Friday, 4 August 2017

நந்திவரம் ஸ்ரீநந்தீஸ்வரர்


நாடகமாடிட நந்திகேச்சுர மாகாளேச்சுர நாகேச்சுர நாகளேச்சுர நன்கான கோடீச்சுரங் கொண்டீச்சுரந்திண்டீச் சுரங் குக்குடேச்சுரமக் கீச்சுரங் கூறுங்கால் ஆடகேச்சுர மகத்தீச்சுர மயனீச்சுர மத்தீச்சுரஞ்சித்தீஞ்சுர மந்தண் கானல் ஈடுதிரையிராமேச்சுரமென்றென்றேத்திறைவனுறை சுரம் பலவுமியம்பு வோமே.
_ அடைவுத் திருத்தாண்டகம் (திருநாவுக்கரசர்)
‘சை வ சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் பெருமான் இதில் ‘நந்திகேச்சுர’ என்று பாடியது எங்களது ஊர் நந்தீஸ்வரரைப் பற்றித்தான்’ என்று பெருமைப்படுகிறார்கள் சென்னைக்கு அருகே உள்ள கூடுவாஞ்சேரி ஆன்மிக அன்பர்கள். ஆனால், இதில் குறிப்பிடப்பட்ட ‘நந்திகேச்சுர’ என்ற பிரயோகம் மைசூருக்கு அருகில் உள்ள நந்திமலை இறைவனைக் குறிக்கும் என்பவர்களும் உண்டு. எது எப்படி இருந்தாலும், ஒரு நல்ல விஷயத்துக்காக இரண்டு தரப்பினர் உரிமை கொண்டாடுவதில் தப்பில்லை. கொண்டாடி விட்டுத்தான் போகட்டுமே... ஸ்ரீநந்திகேஸ்வரரின் பெருமைதானே ஓங்குகிறது... அவரது வழிபாடுதானே மேம்படுகிறது?
நாமும், நமது வாழ்வைச் செழிப்பாக்கி வளம் பெற, அந்த நந்திகேஸ்வரரை வணங்கி அவர் அருள் பெற கூடுவாஞ்சேரி பயணப்படுவோம், வாருங்கள்!
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்தை அடுத்து வண்டலூர் உயிரியல் பூங்கா கடந்ததும் வரும் ஊர் கூடுவாஞ்சேரி. திருநந்திவரம், திருநந்திகேஸ்வரம் என்றெல்லாம் முன் காலத்தில் அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, தற்போது நந்திவரம் (கூடுவாஞ்சேரி) என்று வழங்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் பெயர்: ஸ்ரீநந்தீஸ்வரர். அம்பாள் திருநாமம்: ஸ்ரீசௌந்தர்ய நாயகி.
பொதுவாகவே, நந்திதேவரின் தரிசனம் நலம் பல பயக்கும். கயிலையில் ஈசனுக்குக் காவலாக இருக்கும் பூத கணங்களின் தலைவர்தான் இந்த நந்திதேவர். இவரது அனுமதி பெற்ற பிறகே இந்திரன் முதலான தேவர்கள் சிவ பெருமானை தரிசிக்க முடியும். நந்தி தேவரின் வடிவம் மாடு (மாடு என்ற சொல் செல்வத்தைக் குறிக்கும்). சிவ சிந்தனையைத் தவிர, வேறொன்றையும் அறியாதவர் நந்திதேவர்.
சிவாலயங்களில் கருவறையில் பெரு மானுக்கு முன்பாக மகா மண்டபத்தில் கால்களை மடக்கி அழகாக அமர்ந்தவாறு இவர் காட்சி தந்தாலும், கயிலாயத்தில் சிவலோக மண்டபத்தின் பிரதான வாயிலில் இயல்பான மானுட வடிவில் இவர் காணப்படுகிறார். இவருக்கு நான்கு கரங்கள் உண்டு. மான், மழு, தண்டம், பொற்பிரம்பு ஆகியவற்றை ஏந்திய அழகான திருமேனியுடன் கயிலாய மலையில் வலம் வருபவர். சிவபெருமானைப் போலவே இவரது ஜடா மகுடத்திலும் பாம்பு மற்றும் வெண்பிறை போன்றவை அழகு சேர்க்கின்றன.
நந்திதேவர் பூவுலகில் பிறந்து சிவ வழிபாடு செய்ய விரும்பினார். ஈசன் அருளால் அந்த விருப் பம் நிறைவேறிற்று. திருவையாறுக்கு அருகில் உள்ள திருமழபாடியில் அவதரித்து நித்தமும் அந்த மகே சனைத் தொழுதார். நந்திதேவரின் கதையைச் சொல் லத் தொடங்கினால், இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் (நந்திதேவரின் திருமணம் தொடர்பாக அமைந்த ‘சப்த ஸ்தான தலங்கள்’ தற்போது ‘தேவாரத் திருவுலா’வில் இடம் பெற்று வருகிறது).
சிவ ஸ்தலங்களில் நந்திதேவரின் தரிசனம் பெற்று, இவரின் அனுமதியோடுதான் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும். பிரதோஷ நேரங்களில் இவரை தரிசிக்கக் கூடும் கூட்டத்தின் அளவைக் கணக்கிடவே முடியாது. பிரதோஷ வேளையில் நந்தியெம்பெருமானுக்கு அறுகம்புல் சார்த்தி, காப்பரிசி நைவேத்தியம் செய்து, தரிசிப்பது மிகுந்த புண்ணியம் தரும். இந்தக் கலி யுகத்தில் பிரதோஷ வேளை தரிசனம் என்பது ஆன்மிக பக்தர்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பிரதோஷ காலத்தில் நந்தி யெம்பெருமானுக்கு அபிஷேகம் முடிந்த பின்னர், சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும். அதன் பின், இருவருக்கும் ஒரு சேர தீப ஆராதனை காண்பிக் கப்படும். அந்த வேளையில் மனமுருகி, நாம் செய்யும் பிராத்தனைகளுக்கு என்றுமே நற்பலன்கள் உண்டு.
நந்திதேவருக்கே இத்தனை சிறப்புகள் என்றால் ‘நந்தீஸ்வரர்’ என்கிற பெயரைத் தன்னிடம் கொண் டுள்ள அந்த ஈஸ்வரனின் மகிமைகளை என்ன என்று சொல்வது? அவன் குடி கொண்டுள்ள ஆலயத்தின் அற்புதங்களை எப்படி விவரிப்பது?
‘நந்தீஸ்வரர்’ என்கிற திருநாமம் இந்த ஆலய இறைவனுக்கு வந்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதல் காரணம்: இந்த ஆலயத்தைக் கட்டியதாகச் சொல்லப்படும் மூன்றாம் நந்திவர்ம பல்லவனை வைத்து அவனது திருநாமமே, இறைவனின் திருப்பெயரானது என் கிறார்கள். தொண்டை மண்டலத்தில் உள்ள இந்தத் திருத்தலத்துக்குத் தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளான் நந்திவர்மன். இறை வனுக்கு மட்டும் அல்லாமல் அவனது பெயரே இந்த ஊருக்கும் இருந்து வந்தது. அந்தப் பெயரே (நந்திவரம்) இன்றளவும் வழங்கப்பட்டு வருவது, அவனது பெருமையைச் சொல்லும் ஒரு விஷயம்தானே!
இரண்டாவது காரணம்: ஆதி காலத்தில் ‘நந்தி வனம்’ என்று இந்தப் பகுதி அழைக்கப்பட்டு வந்தது. தல வரலாறு, இந்தப் பெயரை ஊர்ஜிதம் செய்வ தாக அமைந்துள்ளது. தல வரலாறு சொல்லும் அந்தக் கதையைப் பார்ப்போம். தற்போது ஆலயம் அமைந்துள்ள பகுதி, பல நூறு ஆண்டுகளுக்கு முன் வனப் பிரதேசமாக விளங்கியது. புதர்கள் பெருமளவில் மண்டி, காடாக இருந்தது. செடிகளும் கொடிகளும் மரங்களும் மிகுந்திருந்த இந்த வனப் பகுதியில் ஒரு பெரிய புற்று இருந்தது. இங்கு மேய்ச்சலுக்கு வரும் ஒரு பசு, இந்தப் புற்றுக் கண் மேல் நின்று தினமும் பால் சொரிந்து விட்டுச் செல்லும். பசுவுக்குச் சொந்தக்காரர், பசுவின் மடியில் இருந்து கிடைக்கும் பாலின் அளவு தினமும் குறைவதைக் கண்டு அதிர்ந்தார்.
மேய்ச்சலுக்குப் பசுவை ஓட்டிச் செல்லும் வேலைக்காரனைச் சந்தேகப்பட்டு அவனைக் கூப்பிட்டு விசாரித்தார். ‘‘ஐயா... நான் பாலைத் திருடறவன் இல்லீங்க. மாடுங்களை மேய விட்டுட்டு நான் பாட்டுக்கும் ஓரமா வனத்துல படுத்துக்கிடுவேன். நான் குத்தம் செய்யாதவன்யா... என்னைச் சந்தேகப்படாதீங்க!’’ என்று பசுவுக்குச் சொந்தக்காரரின் காலில் விழுந்து கதறினான்.
‘வேறென்ன காரணம்? பசு வின் மடியில் பால் குறைவ தன் மர்மம் என்ன?’ என்பதை கண்டறிவதற்காக ஒரு நாள் மேய்ச்சல் பகுதிக்குச் சந்தடி இல்லாமல் சென்றார் மாட்டுக்குச் சொந்தக்காரர். மாடுகள் அனைத்தும் புற்கள் அடர்ந்த பகுதியில் தங்கள் காரியத்தில் கண்ணாக மேய்ந்து கொண்டிருந்தன. மாடுகளை மேய்க்கும் அந்த வேலைக்காரன் ஓர் ஓரமாகப் படுத்து அண்ணாந்து ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். தினமும் குறைவான பால் தரும் தனது பசுவை அந்தக் கூட்டத்தில் தேடினார். ‘ஆஆ! அதோ! அந்தப் பசு, ஏதோ ஒரு புதருக்கு அருகில் அல்லவா நிற்கிறது? மேய்ச்சலை விட்டு விட்டு அங்கே போய் என்ன செய்கிறது?’ என்று குழம்பியவர், மெள்ள நடந்து அந்த புதருக்கு அருகே சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை வரவழைத்தது.
தன் கனத்த மடியைப் புற்றின் கண் ணுக்கு நேராக இருக்கும்படி நின்ற பசு வானது, புற்றின் கண்ணில் தானாக ‘சர்சர்’ரென்று பாலைச் சொரிந்தது. பாலைச் சொரியும்போது அதன் முகத்தில் ஒரு வித பரவசம் பரவியது. தலையை உற்சாகமாக முன்னும் பின்னும் அசைத்தது. வாலைக் குழைத்துக் குழைத்து ஆட்டியது. பால் சொரிந்து முடிந்த பின் ஏதும் அறியாத மாதிரி அங்கிருந்து துள்ளிக் குதித்தோடி வந்து பசுக்களின் கூட்டத்திடையே கலந்தது.
‘அடடா... தினமும் இதுதான் நடந்து கொண் டிருக்கிறதா? பசுவை மேய்ப்பவனுக்குப் போக்குக் காட்டி விட்டு, மெள்ள நழுவிப் போய்த் தினமும் பாலைச் சுரந்து விட்டு வரும் வேலையை இந்தப் பசுவே செய்கிறதா? தேவை இல்லாமல் மாடு மேய்ப்பவன் மேல் சந்தேகப்பட்டு விட்டோமே’ என்று தெளிந்தவர், ‘தினமும் இப்படிச் சுரக்கும் பால் எங்கே போகிறது? அந்த அடர்ந்த புற்றில் என்னதான் இருக்கிறது?’ என்பதை உடனே பார்த்து விடத் துடித்தார். கோடரி எடுத்துக் கொண்டு புற்றின் அருகே போய், பலம் கொண்ட மட்டும் ஓங்கிப் பிளக்க முற்பட... அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. ‘அன்பரே... இங்கே இந்தப் புற்றில் இறைவன் குடி கொண்டுள்ளார். நெடுநாளாக இந்தப் புற்றில் வசித்து வரும் ஈசனின் பசியைத் தணிக்கவே உமது பசு பால் சுரந்து வந்தது. இங்கே ஒரு கோயில் எழுப்ப உதவி செய்!’ என்றது அந்தக் குரல்.
இறை தரிசனம் கிடைக்கப் பெற்றவன் போல் மகிழ்ந்த பசு மாட்டின் சொந்தக்காரர், புற்று இருந்த பகுதியை பக்தியுடன் வலம் வந்தார். வீழ்ந்து வணங்கினார். அப்போது அந்தப் பகுதியை ஆண்டு வந்த மூன்றாம் நந்திவர்ம பல்லவனிடம் விவரத்தைச் சொல்ல... இந்த இறைவனுக்கு அங்கே நிரந்தரமாக ஓர் ஆலயம் எழுப்பினான் நந்திவர்மன். சிவ பக்தியில் சிறந்து விளங்கியவன் இந்த மன்னன். தனது ஆட்சிக் காலத்தில் தொண்டை மண்டலத்தில் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டி, வழிபாடுகள் தொடர வகை செய்தான். வாழ்க நந்திவர்ம பல்லவனின் சிவத் தொண்டு!
கூடுவாஞ்சேரி மெயின் ரோட்டை ஒட்டி, பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஐந்து நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீநந்தீஸ்வரர் சிவாலயம். ‘‘மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூன்றிலும் பிரசித்தி பெற்றது. இங்கு உறையும் இறைவன் நந்தீஸ்வர பெருமான் என்பதால், பிரதோஷ கால தரிசனம் இங்கு விசேஷமானது. அத்தகைய நாட்களில் பெரும் திரளான கூட்டம் கூடுகிறது!’’ என்றார் ஆலய அர்ச்சகரான ராஜகணபதி குருக்கள்.
ஸ்ரீநந்தீஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட இந்த ஆலயத்தை தரிசிப்போம், வாருங்கள்! கிழக்குப் பார்த்து ஸ்ரீநந்தீஸ்வரர் காணப்படுகிறார். தெற்கு நோக்கிய ஸ்ரீசௌந்தர்ய நாயகி. கிழக்கு மற்றும் தெற்குத் திசைகளில் நுழைவாயில்கள் இருக்கின்றன. பெரும்பாலானோர் தெற்கு வாயிலையே பயன்படுத்துகின்றனர். கிழக்கு வாயிலுக்கு எதிரே நந்தி தீர்த்தம் எனப்படும் திருக்குளம், மாசுபட்டுக் காணப்படுகிறது. தூர் வார வேண்டியது அவசியம் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். ஒரு காலத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள கிராமத்தினர் அனைவரும் இந்தத் திருக்குளத்து நீரைக் குடிநீராக எடுத்துச் செல்வார்களாம். இந்த வழியே செல்வோர் இந்தத் திருக்குளத்தில் இறங்கி, தீர்த்தத்தை வணங்கி, அருந்தி விட்டுச் செல் வார்களாம்!
தெற்கு வாயில் வழியே உள்ளே செல் கிறோம். பிராகார வலம் துவங்குகிறது. ஸ்ரீநந்தீஸ்வரர் கருவறை கோஷ்ட மூர்த்தங்களை தரிசிக்கிறோம். நின்ற திருக்கோலத்தில் நர்த்தன விநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை ஆகியோர் நமக்கு அருள் புரிகிறார்கள். வலத்தின்போது முதலில் வல்லப கணபதி, வள்ளி- தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சந்நிதிகள். பிராகார முடிவில், நவக்கிரகங்கள்.
பிராகாரத்தின் ஒரு மூலையில் பின்னப்பட்ட நிலையில் மகாவிஷ்ணு விக்கிரகம் அநாதரவாகக் காணப்படுகிறது. ஆனால், பக்தர்கள் இவரை நிராகரிக்கவில்லை. இவருக்கும் விளக்கேற்றி வைத்து வழிபடுகிறார்கள். காக்கும் கடவுள் ஆயிற்றே! தவிர, இவருக்கு அருகே பெரிய நந்திதேவரின் விக்கிரகம். இவர்தான் முன் காலத்தில் பிரதோஷ நந்தியாக விளங்கினாராம். சிறு சேதம் ஏற்பட்டதால், புதிய நந்திதேவர் கனஜோராக வந்து நான்கு கால் மண்டபத்தில் அமர்ந்து கொள்ள, பழையவர் இங்கே ஓய்வெடுக்கிறார். தல மரம் வில்வம். தவிர, நூறு வருடங்களையும் கடந்த நாகலிங்க மரம் ஒன்றும் பிரமாண்டமாகக் காணப்படுகிறது.
ஸ்ரீநந்தீஸ்வரரை தரிசிக்கச் செல்லும் முன் பிரதோஷ நந்திதேவர், நான்கு கால் மண்டபத்தில் காட்சி தருகிறார். அழகான முகம். சிறு வடிவம். இதைத் தாண்டிப் பெரிதாக ஒரு மண்டபம். சிற்பங்கள் நிறைந்த தூண்கள். இங்கே தூண்களில் துவாரபாலகர்கள் காட்சி தருவது சிறப்பு. ஈசனின் அர்த்த மண்ட பத்துக்கு முன் வெளியே வலம் புரி விநாயகர், ஷண்முகர். இந்த வலம்புரி விநாயகர், சிறந்த வரப்ரசாதி. நமக்கு நேராக ஸ்ரீநந்தீஸ்வரர். பலிபீடம். பால நந்தி தாண்டி, பெரிய லிங்கத் திருமேனி. சுயம்பு வடிவம். நந்திதேவர் வழிபடும் நந்தீஸ்வர லிங்கம். நலம் பல வேண்டி அவனைத் தொழுகிறோம். ஆரத்தியில் அவன் ஆசி பெறுகிறோம்.
