திருக்கடவூரில் தங்கியிருந்த திருஞான சம்பந்தருக்கு, திருநாவுக்கரசரை பார்க்க வேண்டுமெனத் தோன்றியது. ‘எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன அப்பரைப் பார்த்து! பாண்டி நாட்டுக் குப் புறப்படும்போது, எத்தனை வாஞ்சையுடன் பேசினார். அப்போது அவர் கண்களில் இருந்த அச்சமும் கவலையும்... இப்போதும் மனதில் ஊசலாடுகின்றன. அடியேனுக்கு எந்த இடை யூறும் ஏற்படக் கூடாது என்பதில் அவருக் குத்தான் எவ்வளவு அக்கறை!’
கூட இருந்தவர்களிடம், ‘அப்பர் எந்த ஊரில் இருக்கிறார்?’ என்று விசாரித்தார். காவிரி நதிக் கரையில், திருப்பூந்துருத்தியில் இருப்பதாகச் சொன்னார்கள். உடனே, திருப்பூந்துருத்திக்குப் புறப்பட்டார் திருஞானசம்பந்தர்.
இந்தச் செய்தி, திருநாவுக்கரசரான அப்பர் பெரு மானை அடைந்தது. திருப்பூந்துருத்தி நோக்கி வரும் சீர்காழி வேந்தராம் ஞானசம்பந்தப் பிள்ளையை... தானே முன் சென்று தரிசிப்பது, தனது முன்வினைப் புண்ணியம் என்று நினைத்த நாவுக்கரசர், தானும் புறப்பட்டு எதிர் வழி சென்றார்.
ஆலம்பொழில் என்ற இடத்துக்கு அருகில் ஞானசம்பந்தர் வந்து கொண்டிருந்தார். பல்லக்கில் வந்த அந்தப் பிள்ளையை, ஊர்க்காரர்கள் கூடி பெருத்த வரவேற்புடன் அழைத்து வந்தனர். கூட்டத்தோடு கூட்டமாகத் தன்னை மறைத்துக் கொண்ட நாவுக்கரசர், சிவிகைக்குத் தானும் தோள் கொடுத்தார்; சிவிகையைச் சுமந்து வந்த பலரில், தானும் ஒருவராக நடக்கலானார்.
என்று இதனைச் சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் வர்ணிப்பார்.
பூந்துருத்தியை நெருங்குகிறோம் என்பதை உணர்ந்த ஞானசம்பந்தர், நேராக அப்பரை தரிசிக்க வேண்டும் என்ற ஆசையில், ‘இப்போது அப்பர் எங்குள்ளார்?’ என்று சிவிகைக்குள் இருந்தவாறே உடன் வந்தவர்களிடம் வினவினார். அந்தக் கேள்வி, அப்பரின் செவிகளிலும் விழுந்தது. வினாவுக்கு விடை சொல்ல வேண்டுமல்லவா!
சிவிகைக்குள் இருந்த சம்பந்தருக்குக் கீழிருந்து விடை சொன்னார் அப்பர்.
‘ஒப்பு அரிய தவம் செய்தேன் ஆதலினால், உம் அடிகள் இப்போது தாங்கி வரப் பெற்று உய்ந்தேன்!’ என்று நாவுக்கரசர் பணிவோடு கூற, அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒரு சேரக் கொண்ட ஞானசம்பந்தர், சிவிகையிலிருந்து கீழே இறங்கினார். ‘இப்படிச் செய்யலாமா?’ என்று சம்பந்தர் கேட்க, ‘இது பெரும் பேறும் மகிழ்ச்சியும் ஆயிற்றே!’ என்று நாவுக்கரசர் பதில் சொன்னார். பின்னர் அடியார்கள் இருவரும் பிறர் புடைசூழ, திருப்பூந்துருத்தி திருக்கோயிலை அடைந்தனர்.
சம்பந்தருக்கும் நாவுக்கரசருக்கும் இடையில் இருந்த அன்பு வெளிப் பட்டுப் பெருகிய தலமாம் திருப்பூந்துருத் தியே, சப்தஸ்தானத் தலங்களில் நாம் அடுத்ததாக தரிசிக்க வேண்டிய தலம். புறப்படுங்கள்... போவோம்!
