காவிரிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. குதித்துக் குதித்து ஆடினாள். இருக்காதா பின்னே? நுரைப் பிள்ளையாரைக் காணப் போகிறாள்!
நுரைப் பிள்ளையாரைப் பற்றி அன்றொரு நாள் கங்கையம்மை சொன்னதிலிருந்தே, அவரை தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் காவிரிக்கு அதிகமாக இருந்தது. ஆனால், அதற்காக எவ்வாறு தேவலோகம் போவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். இப்போதோ, உலகின் மீது கருணை வைத்தோ... அவள் மீதே கருணை கொண்டோ... எப்படியோ, நுரைப் பிள்ளையார் பூலோகத்துக்கே வந்து விட்டார்.
வெள்ளை விநாயகர், ஸ்வேதவாரணர் என்றெல்லாம் மற்றவர்கள் குறிப்பிட்டாலும் காவிரிக்கு, 'நுரைப் பிள்ளையார்' என்ற திருநாமத்தில்தான் விருப்பம் அதிகம். அதுதான், கொழுகொழுவென்று ஓடி வரும் குட்டி விநாயகருக்கு ஏற்ற நாமமாக அவளுக்குத் தோன்றியது.
குதித்துக் குதித்து வந்து வெள்ளை விநாயகர் இருந்த இடத்தை அடைந்து விட்டாள்.
அவள் வருவதைப் பார்த்து விட்ட விநாயகருக்கும் வாய்கொள்ளா சிரிப்பு.
''காக்கை விரித்த காவிரிப் பெண்ணே... வருக வருக!'' - தும்பிக்கையைத் தூக்கி பிள்ளையார் அழைக்க, அவளுக்கும் சிரிப்பு வந்து விட்டது. காகம் வந்து கமண்டலத்தைத் தட்டி விட்ட அந்த நாள், நினைவுக்கு வந்தது. இரண்டு பேருமாக எப்படியெல்லாம் ஆட்டம் போட்டார்கள்!
'பாவம் அகத்தியர்... என்ன பாடு பட்டார்!' - காகமாகத் தாம் வந்த நினை வுகளில் மூழ்கிப் போனார் விநாயகர்.
''எப்படி இங்கு வந்தீர் மோதகப் பிரியரே? தேவேந்திரன் தங்களைப் பிரிய மாட்டேன் என்று விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தானே!'' - பழைய நினைவுகளில் நீச்சலடித்த விநாயகரை, காவிரியின் வினா நனவுலகுக்கு அழைத்து வந்தது.
''ஆமாம் பெண்ணே. அமுதம் பெறுவதற்காக தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தார்கள் இல்லையா... அப்போது வெளிப்பட்ட கடல் பொருட்களான நுரை பஞ்சு, கிளிஞ்சல், ஓடு முதலானவற்றைக் கொண்டு, தேவர்கள்தாம் எமது வடிவத்தைப் பிடித்தனர். அவர்களது அன்புக்காக நானும் அந்த வடிவத்துக்குள் ஆட்பட்டேன். நுரையால் செய்தமையால் நுரைப் பிள்ளையார் ஆனோம். வெள்ளை வண்ணம் கொண்டதால் ஸ்வேத விநாயகர் ஆனோம்.''
''ஆமாமாம். பிடித்து வைத்தால்தானே பிள்ளை யார்!''
காவிரியின் பரிகாசத்தைக் கேட்டு அவளை அடிப்பதற்காகப் பிள்ளையார் கையை ஓங்க, பொங்கிக் குதித்து, அடுத்த பக்கம் போனவள் மீண்டும் பேச்சு கொடுத் தாள் ''சரி, அப்புறம்?''
''அப்புறமென்ன... உனக்குத் தெரியுமே! தேவேந்திரன் அந்த வடிவத்தைப் பிடித்துக் கொண்டு, தான் மட்டுமே பூஜித்து வந்தான். சில காலத்துக்கு முன்பு, என் தம்பியையும் தந்தையாரையும் எண்ணி தவம் செய்ய சுவாமி மலை வந்தான். அங்கு அவன் தவத்தில் அமர்ந்த நேரத்தில், யாம் இங்கே நிலைபெற்று விட்டோம். 'யாம் இங்கே கோயில் கொள்ள வேண்டும்' என்ற உனது நீண்ட நாள் விருப்பமும் பூர்த்தியானதா?''
