்வரியான அன்னை, குண்டலினி ஆதார சக்கரங்களில் நிலைபெற்றும் அருள்கிறாள். மூலாதாரத்தில்- மந்திரபீடேஸ்வரி, சுவாதிஷ்டானத்தில்- மங்கலை, மணிபூரகத்தில்- துர்கடார்த்த பிரதாயினி, அனாஹதத்தில்- கனகாம்பிகை, விசுத்தியில்- ருக்விபேதிநி, ஆக்ஞையில்- சர்வ சிதபிரதா என்ற நிலைகளில் ஆற்றல் தரு கிறாள்.
அம்பாள் சந்நிதிக்கு எதிரில் ரிஷப வாகனம். அம்பாள் சந்நிதியின் துவாரபாலகியராக ஜயா, விஜயா. அம்பாள் சந்நிதியின் மூன்று பக்கங் களிலும் பஞ்ச மாதாக்கள் காட்சி தருகின்றனர். மங்களாம்பிகை மீது, மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ‘ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ்’ பாடினார்.
தானே தனக்குச் சரியாய தாயே வருக உரைக்க வினை தடிவாய் வருக நினைக்க முத்தி தருவாய் வருக மலர் பொதிந்த கானே புரையும் கருங்கூந்தல் கவுரி வருக மெய்ஞ்ஞான கரும்பே வருக அருள் பழுத்த கனியே வருக தெவிட்டாத தேனே வருக ஆனந்தத் திருவே வருக பெருவேதச் செல்வி வருக எங்கள் குலதெய்வம் வருக உருகுநர் உள் மானே வருக இமயவரை வனிதாய் வருக வருகவே மறைவாழ்த்தொலிசால் திருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே
என்று அவர் பாடியதையே நாமும் பாடி அம்பாளை வணங்குகிறோம். அம்பாள் சந்நிதியை விட்டு வெளியே வந்து விட்டோம். இன்னும் உள் பிராகார வலத்தை நாம் நிறைவு செய்யவில்லையே... உள் பிராகாரத்தின் வடக்குச் சுற்றில் பள்ளியறை. அதை அடுத்து நவநீத விநாயகர்.
நவநீத விநாயகரா? ஆமாம். அதுவொரு சுவாரஸ்யமான கதை. காமதேனுப் பசு ஒரு முறை, சத்ய லோகம் சென்றது. போகிற அவசரத்தில் துர்வாசரின் கால்களை மிதித்து விட்டது. கோபக்காரராச்சே... ‘இந்தா பிடி!’ என்று சாபம் கொடுத்து விட்டார். பாலும் மற்ற எல்லாமும் அற்றுப் போக வேண்டும் என்று அவர் சபித்து விட்டார்.
தவித்துப் போன காமதேனு, பிரம்மாவிடம் ஆலோ சனை கேட்டது. பிரம்மா உய்யும் வழி சொன்னார். கும்பகோணத்தில், காவிரிக் கரையில் உள்ள காஸ்யப தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீமங்களாம்பிகை உடனாய ஸ்ரீகும்பேஸ்வரரை வழிபட்டால் சாபம் தீரும் என்றார். காமதேனுவும் அவ்வாறே செய்ய, அப்படியும் சாபம் தீரவில்லை.
என்ன செய்வதென்று அறியாமல் தடுமாறிய காமதேனுவுக்கு ஆறுதலாக ஓர் அசரீரி எழுந்தது. ‘கணபதியை வழிபட்டால் சாபம் நீங்கும்’. காமதேனு காவிரியில் காஸ்யப தீர்த்தமாடியது. கும்பேஸ்வரர் ஆலயத்தை அடைந்து அம்பிகையின் இடப் புறம் கண பதியை பிரதிஷ்டை செய்தது. தனது குளம்புகளால் தோண்டி தீர்த்தம் வரவழைத்தது. கணபதியையும், அம்பாள்- சிவனையும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழி பட்டது.
என்ன அற்புதம்! பூஜை செய்யும் காமதேனுவின் மடி பொங்கி வழிந்து, பால் பிரவாகமெடுத்தது. ஒரே பால் வெள்ளம். பக்தி வெள்ளத்தில் பூரித்த காமதேனு, பாலின் வெண்ணெய் எடுத்து கணபதியின் திருமேனியில் பூசி வழிபட... இதுதான் நவநீத கணபதி எழுந்தருளிய கதை. காமதேனுவின் குளம்புகளால் உண்டான தீர்த்தமே குர தீர்த்தம் (குரம் என்றால் குளம்பு என்றும் பொருளுண்டு; பசு என்றும் பொருளுண்டு).
குர தீர்த்தத்தில் நீராடி, கணபதிக்கு வெண்ணெய்க் காப்பிட்டு, அம்பிகையையும் அப்பனையும் வழிபட் டால், எல்லா வித தோஷங்களும் பாவங்களும் நீங்கும். அடுத்திருக்கும் மூர்த்தம் மனதைக் கவர்கிறது. வேடராக... கையில் வில்லேந்தியவராக... இவர்தாம் கிராதமூர்த்தி. வேட வடிவம் தாங்கி, அமுதக் கலசத்தை வில்லால் அடித்து உடைத்தாரே, அந்தச் சிவனாரின் வடிவமே கிராதமூர்த்தி. நவநீத விநாயகருக்கு வெண்ணெய்க் காப்பிட்டு, கிராதமூர்த்தியை வணங்கினால், மகப்பேறு இல்லாதவர்களுக்குக் கட்டாயம் மகப்பேறு கிட்டும் என்பது பலரது அனுபவ உண்மை.
வடக்குச் சுற்றிலேயே பைரவர், ஜ்வரஹரேஸ்வரர், சாஸ்தா ஆகியோரது சந்நிதிகளும் உள்ளன.
வடக்குச் சுற்றில் இருக்கும் தெய்வத் திருமேனி களுக்கு நடுவில், மேற்கு நோக்கி இரண்டு பேர். ‘அத்வைத வித்யா ஆசார்ய’ என்று மதிக்கப்பட்ட வரும், தஞ்சாவூர்- கும்பகோணம் பகுதிகளில் நிரம்ப சமய-ஆன்மிகப் பணிகளுக்குக் காரணகர்த்தாவாக விளங்கியவருமான கோவிந்த தீட்சிதர் மற்றும் அவரின் திருத்துணைவியார்.
பிராகார வலத்தை நிறைவு செய்து படியேறினால், நடராஜ சபை. அடுத்துள்ள வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் தரிசனம்.
அருள்மிகு கும்பேஸ்வரர். கிழக்கு நோக்கிய சிவலிங்கத் திருமேனி. மணலையும் அமுதத்தையும் குழைத்து ஏற்படுத்தப்பட்ட லிங்கமல்லவா, லேசாகச் சாய்ந்த பாணம்; கீழே பருத்து, நுனியில் சிறுத்து... பாணத்தின் நுனி, கும்பத்தின் நுனியைப் போலவே உள்ளது. பௌர்ணமி தோறும், புனுகுச் சட்டம் சார்த்தப்படுகிறது.
பூமேய வாரணனும் நாரணனும் வாரணனும் பொற்பூ மாலைத் தேமேய விண்ணவரும் நண்ணவரும் பசுமுலதாம் சிறப்பு நல்கி மாமேய குடமூக்கின் இடமூக்கின் பார்கருணை வடிவின் மேய பாமேய புகாதி கும்பேசர் தாமரைத்தாள் பணிந்து வாழ்வாம்
என்று திருக்குடந்தைப் புராணம் போற்றுகிற கும்பேஸ்வரர். அமுத கும்பேஸ்வரரை வணங்கி மீண்டும் வலம் வருகிறோம். மூலவரைச் சுற்றியுள்ள சந்நிதிகளில், தெற்குப் புறம் உள்ள சோமாஸ்கந்தர் சந்நிதியும், மூலவருக்குப் பின்புறம் உள்ள முருகப் பெருமான் சந்நிதியும் குறிப்பிடத் தக்கவை. முருகப் பெருமான், மயிலுடனும் திருவாசியுடனும் காட்சி யளிக்கிறார். ஒரே கல்லில் செய்யப்பட்டுள்ள இந்த முருகன் விக்கிரகத்தில் ஆறுமுகங்களில் ஐந்து முகங்கள் முன்புறமும், ஒரு முகம் பின்புறமும் உள்ளன. ஆறு முகங்கள். கரங்களும் ஆறுதாம். ஆறு முகங்களும், ஆறு கரங்களும் கொண்ட இந்த வித்தியாசமான வேலவரை அருணகிரிநாதர் பாடிப் பரவுகிறார்.
சண்டிகேஸ்வரர் தனி மண்டபத்தில் வீற்றிருக்க... கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா. ‘குழகன்’ என்று கொஞ்சலாக ஞானசம்பந்தப் பெருமான் அழைக்கும் அமுத கும்பேஸ்வரரை வழிபட்டு வெளி வருகிறோம். நடராஜ சபையில் நின்று ஆடல்வல்லானை தரிசிக்கிறோம். எழில் கோலம்.
அம்பலவாணனையும் சிவகாமியம் மையையும் கண்டு நிற்கும்போதே, ஆதிகும்பேஸ்வரத் திருக்கோயிலின் சிறப்புத் திருவிழாக்கள் பற்றிய எண்ணங்கள அலைமோதுகின்றன.
கும்பகோணம் என்றதும் எல்லோர் நினைவிலேயும் முதலில் தோன்றுவது மகாமகத் திருவிழாதான். பன்னி ரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு, சிம்ம ராசியில் இருக்கும் மாசி மக நாளில், மகாமகப் பெருவிழா கொண் டாடப் பெறுகிறது. அன்று, வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிற ஆதிகும்பேசர், பஞ்சமூர்த்திகளோடு நின்று, மகாமகத் தீர்த்தக் கரையில் தீர்த்தவாரி கொடுப்பார். அந்த நாளில், கங்கை முதல் சரயு வரையான புண்ணிய நதிகளின் தேவதைகள் அனைவரும், இந்தக் குளத்தில் நீராடி, தங்கள் பாவங்களையெல்லாம் போக்கிக் கொள்கின்றனர்.
ஊழிப் பிரளயம் முடிந்த பின்னர் பிரம்மா, ஆதிகும்பேஸ்வரரை மாசி மகத் திருநாளில் குளத் துக்கு எழுந்தருளச் செய்து, திருமஞ்சனம் ஆட்டி பூஜித்தார். அதனால், ஆண்டுதோறும் இங்கு மாசி மகம் விசேஷமானது.
சித்திரை மாதத்தில் இங்கு நடைபெறும் ‘சப்த ஸ்தானப் பெருவிழா’ இன்னுமொரு சிறப்பு. ஆதிகும்பேஸ்வரரும் மங்களாம்பிகையும் மகாமகக் குளத்துக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து திருக்கலய நல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவிரி ஆகிய தலங்களுக்குச் சென்று வருவார்கள். அலங்கரிக்கப்பட்ட பல்லக் கில், சுவாமி- அம்பாள் உற்சவர்கள் காட்சி கொடுத்து வருகிற அழகே அழகு.
ஆதிகும்பேஸ்வரரின் பல்வேறு விழாக்களை எண்ணி மகிழ்ந்தபடி திருக்கோயில் பிராகாரங் களிலும் மண்டபங்களிலும் நடக்கிறோம். கோயில் மண்டபச் சிற்பங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. உள் மண்டபத் தூண்களின் சிற்பங் கள், நவராத்திரி மண்டபத்தில் ஒரே கல்லில் உள்ள இருபத்தேழு நட்சத்திரங்கள் மற்றும் பன்னிரண்டு ராசி சிற்பங்கள் ஆகியவை பார்த்துப் பார்த்துப் பரவசப் பட வேண்டியவை ஆகும்.
கும்பகோணத்தில் நின்று கொண்டு கோவிந்த தீட்சிதரை நினைக்காமல் இருக்க முடியாது. ஏற்கெனவே, இவரை நாம் உள் பிராகாரத்தில் சந்தித்திருக்கிறோம்.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கோவிந்த தீட்சிதர், தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்களின் அமைச்சராக இருந்தார். சேவப்ப நாயக்கர், அச்சுத நாயக்கர், ரகுநாத நாயக்கர் ஆகியோர் தஞ்சாவூர் நாயக்கர்களில் பெரும் புகழ் பெற்றவர்கள். அடுத்தடுத்து ஆண்ட இவர்களுக்கு மந்திரியாக மட்டுமல்லாமல், உற்ற நண்பனும், உயர் வழிகாட்டியுமாக விளங்கிய கோவிந்த தீட்சிதர், தஞ்சை- குடந்தை பகுதிகளில் பற்பல ஆன்மிகப் பணிகள் செய்யப்படுவதற்குக் காரணமானார்.
பட்டீஸ்வரத்தில் ஒரு சிறிய இல்லத்தில் தனது வாழ் நாளை செலவிட்ட தீட்சிதர், நாயக்க மன்னர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். மகாமகத் திருக்குளத்தைத் திருப்பணி செய்து, அதைச் சுற்றிலும் படிகள் கட்டி, மண்டபங்கள் அமைத்து, சிவலிங்க ஆலயங்களைப் பிரதிஷ்டை பண்ணியவர் தீட்சிதர்தான். மகாமகக் குளக்கரையில் துலாபார மண்டபம் ஒன்றுள்ளது. கல் சிற்பம் ஒன்றில், துலாக்கோலில் அமர்ந்திருக்கும் தீட்சிதரும் இருக்கிறார். துலாபாரத்தில் எடைக்கு எடை தங்கம் தந்து மன்னர் இவரை கௌரவப்படுத்துகிறார். துலாபாரத் தங்கத்தை எல்லாம் கோயில் திருப்பணி களுக்கே செலவிட்ட தீட்சிதர், ராமசாமி கோயிலில் அற்புதமான ராமாயண ஓவியங்கள் தீட்டப்படச் செய்தார். திருவையாறு தொடங்கி திருவலஞ்சுழி, கும்பகோணம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களில், காவிரிக் கரையில் கட்டப்பட் டுள்ள இரட்டை விமான புஷ்ப மண்டபங்கள், இவரின் கைங்கரியமே! பட்டீஸ்வரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், ராமேஸ் வரம் கோயில் திருப்பணிகள் இவர் சேவையே!
தர்ம நூல்களில் சொல்லப்பட்டுள்ள மகா தானங்கள் பலவற்றைச் செய்தார். மகாதானபுரம், திருவிடைமருதூர், மாயூரம், திருவெண்காடு ஆகிய ஊர்களின் மகா தானத் தெருக்கள் இவரால் நிர்மாணிக்கப் பட்டவை. ஈச்சங்குடி, வரகூர், கண்டமங்கலம் போன்ற கிராமங்களை ஏற்படுத்தி அவற்றையும் தானமாக வழங்கினார்.
கோவிந்த தீட்சிதர், ‘ஐயன்’ என்றழைக்கப்பட்டார். ‘தீட்சிதர் ஐயன்’ என்றே பிரிட்டிஷ் கெஸட்டில் குறிக்கப்பட்டார். கும்பகோணத்திலும் தஞ்சையிலும் உள்ள ஐயன் தெருக்கள், ஐயன்குளம், ஐயம்பேட்டை, மணக்கால் ஐயம்பேட்டை, ஐயன் வாய்க்கால், கோவிந்தபுரம் ஆகிய பெயர்கள் இவரையே சுட்டு கின்றன. ‘அத்வைத வித்யா ஆசார்யர்’ என்றழைக்கப் பட்ட தீட்சிதர் பல கலைகளிலும் வல்லவர்; இசை வித்தகர். 1542-ல், காவிரியின் தென்கரையில், வேத- சாஸ்திரக் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தோடு ‘ராஜா வேத காவ்ய பாடசாலை’யை நிறுவினார். இன்றளவும் இந்தப் பாடசாலை சிறப்பாகச் செயல் பட்டு வருகிறது. கோவிந்த தீட்சிதர் தமிழுக்கும், இசைக்கும், தென்னகப் பண்பாட்டுக்கும் அளித்துள்ள பங்கு அலாதியானது. ‘சங்கீத சுதா நிதி’ என்னும் இசை நூலைக் கொடுத்துள்ளார். மிகப் பெரிய ஞானியான அப்பய்ய தீட்சிதர், இவரிடமிருந்து ஊக்கம் பெற்றார்.
‘சதுர் தண்டி பிரகாசிகா’ என்னும் கர்னாடக இசை நூலை இயற்றியவரும், 72 மேளகர்த்தா ராக முறையை வகைப் படுத்தியவருமான வேங்கடமஹி, தீட்சிதரின் இரண்டாவது மகனாவார். ஸ்ரீகாஞ்சி காம கோடி பீடத்தின் 64-வது ஆசார்யராக 1813 முதல் 1850 வரை விளங்கிய ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவா மிகள், கோவிந்த தீட்சிதர் பரம்பரையில் வந்தவர்.
கிட்டத்தட்ட தனது 120-ம் வயதில், மனைவி நாகம்மாளோடு, குடமூக்கு மங்களாம்பிகையை தரி சித்த படி நின்றார் தீட்சிதர்- இருவரும் தியானத்திலேயே இறைவியோடு இரண்டறக் கலந்து விட்டார்கள். அதுதான் கிழக்கு நோக்கிய அம்பாள் சந்நிதியைப் பார்த்தபடி (மேற்கு நோக்கியபடி), வடக்குப் பிராகாரத்தில் லிங்கரூபமாக தீட்சிதரும், பிம்ப ரூபமாக மனைவி நாகம்மாளும் காட்சி தருகிறார்கள். ‘தீட்சிதர் ஐயனே! கோடானுகோடி நன்றி’ என்று கூறிக் கொண்டே வெளிப் பிராகாரத்தில் நடக்கிறோம். மூர்க்க நாயனார் பற்றிய தகவல்கள் முகம் காட்டுகின்றன.
அவர் ஒரு வேடிக்கையான பக்தர். சென்னைக்கு அருகில் உள்ள திருவேற்காட்டில் தோன்றியவர் மூர்க்கர். சிவனடியார்களுக்கு உணவு படைத்துவிட்டு, அவர்கள் வேண்டியதெல்லாம் கொடுத்து விட்டு, தான் உண்ணும் வழக்கம் உடையவர். மூதாதையர் சொத்தெல்லாம் கரைந்தது. மூர்க்கரோ எந்த வேலை யும் செய்யாதவர். பணம் குறையக் குறைய..., என்ன செய்வது என்று யோசித்தார். அவருக்கு நன்றாகச் சூதாட வரும்; திருவேற்காட்டில் சூதாடுவோர் கிடைக்கவில்லையாம். ஊர் ஊராகத் திரிந்தார்; ஆங்காங்கே சூதாடினார்; கிடைத்த பொருள் கொண்டு அடியார் சேவை புரிந்தார். கடைசியில் கும்பகோணம் அடைந்தார். அங்கேயே வாழ்ந்து, சூதாடிப் பொருள் சேர்த்துத் தொண்டுகளைத் தொடர்ந்தாராம்.
கொண்ட பொருள் கொண்டு
அன்பர்க்கு அமுதளிக்கும்
கொங்கையினர் திருக்குடந்தை
குறுகியுள்ளார்
என்று இவரைப் பற்றிச் சேக்கிழார் பாடுகிறார். குடமூக்குப் பெருமானின் பெருமைகளை நினைத்து வணங்கியவாறே அந்தப் புண்ணியத் தலத்தில் இருந்து விடைபெறுகிறோம்.
No comments:
Post a Comment