Tuesday, 1 August 2017

கர்மங்களைப் போக்கும் கயிலாசநாதர்!

கா சிக்கும் கயிலைக்கும் போய் புண்ணியம் தேட முடியாதவர்களின் மனக் கவலையைப் போக்குவதற் காகவே தென் கயிலாயத்தில் பிரசன்ன நாயகியுடன் எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீகயிலாசநாதர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு மேற்கே 18 கி.மீ. தொலைவில் இருக்கிறது நெடுங்குடி கிராமம். இங்குதான் காசிக்கு நிகரான தென்கயிலாயம் அமைந்திருக்கிறது.
ஆதி காலத்தில் நெடுங்குடி கிராமம் நெருஞ்சி முட்களும், வில்வ மரங்களும் நிறைந்த மலைப் பிரதேசமாக இருந்தது. சிரஞ்சீவி, பெருஞ்சீவி என்ற அசுர குல சகோதரர்கள் இருவர் ஒரு முறை இந்தப் பகுதிக்கு வந்தார்கள். இந்த வில்வாரண்ய க்ஷேத்திரத்தின் எழில் கண்டு மயங்கியவர்கள், இங்கிருந்து போக மனமில்லாமல் நிரந்தரமாகத் தங்கினர். அசுர குலத்தில் பிறந்தாலும் சிரஞ்சீவி, பெருஞ்சீவி இருவருமே முரட்டுத்தனமான சிவ பக்தர்கள். தினந்தோறும் சிவபெருமானுக்கு விசேஷ பூஜை செய்வது இருவருக்கும் வழக்கம். இதற்காகவே தம்பி சிரஞ்சீவி தினமும் காசிக்குச் சென்று ஒரு சிவலிங்கத்தை எடுத்து வந்து கொடுப்பான். அதை வைத்து உச்சிக் கால பூஜை நடத்துவது பெருஞ்சீவியின் வழக்கம். அப்படி ஒரு நாள், காசிக்கு போன சிரஞ்சீவி, பூஜை நேரத்துக்குள் நெடுங்குடிக்குத் திரும்ப முடியவில்லை. பூஜை நேரம் தவறியதால் பதறிய பெருஞ்சீவி, தம்பிக்காகக் காத்திராமல், தான் அமர்ந்த இடத்திலேயே மண் மேட்டை சிவலிங்கமாகப் பிடித்து வைத்து பூஜித்தான். பூஜை முடிந்த பிறகே நெடுங்குடிக்கு வந்து சேர்ந்தான் சிரஞ்சீவி. தான் வருவதற்குள் அண்ணன் பூஜையை முடித்து விட்டதால் வருந்தியவன், தான் கொண்டு வந்த காசி சிவலிங்கத்துக்கும் பூஜை செய்யுமாறு பெருஞ்சீவியிடம் மன்றாடினான். அவனோ, ‘‘இன்றைய பூஜை முடிந்து விட்டது. இனிமேல் பூஜையெல்லாம் செய்ய முடியாது!’’ என மறுத்தான்.
இதனால் துவண்ட சிரஞ்சீவி சிவ பூஜைக்காக அண்ணனுடன் மல்லுக்கு நின்றான். கடைசியில் அண்ணனை வெல்ல முடியாமல் தோற்றுப் போனவன் நேராக திரு மயம் அரங்கநாதர் ஆலயம் சென்று, அங்கே பெருமாளிடம், மண்ணால் உருவாக்கப்பட்ட பெருஞ்சீவியின் சிவலிங்கத்தை அழிக்க, தனக்கு உதவும்படி வேண்டினான்.