ஆறுகளுக்கு இடையிலோ ஆற்றுக் கிளைகளுக்கு இடையிலோ இருக்கக் கூடிய நிலப்பகுதிக்கு, ‘துருத்தி’ என்று பெயர். காவிரிக் கும் குடமுருட்டிக்கும் இடையில் பூந்துருத்தி இருப்பதால், இந்தப் பெயர் என்கிறார்கள். சோழ மன்னர் ஒருவர், துருத்தி மலர் கொண்டு சிவபெருமானை வழிபட்டதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
அழகும் அமைதியும் கொஞ்சும் திருப்பூந்துருத்தி, மிக மிக மென்மையாக நம்மை வரவேற்கிறது. மக்கள் பலர் ‘திருப்பந்துருத்தி’ என்றே சொல்கிறார்கள். தபால் அலுவலகத்திலும் அப்படித்தான் இருக்கிறதாம். பெரிய ஊர்; கிழக்கு (கீழை), மேற்கு (மேலை) என்று இரண்டு பகுதிகளாக வழங்கப்படு கிறது. திருக்கோயில் இருப்பது மேலைப் பூந்துருத்தி.
திருக்கோயிலை அடைந்து ராஜ கோபுரத்தின் முன் நிற் கிறோம். கிழக்கு நோக்கிய ஐந்து நிலை கோபுரம். கோபு ரத்தை வணங்கி உள்ளே சென்றால், வலப் பக்கம் பெரிய மண்டபம்- பஞ்ச மூர்த்தி மண்டபம். ராஜ கோபுரத்துக்கு எதிரே இருக்கும் பெரிய நந்தி, சந்நிதிக்கு நேரே இல்லாமல்... சற்றே விலகினாற்போல இருக்கிறது.
உள் வாயிலைத் தாண்டிச் செல்கி றோம். வலப் புறம் வனதுர்கை; கிணறு. கோயில் திருப்பணிகள் நடக் கின்றன. கொடி மரம் இருந்த இடம் தெரிகிறது. விநாயகர் மட்டும் இங்கே இப்போது இருக்கிறார். இங்கேயும் நந்தி விலகியிருப்பது தெரிகிறது. என்ன சங்கதி?
அப்பர் பெருமான், இந்தத் திருத்தலத்தில் தங்கியிருந்தார்; திருமடம் அமைத்திருந்தார்; உழ வாரப் பணி செய்தார். இங்கு தங்கியிருந்த காலத்தில்தான் தனித்தாண்டகம், அடைவு தாண்டகம், திருஅங்கமாலை போன்ற பற்பல பதிகங் களைப் பாடினார். இங்கு வந்த ஞானசம்பந்தர், அப்பர் உழவாரப் பணி செய்த இடமாயிற்றே என்று கோயிலுக்குள் தன் கால் படவும் அஞ்சி, வெளியில் இருந்தே இறையனாரை வணங்கினாராம். அவருக்கு உதவும் பொருட்டு, சிவனார், நந்திகளை விலகும்படி சொன்னதாகத் தல புராணம் விவரிக்கிறது.
‘திருஞானசம்பந்தர் நின்ற இடம்... திருநாவுக்கரசர் தொண்டு செய்த இடம்... இங்கு இப்போது நிற்கவும், தரிசிக்கவும் நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்!’ என்று எண்ணிய வாறு உள்ளே போகிறோம்.
அடுத்த வாயில் தாண்டிச் சென்றால், உள் பிராகாரம். வலம் வர வேண்டுமே... தொடங்குவோமா? தென்கிழக்கு மூலைக்கு முன்னதாக சிறிய மேடை; சோமாஸ்கந்த மண்டபம். அடுத்து தென்கிழக்கு மூலையில், ஒரு கிணறு. இதுதான், காஸ்யப தீர்த்தம் (காசிப தீர்த்தம் என்றும் சொல்லலாம்). காஸ்யபர் இங்கு தீர்த்தம் ஏற்படுத்தி, அதில் நீராடி, இறையனாரை வழிபட்டதாக ஐதீகம். தீர்த்தத்துக்கு அருகே சம்பந்தர், அப்பர், அவர் மனைவியர் பரவை மற்றும் சங்கிலியுடன் சுந்தரரும் சிலா ரூபங்களாக உள்ளனர்.
தெற்குப் பிராகாரத்தில் விநாயகர், சப்தமாதர், வீரபத்திரர், ஸ்ரீதேவி, கணபதி மற்றும் ஐயனார். இதே பிராகாரத்தில் அப்பர் பெருமானின் வாழ்க்கை, வண்ணச் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.
மேற்குப் பிராகாரத்துக்குள் திரும்பினால், மூலவருக்கு நேர் பின்னால் முருகப் பெருமான் சந்நிதி. வள்ளி- தெய்வானை சமேதரான ஸ்ரீமுருகர்; ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு காட்சி தருகிறார். பின்னால் மயிலும் இருக்கிறது. இந்த முருகப் பெருமானிடம், தனக்கு தவ வலிமையும் மெய்ஞ்ஞானமும் தரும்படி அருணகிரிநாதர் வேண்டினார்.
வடக்குத் திருச்சுற்றில், சம்பந்தப் பெருமானது வரலாறு வண்ணச் சித்திரங்களாகக் காட்சியளிக்கிறது. அருள் நந்தி சிவம் எனும் சைவ ஆசார் யரும் இருக்கிறார்.
வடகிழக்கு மூலையை அடைந்தால், ஸ்ரீநடராஜர் சபை. கிழக்குச் சுற்றில் திரும்பியவுடன் நவக்கிரகம். நவக்கிரகங்களுக்கு எதிரே சனி பகவானும் தனிச் சந்நிதி கொண்டுள்ளார்.
பிராகார வலத்தை நிறைவு செய்து, மூலவர் சந்நி திக்குள் செல்ல முயல்கிறோம். ஒரு பக்கத்தில் வாகன மண்டபம். மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய மூலவர் கருவறை. மண்டப வாயி லிலேயே, விநாயகர். அருகில், உழவாரப் படையைத் தாங்கியவராக அப்பர் பெருமான்.
இந்தத் தலத்தில் தங்கியிருந்து நாவுக்கரசர் பாடிய பதிகங்களுள், சாதாரிப் பண்ணில் அமைந்த திருஅங்க மாலை, சிவதீட்சை காலத்தில் பயன்படும் சிறப்புடையது. ‘தலையே நீ வணங்காய், கண்காள் காண்மின்கள், செவிகாள் கேண்மின்களோ, மூக்கே நீ முரலாய், வாயே வாழ்த்து கண்டாய், நெஞ்சே நீ நினையாய், கைகாள் கூப்பித் தொழீர், ஆக்கையால் பயன், கால்களால் பயன்’ என்று உடலின் உறுப்புகளைக் குறித்து, அவை ஒவ்வொன்றையும் இறைப் பணியில் ஈடுபடச் சொல்வ தாக இது அமையும்.
மொத்தம் 12 பாடல்களில், முதல் 5 பாடல்கள் ஐந்து பொறிகளையும் (மேனி, கண், காது, மூக்கு, வாய் ஆகிய ஐம்புலன்கள்- பிற பொருள்கள் குறித்த அறிவைத் தருகிற ஞானேந்திரியங்கள்), 6-வது பாடல் மனதையும், 7, 8 மற்றும் 9-வது பாடல்கள் கை- கால் போன்ற கருவிகளையும் (செயல்களைச் செய்ய உதவும் கர்மேந்திரியங்கள்), 10-வது பாடல் இறைவனையும், 11-வது பாடல் உயிரையும், 12-வது பாடல் உயிரைக் கட்டுகிற பாசக் கட்டையும் குறிக்கின்றன.
அப்பர் கூறியதெல்லாம் அகக்கண் முன்னால் விரிய, புறக் கண்களை விரித்துக் கொண்டே மூலவர் கருவறையை அடைகிறோம். அருள்மிகு புஷ்பவனேஸ்வரர். இவருக்கு ஸ்ரீபுட்பவன நாதர், ஸ்ரீஆதிபுராணர் மற்றும் ஸ்ரீபொய்யிலியப்பர் ஆகிய திருநாமங்களும் உண்டு.
இந்த பெருமானை, ஆதிபுராணன் என்றும் பொய்யிலி என்றும் பாடுகிறார் அப்பர்.
_ திருவிருத்தத்தில் ஆதிபுராணன் என்ற அப்பர், திருத் தாண்டகத்தில், பொய்யிலி என்கிறார்.
பொய்யிலியை, ஆதி- அந்தம் இல்லாத அருட்பெருஞ்சோதியை பூந்துருத்தியில் வணங்கி நிற்கிறோம்.
பார்க்கப் பார்க்கத் தீராப் பரவசம் கொண்டு வழிபட்டு, மெள்ள மீண்டும் உள் பிராகார வலம் செய்கிறோம்.
திருபூந்துருத்தியில் கோஷ்ட மூர்த்தங்கள் கொள்ளை அழகு. தெற்கு கோஷ்டத்தில் வீணையை ஏந்திய தட்சிணாமூர்த்தி. மேற்கு கோஷ்டத்தில் அமர்ந்த கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர். வடக்கு கோஷ்டத்தில், சங்கரநாராயணர். ஸ்ரீசண்டி கேஸ்வரரும் தனி மண்டபத்தில் இருக்கிறார்.
கோஷ்டங்களை தரிசிக்கும்போது, இந்தக் கோயிலுக்கே உரிய தனிச் சிறப்பு கண்களைக் கவர்கிறது. மூலவர் சந்நிதிக்கு தெற்கிலும் வடக்கி லும் முறையே தென் கயிலாயம், வட கயிலாயம் என இரண்டு தனிக் கோயில்கள். கிழக்கு நோக்கிய சிவலிங்கங்களுடன் கூடிய சிறிய கோயில்கள். எனவே, கயிலாயத்தை தரிசித்த பேறு, திருப்பூந்துருத்தியை தரிசித்தாலே கிட்டி விடும்!
