முருகப் பெருமானுக்கு 6 முகங்கள், 12 கரங்கள்’ என்று ஞான நூல்கள் சொன்னாலும், முருகப் பெருமான் 2, 3, 4, 5 என முகங்கள் கொண்டு, சில தலங்களில் தரிசனம் தருகிறார். அவற்றில் சில:
பழநியில், ஒரு முகம் மற்றும் இரு கரங்களுடன் ஆண்டி கோலத்தில் அருள் புரிகிறார். இங்கு ராஜ அலங்காரத்துடன் உற்சவர், ஒரு சிரம்- இரு கரங்களுடனும் காட்சி தருகிறார்.
பழநி மலை மேல் உள்ள மண்டபம் ஒன்றின் முகப்பிலும், இலஞ்சி எனும் தலத்திலும், 10 தலைகள் கொண்ட முருகப் பெருமானின் சுதையாலான திருவுருவைக் காணலாம்.
ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை தலத்தில், 2 முகங்கள் மற்றும் 8 கரங்களுடன் காட்சி தரும் முருகப் பெருமானை தரிசிக்கலாம். இந்தத் திருக்கோயிலின் தென் புறம்- வெளிப்புற மாடத்தில் உள்ள இவரை ஜாதவேத முருகன் என்பர். இது, யாகம் வளர்ப்பது போன்ற திருஉருவம் கொண்டது.
திருச்சியிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ள உய்யக்கொண்டான் திருமலைத் தலத்தில் மலையேறும் பாதையில் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயத்தில், 3 முகம் மற்றும் 12 திருக்கரங்களுடன் தரிசனம் தருகிறார் முருகப் பெருமான்.
பெரியார் மாவட்டம், காசியம்பாளையத்தில் உள்ள கோயிலில் 3 முகங்கள் மற்றும் 6 திருக்கரங்களுடன் காட்சி தருகிறார் முருகப் பெருமான்.
சென்னிமலை முருகன் கோயில் வட புறத்தில் உள்ள கோமுகையின் மேற்புறம், 4 முகங்கள் மற்றும் 6 கரங்கள் கொண்ட ‘சவுரபேய முருகன்’ காட்சி தருகிறார்.
கோவை மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகில் இரும்பறை என்ற ஊருக்கு ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள ஓதிமலை (ஞானமலை)யின் மேல் 5 முகங்கள் மற்றும் 8 திருக்கரங்களுடன் பாலசுப்பிரமணியம் என்ற பெயரில் காட்சி தருகிறார் முருகப் பெருமான். இங்குதான் முருகப்பெருமான், பிரம்மனை தலையில் குட்டி சிறையில் அடைத்தார் என்று புராணம் கூறும். பிரம்மன் சிறையிலிருந்து தப்பிச் செல்லாமல் இருக்க ஒரு முகமும், 4 கைகளும் கொண்டு, மலை மேலே இருந்து கீழே இறங்கி காவல் காக்க வந்ததால், மலை மேல் உள்ள முருகனுக்கு 5 தலைகள் என்கிறார்கள்.
திருச்செந்தூர் மற்றும் சில தலங்களில் 6 முகங்கள் மற்றும் 12 கரங்கள் கொண்ட திருவுருவத்தைக் காணலாம். இவரை ஸ்ரீசண்முகர், ஸ்ரீதாரகாரி என்றும் கூறுவர்.
திருவண்ணாமலை, சென்னிமலை, பட்டீஸ்வரம், திருவிடைக்கழி, காஞ்சி, திருவேற்காடு, திருக்கடையூர் அருகில் உள்ள திருமயானம் (திருமெய்ஞ்ஞானம்) ஆகிய இடங்களில் வில்லேந்திய வேலனாகக் காட்சி தருகிறார் முருகப் பெருமான்.
|
Friday, 11 August 2017
முருகப் பெருமானின் திருமுகங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment