Tuesday, 1 August 2017

சூரியன் வழிபடும் சிவ ஸ்தலங்கள்!


ந்துப் புராணங்களில் சிவபெரு மானின் அம்சமாக சூரியனைக் கூறுவது சைவ மரபு. சிவபெருமா னின் எட்டு வடிவங்களில் ஒன் றாகத் திகழும் சூரியனுக்கு, சிவாலயங்களில் சிவ பூஜையுடன் தனி வழிபாடுகளே செய்யப்படுகின்றன. உலக உயிர்களுக்கு ஒளியையும், உயிர்ச் சத்தையும் அளிக்கும் சூரியனைப் பற்றி பல்வேறு செய்திகள், புராணங்கள் பலவற்றில் பரவலாக இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சில...
 பொதுவாக சிவாலயங்களில் காலசந்தி பூஜையை சூரிய பூஜையிலிருந்தே தொடங்குவது மரபு. தவிர, சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசியில் பிரவேசிக்கும் ஒவ்வொரு தமிழ் மாத முதல் தேதியிலும் இவருக்குச் சிறப்பு வழி பாடுகள் நடைபெறுகின்றன.
 சிவாலயங்களில் சூரியன் தனியே எழுந்தருளி இருப்பதுடன், ஆலயத்தின் வடகிழக்கு அல்லது தென் கிழக்கு மூலைகளில் இருக்கும் நவக்கிரகங்களின் மையப் பகுதியிலும் அமைகிறார். (சிவாகமப்படி செய்யும் பூஜை களில் சூரியனை மேற்கு நோக்கி இருப்பவராகவே கருதி பூஜிக்கின்றனர்.)
 சிவ பூஜையில் வழிபடப்படும் சூரிய யந்திரம் (அ) சூரியச் சக்கரத்துக்கு நான்கு புறங்களிலும் வாயில்கள் இருந்தாலும், சூரியன் மேற்கு நோக்கி எழுந்தருளியிருப் பதால், இந்த வாயிலே முதலில் பூஜைக்கு உரியதாகிறது.
 சூரியனுக்கு உரிய கற்களில் தலைசிறந்தது ஸ்படிகம். எனவே, சிவபெருமானை ஸ்படிகக் கல்லில் லிங்கமாகச் செய்து வழிபடுகின்றனர். இந்த ஸ்படிக லிங்கத்தை வழி படுவதால் இம்மையில் ஞானமும், பொருட்செல்வமும், மறுமையில் மோட்சமும் கிட்டும் என்பர்.
 வேலூருக்கு அருகே அடையப்பலம் என்கிற ஊரைச் சேர்ந்த மகான் அப்பய்ய தீட்சிதரால் இயற்றப்பட்டது, ஆதித்ய ஸ்தோத்ர ரத்னம். 14 பாடல்களையும், ஒரு பலஸ்ருதியையும் கொண்டது. குறிப்பாக இதில் இடம் பெற்றிருக்கும் 12-வது பாடல், சூரியனை சிவபெருமானின் வடிவமாகப் போற்றுகிறது.
இனி, சூரியன் சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலங்கள் சிலவற்றைப் பார்ப்போம். அவை இரு வகைப்படும். அதாவது, சூரியன் தேவ வடிவில் இருந்து ஆகமங்களில் கூறியபடி சிவ லிங்கம் அமைத்து வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலங்கள். இரண்டாவது, ஆண்டின் சில நாட்களில் மட்டுமே தனது ஒளிக் கதிர்களால் கோபுர வாயில், கொடிமரம், மற்றும் பலி பீடம் ஆகியவற்றைத் தாண்டிச் சென்று மூலவராகிய லிங்கத்தை ஜோதிமயமாக்கும் திருத்தலங்கள் என்று வகைப்படுத்தலாம்.
முதலில் தேவ வடிவில் சூரியன் வழிபட்ட தலங்களை அறிவோம்.
