எந்த ஒரு தலத்துக்கும் நேரில் சென்று அங்கு உறையும் இறைவனை உளமாரத் தரிசித்தால்தான் புண்ணியம் கிடைக்கும். ஆனால், நேரில் செல்லாமல், இருந்த இடத்தில் இருந்தபடி பெயரைச் சொன்னாலே போதும்... புண்ணியம் கிடைத்து விடும். அப்படியரு பெருமை, 'வாஞ்சியம்' (திருவாஞ்சியம் என்றும் சொல்வதுண்டு) தலத்துக்குத்தான் உண்டு. ஆம், இருந்த இடத்தில் இருந்தபடி, 'வாஞ்சியம்' என்று மூன்று முறை சொன்னாலே போதும்... வாஞ்சியம் திருத்தலம் சென்று, வாஞ்சிநாதரை தரிசித்த பலன் முழுமையாகக் கிடைக்கும்.'
- இப்படிச் சொன்னவர் எந்த மகான் தெரியுமா? காஞ்சி மகா பெரியவாள்!
வாஞ்சியத்தில் குடிகொண்டுள்ள மங்களாம்பிகா சமேத வாஞ்சிநாதர் ஆலயத்தின் அருமை பெருமைகளைத் தெரிந்து கொள்ள பல புராணங்கள் நமக்கு உதவுகின்றன. இந்த ஆலயம் எப்போது தோன்றியது என்று தகவல் இல்லை. யுகம் யுகமாக இருந்து வருவ தாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
எங்கே இருக்கிறது வாஞ்சியம்?
கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் வழி யாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் வரும் ஊர்- அச்சுதமங்கலம். இங்கிருந்து ஒண்ணரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வாஞ்சியம். கும்பகோணத் தில் இருந்து சுமார் 28 கி.மீ.! திருவாரூரில் இருந்து 16 கி.மீ.! நன்னிலத்தில் இருந்து 6 கி.மீ.! குடவாச லில் இருந்து 12 கி.மீ. தொலைவு.
பல யுகங்களைக் கடந்தும் ஜீவித்து இருக்கிற அற்புத «க்ஷத்திரம் இது. இந்தத் திருத்தலத்தின் பெருமைகளைப் பட்டியல் இட்டால், மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டே இருக்கலாம். பொதுவாக, இந்து மதத்தின் ராஜதானி என்று காசியம்பதியைச் சிறப்பித்துச் சொல்வார்கள். ஆனால், காசியை விட நூறு மடங்கு பெருமை கொண்டது வாஞ்சியம் திருத்தலம்.
வாஞ்சியத்தின் பெருமைகளை உமாதேவிக்குச் சொல்வதற்காக, நாயகியை ரிஷபத்தின் மேல் அமர வைத்து, உலகை வலம் வந்து கொண்டிருந்தார் சிவபெருமான். அப்போது காசி, காஞ்சிபுரம், காளஹஸ்தி போன்ற திருத்தலங்களை எல்லாம் காட்டிய இறைவன், வாஞ்சியத்தையும் பார்வதி தேவிக்குச் சுட்டிக் காட்டினார். அப்போது என்ன சொன்னார் தெரியுமா? 'புண்ணியம் வாய்ந்த காசி போன்ற அறுபத்தாறு கோடி தலங்களுக்கிடையே மிக உயர்ந்தது இந்த வாஞ்சியம். இங்குள்ள குப்தகங்கை எனும் தீர்த்தம் சிறப்பானது' என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போக... அந்தத் திருத்தலத்திலேயே வசிக்க அம்பிகை திருவுளம் கொண்டார். எனவே, இந்த ஆலயத்தில் உள்ள தேவிக்கு 'வாழ வந்த நாயகி' என்ற பெயரும் உண்டு. வாஞ்சியம் திருத்தலத்தில் உமையோடு ஈசன் தோன்றிய தினம்- மாசி மாதம் வளர்பிறை மக நட்சத்திரத்தில் என்று சொல்வதுண்டு.
