Wednesday, 9 August 2017

காளையார்கோவில்

து 1801ஆம் ஆண்டு; அக்டோபர் மாதம். மே மாதத்திலிருந்து திருப்பூவனம், திருப்பாச்சேத்தி, பார்த்திபனூர், கமுதி, பிரான்மலை, சிறுவயல், காளையார்கோவில், சிவகங்கை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற போர்களின் விளைவாக ஆங்கிலேயர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இவற்றில் பல ஊர்கள் இப்போது அவர்கள் வசம்!
மற்ற ஊர்களைப் போல் இல்லாமல், மூன்று படைப் பிரிவுகளைக் கொண்டு, ஒக்கூர் சிறுவயல் வழியாக ஒரு பிரிவும், கீரனூர் சோழபுரம் வழியாக ஒரு பிரிவும், முத்தூர் வழியாக ஒரு பிரிவும் என்று தாக்கியிருந்த காளையார்கோவிலும், அக்டோபர் 1-ஆம் தேதி ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இருந்தாலும், ஆங்கிலேயத் தளபதிகளான ஸ்பிரே மற்றும் ஆக்னீவ் ஆகியோர் உறக்க மின்றித் தவித்தனர். அவர்கள் யாரைப் பிடிக்கவேண்டுமென்று நினைத்தனரோ, அவர்கள் இன்னமும் அகப்படவில்லை. அவர் களுக்கு நெருக்கமானவர்களை யெல்லாம் பிடித்துக் கொன்றாகி விட்டது. என்ன செய்தாலும் அவர்களை யாரும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.
தவித்துக் கொண்டிருந்த தளபதிகளுக்கு உள்ளூர்க்காரர் ஒருவரே சொன்ன செய்தி, வயிற்றில் பாலை வார்த்தது. 'காளையார்கோவில் கோபுரத்தை அவர்கள் பார்த்துப் பார்த்துக் கட்டினார்கள்; அதன்மீது அவர்கள் உயிரையே வைத்திருக்கிறார்களாம்!' அப்படியானால்?
ஆங்கிலேயர்களின் சதித் திட்டம் உருவாக நீண்டநேரம் பிடிக்கவில்லை. 'ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து வெளி வந்து, மருது சகோதரர்கள் சரணடையவில்லையெனில், காளை யார்கோவில் கோபுரம் உடைக்கப்படும்!' என்று அறிவித்தனர்.
பார்த்துப் பார்த்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து கட்டிய கோயிலாயிற்றே! உள்ளத்தையும் உணர்வுகளையும் சிவபெருமானிடம் அடைக்கலப்படுத்தி, அன்னை பூமிக்காகப் போரிட்ட பெருமக்களாயிற்றே! கோபுரம் உடைக்கப்பட விடுவார்களா?
அக்டோபர் மாதம் 27ஆம் நாள்; (அப்போதைய) ராமநாதபுரம் ஜில்லா திருப்பத்தூர் கோட்டை; தென்மூலைக் கொத்தளத்தில் மருது சகோதரர்களும், சின்ன மருதுவின் மகன் சிவஞானமும், பிற நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் தூக்கிலிடப்பட்டனர்.
தமிழறிஞர் கால்டுவெல் அவர்களால் 'பாளையக்காரர்களின் மூன்றாவது போர்' என்று விவரிக்கப்பட்ட போரின் முடிவு, வெள்ளையருக்குச் சாதகமான போதிலும், மருது சகோதரர்கள் தூக்கிலிடப்படுகிற நேரத்தில் (தாங்களே கழுத்தில் கயிற்றை மாட்டிக் கொண்டதாகவும் தெரிகிறது) வேண்டுகோள் ஒன்றை வைத்தனர். என்ன தெரியுமா?
தமது உடல்களைத் திருப்பத்தூரில் புதைத் தாலும், தமது தலைகளை மட்டுமாவது காளையார்கோவில் கோபுரத்துக்கு எதிரில் புதைக்க வேண்டுமென்பதே அந்த கோரிக்கை! காளேஸ்வரரையும் சொக்கேசரையும் வணங்கிய தலைகள், மரணத்திலும் அவ்வாறே வணங்க வேண்டுமாம்!
துரத்தித் துரத்திச் சண்டையிட்ட ஆக்னீவ் மற்றும் வெல்ஷ் முதலானோர் கூட நெகிழ்ந்து போயினர். மருது பாண்டியரின் ஆசை நிறைவேற்றப்பட்டு, இப்போதும் கூட காளையார்கோவில் கோபுரத்தி லிருந்து நீளும் சாலையின் கோடியில், மருது பள்ளி படையை காணலாம்.
மேற்சொன்ன சம்பவத்தை மாற்றிச் சொல்லும் வரலாற்றுக்காரர்களும் உண்டு. 'மருது சகோதரர்கள் சரணடையவில்லை, ஆங்கிலேயர்கள் அவர்களைப் பிடித்தார்கள்' என்றும், 'காட்டிக் கொடுப்பார் காட்டிக் கொடுக்க, பிடிக்கப் பட்டார்கள்' என்றும் கூறுகிறார் கள். சின்ன மருது மூன்று நாட்கள் முன்னதாகவே தூக்கிலிடப்பட்டார் என்றும் கூறுகிறார்கள்.
எது எப்படியாயினும், காளையார்கோவிலுக்கு அவர்கள் செய்த திருப்பணியையும், கோபுரத்தைத் தூக்கிக் கட்டிய அவர்களுடைய செம்மாந்த பக்தியையும் குறைத்து எடை போடவே முடியாது. முக்குளம் மொக்கப் பழனியப்பன் உடையார் சேர்வைக்கும் ஆனந்தாயியாம் பொன்னாத் தாளுக்கும் பிறந்த பெரிய மருது, சின்ன மருது ஆகிய சகோதரர்கள், சிவகங்கை அரசர் முத்து வடுகநாதர் மற்றும் அவர்தம் அரசியார் வேலு நாச்சியார் ஆகியோருக்கு உறுதுணையாக இருந்து, ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் ஈடு பட்டனர் என்பது தமிழகம் நன்கறிந்த வரலாறு.
1780 முதல் 1801 வரை, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்த மருது பெருமக்கள், மிகச் சிறந்த ஆன்மிகவாதிகள். இதன் விளைவாக, பல்வேறு திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தனர். காளையார்கோவிலின் கோபுரத்தை, மதுரை மீனாட்சி அம்மன் ஆலய கோபுரம் போல் கட்ட வேண்டும் என்ற அவர்களின் ஆவல், செயல்முறை கண்டது.
காளையார்கோவில் கோபுரத்திலிருந்து பார்த்தால், சுமார் 66 கி.மீ. தொலைவிலுள்ள மதுரை கோபுரம் தெரியும். அசப்பில் மதுரை மீனாட்சியம்மன் கோபுரம் போன்றே இருக்கும் இந்தக் கோபுரம் மிக உயரமாக எழுப்பப்பட்டுள்ளது.
'கருமலையிலே கல்லெடுத்துக் 
காளையார் கோவில உண்டு பண்ணி
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய
மருது வாரதைப் பாருங்கடி
சாந்துபொட்டுப் பளபளக்கச்
சந்தனப் பொட்டு கமகமக்க
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய
மருது வாரதைப் பாருங்கடி'
என்பது சிவ கங்கைப் பகுதியின் உணர்ச்சிப் பாடலாக இன்றளவும் உலா வருகிறது.
காளையார்கோவில் கோபுரம் கட்டுவ தற்காக மானா மதுரையிலிருந்து செங்கற்கள் கொண்டு வந்தார்களாம். ஆயிரம் கற்களுக்கு ஒன்றாக, மானா மதுரையில் செங்கல் ஒன்றைப் போடுவார்களாம். அதைக் கொண்டு மானாமதுரை கோபுரம் கட்டிய தாகக் கர்ண பரம்பரைக் கதையன்று நிலவுகிறது. அம்மாடியோ! அப்படியானால், எவ்வளவு செங்கற்கள் கொண்டு வந்திருக்க வேண்டும்!
காளையார்கோவில்! சிவகங்கையிலிருந்து சுமார் 20 கி.மீ.; தேவகோட்டையிலிருந்து சுமார் 30 கி.மீ.; மதுரையிலிருந்து சுமார் 66 கி.மீ.! சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலின் இலக்கியப் பெயர் 'திருக்கானப்பேர்' என்பதாகும்.