அவனது வேண்டுதலுக்கு இரங் கிய திருமால், ஐந்து தலை நாகத்தை சிரஞ்சீவிக்குப் பக்கபலமாக அனுப்பி வைத்தார். இதை அறிந்த பெருஞ்சீவி, நாகத்திடமிருந்து லிங்கத்தை காப்பாற்றும்படி சிவபெருமானிடம் முறையிட்டான். உடனே, சிவபெருமான் பெரு விரலையும், சுண்டு விரலையும் மேலே தூக்கியபடி தன் ஒரு காலை பூலோகம் நோக்கி நீட்டினார். சூரிய ஒளியில் இந்தக் காட்சி, கருடன் பறந்து செல்வது போல் பூமியில் நிழலாக விழுந்தது. இதைக் கண்டு மிரண்ட ஐந்து தலை நாகம் வந்த வழியே திரும்பிப் போனது. அறிந்தே இந்த நாடகங்களை அரங்கேற்றிய சிவனும், திருமாலும் பிற்பாடு கீழே இறங்கி வந்து அசுரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி நீதி போதனை செய்தனர். அப்போது, ‘‘காசியில் இருந்து நான் கொண்டு வந்த லிங்கத்தை எங்கே வைப்பது?’’ என்று சிரஞ்சீவி கேட்டான். அதற்கு, ‘‘பெருஞ்சீவி உருவாக்கிய சிவலிங்கம் மூலஸ்தானத்தில் கயிலாச நாதராக இருக்கட்டும். நீ கொண்டு வந்த காசி லிங்கம் மூலஸ்தானத்துக்கு வெளியே காசி விஸ்வநாதராக இருக்கட்டும். இது காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட லிங்கம் என்பதால் இந்த ஸ்தலத்துக்கு வருபவர்கள் காசிக்குச் சென்று பெறும் பலனை அடைவர்!’’ என்று கூறி மறைந்தார் சிவபெருமான். அதன்படி ஸ்ரீகயிலாசநாதர் மூலவராக அருள் புரிவதால் இந்த ஸ்தலம் தென் கயிலாயமானது.
கிழக்கே திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகரால் ஆவுடையார் கோயில் எழுப்பப்பட்டது. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்தான் அந்த திருப்பணியை சீரெழிலோடு செய்தான். திருப்பணிகள் முடிந்து மதுரையம்பதிக்குத் திரும்பிய ஜடாவர்மன், வரும் வழியில் தென்கயிலாய மலையின் எழில் கண்டு கயிலாசநாதருக்கும் சீர்மிகு ஆலயத்தை எழுப்பினான். அப்போது அசரீரியாக அவன் காதில் ஒலித்த குரல், ‘இந்த இடத்தில் சக்திக்கும் கருவறை அமைக்குமாறு’ சொன்னது. இதன் பிறகே இங்கே பிரசன்ன நாயகிக்கும் கருவறை எழுப்பினான் ஜடாவர்மன்.
சிவபெருமானுக்குக் கோயில் எழுப்பிய பிறகு கோயிலைச் சுற்றியி ருந்த வில்வ வனத்துக்கு மாடு மேய்க்க யாதவ இனத்தவர் தினமும் வந்து போனார்கள். அவர்கள் கறந்த பாலை, ‘போகும்போது எடுத்துச் செல்லலாம்’ என்று கோயிலின் படிக் கட்டில் வைத்து விட்டுப் போவது வழக்கம். ஆனால், அவர்கள் திரும்பி வந்து பார்க்கும்போது பால் பாத்திரம் காலியாக இருக்க, அதன் கீழே சில்லறைக் காசுகள் கிடக்கும். இது, தொடர் சம்பவமானதால் கயிலாசநாதர்தான் பாலை எடுத்துக் கொண்டு அதற்கான பணத்தை வைக்கிறார் என்று நம்பிய யாதவ மக்கள், கயிலாச நாதருக்கு படிக்காசுநாதர் என்ற பெயரைச் சூட்டினர்.
இங்கு ஒவ்வொரு வருடமும் தைப் பொங்கலன்று அம்மன் சந்நிதிக்கு எதிரே நான்கு பானை களில் பொங்கல் வைக்கப்படுகிறது. இந்தப் பொங்கலுக்கு இன்று வரை யாதவ மக்கள்தான் பால் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.
ஒரு முறை இவர்களுக்கும் பிற சமூகத்தாருக்குமிடையே ஊருக்குள் மனக் கசப்பு ஏற்பட்டதால், அவர்கள் பொங்கலுக்கு பால் கொண்டு வரவில்லை. மற்றவர்கள் இதைப் பெரிதுபடுத்தாமல் மாற்று ஏற்பாடு செய்து பொங்கல் வைத்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் பொங்கல் பானை வெடித்துச் சிதறிக் கோளாறு காட்டியது. உடனே ஊர்க்காரர்கள் கூடி ஆலோசித்து, யாதவ மக்களிடம் சமாதானம் பேசி அவர்களை பால் கொண்டு வரச் செய்து மறுபடியும் பொங்கல் வைத்தார்களாம்.
இங்கு கயிலாசநாதர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. கருவ றைக்கு வெளியே உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கி பிரசன்ன நாயகியும் அவருக்கு அருகே பைரவரும் இருக்கிறார்கள்.
இதே மண்டபத்தில் சூரியன், சந்திரனுக்கும் சிறு சிறு விக்கிரகங்களை சிவன் முகம் பார்க்க வைத்திருக்கிறார்கள். அம்பாள் சந்நிதியும், சிவன் சந்நிதியும் நேர்க் குத்தாக சந்திக்கிற இடத்தில் பத்ம பீடம் இருக்கிறது. தரையில் வட்ட வடிவில் உள்ள இந்த பீடத்துக்கு நேர் மேலே, மண்டபக் கூரையில் பன்னிரண்டு ராசிகளுடன் கூடிய சக்கரத்தை சிற்பமாக வடித்து வைத்திருக்கிறார்கள். புத்தி சுவாதீனமில்லாதவர்கள், பில்லி- சூனியம் பிடித்தவர்கள் இந்த பத்ம பீடத்தில் உட்கார்ந்து நூற்றெட்டு முறை ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி வந்தால், படிப்படியாக நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. வெளி பிரா காரத்தில் பிச்சாடனர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், கருப்பர், லிங்கோத்பவர், வள்ளி- தெய்வானையு டன் முருகன், பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை உள்ளிட்ட தெய்வங்கள் இருக்கின்றனர். பெரும் பாலும் துர்க்கை விக்கிரகங்களை ஆக்ரோஷப் பார்வையுடன்தான் பார்த்திருப்போம். ஆனால், இங்குள்ள துர்க்கை சாந்தமான பார்வையுடன் அருள் பாலிக்கிறாள்.
பிராகாரத்தின் பின் பகுதியில் காசியிலிருந்து கொண்டு வந்த காசி விஸ்வநாதர் இருக்கிறார். கோயில் வளாகத்துக்குள்ளேயே மாப்பிள்ளை கொன்றை மரமும், பாலை மரமும் இருக்கின்றன. சாந்தி, பீமரத சாந்தி, பவளவிழா, சதாபிஷேகம் உள்ளிட்ட விழாக்களுக்கு இந்த மரங்களிலிருந்து குச்சி எடுத்துக் கொண்டு போய் வணங்கினால், ஆயுள் சிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிரஞ்சீவியின் வேண்டுதலை ஏற்று திருமால் அனுப்பிய ஐந்து தலை நாகம் ஊர்ந்து வந்த பாதை இப்போது சர்ப்ப நதியாக ஓடுகிறது. காசிக்குப் போய் முன்னோருக்கு கர்மம் பண்ண முடியாதவர்கள் இங்கு வந்து சர்ப்ப நதியில் தர்ப்பணம் செய்கிறார்கள். இதனால் காலப்போக்கில் கயிலாசநாதர் ஆலயம் தென் கயிலாயமாகி விட்டது.
ஆனியில் லட்சார்ச்சனை, ஆடியில் விளக்கு பூஜை, இப்படி முக்கிய வைபவங்கள் பல இருந்தாலும் மகா சிவராத்திரியும், வைகாசி விசாகமும்தான் இங்கு ஜனத்திரளைக் கூட்டும் திருவிழாவாக நடை பெறுகிறது. மகா சிவராத்திரிக்கு பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, புதுக்கோட்டை, காரைக்குடி.. என பல முனைகளிலிருந்தும் பக்தர்கள் காவி கட்டி பாத யாத்திரையாக இங்கு வருகிறார்கள். வைகாசி விசாகத்துக்குப் பத்து நாள் திருவிழா. இதில் ஒன்பதாவது நாள் தேரோட்டத்தில் அம்மன் தனியாகவும், பஞ்ச மூர்த்திகள் தனியாகவும் தேர் பவனி வந்து பக்தர்களை பரவசமூட்டுகிறார்கள்.

No comments:

Post a Comment