ஸ்காந்த புராணம், பிரமாண்ட புராணம், சாம்போப புராணம் போன்றவை வாஞ்சியத் தின் மகிமை பற்றிச் சொல்கின்றன. சைவ நால்வரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோராலும் அருணகிரிநாதர், ராமலிங்க ஸ்வாமிகள் மற்றும் முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகியோராலும் பாடப் பெற்ற திருத்தலம்.
பிரம்மன், திருமால், சூரிய பகவான், தேவர்கள் முதலானோர் இங்கு தவம் இருந்து சிவன் அருள் பெற்றனர். தலம், தீர்த்தம், மூர்த்தி என மூன்றிலும் சிறந்து விளங்கும் தலம் இது. வாஞ்சியம் திருத்தலத்தில் லிங்க வடிவில் பிரமாண்டமாகக் காட்சி தரும் எம்பெருமான், சுயம்பு வடிவம்.
ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் சந்தன மரங்கள் அடர்ந்து காணப் பட்டதாம். அப்போது இந்தத் தலம், 'கந்தாரண்ய «க்ஷத்திரம்' எனப்பட்டது. எனவே, இறைவன் 'கந்தாரண்யேஸ்வரர்' என்றும் வழங்கப்படுகிறார். இன்றைக்கும் ஆலயத்தில் தல விருட்சமாக இருப் பது சந்தன மரம்தான். சந்தன இலைகளைக் கொண்டு வாஞ்சி நாதரை பூஜிப்பது விசேஷம். இது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.
பிரளய காலத்திலும் அழியாத திருத்தலம். பிரளயம் ஏற்பட்டு அடங்கிய பின், பிரம்மனைப் படைத்த சிவபெருமான், உயிர்களைப் படைக்கும் பொறுப்பை பிரம்மனுக்கு அளித்த தலம் இது. யை வாஞ்சித்து (மகாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்த திருத்தலம் இது. எனவே, 'வாஞ்சியம்' ஆனது.
இந்தத் தலத்தில் ஒரு அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்தால், பித்ருக்கள் பத்து வருட காலம் திருப்தி அடைகிறார்கள். இரண்டு அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்தால் நூறு வருடமும், மூன்று அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்தால் ஒரு யுக காலத்துக்கும் பித்ருக்கள் திருப்தி அடைவதாக புராணங்கள் சொல்கின்றன. இப்படி ஏராளமான பெருமைகள் பெற்ற இந்த வாஞ்சியம்
வாஞ்சிநாதருக்கு வருகிற ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. திருப்பணி வேலைகள் மளமளவென நடந்து வருகின்றன. பிராகாரங்களில் தரையில் கருங்கற்கள் பதிப்பதற்கான வேலை மட்டும் பாக்கி இருக் கிறதாம். இதற்கு உதவும் அன்பர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
நான்கு பிராகாரங்களுடனும், ஏராளமான தீர்த்தங்களுடனும் எழில் கொஞ்சும் அழ குடன் காட்சி தருகிறது வாஞ்சியம்.
வெளிப் பிராகாரம்- அதாவது பேருந்து களும் வாகனங்களும் செல்லும் நான்காவது பிராகாரம் 'கிரிவலப் பிராகாரம்' எனப் படுகிறது. இதை அடுத்திருக்கும் மூன்றாவது பிராகாரம் 'கங்கைக் கரை பிராகாரம்' எனப்படும். இது ஆலயத்தின் பிரதான தீர்த்தமான குப்தகங்கை திருக்குளத்தை ஒட்டி இருக்கிறது. இதை அடுத்து, 2-வது பிராகாரமான 'பிரதோஷப் பிராகாரம்'. அடுத்ததாக முதலாவ தான 'உள் பிராகாரம்'. இந்தப் பிராகாரத்தில் ஏராளமான சந்நிதி களை தரிசிக்கலாம்.
பிரமாண்டமான இந்த சிவாலயத்தைத் தரிசனம் செய்வோம். ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். கடந்து உள்ளே செல்கிறோம். ஓர் அறிவிப்புப் பலகை கண் களில் படுகிறது. அதாவது, இந்த ஆலயத்தில் எப்படி இறைவனை வழிபட வேண்டும் என்று பக்தர்களுக்கு விளக்கும் வகையில் இருக்கிறது இந்த அறிவிப்பு. அதில், 'குப்த கங்கையில் நீராடி அங்கே இருக்கும் கங்கைக்கரை விநாய கரைத் தரிசித்து, எமதர்மராஜாவை வழிபட வேண்டும். பின்னர், அபயங்கர விக்னேஸ்வரர், பாலமுருகன் ஆகிய வடிவங்களைத் தரிசித்து, வாஞ்சிநாதரை வழிபடச் செல்லவும்' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வாருங்கள், குப்த கங்கையில் நீராடச் செல்வோம். யுகம் யுகமாக ஆர்ப்பரித்து ஓடி வரும் கங்கைக்கு கலியுகத்தில் ஒரு பிரச்னை வந்தது. பூலோகத்தில் வசித்து வரும் பாவிகள் பலரும், தங்களது பாவங்களைப் போக்குவதற்கு கங்கையில் நீராடி புனிதம் பெற்றனர்.
ஒரு கட்டத்தில் பாவிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போக... பாவங்களை அதிக அளவில் சுமந்த கங்கையானவள் தடுமாறினாள். மணாளனான ஈசனிடமே சென்றாள். ''இறைவா... பூலோகத்தில் ஏராளமானோர் என்னிடம் வந்து நீராடி, தங்களது பாவங்களை விட்டுச் செல்கின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்தையும் கரைத்து, மீண்டும் நான் சுத்தமாவதற்கு பூலோகத்தில் ஒரு தீர்த்தத்தை அடையாளம் காட்டுங்கள்'' என்று வேண்டினாள்.
கங்கையின் ஏக்கத்தை உணர்ந்த இறை வனும், அவளது வேண்டுகோளுக்கு செவி சாய்த்தார். ''கங்காதேவியே... பூலோகத்தில் வாஞ்சியம் திருத்தலத்தில் இருக்கும் குளத்தில் நீராடினால், உன்னிடம் உள்ள அனைத்துப் பாவங்களும் நொடியில் போய் விடும். அதன் பிறகு நீ அங்கே வசிக்கலாம். புண்ணியத்தில் காசியைவிட நூறு பங்கு மேலாக உள்ள இந்தத் தலம்... இனி, நீ வசிக்கப் போவதால் ஆயிரம் பங்கு மேன்மையுடன் விளங்கட்டும்'' என்று அருளினார். அதன்படி கங்கையும் இந்தத் திருக்குளத்தில் கலந்து புனிதமானாள். இங்கு வந்து தங்குவதற்காக தனது 999 கலைகளுடன் வந்து சேர்ந்தாளாம் கங்கை. அதன் பின் தன்னிடம் மூழ்குபவர்களைப் புனிதப்படுத்தி அனுப்புகிறாள். பிரமாண்டமான திருக்குளம். கடுங்கோடையிலும் குளத்தில் தண்ணீருக்குப் பஞ்சம் இருப்பதில்லை. நீர் நிறைந்திருக்கும் படிக்கட்டுகளில் பாசியும் படர்ந்திருக் கிறது. எனவே, இதில் நீராட இறங்கும் அன்பர்கள், சற்று கவனமாக இருக்க வேண்டும். நீராடி முடித்ததும் படிக் கட்டுகளில் உள்ள கங்கைக்கரை விநாயகரை வழிபட்டு விட்டு, எமதர்மனை தரிசிக்க நகர்கிறோம்.
சூரிய பகவானுக்கும் உஷைதேவிக்கும் புத்திரனாகத் தோன்றியவர் எமதர்மன். உயிர்களது பாவ- புண்ணியங் களுக்கு ஏற்ப அவர்களுக்கு சொர்க்கம் அல்லது நரக லோகத்தில் இடம் தருபவர் இவர். பல யுகங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது...
கோடிக்கணக்கான உயிர்களைப் பறிக்க நேர்ந்ததால், எமதர்மனுக்கு ஒரு முறை நீங்காத தோஷம் வந்து விட் டது. இந்த தோஷத்தை களைய விரும்பிய எமதர்மன் வாஞ்சியம் வந்தான். அங்கு தீர்த்தம் ஏற்படுத்தி, தினமும் அதில் நீராடி வாஞ்சிநாதரை வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றான். அவன் உருவாக்கிய தீர்த்தம் 'எம தீர்த்தம்' எனப்பட்டது. எமதர்மனது வழிபாட்டில் மகிழ்ந்த வாஞ்சிநாதரும், «க்ஷத்திர பாலகராகும் பேற்றை எமதர்மனுக்கு அளித்தார். இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் செய்யும் பணிகளையும் எமதர்மனே செய்து வருகிறார்.
ஒவ்வொரு வருடமும் மாசி மக உற்சவம் பத்து நாட் கள் நடைபெறும். இதில் இரண்டாம் நாள் பரணி அன்று வாஞ்சிநாதர் எம வாகனத்தில் புறப்பட்டு, எம தீர்த்தம் சென்று தீர்த்தவாரி கொடுப்பார். இதற்கென ஆலயத்தில் கனஜோராக எம வாகனம் ஒன்று மெருகு குலையாமல் இருக்கிறது. வேறு எந்த ஓர் ஆலயத்திலும் காண முடியாத வாகனம் இது. ஒரு சோகம்... எம தீர்த்தம் தற்போது பாழ்பட்டுக் காணப்படுகிறது. கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிற இந்தக் தருணத்தில் இதையும் சுத்தப்படுத்தினால், வரும் பக்தர்களுக்குப் பெரும் புண்ணியமாகிப் போகும்.
ராஜ கோபுரத்தை ஒட்டி தென்திசையில் இருக் கிறது எமதர்மனின் சந்நிதி. தமிழகத்தில் எமதர்மனுக் கென்று காணப்படும் மிகப் பழைமையான சந்நிதி இதுவே! உள்ளே, தென் திசை நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார். இவரை தரிசித்தால் எம பயம் விலகும்; ஆயுள் கூடும். இங்கு, இவர் அனுக்கிரக மூர்த்தி. அருகிலேயே சித்ரகுப்தனும் நின்ற கோலத்தில் அருள் புரிகிறார்.
இதன் பிறகு இரண்டாம் நிலை நுழைவாயிலில் சென்றால் இடப் புறம் அபயங்கர விக்னேஸ்வரர். வலப் புறம் பாலமுருகன். இரண்டாம் கோபுரத் தைத் தாண்டினால் மடப்பள்ளி, நந்தவனம், விநாயகர் சந்நிதி போன்றவை அமையப் பெற் றுள்ளன. இங்கு, வலப் புறத்தில் அன்னையின் சந்நிதி. மங்களாம்பிகை, வாழ வந்த நாயகி, மருவார்குழலம்மை என்றெல்லாம் இந்த அன்னை துதிக்கப்படுகிறாள். மாலை வேளைகளில் வெண் பட்டு உடுத்தி, சரஸ்வதியின் அம்சமாகவும் தரிசிக்கப்படுகிறாள். அன்னைக்கு அருகிலேயே பள்ளியறை. அகிலம் காக்கும் தேவியை உளமார தரிசித்து நகர்கிறோம்.
மூன்றாம் நிலை கோபுர வாயிலில் இரட்டை விநாயகர் மற்றும் அதிகார நந்தி சந்நிதிகள். முன்மண்டபத்தில் நந்திதேவர். அடுத்து மகா மண்டபத்தில் துவாரபாலகர்கள். அடுத்து, அர்த்த மண்டபம். அதைத் தாண்டி கருவறையில்... பொன்னார்மேனியனாக காட்சிதருகிறார்
வாஞ்சிநாதர். சுயம்புத் திருமேனி. இந்த வடிவம் பிரளய காலத்தில் அக்னி வடிவமாகவும், கிருத யுகத்தில் ரத்தினமயமாகவும், திரேதா யுகத்தில் பொன் மயமாகவும், துவாபர யுகத்தில் வெள்ளி மயமாகவும்,கலியுகத்தில் கல் மயமாகவும் காட்சி தருவதாக விவரிக்கிறது சாம்போப புராணம். யுகங்களைக் கடந்த வாஞ்சி நாதரை தரிசித்து, பிராகார வலம் வரத் தொடங்குகிறோம்.
ஏராளமான சந்நிதிகள்! சோமாஸ்கந்தர், வயிற்று வலி போக்கும் வெண்ணெய் பிள்ளை யார் (வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கு இவரிடம் வேண்டிக் கொண்டால் நலம் பெறலாமாம். குணமான பின் இவரது திருமேனியில் நாமே வெண்ணெய் தடவி, பிரார்த் தனையை நிறைவேற்றலாம்), அறுபத்துமூவர், தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், கன்னி விநாயகர், சந்திர மௌலீஸ்வரர், வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான், மகாலட்சுமி என்று நிறைவான சந்நிதிகள்.
அடுத்து, வரிசையாக ஐந்து சிவலிங்கங்கள். காவிரிக் கரையின் அருகிலுள்ள ஆறு சிவத்தலங்களை காசிக்கு இணையாகப் புராணங்கள் சொல்கின்றன. அவையாவன திருவெண்காடு (சுவேதாரண்யேஸ்வரர்), திருவையாறு (பஞ்சநதீஸ்வரர்), மயிலாடுதுறை (மயூரநாதர்), திருவிடைமருதூர் (மகாலிங்கம்), சாயாவனம் என்கிற பூம்புகார் (சாயாவனேஸ்வரர்), வாஞ்சியம் (வாஞ்சிநாதர்). இந்த ஆறு தலங்களிலும் அந்த ஆலய இறைவனைத் தவிர, மற்ற ஐந்து சிவலிங்கங்களும் பிராகாரத்தில் காணப்படும். எனவே, வாஞ்சியம் தவிர மற்ற ஐந்து சிவாலயங்களின் லிங்க வடிவங்கள் இங்கு அருள் பாலிக்கின்றன.
இதை அடுத்து யோகலிங்கம், வாயு லிங்கம், குபேரலிங்கம் மற்றும் சண்டிகேஸ்வரர். அன்னை துர்காதேவி இங்கே மகிஷாசுரமர்த்தினியாக எட்டுக் கரங்களுடன் தரிசனம் தருகிறாள். 108 தாமரை மலர்கள் கொண்டு, 21 செவ்வாய்க் கிழமைகள் தொடர்ந்து இவளை அர்ச்சித்து வந்தால், வேண்டும் வரம் கிடைக்கும். செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தில் இவளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திருமணம், குழந்தைப் பேறு, பில்லி- சூன்யம் போன்றவற்றுக்கு இவளைப் பிரார்த்தித்தால் பலன் உண்டு! அடுத்து, அக்னி தீர்த்தம்; ஆலயக் கிணறு. ஈஸ்வரனின் அபிஷேகத்துக்குத் தினமும் இங்கிருந்துதான் நீர் எடுக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் தைப்பொங்கல் தினத்தன்று, தங்களது வீட்டில் பொங்கலிடுவதற்காக இந்தக் கிணற்றில் இருந்தே, ஊர்மக்கள் நீர் எடுத்துச் செல்கிறார்கள். ''சென்டிமென்ட்டாக இதை ஒரு நல்ல நிகழ்வாகக் கருதும் மக்கள், பெரிய வரிசையில் நின்று நீர் எடுத்துச் செல்வார்கள். சொல்லப் போனால் ஒட்டுமொத்த ஊரே அன்றைய தினம் இங்கே கூடி விடும்'' என்றார் ஆலய ஊழியர் ஒருவர்.
அடுத்து, பதஞ்சலி- வியாக்ரபாதருடன் கூடிய நடராஜர் சந்நிதி. இதைத் தவிர, இன்னும் சொல்ல வேண்டிய சிறப்புச் சந்நிதிகளும் உண்டு. யோக பைரவர் மேற்குப் பார்த்து யோக நிலையில் காட்சி தருகிறார் இவர். எனவே, இவருக்கு நாய் வாகனம் இல்லை. நரம்பு சம்பந்தப்பட்ட எந்த வியாதிக்கும் நெய்யினால் தயாரிக்கப்பட்ட வடை மாலை சார்த்தி அபிஷேகம், அர்ச்சனை செய்து இவரை வழிபடுவது நலம் பயக்கும்.
சூரியன், சந்திரன், தனிச் சந்நிதியில் அருள் பாலிக்கும் சனீஸ்வரர், ஒரே விக்கிரகத்தில் விளங்கும் ராகு, கேது போன்ற விக்கிரகங்களும் தரிசிக்கப்பட வேண்டியவை.
தினமும் ஆறுகால பூஜை. ஆடிப் பூரம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், சூர சம்ஹாரம், கார்த்திகை ஞாயிறுகள், மாசிமகம் என்று பல திருவிழாக்கள் உண்டு. ''பெயர் சொல்லக்கூடிய பெரிய கோயில். ஆனால், இத்தனை சந்நிதிகளையும் பார்த்து பூஜைகள் செய்வதற்கு அர்ச்சகர்கள் இங்கு குறைவு. இதையும் தயவுசெய்து சொல்லுங்கள்'' என்றார் ஆலயத்துக்கு அடிக்கடி வரும் அன்பர் ஒருவர்.
இந்தப் பகுதியிலேயே சுமார் 400 ஏக்கர் நிலங்களைக் கொண்ட கோயில்... மூன்று கோபுரங்கள், நான்கு பிராகாரங்களுடன் ஐந்தரை ஏக்கர் நிலப் பரப்பில் கோலோச்சும் கோயில்... மன்னர்களால் மான்யங்கள் வழங்கப்பட்ட கோயில்... அற்புதங்களும் ஆனந்தமும் நிறைந்த வாஞ்சியப்பரைத் தரிசிக்கக் கிளம்புவது எப்போது என்று சிந்திக்கிறீர்களா?
புறப்படுங்கள், அந்த புனிதனை தரிசிப்பதற்கு!
தகவல் பலகை
தலம் வாஞ்சியம் என்கிற திருவாஞ்சியம்
மூலவர் மங்களாம்பிகா சமேத வாஞ்சிநாதர்.
சிறப்பு சந்நிதிகள் எமதர்மராஜா, யோக பைரவர், மகிஷாசுரமர்த்தனி, ராகுவும் கேதுவும் இணைந்த திருமேனி, சனீஸ்வரர்.
தீர்த்தங்கள் குப்த கங்கை, எம தீர்த்தம் முதலானவை பிரதானம். தவிர, பிரம்ம தீர்த்தம், நாரத தீர்த்தம், விஸ்வா மித்ர தீர்த்தம், சர்வ தீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம், சேஷ தீர்த்தம், நாராயண தீர்த்தம், ராம தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆனந்தக் கிணறு முதலானவை.
எங்கே இருக்கிறது? கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் வரும் ஊர்- அச்சுதமங்கலம். இங்கிருந்து ஒண்ணரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வாஞ்சியம் திருத்தலம். நன்னிலம்- குடவாசல் பேருந்துத் தடத்தில் இந்த ஊர் வருகிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 27 கி.மீ.! திருவாரூரில் இருந்து 16 கி.மீ.! நன்னிலத்தில் இருந்து 6 கி.மீ.! குடவாசலில் இருந்து 12 கி.மீ. தொலைவு.
ஆலய நடை திறந்திருக்கும் நேரம்
காலை 500- மதியம் 1200 மணி.
மாலை 300 - இரவு 8.30 மணி.
எப்படிப் போவது? கும்பகோணம், நன்னிலம், குடவாசல் ஆகிய ஊர்களில் இருந்து வாஞ்சியத்தை அடைய பேருந்து வசதிகள் உண்டு. கும்பகோணத்தில் தங்கி, வாகனங்கள் மூலம் சென்று வரலாம்.
|
|
No comments:
Post a Comment