புறநானூற்றுக் காலத்திலேயே, 'கானப் பேரெயில்' என்று அழைக்கப்பட்ட இந்தத் தலம், சம்பந்தராலும் சுந்தரராலும் பாடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அருணகிரிநாதரின் திருப்புகழ், வள்ளலாரின் அருட்பா, பதினோராம் திருமுறையில் கபில தேவர் மற்றும் பரணத்தேவர் பாடல்கள், திருவிளையாடல் புராணம் ஆகியவற்றிலும் இந்தத் தலம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
கிழக்கு நோக்கிய திருக்கோயில்; அருகருகே இரண்டு கோபுரங்கள் தெரிய... பெரிய மருது, சின்ன மருது போல பெரிய கோபுரம், சின்ன கோபுரம்!
ஓங்கி வானளாவி நிற்கிற ஒன்பது நிலை கோபுரமே மருது பாண்டியர் கட்டிய கோபுரம். சற்று எட்ட நின்று கோபுரத்தை அண்ணாந்து பார்க்கும்போது, ஏதோவொரு சொல்லொணா பெருமிதம், நெஞ்சில் எழுகிறது. கோபு ரம் கம்பீரமோ கம்பீரம்; வார்த்தைகளுக்குள் எட்டாத வனப்பு! காளையார்கோவில் என்ற பெயரைக் கேட்டாலே, கோபுரமும் மருதிருவர் வடிவங்களும் உள்ளத்தில் வலம் வராமல் போகாதல்லவா! பெரும் புகழுக்குக் காரணமாக இருக்கும் இந்தக் கோபுரம்தான், கோயிலுக்கு இப்போது பிரதான வாயில்.
இந்தக் கோயிலில் மூன்று சுவாமிகள். அருள்மிகு சொர்ணவல்லி உடனாய காளீஸ்வரர், அருள்மிகு சௌந்தரநாயகி உடனாய சோமேசர், அருள்மிகு மீனாட்சி உடனாய சுந்தரேஸ்வரர். இவற்றுள் பழைமை மிக்கது காளீஸ்வரர் கோயிலேயாகும். தேவாரப் பாடல் பெற்றவர் இவரேயாவார்.
மூன்று மூர்த்திகளை வைத்து, இந்தப் பகுதியில் பழமொழி ஒன்று நிலவுகிறது... காளை தேட, சோமர் அழிக்க, சொக்கர் சுகிக்க! தேவாரப் பாடல் பெற்ற காளீஸ்வரர் பெயரில் கோயில் நிலபுலன்கள்; விழாக் காலங்களில் சோமேசர் வீதியுலா; படையலும் நைவேத்தியமும் பெறுபவர் சொக்கர் (சுந்தரேஸ்வரர்).
இந்த ஊரின் மதில், ஒருகாலத்தில் பிரசித்தி பெற்றது. சங்க காலத்தில், இந்த ஊரைத் தலை நகராகக் கொண்டு ஆண்டவர் வேங்கை மார்பன் என்னும் அரசர். அப்போது பாண்டிய மன்னராக இருந்த உக்கிரப் பெரு வழுதி, இவரைப் போரில் வென்று கானப்பேரைக் கைப்பற்றினார். இதனால், 'கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி' என்னும் பட்டமும் பெற்றார். ஐயூர் மூலங்கிழாரின் புறநானூற்றுப் பாடல் இந்தப் பெருமையைப் பற்றிக் கூறும். உக்கிரப் பெருவழுதி, கடைச் சங்க காலத்தில் வாழ்ந்தவர்; சங்கப் புலவர்களை ஆதரித்தவர்; அகநானூறு நூலைத் தொகுப்பித்தவர்; ஒளவையாரால் பாடப் பெற்றவர்; இவர் சபையில்தான் திருக்குறள் அரங்கேறியதாகவும் கருத்துண்டு. கானப்பேரின் மதில் பெருமைக்குரியது என்பதாலேயே, 'கானப்பேர் எயில்' என்னும் பெயர் வந்திருக்க வேண்டும்.
'கானம்' என்பது காடு. ஒரு பெரிய அரண் போன்று, காடே இந்த ஊரைச் சுற்றிலும் அமைந்துள்ளது என்பதாலும் கானப்பேர் என்று பெயர் பெற்றிருக்கக்கூடும். மருது பாண்டியர்களோடு போரிட்ட காலத்தில்கூட, காளையார் கோவிலைச் சுற்றியிருந்த காடுகளை அழித்து ஊரை அடைவதற்கு, ஆங்கிலேயர்கள் படாத பாடு பட்டதாகத் தெரிகிறது.
'வாளினான் வேலினான் மால்வரை எடுத்த திண்
தோளினான் நெடுமுடி தொலையவே ஊன்றிய
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும் நாளுயர்வதோர் நன்மையைப் பெறுவரே'
என்று சம்பந்தப் பெருமான் பாடுகிறார். இந்தப் பெயர் எப்போது காளையார்கோவில் என்று மாறியது?
அதுவொரு வினோத சம்பவம்!
தேவார முதலிகளில் கடைக்குட்டி யாகிய சுந்தரர், சேரமான் பெருமான் எனும் பெரிய பக்தரோடு நட்பு பூண்டவரல்லவா! இருவருமாகச் சேர்ந்து பாண்டிய நாட்டுக்குச் சென்றனர். பாண்டிய மன்னர் இருவரையும் உபசரித்தார்.
அந்த நேரத்தில், பாண்டிய மன்னரின் மாப்பிள்ளையான சோழ மன்னரும் அங்கு வந்திருந்தார். சேர (சேரமான் பெருமான்), சோழ, பாண்டிய மன்னர்களான மூவேந்தரும் ஒன்றிருக்க, அவர்களோடு மதுரைப் பகுதித் தலங் களையெல்லாம் சுந்தரர் தரிசித்தார்.
பின்னர், பாண்டிய மன்னர் வசதிகளைச் செய்து விடை கொடுக்க, பாண்டி நாட்டின் பிற தலங்களை தரிசிக்க சுந்தரரும் சேரமானும் புறப்பட்டார்கள். திருச்சுழியல் திருத்தலத்தில் (அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ளதும், ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்ததுமான அதே தலம்தான்) வழிபட்டார்கள். அன்றிரவு அங்கு தங்கினார்கள்.
இரவு. நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். சுந்தரருக்குக் கனவு தோன்றியது. கனவில் ஓர் இளங்காளை (காளைப் பருவத்து இளைஞர்). திருக்கரத்தில் பொன் செண்டு (தங்கப் பந்து); திருமுடியில் சூழியம் (உச்சிக் கொண்டையும் அதன்மீது அலங்கார அணியும்). 'யாம் இருப்பது கானப்பேர்' என்று மொழிந்துவிட்டு மறைந்தார், அந்தக் காளையார். காலையில் கண் விழித் ததும், சேரமானிடத்தில் இந்தச் செய்தி யைச் சொல்ல, இருவருமாகக் கானப்பேர் அடைந்தனர்.
தொண்டர் அடித் தொழலும் சோதி 
இளம்பிறையும்
சூதன மென்முலையாள் பாகமும் ஆகிவரும்
புண்டரிகப் பரிசாம் மேனியும் வானவர்கள்
பூசலிடக் கடல் நஞ்சுண்ட கருத்தமரும்
கொண்டலெனத் திகழும் கண்டமும் எண் தோளும்
கோல நறுஞ்சடைமேல் வண்ணமும் கண்குளிரக் 
கண்டு தொழப் பெறுவதென்று கொலோ அடியேன்
கார்வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே
_ புறநீர்மைப் பண்ணில் பதிகம் பாடிய சுந்தரர், பாடல்களின் கடைசி அடிகளில், 'கானப்பேர் உறை காளையையே' என்று பாடினார். இதனால், ஊருக்கே காளை+ ஆர் (மரியாதை நிமித்தம் வந்த விகுதி)- 'காளையார் கோவில்' எனும் பெயர் ஏற்பட்டு விட்டது.
மேற்கூறிய சம்பவம் சிறிய மாற்றம் பெற்று, 'சுந்தரருக்குக் காளை மாட்டு வடிவத்தில் காட்சி கொடுத்து வழி சொன்னார் இறைவனார்!' என்று செவி வழிச் செய்தியாகவும் சில இடங்களில் வழங்கப்படுகிறது. பாதகமில்லை. கானப்பேரின் காளையார், காளை மாடு (ரிஷப வாகனம்) ஏறியவராயிற்றே... அதனால், அந்தக் கதையும் பொருந்தித்தான் வருகிறது. நமச்சிவாய நாதனுக்கு எதுதான் பொருந்தாது?
மதுரைக் கோபுரம் தெரிய நிற்கும் பெரிய கோபு ரத்தின் வழி நுழைய யத்தனிக்கிறோம். கோபுரத்தின் முன்னால், இப்போது நாம் நிற்கிற இந்த வீதிதானே, அப்போது தேரோடும் வீதியாக இருந்திருக்கும்! ஆமாம். இங்குதான் தேரோடியது. தேர் மட்டுமா ஓடியது. தமிழகத்தின் நன்றி மனப்பான்மையும், பெருந்தன்மையும், அடக்கமும், பணிவும் ஓங்கி நின்று நெகிழ்ந்தோடிய வீதியல்லவா இது. எப்படி என்கிறீர்களா?
அந்தக் கதையைப் புரிந்துகொள்ள, நாம் மீண்டும் மருதுபாண்டியரைச் சந்திக்க வேண்டும். அவர் களை மட்டுமல்ல; அவர்கள் காலத்தில் வாழ்ந்த குப்பமுத்து ஆசாரியையும் சந்திக்க வேண்டும்.
காளையார்கோவில் கோபுரம் கட்டி முடித்தவுடன், கோயிலுக்கு எழிலார்ந்த தேர் ஒன்றையும் செய்ய வேண்டும் என்று மருது சகோதரர்கள் விரும்பினர். விருப்பம் நிறைவேறி, தேரும் செய்தார்கள். அழகான தேர். தேரோட்டத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றன. தேரோட்டத் திருநாளும் வந்தது.
மக்கள் வெள்ளம் தேர் வடம் பிடிக்க குழுமி நிற்க... அரசர் பெரிய மருது முன்னால் நின்று வழிபட... ம்ஹும்.. தேர் ஓர் அங்குலம் கூட நகர வில்லை. என்னென்னவோ செய்து பார்த்தும் தேர் நகரவில்லை.

கண்களில் நீர் வழிய நின்ற பெரிய மருது, தேரை உருவாக்கிய குப்பமுத்து ஆசாரியை அழைத்தார். முதுகு வளைத்துக் கைகளைக் குவித்துப் பணிந்தார் குப்பமுத்து ஆசாரி. தனது அரச முத்திரை மோதிரத்தைக் கழற்றி ஆசாரியின் கையில் அணிவித்த பெரிய மருது, செங்கோலை அவர் கையில் கொடுத்தார். கோபுரத்தை நோக்கி வணங்கி, 'தேரை நகர்த்தப்பா காளையே' என்று மனதார உருகினார்.

முத்திரை மோதிரத்தையும் செங்கோலையும் குப்பமுத்து ஆசாரி வேண்டியபடி அவரிடமே ஒப்படைத்த பெரிய மருது, தேரை நகர்த்தும்படி இறைவனை மனதார வேண்டினார். அருகிலிருந்த சின்ன மருதுவும் அப்படியே வேண்ட....
அதுவரை அங்குலம் நகராத தேர், வெண்ணெயாக வழுக்கிக் கொண்டு ஓடியது. மக்களும் அரசரும் ஆன்மிகமும் ஒன்றாகக் கலந்த இந்தச் சம்பவத்தைப் பற்றிய பாடலும் உண்டு.
மருது வந்தாலும் தேரோடாது -- அவன்
மச்சினன் வந்தாலும் ஓடாது
தேருக்குடையவன் குப்பமுத்து ஆசாரி
தேர்வடம் தொட்டாலே தேரோடும்
இதற்கு இன்னும் கூட சில நெகிழ்ச்சியான மாறுபாடுகள் உள்ளன. தேர் நகர மறுத்தபோது, குப்பமுத்து ஆசாரியை அழைத்து வழி கேட்டதாகவும், 'தன்னை ஒரு நாள் அரசராக்கினால் தேர் ஓடும்' என்று அவர் தெரிவித்ததாகவும் தகவல் உண்டு. 'தேர் ஓட வேண்டுமானால் அரசாட்சி முக்கியமில்லை!' என்று எண்ணிய மருது உடனே அவரை அரசராக்கினார்.
தேர் ஓட ஓடத் தேர்த்தட்டில் அமர்ந்து வந்தார் குப்பமுத்து. பின்னால் நடந்தனர் மருதிருவர். மேடு பள்ளங்களில் ஆடி ஆடி வந்த தேர், சரிவு ஒன்றில் நிலைதடுமாறியது! மக்கள், கஷ்டப்பட்டுத் தேரைக் கட்டுப்படுத்த, ஆட்டத்தில் கீழே விழுந்து விட்ட குப்பமுத்து மீது தேர்ச் சக்கரம் ஓடியிருந்தது.
பெரிய மருது பதறி வந்து பார்க்க, அவரைப் பார்த்த படியே குப்பமுத்து நிரந்தரமாகக் கண்மூடினார்; குப்பமுத்துவின் தகாத ஆசைக்குக் கிடைத்த தண்டனை என்று சிலர் முணுமுணுத்தனர்; மரணப் பிடிக்குள்ளிருந்து நீண்ட குப்பமுத்துவின் கையில் ஓர் ஓலை!
எடுத்துப் பிரித்தால், 'தேரோடும் நாளில், நாட்டு அரசர் பலியாவார்!' என்ற நாடிச் செய்தி. குப்பமுத்துவின் தியாகமா, மருதுவின் பணிவா, இவர்கள் எல்லோரின் இறை பக்தியா... எது பெரியது என்பது புரியாமலே, காளையார்கோவில் பெரிய கோபுரத்தின் உள்ளே நுழைகிறோம்.
காளையார் கோயிலில், மூன்று மூலவர் சந்நிதிகள். மூன்றுமே கிழக்கு நோக்கியவை. பழைமையான காளீஸ்வரர் சந்நிதி நடுநாயகமாக விளங்க, அதற்குத் தெற்காக இருப்பது சோமேஸ்வரர் சந்நிதி; காளீஸ்வரருக்கு வடக் காக சுந்தரேஸ்வரர். அதாவது, கோயிலைப் பார்த்தபடி நாம் நின்றால், நமக்கு இடது புறமாக சோமேஸ்வரர், வலது புறமாக சுந்தரேஸ்வரர்.
சோமேஸ்வரர் சந்நிதிக்கு நேராக இருப்பதுதான் மருது பாண்டியர் கட்டிய பெரிய கோபுரம். காளீஸ்வரர் சந்நிதிக்கு நேராக இருப்பது சிறிய கோபுரம். பெரிய கோபுரமே இப்போது பிரதான வாயில்.
அண்ணாந்து பார்க்கும்போது, பெரிய கோபுரத்தின் அபரிமிதமான அழகு புலப்படுகிறது. ஒன்பது நிலைகள். அதனாலேயே, இதற்கு நவசக்தி கோபுரம் என்றும் பெயர். 155.5 அடி உயரத்தில் கண்ணைப் பறிக்கும் நேர்த்தி. கோபுரம் கட்டுவதற்குச் செங்கற்கள் கொண்டு வந்த கதையை முன்னரே கண்டோம்.
மானாமதுரையிலிருந்து காளையார்கோவில் வரை வரிசையாக ஆட்கள் நிற்க, ஒருவர் கையிலிருந்து மற்றவர் கைக்கு மாற்றி மாற்றியே செங்கற்கள் கொண்டு வரப்பட்டனவாம். கருங்கற்கள், கருமலையிலிருந்தும் திருமலையிலிருந்தும் கொண்டு வரப்பட்டன.
1781-ல் தொடங்கப்பட்ட கோபுரப் பணி 1800-ல் நிறைவடைந்தது. கோபுரத்தின்மீது ஏறிப் பார்த்தால், மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்குக் கோபுரமும், குன்றக்குடி முருகன் ஆலயமும் தெரிகின்றன.
கோபுரம் கட்டப்பட்டதைப் பற்றியும் அதற்கான முயற்சிகள் பற்றியும், செவிவழிச் செய்திகள் பலவும் நிலவுகின்றன. இவற்றில் சுவாரஸ்யமான கதையன்று கோபுரம் கட்டத் தொடங்கிப் பணிகள் தொடர்ந்த நிலையில், அதே இடத்தில் நீரூற்று ஒன்று கிளம்பியதாம். என்னென்னவோ செய்து பார்த்தும் ஊற்றுக்கண்ணை மூட முடியவில்லை. அண்ணன் வெள்ளை மருதுவின் (பெரிய மருதுதான்) வெள்ளை உள்ளம் தெரிந்த சின்ன மருது, 'ஊற்றுக் கண்ணை அடைக்க வழி சொல்பவர்க்குத் தக்க சன்மானம் தரப்படும்' என்று அறிவித்தார்.
இளைஞன் ஒருவன் வந்து நின்றான். பார்த்தால் பரம பக்கிரி. சிற்ப வல்லுநர்களுக்கு அவனைக் காணும்போதே ஏளனம். 'எங்களுக்கே தெரியவில்லை; இவனுக்கென்ன தெரியப் போகிறது?' என்ற எண்ணம் அவர்களுக்கு. சுலைமான் என்ற அந்த இஸ்லாமிய இளைஞன், தனது முன்னோர் கட்டடக் கலை வல்லுநர்கள் என்பதால், அவர்களின் திறனால் தனக்குத் தெரிந்ததைச் சொல்வதாகக் கூறினான். அவனைக் கனிவோடு அணைத்துக் கொண்ட வெள்ளை மருது, 'கோபுரம் கட்ட வேண்டும், அதற்காக எதுவும் செய்ய ஆயத்தம்' என்று பணிந்து கேட்க, சுலைமான் வழி சொன்னான்.
ஆயிரம் குடங்களில் மணலும் ஆயிரம் குடங்களில் அயிரை மீனும் கொண்டு வரச் சொன்னானாம். ஊற்றுக்கண்ணில், முதலில் நூறு குடம் மணல், பின்னர் நூறு குடம் மீன் என்று மாற்றி மாற்றிக் கொட்டினானாம். மணலை மீறிப் பொங்கிய ஊற்று நீரை, அந்த இடை வெளிகளுக்குள் பாய்ந்த அயிரை மீன்கள் அடைத்துக் கொள்ள, மூக்கின்மீது விரல் வைத்து மக்கள் வியந்தனர். தனக்குச் சன்மானம் ஏதும் வேண்டாம், மருது சகோதரர்களின் அன்பு மட்டும் போதும் என்று குறிப்பிட்ட சுலைமான், வெள்ளையர்களை எதிர்த்த போரில், தாய்மண்ணுக்காகப் போரிட்டு வீர மரணம் அடைந்தான்.
காணக் காணப் பரவசப்படுத்தும் பெரிய கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்கிறோம். நேராக இருப்பது, அருள்மிகு சோமேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலின் பிராகாரத்தையும் கருவறையையும் மருது பாண்டியர்களே சீர்படுத்திப் பெரிதாகக் கட்டினார்கள். இந்தச் சந்நிதிக்கு வடக்காகவும் கோயிலின் நடுநாயகமாகவும் இருப்பது காளீஸ் வரர் சந்நிதி. ஆதி கோயிலான இங்கிருந்தே நம்முடைய தரிசனத் தைத் தொடங்கலாமா?
காளீஸ்வரரே, தேவாரப் பாடல் பெற்றவர். இந்தச் சந்நிதியின் முன்பாக உள்ள கோபுரம், ஐந்து நிலைகளைக் கொண்டது. பேச்சு வழக்கில் சிறிய கோபுரம் என்று அழைக்கப்பட்டாலும், ஐந்து நிலைகளுடன் 'பஞ்சபூத கோபுரம்' என்னும் பெயர் கொண்டது. சுமார் 84 அடி உயரம் கொண்ட இதனை 7-ஆம் நூற்றாண்டில் மாறவர்ம சுந்தரபாண்டிய மன்னர் கட்டினார்.
எந்தக் கோபுரம் வழியாக நுழைந்தாலும், நாம்
3-ஆம் பிராகாரத்தை (வெளிப் பிராகாரம்) அடைகிறோம். நேரே காளீஸ்வரர் மூலவரை தரிசிக்கச் செல்வோம், வாருங்கள். 3-ஆம் பிராகாரத்திலிருந்து 2-ஆம் பிராகாரத்தையும் முதல் பிராகாரத்தையும் தாண்டி, மூலவர் சந்நிதி வாயிலில் உள்ள துவாரபாலகர்களை வணங்கி, கருவறை அர்த்த மண்டபத்தை அடைகிறோம் கல்வெட்டுகளில்,
'கானப்பேர் நாயனார்', 'திருக் கானப்பேருடைய காளையர் நாயனார்' முதலான பெயர்களால் வழங்கப்படுகிற காளீஸ்வரரே, இந்தத் தலத்தின் ஆதி தெய்வம்.
வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்
தோளினான் நெடுமுடி தொலையவே ஊன்றிய
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும் நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே
என்று திருஞானசமபந்தப் பெருமான் பாடித் துதிக்கிற காளீஸ்வரர்... சொர்ண காளீஸ்வரர், தட்சிண காளீஸ்வரர், மகாகாளர் என்றும் வணங்கப்படுகிறார். காளி வணங்கியதால் இவர் காளீஸ்வரர். காளி வணங்கியது எப்போது? அதுவொரு பெரிய வரலாறு!
கயிலாயத்தில் பரமனும் பார்வதியும் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஐயனின் திருக்கண்களை அம்மை பொத்தியது தெரியுமல்லவா! அங்கேதான் கதை தொடங்குகிறது. ஐயன் விழிகளைப் பொத்திய தால், உலகம் இருண்டது. இதனால் கோபம் கொண்ட சிவனார், அம்மையைக் காளியாகும்படி சாபமிட்டார்.
கரிய உருவமும், கோரைப் பற்களும், கொடூர முகமும் கொண்டு காளியாக மாறிய அம்மை, வனங்களில் வலம் வந்தார். அதே நேரம், சண்டாசுரன் எனும் அரக்கனால் துன்பப்பட்ட மனிதர்களும் தேவர்களும் முனிவர்களும், அவனிடமிருந்து காக்கும்படி, காளியை வழிபட்டனர். உடனே தமது பரிவார தேவதைகளான யக்ஷினிகளோடு சண்டாசுரனைப் போருக்கு அழைத்தார் அன்னை. அவனோடு சண்டையிடுவதற்காகக் கோட்டை அமைக்கப்பட்டது.
மாயாஜால முறையில் வல்லவனான சண்டாசுரன், தன் வடிவை மறைத்துக் கொண்டு மேகமாக மாறினான். அவன் எங்கே என்பதை அறியாத காளி, தம் கண்ணில் அவன் தெரியவேண்டும் என்பதற்காகக் கடுந்தவம் மேற்கொண்டார். அம்மையின் தவத்தைக் கலைக்க அவர் மீது அம்பு மழை பொழிந்தான் அரக்கன்.
அம்மையின் கடுமையான தவத்துக்காக உடனே தோன்றிய திருமால், தமது கருட வாகனத்தையும் சக்கரப் படையையும் கொடுத்தார்; சண்டாசுரன் மேகமாக நிற்பதையும் காட்டித் தந்தார். கருடன் மீதேறிய காளி, விந்திய மலைக்குச் செல்ல... கருடனின் வாசம் பட்டு அங்கு ஓர் அமுத கலசத் தைக் காவல் காத்துக் கொண்டிருந்த நாகம் விலகி யது. அமுத கலசத்தைப் பெற்ற காளி மீண்டும் தனது கோட்டையை அடைந்தார். பரிவார தேவதைகளைச் சுற்றி நிற்கச் சொல்லி விட்டு, சண்டாசுரன் மீது அம்பெய்ய... அவன் வீழ்கிற அதே நேரத்தில் அமுத கலசம் உடைக்கப்பட்டது. அரக்கனது கொடுமையின் விளைவுகளிலிருந்து எல்லோரையும் அமுத கலசம் காப்பாற்றியது.

கோட்டை அமைக்கப்பட்ட இடம்- தேவி கோட் டையாகி, பின்னர் (இப்போதும்) தேவகோட்டை ஆனது. அம்மை தவம் செய்த இடம்- உருவாட்டி. சண்டாசுரன் மாய உரு நீங்கி மாண்டு விழுந்த இடம்- மானகண்டான். காளிதேவி வெற்றி பெற்ற இடம்- வெற்றியூர். இதெல்லாம் சரிதான். ஆனாலும் ஒன்று நடக்கவில்லை. கயிலாய விளையாட்டுக்காக ஐயனிடம் சாபம் பெற்ற அம்மையின் கோர உருவம் நீங்கவில்லை. அம்மைக்குச் சாபம் கொடுப்பதன் மூலமாக, சண்டாசுரனுடைய கொடுமையை ஒழிப்பதற்கும் வழிவகுத்த சிவபெருமான், மெள்ளச் சிரித்தார். புரிந்து கொண்ட காளிதேவி, தமது வாளைக் குறுக்காக நிறுத்தி அதன் மீது நடந்தார். வாளின் நுனி நின்ற இடம், ருத்திர தீர்த்தக் கரை. அங்கேயே காளிதேவி தவம் செய்து, சிவலிங்கம் அமைத்து வழிபட்டார்.
காளி வழிபட்டதால் காளீஸ்வரர் ஆன பரம் பொருள், அம்மையின் அப்போதைய கருவுருவம் மாறி, தங்க நிறம் படைத்தவராகப் பிரகாசிக்க அருளினார். அவ்வாறு மாறிய அன்னையை அருள்மணமும் புரிந்தார். இதனால், அம்மைக்கு சொர்ணவல்லி (சொர்ணம்- சுவர்ணம் - தங்கம்), தங்க நாச்சியார் ஆகிய திருப்பெயர்கள் ஏற்பட்டன. சுவாமியே சொர்ணகாளீஸ்வரர் என்று வழங்கப்படுகிறார்.
தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்
தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல் நஞ்சு
உண்டதனுக்(கு) இறவா(து) என்றும் இருந்தவனை
ஊழி படைத்தவனோ(டு) ஒள்ளரியும் உணரா
அண்டனை அண்டர்தமக்கு ஆகம நூல்மொழியும்
ஆதியை மேதகுசீர் ஓதியை வானவர்தம்
கண்டனை அன்பொடுசென்று எய்துவது என்றுகொலோ
கார்வயல் சூழ்கானப்பேருறை காளையையே என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிப் பரவுகிற ஆதியை, ஐயனை, அருள்மிகு காளீஸ்வரப் பெருமானை வணங்கி நிற்கிறோம். வட்டமான ஆவுடையாருட னும், குட்டையான பாணத்தோடும் கனகம்பீரமாகக் காட்சி தருகிறார்; இவர் சுயம்பு.
காளீஸ்வரரை வணங்கி விட்டு, பிராகாரத்தை வலம் வருகிறோம். காளீஸ்வரர் கருவறைக்கும் முதல் பிராகாரத்துக்கும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் வீரபாண்டியன், மாறவர்மன் குலசேகர தேவன் முதலான பாண்டிய மன்னர்கள் ஏராள மான திருப்பணிகள் செய்துள்ளனர். வாணஅரசரான சுந்தரத் தோளுடையான் மாவலி
வாணராயர் காலத்தில், கோயில் விரிவாக்கப் பட்டுள்ளது. வேங்கைமார்பன் காலத்திலேயே கூட, கருவறை திருச்சுற்றுகள் இருந்துள்ளன.

காளீஸ்வரர் முதல் பிராகாரத்தில் வலம் வருகிறோம். முதலில் சூரியன். இங்கு வல்லப விநாயகர் எழுந்தருளியுள்ளார். பத்துத் திருக் கரங்களோடு காட்சி தருகிற இவருக்குச் சூரியப் பிள்ளையார் என்றும் திருநாமம். தென்மேற்கு மூலையான கன்னி மூலையில், விநாயகர். அருகில் நாகர்; மீண்டும் விநாயகர். அடுத்து விஸ்வ லிங்கம். வடமேற்கு மூலையில் ஸ்ரீசுப்பிரமணியர். கோஷ்டத்தில், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர். மூலவர் சந்நிதியைச் சுற்றிலும், பண்டைய காலக் கோயில் களுக்கே உரித்தான சிறிய அகழி அமைப்பு. 2-ஆம் பிராகாரத்தின் தெற்குச் சுற்றில், முதலில் சைவ நால்வர்; பின்னர் அறுபத்துமூவர்.
தென்மேற்கு மூலையில் காளீஸ்வரர் கல் திருவடிவம். பின்னர் பஞ்ச லிங்கமும் சப்த மாதரும் காட்சி கொடுக்க, வடமேற்கில் சுப்பிரமணியர். வடமேற்கு மூலையில் வருண லிங்கம். வடக்குச் சுற்றில் நடராஜ சபை. வடகிழக்குப் பகுதியில் வெள்ளி வாகனங்கள்; குறிப்பாக, வெள்ளி ரிஷபங்கள். ராமநாதபுர மன்னராக விளங்கிய கிழவன் சேதுபதியார் செய்து கொடுத்த மிகப் பெரிய வெள்ளி ரிஷபமும் உள்ளது. காளீஸ்வரர் கோபுரத்துக்கும் பிராகாரங்களுக்கும் இடைப்பட்ட பகுதி மிக மிக முக்கியமானது.

காளீஸ்வரர் கோபுரத்துக்கும் பிராகாரங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில், இந்தத் தலத்துடன் நீக்கமற நிறைந்து விட்ட பெருமக்களின் திருவுருவச் சிலைகளைக் காணலாம். உள்ளே வடக்குப்புறத்தில் வேங்கை மார்பன், சற்றே வெளிப் பகுதியின் தென்புறத்தில் மாறவர்மன், 3-ஆம் பிராகாரக் கிழக்குப் பகுதியில் கிழவன் சேதுபதி, பெரிய மருது, சின்ன மருது ஆகியோரின் படிமங்கள் நெஞ்சை அள்ளுகின்றன.
சொர்ணகாளீஸ்வரர் சந்நிதிக்கு அருகில் சொர்ணவல்லி அம்பாள் சந்நிதி. இந்த அம்பாளை, உள்ளூர்க்காரர்கள் 'கொட்டத்து நாச்சியார்' என்றழைக் கிறார்கள். அதென்ன பெயர்?
சொர்ணவல்லி அம்மன் சந்நிதி மற்றும் பிராகாரத்தை, மாறவர்மன் வீரபாண்டியன் திருப்பணி செய்துள்ளார். கல்வெட்டுகளில், அம்மன், திருக்காமகோட்டத்து ஆளுடைய நாச்சியார் என்று குறிக்கப் பெற்றுள்ளார். காமகோட்டத்து நாச்சியார், காலப் போக்கில் கொட்டத்து நாச்சியார் ஆகிவிட்டார். தங்கமயமாகப் பிரகாசித்தவர் என்பதால் தங்கவல்லி அல்லது தங்க நாச்சியார். நின்ற திருக்கோல நாயகியான இவர், அபயமும் வரமும் காட்டி அருளுகிறார். கோஷ்டத்தில் மாடப் பிறைகளில், இச்சா, கிரியா மற்றும் ஞான சக்திகள். சண்டிகேஸ்வரியும் உண்டு. அம்மன் சந்நிதி பிராகாரத்தில் பள்ளியறை. சொர்ண காளீஸ்வரரையும் சொர்ணாம்பிகையான சொர்ணவல்லியையும் வணங்கி வழிபட்டு, வெளிப் பிராகாரத்தை அடைந்து வலமாகச் செல்ல முயற்சிக்கிறோம். வெளிப் பிராகாரத்தில் வலம் வந்தால், பிற மூலவர் சந்நிதிகளுக்கும் சென்று வந்து விடலாம். அம்மன் சந்நிதிக்கு எதிரில் (அதாவது கிழக்கில்) அழகான நூற்றுக்கால் மண்டபம். உற்சவ மண்டபம் எனப்படுகிற இது, வரகுண பாண்டியனால் கட்டப்பட்டது. சுவாமி காளீஸ்வரர் சந்நிதிக்கு எதிரே யாக சாலை. சற்று தெற்காக சௌந்தர நாயகி சந்நிதியின் பின்புறத்தை (ஐந்து நிலை பஞ்சபூத கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் இங்குதான் வருவோம்; இங்குதான் கிழவன் சேதுபதி மற்றும் மருதிருவர் சிலைகள் உள்ளன) காணலாம்.
நாம் முதலில் பார்த்தது போன்று, காளீஸ்வரருக்குத் தெற்கே, சோமேஸ்வரர் சந்நிதி. இவரின் தேவியார் சௌந்தரநாயகி அம்மன். மருது சகோதரர்களால் இழைத்து இழைத்துக் கட்டப்பட்ட இந்தச் சந்நிதியின் தென்கிழக்குப் பகுதியில் கருவூலம் ஒன்று உள்ளதாம்.
மருது கோபுரமான நவசக்தி கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால், விசாலமான உள்ளிடம், அடுத்து உள் வாயில், ஒருபுறம் கணபதி; மறுபுறம் சுப்பிரமணியர்; மேலே பஞ்சமூர்த்திகள். உள் வாயிலைத் தாண்டியவுடன் இடப் பக்கத்தில், உயரமாக அமைக்கப்பட்ட மண்டபம். இதன் கிழக்குப் பகுதியில் மடப்பள்ளி. உள்
பகுதியில் ஒரு கிணறு. வற்றாத கிணறு என்பதால் 'கங்கை தீர்த்தம்' எனப்படுகிறது. அருகில், முத்துவடுக நாதர் பெரியஉடையாத் தேவரின் சிலா படிமம். உள் வாயிலின் வலப் பக்கத்தில், சௌந்தரநாயகி சந்நிதி. உள் வாயிலைக் கடந்து, 3-ஆம் பிராகாரத்தைத் தாண்டி, அடுத்த வாயிலை அடைந்தால், கொடிமரம், பலிபீடம், நந்தி. இங்கிருந்து 2-ஆம் பிராகாரத்துக்குச் செல்லலாம். இந்த வாயிலையும் கடந்தால் மூலவர் அருள்மிகு சோமேஸ்வரர் சந்நிதி. சந்திரன் வழிபட்டுத் தனது சாபத்தைப் போக்கிக் கொண்டதால், சோமேஸ்வரர், சோம நாதர் என்று அழைக்கப்படுகிறார். சதுர பீட ஆவுடையாரின் மீது உயரமான பாணம் கொண்டவர். கோஷ்டத்தில் தட்சி ணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை.
சோமேஸ்வரரின் முதலாம் பிராகாரத் தில் வலம் வருகிறோம். கிழக்குச் சுற்றில் சூரியன். தென்மேற்கு மூலையில் உற்சவ சோமேஸ்வரர். மேற்குச் சுற்றில் விநாயகர். தொடர்ந்து ஆழ்வார்கள்; ஸ்ரீதேவி - பூதேவி சமேத சுகந்தவனப் பெருமாள். பின்னர், காசி விசுவநாதர்- விசாலாட்சி, அகோர வீரபத்திரர், சப்த மாதர், கஜலட்சுமி. மேற்குச் சுற்றிலேயே, ஆஞ்சநேயர் சந்நிதி. வடமேற்கு மூலையில் வள்ளி- தெய்வானை சமேத முருகர். மயிலோடு காட்சி தரும் இவர் நான்கு திருக்கரங்கள் கொண்டவர். வடக்குச் சுற்றில் நடராஜ சபை. கிழக்கில் திரும்ப, சந்திரன்.
காளையார்கோவில் ஊரில், தெப்பக்குளத்துக்கு மேற்காக அருள்மிகு சுகந்தவனப் பெருமாளுக்குக் கோயில் உள்ளது. இதன் அடையாளமான சந்நிதியே சோமேஸ்வரர் கோயிலுக்குள் இருப்பதாகும்.
2- ஆம் பிராகாரம் செல்லும் தென்பகுதியில், சகஸ்ர லிங்க சந்நிதி. சோமேஸ்வரர் சந்நிதிக்கும் காளீஸ்வரர் சந்நிதிக்கும் இடைப்பட்ட இடத்திலும் வாகனங்கள். இந்தப் பகுதிக்கு எதிராகத்தான், உள் வாயிலின் வலப் பக்கத்தில் நாம் பார்த்த அருள்மிகு சௌந்தரநாயகி சந்நிதி. தெற்கு நோக்கிய அம்மன். மருது பாண்டியரால் கட்டப்பட்ட தெற்கு நோக்கிய சந்நிதி. அம்மன் பிராகாரத்தில் பள்ளியறை.
அருள்மிகு சோமேஸ்வரரையும் வழிபட்ட மன நிறைவில், 3-ஆம் பிராகார வலத்தைத் தொடங்குகிறோம். இதுவே நந்தவனப் பிராகாரம். விசாலமான இந்தப் பிராகாரத்தில் வலம் வரும்போதுதான், கானப்பேர் திருக்கோயிலின் முழு பரிமாணமும் புரிகிறது.
நந்தவனப் பிராகாரத்தில் வலம் வந்தால், சோமேஸ்வரர், காளீஸ்வரர் மற்றும் சொர்ணவல்லி யம்மன் சந்நிதி ஆகியவற்றை சுற்றி வந்து விடுகிறோம் உண்மையில், சொர்ண காளீஸ்வரருக்கும் சொர்ணவல்லியம்மனுக்கும் இடைப்பட்ட பகுதியில்தான், இந்தக் கோயிலின் மூன்றாவது மூலவரான சொக்கேஸ்வரர் சந்நிதி இருக்கிறது. சொர்ணவல்லியம்மனை வலம் சுற்றி, நூற்றுக்கால் மண்டபத்தைப் பார்த்தபடியே மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதியை அடைகிறோம்.
சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் ஏற்பட்ட போரில், கானப்பேர் வந்து கூடாரம் அமைத்திருந்தான் வரகுண பாண்டிய மன்னன். தினமும் மதுரை மீனாட்சியையும் சுந்தரேஸ் வரரையும் வணங்கிப் பழக்கப்பட்ட மன்னனுக்கு, இப்போது சிக்கல். மன்னன் மனமுருகி வேண்ட, கானப்பேரிலேயே காட்சி கொடுத்தார் மீனாட்சி சுந்தரேஸ்வரர். அங்கேயே கோயில் எடுப்பித்தான் வரகுண பாண்டியன். சுவாமி சந்நிதியும் அம்மன் சந்நிதியும் ஒரே மகா மண்டபத்துள் அமைந்த கோயிலான மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதியை அடைவோம், வாருங்கள்.
வாயிலில் நந்தியும் பலிபீடமும். தொடர்ந்து பெரிய மகா மண்டபம். இதுவே பிராகாரமாகவும் விரிந்து நீள்கிறது. அர்த்த மண்டபத்துடன் கூடிய அருள் மிகு சுந்தரேஸ்வரர் (சொக்கேசர்) சந்நிதி. பிராகாரத் தென்மேற்கு மூலையில் மாடத்தில் விநாயகர்; உற்சவ மூர்த்தங்கள். கோஷ்டத்தில்- தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரரும் உள்ளார். பிராகாரத்தைச் சுற்றி வரும்போது, மீனாட்சியம்மன் சந்நிதியின் பின்புறமாகச் சுற்றி வந்து விடுகிறோம். தெற்குப் பார்த்த மீனாட்சியம்மன். அருகில் பள்ளியறை. வடகிழக்குப் பகுதியில், தெற்கு நோக்கிய நடராஜ சபையும், பைரவர் சந்நிதியும் உள்ளன. ஈசானியப் பகுதியில் (வடகிழக்கு மூலை - சனி மூலை) நவக்கிரகச் சந்நிதி. இப்போதுகாளையார் கோவில் என்று அழைக்கப்படும் இந்தத் தலத்துக்குப் பற்பல திருநாமங்கள் உண்டு. தட்சிண காளிபுரம், தென்காளிநகர், சோதிவனம், காந்தாரம், மகா காளபுரம், பூலோகக் கயிலாயம், மோட்சப்பிரதம், தவசித்திகரம், மந்தார வனம், தேவதாரு வனம், அகத்திய ஷோத்திரம் ஆகியன இவற்றில்சில.
'காளை தேட, சொக்கர் சுகிக்க, சோமர் அழிக்க' என்னும் பழ மொழியை முன்னரே கண்டோம்.
இதன் பொருள் என்ன? இறைவனை நாடித் தேடி அடைவது பக்தரின் கடமையல்லவா? அதற்காக, தேடுவதற்காகக் காளீஸ்வரர். தேடிச் சரணடைந்த பக்தரின் பாவங்களை சோமேஸ்வரர் அழிக்கிறார். இறைவனை அனுபவபூர்வமாக உணர்கிற நிலையில், எங்கிருந்தாலும் உள்ளத்துள் குடிகொண்ட இறைவனை உணரும் தன்மையை சுந்தரேஸ்வரர் அருள்கிறார். இதுவே, நாம் தேட காளை; நமது பாவத்தை அழிக்க சோமர்; இறைவனின் சுகானுபவத்தில் திளைக்க சொக்கர் எனப்படுகிறது. காலப்போக்கில், சில மாற்றங்களோடும் இந்தப் பழமொழி கையாளப்படுகிறது. 'காளை சேமிக்க, சோமர் செலவழிக்க, சொக்கர் அனுபவிக்க' என்கிறார்கள். கோயில் சொத்துகள் காளை யார் பெயரில் இருப்பதால் அவர் சேமித்துக் கொடுத்தார் என்றும், சோமர் வீதியுலா வருவதால் அவர் செலவழிக்கிறார் என்றும், நைவேத்தியம் முதலானவற்றைச் சொக்கர் ஏற்பதால் அவர் அனுபவிக்கிறார் என்றும் அர்த்தப்படுத்திவிடுகிறார்கள் போலும்!
தசரத மாமன்னனுக்குப் பிள்ளைப்பேறு வாய்ப்பதற்காகப் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தப் பட்டதை ராமாயணத்தில் கேட்போம். அந்த யாகத்தை நடத்திக் கொடுத்தவர் ருஷ்யசிருங்கர் எனும் முனிவர். மான் கொம்புகளைத் தலையில் கொண்டிருந்தவர் (ருஷ்யம் -- மான்; சிருங்கம் -- கொம்பு) என்பது இந்தப் பெயருக்கான பொருள். தமிழில், கலைக்கோட்டு (கலை- மான்; கோடு -- கொம்பு) முனிவர். இவர், தேவதாரு வனமான இந்தப் பகுதியில் தவம் செய்து கொண்டிருந்தபோதுதான், வசிஷ்டரும் தசரதரும் வந்து யாகத்தை நடத்துவிக்க அழைத்துப் போனதாக, கர்ண பரம்பரைக் கதைகள் வழங்குகின்றன. 'காளையார் அமர்ந்தருளும் கோயிலை உடைய ஊரே, காளையார்கோவில் எனும் ஊர்ப் பெயராகவும் வழங்கப்படலாயிற்று' என்று ரா.பி.சேதுப் பிள்ளை அவர்களால் போற்ற ப்பட்ட இங்கு, தீர்த்தங்களும் வெகு சிறப்பு!
சோமேஸ்வரர் மடப்பள்ளிக்கு அருகில் கங்கை தீர்த்தம் இருப்பதை ஏற்கெனவே கண்டோம். காளீஸ்வரர் சந்நிதிக்குக் கிழக்கில்- சரஸ்வதி தீர்த்தம்; வடக்கில் உள்ள பொய்கையான கௌரி தீர்த்தம், சொர்ணவல்லி அம்மன் சந்நிதிக்குப் பின்னால் லட்சுமி தீர்த்தம், சோமேஸ்வரர் சந்நிதி மேற்கு வெளிப் பிராகாரத்தில் (இப்போது மூடிப் போய்விட்ட) பிரம்மபுத்திர தீர்த்தம்... இன்னும் இவற்றோடு ஊரில் உள்ள விஷ்ணு தீர்த்தம், சுகந்த தீர்த்தம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். தீர்த்தங்களில் மிக முக்கியமானது கஜ புஷ்கரணி எனப்படும் 'யானை மடு'. நீராழி மண்டபத்துடன் கூடிய, சதுர வடிவ தெப்பக் குளம், கோயிலுக்குத் தெற்குப் புறத்தில் அமைந்துள்ளது. தேவகோட்டை கட்டையன் செட்டியார் என்பவரால் வெட்டிக் கட்டப்பட்ட தெப்பக்குளத்தின் கிழக்குப் பகுதியில், எப்போதும் வற்றாத சிறிய மடு ஒன்று உண்டு. இதுவே யானை மடு. திருவேணி சங்கமம் என்றும் பெயர் பெற்ற இந்த யானை மடுவுக்கும் காளீஸ்வரர் சந்நிதியின் வடக்குப் புறத்தில் உள்ள கௌரி தீர்த்தத்துக்கும் சுரங்க வழியுண்டாம்!
இந்திரனின் பட்டத்து யானை என்பதால், செருக்குற்றுத் திரிந்தது ஐராவதம். ஆணவத்துடன் ஆட்டம் போட்டு, திருக்கயிலாயத்தையும் விட்டு வைக்காமல் துவம்சம் செய்த ஐராவதம், துர்வாசரின் கண்ணில் பட்டது. விட்டு வைப்பாரா? 'பிடி சாபம்' என்று கொடுத்து விட்டார்.
பூமியில் காட்டு யானையாகப் பிறந்த ஐராவதம், சாப விமோசனத்துக்காக அலைந்தது. மந்தார வனத்தை அடைந்த ஐராவதம் பூஜை செய்து, தந்தத்தால் பள்ளம் தோண்டி, அதில் நீர் வரப்பெற்று, காளீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தது. இதனால், சாபமும் நீங்கியது. யானையால் ஏற்படுத்தப்பட்ட மடு, யானை மடு ஆனது. ஊரில் பிற கேணிகளும் குளங்களும் வற்றினாலும், யானை மடு வற்றுவதில்லையாம்!
காளையார்கோவிலின் தீர்த்தங்களுள் முக்கியமான மற்றொன்று, ருத்ர தீர்த்தம். இது எங்கே இருக்கிறது? கோர உருவம் மாறுவதற்காகத் தமது வாளைப் போட்டு அம்மன் நடந்தாரில்லையா... வாளின்
நுனி நின்ற இடம் ருத்ர தீர்த்தம். அதன் அருகில் அம்மன் தவம் செய்த இடம், அம்மன் கோயிலாக இருக்கிறது. வாள் மேல் நடந்த அம்மன்
கோயில் என்பதே சரியான பெயர். காளீஸ்வரர் கோயிலுக்கு வடகிழக்குப் புறத்தில் சற்று தொலைவில் உள்ள அம்மன் கோயிலுக்கு, மூன்று நிலை கோபுரம் உண்டு.
ருத்திர தீர்த்தத்தின் சிறப்புக்கும் ஒரு சம்பவத்தைத் தல புராணம் விவரிக்கிறது. திருக் கயிலாயத்தில், பார்வதி தேவியார் மலர் கொய்வதற்காக நந்தவனம் சென்றார். நந்தவனக் காவலுக்காக நியமிக்கப்பட்டிருந்த ருத்திர தேவர்கள், தேவியார் வந்ததைக் கூடக் காணாமல், சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீன்களாகும்படிச் சபித்தார் அம்மை. மீன்களாகி வங்கக் கடலை அடைந்த ருத்திரர்கள் வருந்தியபடி காலம் தள்ள, வந்தது அங்கேயும் சிக்கல்!
வாலகில்லியன் எனும் அசுரன், சுறா மீன் வடிவெடுத்துச் சுற்றிக் கொண்டிருந்தான். அயிரை மீன்களாகத் திரிந்த ருத்திரர்களைக் கண்டு, அவனுக்குச் சொல்லொணா மகிழ்ச்சி. அவர்களை அழிக்கத் துணிந்தான். அயிரைகள், ருத்ரமூர்த்தியான சிவனை வேண்டின. கானப்பேர் இறைவரும், தொண்டி கடல் பகுதியை அடைந்து, திரிசூலத்தால் வாலகில்லியனை அழித்தார். அயிரைகள் சாபவிமோசனம் வேண்டின. மீனவர் ஒருவரால் விமோசனம் கிட்டும் என்று கூறி மறைந்தார் இறைவன். மீன்பிடி வலையில் சிக்கிய அயிரைகள், அரவிந்தன் என்பவரால் வாங்கப்பட்டன. பல வகை வணிகம் செய்து நட்டம் கண்டிருந்த அவர், மீன்களைக் காய வைத்தாவது விற்கலாம் என்றெண்ணி, கையில் இருந்த சொற்ப பொருளைக் கொடுத்து அந்த மீன்களை வாங்கினார்.
காய வைத்து பொதி ஏற்றி, மதுரை சந்தைக்குப் புறப்பட்டார். வழியில் கானப்பேரில், அம்மன் திருக்குளக் கரையில் இளைப்பாறி- உணவருந்தினார். தனது தலை விதியை நொந்து கிடந்த அவர் முன்னர், சிறுமி ஒருத்தி தோன்றினாள். 'பொதியில் என்ன?' என்று வினவினாள். ''காய வைத்த மீனா? அதைப் போய் யாராவது விற்பார்களா? முத்தும் மணியும் சந்தைக்குச் செல்லும் போது, இது எம்மாத்திரம்?'' என்று பலவிதமாக ஏளனம் பேசினாள். அரவிந்தன் அழுதே விட்டார்.
அவரைச் சமாதானம் செய்த சிறுமி, பொதியில் உள்ளதைக் குளத்தில் கொட்டி விட்டு, குளக்கரை கற்களை நிரப்பிக் கொண்டு போகச் சொன்னாள். அரவிந்தன் தடுமாறினார். சிறுமி என்ன சொல்கிறாள்? அதற்குள் பொதியில் அசைவுகள் தெரியவே, இன்னும் பேதலித்தார். பிரித்துப் பார்த்தால், மீன்கள் உயிருடன்! அவை துள்ளிக் குதிக்க, அவரே அவற்றைக் குளத்தில் போட... துக்கத்துடன் திரும்பிப் பார்த்தால், சிறுமியைக் காணோம்!
'ஒருவேளை, அவள் சொன்னதுபோல், கற்களைக் கட்டிப் போகலாமா?' ஏளனத்தின் ஊடே... 'மீன்கள் உயிர் கொள்ளும்' என்று அவள் சொன்னது நடந்து விட்டது. அப்படியானால், கற்களிலும் ஏதோ நன்மை கிடைக்கலாம்... சிறிதே நம்பிக்கை யுடன் கற்களைப் பொதியில் நிரப்பிச் சென்றார் அரவிந்தன். மதுரையில் சென்று பொதியை அவிழ்க்க.. அத்தனையும் தங்கக் கட்டிகள்!
குளத்தில் கொட்டப்பட்ட மீன்கள், ஆடிப் பூசத்தன்று சாப விமோசனம் கண்டு, மீண்டும் ஆயிரம் ருத்திரர்களாயினர். ருத்திரர்கள் வாழ்ந்ததால், இது ருத்திர தீர்த்தம். எந்த வித துன்பத்தையும் போக்க வல்லது. இதன் கரையில், ஓர் அரச மரம். அரவிந்தனுக்குச் சிறுமியாக அம்பிகை காட்சி கொடுத்த மரத்தடி!
காளையார் கோயிலில் திருவிழாக்கள் வெகு சிறப்பு. அம்மனுக்கு ஆடித் திருவிழா, காளீஸ்வரருக்குத் தைப் பூசத் திருவிழா, கோயில் பிரம்மோற்சவப் பெருவிழாவான வைகாசி விழா ஆகியவற்றின்போது ஊரெல்லாம் கொண்டாட்டம். வைகாசிப் பத்து நாள் பெரு விழாவில், ஏழாம் நாள் விழா 'பிள்ளைப் பேற்று' விழா. இது பொய்ப்பிள்ளை, மெய்ப்பிள்ளையாகும் விழா.
அதென்ன கதை?
வீரசேன பாண்டியன் என்னும் மன்னருக்கு, முனிவர் ஒருவர் தந்த சாபத்தால், பிள்ளைப்பேறு இல்லை! திருகோகர்ணம் சென்று சிவனை நினைந்து மன்னர் தவம் செய்தார். முனிவர் சாபத்தை மாற்ற முடியாது என்ற நிலையில், அரசரை சமாதானப்படுத்த நினைத்த இறைவனார், பொம்மை ஒன்றைச் செய்து அரண்மனையில் வைக்கும்படியும் அதையே குழந்தையாக பாவிக்கும் படியும், காலம் வருகையில் பிள்ளை தருவதாகவும் அருள் வழங்கிச் சென்றார். அவ்வாறே வீரசேனரும் செய்தார்.
இதற்கிடையில், பொதியில் கற்களைக் கட்டிக்கொண்டு மதுரை வந்து, அங்கு அவற்றைப் பிரித்தபோது தங்கம் இருந்ததைக் கண்ட அரவிந்தன், அரச முறைப்படி ஆறில் ஒரு பங்கு, அரசுக்கு வரியாகச் செலுத்தினார். வீரசேனருக்குச் செய்தி கிட்ட, 'கானப்பேர் குளத்தங்கரை சிறுமியின் அருளால், கல்லெல்லாம் பொன்னானதாமே! ஏன் நமது பொம்மைப் பிள்ளை உண்மைப் பிள்ளையாகக் கூடாது?!' என்று எண்ணினார். உடனே புறப்பட்டு வந்து, பொய்ப்பிள்ளையை ருத்திர தீர்த்தத்தில் இட, அது மெய்ப்பிள்ளையாய் மெய்யோடும் உயிரோடும் சொல்லோடும் நின்றது. பிற்காலத்தில் அந்தக் குமரனே, வீரசேனப் பொற்பாண்டியன் என்று மதுரையை ஆண்டாராம்.
இந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து, தாங்களும் பிள்ளை அருள் பெறுவதற்காகப் பலரும் வருகிறார்கள். ஏழாம் நாள் விழாவில், வாளவந்தான் கோயில் (அதுதான் வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இப்படி மாறிவிட்டது) ருத்திர தீர்த்தத்தில், விக்கிரகம் நனைக்கப்பட்டு, இந்தச் சம்பவம் நடிக்கப்படும்.
இதைக் கண்டு அம்மனிடம் பிள்ளை பாக்கியம் வேண்டிக் கொள்வதற்குக் கூட்டம் அலைமோதும். அம்மனிடம் வந்து வேண்டிக் கொண்டவர்கள், பிள்ளைப்பேறு கிட்டிய பின்னர், இந்த நாளில் மீண்டும் வந்து, பொம்மை வாங்கிக் குளத்தில் இடுவார்கள். பிள்ளை இல்லாதவர்கள், இத்தகைய பொம்மையைக் கொண்டு போய் வீட்டில்
வைத்தால் பிள்ளை கிட்டும் என்பது நம்பிக்கை.
அகத்திய முனிவர், இந்தத் தலத்தின் கங்கை தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டார். சில காலம் இங்கு தங்கியும் இருந்தார். மதுரை மாநகரில் சொக்கேசர் புரிந்த திருவிளையாடல் பெருமைகளையெல்லாம் செவி மடுத்த முனிவர்களின் மனங்களில் ஓர் அவா! என்ன தெரியுமா? மதுரையைக் காண வேண்டும்; கண் ணார தரிசிக்க வேண்டும்.
அகத்தியரையும் அவர்தம் சகதர்மிணியான லோபா முத்திரையையும் கொலு அமர்த்தி உபசரித்து, மதுரைக்கு வழிகாட்டச் சொல்கிறார்கள். அவர் சொல்படி மதுரைக்குச் செல்கிறார்கள். அவ்வாறு செல்லுங்கால், கானப்பேர் பதியை தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் விவரிக்கிறது.
சங்க காலம் முதல் இன்று வரை, ஆன்மிகப் பெருமிதத்தால் தலை நிமிர்த்தி நிற்கிறது காளையார்கோவில்.வெளியில் வந்து நின்று பார்க்கிறோம். சற்றே தொலைவில் மருது கோபுரம் பளீரென்று தெரிகிறது. திருவாடானை, காரைக்குடி மானகிரி, மதுரை ஒத்தக்கடை- ஆனை மலைச் சரிவு ஆகிய இடங்களிலிருந்து பார்த்தாலும் இந்தக் கோபுரம் தெரியுமாம்!
சுந்தரருக்கும் சேரமானுக்கும் காளையாக வந்து காட்டித் தந்த செம்பொன் செல்வர், இப்போது கோபுரமாக நின்று காட்டித் தருகிறார் போலும்!
''நிலைத்து இவ்வுலகனைத்து நீரேயாய் நின்றீர்
நிலைத்து இவ்வுலகனைத்து நீரே - நிலைத்தீரக்
கானப்பேரீர் கங்கை சூடினீர் கங்காளீர்
கானப்பேரீர் கங்கையீர் "
என்று பரணதேவர் பாடியது நெஞ்சில் நிறைய, சித்தமெல்லாம் சிவமயமாய்க் கும்பிட்டு அகல்கிறோம்.

No comments:

Post a Comment