Wednesday, 9 August 2017

பிரான்மலை


நு என்று ஒருவன். தொடக்கத்தில் நல்லவனாகத்தான் இருந்தான். பிரம்மாவையும் சிவபெருமானையும் எண்ணி, தவங்கள் பல செய்தான். அதன் பலனாக பலம் பெற்று அந்தகாசுரன் என்று பெயர் பெற்றான். அவ்வளவுதான்... அட்டகாசத்தை ஆரம்பித்து விட்டான். ஆணவத்தில் அனைவரையும் படாதபாடுபடுத்தினான். எந்த அளவுக்குக் கொடுமை தெரியுமா?
தேவர்களைச் சீலை கட்ட வைத்தான்; பூச்சூடவும் மையிடவும் செய்தான்; தனக்குச் சாமரம் வீசப் பண்ணினான். இவனது கொடுமை தாங்காமல், தேவர்களும் முனிகளும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
கருணைப் பார்வை பார்த்த சிவனார், மெள்ளக் குனிந்து தமது நெஞ்சையே நோக்கினார். முன்னரே, தாருகாவனத்தை எரித்திருந்தார் அல்லவா! அந்த நெருப்பு... அதுதான் காலாக்னி, சிவனாரின் நெஞ்சில் குடிகொண்டிருந்தது. சிறிய பொறியாக அங்கு அடைக்கலம் கண்டிருந்தது. அண்ணல் இப்போது நோக்க... பார்வையைப் புரிந்து கொண்ட காலாக்னி, கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அந்தக் கொழுந்து நெருப்பிலிருந்து வடிவாகி ஓங்கி நின்ற ஸ்வரூபமே, ஸ்ரீபைரவநாதர்.
ஸ்ரீபைரவரை, அந்தகாசுரனுடன் சண்டையிடப் பணித்தார் சிவனார். போர் நடந்தது. அந்தகாசுரன் இருந்த இடம் தெரியாமல் அழிந்தான். கொடுமைகளில் இருந்து காப்பாற்றப்பட்ட தேவர்கள், தமது நன்றிக் கடனைத் தெரிவிக்க, ஆளுக்கு ஒரு ஆயுதத்தையோ திறனையோ, பைரவருக்குக் கொடுத்தனர்.
'சர்வ ஆற்றல்களையும் தமக்குள் ஒடுக்கிக் கொண்டு, பிரபஞ்சம் முழுவதையும் தமக்குள் ஆக்கிக் கொண்டவர் ஸ்ரீபைரவர்' என்று சிவ சூத்திரங்கள் குறிப்பிடுகின்றன. சக்திகளைத் தம்மிடத்தில் கொண்டிருந்தாலும், அந்தந்தத் தருணத்துக்கு ஏற்ப, அஷ்ட சக்திகளில் ஒருவரைத் தம் துணையாகக் கொண்டு, எட்டு விதமான வாகனங்களோடும், எட்டு விதமான தன்மைகளோடும் பைரவர் விளங்கும்போது, அந்தந்தத் தன்மைக்கேற்ப பெயர் கொடுக்கப்பட்டு, அஷ்ட பைரவராக வணங்கப்படுகிறார்.
பைரவரைப் பற்றி இன்னும் சில சுவையான தகவல்களும் உண்டு. ஒரு முறை பிரம்மாவும் திருமாலும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தானே படைப்புக் கடவுள் என்ற ஆணவம் மேலோங்க, பிரம்மா, பேச்சுவாக்கில் திருமாலைப் பெரிதும் அவமதித்தார்; தம்மையே வணங்கும்படி பணித்தார். திருமால் செய்வதறியாது தவிக்க, இவற்றையெல்லாம் இன்னொரு பக்கமிருந்து கேட்டுக் கொண்டிருந்த சிவனார், ஆத்திரம் கொண் டார். பிரம்மாவின் ஆணவத்தை அடக்க 'பைரவர்' என்னும் தமது அம்சத்தை அனுப்ப, அதுவரை ஐந்து தலைகள் கொண்டிருந்த பிரம்மாவின் மேல் தலையை பைரவ மூர்த்தம் கிள்ளியது. தலை போக, பிரம்மாவின் ஆணவமும் அடங்கியது.
மேற்கூறியபடி சில கதைகள் விளங்க, இன்னும் சில கதைகள், பைரவரை, தக்ஷ யாகத்தோடு தொடர்பு படுத்துகின்றன. தட்சன் யாகம் செய்தான்; சிவனாரை அழைக்காமல் விட்டான்; அவன் மகளான தாட்சாயினி, கணவர் சொன்னதையும் கேட்காமல், தந்தையின் யாகத்துக்குச் சென்றாள்; அவமானப்பட்டாள். தட்சன் மகள் என்னும் நிலையே தேவையில்லை என்று நெருப்பில் தம்மையே ஆகுதியாக்கிக் கொண்டாள். பாதி எரிந்து கொண்டிருந்த அந்த உடலை அப்படியே எடுத்துத் தம் தோள் மீது போட்டுக் கொண்டு, சினத்துடன் அலைந்தார் சிவனார். அவருக்கு சாந்தம் ஏற்படுத்த விரும்பிய திருமால், சிவனுக்குத் தெரியாமல், அவர் பின்னாலேயே சென்று, சக்கராயுதத்தைக் கொண்டு, தன் சகோ தரியின் (பார்வதி அவரது சகோதரிதாமே) உடலைத் துண்டாக்கினார். அம்மையின் உடல் துண்டங்களும் அவரது உடை ஆபரணங்களும் விழுந்த இடங்களே, 'சக்தி பீடங்கள்' என்றாயின. சக்தி பீடங்களில், தமது அம்சமான பைரவரைக் காவல் தெய்வமாகச் சிவனார் நிறுவினார்.
வடமொழியில் பைரவர் என்றும், தமிழில் வைரவர் என்றும், வட மாநிலங்களில் பைரோன், பைரத்யா என்றும், நேபாளத்தில் பைராய் என்றும் வழங்கப்படுகிற பைரவர், சிவனாரின் உக்கிர மூர்த்தமாவார். அஷ்ட சக்திகளுடனும், எட்டுவித தன்மைகளுடனும் கூடிய அஷ்ட பைரவர்களிலிருந்து ரூப பேதங்கள் (வடிவங்கள்) பிரிந்து, 64 யோகினிகளுடன் கூடிய அஷ்டாஷ்ட (அதாவதுஎட்டு எட்டு... அறுபத்துநான்கு) பைரவர்கள் என்றும் சில சாத்திரங்களில் வணங்கப்படுவதுண்டு.
தன்மைக்குத் தக்கவாறு, சாத்விக, ராஜஸிக அல்லது தாமஸிகதாரியாகவோ, இரண்டு, நான்கு அல்லது எட்டுக் கரங்களுடனோ இவர் காட்சி தருவதுண்டு. சிவனாரின் அஷ்டாஷ்ட வடிவங் களைப் பற்றிக் கூறுகிற 'சிவப்பராக்கிரமம்' எனும் நூல், சிவபெருமானின் 64 வடிவங்களில், பைரவ மூர்த்தம் ஒன்று என விவரிக்கிறது. இதன்படி, இரண்யாட்சதனின் மகனான அந்தகாசுரனை வென்ற மூர்த்தம் என்பதால் பைரவருக்கு, 'அந்தஹாரி' என்பது சிறப்புப் பெயர்.
அசிதாங்க பைரவராக- அன்னம், குரோதன பைரவராக- கருடன், ருரு பைரவராக- ரிஷபம், உன்மத்த பைரவராக- குதிரை, சண்ட பைரவராக- மயில், கபால பைரவராக- யானை, பீஷண பைரவ ராக- சிங்கம் ஆகியவற்றை வாகனங்களாகக் கொண்டவருக்கு, கால பைரவர், சம்ஹார பைரவர் போன்ற நிலைகளில் நாய் வாகனம். அந்தஹாரிக் கும் நாய் வாகனமே. சொல்லப்போனால்... சிவ அம்சம், பைரவரான போது, வேதங்களே நாய் வடிவம் பெற்றன. எனவே, பைரவர் என்றாலே நாயைக் குறிப்பதாக எண்ணுவதுண்டு.
நாய் வாகனம் கொண்டு, காதுகளில் குண்டலங் களாகவும் கைகளில் வளையணியாகவும் கால்களில் சதங்கைகளாகவும் பாம்புகளை ஆபரணங்களாக அணிந்து, பாசம், அங்குசம், திரிசூலம், இடி, கபாலம், உடுக்கை என்று வெவ்வேறு விதமான ஆயுதங்கள் ஏந்தி, சிவன் கோயில்கள் பலவற்றில், தனிச் சந்நிதியில் கால பைரவர் காட்சி கொடுப்பார். அநேகமாக, சிவன் கோயில்களின் உள் பிராகார வடக்குச் சுற்றில் அல்லது வடகிழக்கு மூலையில், கால பைரவர் சந்நிதி இருக்கும்.
துன்பங்களையும் நோய்களை யும் வினையையும் தீர்க்கும் ஸ்ரீபைரவரை வழிபட, தமிழகத்தில் பல தலங்கள் உண்டு. அவற்றுள் சிறப்பு மிக்க ஒரு தலத்தில்... பூமியில் சிவ--பார்வதி எழுந்தருளியிருக்க, சொர்க்கத்தில் மங்கைபாகர் எழுந்தருளி திருமணக் காட்சி தர, அந்தரத்தில் பைரவர் அருள்கிறார்!
ஒரே நேரத்தில் சிவனாரின் அருள் தலமாகவும், அம்மை- ஐயன் திருமணத் தலமாகவும், தேவர்கள் கூடிய பேரூராகவும், குன்றாடும் குமரனின் சிறப்புத் தலமாகவும், கோயில் கட்டுமானப் பெருமைக்கான குடைவரைத் தலமாகவும், அமர்ந்த நவக்கிரகங்களைக் கொண்ட அற்புதத் தலமாகவும், பெயரில்லா மரமே தலமரமான விநோதத் தலமாகவும், குன்றக்குடி (திருவண்ணாமலை) ஆதீனத்தின் ஐந்து கோயில் தேவஸ்த்தான ஆளுகைக்கு உட்பட்ட அழகுத் தலமாகவும், பைரவப் பெருமானின் பெருமிதத் தலமாகவும் திகழ்கிற திருத்தலம் செல்வோமா?
பிரான்மலை! இலக்கியத்தில் 'திருக்கொடுங் குன்றம்' என்று வழங்கப்படும் இந்த திருத்தலத்துக்கு, இப்போது பிரான்மலை என்று பெயர். திண்டுக்கல் சிங்கம்புணரிக்கு அருகே உள்ளது இந்தத் தலம். திண்டுக்கல்- கொட்டாம்பட்டு- சிங்கம்புணரி வழியாக பிரான்மலை செல்லலாம். அதுபோல்...திருச்சி -கொட்டாம்பட்டு- பிரான்மலை; திருப் புத்தூர் (ராமநாதபுரம்)- சிங்கம்புணரி- பிரான்மலை; மதுரை- மேலூர்- சிங்கம்புணரி- பிரான்மலை; பொன்னமராவதி - பிரான்மலை என்று இந்தத் தலத்துக்குச் செல்லலாம்.
மதுரையிலிருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்துகள், பிரான்மலை வழியாகச் செல்கின்றன. மதுரையிலிருந்து சுமார் 80 கி.மீ, திருப்புத்தூரிலிருந்து சுமார் 24 கி.மீ, சிவகங்கையிலிருந்து சுமார் 58 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்.
பாரிவள்ளல் வாழ்ந்த பறம்பு மலை இதுதான் என்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஏதுமில்லை! ஆனால் கோயில் வளாகத்துக்குள், முல்லைக்குத் தேர் தந்த பாரியின் செயலை நினைவுகூரும் வகை யில் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திருக் கோயில் பெரு விழாவில், ஒரு நாள் பாரி விழா நடைபெறும்.
ஊரை அடைந்து, திருக்கோயிலுக்குச் செல்கி றோம். கோயில் முகப்பு வரை வாகனத்தில் செல்லலாம். வலப் பக்கத்தில் குளம்; 'அடையாளஞ்சான் குளம்' என்கிறார்கள். எதிரில் பெரிய மண்டபம். இந்த மண்டபத்தில் நுழைந்து இடப் பக்கம் திரும்பினால், கோயிலின் தெற்கு வாயில். அதன் வழி யாகக் கோயிலுக்குச் செல்ல வேண்டும். தெற்கு வாயிலில் நுழைந்தால், நீண்ட பிராகாரம் போல் ஓர் அமைப்பு. இடப் பக்கம் திரும்பி நடந்தால், கோயிலுக்குச் செல்லலாம்; திரும்பாமல், எதிரில் தெரியும் படிகளில் ஏறினால், பைரவர் சந்நிதிக்குச் செல்லும் வழி என்று போட்டிருக்கிறது. வலப் பக்கம் திரும்பி சில அடிகளே நடந்தால், பெரிய குளம் ஒன்று மலைச் சரிவில் தெரிகிறது. திருக்கோயில் தீர்த்தமான இதுவே, 'தேனாழி தீர்த்தம்'.
பூமி, அந்தரம், சொர்க்கம் என்று மூன்று நிலைகளில் உள்ள கோயில் இது! தெற்கு நுழை வாயிலின் இடப் பக்கம் திரும்பி, முதலில் நாம் செல்லப்போவது மலையடிவார 'பூமி' கோயில்.
வானில்பொலி (வு)எய்தும் மழை மேகம்கிழித்து ஓடிக் கூனல்பிறை சேரும்குளிர் சாரல் கொடுங்குன்றம் ஆனில்பொலி ஐந்தும் அமர்ந்து ஆடிஉலகு ஏத்தத் தேனில்பொலி மொழியாளடு மேயான் திருநகரே
_ என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடிக் களிக்கும் தலத்துக்கு உரியது, இந்த மலையடிவாரக் கோயிலேயாகும்.
வாயிலில் இடப் பக்கம் திரும்பி நடக்கத் தொடங் கினோம் இல்லையா, அப்படியே நடந்தால், கோயிலின் தெற்குப் பிராகாரத்தோடு சேர்ந்து விடுவோம். வழியில் திரும்பி, மூலவர் சந்நிதிக்குச் செல்ல முடியும் என்றாலும், திருச்சுற்று வலம் வந்து சுவாமியை வணங்குவதுதானே நம்முடைய தேவார வழக்கம். அதன்படியே செல்லலாம், வாருங்கள்.
பிராகாரத் தெற்குச் சுற்றில், அறுபத்துமூவர். தென் மேற்கு மூலையில் முக்குறுணி விநாயகர். மேற்குச் சுற்றில் அடுத்து அம்மையப்பர்; தொடர்ந்து விஸ்வநாதர் - விசாலாட்சி. பின்னர், சொக்கநாதரும் மீனாட்சியும். அடுத்ததாகத் தொடர்ந்தால், திருக் கல்யாண மண்டபமும், அப்படியே அம்மன் கோயி லுக்குச் செல்லும் வழியும் உள்ளன. வலம் சுற்றிக் கொடுங்குன்றீசரை வணங்கலாம் வாருங்கள். வடக்குச் சுற்றில் வாகனங்கள். வலம் வந்து கிழக்குச் சுற்றை அடைகிறோம். கொடிமரம், பலிபீடம், நந்தி. மூலவர் சந்நிதி முகப்பில் விநாயகரையும் முருகரை யும் வணங்கி நிற்கிறோம்.
முகப்பு வாயிலில் பெரிய, அழகான விளக்குத் திருவாசி. மகாமண்டபம் நுழைந்து, மூலவரை நோக்கியபடியே நிற்கிறோம். சிறிய லிங்க மூர்த்தம். வட்ட வடிவ ஆவுடையார். இவர்தாம் கொடுங் குன்றீசர், கொடுங்குன்றநாதர், கடோரகிரீஸ்வரர், பிரச்சந்திரகிரீஸ்வரர், குன்றாண்ட நாயனார், கொடுங்குன்றம் உடைய நாயனார். மகோதர மகரிஷியும் நாகராஜனும் வழிபட்ட நாதர். உள்ளம் எல்லாம்உருகிக் குளிர, உணர்வெல்லாம் ஒளிர, வணங்கி நிற்கிறோம். நற்றவரும் கற்ற நவ சித்தரும் வாழ்த்தி உற்ற கொடுங் குன்றத்து என் ஊதியமே என்று ராமலிங்க வள்ளல் பெருமான் பாடிப் பரவியது நினைவில் தோன்ற, அதனை எண்ணியபடியே வழிபடுகிறோம்.
மகோதர மகரிஷி ராமாயண காலத்தைச் சேர்ந் தவர் என்கின்றன புராணங்கள். ராமாயணத்தில் வரும் தண்டகாரண்ய- ஜனஸ்தானப் பகுதியில் வசித்த இவர், தலங்கள் பலவற்றுக்கும் சென்று வழி பட்டு, நிறைவாக இங்கு வந்து வணங்கினாராம். அதெல்லாம் சரி! அதென்ன கடோரகிரீஸ்வரர் என்று திருநாமம்? கொடுங்குன்றம் என்பதுகூட என்ன?
முதலில் புரியாது! ஆனால், பூமி கோயிலை விட்டு மலைமீது இருக்கும் கோயிலுக்குப் போவதற்காக மலை ஏறும்போது தெரியும். இப்போது படிக்கட்டுகள் உள்ளன; குறுக்கு வழியில், கோயில் அர்ச்சகர் காட்டும் வழியில் ஏறினால்கூட கடினமாக இல்லை. ஆனால், வெளியே வந்து மலையை அண்ணாந்து பார்த்தால், மலையின், கரடுமுரடும் செங்குத்துத் தன்மையையும் புலப்படுகின்றன. அப்படியானால், அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கும்?
'கடோரம்' எனும் வடமொழிச் சொல்லுக்கு கடினம் என்று பொருள். கடினமான மலை கடோரகிரி அல்லது கொடுங்குன்றம். பிரச்சந்திர கிரி என்றும் ஒரு பெயர். பிரசண்ட கிரி என்றுஇருந் திருக்க வேண்டும். பிரசண்டம் என்றாலும் கடினம். அதுவே காலப் போக்கில் பிரச்சந்திர கிரி என்று மாறிவிட்டது போலும்! பரவாயில்லை, பிரகாசமான இறைவருக்கு இதுவும் பொருத்தம் தான்!
'கடினமான' பெயராக இருக்கிறதே என்கிறீர்களா? கடினம் போலத் தோன்றினாலும், ஈடுபாடும் முயற்சியும் இருந்தால் மலை மீது ஏறிவிடுகிறோம் அல்லவா! அப்படித்தான் இறைவனும். கடினம் போல் தோன்றினாலும் பக்தியும் பிரயத்தனமும் இருந்தால் அவரைப் பற்றி விடலாமே! அதனால் தான், கடோரகிரி, பிரான்மலை (பெருமானுடைய, பிரானுடைய மலை) ஆகிவிட்டது; கொடுங்குன்ற நாதர், குன்று ஆண்ட நாயனார் ஆகி விட்டார்.
பிரான்மலை என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் இறுதியில் இருக்கும் உயரமான குன்றுகளில் ஒன்று. சுமார் 2,000 மீட்டர் உயரம் கொண்ட இதன் மீது முன்னர் கோட்டை இருந்ததற்கான சிதிலங்கள் உள்ளன. இந்த மலையைப் பற்றிய புராணக் கதைகளும் சரி, வரலாற்றுத் தகவல்களும் சரி, சுவாரஸ்யமானவை.
சிவபுராணத்தின்படி, இது, மேரு மலையின் ஒரு பகுதி. ஆதிசேஷனுக்கும் வாயுக்கும் போட்டிவந்து, ஆதிசேஷன் மேருவை அழுத்திக் கொள்ள... வாயு, பலம் கொண்ட மட்டும் வீசித் தள்ளிய கதை நினைவிருக்கிறதா? அவ்வாறு வாயுதேவன் வீசிய போது, மேருவிலிருந்து பிய்ந்து வந்த துண்டங்களே காளத்தி மலையாகவும், திருச்செங்கோட்டு மலையாகவும் உள்ளன என்று ஆங்காங்கேபார்த் திருக்கிறோம். அத்தகைய துண்டங் களில் ஒன்றுதான், பிரான் மலையாக இருக்கிறதாம்!
வெகு தூரத்திலிருந்தும் உயரத்தில் இருந்தும் இதைப் பார்த்தால், இந்த மலையே சிவலிங்க வடிவத்தில் இருப்பது தெரியும். அதனால்தான், பிரான்மலை.
இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட காலத்திலும், இந்த மலை முக்கியத்துவம் பெற்றது. 17-ஆம் நூற்றாண்டில், ராமநாதபுர மன்னராக இருந்தவர் ரகுநாத சேதுபதி என்கிற கிழவன் சேதுபதி. சிவகங்கை பகுதியில் இருந்த நாலு கோட்டை பெரிய உடையாத்தேவரைப் பற்றிக் கேள்விப் பட்ட கிழவன் சேதுபதி, படை ஒன்றை நிர்வகிப்பதற்கான அளவு நிலங்களைத் தேவருக்கு வழங்கினார்.
கிழவன் சேதுபதியைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த விஜய ரகுநாத சேதுபதி, பெரிய உடையாத் தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்குத் தனது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரைத் திருமணம் செய்து கொடுத்து பிரான்மலை, திருப்புத்தூர், சோழபுரம், திருப்புவனம் ஆகிய கோட்டைகளின் பொறுப்பையும் கொடுத்தார். பின்னர், ராஜா முத்து விஜயரகுநாத பெரிய உடையாத் தேவர் என்ற பெயரில் சிவகங்கையின் முதல் அரசரானார் சசிவர்ணத் தேவர். இவரின் மகனான முத்து வடுகநாதருடைய காலத்திலும், அவர் மனைவியான வேலு நாச்சியார் காலத்திலும் விடுதலைப் போர்கள் கிளர்ந்தன.
வேலு நாச்சியார் காலத்தில் தான், மருது சகோதரர்கள் ஆளுகைஏற்றனர். வீரபாண்டிய கட்ட பொம்முவின் சகோதரரான ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத் தனர் என்பதே, மருது சகோதரர்கள் மீது ஆங்கிலேயர்கள் கொண்ட முதன்மை வெஞ்சினம்.
ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்த இடம் என்று பிரான்மலை பெருமை கொள்கிறது. அப்போதைய காலத்தில், கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து பாக் ஜலசந்தி வரை நீண்டு கிடந்த அடர்ந்த காடுகளில், பிரான்மலையும் அடங்கியிருந்தது. மலை மீது, 'ஊமையன் குடம்பு' என்று ஒரு குகை உண்டு. குடம்பு என்பது ஆழமான குகை என்று பொருள்படும். இந்தக் குகைதான் ஊமைத்துரை ஒளிந்திருந்த இடம் என்கிறார்கள். குகையின்மீது, ஊமையன் இருக்கை என்று ஒரு பெரிய வட்டப்பாறை. அதிலிருந்து கீழே இறங்குவதாக இருந் தால், பிரான்மலையின் செங்குத்துச் சரிவில்தான் இறங்க வேண்டும். அருகில், காசிசுனை என்று தெள்ளத் தெளிந்த நீரூற்று. எங்கு வற்றினாலும், இங்கு நீர் வற்றுவதே இல்லையாம். ஆனால், ஊற்றுக்கண் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை.
மலையின்மீது, வாலியுல்லா ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் தர்கா உள்ளது.
இப்போதும்கூட, மக்கள் பணியே மகேசன் பணி என்பதை மிகச் சிறப்பாக நிறுவிக் கொண்டிருக்கும் குன்றக்குடி (திருவண்ணாமலை) ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட கோயிலாகத் திகழும் பிரான் மலை, வெகு நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகிறது.
கத்து இடிகுரல் வந்துஎழ வெருவில் வரை இழியும்
கூகைக்குலம் ஓடித்திரி சாரல் கொடுங்குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடி நல மங்கை
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழநகரே
என்று ஞானசம்பந்தர் வழியில் நாமும் பாடிய படியே, கொடுங்குன்றீசரை வணங்குகிறோம்.
மகா மண்டபத்தில், ஸ்ரீஜ்வரஹரேஸ்வரர். மீண்டும் உள் வலம் வந்து, கோஷ்ட மூர்த்தங்களை வணங்கி, ஸ்ரீசண்டேஸ்வரரிடம் வேண்டி நின்று, அம்மன் கோயில் செல்கிறோம்.
ஸ்வாமி சந்நிதியின் மேற்குச் சுற்றில் இருந்து அப்படியே அம்மன் கோயிலுக்குச் செல்ல லாம். திருமண மண்டபத்தைத் தாண்டிச் செல்லும்போது, அந்த இடத்தின் சிறப்புகளைக் காட்டுகிறார் அர்ச்சகர். வேலைப்பாடுகள் மிக்க கல் தூண்கள், தூணின் நெடுக்குப் பட்டைகளுக்கு இடையில் உருண்டோடும் கல் பந்துகள், அப்படியே நின்று மேலே பார்த்தால்... விதானத்தில் கல் வளை யங்கள். அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள்!
அம்மன் கோயில் தெற்குச் சுற்றின் பக்கவாட்டு மண்டபப் பகுதியை அடைகிறோம். இங்கேயும் அழகிய தூண்கள். திருப்பணி செய்த செட்டியார் சிலையும், எதிரில் நகரத்தார் குரு சிலையும் உள் ளன. அம்மன் திருச்சுற்றை வலம் வரலாமா?
வடக்குச் சுற்றில் கோயில் நந்தவனம் மண்டபத்தில் சண்டிகேஸ்வரி. கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை. வடக்குச் சுற்றில் கொடிமரம் ஒன்றும், அருகில் யானை வாகனமும் உள்ளன. பார்த்துக் கொண்டே, அம்மன் கோயில் கிழக்குச் சுற்றில் திரும்பி, அம்மன் சந்நிதி முன்மண்டபத்தை அடைகிறோம். இங்கேயும் கொடிமரம்- நந்தி வாகனம்.
அம்மன் சந்நிதி மகா மண்ட பத்தில் நுழைந்து, உள்ளே கருவறையில் கிழக்கு நோக்கிக் காட்சி தரும் ஸ்ரீகுயிலமுத நாயகியை வணங்குகிறோம். நின்ற திருக்கோல நாயகி. இரண்டு திருக்கரங்கள்; ஒன்றில் மலரும் மற்றொன்றில் பந்தும் தாங்கியவள். அமிர்தேஸ்வரி என்றும் திருநாமம் கொண்டவள். இந்த அம்மையை, 'தேனில் பொலி மொழியாள்' என்று அழைத்தார் திருஞான சம்பந்தர். திருக்கொடுங்குன்றத்துக்குப் பாடிய நட்டபாடை பதிகத்தின் முதல் பாசுரத்திலேயே இவ்வாறு கூப்பிட்டார். அம்மன் மகா மண்டபத் திலேயே பள்ளியறை.
வெளியில் வந்ததும் எதிரில்... வடகிழக்கு மூலையில், நமது கவனத்தை ஈர்க்கிறது மற்றொரு சந்நிதி. தெற்கு வாயிலுடன் இருக்கும் இந்தச் சந்நிதிக்குள் நுழைந்தால்... ஒன்றல்ல, இரண்டு சந்நிதிகள்! இரண்டுமே முத்தமிழ் முருகனின் திருச்சந்நிதிகள். தெற்கு நோக்கிய ஸ்ரீபாலமுருகன்; இவருக்கு இரு புறமும் சிவலிங்கங்கள். பாலன் என்று திருநாமம் கொண்டிருந்தாலும் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இரண்டு சந்நிதிகளிலும் மேற்கு நோக்கிய சந்நிதியே பிரதானமானது. இங்கு அருள் பாலிப்பவர் ஸ்ரீபிரான்மலை முருகர். வள்ளி- தெய்வானை உடனாய முருகன். சதுர்புஜ நாயகரான இவர், திருக்கரம் ஒன்றில் சூலம், மற்றொன்றில் ருத்திராட்சம் தாங்கி, ஒரு திருக் கரத்தை ஊரு ஹஸ்தமாகத் (ஊரு -- தொடை) தம் திருத்தொடையில் ஊன்றியுள்ளார்.
தெனம் தெனம் தெந் தெந் தெந் தெந் தெந் தெந்தெனானா
செறிந்து அடர்ந்தும் சென்றும் பண்பின் தும்பிபாடக்
குனிந்திலங்கும் கொம்பும் கொந்தும் துன்றுசோலை
கொழுங்கொடும் திண்குன்றம் தங்கும் தம்பிரானே
என்று அருணகிரிநாதரால் பாடப் பெற்ற பெருமான். அருண கிரியாருக்குத்தான் எவ்வளவு கரிசனம் பாருங்கள். ஏற்கெனவே, இது கொடுங்குன்றம். ஆனால் அருணகிரியார், 'கொடும் திண் குன்றம்' என்கிறார்! அவ்வளவு கடினமான மலை; அந்த மலையில், தம் மென்பாதங்கள் நிறுத்தி, நமக்காக முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார் என்று நினைவூட்ட எண்ணினார் போலும்!
அம்மன் சந்நிதியின் வடக்குச் சுற்றில் வரும்போது கொடிமரமும் யானையும் கண்டோம் இல்லையா? அவை, பிரான்மலை முருகனுக்கு உரியவை. ஆம்... இங்கு முருகனுக்கு மயில் வாகனம் இல்லை; யானை வாகனம்! முருகப் பெருமானைத் தரிசித்து வெளியில் வந்தால், அப்படியே... பைரவர் சந்நி திக்குச் செல்லும் வழி தெரிகிறது.
முதன்முதலில் கோயிலுக்குள் நுழைந்ததும் படிக் கட்டுகள் வழியாக பைரவர் சந்நிதிக்குச் செல்வதற் கான பாதை காட்டப்பட்டிருந்தது அல்லவா? அந்த வழியாக நேரே வரலாம். பைரவரையும் அவருக்கும் மேலே வீற்றிருக்கும் மங்கைபாகரையும் வணங்கி விட்டுப் பின்னர், பூமி கோயிலுக்கு வரலாம். அல்லது பூமி கோயிலை தரிசித்த பிறகு மேலே ஏறலாம்.
முருகன் சந்நிதிக்கு அருகில் இப்போது நாம் ஏறும் பாதை, மலை மீது அப்படியே நேரடியாக ஏறும் பாதை. கோயில் பணியாளர்கள், விரைவாகச் சென்று வரப் பயன்படுத்தும் குறுக்குப் பாதை.
மலையை 'திருப்பாறை' என்கிறார்கள். மலை மீது ஏறியபடி திரும்பிப் பார்த்தால், கோயில் அமைப்பு நன்கு புலப்படுகிறது. அடிவாரக் கோயிலில், சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகள் ஒன்றுக்கொன்று இணையாக, இரண்டுமே கிழக்கு நோக்கி உள்ளன. இரண்டுக்கும் இடையில் மடப் பள்ளி. அம்மன் சந்நிதிக்கு வடக்காக மேற்கு நோக் கிய முருகர் சந்நிதி.
பைரவர் சந்நிதி நோக்கிச் செல்கிறோம். அருணகிரியார் பாடியது மீண்டும் நினைவுக்கு வருகிறது. பல்வேறு இசைக் கருவிகள் முழங்க, பறவைகள் இங்கும் அங்கும் பாய்ந்து கொண்டிருக்க, இடையில் பைரவர் நடனமாட, அசுரரை வெட்டித் தாக்கி முருகப் பெருமான் போரிட்டார்.
திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி தத்தத்த தந்ததத
தெதததெத தெதததெத தெத்தெத்தெ தெந்ததெத
திக்கட்டி கண்டிகட
ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித
தக்கத்த குந்தகுர்த திந்தி தீதோ
திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட
டக்கட்ட கண்டகட
டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட
டுட்டுட்டு டுண்டுடுடு
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு
குக்குக்கு குங்குகுகு
என்று தாளம். என்ன இது என்று வியக்கிறீர் களா? திமிலை, கரடிகை, இடக்கை, உடுக்கை, பதலை, முரசு முதலான கருவிகளின் தாளங்கள்!
அருணகிரியாரின் சொற்கள் எவ்வாறு நாட்டிய மாடுகின்றன பார்த்தீர்களா? இந்தத் தலத்துக்கு அருணகிரியார் வந்தபோது, முருகப்பெருமான் 'நிருத்த தரிசனம்' (நாட்டியத் திருக்கோலம்) அளித் தாராம். அதுதான், சொற்களும் சதிராடிவிட்டன.
கீழே உள்ள நுழைவாயிலில் புகுந்து சுமார் 55 படிகள் ஏறி வந்தால், ஐந்து நிலை கோபுரத்தை அடையலாம். நாம், முருகர் சந்நிதியில் இருந்து குறுக்காக மலைப் பாதையில் வந்தோம் இல்லையா? இப்போதும் ஐந்து நிலை கோபுரத்தை அடைந்து விடுகிறோம். கோபுரத்துள் புகுந்து சென்றால், எதிரில் வலம்புரி விநாயகர். இங்கிருந்து இடப் புறம் திரும்பிப் படிகள் ஏறி, பிறகு வலப் புறமும் சில படிகள் ஏறி, மலைக்கோயில் வளாகத்தைச் சேர்கிறோம்.
இங்கு, மேற்குப் பகுதியில் பைரவர் கோயில். அதற்கு அடுத்ததாக (மேற்கிலிருந்து கிழக்காக) ஆலமர்செல்வன் எனும் திருநாமத்துடன் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி சந்நிதி. இவர், மலைமீது அருள் புரியும் மங்கைபாகரின் கோஷ்ட தட்சிணாமூர்த்தி. சனகாதி முனிவர் கள் உபதேசம் கேட்க, சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும் தென்முகக் கடவுள்.
இந்தக் கோயிலில் மூன்று தட்சிணாமூர்த்திகள். கீழே கொடுங் குன்றீசரின் கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தி. அடுத்த நிலை யில் உள்ள பைரவர் சந்நிதியில் ஒரு தட்சிணாமூர்த்தி. மேலே உள்ள மங்கைபாகரின் கோஷ்ட தட்சிணாமூர்த்தி.
ஆலமர் செல்வர் சந்நிதிக்கு அடுத்த தாகக் கிழக்கில் குகை போன்ற அமைப்பு. தன் மீது, முல்லைக்குத் தேர் கொடுக்கும் பாரி வள்ளல். சமீபத்திய சிலாரூபம் என்றாலும் பாரியின் கொடைமடம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. பறம்பு என்றாலே மலை என்று பொருள் உண்டு. பாரியின் பறம்பு மலை அரசு, முந்நூறு ஊர்களைக் கொண்டிருந்ததாகப் புறநானூறு பகர்கிறது. சேர- சோழ- பாண்டிய மூவேந்தர்களும் சேர்ந்து பாரிமீது படையெடுத்து முற்றுகையிட்டனர். பறம்பு அரசு, ஈடு கொடுத்து நின்றது. போரின் படையெடுப்பு கண்டு மனம் நொந்த கபிலர், மூவேந்தருக்கும் தகவல் ஒன்றை நினைவூட்டினார். 'பலரும் வந்தனர்; கொடைமடம் பிறழாத பாரியிடத்து, முந்நூறு ஊர்களையும் பரிசாகப் பெற்றுச் சென்றனர்; இப்போது மீதம் இருப்பவை இந்தக் குன்றமும், யாமும், பாரியும் மட்டுமேயாகும். வேண்டுமாயின், இந்தப் பறம்பு மலையையும் நீர் வந்து பரிசாகப் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று பாரியின் ஈகை குணத்தைப் போற்றினார் (பின்னரும் மூவேந்தர், பாரியை வெற்றி கொண்டனர் என்பது வேறு கதை). அப்பேர்ப்பட்ட பறம்பு மலை மீதா நிற்கிறோம்! நெஞ்சமெல்லாம் நெகிழ்ச்சியில் உருகுகிறது.
பாரி சிலைக்கு அடுத்ததாகச் சில படிகள் ஏறினால், 'சொர்க்கம்' என்கிற மலைக் கோயிலை அடை யலாம். படியேறும் வாயிலில்... முகப்பின் மீது, நடுவே ரிஷபம் ஏறிய அம்மையும் அப்பனும்; ஒரு புறம்- விநாயகர் மற்றும் பிரம்மன்- சரஸ்வதி; மறுபுறம்- முருகர் மற்றும் லட்சுமி- மகாவிஷ்ணு. படிகள் ஏறியதும் நாம் நிற்பது ஒரு மண்டபம். இதன் மேற்குப் பகுதியில் (நமக்கு இடப் பக்கம்) மேடை போன்ற அமைப்பு. மாடத்தில் கிழக்கு நோக்கிய மகாலட்சுமி. பக்கத்தில் விநாயகர். இந்த மண்டபத்துக்கே மகாலட்சுமி மண்டபம் என்று பெயர்.
இங்கிருந்து அப்படியே இன்னும் சில படிகள் ஏறி, அடுத்த நிலையிலுள்ள மற்றொரு மண்டபத்தை அடையலாம். இல்லையானால், மேற்கு- கிழக்காக நீண்டு கிடக்கும் இந்தப் பகுதியின் கிழக்குப் புறத்தை அடைந்து, அங்கேயும் சில படிகளேறி, ஸ்ரீநடராஜ சபையை அடையலாம்.
இங்கேயே படிகள் ஏறலாமா? ஏறும்போதே, இடப் பக்கத்தில், கிழக்கு நோக்கிய வெள்ளை விநாயகர். வணங்கி, உள்ளே சென்றால்.. சற்றே மங்கிய வெளிச்சத்தில் ஒரு மண்டபம். இதுதான் தேவசபை மண்டபம். அப்படியே நின்று நேராக (அதாவது வடக்கு நோக்கி) பார்த்தால், சைவ நால்வர். நின்று இடப் பக்கம் திரும்பினால், உள்ளே கிழக்கு நோக்கியவராக.. அருள்மிகு மங்கை பாகர்! மலை மீது உள்ள இந்தக் கோயில், ஒரு குடைவரைக் கோயில்.
கருவறையில் இருக்கும் மங்கைபாகர் திருக்கோலம், ஸ்வாமியும் அம்பாளும் சேர்ந்த எழில்கோலம். ஸ்வாமி- அம்பாள் இருவரும் சிலாரூபமாக அமர்ந்திருக் கிறார்கள். தெற்கில் சுவாமியும் (நமக்கு இடப் பக்கம்) வடக்கில் அம்பாளும் (நமக்கு வலப் பக்கம்) கைகோத்து உட்கார்ந்திருக்கிறார்கள்.
ஸ்வாமி- ஸ்ரீஉமாமகேஸ்வரர்; அம்பாள்- ஸ்ரீதேனாம் பிகை அல்லது தேனம்மாள். ஸ்வாமியும் அம்பாளும் பாறையிலேயே குடைந்து செதுக்கப்பட்டவர்கள். கரங்களில் பூச்செண்டு பற்றிக் கொண்டு, திருமணக் கோலத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அதுவும், தேனாம்பிகையின் கோலம்... மணக் கோலத்தில் மணமகள் அமரக்கூடிய 'குத்த வைச்ச கோலம்'. வெள்ளை ஆடை அணிந்து, வெள்ளை புஷ்பம் தாங்கியவர்களாகக் காட்சி தருகிறார்கள்.
அகத்தியருக்குத் திருமணக் காட்சி காட்டிய தலங்களில் இதுவும் ஒன்று. அம்பாள் பாதம் பற்றிக் கொண்டுள்ள இந்தத் திருக் கோலம், 'தேவ ரகசிய கோலம்' என்றும் வழங்கப்படுகிறது. ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் முன்னால், ஒரு சிவலிங்கம். 'உடையவர்' என்று திருநாமம் கொண்ட சிவலிங்கனார். இவருக்கே அபிஷேகம். ஸ்வாமி- அம்பாளுக்குப் புனுகுக் கவசம். மங்கைபாகர் கோயிலில் காரண ஆகம முறையில் பூஜைகள்; கீழே கொடுங்குன்றீசர் கோயி லில் காமிக ஆகம முறையில் பூஜைகள்.
பிரானையும் பிராட்டியையும் வழிபட்டு, நம்மைச் சுற்றிப் பார்க்கிறோம். நாம் நிற்பது தேவசபா மண்டபம். அம்மை- அப்பனின் மணக் கோலத்தைக் காண தேவர்களும் இங்கு குழுமினார்களாம். இதைக் குறிப்பதுபோல, தேவசபா மண்டபத்தின் விதானத் தில், வரிசையாக தேவர்களின் உருவங்கள்; முப்பத்து முக்கோடி தேவர்களைக் குறிக்கும் வித மாக முப்பத்து மூன்று பட்டிகைகள். இவை தவிர, மேல்புறப் பட்டிகைகளில் பூத கணங்கள்.
தேவசபை மண்டபத்துக்குக் கிழக்காக, விசாலமான மண்டபம். இதன் வடக்குச் சுவரில் நடராஜ சபை. இங்கிருந்து அப்படியே கீழிறங்கினால், மகாலட்சுமி மண்டபப் பகுதியை அடையலாம். ஒரு பக்கத்தில், சம்பந்தரின் கொடுங்குன்றப் பதிகம், கல்வெட்டுகளில் பொறிக் கப்பட்டுள்ளது. தூண் ஒன்றில், காரைக்கால் அம்மை.
மங்கைபாகர் சந்நிதியை வலம் வரவேண்டுமானால், மண்டபங்களை விட்டு வெளியே வந்து, நாம் முன்னரே கண்டோமே... பாரி வள்ளல் சிலையும் ஆலமர் செல்வன் சந்நிதியும்! அந்தப் பகுதி வழியாக, மலையின் கரடு முரடுகளில் ஏறி இறங்கி வர வேண்டும் அதனால்தான், கோஷ்ட மூர்த்தமான தட்சிணாமூர்த்தி, ஆலமர் செல்வன் சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.
அங்கு வந்து நின்று அண்ணாந்து நோக்கினால், மங்கைபாகர் விமா னம் தெரியும். விமானத்தை ஒட்டி, மலையிடுக்கில் ஒரு மரம். அதுவே, பிரான்மலை தலமரம். என்ன பெயர்? ஒன்றுமில்லை. என்ன?! ஆமாம், மரத்தின் பெயரே, பெய ரில்லா மரம். இதுநாள் வரை யாருக்கும் அது என்ன மரம் என்று தெரியாததாலும், பெயர் சொல்ல முடியாததாலும் பெயரில்லா மரம்! தேனாழி தீர்த்தக் கரையிலுள்ள புளிய மரம், உறங்காப் புளி எனும் பெயருடன், மற்றொரு தல மரமாக விவரிக்கப்படுகிறது.
அப்படியே பைரவர் கோயிலை அடைகிறோம். தெற்கு நோக்கிய பைரவர் சந்நிதி; தனிக் கோயில் என்றே சொல்லலாம். இந்தச் சந்நிதியின் முன் மண்டபப் பகுதியில் இருந்து அப்படியே பைரவர் கோயிலைச் சுற்றி வலம் வரமுடியும்.
முன்மண்டபத்தில், ஆயுதங்கள் மயம்; கத்தியும் வாளும்சூலமும் நட்டு வைக்கப்பட்டுள்ளன. பைர வருக்கு நேர்ந்து கொண்டு காரியம் கைகூடியவுடன், இவ்வாறு அவருக்குப் பிடித்தமான ஆயுதங்களைக் கொண்டு வந்து காணிக்கை ஆக்குவது வழக்கமாம். துவார பாலகர்களை வணங்கி உள்ளே நுழைகிறோம்.
உள்ளே பெரிய மண்டபம். இங்கே, இடப் பக்கத்தில், கிழக்குப் பார்த்த விசாலாட்சி சந்நிதியும் அடுத்ததாக விஸ்வநாதர் சந்நிதியும். எதிரில் இருக்கும் மண்டபச் சாளரம் வழியாகப் பார்த்தால், விஸ்வநாதருக்கான கொடிமரமும் நந்தியும் தெரிகின்றன. வெளியில் ஆலமர் செல்வன் சந்நிதியின் பக்கத்தில், அப்போதே இவை கண்ணில் பட்டன. அப்போது சரியாகப் புரிய வில்லை; இப்போது தெளிவாகத் தெரிகிறது.
இந்த மண்டபத்தின் வலப் பக்கத்தில் (பைரவ) உற்சவ மூர்த்தம். அர்த்தமண்டபம் தாண்டி, உள்ளே கருவறையில்... சுமார் ஐந்தடி உயரத்தில், தெற்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன், நிர்வாண நிலையில், வேண்டியவர்க்கு வேண்டியதை அருளும் வள்ளலாகத் திகழ்கிறார் ஸ்ரீபைரவர். இவர் வடுக பைரவர். அப்படியென்றால்? 'வடு' என்ப தற்கு, 'இளமை' என்று பொருள். வடுகன் என்றால் வாலிபன். பரம்பொருள் எப்போதும் இளமையானவர் என்பதைக் குறிக்கும் விதமாக சிவனாருக்கு வடுகன் என்றும் துர்கைக்கு வடுகி என்றும் திருநாமங்கள் உண்டு. சிவனாரின் அம்சமான பைரவர், இளமையானவராகக் காட்சி தரும்போது, 'வடுக பைரவர்' ஆகிறார். பட்டாக் கத்தியும் சூலமும் இவருக்கான ஆயுதங்கள். தன்மையின் படி, இவர் சம்ஹார பைரவர் என்கிறார் குருக்கள்.
புனுகு சார்த்தியும் வடைமாலை இட்டும் வழி படுகிறார்கள். தேய்பிறை அஷ்டமி எப்போதுமே பைரவருக்குச் சிறப்பான நாள். இந்த நாளில் இவருக்கு அபிஷேகம் உண்டு. குறிப்பாக, மகாதேவ அஷ்டமி என்றும் கால பைரவ அஷ்டமி என்றும் வழங்கப்படும் கார்த்திகை மாதத் தேய்பிறை அஷ்டமி வெகு சிறப்பானது. ஜெயந்தன் விழா, சம்பகா சஷ்டி ஆகியவையும் கொண்டாடப்படுகின்றன.
'பைரவர் சற்றே உக்கிரமானவர்' எனும் எண்ணம் பலருக்கு உண்டு. சிவனாரின் அக்னியில் இருந்து வந்ததால் கறுப்பானவர்; அச்சத்தை விளைவிக்கக் கூடியவர். தவறுகள் செய்யும்போதோ ஆணவம் மிகும் போதோ அவற்றை (அவர்களையும்) அழிப்பவர். சுற்றிலும் பாம்புகளைப் போட்டுக் கொண்டு, சூலபாணியாகவும் கபாலதாரியாகவும் பைரவர் விழிக்கும் போது அச்சமாகத்தான் இருக்கும். ஆனால் அதே பைரவர்... பணிவுடனும் தூய உள்ளத்தோடும் அணுகும்போது, அருளை வாரி வாரி வழங்குவார்.
பிரான்மலை பைரவர், பிரார்த்தனா அதிபதி. வெளியூர் மற்றும் வெளிநாடு செல்பவர்கள், வேலை தேடுபவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள் இவருக்கு நேர்ந்து கொள்வார்கள். பிரார்த்தனை கைகூடிய பின்னர், இங்கு வந்து இவருக்கு விளக்குப் போடுவார்கள். தினந்தோறும் இதற்காக இங்கே கூட்டம் அலைமோதுகிறது. பைரவர் சந்நிதியை வலம் வருகிறோம். விஸ்வநாதர் சந்நிதியின் தெற்குச் சுவரில் கோஷ்ட மூர்த்தமாக தட்சிணாமூர்த்தி குடிகொண்டுள்ளார். வலம் நிறைவு செய்து, அப்படியே மலையை நோக்கியபடி நிற்கிறோம்.
ஒரு பக்கம்- மலைப்பாறைகளும் மங்கைபாகர் சந்நிதியும்... இன்னொரு பக்கம்- கீழே செல்லும் படிக் கட்டுகளும், சற்றே எட்டிப் பார்த்தால் தேனாழி தீர்த்தமும்; உறங்காப்புளியும்! சுமார் 30 ஏக்கர் பரப்ப ளவில் பரந்துகிடக்கும் பிரான்மலையில், மொத்தம் 57 தீர்த்தங்கள் இருப்பதாகக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன.
மண்ணிலும் விண்ணிலும் இடையிலும் எங்கும் நீக்கமற நிறைந்தவர் பரம்பொருள் என்பதைச் சுட்டும் விதமாக, பூமி, அந்தரம், சொர்க்கம் என்று மூன்று திருச்சந்நிதிகளைக் கொண்ட பிரான்மலையில்... மண்ணும் கல்லும் துகளும் என சர்வமும் சாட்சாத் அந்த எம்பெருமானே!

No comments:

Post a Comment