''சும்மா சொல்லாதீர்கள். அமர்ந்த இடத்தை விட்டுத் தங்களால் நகர முடியாது. அதனால், அமர்ந்த இடமே அமர லோகம் என்று உட்கார்ந்து விட்டீர்கள்!'' - காவிரி மீண்டும் மீண்டும் கேலி பேச, அதை உள்ளுக்குள் ரசித் துக் கொண்ட விநாயகர், பொய்க் கோபத்துடன் அவளைப் பிடிப்பதற்காகக் கை நீட்டினார்.
அவரின் பெரிய காதுகளைத் தீண்டி வேடிக்கை பார்த்த காவிரி, நீட்டிய கையிலிருந்து தப்பிப்பதற்காக மீண்டும் குதித்தாள். மறுகணம் காவிரியின் அவலக் குரலே வெளிப்பட்டது. விநாயகர் புருவங்களைச் சுருக்கிப் பார்த்தார். குதித்த குதியில், அந்தப் பள்ளத்துக்குள் வீழ்ந்து விட்டாள் காவிரி!
ஆதிசேஷன் ஏற்படுத்தியிருந்த அந்தப் பாதாளப் பள்ளத்துக்குள் காவிரி வீழ்ந்து விட, சோழ மன்னன் தவியாகத் தவித்துப் போனான். வீராதிவீர வீர பரகேசரி கனக சோழன், காவிரியை மீண்டும் வெளியில் கொண்டு வருவதற்கான வழி தெரியாமல் திணற... ஓர் அசரீரி கேட்டது. மன்னரோ முனிவரோ அந்த பிலத்துக்குள் (பாதாள பள்ளத்துக்குள்) இறங்கினால், அவர்களை உள்வாங்கிக் கொண்டு, பிலம் காவிரியை வெளிவிடுமாம்!
கனக சோழன் தீர்மானமான முடிவுக்கு வந்தான். தனது அரசியான செண்பகாங்கியை, அலங்கார பூஷிதை யாக வரச் சொன்னான். முடிசூட்டு விழாவின் போது அணிந்து கொண்ட பட்டாடையை இப்போதும் அணிந் தான். மனைவியின் கையைப் பற்றிக் கொண்டு, ஆதிசேஷப் பள்ளத்துள் புகுவதற்காகப் புறப்பட்டான்.நாட்டின் நன்மைக்காகக் காவிரியை வெளியில் கொண்டு வர வேண்டும். அதற்குத் தன்னையே பலி கொடுக்க ஆயத்தமாகிவிட்ட மன்னரையும் அவருடன் துணை நின்ற அரசியையும் கண்ட மக்கள் விக்கித்துப் போனார்கள்.
கோடீஸ்வரத்தில் தவம் செய்து கொண்டிருந்த ஏரண்ட முனிவரது காதுகளையும் இந்தச் செய்தி அடைந்தது. விரைந்து வந்த முனிவர், மன்னருக்கும் முன்னதாக, தானும் தனது தவமுமாக அந்த பள்ளத்துக்குள் நுழைந்தார். பள்ளம் மூடிக் கொண் டது. காவிரியும் மேலே வந்தாள். சோழ நாட்டை வளப்படுத்தினாள்.
ஏரண்டர் எனும் அந்த முனிவர் கொடுத்த கொடையே காவிரியாகும். நில மங்கையின் வளத்துக்கும் புவி மக்களின் நலத்துக்கும் தன்னையே பிணையாக வைத்த முனிவர் தவம் செய்த இடம் எப்பேர்ப்பட்ட தலமாக இருக்க வேண்டும்! அந்தத் தலத்தைக் காண வேண்டும் போலிருக்கிறதா? வாருங்கள், கொட்டையூர் போகலாம்.
காவிரி வடகரைத் தலமான கொட்டையூர், கும்பகோணம்- திருவையாறு சாலையில், கும்ப கோணத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து நிறைய பேருந்துகள் உண்டு. சாலை ஓரத்திலேயே கோயில்.
காவிரி, விநாயகரை வழிபட்டு வலம் சுழித்த இடம் திருவலஞ்சுழி. காவிரியை வெளியில் கொண்டு வந்த ஏரண்டர், தவம் செய்த இடம் கொட்டையூர் (கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் பேருந்துகள் பலவும், கொட்டையூர் வழியாகச் செல்கின்றன; சுவாமிமலைக்கு வெகு அருகிலேயே திருவலஞ்சுழியும் உள்ளது).
கோடீஸ்வரர் கோயில் என்று அடையாளம் சொல்லிக் கேட்டால், மிக எளிதில் வழிகாட்டு கிறார்கள். அருள்மிகு பந்தாடுநாயகி உடனாய கோடீஸ்வரர் கோயிலின் கிழக்கு ராஜ கோபுரம் முன்பாக நிற்கிறோம்.
சுமார் 60 அடி உயரமுள்ள கம்பீரமான ஐந்து நிலை கோபுரம். கோபுரத்தின் உள் பகுதிகளில் நுட்ப மான வேலைப்பாடுகள் கண்களைக் கவர்கின்றன. கோபுரம் தாண்டி உள்ளே நுழைய... கொடிமரம், பலிபீடம், நந்தி. சற்றே தள்ளி வலப் பக்கத்தில், தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி. நாம் இப்போது நிற்பது அம்பாள் சந்நிதி உள்ளிட்ட வெளிப் பிராகாரம்.
வெளிப் பிராகாரத்தை வலம் வருகிறோம். தெற்கு மற்றும் மேற்குச் சுற்றுகளில் நந்தவனம். சுற்றி வந்து அம்பாள் சந்நிதி வாயிலை அடைகிறோம்.
அம்பாள் சந்நிதிக்கும் மூலவர் சந்நிதிக்கான திரு அணுக்கன் திரு வாயிலுக்கும் இடையில் வாகன மண்டபம்.
திரு அணுக்கன் திருவாயில் வழியாக உள்ளே செல்கிறோம். வாயிலில் விநாயகரும் சுப்பிரமணியரும் எழுந்தருளி இருக்கிறார்கள்.
உள்ளே நுழைந்ததும் வலப் புறத்தில் விஷ்ணு துர்கை. வணங்கிச் சென்றால், உள் பிராகாரம். வெளியிலிருந்து பார்த்தபோது, இத்தனை விசாலம் புரியவில்லை. வியப்புடன் காணும்போதே, உள் வாயிலுக்கு அருகிலுள்ள மனுநீதிச் சோழனின் சிலையைப் பார்க்கிறோம்.
வாருங்கள், உள் பிராகாரத்தை வலம் வருவோம். கிழக்குச் சுற்றில்தானே நுழைந்தோம். கிழக்கிலிருந்து தெற்குச் சுற்றுக்குள் நுழைய யத்தனிக்கிறோம்.
கிழக்குச் சுற்றின் தொடக்கத்தில் மகாசாஸ்தா. அடுத்து, சைவ நால்வர் பெருமக்கள். அடுத்ததாக, இந்தத் தலத்தின் முக்கியஸ்தரான ஏரண்ட மகரிஷி. இந்தச் சுற்றிலிருந்து மூலவர் கரு வறைக்குச் செல்லும் பக்கவாட்டு வாயில்கள் உள்ளன. இருந்தாலும், வலத்தை நிறைவு செய்த பின்னர், மூலவரை தரிசிப்பதுதானே நம் வழக்கம். வாருங்கள், வலத்தைத் தொடர்வோம்.
தெற்குச் சுற்றிலிருந்து மேற்குச் சுற்றுக்குள் நுழைய, தென்மேற்கு பகுதியில் விநாயகர் சந்நிதி. மேற்குச் சுற்றின் நடுப்பகுதியில் சுப்ரமணியர் சந்நிதி. இவர்களுக்கு உள்ள சிறப்பு என்ன தெரியுமா? இவர்கள் கோடி விநாயகரும் கோடி சுப்ரமணியரும் ஆவர். வடமேற்கு மூலையில் கஜ லட்சுமி சந்நிதி.
வடக்குச் சுற்றில், சண்டேஸ்வரர் சந்நிதியைத் தாண்டினால், ஒரு கிணறு. அமுதக் கிணறு என்று பெயர். கோடி தீர்த்தம் என்றும் அழைக் கிறார்கள்.
பிராகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் சந்திர மௌலீஸ்வரர் சந்நிதி; அடுத்து நடராஜர் சபை. கிழக்குச் சுற்றில் திரும்பியதும், நவக்கிரக சந்நிதி. நவக்கிரகங்கள் அவரவரின் வாகனங்களுடனும் வட்டமான குடைகளுடனும் காட்சி அளிக்கிறார்கள். கிழக்குச் சுற்றிலேயே, கால பைரவர், சனி, சூரியன் மற்றும் ஜ்வரஹரேஸ்வரர்.
உள் பிராகார வலத்தை நிறைவு செய்து, மூலவர் சந்நிதிக்குச் செல்கிறோம். முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய மூலவர் சந்நிதி. முக மண்டபத்தின் தெற்குப் பகுதியில், சோமாஸ்கந்தர். பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர்.
முக மண்டபத்தின் வழியாகவோ, உள் பிராகாரத்தின் தெற்குச் சுற்றிலுள்ள பக்கவாட்டு வழி யாகவோ மூலவர் சந்நிதியை அடையலாம். மகா மண்டபத்தில், ஒரு பக்கத்தில் உற்சவ மூர்த்தங்களும் நடராஜ சிலையும் வைக்கப்பட்டுள்ளன. இன்னொரு பக்கத்தில், பஞ்ச லிங்கங்கள். மூலவர் கருவறைக்கு முன்பாக நந்தி. அர்த்த மண்டபத்தில் நின்று உள்ளே நோக்க... அடடா! அருள்மிகு கோடீஸ்வரர்!
செந்தாமரைப் போதணிந்தான் கண்டாய்சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்பந்தாடு மெல்விரலாள்பாகன் கண்டாய்பாலோடு நெய்தயிர் தேனாடி கண்டாய்மந்தாரம் உந்தி வருநீர்ப் பொன்னிவலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்கொந்தார் பொழில்புடைசூழ் கொட்டையூரில்கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே
- என்று அப்பர் பெருமான் பாடிக் களித்த கொட்டையூர்காரரான கோடீஸ்வரர்.
இவருக்கு ஏன் கோடீஸ்வரர் என்று திரு நாமம்?
பத்திரகிரி முனிவர் இந்தத் தலப் பெருமானை வழிபட்டார். கோடி விநாயகர்கள், கோடி முருகர்கள், கோடி அம்பாள்கள், கோடி சண்டேஸ்வரர்களோடு தாமும் கோடானு கோடி நாயகராகக் காட்சி கொடுத்தாராம் பெருமான். அதனால் கோடீஸ்வரர். அது மட்டுமில்லை, நாம் முன்னாலேயே பார்த்தோமே... அமுதக் கிணறு! அதற்கும் கோடி தீர்த்தம் என்ற பெயர் வழங்கலானது. கொட்டையூர் நாதனை வணங்கி வழிபட்டால், வேறு பல ஊர்களில் எழுந்தருளியுள்ள கோடானு கோடி பெருமான்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
அருள்மிகு கோடீஸ்வரர், சிவலிங்க வடிவம். லிங்க பாணம் முழுவதும், ஏதோ காய் காய்த்தது போல, கொட்டை கொட்டையாகக் காணப்படுகிறது. கோடி லிங்கம் என்ற பெயருக்குப் பொருத்தமாக, ஒரு லிங்கத்தில், இன்னும் பற்பல லிங்கங்கள் பூத்ததுபோல் தோன்றுகிறது.
மூலவரை வழிபட்டு, மீண்டும் உள் பிராகாரத்தை வலம் வருகிறோம்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்ம துர்கை. தனி மண்டபச் சண்டேஸ்வரர். கொட்டையூருக்கு இன்னும் சில சிறப்புகளும் உண்டு. எல்லாம் இருக்கட்டும்; அதென்ன இந்தத் தலத்துக்குக் கொட்டையூர் என்று பெயர் என்கிறீர்களா?
கொட்டைச் செடி என்றால் ஆமணக்குச் செடி. இந்தப் பகுதியில், ஆமணக்குச் செடியின் கீழ் லிங்கம் வெளிப் பட்டதாம். பல ஊர்களில், ஊருக்கு ஒரு பெயரும், கோயிலுக்கு ஒரு பெயரும் இருப்பதைப் பார்க்கலாம்.
இங்கேயும் அப்படித்தான். கொட்டைச் செடிகள் காடாகக் கிடந்த பகுதி என்பதால் கொட்டையூர்; கோயிலின் சுவாமி கோடியாகக் காட்சி கொடுத்த தால், கோயிலுக்குக் கோடீஸ்வரம் என்று பெயர்.
ஏரண்டர் என்று முனிவரைக் கண்டோமே, அவருக்கு அப்படியரு பெயர் ஏற்பட்டதற்கும் ஆமணக்கே காரணம். எப்படி? 'ஹேரண்டம்' என்றால் வடமொழியில், ஆமணக்கு என்று பொருள். ஹேரண்டத்தின் அடியில் தவம் செய்தவர், ஹேரண்டர் ஆனார் (தமிழில் ஏரண்டர்).
இந்தத் தலத்துக்கு ஹேரண்டபுரம் (ஏரண்டபுரம்) என்றும் வில்வாரணியம் என்றும் பெயர்கள் வழங்கப் பட்டுள்ளன. தல மரம் ஆமணக்கு. பல யுகங்களுக்கு முன்னர், வில்வ மரங்கள் நிரம்ப இருந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
காவிரியாள் புவியின் மீது வந்த பின்னர், கனக சோழனும் ஏரண்டரும் இந்தத் தலத்து இறைவனை வழிபட்டனர். அப்போது, அவர்களுக் கும் கோடீஸ்வரராகவே தரிசனம் தந்தாராம் சிவ பெருமான்.
தெய்வங்களெல்லாம் இங்கே கோடியாகப் பெருகியவர்கள் என்பது மட்டுமல்ல; இங்கே செய்யும் புண்ணியமும் பாவமும் கூட கோடி மடங்காகப் பெருகும். புண்ணியம் செய்தால் சரி; பாவம் செய்தால்? அதற்கு வேறெங்கும் போய் கழுவாய் தேட முடியாது.
இதைக் குறித்தே, 'கொட்டையூரில் செய்பாவம் கட்டையோடே' எனும் பழமொழி நிலவுகிறது. அதாவது, ஒருவர் இங்கு செய்து விட்ட பாவம், அவர் உயிர் துறந்து கட்டையில் போகும்போதும் கூடவே வருமாம்.
இங்குள்ள கோடி தீர்த்தம் (அமுதக் கிணறு), கும்ப கோண மகாமகத் திருக்குளங்களுள் ஒன்றாகும்.
ஏரண்டர் தவம் செய்த காலத்தில்... இங்குள்ள ஆமணக்குக் காட்டில், சூரிய--- சந்திர ஆசிரமங்களும் அமைக்கப் பெற்றிருந்தனவாம்.
மெதுவாக வெளிப் பிராகாரம் அடைந்து, அம்பாள் சந்நிதியை அடைகிறோம். முக மண்டபத்தில் நிறைய தூண்கள். தூண் ஒன்றில் பத்திரகிரியார் சிலையாக இருக் கிறார். நின்ற திருக்கோல நாயகி யான அம்பாளுக்குப் 'பந்தாடு நாயகி' என்ற அழகான பெயர். வடமொழியில், கந்துகக்ரீடாம் பாள். கந்துகம் என்பது பந்து; க்ரீடம் என்பது விளையாட்டு. 'பராசக்தி, பந்தைப் பிடித்து விளையாடுகிறார்!' என்று அப்பர் பெருமான், தமது தேவாரப் பாட்டில் குறிப்பிடுகிறார்.
உண்மைதானே! நம்மையெல் லாம் பந்தாக வைத்து விளை யாடும் அம்மை, பந்து விளையாடிக் கொண்டே, பரமனாரையும் பற்றியிருக்கிறார். ஜீவனையும் பரமனையும் இணைத்து வைப்பவள் அவள்தாமே! 'பந்தார் விரலி' என்று ஆண்டாள், நப்பின்னையை அழைத்தது நினைவுக்கு வர, இந்தப் பந்தார் விரலியையும் வணங்கி நிற்கிறோம்.
திருக்கோயில் பிராகாரத்தில் மீண்டும் சுற்றி வரு கிறோம். கோடீஸ்வரரும், பந்தாடு பெருமாட்டியும் கண்களையும் உள்ளத்தையும் முழுவதுமாகக் கொள்ளை கொள்கிறார்கள்.
கருமணிபோல் கண்டத்து அழகன் கண்டாய்கல்லால நிழல்கீழ் இருந்தான் கண்டாய்பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்பவளக் குன்றன்ன பரமன் கண்டாய்வருமணி நீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்குருமணிபோல் அழகமரும் கொட்டையூரில்கோடீச்சரத்து உரையும் கோமான் தானே
- என்று இந்தத் தலத்து இறைவனின் அழகை பாடினார் அப்பர் பெருமான்.
கொட்டையூர் முருகன், கோடி முருகன் ஆவார். ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்ட இவரை, அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். பத்துத் தலையனை அழித்திட்ட ஆற்றல் கோமான் (வேறு யார்? ராமர்தாம்), இந்த முருகனை வணங்கினாராம்.
கொட்டமறப் புற்றாவச் செற்றமறச் சத்தமறக்
குற்றமறச் சுற்றமறப் பலதோளின்
கொற்றமறப் பத்துமுடிக் கொத்தும் அறுத்திட்ட திறல்
ஆற்றர் பணிக் கொட்டைநகர்ப் பெருமாளே!
கோடி கோடியாகப் பெருகும் கொட்டையூர் தலத்தைக் கோடானுகோடி முறை வணங்கி வெளியே வருகிறோம்.
No comments:
Post a Comment