திருப்பூந்துருத்தி திருக் கோயிலில் சோழர்கள் நிறைய திருப்பணி செய்துள்ளனர்.
மூலவர் கருவறை சுற்றுச் சுவரிலும் பிராகார மதில்களிலும் ஏராளமான கல்வெட்டுகள் காணப் படுகின்றன. சிற்ப அழகிலும் உள்ளத்தைக் கொள்ளை கொள் கிறது இந்தக் கோயில். வீணா தட்சிணா மூர்த்தி, மகிஷனை வதம் செய்த பாவம் தீர ஒற்றைக் காலில் தவம் செய்யும் துர்கை, அமர்ந்த கோலத்தில் உள்ள நாவுக்கரசர் ஆகிய சிலா திருமேனிகள் குறிப்பிடத் தக்கவை.
கோயிலை மீண்டும் ஒரு முறை சுற்றி வந்து நிற்கிறோம். ஏழூர்ப் பெருவிழாவில் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர் ஆகிய திருத்தலங்களிலிருந்து பல்லக்குகள் வருவதும், திருப்பூந்துருத்தி சுவாமியின் பல்லக்கு எதிர்கொண்டு அழைப் பதும், அப்பரும் ஞானசம்பந்தப் பெருமானும் சந்திப்பதும் மனக்கண் முன்பாக உலா வருகின்றன.
கோயிலை விட்டு வெளியே வருகிறோம். ஆயினும், திருப் பூந்துருத்தியின் சிறப்புகள் இன்னும் நிறைவு அடையவில்லை என்ற எண்ணத்துடன் கோபுரத்தை அண்ணாந்து நோக்குகிறோம்.
திருப்பூந்துருத்தியில் இன்னும் பல சிறப்புகள் உண்டா? என்னென்ன?
கீழப்பூந்துருத்தியில் (இது கண்டியூரி லிருந்து பூந்துருத்திக்குள் நுழையும்போதே வந்து விடும்) முருகப் பெருமானுக்கு தனிக் கோயில் ஒன்று உள்ளது. மலை போல செய்து, அதன் மீது அமைக்கப்பட்ட கோயில். கட்டுமலைக் கோயில் என்பர். மலை அமைப்பு தேர் வடிவில் உள்ளது.
வரகூர் எனும் ஊரில் தங்கியிருந்து, ‘கிருஷ்ண லீலா தரங்கிணி’ பாடிய ஸ்ரீநாராயண தீர்த்தர், தனது அந்திமக் காலத்தில் காவிரிக் கரையில் உள்ள திருப்பூந்துருத்தியைத் தேர்ந்தெடுத்தார். இந்தத் தலத்திலேயே ஜீவ சமாதியும் அடைந்தார். மாசி மாதம், சுக்ல பட்ச அஷ்டமி திதியும், கிருத்திகை நட்சத்திரமும், குரு வாரமும் கூடிய நன்னாளில், நாராயண தீர்த்த மகான் ஜீவ சமாதி எய்திய நாளை நினைவு கூரும் வகையில், இங்கு ஆண்டு தோறும் நாராயண தீர்த்தர் ஆராதனை விழா நடைபெறுகிறது.
ஸ்ரீபோதேந்திர சுவாமிகளும், ஸ்ரீதர ஐயாவாளும் காட்டிய வழியில் நாம சங்கீர்த்தனம் எனும் சுலபமான முறைக்குப் பெரு விளக்கமாகத் திகழ்ந்த நாராயண தீர்த்தரின் ஆராதனை விழாவில், இசை விற்பன்னர்கள் ஒன்று கூடி நாம சங்கீர்த்தன விழா நடத்துகின்றனர்.
சைவத் திருமுறைகள் 12. அவற்றுள் 11-ஆம் திருமுறையில் இருக்கும் பாடல்கள் சிலவற்றைப் பாடியவரான காடவ நம்பிகள், திருப்பூந்துருத்தி யில் அவதரித்தார்.
இந்தத் தலத்துக்கு வந்து அப்பர் பெருமானோடு சேர்ந்து புஷ்ப வனேஸ்வரரை வழிபட்டாலும் ஞான சம்பந்தர், இந்தத் தலத்துக்குப் பதிகம் பாடவில்லை. ஆனால், இந்தத் தலத் தில்தான், நாவுக்கரசர், பற்பல உருக்கமான பாடல்களைப் பாடியுள்ளார்.
|
Friday, 4 August 2017
திருப்பூந்துருத்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment