ஓர் ஆலயத்துக்குச் சில சிறப்புகள் இருக்கலாம். ஆனால், சிறப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, அவை ஓர் ஆலயமாக அமைந்திருந்தால், அதன் பெருமையை என்னவென்பது?! அப்படிப்பட்ட பெருமைகள் கொண்ட ஓர் ஆலயம், திருச்சி மாவட்டம் லால்குடிக்கு வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் திருமங்கலம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் உறையும் இறைவன் பெயர்: ஸ்ரீசாமவேதீஸ்வரர். இறைவி திருநாமம்: ஸ்ரீலோகநாயகி!
இந்த ஸ்ரீசாமவேதீஸ்வரர் ஆலயப் பெருமை களைச் சொல்ல ஆரம்பித்தால்... பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம். உதாரணத்துக்குச் சில:
_ தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகிய மூன்று சிறப்புகளும் உண்டு.
_ லட்சுமிதேவி, குபேரன், இந்திரன், சியவன முனிவர், உதங்க முனிவர் ஆகியோர் பூஜித்துப் பேறு பெற்ற தலம். ‘திரு’ என்று அழைக்கப்படும் லட்சுமிதேவி இங்குள்ள சாமவேதீஸ்வரரை வழிபட்டு மங்கலம் பெற்றதால், இந்தத் தலம் ‘திருமங்கலம்’ என அழைக்கப்படுகிறது.
_ ஜைமினி முனிவர் சாம வேதத்தை ஆயிரம் சாகைகளாகப் பிரித்து ஓதி, இறைவனை இங்குதான் வழிபட்டார்.
_ நான்கு வேதங்களுள் ஒன்றான சாம வேதத்தின் பெயரால் அமைந்தவர் இந்த ஆலய ஈஸ்வரர்.
_ இந்த ஆலயத்தின் தல விருட்சமான பலா மரத்தை பூஜை செய்தால், ஆயுள் விருத்தியும், ஆயுஷ்ஹோமம் செய்த பலனும் கிடைக்கும்.
_ தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க, பரசுராமர் இங்கு வந்து வழிபட்டதால் தலத்துக்குப் பரசுராமேஸ்வரம் என்றும் ஒரு பெயர்.
_ தன் தந்தையைக் கொன்ற பாவம் நீங்க சண்டிகேஸ்வரர் இங்கு வந்து தொழுது முக்தி பெற்றார்.
_ இந்தத் தல இறைவனை தரிசித்தாலே பித்ரு தோஷங்கள் நீங்கும்.
_ 63 நாயன்மார்களுள் ஒருவரான ஆனாய நாயனார் அவதரித்து முக்தி பெற்ற தலம்.
_ எத்தகைய குழப்பங்கள் மற்றும் மனக் கவலைகளுடன் உள்ளே வருவோரையும் தெளிவாக்கித் திருப்பி அனுப்பும் திருத்தலம்.
_ கோபக்கார மனிதர்கள், தாங்கள் கொண்டிருக்கும் கோபத்தை விட் டொழிக்க, இந்த ஆலயம் வந்து சாம வேதீஸ்வரரை வணங்கினால் சாந்த சொரூபி ஆகலாம். சாம வேதத்துக்கும் சாந்தத்துக்கும் அவ்வளவு தொடர்பு இருக்கிறது போலும்.
இவை எல்லாம் தவிர, ஆலயத்துக்குள் அமைந்துள்ள மூர்த்தங்களுக்கும் ஏராளமான சிறப்புகள். வாருங்கள், இந்த விசேஷ காலத்தில் பெருமைகள் நிறைந்த சாம வேதீஸ்வரரை தரிசித்து அவரது அருள் பெறுவோம்.
சிவாலயத்தில் உறையும் லிங்கத் திருமேனிகளுக்கு, இறைவன் அந்தந்த திருத்தலத்தில் நிகழ்த்திய திருவிளை யாடல்களை ஒட்டி, அவருக்குப் பெயர் வழங்கப்படும். இப்படித்தான் பல தலங்களில் பார்த்து வருகிறோம். தானே தாயாக இருந்து, ரத்னாவதி என்ற ஒரு பெண்ணுக்கு இறைவன் பிரசவம் பார்த்ததால், திருச்சி- மலைக்கோட்டையில் எழுந்தருளி உள்ள இறைவன் தாயுமானவர் ஆனார். இந்திரனும் தேவர்களும் எறும்பு உருவம் கொண்டு ஈசனை வழிபட்டதால், திருச்சி திருவெறும்பூரில் உள்ள ஈசன் ‘எறும்பீஸ்வரர்’ ஆனார். அது போல்தான் திருமங்கலம் என்கிற இந்த கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் லிங்கத் திருமேனிக்கு, ‘சாமவேதீஸ்வரர்’ என்று பெயர்.
அதென்ன ஈஸ்வரனின் பெயர் சாமவேதீஸ்வரர்?
ருக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய வேதங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் வெவ்வேறு ஈஸ்வரர்களும் வெவ்வேறு திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளனர். ஆனாலும், இந்தப் பெயர் கொண்ட லிங்கத் திருமேனிகள் அமைந்த கோயில்கள் எல்லாம் சற்று அரிதானவை. இங்கே எல்லாம் சென்று அந்த வேத மூர்த்திகளை தரிசிப்பது, நமக்குக் கிடைத்த பெரும் பேறு!
வேதங்களை நான்கு பிரிவாகப் பிரித்தவர் வேத வியாசர். இதற்குப் பொறுப்பான- திறமையான பல சீடர்களைத் தனக்கு உதவியாக வைத்துக் கொண்டார். புலமையில் தேர்ந்த அத்தகைய சீடர்களில் ஒருவர் ஜைமினி முனிவர் என்பவர். இசை வேதமான சாம வேதத்தை முறையாகப் பிரிக்கும் பொறுப்பை இவரிடமே ஒப்படைத்தார் வேத வியாசர். பெருமகிழ்ச்சியுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஜைமினி முனிவர், இந்த திருமங்கலம் திருத்தலத்தில் அமர்ந்து, பல காலம் உழைத்து சாம வேதத்தை ஆயிரம் சாகைகளாகப் பிரித்தார். எனவேதான், இந்த ஆலயத்தில் உறையும் ஈஸ்வரன், ‘சாமவேதீஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார்!
இந்த ஆலயத்தில் தற்போது ஓதுவாராகப் பணி புரிபவர் பெயர் சாமவேதீஸ்வரன். ஆலய அர்ச்சகரான ஞானஸ்கந்தன் என்ற அம்பி குருக்கள், இறைவனுக்கு கற்பூர ஆரத்தி காட்டும்போது, அந்த சாமவேத மூர்த்தியைப் போற்றித் திருமுறைப் பாடல்களைப் பாடுகிறார் ஓதுவார். அமைதியான சூழ்நிலையில் ஓதுவார் மூர்த்தியின் போற்றுதலோடு கூடிய அந்த ஆரத்தியை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் அதில் உள்ள ஆனந்தம் தெரியும்!
தனது நூலான பெரிய புராணத்தில் ‘இசை விரும்பும் கூத்தன்’ என்று இந்தத் தலத்து இறைவனான சாமவேதீஸ்வரரை சிறப்பிக்கிறார் சேக்கிழார் பெருமான்.
இனி, ஆலய தரிசனம் செய்வோம்.
சுமார் 2,000 வருடங்களுக்கும் மேற்பட்ட பழைமை கொண்ட ஆலயம் இது என்கிறார்கள். பிரமாண்டமான கருங்கல் நிலை மேல், மூன்றடுக்கு ராஜ கோபுரம். கண்களைக் கவரும் ஏராளமான சுதை உருவங்கள், ராஜ கோபுரத்தை அலங்கரிக்கின்றன. உள்ளே நுழைகிறோம்.
ஒரு மண்டபம். இதன் தூண்களில் சிவ வடிவம், நாகர், திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்றோரது புடைப்புச் சிற்பங்கள் காட்சி அளிக்கின்றன. இதைத் தாண்டி கொடிமரம். பலிபீடம். நந்திதேவர் மண்டபம். கொடிமர விநாயகர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். ஆலயம் படுசுத்தமாகக் காட்சி அளிப்பதைப் பாராட்டத்தான் வேண்டும். 1939, 1961, 2003 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
வலப் பக்கம் அருள்மிகு லோக நாயகியின் திருச் சந்நிதி. இதன் எதிரே நவராத்திரி மண்டபம். நடக்கிறோம். பெரிய வாசல். நமக்கு நேராக ஸ்ரீசாமவேதீஸ்வரர் சந்நிதி. முதலில், உள் பிராகாரத்தை வலம் வருவோம். திருமாளிகைப் பத்தி அமைப்பில் பிராகாரம் அமைந்துள்ளது. அபிஷேகத்துக்குத் தீர்த்தம் எடுக்கும் கிணறு. ஸ்தல விருட்சம், பலா மரம். செழிப்பாக வளர்ந்து காணப்படுகிறது. ‘‘தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் பலாச் சுளைகளைத் தேனில் தோய்த்து அதை, ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து விநியோகித்தால், நலம் பெறலாம்!’’ என்றார் ஞானஸ்கந்த குருக்கள்.
பிராகார வலத்தின்போது கோஷ்ட தெய்வங்களாக பிட்சாடனர், அபயகர தட்சிணாமூர்த்தி, சங்கர நாராயணர், பிரம்மா, சிம்ம வாகனத்தில் விஷ்ணு துர்கை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். இவர்களில் தட்சிணாமூர்த்திக்கு ஒரு சிறப்பு உண்டு. எல்லாத் தலங்களிலும் இருக்கும் சின்முத்திரை கோலத்தில் இங்கு இல்லாமல், அபயக் கரம் காட்டி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். கல்விச் செல்வம் அருள்கிறார். தவிர, குழந்தைப் பேறு வேண்டுவோர், இவரிடம் கோரிக்கை வைத்தால் மணிவயிறு வாய்க்கப் பெறலாம் என்கிறார்கள். குருப் பெயர்ச்சி, இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
வலத்தின்போது ஏராளமான சந்நிதிகள். மூஞ்சூறு வாகனத்துடன் மகா கணபதி. பெரிய வடிவம். உதங்க முனிவர், பரசுராமர் பூஜித்த சிவலிங்கம். தேவசேனாவுடன் நின்ற கோலத்தில் இருக்கும் கல்யாண சுப்ரமண்யர் இங்கு சிறப்பு. இவர்களுக்கு அருகே மயில் மேல் அமர்ந்த கோலத்தில் வள்ளி தரிசனம் தருகிறாள். இது ஓர் அரிய காட்சி. தம்பதிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டால் இங்கு வந்து, இந்தக் கல்யாண சுப்ரமண்யர் மூர்த்திக்கு விசேஷ வழிபாடு செய்வது நலம் பயக்கும்.
தவிர, இந்த ஆலயத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீஆறுமுகப் பெருமானும் வித்தியாசமான அமைப்பு கொண்ட வர். சாதாரணமாக ஆறு முகங்களும், பன்னிரண்டு கரங்களும் கொண்டு இவர் காட்சி தருவார். ஆனால், இங்கோ ஆறு முகங்கள் உண்டு; கரங்கள், நான்கு! தன்னையே கதியென நம்பிச் சரணடையும் பக்தர்களின் எதிர்ப்புகளைப் போக்கும் சத்ரு சம்ஹாரமூர்த்தியாக இவர் அனுக்கிரகம் தருகிறார். தொடர்ந்து, கஜலட்சுமி சந்நிதி.
அடுத்து, ஆனாய நாயனாருக்கு முக்தி கொடுத்த லிங்கத் திருமேனி, நந்திதேவருடன் காட்சி தருகிறது. இதன் அருகே ஒரு பாணலிங்கம். ‘‘இந்த லிங்கத்தை இந்தக் கோயில்ல பிரதிஷ்டை பண்ணப்ப ஒரு அடிதான் இருந்தது. இப்ப ரெண்டரை அடியா இருக்கு. வளர்ந்து கொண்டே இருக்கு. இந்த பாண லிங்கத்துக்கு கலப்பு நெய்ல (ஐந்து வகை எண்ணெய் சேர்ந்தது கலப்பு நெய் என்கிறார்கள்) அபிஷேகம் பண்ணி, பழங்களால் இவருக்கு அபிஷேகம் செய்தால், நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்!’’ என்றார் அர்ச்சகர். இவரை அடுத்து அப்பர், சம்பந்தர், ஆனாய நாயனார், ஆனாயர், ஆனாயருக்கு முக்தி கொடுத்து அருளிய அம்மன் ஆகிய திருமேனிகள் அழகாகக் காட்சி அளிக்கின்றன.
63 நாயன்மார்களுள் ஒருவரான ஆனாயர் அவதரித்து, முக்தி பெற்ற தலம் இது. எனவே, இங்கு இவருக்கு சிறப்புச் சந்நிதியும் வழிபாடும் உண்டு. இடையர் குலத்தில் பிறந்தவர் இவர். தின மும் மாடுகளை ஓட்டிச் சென்று மேய்த்து விட்டுத் திரும்புவது இவரது தொழில். புல்லாங்குழல் வாசிப்பதில் தேர்ந்தவர். இவரது வாசிப்பு, அனைவரையும் மயக்கி விடும். சாம வேதத்தின் உண்மைப் பொருளான ஐந்தெழுத்து மந்திரத்தை (நமசிவாய) தனது வாசிப்பில் இழையோட வைத்து, அந்த மகேசனையே மயங்க வைத்தார். ஆனாயரின் குழலோசையை, தினமும் உமையம்மையுடன் கேட்டு இன்புற்ற மகேசன், அவருக்குத் தனது திருக்காட்சி தந்து ஆட்கொள்ள விரும்பினார்.
ஒரு நாள் ரிஷப வாகனத்தில் ஏறி உமையம்மையுடன் வான் வீதியில் வந்து கொண்டிருந்தார் எம்பெருமான். தேவர்களும் சிவகணங்களும் உடன் வந்தனர். ஒரு கட்டத்தில் ஆனாயரின் குழலோசை, எம்பெருமானை ஈர்க்க... அந்த நிலப் பகுதியில் இறங்கினார். கண்களை மூடி, தியான நிலையில் நின்று தன்னைத் துதிக்கும் ஆனாயருக்கு அப்போதே முக்தி தர விரும்பினார் இறைவன். இதை அறிந்து தேவர்களும் சிவ கணங்களும் ஆனாயர் மேல் மலர் மாரி பொழிந்தனர். கண் விழித்துப் பார்த்த ஆனாயர், குழல் ஊதுவதை விடுத்து, விக்கித்து நின்றார். ‘கயிலாயமே தரை இறங்கி வந்து விட்டதோ!’ என்று கருதும் வண்ணம் தனக்கு முன் நிற்கும் தேவ கூட்டத்தினரையும், பார்வதி- பரமேஸ்வரனையும் கண்களில் நீர் மல்கப் பார்த்தார்.
ஆனாயரின் குழல் ஒலியை எந்த நேரமும், தான் அருகில் இருந்து கேட்பதற்கு வசதியாக, ‘இந்நின்ற நிலையில் நம்பால் அணைவாய்!’ என்று அவரின் திருமுகம் பார்த்து அருளினார் ஈசன். இதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த ஆனாயரும் அப்படியே, அங்கு எப்படி நின்றிருந்தாரோ அதே நிலையிலேயே அகன்று இறைவனிடம் சேர்ந்தார். அதன் பின், ஆனாய நாயனார் ஆனார். இவர், இறைஜோதியில் கலந்தது கார்த்திகை மாதம் ஹஸ்த நட்சத்திர தினத்தன்று. ஆனாயர் குருபூஜை வருடா வருடம் இந்த தினத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே, ஆனாய நாயனாரையும் அவருக்குக் காட்சி கொடுத்த பார்வதி- பரமேஸ்வரரையும் இங்கு தரிசிப்பது விசேஷம்.
பிராகார வலத்தில்தான் இருக்கிறோம். இங்கு துர்கையானவள், விஷ்ணு துர்கையாக சிம்ம வாகனத்தில் காணப்படுகிறாள். திருமணம் ஆகாத பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளி தினங்களில் துர்கைக்கு மஞ்சள் காப்பு சார்த்தி வழிபட்டால், விரைவில் திருமணம் கூடி வரும்.
சண்டிகேஸ்வரரும் இங்கு சிறப்பு. சிவ பக்தியைக் கண்டித்த தன் தந்தையை ஆத்திரத்தில் ஆயுதத்தால் வெட்டிக் கொன்றார் சண்டிகேஸ்வரர் என்பது புராணம். தந்தையைக் கொன்ற பித்ருஹத்தி தோஷம் நீங்க, பல தலங்களுக்கும் சென்று வழிபட்டார் சண்டிகேஸ்வரர். ஆனால், எங்கும் இவரது தோஷம் நீங்கவில்லை. அப்போது இவருடைய கனவில், ஈஸ்வரனே காட்சி தந்து, திருமங்கலம் தலம் வந்து தன்னை வணங்கச் சொன் னார். அதன்படி சண்டிகேஸ்வரர் இங்கு வந்து, சாம வேதீஸ்வரர் சந்நிதியில் இடப் புறம் நின்று அவரை மனமுருக வணங்கினார். அதன் பின் பித்ருஹத்தி தோஷம் நீங்கப் பெற்று, இறைவனின் திருவடியை அடைந்தார்.
அதே போல் பரசுராமரும் தன் தாயைக் கொன்றதால், ஏற்பட்ட மாத்ருஹத்தி தோஷம் நீங்க, இந்தத் தலத்துக்கு வந்து சாமவேதீஸ்வரரை வழிபட்டார். ஈசனும் அவருக்கு அருள் வழங்கி, மாத்ருஹத்தி தோஷத்தை விலக்கினார். இந்தக் காரணத்தால் இங்குள்ள தீர்த்தம் பரசுராம தீர்த்தம் எனவும், இந்த ஊர் பரசுராமேஸ்வரம் என்றும் வழங்கப் படுகிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக பரசுராமரின் ஐம்பொன் திருமேனி மற்றும் பரசுராமருக்கு முக்தி கொடுத்த லிங்கம் ஆகியவை இங்கு உள்ளன. மார்கழி மாதம் ஏகாதசியன்று (வைகுண்ட ஏகாதசி) பரசுராமரின் விக்கிரகத்துக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
உற்சவர் மண்டபம் அருகே, எட்டு கைகள் கொண்ட பைரவரும், நான்கு கைகள் கொண்ட காலபைரவரும் சிறப்பு. பைரவருக்கு அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றினால் செல்வம் பெருகும்.
இங்கு தனியே எழுந்தருளியுள்ள சனி பகவானது வாகனமான காக்கை வடக்கு நோக்கி இருப்பது விசேஷம். சூரிய பகவான், நவக்கிரகங்கள் ஆகியோருக்கும் சந்நிதிகள் உண்டு. பிராகார வலம் முடிந்து வேதபுரீஸ்வரரைத் தரிசிக்கச் செல்கிறோம். மகா மண்டபத்தில் நந்திதேவர். பலிபீடம். துவாரபாலகர்கள் இல்லை. அவருக்கு உரிய இடத்தில் அதிகார நந்தியும் விநாயகரும் வீற்றிருக்கிறார்கள்.
கருவறைக்குள்- சகல தோஷங்களையும் போக்கும் சாமவேதீஸ்வரர். லிங்கத் திருமேனி. பிரகாசிக்கும் பெருமேனி. தீப ஒளியில் திவ்வியமான தரிசனம் தருகிறார். ஆரத்தியில் அப்பனைத் தொழுகிறோம்.வெளியே வந்து உலகத்தைக் காக்கும் நாயகியான அம்பாள் சந்நிதிக்கு நகர்கிறோம். லோகநாயகி. அழகுத் திருமேனி. கண்களை இமைக்க மறந்து தரிசனம் செய்கிறோம். அபயம், வரதம் அருளி ஆசீர்வதிக்கிறாள்.
வெளியே ஒரு பிராகாரம். இங்கு நடக்கும்போது புறாக்கள் சிறகடித்துப் படபடக்கும் காட்சி ரம்மியம்.
லோகநாயகியாகிய அம்மையும், சாமவேதீஸ்வரராகிய அப்பனும் இங்கு பித்ரு தோஷங்கள் உட்பட சகல தோஷங்களையும் நீக்க வல்லவர்கள். காசி மற்றும் கயாவில் செய்யும் பித்ரு தோஷ நிவர்த்திக்கான பலன்கள், இந்தத் தல இறைவனை தரிசித்தாலே கிட்டி விடும் என்று தல புராணம் சொல்கிறது. பித்ரு சாபம் நீங்க இந்தத் தலம் ஏற்றது என்பதை அறிந்து இங்கு வந்த ரயிக்குவ ரிஷி , காசி மற்றும் கயாவில் இருப்பது போல் இங்கு நதி இல்லையே என்று கலங்கினாராம். உடனே, இறைவனே எழுந்தருளி, ‘‘கவலை வேண்டாம்... உனக்காக இங்கே ஒரு நதியை உருவாக்குகிறேன். காசி மற்றும் கயாவில் பித்ரு தோஷ நிவர்த்திக்கான சடங்குகளைச் செய்தால் என்ன பலன்கள் கிடைக்குமோ, அதே பலன் இந்த நதியில் நீராடி, எம்மை வழிபட்டாலும் கிடைக்கும்!’’ என்று சொல்லி மறைந்தார். அப்படி உருவான நதிதான் கயாபல்குனி. வருடத்தின் எல்லா நாட்களிலும் தண்ணீர் இருக்குமாம். ‘‘லால்குடியில் இருந்து சற்று உள்ளடங்கி இருப்பதால் இந்தக் கோயிலைப் பற்றி அதிகம் வெளியே தெரிய மாட்டேன் என்கிறது. மகத்துவம் வாய்ந்த இந்த ஈஸ்வரனை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் வந்து பயன் பெற வேண்டும் என்பதே எங்களது விருப்பம்!’’ என்பது ஆலயம் தொடர்பானவர்களின் கருத்து. தமிழக அரசின் இந்து அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டில் ஆலயம் உள்ளது.
கிராமிய மணமும், தெய்வீக மணமும் ஒருங்கே கிடைக்கும் இந்த விசேஷத் தலத்துக்கு எப்போது செல்வதாக உத்தேசம்?
|
Friday, 4 August 2017
காசி - கயாவுக்கு இணையாக... பித்ரு தோஷம் போக்கும் தலம் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment