குரு பகவானை வழிபட்டால், கல்வி மற்றும் ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இப்படிப்பட்ட குரு பகவான், சில திருத்தலங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறு குரு வழி பட்ட தலங்களில் சில:
திருவாரூர்- நாகை பாதையில் கீவளூருக்கு அருகில் உள்ள திருத்தேவூரில் அருள் புரியும் தேவபுரீஸ்வரரை தேவர்கள் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். வியாழனான குரு பகவான், இங்கு தவமிருந்து ஈசனை வழிபட்டு ‘தேவ குரு’ பதவியைப் பெற்றாராம்.
மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் மயூரநாதர் சமேத அபயாம்பிகை அருள் புரிகின்றனர். கை காட்டும் வள்ளல், வாக்குக் காட்டும் வள்ளல், துறை காட்டும் வள்ளல், வழிகாட்டும் வள்ளல் என்றும் அழைக்கப்படும் இந்த இறைவனையும் குரு பகவான் வழிபட்டு வரம் பெற்றார்.
சென்னை- ஆவடி சாலையில் உள்ள திருவலிதா யம் ஸ்ரீஜெகதாம்பாள் சமேத ஸ்ரீவல்லீஸ்வரர் திருக் கோயிலில் அருள் புரியும் இறைவனையும், அம்பா ளையும் குரு பகவான் வழிபட்டு அருள் பெற்றார். இங்குள்ள சிவபெருமானை வழிபட்டால் குரு தோஷம் நீங்கும்.
குடந்தையில் உள்ள சோமேசர் திருக்கோயில் இறைவன் சோமேஸ்வரர்; அம்பாள் சோமசுந்தரி. இவர்களை வழிபட்டு குரு பகவான் பேறுகள் பெற்றார். இதுவும் குருதோஷ நிவர்த்தித் தலமாகக் கருதப்படுகிறது.
குரு பகவான் வழிபட்ட திருத்தலங்களைப் போல், ஞான குருவான தட்சிணாமூர்த்தி அருள் புரியும் திருத்தலங்களும் தமிழகத்தில் உண்டு.
தஞ்சை மாவட்டத்தின் நவக்கிரகத் தலங்களில் ஒன்று ஆலங்குடி. இதுவும் குரு பரிகாரத் தலமே. இந்தத் திருத்தலத்தை இரும்பூறை என்றும் சொல்வர். இங்கு ஸ்ரீதட்சிணாமூர்த்திக்குத் தனி சந்நிதி உள்ளது. வியாழக் கிழமையன்று இங்கு வந்து மஞ்சள் ஆடையையும், கொண்டக் கடலை மாலையையும் அணிவித்து தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்மை பயக்கும்.
காஞ்சிபுரம் அருகில் உள்ள அகரம் கோவிந்த வாடி திருத்தலத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி தனி ஆலயம் கொண்டு அருள் புரிகிறார். இவரை வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் குரு ஓரையில் வழிபட்டால், குரு தோஷம் நீங்கும்.
குடந்தைக்கு அருகில் உள்ள திருப்புறம்பயம் சிவன் கோயிலுக்கு வெளியே ஸ்ரீதட்சிணாமூர்த்தி தனிக் கோயில் கொண்டு அருள் புரிகிறார். இந்தத் தலத்தில் குருப் பெயர்ச்சி பூஜை சிறப்பானது. இவரை வழிபட்டாலும் ஞானம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் சரஸ்வதி கோயில் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலில் அருள் புரியும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை 12 ராசிக்காரர்களும் வழிபட்டு அருள் பெறுகிறார்கள். ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் பீடத்தில் 12 ராசிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது எல்லா ராசிக்காரர்களுக்குமான பரிகாரத் தலம்.
காஞ்சிபுரத்துக்கு வெகு அருகில் இருக்கிறது இளம் பயம்கோட்டூர் என்னும் தலம். இங்கு அருள் புரியும் இறைவன் அரம்பேஸ்வரர்; அம்பாள் கனக குசாம்பிகை. இந்தத் திருக்கோயிலில் யோக தட்சிணாமூர்த்தி அருள் வழங்குகிறார். இவரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, கல்வியில் சிறந்து விளங்கலாம்.
|
Friday, 11 August 2017
குரு பகவான் வழிபட்ட தலங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment