சென்னையில் இருந்து செங்குன்றம் தாண்டி, பெரியபாளையம் செல்லும் தடத்தில், சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. தற்போது திருக்கண்டலம் என்று இந்தத் தலம் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் புனித தீர்த்தமான நந்தி தீர்த்தம் (சிவானந்த தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது), கண்களுக்குக் குளு மையான ஒன்று.
ஓர் ஆலயத்துக்குள் நுழையும் முன் அந்த ஆலயத்தின் திருக்குளம்- அதுவும் தளும்பத் தளும்பத் தண்ணீருடன் காட்சியளிப்பது மனதுக்கு இதம் தருவதாகும். இந்தத் திருக்கள்ளில் ஆலயத் திருக்குளமும் அப்படித்தான்! படிகளைத் தொட்டு அலை புரளும் தெள்ளிய தண்ணீர். பாசிகள் படியாத, சொரசொரப்பான ஒரு வகைக் கல்லால் ஆன படிக்கட்டுகள். இப்படி விரிந்து பரந்த இந்த ஆலயத் திருக்குளத்தின் குளுமையான சூழல் நம் கண்களுக்கு விருந்தாகிறது. ‘இந்தத் தீர்த்தத்தில் நீராடுவது புனித கங்கையில் நீராடுவதற்கு நிகரானது!’ என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
தீர்த்த தரிசனம் முடித்து விட்டு ஐந்து நிலைகளுடன் திகழும் ராஜ கோபுரம் வழியே உள்ளே செல்கிறோம். ராஜ கோபுரம் சமீபத்திய கட்டு மானம். இது ஸ்ரீசிவானந்தேஸ்வரரின் சந்நிதிக்கு நேராக அமையவில்லை. இடப் பக்கமாகச் சற்றுத் தள்ளி இருக்கிறது.
ஆலய ஸ்தானிகரும் அர்ச்சகருமான ஆறுமுக குருக் கள், கடந்த 75 ஆண்டுகளாக இந்த ஆலயத்தில் இறைப் பணி செய்து வருகிறார். தற்போது இவருக்கு வயது 92. தள்ளாத வயதாயினும் அபிஷேக- ஆராதனைக் கென்று பொருட்கள் சேகரிப்பது, புஷ்பங்கள் வாங்கு வது என்று தனியருவராக அலைந்து திரிந்து, சுறுசுறுப்பாக இருப்பது நம்மை வியக்க வைக்கிறது! அது அந்த ஈஸ்வரனின் கிருபை என்றுதான் சொல்ல வேண்டும். அதே போல் இந்த ஊரின் தலைவரும் கோயில் டிரஸ்டிகளில் ஒருவருமான டி.கே. ராமச்சந்திர அய்யங்காரும் ஆலயப் பணிகளுக்குப் பெரும் ஒத்துழைப்பு தந்து வருகிறார். திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலம், குசஸ்தலை ஆற்றின் கரையோரம் வளமான பிரதேசத்தில் அமைந்துள்ளது.
இனி, ஆலய தரிசனம் செய்வோம். ஐந்து கலசங்கள் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றதும் கொடி மரம், பலிபீடம். அந்த அமைதியான சூழ லில், கொடி மரத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட சிறு சிறு மணிகள் காற்றில் அசைந்து கலகலவென ஓசை எழுப்புவது மிகவும் ரம்மியம்!
இதையடுத்து பிரதோஷ நந்தி. இவர், நான்கு கால் தனி மண்டபத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறார். பிரதோஷ காலத்தில் இவருக்கான பூஜைகளும் அபிஷேகங்களும் விமரிசையாக நடை பெறுகின்றன.
இதன் இடப் பக்கத் தில்- அதாவது பிராகார வலம் துவங்கும் இடத்தில் சேக்கிழார், சைவ நால்வர், சூரியன் ஆகியோருக்கு விக்கிரகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அடுத்து, கை கூப்பிய நிலையில் ஸ்ரீஆஞ்சநேயர். தொடர்ந்து, ஸ்தல விருட்சமான கள்ளில் மரம் (விருட்சத்தின் பெயர் ஏற்றே தலப் பெயரும் திருக்கள்ளில் எனப் பட்டது), விநாயகர், நாகர், மற்றும் சில அம்மன், சிம்மம், பலிபீடம் ஆகியவற்றின் சிலா (கல்) விக்கிரகங்கள். நேர்த்திக்கடன் செய்து கொண்டு அது நிறைவேறி யவர்கள் இது போன்ற சிலா விக்கிரகங்களை இங்கு வைத்துவிட்டுச் செல்வது இந்தப் பகுதியின் வழக்கமாம். இங்கே ஒரு நெல்லி மரம் காணப்படுகிறது.
பிராகார வலத்தில் அடுத்து சுந்தர விநாயகர், ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஆகியோர் தனிச் சந்நிதி கொண்டு காட்சி தருகிறார்கள். தொடர்ந்து, மூலவர் ஸ்ரீசிவானந்தேஸ்வரர் சந்நிதிக்கு அருகே- கிழக்கு நோக்கி ஸ்ரீபாலசுப்ரமண்யர் சந்நிதி அமைந்துள்ளது. நான்கு கரங்க ளுடன், நின்ற திருக்கோலத்தில் சாந்தமாகக் காட்சி அளிக்கிறார். முன் இரு கரங்களில் ஒன்று அபயமாகவும், மற்றொன்று இடுப்பிலும், பின் இரு கரங்களில் ஜப மாலை மற்றும் கமண்டலம் கொண்டு விளங்குகிறார் இந்த முருகப் பெருமான். இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீபாலசுப்ரமண்யர், அருண கிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றவர்.
தொடரும் பிராகார வலத்தில் அடுத்து நாம் அடைவது- அருள்மிகு ஆனந்தவல்லி எனும் திரு நாமம் கொண்ட அம்பாள் சந்நிதியை! பால சுப்ரமண்யர் சந்நிதிக்கு அருகில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்த அம்பாள் சந்நிதி. அருள் ததும்பும் அற்புதக் காட்சி. இந்தத் திருக்கள்ளில் திருத்தலத்தைச் சுற்றியுள்ள பல ஆலயங்களிலும் அம்பிகையின் திருநாமம், ஆனந்தவல்லி என்றே அமைந்திருப்பது சிறப்பு. அந்தத் தலங்களாவன: சோழவரம், புலியூர், பழவேற்காடு, சிறுவாபுரி, பஞ்சேஷ்டி, கும்மங்கலம், வஞ்சிவாக்கம், புது வாயில், வடமதுரை போன்றவை. ஆனால், மேற்கண்ட தலங்கள் அனைத்துக்கும் முதன்மையானவள், இந்தத் திருக்கள்ளில் ஆலயத்தில் காட்சி தரும் ஆனந்த வல்லியே என்பது குறிப்பிடத் தக்கது.
அம்பாள் சந்நிதியில் ஆலயத்தின் சில உற்சவர் விக்கிரகங்களை பாதுகாத்து வருகிறார்கள். விநாயகர், சோமாஸ்கந்தர், பிரதோஷ நாயகர் (ஒவ்வொரு பிரதோஷத்தின்போதும் புறப்பாடு உண்டு), சந்திரசேகரர் அம்பிகையுடன் அமர்ந்த கோலம், கிராம தேவதையான செல்லியம்மனின் திருக்கோலம் ஆகிய இந்த உற்சவ விக்கிரகங்கள் மிக அற்புதம். அன்னையின் திருவுருவை தரிசனம் செய்து பிராகார வலத்தை தொடர்கிறோம்.
அடுத்து நாம் தரிசிப்பது ஸ்ரீசக்தி தட்சிணாமூர்த்தியை! அமுதக் கலசம் தாங்கிய இடக் கையால் அம்பாளை அணைத்தபடி இருக்கும் இவர் சின்முத்திரை தாங்கி, சுவடி மற்றும் அட்சர மாலைகளை ஏந்திய வண்ணம் காணப்படுகிறார். இவரின் அருகே பிருகு முனிவர் நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார். பிருகு முனிவருக்கும் சக்திதட்சிணாமூர்த்திக்கும் என்ன தொடர்பு?
பிருகு முனிவரைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கும். ‘சக்தியைத் தொழாமல் சிவனை மட்டுமே யாம் தொழுவோம்!’ என்றபடி சிவ பக்தியில் திளைத்திருந்தவர். இதனால் வெகுண்டாள் சக்தி. ‘அதெப்படி அந்த முனிவர் எம்மைத் தொழாமல் உம்மை மட்டும் தொழுது வருகிறார்? நாம் இருவரும் இணைந்த கோலத்தில் இருக்கும்போது என்னையும் சேர்த்துத்தானே அவர் வணங்க முடியும்?’ என்றபடி சிவனுடன் இணைந்து ‘சிவசக்தி கோலம்’ கொண்டாள். சிவபெருமான் தனக்குள் புன்னகைத்துக் கொண்டார். வழக்கம்போல் சிவனை மட்டும் வலம் செய்ய வந்த பிருகு முனிவர், சிவ- சக்தியின் இந் தக் கோலம் கண்டு திகைத்தார். எனினும், தன் கொள்கையில் தவறாமல் வண்டு ரூபம் எடுத்து சிவ-சக்தியின் நடுவே துளைத்து, சிவனை மட்டும் வழிபட்டாராம்.
இந்த பிருகு முனிவர் பல தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்து வந்தார். அப்படி ஸ்ரீசைலம், திருக்காளத்தி, வாரணவதம் ஆகிய தலங்களைத் தரிசித்து வரும் வழியில் திருக்கள்ளில் தலத்துக்கும் வந்தார். கண் கொள்ளாக் காட்சியாக அங்கு விளங்கும் நந்தி தீர்த்தத்தில் ஆனந்தமாக நீராடினார். ஆலயத்துக்குள் சென்று ஸ்ரீசிவானந்தேஸ்வரரை ஆயிரம் கள்ளில் மலரால் பூஜித்து வழிபட்டார். பின், கடும் தவம் இயற்றினார். இவரது பக்திக்கு இரங்கிய இறைவன், அம்பிகையோடு தட்சிணாமூர்த்தி கோலத்தில் அவருக்குக் காட்சி அளித்து மகிழ்வித்தார். உபதேசமும் செய்தார்.
உபதேசம் பெற்ற பிருகு முனிவர், ‘இந்தத் திருக் கள்ளில் திருத்தலத்தில் நந்தி தீர்த்தத்தில் வியாழக் கிழமைகளில் நீராடி, கள்ளி மலர் கொண்டு குரு ஹோரையில் உம்மை (ஸ்ரீசிவானந்தேஸ்வரர்), சக்தி தட்சிணாமூர்த்தியாக (தட்சிணாமூர்த்தியுடன் சக்தி அமர்ந்த கோலத்தில்) தரிசித்து வழிபடுபவர்களுக்கு பசியும் வறுமையும் நீங்கி, செல்வமும் ஞானமும் பெருகி எண்ணிய எண்ணமெல்லாம் கைகூட வேண்டும்’ என சிவபெருமானிடம் வரமும் பெற்றார்.
அதன் பிறகு, பிருகு முனிவர் இந்தத் தலத்தில் இருந்து புறப்பட்டு வட திருமுல்லைவாயில் சென்று வழிபட்டு பேறு பெற்றதாகப் புராணம் கூறுகிறது (கள்ளில் மலர் கொண்டு இந்த பிருகு முனிவர் வழி பட்ட காரணத்தால், ஸ்ரீசிவானந்தேஸ்வரர், திருக் கள்ளில் நாதர் என்றும், திருக்கள்ளீஸ்வரர் என்றும் அழைக்கப்படுவதுண்டு).
ஸ்ரீசக்தி தட்சிணாமூர்த்திக்கான தியான ஸ்லோகம்:
தொடரும் பிராகார வலத்தில் ஸ்ரீபைரவர், நவக் கிரகம் ஆகிய விக்கிரகங்களை தரிசிக்க முடிகிறது. பிராகார வலம் முடிந்து கொடி மரம், பலி பீடம் தாண்டி ஸ்ரீசிவானந்தேஸ்வரரை தரிசிக்கச் செல்கிறோம். பிரதோஷ நந்தி தாண்டியதும் எட்டுக் கால் முக மண்டபம்; விசாலமாக இருக்கிறது. இதை அடுத்து மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை.
ஆனந்த தரிசனம் தந்து கொண்டிருக்கிறார் ஸ்ரீசிவானந்தேஸ்வரர். சிறு வடிவம். ஆவுடையாரையும் சேர்த்து நான்கடி உயரம் இருக்கும். மூர்த்தி சிறிது. கீர்த்தி பெரிது. ஈஸ்வரர் விமானம், சோழர் காலப் பாணியில் அமைந்த கஜபிருஷ்ட அமைப்பு கொண்டது. சந்நிதியை வலம் வரும்போது கோஷ்டத்தில் நடன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை போன்ற வடிவங்களை தரிசிக்கலாம். துர்க்கையின் அருகே ஸ்ரீசண்டிகேஸ்வரரின் சந்நிதி.
மூலவர் ஸ்ரீசிவானந்தேஸ்வரர் மற்றும் ஆனந்த வல்லி அம்பிகை சந்நிதிகளுக்கு இடையில் உள்ளது ஸ்ரீபாலசுப்ரமண்யர் சந்நிதி. இவை மூன்றும் ஒரே வரிசையில் கிழக்கு நோக்கி அமைந்த கோலம் அற்புதமாகவும் விசேஷமாகவும் இருக்கிறது. இந்த அமைப்பு சோமாஸ்கந்த வடிவம் எனப்படும். இத்தகு அமைப்பில் அமைந்த சந்நிதிகளை தரிசிப்பவர்களுக்கு, கற்பக விருட்சம் போன்ற யோகம் மிக்க பேறு கிடைக்கும்.
சிவபெருமானின் ஆணைப்படி தெற்குப் பகுதிக்கு வந்தார் அகத்தியர். அப்படி வரும் வழியில் பல தலங்களை தரிசித்து வரும் போது ஆரணியாற்றங் கரையில் அரியதுறை, திருப்பாலைவனம் போன்ற தலங்களை வணங்கி பஞ்சேஷ்டி என்னும் தலத்துக்கு வந்தார்.
அங்கு இறைவனை பூஜித்து ஐந்து யாகங்களைச் செய்தார் (பஞ்ச என்றால் ஐந்து; இஷ்டி என்றால் யாகம்). அன்றிரவு அகத்தியரின் கனவில் இறைவன் சோமாஸ்கந்த மூர்த்தியாகக் காட்சி அளித்து, திருக்கள்ளில் வந்து தன்னை தரிசிக்குமாறு அழைத் தார். அகத்தியரும் அகம் மகிழ்ந்து திருக்கள்ளில் திருத்தலத்துக்கு வந்தார். இங்கு ஆலயமே சோமா ஸ்கந்த வடிவில் அமைந்திருப்பது கண்டு பிரமிப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார்.
ரம்மியமான சூழ்நிலையில் அமைந்த இந்த ஆலயத் தில் ஒரு மண்டலம் தங்கி வழிபட்டார். தினமும் அதிகாலை நேரத்தில் நந்தி தீர்த்தக் குளத்தில் நீராடி, திருக்கள்ளில் பெருமானை வழிபட்டுப் பெரும் பேறு பெற்றார். பார்வதி திருக்கல்யாணக் காட்சியைக் காணத் தனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்ற அகத்தியரின் குறையை இங்கு போக்கி, அவருக்கு சிவ ஆனந்தத்தைக் கொடுத்ததால், இங்கு உறையும் ஈஸ்வரர் சிவானந்தேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தரிசனம் தந்து அகத்தியரை ஆனந்தப்படுத்திய அம்பிகை- ஆனந்தவல்லி என அழைக்கப்பட்டாள். இந்தத் தகவல்கள் அடங்கிய வரலாறு அகத்திய புராணத்தில் காணப்படுகிறது.
திருஞானசம்பந்தர் இங்கு வந்து தரிசித்தது ஒரு கதை. திருவாலங்காட்டீசனை கண்ணாரக் கண்டு பதிகம் பாடி திருப்பாசூர், திருவெண்பாக்கம் முதலான தலங்களைத் தரிசித்து அங்கிருந்து நடந்தார்.
கண்ணப்பர் வழிபட்ட காளத்திமலை செல்லும் வழியில் ஒரு நாள் அதிகாலை குசஸ்தலை ஆற்றில் நீராடினார். அதுவரை திருக்கள்ளில் தலத்தைப் பற்றி ஞானசம்பந்தர் அறிந்திருக்கவில்லை போலும். குளிப்பதற்கு முன் ஆற்றின் கரையில் பூஜைப் பெட்டி, விபூதிப் பை போன்றவற்றை வைத்தார். குளித்து முடித்த பின் வந்து பார்த்தார். அவற்றைக் காணவில்லை. ‘என்ன திருவிளையாடலோ?’ என்றெண்ணி நடந்தவர், அருகில் உள்ள கள்ளிக்காட்டில் லிங்க வடிவில் இறைவன் அமர்ந்துள்ள இடத்துக்கு வந்து சேர்ந்தார். ஆற்றின் கரையில் தொலைந்து போன பூஜைப் பொருட்கள் இங்கு இருக்கக் கண்டார். தன்னை இங்கு வரவழைத்த அந்த ஈசனின் திருவருளை வியந்து, ‘கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான் நிறைவேற்ற அடியார்கள் நெஞ்சுளானே’ என்று பாடித் துதித்தார்.
நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், அன்னாபிஷேகம், தீபத் திருவிழா, திருவாதிரை உற்சவம் உட்பட பல திருவிழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இவற்றுள் ஐப்பசி பௌர் ணமி அன்று ஸ்ரீசிவானந்தேஸ் வரருக்கு நடைபெறும் அன்னா பிஷேக உற்சவம் சிறப்பான ஒன்று. ஈஸ்வரனது சிரசில் வைத்த அன்னத்தை மட்டும் வீதி வலம் எடுத்து வந்து நந்தி தீர்த்தத்தில் கரைத்து விடுவது வழக்கம். இது கங்கையில் அன்னத்தை இடுவது போன்றது என்பது ஐதீகம்.
முனிவர்களும் மகான்களும் போற்றிப் பரவிய இந்தத் திருக்கள்ளில் ஆலயத்துக்கு நாமும் சென்று, ஸ்ரீசிவானந்தேஸ்வரரை தரிசித்து ஆனந்தவல்லியையும் உளமாரத் தொழுது வாழ்வில் ஆனந்தம் பெறுவோம்!
|
Wednesday, 2 August 2017
அகத்தியர் தரிசித்த ஆனந்த ஆலயம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment