யானை வாகனத்தின் மீதோ, எட்டு குதிரைகளால் இழுக்கப்படும் தேரிலோ பவனி வரும் இவர், ஆகாச தத்துவத்தின் அதிபதி!
முடிந்து மீண்டும் உலக சுழற்சி தொடங்கியது. மும்மூர்த்திகளும், அவரவருக்கான படைத்தல், காத்தல், நீக்கல் ஆகிய தொழில்களைப் பெற்று சாந்தம் அடைந்தனர்.
வலம் வந்து முன் மண்டபத்தை அடைகிறோம். இங்குதான் கொடிமரம் அமைந்துள்ளது; சற்றே உயரமாக பலிபீடமும் நந்தியும் உள்ளன. கொடி மரத்துக்கு முன்னால் திருநீற்றுக் கோயில். இந்த துவாரத்திலிருந்து திருநீறு எடுத்து அணிந்து கொண்டு
எனவே, அம்மைக்கு சுகந்தகுந்தளேஸ்வரி என்ற திருநாமம் அமைந்ததாகச் செவிவழிக் கதை நிலவுகிறது. அதே போன்று, மங்களா என்ற பெண் நற்கதி அடைந்ததால், மங்களேஸ்வரி என்பதாகவும் சொல்கிறார்கள். நின்ற திருக் கோல நாயகியாக அபயமும் வரமும் தாங்கி அம்பாள் காட்சி தருகிறாள்.
ஆங்கிரஸ முனிவர்- சுரூபை தம்பதிக்கு மகனான இவர், நமது கர்ம வினைகள், அறிவு, ஞானம் ஆகியவை மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார். மனித நன்மைக்காகச் செயல்படும் இவர், அதே நோக்கத்துடன் பிரார்த்தனை களையும் பூஜைகளையும் வழி நடத்துகிறார். குரு என்றும் கணபதி என்றும் அழைக்கப்படும் இவரது திருவருளைப் பெற வேண்டுமா?
நவக்கிரகங்களில் ஒருவரும் தேவகுருவாக விளங்குபவருமான பிரஹஸ்பதி, நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் திட்டைத் திருத்தலம் செல்வோம், வாருங்கள்!
திட்டை! தஞ்சாவூர்- மெலட்டூர்- திருக்கருகாவூர் பாதையில், தஞ்சாவூ ரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலை வில் உள்ள திருத்தலம் இது.
அதென்ன பெயர்... திட்டை? 'திட்டு' எனும் அழகான தமிழ்ச் சொல்லே, 'திட்டை' என்றானது! பிரளய காலத்தில், நிலப்பகுதிகள் நீரில் மூழ்கிப் போக, இந்த இடம் மட்டும் தனியரு திட்டாகத் திகழ்ந்தது. மாயை வயப்பட்ட மும் மூர்த்திகளும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரிந்த நீரைக் கண்டு குழம்பிப் போனார்கள். எங்காவது நிலம் கண்ணில் படாதா என்று தேடினர். திட்டாக மேலே தெரிந்த இந்தத் தலத்துக்கு வந்ததும்
சற்றே குழப்பம் குறைந்தது; பரம்பொருள் சுயம்பு லிங்கமாகக் காட்சி கொடுக்க, ஸ்ரீசுயம்பூதேஸ்வரரை வழிபட்டார்கள். குழப்பம் அறவே அகல, பிரளயமும்
காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் அமைந்திருப்பதாலும் இந்தத் தலத்துக்கு, 'திட்டை' என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். 'குடித்வீபம்' எனும் வட மொழிப் பெயர் இதை உறுதிப்படுத்துகிறது. காவிரியின் தென் கரையில் இருப்பதால், 'தென்குடித் திட்டை' என்றும், மக்கள் குடியேற்றம் மிகுந்ததால், 'குடித் திட்டை' என்றும் பெயர் கொண்டது.
சின்னஞ்சிறு புகைவண்டி நிலையமும் (தஞ்சை- கும்பகோணம் தடம்) அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள கிராமமுமாக அமைந்திருக்கிறது திட்டை. பிரதான சாலையின் ஓரத்திலேயே கோயில்!
ஊர் சிறிதாக இருந்தாலும் எழில்மிக்க கோயிலின் கட்டுமானம், நம் கவனத்தைப் பெரிதும் கவர்கிறது. கோயிலின் எதிரில் திருக்குளம். அளவில் பெரியகுளமான இதைச் சுற்றிலும் நல்லதொரு கல் கட்டுமானம்; நேர்த்தியான படிகள். 'சக்கர தீர்த்தம்' என்று பெயர்
கொண்ட இது, திருமாலின் சக்கராயுதத்தால் உண்டாக்கப் பட்டது. சூல தீர்த்தம்; பசு தீர்த்தம் என்றெல்லாம் பெயர் சொல்கிறார்கள். இதில் நீராடி விநாயகரை வழிபட்டால், சகல ஆசைகளும் நிறைவேறுமாம்.
கிழக்கு ராஜகோபுரத்தின் முன் நிற்கிறோம். மூன்று நிலைகளுடன் கம்பீரமாக ஓங்கி நிற்கும் கோபுரம்... பொம்மைகள் இல்லையென்றாலும், கண்ணையும் கருத் தையும் சுண்டுகிற அழகுடன் திகழ்கிறது!
திட்டைத் திருக்கோயிலில் தனிப்பட்டதொரு சிறப்பு உண்டு. கோயில் முழுவதும் கருங்கல் கட்டுமானம். சந்நிதிகள் மட்டுமில்லை, கொடி மரம்கூட கருங்கல்லால் இழைக்கப்பட்டது. 1926-ல் இந்தக் கோயிலைக் கற்கோயி லாகக் கட்டிய பெருமை, பலவன்குடி கிராமத்தைச் சேர்ந்த இராம. கு. இராம. இராமசாமிச் செட்டியார் என்பவரைச் சேரும்.
கோபுரத்தின் வழியே நுழைந்தால், நேர் முன்னால் முன்மண்டபம்; வலப் பக்கத்தில் கோயில் கடைகள்.
இங்கிருந்து அப்படியே வெளிப்பிராகாரத்தை வலம் வரலாம் நடப்பதற்கு வசதியாகக் கல் பாதை போடப்பட்டிருக்கிறது. இந்தப் பிராகாரத்தில், சந்நிதிகள் ஏதும்
இல்லை. என்றாலும், ஆங்காங்கே செடிகளும் மரங்களும் வளர்க்கப் பட்டுள்ளன. நந்தவனப் பிராகாரம் என்றே குறிப்பிடலாம். வெளிப்
பிராகாரத்தில் வலம் வந்துகொண்டே, கோயிலின் உள்மதிலைப் பார்த்தால்... ஆஹா! கருங்கல்லின் பிரமாண்டம் கொள்ளை கொள்கிறது; கோட்டை போன்ற தோற்றம் அதி அற்புதம்!
சந்நிதிக்குச் செல்வது இங்குள்ள வழக்கம் முன்
மண்டபத்திலேயே, மூலவர் சந்நிதியைப் பார்த்தபடி
நாம் நின்றால், நமக்கு வலப் பக்கமாக அம்மன்
சந்நிதியும் அதையடுத்து குரு சந்நிதியும் உள்ளன. இரண்டுமே தெற்குப் பார்த்த சந்நிதிகள். மூலவர் சந்நிதிக்குப் போகும் உள் வாயிலில், துவார கணபதி மற்றும் துவார சுப்பிரமணியர். இவர்களை வழிபட்டு உள்ளே சென்றால், உள் பிராகாரத்தை அடைகிறோம்.
உள் பிராகாரத்தை வலம் வரு வோமா? கிழக்குப் பகுதியில், முதலில் சூரியன். தென் கிழக்கு மூலை யில் சிவ லிங்கம். தெற்குச் சுற்றில் திரும்பி நடக்கிறோம். அம்பாளும் சிவலிங்கமும்... இவைதாம் பிரசித்திப்பெற்ற காளிதேவியின் மகாமேரு ஸ்வரூபமும் சிவலிங்கமும்! தொடர்ந்து தெற்குச் சுற்றிலேயே வரிசையாக வாகனங்கள். தென் மேற்கு மூலையில் கன்னிமூலை விநாயகர். அடுத்து மீண்டும் சிவ லிங்கம். மேற்குச் சுற்றில் அடுத்து இருப்பது ஸ்ரீஸித்தி விநாயகர் சந்நிதி. தொடர்ந்து ஸ்ரீபாலசுப்பிரமணியர். ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானை சமேதரான இவர், ஒரு திருமுகம் நான்கு கரங்க ளுடன், நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார்.
அடுத்து கஜலட்சுமி சந்நிதி. வடமேற்கு மூலையில் சிவலிங்கம். வடக்குச் சுற்றில் வலத்தைத் தொடர, அழகான நடராஜர் சபை இதையடுத்து ஓர் அறை. உற்ஸவ மூர்த்தங்களை இங்கு வைப்பது உண்டாம். அடுத்து பைரவர்; நின்ற கோலத்தில் வாகனத்துடன் காட்சி தருகிறார். வடகிழக்கு மூலையில், 'மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் ஒரு சிவலிங்கம். மீண்டும் கிழக்குச் சுற்றில் திரும்பினால், நவக்கிரகச் சந்நிதி. அடுத்து, சந்திரன். திட்டைத் தலத்துக்கும் நவக்கிரக நாயகர்கள் சிலருக்கும் நெருங்கியதொடர்பு உண்டு. 'அதுதான், இது குருஸ்தலம் என்று தெரியுமே!' என்கிறீர்களா? குரு மட்டுமில்லை, இன்னும் சிலருக்கும் கூட இது சிறப்புத் தலம்!
சூரியனின் மகனான சனைஸ்வர னுக்கு, பிறந்தது முதலே பார்வை தீட்சண்யம் அதிகம். இதனால், அவர் எவரையெல்லாம் பார்த்தாரோ, அவர்களுக்கெல்லாம் தீங்குகள் சம்பவித்தன.
பாவம் சனைஸ்வரன்! திட்டைத் தலத்துக்கு வந்து, ஆயிரம் ஆண்டு கள் தவம் செய்து, சுயம்பு நாதரான சிவபெருமானை வழிபட்டார். இறை வன் அருளால், பார்வையின் வெப்பம் குறைந்தது. அது மட்டுமில்லை, சனைஸ்வரனுடைய கடும் தவத்தைக் கண்ட இறைவனார், கிரக நாதனாக இருக்கும்படியும் அருளினார்.
இப்போதும், சனி தோஷம் உள்ளவர்கள், அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, ஏழரை நாட்டுச் சனி ஆகியவற்றால் அவதிக்கு உள்ளானவர்கள் இங்கு வந்து, சக்கர தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீசுயம்பூதேஸ்வரரை வழிபட்டு, நவக்கிரகங்களையும் தரிசித்து வணங்கினால், துன்பங்கள் அகலும்.
சனி மட்டுமா, அவரின் தந்தையான சூரியனுக் கும் திட்டையில் சிறப்பான அருள் கிட்டியது. எப்படி?
சுமாலி என்றொரு பெரிய சிவபக்தர். ஒரு முறை இவர், பெரிய தேர் ஒன்றில் வந்து
கொண்டிருந்தார். தனது தேரை விட, சுமாலியின் தேர் பெரிதாக இருப் பதைக் கண்ட சூரியன், சுமாலியுடன் சண்டைக்கு வந்தார்.
இருவரும் உக்கிரமாக மோதிக் கொள்ள, சூரியனால் கொல்லப்பட்டார் சுமாலி. வெற்றி பெற்றதாக எண்ணினா லும், சுமாலியைக் கொன்ற தோஷத்தால், சூரியனால் காலச் சக்கரத்தை நகர்த்த முடியவில்லை. தோஷத்தைத் தீர்த்து பரிகாரம் தேடிக் கொள்ள, இங்கேயே (திட்டையில்) அமர்ந்து தவத்தில் ஈடுபட்டார் சூரியன். அவரது தவத்துக்கு இரங்கிய இறைவனார், சூரியனுக்கும் கிரக பதவி தந்து அருளினார்; காலச் சக்கரத்தை நகர்த்தவும் அனுமதி கொடுத்தார். சூரிய தோஷக்காரர்களும், சிம்ம ராசிக்காரர்களும் இங்கு வந்து வழிபட்டு நலன்களை நாடுவது வழக்கம்.
இருக்கவே இருக்கிறார் நமது குரு பகவான். தனிச் சந்நிதி நாயகராயிற்றே. அவரை, அவருடைய சந்நிதியிலேயே பின்னர் தரிசிக்கலாம்.
உள் சுற்று வலத்தை நிறைவு செய்து, மூலவர் சந்நிதிக்குள் நுழைகிறோம். மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய கருவறை அமைப்பு. மூலவருக்கு நிறைய திருநாமங்கள் உண்டு.
ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் என்பதுதான் பிரபலமான திருநாமம். திருக்கோயிலும் இந்தப் பெயரால்தான் வழங்கப்படுகிறது. பிரமரிஷியான வசிஷ்டர், ஸ்ரீசுயம்பூதேஸ்வரரை, இங்கு பூஜித்தார். எனவே, சுவாமியும் வசிஷ்டேஸ்வரர் ஆகி விட்டார்.
காமதேனு பூஜித்ததால், இந்தத் தலம் தேனுபுரி; சுவாமி தேனுபுரீஸ்வரர். இதனாலேயே பசுபதீஸ்வரர் அல்லது பசுபதிநாதர். சுயம்புவாகத் தோன்றியதால் சுயம்பூதேஸ்வரர். பிரளய காலத்திலும் நின்றதால் அனந்தேஸ்வரர் என்றும் பெயர் உண்டு. சுமாலியின் தேர் அழுந்திய இடம்; எனவே, இந்தத் தலத்துக்குத் தேரூர் அல்லது ரதபுரி என்று பெயர்; சுவாமியும் தேரூர்நாதர், ரதபுரீஸ்வரர் என்றெல்லாம் திருநாமங்களை ஏற்றுக் கொண்டார்.
கிழக்கு நோக்கிய சிவலிங்கத் திருமேனி. குட்டை வடிவம்; சதுரபீட ஆவுடையார். சிவலிங்கத்தின் மீது பட்டைகளும் கோடுகளும் காணப்படுகின்றன. 'நமசிவாய வாழ்க' என்று வாழ்த்தி வணங்குகிறோம். சுவாமி சந்நிதியில் திடீரென்று ஏதோவொன்று கவனத்தை ஈர்க்கிறது. என்ன அது?
கருவறையின் மேல் கூரையிலிருந்து (பிரமரந்திரம்) ஒரு சொட்டு நீர் லிங்கத் திருமேனியின் மீது அபிஷேகமாக விழ... மேலே ஏதும் கலசமிருக்கிறதா? இல்லையே! கூரையிலிருந்து நீர் சொட்டினால், கூரையில் ஏதேனும் ஓட்டையா? அதுவும் இல்லை! மழை யில் தேங்கிய நீரா? கிடையவே கிடையாது.
அப்படியானால்... திட்டைத் தலத்தின் சிறப்புகளில் இதுவும் ஒன்று!
கருவறைக் கூரையின் மையத்தில் இருந்து, சரியாக 24 நிமிடங்களுக்கு (24 நிமிடங்கள் என் பது ஒரு நாழிகை) ஒருமுறை, ஒரு சொட்டு நீர் சுவாமிக்கு அபிஷேகமாக விழுகிறது. அது சரி, எங் கிருந்து நீர் வருகிறது? கல்லில் இருந்து!
கல்லில் இருந்தா? அது எப்படி சாத்தியம்?
இந்தத் திருக்கோயிலைக் கட்டும்போது, சுவாமி விமானத்தில் சூரியகாந்தக் கல், சந்திரகாந்தக் கல் இரண்டையும் வைத்துக் கட்டி விட்டார்களாம். திருப்பணிகள் நடைபெற்றபோதும், இந்தக் கற்கள் அப்படியே பொருத்தப்பட்டன. சூரியகாந்தக் கல் சூரிய ஒளியையும், சந்திரகாந்தக் கல் சந்திர ஒளியையும் கவர்ந்து நீராக மாற்றுகின்றன என்பர். ஓரளவுக்குச் சரி.
இந்தக் கற்கள், காற்றிலிருக்கும் பலவித வாயுக்களுடன் வினை புரிகின்றன. சூரிய அல்லது சந்திர ஒளியும் சேரும்போது, வேதிம வினைகளின் காரணமாக, நீர் உருவாகிறது. அந்த நீரே சுவாமி மீது சொட்டுகிறது. இயற்கையில் வேதிம வினை யாக்கம் புரியும் கற்களைச் சரியாக அடையாளம் காண்பது, அவற்றைக் குறிப்பிட்ட முறையில் கோயில்
கட்டுமானத்தில் வைப்பது, சரியாக ஒரு நாழிகைக்கு ஒருமுறை நீர் சொட்டுமாறு கட்டுமானத்தை அமைப்பது, பல்லாண்டுகள் ஆனாலும் இதில் மாற்றமில்லாமல் இருப்பது... வேதியியல், இயற்பியல், கட்டடக் கட்டுமான இயல், சிற்ப இயல் என்று எவ்வளவு அறிவியலும் தொழில்நுட்பமும் தெரிந் திருந்தால்- செயல்படுத்தப்பட்டிருந்தால் இப்ப டியோர் அற்புதம் நடக்கும்! பார்க்கப் பார்க்கத் திகட்டாத அற்புதம்.
சிவபெருமான் அபிஷேகப் பிரியர். எவ்விதத் தடங்கலும் இல்லாமல், அவருக்கு அபிஷேகம் நடக்க வேண்டும். அறிவியல் திறனை நெறிப்படுத்தி, அதைக் கட்டுமானத்துக்குள்ளேயே கொண்டு வந்த நம் முன்னோர்களின் பெருமையை
என்னென்பது!
காற்றில் இருந்து குளிர்ச்சியையும் வாயுக்களையும் எடுத்து நீராக மாற்றும் தன்மை, சந்திரகாந்தக் கல்லுக்கு அதிகம் என்பதாக பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன. சூரியகாந்தக் கல்லுக்கு இந்தத் திறன் சற்றுக் குறைவுதானாம்! 'சந்திரன், சாபம் பெற்றவன். சாபத்தின் காரணமாகத் தினந்தோறும் தேய்ந்து போனான். அவனது வேண்டுகோளை ஏற்று, அவனைத் தமது சிரசில் தாங்கி, பதினைந்து நாட்கள் தேய்ந்தாலும் பதினைந்து நாட்கள் வளரும்படி, அவனுக்கு வரம் கொடுத்த அருள் சிவப் பரம்பொருளின் அருளல்லவா! அதற்கு நன்றிக் கடனாக தினந்தோறும், நாழிகைதோறும் அவன்தான் இவ்வாறு சந்திரகாந்தக் கல் வழியாக நித்யாபிஷேகம் செய்கிறான்!' என்றார் ஊர்ப் பெரியவர் ஒருவர். சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
டொக்... ஒவ்வொரு நாழிகைக்கும் ஒருமுறை... சொட்டும் நீர்த்துளியால் குழைந்து, மிகுந்த கருணையுடன் அருள் பாலிக்கிறார் வசிஷ்டேஸ்வரர். எல்லையின்றி விரிந்த
பரம்பொருளுக்கும் அந்தப் பரம்பொருளின் திருவடிகளில் காணிக்கையாக்கப்பட்ட பணிவுக்கும் முன்னால், நாம் ஒன்றுமே இல்லை என்ற நினைப்புடன் வணங்கி நிற்கிறோம்.
உண்மைதான்! ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் திருச்சந்நிதியில் நின்று கரம் குவிக்கும் போது மனம் அடங்கி, மையல் அடங்கி, உணர்வெல்லாம் ஒடுங்கி, இறை சிந்தனை மட்டுமே உயர்கிறது. திட்டைத் தலத்துக்குப் பதிகம் பாடிய திருஞானசம்பந்தப் பெருமானும் இதையேதான் பாடினார் போலும்!
| ஊர் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால் கூறினார் அமர்தரும் குமரவேள் தாதையூர் ஆறினார் பொய்யகத்தை உணர்வு எய்தி மெய் தேறினார் வழிபடும் தென்குடித் திட்டையே |
குமரக் கடவுளின் தந்தையும் திருமாலைத் தம்முடைய கூறாகவும் கொண்ட சிவனாரின் ஊர் எது தெரியுமா? காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் எனும் ஆறு உள்பகைகளையும் அடக்கி, மனதை ஐம்புலன்களின் வழியில் செல்ல விடாது நெறிப்படுத்தி, மெய்யுணர்வான இறையுணர்வை அடைந்து, அடக்கத்துடன் வணங்கி நிற்கும் அன்பர்கள் இருக்கும் திட்டை எனும் ஊர்!
மூலவரை வணங்கி, மீண்டும் ஒருமுறை உள் பிராகாரத்தை வலம் வருகிறோம். பிராகாரத்திலும் வலம் வரலாம்; கருவறையையும் கோஷ்டத்தையும் ஒட்டி வலம் வருவதற்கு வசதியாகத் திருச் சுற்று மேடையும் இருக்கிறது. கோஷ்டத்தில்- ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீஅண்ணாமலையார் (லிங்கோத்பவர்), பிரம்மா, துர்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர்.
சுற்றி வரும்போது, இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு புலப்படுகிறது!
உள் திருச்சுற்றுகளின் நான்கு மூலைகளிலும் சிவலிங்கங்கள்; நடுவில் மூலவரான சுயம்பூதேஸ்வரர். அடடா! இது பஞ்சலிங்க சேத்திரம்! பஞ்சலிங்கங்கள் இவ்வாறு அமைவது, பஞ்சபூத சேத்திரங் களுக்குச் சமானம் என்பர். இந்த ஒரு தலத்திலேயே சிதம்பரம், காளஹஸ்தி, திருஅண்ணாமலை, திருஆனைக்கா,
காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூதத் தலங்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிட்டி விடும்.
சூரியன் இங்கு வழிபட்டு உயர்ந்த நிலையை பெற்றதன் அடையாளமாக, இப்போதும் குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி, மூலவர் மீது விழுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது, உத்தராயனத்தில்- பங்குனி 25, 26, 27 ஆகிய தேதிகளிலும் தட்சிணாயனத்தில் ஆவணி 15, 16, 17 ஆகிய தேதிகளிலும், உதய காலத்தில் சூரிய கிரணங்கள் மூலவரின் திருவடிகளிலும் திருமேனியிலும் விழுவது கண்கொள்ளா காட்சி!
சூரியன் இங்கு வழிபட்டு உயர்ந்த நிலையை பெற்றதன் அடையாளமாக, இப்போதும் குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி, மூலவர் மீது விழுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது, உத்தராயனத்தில்- பங்குனி 25, 26, 27 ஆகிய தேதிகளிலும் தட்சிணாயனத்தில் ஆவணி 15, 16, 17 ஆகிய தேதிகளிலும், உதய காலத்தில் சூரிய கிரணங்கள் மூலவரின் திருவடிகளிலும் திருமேனியிலும் விழுவது கண்கொள்ளா காட்சி!
அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக, பார்க்கப் பார்க்கக் குறையாது பரவசப்படுத்தும் வசிஷ்டேஸ்வரரின் பெருமைகளை அசைபோட்டுக் கொண்டே முன்மண்டபத்தை அடைகிறோம். இங்குதானே ராஜகுரு வாசம் செய்கிறார்! வாருங்கள், அவரை தரிசிப்போம்.
மூலவர் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட நிலையில், அம்பாள் சந்நிதிக்கு மேற்குப் புறத்தில், தெற்கு நோக்கியதாகவும் விமானத்துடன் கூடியதாகவும் இருக்கிறது குரு பகவான் சந்நிதி.
திட்டைத் திருத்தலத்தில், குரு என்கிற பிரஹஸ்பதி, மிகுந்த சிறப்புக் குரியவர். பிற
தலங்களிலும் குரு இருப்பார். ஆனால், அங்கெல்லாம், நவக்கிரகங்களில் ஒருவரான பிரஹஸ்பதியை வணங்குவதில்லை. அவருக்குத் தலைவரான ஆதி குரு தட்சிணாமூர்த்தியே குருவாக வணங்கப்படுவார். திட்டையில் மாத்திரமே, நவக்கிரக பிரஹஸ்பதி, அந்தஸ்தும் ஆதிபத்தியமும் கொண்டவராக அருள் கடாட்சிக்கிறார்.
நின்ற திருக்கோலம்; வதனத்தில் வாட்டமில்லாத புன்னகை; நான்கு திருக்கரங்கள். வலது கீழ்க் கரத்தில் சின்முத்திரை, வலது மேல் கரத்தில் நாகம், இடது கீழ்க் கரத்தில் புத்தகம், இடது மேல் கரத்தில் அக்னி ஆகியவற்றோடு அருள் வழங்குகிறார்.
கோள்களின் கணத்துக்குத் தலைமைப் பதவியை இவர் பெற்றார் என்பதால், இவருக்கு கணபதி என்றொரு பெயர். வேதங்களில் இவருக்கு பிரஹஸ்பதி, பிரமணஸ்பதி ஆகிய பெயர்கள் உண்டு. 'பிரார்த்தனைகளுக்குத் தலைவர்' என்று பொருள். கல்வி, அறிவாற்றல், செல்வம்,
மக்கள் செல்வம், தொழில்நுட்பம், செயல்திறன் முதலானவற்றை வழங்குகிற இவர், வயிற்று உபாதைகளைப் போக்கக்கூடியவரும் கூட!
மக்கள் செல்வம், தொழில்நுட்பம், செயல்திறன் முதலானவற்றை வழங்குகிற இவர், வயிற்று உபாதைகளைப் போக்கக்கூடியவரும் கூட!
| மறைமிகு வல்லோன் வானவர்க்கு அரசன் மந்திரி நரைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபதி நிறைதனம் சிவிகை மன்றல் நீடு யோகத்தை நல்கும் இறையவன் குரு வியாழன் இணையடி போற்றி |
என்று வியாழனான குருவை வணங்குகிறோம். நவக்கிரகங்களுக்குத் தலைவராகும்படி, இந்தத் தலத்தில் இவர் அருள் பெற்றதால், இங்கு இவர் அரசகுரு. ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசி விட்டு பிறிதொரு ராசிக்குச் செல்லும் இவரை வழிபட்டால், பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்.
ஆங்கிரஸ புத்திரரான குருவின் பார்வை நம்மீது படவேண்டும் என வேண்டி நிற்கிறோம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, இவரது பார்வை வெகு சிறப்பானது. ராகு கொடுக்கும் தோஷத்தைக் கேது தனது பார்வையாலும், கேது கொடுக்கும் தோஷத்தை ராகு தனது பார்வையாலும் போக்குகிறார்கள். ராகு-கேது தோஷத்தை சனியும் புதனும் போக்குவார்கள். புதன் தரும் தோஷத்தைச் சந்திரன் போக்குவார். ஆனால்... ராகு, கேது, சனி, புதன், சந்திரன் ஆகிய ஐவரின் தோஷத்தையும் வியாழன் ஒருவரது பார்வையே போக்கி விடும். அதனால்தான், 'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள்.
தென்குடித் திட்டையில், குருவுக்கு உற்சவ மூர்த்தமும் உண்டு. திருவிழாக் காலங்களில், இவரும் வீதியுலா போகிறார். வியாழனை வணங்கி, அம்மன்
சந்நிதியை அடைகிறோம். தெற்குப் பார்த்த சந்நிதி. எதிரில் செப்பு நந்தி. அருள்மிகு உலகநாயகி (லோகநாயகி), சுகந்தகுந்தளாம்பிகை, சுகந்தகுந்தளேஸ்வரி, மங்களேஸ்வரி என்றெல்லாம் திருநாமங்கள்.
ஊழிப் பிரளய காலத்தில் மும்மூர்த்திகளும் நிலம் தேடி அலைந்தார்கள் இல்லையா? அப்போது, திட்டு தெரிய சுயம்பூதேஸ்வரரை வழிபட்டார்கள்.
சிவ சக்தி ஐக்கிய ஸ்வரூபினியான அம்மையையும் அவர்கள் வழிபட, பிரளய வேகத்தைக் குறைத்து, மீண்டும் உலக வியாபாரம் (படைத்தல்- காத்தல்-அழித்தல் என்ற ஜனன- மரண சுழற்சிதான் உலக வியாபாரம் அல்லது ஜகத் வியாபாரம் எனப்படுகிறது) தொடங்குவதற்கு, அம்மையே வழி செய்தாள்.
எனவே, இந்த அம்மைக்கு உலகநாயகி (லோகநாயகி) என்று திருநாமம். சுகந்தகுந்தளா என்ற பெண், இந்தத் தலத்து அம்மையை வணங்கி, இறந்து போன தன் கணவனை உயிருடன் பெற்றாள்.
அம்மன் சந்நிதிக்கு முன்பாக, மேல் கூரையில் பன்னிரண்டு ராசிகளும் ராசி சக்கரச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. அவரவர் ராசிக்குக் கீழே நின்று பிரார்த்தித்தால், வேண்டியது கிட்டும்.
அம்பாளையும் வணங்கி, கோயில் பிராகாரத் தில் வந்து நிற்கிறோம். திட்டையில் பலரும் வந்து வணங்கி அருள் பெற்றிருக்கிறார்கள். எமன் வழிபட்டான். ஆகவே, இது எம பயம் நீக்கும் தலமும் கூட! உடல் நோய்களால் துன்பப்படுபவர்கள், இங்கு வந்து ஸ்ரீவசிஷ்டேஸ்வரரையும் ஸ்ரீலோகநாயகியையும் மனமுருகிப் பிரார்த்தித்தால், நோய்கள் நீங்கும் என்பது கண்கூடு. வசிஷ்டர் தவிர ஆதிசேஷன், காமதேனுவின் மகளான நந்தினி, முருகப் பெருமான், பைரவர், கார்த்த வீர்யார்ச்சுனன் ஆகியோரும் இங்கு வழிபட்டுள்ளனர்.
திட்டைத் திருத்தலத்தின் திருவிழாக்கள் வெகு பிரசித்தம். திருஞானசம்பந்தர் இங்கு வந்த காலத்திலேயே இவை பிரபலமாக இருந்திருக்க வேண்டும்.
| கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன் உருவினால் அன்றியே உருவு செய்தானிடம் பருவ நாள் விழவொடும் பாடலோடு ஆடலும் திருவினால் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே |
என்று, ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமு மாகத் திருவிழாக்கள் இருந்ததை
அவர் சுட்டிக்காட்டுகிறார். சித்திரையில் சிவபெருமானுக்குப் பெருவிழா.
திட்டையின் பல சிறப்புகளில் மற்றொன்று, இந்தத் தலத்தின் தல மரங்கள். செண்பகம் இந்தத் தலத்தின் தல மரம் என்பர் சிலர். ஆனால், எல்லா மரமும் இங்கு தல மரங்களே. எப்படி? இந்தத் தலத்து இறைவனை வழிபட, தேவர்கள் எல்லாரும் இங்கு மரங்களாக மாறி நின்றார்களாம். அதனால், அனைத்து மரங்களும் தல மரங்களே என்று கணக்கு.
ருத்ரன்- ஆலமரம்; ருத்ராணி- சமித்து மரம்; விஷ்ணு- அரச மரம்; லட்சுமி- வில்வம்; பிற தேவர்கள் மற்றைய மரங்கள் என்று சொல்லப்படுகிறது. சக்கர தீர்த்தத்தோடு, காவிரியும் வெட் டாறும் தீர்த்தங்கள்!
ஆதி கல்பத்தில் தோன்றிய 28 நகரங்களில் திட்டையும் ஒன்று. ஊழிப் பிரளயத்தில் 26 நகரங்கள் அழிந்து போக, திட்டையும் சீர்காழியும் மட்டும் எஞ்சின. பின்னர்,
புதுப் புது கல்பங்களும் மன்வந்த்ரங்களும் வர, புதிய இடங்களும் உருவாகின. ஆனாலும், அன்று முதல் இன்று வரை, பெருமை குன்றாமல் திட்டைத் திருத்தலம் பொலிகிறது.
தக்ஷிண குடித்வீப மகாத்மியம் என்ற பெயரில், வட மொழியில், இந்தத் தலத்தின் தல புராணம் இருப்பதாகத் தெரிகிறது. சுயம்பூதேஸ்வரர் புராணம் என்னும் நூலும் உண்டு. சக்கர தீர்த்தக் கரையை அடைந்து, திருக் கோயிலை அண்ணாந்து பார்க்க, அந்திமாலையின் மெல்லொளியில், நிலவு தீட்டிய நிழற்படமாகத் தோற்றம் தருகிற திருக்காட்சியைக் கண்டு கொண்டே நகர்கிறோம்.
தென்குடித் திட்டையினில் பேருலக நாயகிக்குப் பங்கு கொடுத்த பசுபதியே... என்று உமாபதிசிவம் கூறியதைக் கூறியபடி விடை கொள்கிறோம்.
No comments:
Post a Comment