Friday, 4 August 2017

திருநெய்த்தானம்


வெள்ளமாகப் பாயும் தண்ணீர் எங்கே பணிந்து வணங்கும்? வெள்ளமாவது... வணங்குவதாவது... என்கிறீர்களா? வாருங்கள், திருஞானசம்பந்தர் அவ்வாறு குறிப்பிடும் இடத்துக்குப் போகலாம்!

காவிரிக் கரையில், சோழநாட்டு வடகரைத் தலமாக, திருவையாற்றுக்கு மிக அருகில் (கிட்டத்தட்ட திருவையாற் றின் புறநகர் பகுதி போலவே) விளங்குகிற திருநெய்த்தானம், சப்த ஸ்தானங்களில் ஏழாவது ஆகும். மக்கள் வழக்கில் தில்லை ஸ்தானம் என்றோ, வடமொழி வழக்கில் கிருத ஸ்தானம் என்றோ வழங்கப்படுகிறது.
இந்தத் தலத்துக்குப் பதிகம் பாடிய ஞானசம்பந்தர், இங்கு பாயும் காவிரியை வர்ணித்தார்.
‘நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் உரை உந்திப் பகராவரு புனல் காவிரி பரவிப் பணிந்து ஏத்தும் நிகரான் மணல் இருதண்கரை நிகழ்வாய் நெய்த்தானம்’
_ என்று காவிரி பாயும் அழகையும், நெய்த்தானம் வந்து அந்த வெள்ளம் பணிகிற எழிலையும் கூறி னார். பெரு வெள்ளம் பணிந்து வணங்கி மணற் கரை மீது ஏறுகின்றதாம்.
அழகும் அமைதியுமாக இருக்கும் திருநெய்த் தானம் (தில்லை ஸ்தானம் என்றால்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும்) அடை கிறோம். திருவையாற்றிலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள சிறிய கிராமமான இந்த ஊரின் நடுவில் கம்பீரமாகக் கோயில் திகழ்கிறது. கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜ கோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால், வலப் பக்கம் ஒரு மேடை; இடப் பக்கம் சிறிய கிணறு. வெளிப் பிராகாரத்தில் நிற்கிறோம்.
ராஜ கோபுரத்துக்கு நேரே கொடிமரமும், பலி பீடமும், நந்தியும். முதலில் வலம் வருவோம். பின்னர்தான் மற்ற தரிசனங்கள். வெளிப் பிராகா ரம் விசாலமானது. தெற்குத் திருச்சுற்றின் மதில், சற்று வளைந்து செல்கிறது. மதிலை ஒட்டி நந்த வனம். மா, தென்னை, வாழை என்று நிறைய மரங்கள். மேற்குத் திருச்சுற்றிலும், வடக்குத் திருச்சுற்றின் பாதி வரையிலும் நந்தவனம் இருக்கிறது. மரங்களின் குளிர்ச்சியும், பறவை களின் இரைச்சலும், இத்தனைக்கும் இடையில் ஏதோவோர் ஆழமான அமைதியையும் பார்த்தால், காவிரி- கங்கை என்ன... முப்பத்து முக்கோடி தேவர் களும் முனிவர்களும் ரிஷிகளும் இங்கே வந்தாலும் கட்டாயம் பணிந்து வணங்கத்தான் தோன்றும். விவரிக்க முடியாத அமைதி, உள்ளத்தை நிறைக்கிறது. தனிச் சந்நிதிகள் இல்லாத விசாலமான வெளிப் பிராகாரத்தை வலம் வருகிறோம்.
வடக்குச் சுற்றில் வரும்போது, அம்பாள் சந்நிதியின் பின்புறத்தையும் சேர்த்துச் சுற்றுகிறோம். வலத்தை நிறைவு செய்து கொடிமரத்தை அடைகிறோம். உள்ளே போகும் வழியில், பெரிய முன் மண்டபம். அழகான தூண்கள். மண்டபம் மற்றும் உள்வாயிலை தாண்டிச் சென்றால், உள் பிராகாரம். ‘எப்படித்தான் நெய்த்தானத்தாரை வணங்குவேனோ!’ என்று வியப்புற்றார் அப்பர் பெருமான்.
‘வானவர் வணங்கியேத்தி வைகலும் மலர்கள் தூவத் தானவர்க்கு அருள்கள் செய்யும் சங்கரன் செங்கணேற்றன்  தேனமர் பொழில்கள் சூழத் திகழு நெய்த்தான மேய கூனிள மதியினானைக் கூடுமாறறிகிலேனே’ என்று
அந்தப் பெருமகனாரின் வழியில் பாடிக் கொண்டே உள் பிராகாரத்தை வலம் வருவோமா? உள் வலத்தின் கிழக்குச் சுற்றில், சூரியன், ஆதிவிநாயகர். தெற்குச் சுற்றில் திரும்பினால், வரிசையாக வாகனங் கள். தெற்குச் சுற்றிலேயே, மேற்குப் பாதியில், திருமாளிகைச் சுவர்களில் முருகப் பெரு மானுடைய அறுபடை வீடு தோற்றங்கள், ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதி. மூலவருக்கு நேர் பின்புறம், மேற்குச் சுற்றில் வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியர். அடுத்து, சனி பகவானுக்கு ஒரு தனிச் சந்நிதி. அருகில் நாக கன்னிகைகள். தொடர்ந்து சரஸ்வதி சந்நிதி. அதற்கடுத்து மகாலட்சுமி.
வடக்கு உள் சுற்றில் வலம் நடந்து, வடகிழக்கு மூலையை அடைகிறோம். கம்பீரமான நடராஜ சபை. சிவகாம சுந்தரி தாளம் தட்ட, மாணிக்க வாசகர் மனம் தோய்ந்து அமர்ந்திருக்க, பழைய மன்றாடியாக நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார் அருள்மிகு நடராஜப் பெருமான். பக்கத்தில் உற்சவ மூர்த்தங் கள். மீண்டும் கிழக்குச் சுற்றுக்குள் திரும்பினால், சப்த லிங்கங்கள்... கால பைரவர், சந்திரன் மற்றும் அனுக்கிரக பைரவர். எல்லா தெய்வங்களையும் வணங்கி விட்டு மூலவர் சந்நிதிக்குள் நுழைகிறோம். முகப்பு மண்டபம் பெரியதாக உள்ளது. ஒரு பக்கத்தில் நவக்கிரகங்கள். அடுத்துள்ள மகா மண்டபமும் பெரியதுதான்.
அர்த்த மண்டபத்துள் நுழைகிறோம். அதன் முகப்பில் உள்ள நர்த்தன விநாய கரை வழிபட்டு உள்ளே திரும்ப...
அருள்மிகு நெய்யாடியப்பர். கிருதபுரீஸ்வரர் என்றும், நெய்த் தானச் சபையுடையார் என்றும் வழங்கப்படும் நெய்யாடியப்பரை தரிசிக்கிறோம். வட்ட வடிவ ஆவுடையார்; சற்றே ஒல்லியான ஆனால், உயரமான லிங்க பாணம். சிவலிங்கத் திருமேனி உள்ளத்தையும் உணர்வுகளையும் கொள்ளை கொள்கிறது. என்ன அழகு... என்ன அழகு! அப்பர் பெருமான், குழகன் (அழகன்) என்று பாடியதன் பொருள், நெய்யாடிய அழகனாரைக் காணும்போது புரிகிறது.
இவருக்கு ஏன் நெய்யாடியப்பர் என்ற திருநாமம்?
சிவபெருமான் அபிஷேகப் பிரியரல்லவா? காம தேனு ஒரு முறை, இந்த அபிஷேகப் பிரியருக்கு அபிஷேகம் செய்து வழிபடப் பிரியம் கொண்டது. காமதேனுவாயிற்றே, எதைக் கொண்டு அபிஷேகம் செய்யும்... தனது பாலாலும், பாலில் கட்டி நின்ற நெய்யாலும் அபிஷேகித்தது. இவர் பசு நெய்யில் ஆடிய அப்பர்; அதனால் நெய்யாடியப்பர்.
இறையனாரை எங்கே காணலாம்? என்னவாக அவர் இருப்பார் என்ற கேள்வி வந்தது. அப்பர் பெருமானே, அதற்கு ஒரு முறை விடை சொன்னார். எப்போது தெரியுமா? அவரை நீற்றறையில் இட்டார் களே, அப்போது பாடினார்.
‘விறகில் தீயினன் பாலில் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியன் உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே’
பாலுக்குள் நெய் இருக்கிறது; எல்லோருக்கும் தெரியும். நெய் வேண்டுமானால், பால்தான் அதற்கான ஆதாரம். ஆனால், பாலை எடுத்து வெறுமே பார்த்தால், நெய் கண்ணுக்குத் தெரியுமா? இல்லை குடித்துப் பார்த்தால் நெய் கிடைக்குமா? பாலைக் காய்ச்ச வேண்டும்; அதனை பிறைகுற்றித் தயிராகவோ மோராகவோ செய்ய வேண்டும்; பின்னர் கடைய வேண்டும்; கடைந்தால்... வெண்ணெய் தானாகவே திரண்டு வரும். அதுபோல, மனமென்னும் இந்தப் பாற்கடலை பக்குவமாகக் காய்ச்சி, பதப்படுத்தி, தயிராக உரமேற்றிக் கடைந்தால், கடவுள் எனும் வெண்ணெய் முன்னால் வந்து நிற்குமாம். கடைவதற்கு மத்து வேண் டுமே, கடைகயிறு வேண்டுமே... ஆமாம், வேண்டும்தான். கடவுளுக்கும் ஜீவனுக்கும் உறவுக் கோல் நட்டால், மத்து கிடைத்து விடும்; உணர்வையே கயிறாக்கினால், வேகமாகக் கடைந்து விடலாம்.
பாலுக்குள் நெய்யாக விளங்கும் இறைவனை விளங்க வைக்கவே, காமதேனு பாலையும் நெய்யையும் அபிஷேகம் செய்தது போலும். நெய்யாடியப்பரை நெஞ்சாரப் பணிகிறோம், ‘நெய்யாய் வெண்ணெயாய் திரண்டு வா திருவோனே’ என்று தாள் பணிகிறோம்.
காமதேனு மட்டுமல்ல... சரஸ்வதியும், கௌசிக முனிவரும்கூட இவரை வழிபட்டுள்ளனர். இன்றும் நெய்யாடியப்பருக்கு பசு நெய் அபிஷேகம் மிகவும் உகந் தது. நெஞ்சு தொடர்பான நோய்கள் உள்ளவர்களும், மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வந்து (அவர் சார்பாக உறவினர்களோ நண்பர்களோ வந்தும்) நெய்யபிஷேகம் செய்தால், நோய் பாதிப்பு விலகும் அல்லது குறையும் என்று உள்ளூர் அர்ச்சகர் தெரிவித்தார். அவர் சொல்வது உண்மை என்பதை விளக்குவது போல, நம் கண்ணெதிரிலேயே அபிஷே கம் செய்யவும், முன்னரே அபிஷேகம் செய்து பலன் கண்டு நேர்த்தியைப் பூர்த்தி செய்பவர்களுமாக நிறையப் பேர் வந்து செல்கிறார்கள்.
நெய்யாடியப்பரை இன்னொரு முறை தரிசிக் கிறோம். அர்த்த மண்டபத் தூண்களின் அழகை அர்ச்சகர் காட்டுகிறார். அதை ரசித்து, மீண்டும் உள் பிராகாரத்தை வலம் வருகிறோம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா. தட்சிணாமூர்த்தியின் மண்டபம் முன்னெடுத்துக் கட்டப்பட்டிருக்கிறது. வடக்கு கோஷ்டத்தின் அருகே துர்கைக்கும் ஒரு சந்நிதி. சண்டிகேஸ்வரர் தனி மண்டபத்தில் இருக்கிறார். நெய்யாடியப்பரை வணங்கிவிட்டு, வெளிப் பிராகாரம் அடை கிறோம். இங்குதான் அம்பாள் சந்நிதி.
வடக்கு நோக்கிய அம்பாள் சந்நிதி. முன்புறம் நந்தி. மண்டபம் போல பெரிய அமைப்பு காணப்படுகிறது. உற்சவ வாகனமும் அதற்குரிய பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. துவார விநாயகரை வழிபட்டு உள்ளே நுழைய, நின்ற கோலத்தில் அருள்மிகு வாலாம்பிகை. ஒரே கல்லில் வடிக்கப் பட்ட சிலை என்கிறார் அர்ச்சகர். நான்கு திருக்கரங்கள்; ஒன்றில் பாசம், ஒன்றில் அங்குசம் என்று இரண்டு கரங்கள்; மீதமுள்ள இரண்டு கரங்களில், ஒன்று அபயத்தையும் மற்றொன்று ஊரு ஹஸ்தமுமாகத் தொடையில் ஊன்றி யவாறும் உள்ளாள். அழகும் கம்பீரமும் விளையாடுகிற அம்பாளுக்கு, அப்பர் பெருமான், ‘இளமங்கை’ என்ற பெயரைக் குறிப்பிடுகிறார்.
தேய்ந்திலங்கும் சிறுவெண்மதியாய் நின்திருசடைமேல் 
பாய்ந்த கங்கைப் புனல் பன்முகமாகிப் பரந்தொலிப்ப 
ஆய்ந்திலங்கும்மழு வேலுடையாய் அடியேற்கு உரைநீ 
ஏந்திள மங்கையு நீயும் நெய்த்தானத்(து) இருந்ததுவே.
இளமங்கை எனும் தமிழ்ப் பெயர், வட மொழியில் ‘பாலாம்பாள்’ என்றும், அது மருவி ‘வாலாம்பிகை’ என்றும் வழங்கப்படுகிறது. கோயிலில், மாசி மாதத்தில் பத்து நாள் உற்சவமும் மாசி மகத் தீர்த்தவாரியும் உண்டு.
திருநெய்த்தானத் தலத்துத் திருக்கோயிலில், ஏராள மான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, சுவாமி சந்நிதி மகாமண்டபச் சுவரெல்லாம் கல் வெட்டுகள். சோழர்கள் மற்றும் பல்லவர்கள் காலத்தில், நிவந்தமாக நிலம் அளிக்கப்பட்டது, விளக்குக்குப் பொற்காசுகள் தந்தது, கோயில் பணியாளர்களான மேளக்காரர்கள், நாட்டிய மங்கையர் ஆகியோருக்கு நிலம் விட்டது போன்ற செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கை மன்ன னான கஜபாஹு, நெய்யாடியப்பரையே தன் குல தெய்வமாகக் கொண்டு திருப்பணிகள் செய்வித்தான் என்பதும் தெரிகிறது. கோயிலில் காணப்படும் சிம்மத் தூண்கள், பல்லவர் காலத் திருப்பணிக்குச் சான்று.
நெய்யாடியப்பர் கோயிலிலிருந்து வெளி வருகிறோம். ‘கோயிலில் நெய்யாடும் கோலப்பா! எங்கள் உள்ளங்களில் நெய்யெனத் திரண்டு வா நேசனே!’ என்று பிரார்த்தித்தவாறு விடைபெறுகிறோம்.
திருவையாறு முதல் இந்த நெய்த் தானம் வரையிலான ஏழு தலங்களும் ‘சப்த ஸ்தானங்கள்’ என சிறப்பிக்கப் படுகின்றன. இந்த பகுதியில், ‘ஏழூர்ப் பெருவிழா’ எனப்படும் கல்யாணத் திருவிழா பிரசித்தம் என்பதும், இந்த விழாவுக்குக் காரணமான நந்தியெம்பெருமானின் கல்யாணக் கதையும் நமக்கு ஏற்கெனவே தெரியும்.
மகன் போல அருள் வழங்கிய பக்தன் ஜப்பேச னுக்குத் திருமணம் செய்விக்கத் திருவுளம் கொண் டார் ஐயாறப்பர். அதன்படி வியாக்ரபாத (புலிக் கால்) முனிவரின் மகள் சுயம்பிரகாசைக்கும் ஜப்பேசனுக்கும் (நந்திக்கும்) மழபாடியில், பங்குனி புனர்பூசத் திருநாளில் மணம் நடைபெற்றது. பக்கத்து ஊர் பிரான்களெல்லாம் அவரவர் பங்குக்குச் சில செலவுகளை ஏற்றுக் கொண்டனர். இவ்வாறு பழமும், பூவும், சோறும், நெய்யும், குண்டலங்களும் கொடுத்து, வேதியர்களையும் அனுப்பித் தந்து, திருமணத்தைச் சிறப்பித்த பெருமான்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவே, ஏழூர்ப் பெருவிழா.
புது மணமக்களாம் நந்தியையும் சுயசையையும், சித்திரை பௌர்ணமிக்கு அடுத்த நாள் காலையில் ஒரு வெட்டிவேர் பல்லக்கில் ஏற்றுவர். அடுத்ததாக ஒரு கண்ணாடிப் பல்லக்கில் ஐயாறப்பரும் தர்ம சம்வர்த்தனியும் ஏறிக் கொள்வர். காலையில் புறப்படுவர். முதலில் திருப்பழனம், அடுத்து திருச்சோற்றுத்துறை, தொடர்ந்து திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திரு நெய்த்தானம் என்று போவார்கள். அந்தந்த ஊர் பெருமான்கள் தத்தம் பிராட்டிகளோடு எதிர்வந்து அழைத்து விருந்து உபசரிப்பார்கள். அந்தந்த ஊரிலிருந்து புறப்படும்போது, அந்தந்த ஊர் பெருமானும் பிராட்டியும் தத்தமது பல்லக்கில் உடன் புறப்பட்டு விடுவர். ஒரே கோலாகலம்தான்.
மதிய உணவு வேளைக்குச் சோற்றுத் துறை, பின்னர் தொடர்ந்து ஊர்வலம், அடுத்த நாள் காலையில் பூந்துருத்தியும் நெய்த்தானமும் என்று சென்று, தொடங்கிய மறு நாள் மதியம் போல (இப்போதெல்லாம் மாலைகூட ஆகி விடுகிறதாம்) திருவையாற்றுக்கு ஏழு பெருமான்களும் வந்து சேர்வார்கள். ஏழு பேருக்கும் சற்று ஓய்வு வேண்டாமா? இளைப் பாறுவார்கள். பின்னர், அந்தந்த ஊர் பெருமான்கள், கல்யாணத் தம்பதியிடமும் பிரபஞ்ச தம்பதியிடமும் விடை பெற்றுக் கொண்டு அவரவர் ஊர் போய்ச் சேர்வார்கள். இப்படி ஊர்வலம் போகும்போது, பெருமான்கள் மட்டுமா போவார்கள்? பக்தர்கள், இசை வித்தகர்கள், நடனக்காரர்கள், நாயனக்காரர்கள் எல்லோரும்தான் போவார்கள். எல்லா இடங்களிலும் இசையும் நாகஸ்வரமும் குசல விசாரிப்புகளும் விருந்து உபசாரங்களும் கேளிக்கைக் கொண்டாட்டமுமாக உற்சாகம் பொங்கி வழியும். கோலாகல மான இந்தப் பெரு விழா, தேவார முதலிகள் காலத்தில் நடைபெற்ற தாகத் தெரியவில்லை. ஆனால், அருணகிரிநாதர் காலத்தில் இது இருந்திருக்கிறது. ஏழூர்களையும் ஒரு திருப்புகழில் அருணகிரியார் பாடுகிறார்.
திருவின் மாமரமார் பழனப்பதி அயிலும் சோறவை யாளுதுறைப்பதி திசையினான் மறைதேடிய முற்குடி விதியாதி(ச்) சிரமு மாநிலம் வீழ் தரு மெய்ப்பதி பதும நாயகன்வாழ் பதி நெய்ப்பதி திருவையாறுடன் ஏழு திருப்பதி பெருமாளே
முதலாம் ராஜராஜ சோழரின் பட்டத்தரசி உலோக மாதேவியாரே (ஒலோக மாதேவியார் - லோக என்பது இவ்வாறானது) இதற்குக் காரணம். அவர்தான், ஏழூர்ப் பெரு விழா மரபைத் தொடங்கி வைத்தார். சோழ மன்னர்கள் காலத்திலும் (குறிப்பாக ராஜராஜன் மற்றும் ராஜேந்திரன்) பல்லவ, நாயக்க மன்னர்கள் காலத்திலும், சமுதாய நல்லிணக்கத்துக்காகவும், ஆன்மிகம் தழைத்தோங்கவும் இவ்வாறான விழாக் கள் தொடங்கப்பட்டுள்ளன.
ந்தியின் திருமணத்துக்குப் பொருள் கொடுத்தார்களோ இல் லையோ... ஏழூர்ப் பெருமான்களும் வாரி வாரி வழங்கக் கூடிய வள்ளல்கள். சற்றே ஆழமாகச் சிந்தித்தால், தத்துவ ரீதியாக, திருமணம் என்பது இறைவனோடு ஐக்கியப்படுதலைக் குறிக்கும். இந்தத் திருமண யாத்திரை, உயிர் உறவு கொள்ளும் யாத்திரை என்றும் சொல்லலாம். எப்படி?
முதலில் திருப்பழனம். பாவத்தைத் தீர்ப்பவர் பழனத்தழகர்; இவர்தாம், அப்பூதியாரின் மகனுக்கு உயிர் தந்தவர். உலகாயதப் பாவங்களிலிருந்து இந்த ஜீவனைத் தூய்மைப்படுத்தி, மெய்யாம் உயிர் தந்து, இவரே ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கச் செய்கிறார். அடுத்தவர், சோற்றுத்துறை நாதர். உடலுக்கு ஊட்டம் போல, உயிருக்கு ஊட்டம் பாலிப்பவர். அடுத்து, வேதிகுடிபிரான். உயிரும் ஊட்டமும் கொண்ட பின்னர், வேதப் பொருளை நாடுவதுதானே பொருத்தம்! அதனால்தான், இறைவனார் அருளும் வேதங்களைக் காது கொடுத்து விநாயகர் கேட்கிறார்; நமக்கும் வழி காட்டுகிறார். அடுத்து, திருக்கண்டியூர். யாராக இருந்தா லும், ஆன்மப் பாதையில் ஆணவம் மிகும் என்றால், பிரம்மனைப் போல சிரத்தைத் (சிரம்= தலை) தொலைக்க வேண்டியதுதான். அது மட்டுமல்ல, சிவ பிரானாக இருந்தாலும், தவறு செய்தால், பரிகாரம் தேடத்தான் வேண்டும் (கையில் ஒட்டிக் கொண்ட பிரம்ம கபாலத்தைக் கீழே தள்ளுவதற்காகப் பரிகாரம் தேடினாரா இல்லையா?).
ஆன்மப் பயணத்தில், பக்குவம் பெற்ற பிற ஆன்மாக்க ளோடு சேர்ந்து இறையின்பம் அனுபவிப்பது என்பது மிக உயர்ந்தது. அதனால்தான், சத் சங்கம், பாகவத சேவை என்றெல்லாம் பல வழிமுறைகளை நமது முன்னோர் செயல்படுத்தினர். பக்குவம் தேடுகிற ஆன்மா, பக்குவப்பட்ட ஆன்மாக்களோடு சேரும் போது, இன்னும் பதப்படுகிறது. பூக்கள் எப்படி ஒன்று சேர்ந்து மாலையாகின்றனவோ, அப்படித் தான், ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும், திருமாலும் திருமகளும், பற்பல முனிவர்களும், மேற்கூறிய பேருண்மையைப் பூந்துருத்தியில் வாழ்ந்து காட்டினர். அடுத்து நெய்த்தானம். பாலில் படுநெய்யாக உள்ள இறைவனை, அனுபவ பூர்வமாக உணர்வதைக் குறிக்கும் தலம். நிறைவாக, திருவையாறு. ‘கயிலைக் காட்சியைக் கயிலையில் தேடவேண்டாம்; அது திருவையாறிலேயே கிடைக்கும்!’ என்று நாவரசருக்குச் சிவனார் அருள் வழங்கிய தலம். உள்ளத்துள்ள கயிலைக் காட்சியை, உலகெங்கும் காணும்படியான பக்குவம் பெறும் தலம். உலோகமாதேவியார், ஏழூர்ப் பெருவிழாவை ஏற்பாடு செய்தபோது, எல்லாவற்றையும் எண்ணிப் பார்த் திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
ஏழூரில் திருப்புகழ்
ப்த ஸ்தானத் தலங்களில், மூன்று திருப்புகழ்த் தலங்களாகவும் உள்ளன. அவை திருநெய்த்தானம் (ஒரு திருமுகம், நான்கு கரங்கள், வள்ளி- தெய்வானை சமேத நின்ற கோல மயில் வாகன முருகன்), திருப்பூந்துருத்தி (மேற்சொன்ன திருக்கோலம் போன்ற கோலம் - மெய்ஞ்ஞானம் வழங்குபவர்) மற்றும் திருவையாறு (தேவியர் இருவருடனாய வில் தாங்கிய தனுசு சுப்பிரமணியர்) ஆகியவையாகும்.
இந்த மூன்று ஊர்களுக்கான தனித்தனித் திருப்புகழ்ப் பாடல்கள் தவிர, ஏழூர்களையும் குறிக்கும் பாடலில், திருவின் மாமரமார் பழனப்பதி, அயிலு சோறவையாளு துறைப்பதி, திசையின் நான்மறை தேடிய முற்குடி, விதியாதிச் சிரம் மாநிலம் வீழ்மெய்ப்பதி என்று முறையே பழனம், சோற்றுத்துறை, வேதிகுடி, கண்டியூர் ஆகியவற்றைக் குறிப்பிட்டதால், இவை நான்கும் திருப்புகழ் வைப்புத் தலங்களாகும்.
ஏழூரில் ஏழு முனிவர்கள்
சி றப்பு மிக்க ஏழூரில், சிறப்பு மிக்க ஏழு முனிவர்கள் பூசித்துள்ளனர்.
திருப்பழனம் - குற்சர்
திருச்சோற்றுத்துறை - ஆங்கீரசர்
திருவேதிகுடி - அத்திரி
திருக்கண்டியூர் - காசியபர்
திருப்பூந்துருத்தி - கௌதமர்
திருநெய்த்தானம் - பிருகு
திருவையாறு - வசிட்டர்
என்ன சிறப்பு?
திருப்பழனம்: விஷம் மற்றும் நோய் நீக்கும் தலம். அருகிலுள்ள தேவார வைப்புத் தலமான திங்களூரும் தரிசிக்க வேண்டிய ஒன்று.
திருசோற்றுத்துறை: பசி, வறுமை நீக்கும் தலம். திருமணக் கோலச் சிறப்பு தரிசனம்.
திருவேதிகுடி: திருமணப் பிரார்த்தனைத் தலம். வேத விநாயகர் தரிசனம்.
திருக்கண்டியூர்: சிவனின் அட்ட வீரட்டங்களில் ஒன்று. திரிமூர்த்தி சிறப்பு. பிரம்மஹத்தி பரிகாரத் தலம். அமர்ந்த கோல அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா- சரஸ் வதி சிலா ரூபங்கள், சாதாதாபர் சிலை மற்றும் மாசி மாதமானால், 13-15 ஆகிய தேதிகளில் ஈசன் மீது விழும் சூரிய ஒளி.
திருப்பூந்துருத்தி: திருக்கயிலைக்கு நிகரான சிறப்பு. அமர்ந்த கோல அப்பர், வீணாதர தட்சிணாமூர்த்தி, ஒற்றைக் கால் துர்கை ஆகிய மூர்த்தங்கள் தரிசிக்க வேண்டியன.
திருநெய்த்தானம்: நோய் நீக்கும் தலம். சிலா ரூபங் களும் கல்வெட்டுகளும் தரிசிக்கச் சிறந்தன.
திருவையாறு: பிதுர்க்கடனை நீக்கி எம பயத்தைப் போக்கும் தலம்.

No comments:

Post a Comment