வெளியே வந்தால் நடராஜ சபை. இங்கு இவருக்கு விசேஷ மான ஆராதனைகள் நடக்கின்றன. சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி பௌர்ணமி, புரட்டாசி பௌர்ணமி, மார்கழி திருவாதிரை, மாசி மகம் போன்ற தினங்களில் விசேஷமான அபிஷேகங்கள் இவருக்கு உண்டு. இடப் பக்கம் தெற்குப் பார்த்தவாறு சௌந்தர்ய நாயகி. தமிழில் அழகொளிர்நாயகி, அழகுடைநாயகி. பெயருக்கேற்றாற் போல் அழகான வடிவம். அன்னையின் ஆசி பெற்று அவளை வலம் வந்தால் பைரவர், வீரபத்திரர், சூரிய பகவான் போன்ற தெய்வங்களின் தரிசனம்.
இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகள் நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டிருந்த நேரம் அது... இந்த நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு முன் ஸ்ரீநந்தீஸ்வரர் ஆலய விமானத்தில் இடி விழுந்ததாம். தனக்கான திருப்பணிகளைத் துவங்கத்தான் அந்த நந்தீஸ்வரர் தன் மேல் இடியை வாங்கிக் கொண்டாரோ என்னவோ? அதன் பின் ஆலயத்துக்கு முறையான திருப்பணி வேலைகள் துவங்கப்பட்டு 91-ஆம் ஆண்டு பாலாலயம் அமைக்கப்பட்டது. 4.6.98-ல் மகா கும்பாபிஷேகம் விமரி சையாக நடைபெற்றது. அடுத்த கட்டமாக வருகிற 2010-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடத்த ஆலயத் தரப்பினர் ஆர்வமாக இருக்கிறார்கள். அந்தத் தருணத்தில் கொடிமரம் மற்றும் கிழக்கு ராஜ கோபுரம் போன்றவற்றை நிறுவ இருக்கிறார்கள். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கண்காணிப்பில் ஆலயம் இருந்து வருகிறது.
ஆலயத்தில் விசேஷங்களுக்குக் குறைவில்லை. ஆடிப் பூரம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை மூன்றாவது சோம வாரத்தில் (திங்கட்கிழமை) ஏகாதச ருத்ராபிஷேகம், கார்த்திகை தீபம், கந்தசஷ்டி, சிவராத்திரி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் என்று ஏராளமான திருவிழாக்கள்.
ஆலயம் காலை 6 முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை ஐந்தரை முதல் எட்டரை மணி வரையிலும் திறந்திருக்கும். தினமும் இரண்டு கால பூஜை. காலை எட்டரை மணிக்குக் காலசந்தி; மாலை ஐந்தரை மணிக்கு சாயரட்சை.
வேண்டுதல் நிறைவேற்றி, விருப்பத்தை ஈடேறச் செய்யும் நந்தீஸ்வரரை தரிசித்து, புண்ணியம் பெற... புறப்படுவோம் நந்திவரத்துக்கு!
தகவல் பலகை
தலத்தின் பெயர் : நந்திவரம் (கூடுவாஞ்சேரி) அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில்.
மூலவர் : அருள்மிகு நந்தீஸ்வரர்; அருள்மிகு சௌந்தர்ய நாயகி.
அமைந்துள்ள இடம்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் தாம்பரத்தை அடுத்து சுமார்12கி.மீ. தொலைவில் பிரதான சாலையிலேயே வரும் ஊர் கூடுவாஞ்சேரி. இங்கிருந்து இடப் பக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி சுமார் ஐந்து நிமிடம் நடந்து சென்றால் கோயிலை அடையலாம்.
எப்படிச் செல்வது? : கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு வழியாகச் செல்லும் புறநகர்ப் பேருந்துகள் சில இங்கு நின்று செல்லும். பாரிமுனையில் இருந்து 18, PP 21 மற்றும் தி.நகரில் இருந்து 18 ஆகிய பேருந்துகள் கூடுவாஞ்சேரி வரை வருகின்றன,

No comments:

Post a Comment