Tuesday, 1 August 2017

ஸ்ரீரங்கம்

சைவமும் வைணவமும் தழைத் தோங்கும் இந்த பாரத தேசத்தில் இருக்கும் திருக்கோயில்கள் கணக்கிலடங்காதவை. சைவ சமயக் குரவர்கள் நால்வரால் பாடப் பெற்றவை, பன்னிரு ஆழ்வார்களால் பாடப் பெற்றவை என்று தனித்துவம் வாய்ந்த சிறப்புகள் ஒவ்வொன்றுக்கும் உண்டு.
எத்தனையோ புராணங்கள் இந்தத் திருத்தலங்களின் மகிமைகளை எல்லாம் சொல்லி வானளாவப் போற்று கின்றன. எண்ணற்ற மகான்களும் சித்தர்களும் இந்தத் திருத்தலங்களை தரிசித்து பெரும் பேறு பெற்றுள்ளனர்.
 ஸ்ரீரங்கம் ஆலயம் பற்றிய இந்தப் பகுதியை படியுங்கள். 
பூ லோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் (திருவரங்கம்), 108 வைணவத் தலங்களுள் முதன்மையானது. வைணவர்கள், ‘கோயில்’ அல்லது ‘பெரிய கோயில்’ என்று குறிப்பிட்டால் அது ஸ்ரீரங்கம் ஆலயத்தையே குறிக்கும். ஆழ்வார்கள் அனைவராலும் பாடப் பெற்ற வைணவத் தலம் இது மட்டுமே. ஸ்ரீரங்கம் ஆலயம் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு சுமார் 156 ஏக்கர்.
 உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் திருவரங் கம் இருக்கும் திசையை நோக்கி வணங்கினாலே போதும்; இந்தத் தலத்துக்கு நேரில் வந்து, இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி திருவரங்கனை தரிசித்த பலன் கிடைக்கும்.
 ஒரு முறை கங்கை, காவிரி, யமுனை உட்பட புண்ணிய நதிக் கன்னியர்கள், இமயமலை அடிவாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வான்மார்க்கமாக சென்ற கந்தர்வன் ஒருவன், இவர்களைப் பார்த்து வணங்கினான். உடனே, ‘கந்தர்வன் வணங்கியது தன்னையே!’ என்று நதிக் கன்னியர் ஒவ்வொருவரும் தங்களுக்குள் வாதிட்டனர். இது வீண் விவாதம் என்றுணர்ந்த சிலர் விலகிக் கொள்ள... காவிரியும், கங்கையும் மட்டும் விவாதம் தொடர்ந்தனர். முடிவை தெரிந்து கொள்ள திருமாலை நாடினர். அவர், ‘‘கங்கை என் திருப்பாதத்தில் தோன்றியவள் ஆதலால் அவளே பெரியவள். கந்தர்வனின் வணக்கம் அவளையே சாரும்!’’ என்றார். இதனால் வருந்திய காவிரி, தான் கங்கையை விட மேன்மை நிலை பெற வேண்டும் என்று திருமாலைக் குறித்து தவம் இருந்தாள். அதனால் மகிழ்ந்த பகவான் அவள் முன் தோன்றி, ‘‘எதிர்காலத்தில் நான் உன் மடியில் சயனிப்பேன். அப்போது நீ கங்கைக்கு மேற்பட்டவளாவாய்!’’ என்றருளினார்.
அதன்படியே பிற்காலத்தில் காவிரியின் மத்தியில் ஒரு தீவும், சந்திர புஷ்கரணியும், அனந்த பீடமும் தோன்றின. ஆற்று நீர் சூழ மத்தியில் அமைந்துள்ள பகுதிக்கு அரங்கம் என்று பெயர். அதன்படி இந்த தீவு, இரு ஆறுகளின் (காவிரி மற்றும் கொள்ளிடம்) மத்தியில் இருப்பதாலும் லட்சுமி கடாட்சத்துடன் திகழ்வதாலும் ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் எனப் பெயர் பெற்றது.
 திருவரங்கத்தில் பாயும் காவிரி நதி, பரம பதமான ஸ்ரீவைகுண்டத்துக்கு வெளியே ஓடும் ‘விரஜா’ நதிக்கு ஒப்பானது.
 பெயர், கோயில், பெருமாள், தாயார், ஊர், தளிகை, வாத்யம், மற்றும் பலகாரங்கள் அனைத்தும் ‘பெரியது’ என்று ஏற்றிச் சொல்லப்படும் பெருமை இந்தத் தலத்துக்கு மட்டுமே உண்டு.
 இங்குள்ள மூலவர் ரங்கநாதர் என்றும் பெரிய பெருமாள் என்றும் திருநாமங்கள் உடையவர். உற்சவ மூர்த்தியான ரங்கராஜர், நம்பெருமாள் என்றும் அழகிய மணவாளன் என்றும் போற்றப்படுகிறார். ஸ்ரீரங்கம், நவக்கிரகங்களில் ஒன்றான சுக்கிர க்ஷேத்திரமாகவும் கருதப்படுகிறது
 வலக்கை திருமுடியைத் தாங்க, இடக்கை மலர்ப்பாதத்தை சுட்டிக் காட்ட தெற்கு முகமாக இலங்கையை நோக்கியபடி அருள் பாலிக்கிறார் மூலவர் ஸ்ரீரங்கநாதர்.
 திருவரங்கத்தில் இருக்கும் ‘ரங்க விமானம்’ ஆதியில் தானாகவே உருவானது. இதைச் சுற்றி 24 கி.மீ. தூரத்துக்குள் எங்கே இருந்தாலும், முக்தி நிச்சயம். இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு ‘ஓம்’ என்கிற பிரணவ வடிவில் அமைந்துள்ளது. இந்த தங்க விமானத்தில் உள்ள பரவாசு தேவர், கையில் கிண்ணத்துடன் காட்சியளிக்கிறார். அந்தக் கிண்ணம் அவரின் வாயை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வும், அது வாயருகில் சென்று சேர்ந்தால் உலகம் அழியும் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
 பங்குனி மாதம், வளர்பிறை, சப்தமி திதி, சனிக்கிழமை அன்று சந்திரன் ரோகிணியிலும், குரு ரேவதியிலும் இருக்கும்போது திருவரங்கன் இங்கு வந்து சேர்ந்தார்.
பல ஆயிரம் ஆண்டுகள் பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் இருந்து, பாற்கடலிலிருந்து பெறப்பட்டது ரங்க விமானம். நான்கு வேதங்களையும் பிரம்மா இந்த விமானத்தின் முன் ஓதியிருக்கிறார். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்த ஸ்ரீரங்கநாதரை இக்ஷவாகு மன்னர் தன் குல தெய்வ மாக அயோத்தியில் வைத்து பூஜை செய்து வந்தார். இக்ஷவாகு வம்ச குலத் தோன்றலான ராமபிரான், சீதையை மீட்க உதவிய விபீஷணனுக்கு ரங்கநாதர் விக்கிரகத்தை பரிசாக அளித்தார். விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் தர்ம வர்மா என்னும் சோழ மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க மூர்த்தத்தை காவிரி நதியின் கரையில் தன் அரசான இலங்கையை நோக்கி அருள் தரும் முகமாக பிரதிஷ்டை செய்ததாக ரங்க மகாத்மியம் கூறுகிறது.
 தர்மவர்மனின் காலத்துக்குப் பிறகு ஒரு முறை காவேரியில் வெள் ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன் காரணமாக ஸ்ரீரங்கத்தில் கோபுர உச்சி வரை மணல் மேடிட்டு மூடி யது. காடுகள் உண்டாகி ஸ்ரீரங்கம் கோயிலும், அதன் பிராகாரங்களும் புதைந்தன.
ஒரு நாள்... சோழ மன்னன் ஒருவன் வேட்டையாட வந்து, ஒரு மரத்தின் அடியில் ஓய்வெடுத்தான். அப்போது மரத்தின் மேலே இருந்து ஒரு கிளி, ஸ்ரீரங்க விமானத்தைப் பற்றியும் ரங்கநாதப் பெருமாளைப் பற்றியும் (ஸ்லோகமாகச்) சொன்னது.
அதைக் கேட்டு வியந்த மன்னன் ஆட்களைக் கொண்டு அங்கே தோண்டிப் பார்த்தான். பலனில்லை. அன்றிரவு அவன் கனவில் திருவரங்கர் காட்சி கொடுத்து, தான் அங்கே பூமியில் புதையுண்டு கிடப்பதை அறிவித்தார். அரங்கன் சொன்னதை அறிந்த அரசன் காட்டை அழித்து, மணலை நீக்கினான். கோயில் வெளிப்பட்டது. திருவீதி உட்பட அனைத்தையும் முதலில் இருந்தபடியே நிர்மாணித்தான். தன் நினைவுச் சின்னமாகக் ‘கிளி’ மண்டபத்தைக் கட்டி, திருப்பணிகள் பலவற்றையும் செய்தான். கிளியைக் கண்டு அதன் வாக்கின் மூலம் இறையருள் பெற்ற இந்த மன்னன் ‘கிளிச்சோழன்’ எனப்பட்டான்.
 ஸ்ரீரங்க விமானத்தின் வெளியில் விக்னேசுவரர் இருந்து காவல் புரிகிறார். கீழ்ப்பக்கத்தில் மகா விஷ்ணுவின் யோக மாயையான துர்கை இருக்கிறாள். ஸ்ரீரங்க விமானத்துள்ளே ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கிறார் ஸ்ரீரங்கநாதர்.
 ஆலயத்தில் உள்ள கோபுரங்கள் 21. திருவரங்கத் திருத்தலம் பற்றி அகநானூறு, புறநானூறு மற்றும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
 கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவ அரசர்கள், 10-ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள், கி.பி.1223-25-ல் கலிங்க அரசர்கள், 1225-ல் மாறவர்மன் சுந்தர பாண்டியன், 14-ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னர்கள், 17-ஆம் நூற்றாண்டு மற்றும் 18-ஆம் நூற் றாண்டுகளில் விஜயநகர ராஜா மற்றும் மதுரை நாயக்கர், தஞ்சை நாயக்கர்கள் முதலானோர் இந்தக் கோயிலின் சுவர்கள் மற்றும் கோபுரங்களைக் கட்டியும், பழுதுபார்த்தும் வந்துள்ளனர்!
 அரங்கநாதரைச் சுற்றி இருக்கும் ஏழு (ஸப்த) பிராகாரங்களும் ஏழு (ஸப்த) லோகங்களாகக் கருதப் படுகின்றன. பொதுவாக ஆலயம், அதைச் சுற்றி ரத வீதிகள் என ஒரு நகரம் அமைந்திருக்கும். ஆனால், வீதிகளே பிராகாரங்களாக, நகரை தனக்குள் கொண்டிருக்கும் ஆலயம் இது.
 7-ஆம் பிராகாரம் மாட மாளிகை பிரதட் சணம் எனப்படுகிறது. இந்த பிராகாரத்தின் தெற்கு வாயிலாக இருந்த மொட்டை கோபுரம் அகோபில மடம் 44- வது பட்டம் அழகிய சிங்கர் ஜீயரால் கட்டப்பட்டது. இந்த கோபுரத்தின் உயரம் 236 அடி. உலகிலேயே அதிக உயரமானது.
 7-வது பிராகாரத்தில் விஜய நகர சமஸ்தான அரண்மனை இருந்தது. 16-ஆம் நூற்றாண்டில் அச்சுதராயர், திருவனந்தபுரத்தின் மீது படையெடுத்தபோது, இந்த அரண்மனையைக் கட்டினார். அப்போது தன் மைத்துனனைப் படைகளுடன் திருவனந்தபுரம் அனுப்பினார். அவன் வெற்றி யுடன் திரும்பும் வரை ஸ்ரீரங்கத்திலேயே தங்கி இருந்தார் அச்சுதராயர். ஒரு முறை கிருஷ்ண ஜயந்தி உற்சவத்தின் போது ஸ்ரீரங்க நாதனும், கிருஷ்ண பரமாத்மாவும் திருவீதிவுலாவாக எழுந்தருளினர். தனது அரண்மனைக்கு முன்னால் ஸ்வாமிக்கு ஓர் உபயம் ஏற்படுத்தி னார் அச்சுத ராயர். அதற்காக ஏராளமான மானியங்களை ஏற்படுத்தினார். அந்த உபயம் இன்றும் தொடர்கிறது. (அரண் மனை இருந்த இடத்தில் பின்னர் ‘வாணி விலாஸ் பிரஸ்’ செயல்பட்டது. ஏராளமான ஞான நூல்களை வெளியிட்ட அந்த அச்சகம் இப்போது அங்கு இல்லை. அங்கு அச்சுதப்பர் ஏற்படுத்தி வைத்த உபயம் இன்றும் நடக்கிறது).
 ஸ்ரீரங்கத்தின் சந்திர புஷ்கரணியைச் சுற்றி அதன் அங்கமாக தெற்கே- அசுவ தீர்த்தம், தென் கிழக்கில்- ஜம்பு தீர்த்தம், கிழக்கே- பில்வத் தீர்த்தம், வடமேற்கே- வகுள தீர்த்தம், வடக்கே- கதம்ப தீர்த்தம், வடகிழக்கில்- ஆம்ர தீர்த்தம், மேற்கே- புன்னாக தீர்த்தம், தென்மேற்கே- பலாச தீர்த்தம் ஆகிய எட்டு தீர்த்தங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
 நூற்றுக்கணகான சந்நிதிகள் உள்ள இந்த ஆலயத்தில் கோதண்ட ராமர், பரமபதநாதர், பெரிய வீர ஆஞ்சநேயர் சந்நிதிகள் சிறப்பானவை.
 தாயார் சந்நிதிக்கு செல்லும் வழியில் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக ஸ்ரீமந் நாராயணனே தன்வந்திரியாகக் காட்சியளிக்கிறார். கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம் இவற்றுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீருகிறது.
 சாதாரணமாக எல்லாச் சந்நிதிகளின் மேலும் விமானம் அமைப்பது மரபு. ஆனால் தன்வந்திரி வைத்திய ராக இருப்பதால் நோயாளிகள், வியாதியஸ்தர்கள் அவரிடம் வருவார்கள் என்பதால் ஆகம விதிகளின்படி அவர் சந்நிதிக்கு மேல் விமானம் கட்டப்படவில்லை.
 உள் ஆண்டாள் சந்நிதிக்கு அருகிலும் வேணுகோபாலர் சந்நிதி மண்டபத்திலும் அழகிய சிற்பங்கள் பல காட்சி அளிக்கின்றன. வைணவ ஆச்சார்யர்யரான ஸ்வாமி வேதாந்த தேசிகன் சந்நிதி தனி ஆலயமாகத் தாயார் கோயில் அருகே அமைந்துள்ளது
 இங்குள்ள கருட பகவான் மிகப் பெரிய உருவத்துடன் கூரையை முட்டியவாறு அமர்ந்துள்ளார்.
 கம்ப ராமாயணம் அரங்கேறிய போது அதை அங்கீகரிக்கும் விதமாக சிரத்தை அசைத்து அதன் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டியவர் ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் மேட்டு அழகிய சிங்கர்.
 முன்னொரு காலத்தில் வங் காள அரசன் பெரும் செல்வத்தை ரங்கநாதருக்குக் காணிக்கையாக அளித்தான். ரங்கநாதர் அவற்றை பெற்றுக் கொள்ளாததால் அந்த தனம் வாசலிலேயே வைக்கப்பட்டது. அதை வடக்கிலிருந்து வந்த ஆரியர்கள் காவல் காத்தனர். அதனால் அந்த வாசல் ஆர்யபடாள் வாசல் என்று அழைக்கப்படுகிறது.
 பாண்டிய மன்னர்களில் சிறந்தவனான சுந்தர பாண்டியன் காணிக்கையாக அளித்த கிரீடம் பாண்டியன் கொண்டை என்று இன்றும் சிறப்பாக நம்பெருமாளுக்கு அணிவிக் கப்படுகிறது.
 வைணவ அந்தணர்களில் அரையர் என்பவர்கள் பரம்பரை பரம்பரையாக நம்பெருமாள் முன்பு நாலாயிர திவ்யப்பிரபந்த பாடல்களை இசைத்து அதற்கேற்ப நடனம் செய்வார்கள். அதற்கு அரையர் சேவை என்று பெயர்.
 ஸ்ரீரங்கம் ஆலயத்தின் நிர்வாகம், கோயிலொழுகு ஆகியவற்றை சீர்ப்படுத்திய பெருமை வைணவ ஆச் சார்யரான ராமானுஜரையே சாரும். 120 ஆண்டுகள் வாழ்ந்து வைணவ சம்பிரதாயத்துக்குத் தொண்டு புரிந்த ராமானுஜர் கி.பி 1137-ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கத் தில் பரமபதம் அடைந்தார்.
 ஸ்ரீ ராமானுஜர் தன் உடலோடு சந்நிதி கொண்டது இங்குதான். இங்கு ஸ்ரீராமானுஜர் பத்மாசன கோலத்தில் தரிசனம் தருகிறார். இன்றும் அவரது சிகை மற்றும் நகங்கள் தரிசனம் செய்யக் கிடைக்கின்றன. வருடத்துக்கு இரு முறை பச்சை கற்பூரம், குங்குமப் பூ போன்றவை விழுதாக அரைத்து அவருக்குப் பற்றாக உடலில் பூசப்படுகின்றன.
 ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார், திருப் பாணாழ்வார் ஆகியோர் இங்கு மட்டுமே தொண்டு புரிந்து வாழ்ந்தவர்கள்.
 நாதப்பிரம்மம் தியாகராஜ ஸ்வாமிகள் ஸ்ரீரங்கநாதரை தரிசித்து அவர் மேல் கீர்த்தனைகள் பாடியுள்ளார்.
 கி.பி. 1331-ல் மாலிக்காபூர் படை யெடுப்பின்போது அரங்கன் விக்கிரகம் பக்தர்களால் வெளியே எடுத்துச் செல்லப் பட்டது. அரங்கன் திரும்பவும் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தது 1371-ஆம் ஆண்டு.
 திருவரங்கனின் விக்கிரகம், இரண்டு வருடங்கள் டெல்லியில் இருந்ததாக வரலாறு. அப்போது அரங்கனின் அழகில் மயங்கி அவனுக்காகத் தன் உயிரையே கொடுத்த தில்லி சுல்தானின் மகளுக்காக ஆலயத்தில் ஓர் இடம் அளித்துள்ளார்கள். துலுக்க நாச்சியார் என்ற பெயரால் அழைக்கப்படும் அவளுக்காக அரங்கன், ரொட்டி, வெண்ணெய், பருப்பு, கிச்சடி ஆகிய வட இந்திய உணவு வகைகளை நைவேத்தியமாக ஏற்கிறார்.
 இங்கு உத்திரை வீதியில் இரண்டு பிரம்மோற்சவங்கள் சித்திரை வீதியில் இரு பிரம்மோற்சவங்கள் என வருடத்தில் நான்கு பிரம்மோத்சவங்கள் நடைபெறுகின்றன.
 ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி அன்று ரத்னாங்கி அணிந்து உலா வரும் நம்பெருமாளை, படி தாண்டாத தாயார் தனது கோயிலிலிருந்து ஐந்து குழிகளிலும் தன் ஐந்து விரல்களை வைத்து மூன்று வாயில்கள் வழியாகக் கண்டு மகிழ்வாராம். அதைக் குறிக்கும் விதமாக தாயார் செல்லும் வழியில் ஐந்து குழிகள் தரையில் உள்ளன.
 வைகுண்ட ஏகாதசி அன்று மூலவர், தசா வதாரம் சித்திரிக்கப்பட்ட முத்தங்கி அணிந்து காட்சி தருகிறார்
 இங்கு ஒரு வருடத்தில் 114 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது.
 எல்லாப் பெருமாள் கோயில்களிலும் மூலவருக்கு ஆனி ஜ்யேஷ்டாபிஷேகத்தன்று மட்டுமே தைலக் காப்பு சாத்தப்படும். ஆனால், ஸ்ரீரங்கத்தில் மட்டும் இத்துடன் கூட ஆவணி பவித்ரோற்சவத்தின் இறுதி நாளிலும் தைலக்காப்பு சாத்தப்படும். எனவே, ஸ்ரீரங்க நாதருக்கு மட்டும் இரு முறை தைலக்காப்பு.

No comments:

Post a Comment