Wednesday, 2 August 2017

ராகுவும் கேதுவும் ஒரே உருவத்தில் தரிசனம் தருகிறார்கள்!


காவிரியாற்றின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று திருப்பாம்புரம். எல்லா இடங்களிலும் ராகுவும் கேதுவும் தனித்தனி யாக இருப்பார்கள். ஆனால், திருப்பாம் புரம் கோயிலில் ராகுவும் கேதுவும் ஒரே உருவமாக இருக்கின்றனர். மேலும் இங் குள்ள சிவனை, ஆதிசேஷன் பூஜை செய்கிறார். கருவறையில் பாம்புரேசுவர், லிங்க வடிவமாக இருக்கிறார். ஆதி சேஷன் (உற்சவர்) ஈசனைத் தொழுத வண்ணம் காட்சி தருகிறார். தல புராணத் தில் இதற்கு ஒரு கதை சொல்லப்பட் டிருக்கிறது.
வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையில், ‘தங்களில் யார் வலிமை உள்ளவன்?’ என்ற போட்டி ஏற்பட்டது. வாயு பகவான் மலைகளை எல்லாம் தம் வலிமையால் புரட்டி வீச முற்பட்டார். அப்போது வாயு பகவான் மலைகளை பெயர்க்க முடி யாதபடி தம் வலிமையால் ஆதிசேஷன் தடுத்து நின்றார். இதனால் இருவருக்கும் பெரும் போர் மூண்டது. இருவருமே சம பலம் காட்டி நின்றதால் வெற்றியடைய முடியாத வாயு பகவான், அனைத்து உயிர்களுக்கும் வழங்கும் பிராண வாயுவை நிறுத்திவிட, உயிர்கள் அனைத்தும் சோர்வடைந்தன. எனவே, இந்திரன் உள்ளிட்ட தேவர்க ளின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கி நின்றார்.
தானே வெற்றி பெற்றதாக வாயு பகவான் உற்சாக மிகுதியில் மலைகளைப் புரட்டி வீசினார். அதனால் கோபமுற்ற ஈசன், வாயு பகவானையும் ஆதிசேஷனையும் பேயுருவாக மாறும்படி சபித்தார். இருவரும் தங்கள் குற்றம் உணர்ந்து வணங்கி, தங்களைப் பொறுத்தருள வேண்டினர். வாயு பகவான் வைகை நதிக்கு வடக்கிலும், மதுரைக்குக் கிழக் கிலும் பூஜை செய்து விமோசனம் பெறலாம் எனவும், ஆதிசேஷன் பாம்புரத்தில் தம்மை 12 ஆண்டுகள் பூஜித்து விமோசனம் பெறலாம் என்றும் சிவபெருமான் அருளியதன் பேரில் ஆதிசேஷன் இங்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி, வழிபட்டு விமோசனம் பெற்றதாகப் புரா ணம் கூறுகிறது.
அதே போல் ராகுவும் கேதுவும் இங்கே வந்ததற்கும் ஒரு கதை உண்டு. ஒரு முறை சிவனை விநாய கர் தொழுதபோது சிவனின் கழுத்திலுள்ள பாம்பு, விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வம் கொண்டது. அதனால் சினம் அடைந்த இறைவன், ‘நாக இனம் முழுதும் தங்கள் சக்தியை இழக்கும்!’ என்று சாபமிட்டார். இதை அறிந்த நாக இனங்கள், ராகு, கேது ஆகியோர் ஈசனைத் தொழுது தங்கள் பிழையைப் பொறுத்தருள வேண்டினர். ‘‘நீங்கள் அனைவரும் பாம்புரத்தில் உள்ள என்னை சிவ ராத்திரியில் பூஜித்து விமோசனம் பெறலாம்!’’ என்று ஈசன் அருளினார். அவ்வாறே மகா சிவராத்திரி நாளில் மூன்றாம் சாமத்தில் நாகங்களும், ராகுவும், கேதுவும் திருப்பாம்புர நாதரை வணங்கி சாப விமோசனம் பெற்றனர். இவர்கள் தவிர பாம்புரத் தில் வழிபட்டு வரம் பெற்றவர்கள்: பிரம்மன், பார் வதி, அகத்தியர், அக்னி, கங்கை, சந்திரன், சூரியன், தட்சன், சுனீதன் என்னும் வடநாட்டு மன்னன் மற்றும் கோச்செங்கட்சோழன் ஆகியோர் ஆவர்.
இந்தக் கோயிலில் மொத்தம் 15 கல்வெட்டுகள் உள்ளன. அதில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டும் ஒன்று. அவரின் காலம் கி.பி.1178 - 1218 என்று இருப்பதால், இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்தது என்று அறிய முடிகிறது. ஆலய அமைப்பு கிழக்கு நோக்கி உள் ளது. மூன்று நிலைகளையுடைய ராஜ கோபுரம். இதன் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் உள்ளது. உள்ளே கொடிமரத்து விநாயகர். அவருடன் பலிபீடமும் நந்திபெருமானும் காட்சி தருகின்றனர். இறைவனின் சந்நிதியானது மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என மூன்று பகுதிகளைக் கொண்டது. மகா மண்டபத் தின் தென்புறம் சோமாஸ்கந் தருக்குத் தனி இடம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் நடராஜர் இருக்கிறார். இறை வன் கருவறையில் பாம்பு ரேசுவர் லிங்க வடிவமாக இருக்கிறார். அவர் அருகில் ஆதிசேஷன் பூஜை செய்தபடி இருக்கிறார்.
அம்மன் சந்நிதி, இறைவ னின் சந்நிதிக்கு வட புறமாக அமைந்துள்ளது. அம்மனின் பெயர் வண்டார்குழலி. அம் மன் ஒரு கையில் ருத்திராட்ச மாலையுடன் வரத ஹஸ் தம், அபய ஹஸ்தம் விளங்கத் தோற்றம் அளிக்கிறார்.
ஈசான மூலையில் தனிச் சந்நிதியாக ராகுவும் கேதுவும் ஓர் உடலாகி சிவனை நெஞ்சில் இருத்தி இருக்கிறார்கள். ராகு காலத்தில் இந்தச் சந்நிதியில் அபிஷேகம்- அர்ச்சனை செய்வோர் தோஷங்கள் விலகி நலம் பெறுகின்றனர். ராகு- கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு எழுந்தருளி இருக்கும் சுவாமி, அம்பாள் மற்றும் ஒரே உடல் கொண்ட ராகு- கேது பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ராகு- கேதுவுக்கு நீலம் மற்றும் பல வண்ண ஆடையைச் சாற்ற வேண்டும். சங்குபுஷ்பம், மல்லிகை, நீல மந்தாரை, இலுப்பைப்பூ, செவ்வரளி, நாகலிங்கப்பூ ஆகிய மலர்கள் ராகு- கேது பகவானுக்குப் பிடித்தவை. அர்ச்சனை முடிந்த பின் உளுத்தம் பருப்புப் பொடி, மற்றும் கொள்ளுப் பொடி, அன்னம் நிவேதனம் செய்து, தானம் செய்ய வேண்டும்.
வட நாட்டு மன்னன் சுனீதனுக்கு வலிப்பு நோய் வந்து வாட்டியது. வசிஷ்ட முனிவரின் கூற்றுப்படி (மாயவரம்) மயிலாடுதுறை காவிரியில் நீராடி, பின் னர் பாம்புரம் வந்து தீர்த்தத்தில் மூழ்கிக் கரையேற அவன் நோய் நீங்கியது. அதனால் இந்தத் தலத்தில் அந்த மன்னன் ஓராண்டு தங்கி, நிருத்த மண்டபம், அம்மன் கோயில் திருப்பணி, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றைக் கட்டினான் என்று கல்வெட்டு கூறுகிறது. அதே போல் கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் செய்த வினையால், வெண்குஷ்டம் என்னும் நோய் பீடித்து உடல் வெண்ணிறமாகித் தளர்ந்தான். இவனும் வசிஷ்டர் கூறியபடி பாம்புரம் வந்து தீர்த்தத்தில் மூழ்கி, ஈசனை வணங்கி பூஜை செய்ய, அவன் நோய் நீங்கியது. அதனால் மகிழ்ந்து மூன்று ஆண் டுகள் இங்கே தங்கி உயர்ந்த கோபுரங்கள், மண்டபங்கள், படித் துறைகள், நந்தவனம், கோயில் வீதி என நற்காரியங்கள் செய்தான்.
கடந்த 2002-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21-ஆம் நாள் காலையில் ஏழரை அடி நீளமுள்ள பாம்பு, தனது சட்டையை அம்பாள் மீது மாலையாகப் போட்டு இருப்பதைக் கண்டனர். அதே போல் 26.5.2002 அன்று சிவலிங்கத்தின் மேல் சுமார் 8 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சுற்றி இருந்தது. அர்ச்சகர் உள்ளே சென்றபோது நாகம் வெளியில் வந்து விட்டது. ஆனால், அதன் தோல் (சட்டை) சுவாமியைச் சுற்றி மாலை அணிவித்தது போல் இருந்தது. இந்த நிகழ்ச்சியைப் படம் பிடித்து கோயிலில் மாட்டி இருக்கிறார்கள்.
திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பெற்ற தலம் இது. திருநாவுக்கரசரும் சுந்தரரும் இந்த ஆலயத்தின் சிறப்பைப் போற்றி தலா ஒரு பாடல் பாடியுள்ளனர். தல விருட்சம் வன்னி மரம். இந்த மரத்தின் வயது 250 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தீர்த்தம்: ஆதிசேஷ தீர்த்தம். திருவிழாக்களில் முக்கியமாக சிவராத்திரி விழாவும், ராகு- கேது விழாவும் மாசி மகமும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சிவராத்திரி இரவு மூன்றாம் சாமத்தில் ஆதிசேஷன் வீதியுலா புறப்பாடு சிறப்பு அம்சமாகும்.

கோயிலுக்குச் செல்லும் வழி: கும்பகோணம்- காரைக்கால் சாலையும், மயிலாடுதுறை- திருவாரூர் சாலையும் கொல்லுமாங்குடி என்ற இடத்தில் சந்திக்கும். அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பாம்புரம். கொல்லுமாங்குடியில் இருந்து திருப் பாம்புரத்துக்கு மினி பஸ் வசதி உண்டு. கும்பகோணத்தில் இருந்து காரைக்காலுக்குப் பயணிக்கும்போது கொல்லுமாங்குடிக்கு ஐந்து கி.மீ. முன்னதாகவே கற்கத்தி என்ற கிராமம் வரும். எனவே, கும்பகோணத்தில் இருந்து செல்பவர்கள் கொல்லுமாங்குடி செல்ல வேண்டியதில்லை. கற்கத்தியில் இருந்து தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ள திருப்பாம்புரத்துக்கு ஆட்டோவிலும் செல்லலாம்.
கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் மயிலாடுதுறையில் இருந்து 24 கி.மீ. தொலைவிலும், திருவாரூரில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந் துள்ளது திருப்பாம்புரம்.

No comments:

Post a Comment