 காஞ்சிபுரத்திலுள்ள கச்சபேஸ் வரர் ஆலயத்தின் முருங்கை மரத்தின் நிழலில் ஜோதி லிங்கமாக எழுந்தருளி இருக்கும் கச்சபேஸ்வரரை, சூரியன் (தேவ வடிவாக) வழிபட்டு பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது. இங்கு சூரிய தேவன் ஒரு தீர்த்தம் (குளம்) அமைத்து, பெருமானுடன் இஷ்ட சித்தீஸ்வரர், ஞான சித்தீஸ்வரர், யோக சித்தீஸ்வரர், தர்ம சித்தீஸ்வரர் மற்றும் வேத சித்தீஸ்வரர் ஆகிய லிங்கங்களை எழுந்தருள வைத்து, வழிபட்டுப் பேறு பெற்றதாக இந்த ஊர் தல புராணம் கூறுகி றது. இந்தக் கோயிலில்- சூரியன், விருச்சிக ராசியில் ஆட்சி பெற்று விளங்கும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், சூரிய உதயத்தில் நீராடி ஜோதிர்லிங்கத்தை வழிபட்டு, சூரியனையும் வழிபடுவோர் நோய் நொடியின்றி வாழ்வர் என்பது ஐதீகம். குறிப்பாக, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
ஒரு முறை, மயூரசர்மன் எனும் கௌட தேச மன்னன், விதி வசத்தால் தன் இரு கண்க ளையும் இழக்க நேரிட்டது. இந்தத் தலத்து மகிமையறிந்து, இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி, மீண்டும் அவன் பார்வை பெற்ற தாக புராணம் கூறுகிறது. வட மொழியில் பெரும்புலமை பெற்ற அவன், கண் பார்வை கிடைத்த மகிழ்ச்சியில் சூரியன் மீது இயற்றிய நூல்- ‘சூரிய சதகம்’.
 கும்பகோணத்துக்கு அருகேயுள்ள தலம் திருமங்கலக்குடி. இங்கு சூரியனும் மற்ற கிரகங்களும் வழிபட்டு பேறு பெற் றனர் என்பர்.
 தற்போது பருத்தியப்பர் ஆல யம் எனப்படும் ‘பரிதிநியமம்’ எனும் திருத்தலம், (பரிதி-சூரியன், நியமம்- கோயில்) சூரியன் வழிபட்டு பேறு பெற்ற தலங்களுள் ஒன்று. இது தஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் தஞ்சை யிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ளது.
தாங்க முடியாத வெப்பத்துடன் விளங்கும் சூரியன், குளிர்ச்சியுடன் திகழ, சித்திரை மாதப் பௌர்ணமி நாளில் மணலைக் கூட்டிச் சிவலிங்கம் செய்து வழிபட்ட ஸ்தலம் இது. இங்கு எழுந்தருளிய ஈசனின் கருவறைக்கு முன் அமைந்துள்ள நந்தி, பலிபீடத்துக்குப் பின்புறம், சூரிய தேவன் மூலவரை நோக்கி வணங்கும் பாவனையில் எழுந்தருளி உள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.
 ஒரு முறை தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருக் கயிலாயம் சென்று பெருமானை வழிபட்டனர்.
அப்போது அங்கு வந்த நாரதர், வழிபட்டுக் கொண்டிருந்த சூரியனை நோக்கி, ‘‘நீ இன்றி உலக உயிர்கள் வாடி வருந்துமே!’’ என்று கூற, அதைக் கேட்ட சூரியன் அகங்காரத்துடன், தனது கதிர்களை மறைத்துக் கொண்டு, ‘‘சந்தேகம் என்ன? உலக உயிர்கள் கண்டிப்பாக அழிந்துதான் போகும்!’’ என்றான்.
அவனது அகங்காரத்தை அடக்கக் கருதிய பெரு மான் தன் விழிகளை உருட்டி விழித்தார். ஈசனின் விழி ஒளியால் உலக உயிர்கள் யாவும் எந்த வித பாதிப்புமின்றி செழிப்புடன் விளங்கின.
தனது தவறை உணர்ந்த சூரியன், பெருமானை வணங்கினான். பின், மண்ணுலகம் வந்து நெல்லி மரக் காட்டில் லிங்கம் அமைத்து தவம் செய்தான். அவன் வழிபட்ட தலமே திரு ஆவினன்குடி! (பழநி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது)
மேற்சொன்ன தலங்கள் தவிர திருமீயச்சூர்- (மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் பேரளத்திலிருந்து 2 கி.மீ. தொலைவு), திருவாடானை- (சிவகங்கையிலிருந்து 33 கி.மீ. தொலைவு), திருநாகேஸ்வரம் (கும்பகோணம் அருகே), திருச்சோற்றுத்துறை (திருவையாறுக்கு அருகே) ஆகிய தலங்களும் சூரியன், தேவ வடிவில் எழுந்தருளி பெருமானை வழிபட்ட தலங்களாகும்.
இ னி சூரியன், குறிப்பிட்ட சில நாட்களில் காலை வேளையில் தனது ஒளிக் கிரணங்களால் சிவலிங்க மூர்த்தியை ஜோதி மயமாக்கி வழிபடும் சிவத்தலங்கள் சிலவற்றைக் காணலாம் (மேற்கு நோக்கிய சிற்சில சிவ ஸ்தலங்களில் மாலை நேரத்தில் இறைவன் மீது சூரிய ஒளிக் கற்றைகள் விழுவதுண்டு).

 மயிலாடுதுறையை அடுத்த அன்னியூரில் பங்குனி 24 முதல் 28 முடிய 5 நாட்கள் சூரிய பூஜை நிகழ்கிறது. இங்குள்ள இறைவன்: ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் - இறைவி: பெரிய நாயகி.
 கும்பகோணத்தை அடுத்துள்ளது திருநாகேஸ்வரம். இங்கு சித்திரை 11, 12, 13 ஆகிய 3 நாட்கள். இறைவன்: நாகேஸ்வர ஸ்வாமி - இறைவி: பெரிய நாயகி.
 காரைக்கால் அருகே உள்ள கோயிற்பத்து (திருத்தெளிச் சேரி) பங்குனி 13 முதல் 10 நாட்களுக்கு. இறைவன்: பார்வதீஸ்வரர் - இறைவி: சத்தியம்மை.
 திருவாரூருக்குத் தெற்கே உள்ள நெல்லிக்கா திருத்தலம். இங்கு ஆண்டுக்கு 2 முறை- அதாவது மேற்கு நோக்கிய சந்நிதியாக இருப்பதால், ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி முதல் 7 நாட்கள் - மாசி மாதம் 18-ஆம் தேதி முதல் 7 நாட்கள். இறைவன்: நெல்லிவனநாதர் - இறைவி: மங்கலநாயகி.
 சாலியமங்கலம் (தஞ்சை மாவட்டம்) பருத்தி யப்பர் கோயில். பங்குனி 19-ஆம் தேதி. இறைவன்: மருதீஸ்வரர் - இறைவி: மங்கலநாயகி.
 பனையபுரம் எனப்படும் புறவார் பனங்காட்டூர் (விழுப்புரத்தை அடுத்துள்ளது). சித்திரை 1 முதல் 7-ஆம் தேதி வரை. இறைவன்: பனங்காட்டீஸ்வரர் - இறைவி : புறவம்மை
 கண்டியூர் (தஞ்சையிலிருந்து 9 கி.மீ. தொலைவு). மாசி 13, 14, 15 நாட்களில் மாலை 4:45 முதல் 6:10 வரை. இறைவன்: வீரட்டேஸ்வரர் - இறைவி: மங்கள நாயகி.
 திருமீயச்சூர் (திருவாரூரையடுத்த பேரளத்திலி ருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு). சித்திரை 21 முதல் 7 நாட்கள். இறைவன்: மேகநாதர் - இறைவி: சௌந்தர நாயகி. தவிர இங்கு ரதசப்தமியன்றும் விழா கொண்டாடப்படுகிறது.
 மஹேந்திரபள்ளி சீர்காழி அருகில் உள்ளது. பங்குனி 1 முதல் 7 வரை. இறைவன்: திருமேனி அழகர் - இறைவி: சோம வடிவாம்பிகை.
மேற்கூறிய தலங்கள் தவிர இன்னம்பூர், திருப்புறம் பயம் (இரண்டும் கும்பகோணத்துக்கு அருகில்), அகரம், பறங்கிப்பேட்டை ஆகிய தலங்களிலும் சூரியக்கதிர் வழிபாடு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment