|
ச க்தி பீடங்களில் ஒன்றான கன்யாகுமரி, திருநெல்வேலியிலிருந்து 82 கி.மீ. தூரத்திலும், நாகர்கோவிலிலிருந்து 19 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. பாரதத்தின் 108 துர்கை ஆலயங்களில் இதுவும் ஒன்று. மேற்கண்ட இரு ஊர்களிலிருந்தும் கன்யாகுமரிக்குச் செல்ல பேருந்து, ரயில் மற்றும் வாடகை கார் வசதி உண்டு. கன்யாகுமரியில் தங்குவதற்கு விடுதிகள் உள்ளன. விமானம் மூலம் திருவனந்தபுரம் அல்லது மதுரை வந்து அங்கிருந்தும் இந்தத் தலத்தை அடையலாம்.
 ‘மகிமை மிக்க தீர்த்தக் கட்டம்’ என்று புராதனமான கன்யாகுமரியை வால்மீகி ராமாயணம் மற்றும் வியாச பாரதம் சிறப்பிக்கிறது.
 ராமபிரான் இலங்கை கிளம்புமுன், கன்யாகுமரி வந்து அன்னை பகவதியை வணங்கியதாக ‘சேது புராணம்’ குறிப் பிடுகிறது. எனவே, இது ஆதிசேது என்றும் அழைக்கப்படுகிறது.
 குருக்ஷேத்திர யுத்தத்தில் கலந்து கொள்ள விரும்பாமல் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட ஸ்ரீபலராமர் கன்யாகுமரிக் கும் வந்ததாக பாரதம் கூறுகிறது.
 பாண்டவர்களுள் ஒருவரான அர்ஜு னனும் குமரி அம்மனை தரிசித்ததாகக் கூறப்படுகிறது.
 கொல்லூர்- மூகாம்பிகா, வடகரா- லோகாம்பிகை, பாலக்காடு- ஹேமாம்பிகை, கொடுங்கல்லூர்- மகா பகவதி, கன்யாகுமரி- பாலாம்பிகா ஆகிய ஐந்தும் ஸ்ரீபரசுராமரால் நிறுவப்பட்ட க்ஷேத்திரங்கள். இவை பஞ்ச பகவதி தலங்கள் எனப்படுகின்றன.
 இந்தியாவின் புண்ணிய தீர்த்தங்களில் கன்யாகுமரி சிறப்பிடம் பெற்றுள்ளதை,
இமயப் பொருப்பகத் தீராண் டுறைந்த பின் குமரித் தீர்த்த மரீ இய வேட்கையின் தரும யாத்திரையெனத் தக்கிணம் போந் துழி’...
- பெருங்கதை
கங்கையாடிலென் காவிரியாடிலென் கொங்கு தண் குமரித்துறை யாடி லென்...
- அப்பர்
வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழகம்...
- தொல்காப்பியம்
- ஆகிய பாடல் வரிகள் மூலம் உணரலாம்.
 வாரணாசியை சேர்ந்த அபஞ்சிகனின் மனைவி சாலி. இவள் கற்புநெறி வழுவி, பின்னர் குற்றத்தை உணர்ந்து, தென் குமரிக்குக் நடைபயணமாகச் சென்று தீர்த்தமாடி தனது பாவத்தைப் போக்கிக் கொண்டதாக மணி மேகலை நூல் கூறுகிறது.
 முக்கடல் சங்கமிக்கும் குமரிக் கரையில் உள்ள மண் 7 வித நிறங்களில் காணப்படுகிறது. மேலும் இங்கு நிகழும் சூரியோதயம் மற்றும் அஸ்தமனக் காட்சிகள் சிறப்பானவை. தவிர பௌர்ணமி அன்று ஒரே நேரத்தில் சூரிய அஸ்தமனம் மற்றும் சந்திரோதயத்தையும் காணலாம்.
 முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்ரியன் ஸீ ’ என்ற கிரேக்கப் புத்தகம், கன்யாகுமரியை முக்கியமான தீர்த்த தலங்களுள் ஒன்றாகக் குறிப்பிடுகிறது.
 ஜாவா தீவிலிருந்து பார்க்க இயலாத துருவ நட்சத்திரத்தை, குமரிமுனையிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரம் பயணித்து, தான் பார்த்ததாக மார்க்கோபோலோ என்ற வெனிஸ் யாத்ரீகர் தனது பயண நூலில் குறிப்பிட்டுள்ளார். அப் போது கன்யாகுமரி கொடிய விலங்குகள் வசிக்கும் வனமாக விளங்கியது என்றும் அவர் கூறியுள்ளார்.
 குமரித்துறை முதலில் பாண்டியரின் ஆதிக்கத்தில் இருந்து பின்னர், அது மாறி மாறி சோழர் மற்றும் சேர ஆதிக்கத்துக்கு உட்பட்டதாயிற்று.
 பகவதி அம்மனை மூவேந்தர்களும் போற்றியுள் ளனர். பாண்டியர்களுக்கு குமரி அன்னை குலதெய் வமாக விளங்கியுள்ளாள். சுமார் 15-ஆம் நூற்றாண்டில் கன்யாகுமரி சேர நாட்டுடன் இணைந்தது. அதனால் பாண்டிய- சோழ- சேர மன்னர்கள் பகவதி அம்மன் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். திருவாங்கூர் சமஸ்தானத்தில் இடம்பெற்றிருந்த கன்யாகுமரி மாவட்டம், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 1956-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகு கன்யாகுமரியும், மண்டைக்காடும் தமிழ்நாட்டுக் கோயிலாக ஆகிவிட்டன.
 முன்னொரு காலத்தில் பகன், முகன் என்ற அசுரர் இருவர் தேவர்களுக்குத் தொல்லை கொடுத் தனர். தேவர்கள், காசி விஸ்வநாதரிடம் சென்று முறையிட்டனர். அசுரர்களை அழிக்க காசி விஸ்வநாதர் இரண்டு பெண்களைப் படைத்தருளினார். அவர்களுள் ஒருத்தி வடக்கே (கொல்கத்தா) உள்ள காளிதேவி. மற்றொருத்தி தெற்கே கன்யாகுமரியின் பகவதியம்மன். இவர்கள் பகன் - முகனை அழித்ததுடன் பாரதத்துக்கு தீங்கு நேராமலும் காத்தருள்கின்றனர்.
 வசுதேவர்- தேவகியை சிறையில் அடைத்தான் கம்சன். அவர்களுக்குப் பிறக்கும் ஒரு குழந்தை தன்னை அழிக்கும் என்ற அசரீரியால் பயந்தான் கம்சன். எனவே, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைத் தொடர்ந்து அழித்தான். எட்டாவதாகப் பிறந்தான் கண்ணன். இந்தப் பிள்ளையைக் காப்பாற்ற வசுதேவர் விரும்பினார். எனவே, இரவோடு இரவாக கோகுலம் சென்று கண்ணனை யசோதையிடம் சேர்ப்பித்தார். அதற்கு பதிலாக அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் கிடத்தினார்.கம்சன், வழக்கம்போல் குழந்தையைக் கொல்ல வந்தான். ஆனால், அந்தக் குழந்தை அந்தரத்தில் மறைந்தது. அதுவே அன்னை சக்தி.
அவளே பகவதி என்ற பெயரில் கன்யாகுமரியில் கம்சனை காலால் உதைத்த பாவம் நீங்க, இறைவனை நோக்கித் தவம் செய்தாள். அவளின் பேரழகைக் கண்டு அவளை மணக்க விரும்பினார் சுசீந்திரம் தாணுமாலயன். தேவர்களிடம் தமது விருப்பத்தைக் கூறினார் (அப்போது தேவர்கள் வந்து கூடிய இடமே சுசீந்திரத்தில் கன்னியம்பலம் எனப்படுகிறது.) தாணுமாலயரின் விருப்பம் நிறைவேறினால் பகவதி யின் தவம் தடைபடும்; தங்களுக்குத் தொல்லை தரும் பாணாசுரனை அழிக்க முடியாது என்று வருந்தினர் தேவர்கள். அப்போது அங்கு வந்த நாரதர், திருமணத்தை தான் முடித்து வைப்பதாகக் கூறி, தாணுமாலயரிடம் இரண்டு நிபந்தனைகள் விதித்தார்.ஒன்று- கண்ணில்லாத தேங்காய், காம்பில்லாத மாங்காய், நரம்பில்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு மற்றும் இதழ் இல்லாத மலர் ஆகியவை சீதனப் பொருள்களாக வேண்டும். இரண்டாவது- உதயத்துக்கு ஒரு நாழிகை முன்பாக மணமகன் மண வறைக்கு வர வேண்டும்.
இதன்படி தாணுமாலயக் கடவுள் சீதனப் பொருள்களை முதலில் அனுப்பினார். ஐந்து மைல் தூரத்தைக் கடக்க நள்ளிரவிலேயே புறப்பட்டார். உடனே நாரதர் சேவல் உருவெடுத்து உதயத்துக்கு அடையாளமாகக் கூவினார். (நாரதர் கூவிய இடத்தில் இன்றும் சேவலின் கால் தடம் தென்படுகிறது என் கிறார்கள்). அதனால் முகூர்த்த நேரம் தவறி விட்ட தாகக் கருதிய தாணுமாலயக் கடவுள் ‘தாம் வழுக்கி விட்டோம்’ என்ற அவமானத்துடன் சுசீந்திரம் திரும்பினார். அவர் வழுக்கிய இடமே தற்போது ‘வழுக்குப் பாறை’ எனப்படுகிறது. திருமணம் தடைப்பட்டதால் கோபம் கொண்ட குமரி பகவதி தனக்கு வந்த சீதனப் பொருள்களை கடலில் வீசி எறிந்தாள். அவையே குமரிக் கரையில் ஏழு வண்ண மணலாகவும், குன்றுகளாகவும் பரவிக் கிடக்கின்றன என்கிறார்கள்.
பரமன் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதிய குமரி பகவதி ஆக்ரோஷமாக நடனமிட்டாள். அண் டங்கள் அதிர்ந்தன! அதன் பின், இனி திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்த குமரி மீண்டும் தவம் செய்யத் தொடங்கினாள். நடந்ததை அறிந்த பாணாசுரன் பகவதியைக் காண வந்தான். அவள் அழகில் மனதைப் பறிகொடுத்தான். ‘என்னை மணந்துகொள்’ என்று விண்ணப்பித்தான். அதை மறுத்து தேவி கூறிய எதையும் அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மட்டுமின்றி தன்னை மணம் புரியா விட்டால் கொன்று விடுவதாகவும் தேவியை மிரட்டி தனது உடைவாளை உருவினான். வெகுண்டெழுந்த பகவதி, அவனுடன் போரிட்டு அவன் தலையைத் துண்டித்தாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்!
 திருமணத்துக்காகக் காத்திருந்த தேவி பரமனைக் காணாததால் சமைத்த சாதம் மணலாகும்படி சபித் தாள். அதனால் இந்தக் கடற்கரையின் மணல் முழு வதும் அரிசி, நொறுங்கிய அரிசி, தவிடு ஆகிய வடி வங்களில் காணப்படுகின்றன.
 மன்னன் பரதனுக்கு எட்டுப் புதல்வர்களும், ஒரு புதல்வியும் இருந்தனர். அவன், பிள்ளைகள் ஒன்பது பேருக்கும் தனது நாட்டைப் பகிர்ந்தளித்தான். அவன் தன் மகளான குமரி என்பவளுக்குக் கொடுத்தது இந்தியாவின் தென் முனையான குமரியம்பதி. அவள் ஆட்சி செய்த இடமே இன்றைய குமரிமுனை என்பர்.
 கன்யாகுமரி பகவதியம்மன் கோயிலில் இரு பிராகாரங்கள் உள்ளன. வடக் கில் பிரதான வாயில். வெளிப் பிராகாரம் அகலமானது. இங்கு தினமும் அம்மன் உலா நடைபெறும். இதை அடுத்து துவஜஸ்தம்பமும், பலிபீடமும் உள்ளன. இந்தப் பிராகாரத்தையட்டி ஊஞ்சல் மண்டபம், உள் பிராகாரத்தில் மணி மண்டபம் மற்றும் சபா மண்டபமும் உள்ளன. மணிமண்டபத்தை ஆறு வட்டத் தூண்கள் தாங்குகின்றன.
  சபா மண்டபச் சுவரின் மேல் வரிசையில் புராண சிற்பங்களும் மண்டப மேற்கூரைப் பகுதியில் ஓவியங்களும் காணப்படுகின்றன. இந்த பிராகாரத்தின் தென்மேற்கு கோடியில் (கன்னி மூலை யில்) சூரிய பகவான் சிலையும் இந்திர விநாயகர் சந்நிதியும் உள்ளது.
 2-ஆம் பிராகாரத்தில் பாதாள கங்கை என்ற கிணறு உள்ளது. பூஜை மற்றும் அபிஷேகத்துக்கு சுரங்கப் பாதை வழியாக இங்கு வந்து பூசாரி தண்ணீர் கொண்டு வருவார். விழாக் காலத்தில் ஸ்ரீசக்கரத் தீர்த்தத்தின் அருகிலுள்ள பால் கிணற்றிலிருந்து வெள்ளிக் குடங்களில் நீரெடுத்து, யானை மேல் ஏற்றி பூஜைக்கு எடுத்துச் செல்வார்கள்.
 2-ஆம் பிராகாரத்தில் உள்ள கோட்டையம்மன் விக்கிரகம், மதுரை ராணி மங்கம்மா தனது அரண்மனையில் வைத்து பூஜித்தது என்பது செவி வழிச் செய்தி.
 குமரி பகவதிக்கு தோழிகள் இருவர் உள்ளனர். அவர்களில் ஒருவர் கோயிலின் வடக்கில் தியாக சுந்தரியாகவும், மற்றவர் வடமேற்கில் பாலசுந்தரியாகவும் தரிசனம் தருகிறார்கள்.
 பகவதியின் காவல் தெய்வம் பைரவர். சக்தி பீடங்களில் முதலில் பைரவரை வணங்க வேண்டும். இவரை தரிசித்த பிறகே அன்னையை தரிசிப்பர்.
 பகவதியம்மனின் வலக் கரத்தில் ருத்திராட்ச மாலையும், இடக் கரத்தை தொடை மீது வைத்தும் நின்றவாறு தவக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறாள். தலைக் கிரீடத்தில் பிறைச் சந்திரனும், மூக்கில் வைர மூக்குத்தியும் ஜொலிக்கின்றன.
 குமரி பகவதிக்கு கன்னி தெய்வம், அபர்ணா, கன்னிகா பரமேஸ்வரி, பகவதி அம்மன் என்ற பெயர் களும் உண்டு. பண்டைய காலத்தில் இவளை சங்கரி, கௌரி, ஆர்யா, சாமரி, குமாரி, சூலி, நீலி, செய்யாள், கொற்றவை ஆகிய பெயர்களாலும் அழைத்தனராம்.
 இங்கு வந்த அகத்தியர், உக்கிரமான துர்கையை சாந்தமான கன்னி வடிவில் தரிசிக்க விரும்பினார். அதை உணர்ந்த தேவி, கன்யாகுமரி அம்மனாக கோயில் கொண்டு அருள்கிறாள் என்பது ஐதீகம்.
 பகவதி விக்கிரகத்தின் மேல் பகுதி சொர சொரப்பாகக் காணப்படுகிறது. இதை ருத்திராட்ச விக்கிரகம் என்பர். கொடிமரம் அருகில் உள்ள கல்வெட்டு, இந்த விக்கிரகத்தை ‘ருத்திராட்ச விக்கிர கம்’ என்கிறது.
 குமரி அம்மனின் மூக்குத்தி மகிமை மிக்கது. பனை ஏறும் தொழிலாளியான வீரமார்த்தாண்டன், ஒரு முறை அபூர்வமான ரத்தினக் கல் ஒன்றைக் கண்டெடுத்தாராம். அதை அவர், திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மனிடம் தர, மன்னர் அதை மூக்குத்தியாக்கி (கி.பி. 18-ஆம் நூற்றாண்டில்) குமரி பகவதிக்கு சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.
 ஒரு முறை ஜப்பான் நாட்டைச் சார்ந்த கப்பல் ஒன்று கடலில் திசை மாறிச் சென்றது. ஆனால், பகவதியின் மூக்குத்தி ஒளியைக் கண்ணுற்ற அதன் மாலுமிகள் கப்பலை குமரிக்கரை நோக்கித் திருப்பினராம். அப்படியும் கப்பல் கட்டுப் பாட்டை இழந்து (தற்போது விவேகானந்தர் ஆலயம் உள்ள) பாறையில் மோதி உடைந்ததாகவும் தகவல் ஒன்று உண்டு. இதனால் பெரும்பாலும் மூடப்பட்டிருக்கும் கோயிலின் கிழக்கு வாயில் திருக்கதவு ஆராட்டு, திருக்கார்த்திகை, விஜயதசமி இரண்டு அமாவாசைகள் ஆகிய ஐந்து தினங்களில் மட்டுமே திறக்கப்படுகிறது.
 அம்மன் மூக்குத்தி கல் குறித்து மற்றொரு கதையும் உண்டு. வீரசூரன் என்பவனை தீண்ட வந்த நாகமொன்று, அவனை நெருங்கி நாகமணியைக் கக்கியதாம். உடனே சாணத்தால் அதை மூடினானாம் வீர சூரன். அந்த நாகமணியை அரசன் மார்த்தாண்டனிடம் ஒப்படைத்தான். மன்னர் அதை மூக்குத்தியாக்கி கன்னி பகவதிக்கு அர்ப்பணித்தாராம்.
 ஒரு முறை கடற் கொள்ளையர்கள் அம்மனின் மூக்குத்தியைத் திருடத் திட்டமிட்டனர். ஆனால், அம்மனின் சக்தியினால் கொள்ளையர்களது கப்பல் நொறுங்கியதாம். தப்பிப் பிழைத்த கொள்ளையர்கள் கோயிலுக்குள் சென்று மூக்குத்தியை எடுக்க முயன்ற போது அவர்களது பார்வை பறிபோனதாம். அந்த இடத்திலேயே தத்தளித்தனர். விடிந்ததும் கோயில் சிப்பந்திகள் அவர்களை மன்னரிடம் ஒப்படைத் தனராம். அன்று முதல் மன்னனின் கட்டளைப்படி கிழக்குக் கதவை மூடினர்; அதற்கு பதிலாக அந்தக் கதவில் அமைக்கப்பட்ட சிறிய துவாரத்தை இன்றும் காணலாம்.
 மூக்குத்தி தொடர்பான மற்றொரு தகவல்: குமரி அம்மனின் அழகான நாகமணி மூக்குத்தியை கிழக்கு வாசல் வழியாக வந்த ஒருவன் அபகரித்துச் சென்று விட்டானாம். அதன் பிறகு திருவிதாங்கூர் மன்னர், கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கிய இரண்டு வைரங்களே அன்னையின் மூக்குத்தியில் இடம் பெற்றிருக்கிறது என்கிறார்கள்.
 மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தானது படை யெடுப்பின்போது இங்குள்ள பகவதியின் கைவாளின் முனை பின்னமடைந்தது. அந்த வாளோடுதான் தேவி இப்போதும் திகழ்கிறாள்.
 பகவதியம்மன் கோயிலை யட்டிய வடக்கு வீதியில் சிறிய கோயில் ஒன்றில் காட்சியளிக்கும் பத்ரகாளிக்கு வழிபாடு நடந்த பிறகே குமரி பகவதி கோயிலின் எந்த விழாவையும் தொடங்குவார்களாம். இந்த பத்ரகாளியே சக்தி பீட நாயகி என்றும் சிலர் சொல்கிறார்கள்.
  இங்கு ஒன்பது தீர்த்தங்கள் உள்ளதாக ஐதீகம். கிழக்கே (வங்காள விரிகுடாவில்)- சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி, கன்யா மற்றும் விநாயக தீர்த்தங்கள். வடக்கே- பாபவிநாச தீர்த்தம். தெற்கே (இந்துமாக் கட லில்)- மாத்ரு, பித்ரு தீர்த்தங்கள். மேற்கே (அரபிக் கடலில்)- ஸ்தாணு தீர்த்தம். சித்திரை விஷ§, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி- தட்சிணாயண புண்ணிய காலம், ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை, நவராத்திரி, தை- உத்தராயண புண்ணிய காலம், தை அமாவாசை, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இவற்றில் நீராடி அருள் பெறுகின்றனர்.
 ஒரு காலத்தில் பகவதிக்கு மிருக பலி கொடுக்கப் பட்டதாம். தற்போது மஞ்சள் நீரில் சுண்ணாம்பு கலந்த சிவந்த நீரால் குருதி பூஜை நடத்தப்படுகிறது.
 காசி விஸ்வநாதரின் அம்சமான பகவதியை தரிசித்தால்தான் காசி யாத்திரை முழுமை அடையும் என்பது நம்பிக்கை.
 குமரி பகவதியம்மன் ஆலயத்துக்குள் ஆண்க ளுக்கு சட்டை அணிந்து செல்ல அனுமதியில்லை.
 குழந்தையில்லாத தம்பதி இங்கு வந்து பதினொரு கன்னிகைகளுக்கு பூஜை செய்து வஸ்திர தானம், அன்னதானம் ஆகியவை செய்தால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். இது கன்யா பூஜை எனப்படும்.
 குமரி பகவதியம்மன் கோயில் கேரளத்துடன் இணைந்திருந்தபோது மேற்கொள்ளப்பட்ட பூஜா விதிகளே இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. தலைமைப் பூசாரி ‘மேல் சாந்தி’ எனப்படுவார்.
தினசரி 11 கால பூஜை நடக்கும் கோயில் இது. கேரளத்தின் போற்றிகள் எனப்படும் பூசாரிகள் ஈர வேஷ்டியுடன் பூஜை நடத்துகிறார்கள்.
 குமரி பகவதியம்மன் கோயில் திருவிழாக்களுள் முக்கிய மானது வைகாசி உற்சவம். அப் போது தேவியின் விக்கிரகம் இரு வேளையிலும் திருவீதி உலா வரும். விழாவின் 9-ஆம் நாளன்று ரதோற்சவம். 10-ம் நாள் அன்ன வாகனத்தில் தரிசனம் தருகிறாள்.
வைகாசி உற்சவத்தின்போது கொடியேற்றுவதற்கான கயிறை, ‘வாவாத்துறை’ என்ற மீனவக் குப்பத்தைச் சார்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் தயாரிக்கின்றனர்.
இதற்கு ஒரு பின்னணி உண்டு. தற்போது விவேகானந்தர் பாறை அமைந்துள்ள பாறை அப்போது நிலப் பகுதியில் இருந்ததாம். ஒரு முறை அந்தப் பாறை மீது நின்றிருந்த இளம் பெண் ஒருத்தி தன்னை ஊர் எல்லையில் கொண்டு போய் விடுமாறு அந்த வழியே சென்ற கிறிஸ்தவ மீனவர்களிடம் கேட்டுக் கொண்டாளாம். அவர்கள் ‘நீ பெண்ணானதால் தொடமாட்டோம்’ என்று கூறி, பனை ஓலைக் குடுவையில் வைத்து அவளை ஊர் எல்லையில் சேர்த்தார்களாம். அந்தப் பெண், ‘இந்த ஊர் திருவிழாவுக்கு நீங்கள்தான் இனிமேல் கொடிமரக் கயிறு திரித்துத் தர வேண்டும்’ என்று கூறி மறைந்தாளாம். அதன்படி, இந்த மீனவர்களே திருவிழாவுக்குக் கொடி மரக் கயிறு தயாரித்து அளிக்கின்றனர். இதற்காக, கொடியேற்றத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே விரதம் கடைப்பிடித்து இறுதியில் மேள தாளத்துடன் ஊர்வலமாக வந்து கோயில் நிர்வாகிகளிடம் கயிற்றை அளிக்கிறார்கள்.
ஒருமுறை இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்த மன்னரின் ஆட்கள் தாங்களே கயிறு தயாரித்து கொடி ஏற்றினராம். அந்தக் கொடி பாதியில் அறுந்து விழுந்ததாம். பிறகு மீண்டும் மீனவர்கள் மூலம் கயிறு கொண்டு வரப்பட்டு கொடியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 நவராத்திரி விழாவின்போது உச்சைசிரவஸ் (தேவலோகத்துக் குதிரை) எனும் அமராவதியின் குதிரை மீது அமர்ந்து குமரி பகவதியம்மன், பாணா சுரனை அழிக்க போர்க்களம் செல்லும் வைபவத்தை ‘அம்பு காத்தல்’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்த வைபவம் கோயிலில் இருந்து சுமார் 11 கி.மீ. தூரத்தில் உள்ள மகாதானபுரம் என்ற இடத்தில் விஜயதசமி அன்று நடைபெறுகிறது.
 குமரி பகவதியம்மன், பாணாசுரனை அழித்த இடமே தற்போதுள்ள விவேகானந்தர் பாறை என்கிறார்கள். இங்கு அன்னை ஒற்றைக் காலில் நின்று தவம் செய்ததால், அவளின் ஒற்றைத் திருவடி, பாறையில் பதிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.
 1892 டிசம்பர் மாதம் திருவனந்தபுரத்திலிருந்து கன்யாகுமரிக்கு வந்த சுவாமி விவேகானந்தர் கன்யாகுமரி தேவியை வழிபட்டார். பிறகு, கடலுக்குள் சுமார் 2 கி.மீ. தொலைவில் இருந்த பாறைகள் சுவாமிஜியின் கண்களில் பட்டன. பாறைகளுள் ஒன்று பெரியது. மற்றொன்று சிறியது. பெரிய பாறையின் ஒரு பகுதியில்தான் தேவி தவம் செய்து பாதங்கள் பதிந்துள்ளதாக ஐதீகம். அந்தப் பாறை ஸ்ரீபாத பாறை எனப்படுகிறது. இதன் மீதுதான் ஆதிகாலத்தில் குமரி அம்மனின் கோயில் இருந்ததாம். அத கடல் கொண்டதால், தற்போதுள்ள கோயில் உருவானதாம். அங்கு செல்ல விரும்பினார் சுவாமிஜி.
அங்கே தம்மை அழைத்துச் செல்லுமாறு சுவாமிஜி கேட்டுக் கொண்டார். அவரிடம் பணமில்லாததால் மீனவர்கள் மறுத்து விட்டனர். சுவாமிஜி கடலில் குதித்து நீந்தி பாறையை அடைந்தார். அங்கு சுவாமிஜி டிசம்பர் 24 முதல் 26 வரை தியானம் செய்தார். நான்காம் நாள் சுவாமிஜியை கரைக்கு அழைத்து வந்தனர். ‘‘பாறையில் நீங்கள் என்ன செய்தீர்கள். என்ன அனுபவம் கிடைத்தது?’’ என்று அவரிடம் கேட்டபோது, ‘‘அகத்தளவிலும், புறத்தளவிலும் நான் எதைத் தேடி இத்தனை காலம் அலைந்தேனோ, அது இந்த இடத்தில் எனக்குக் கிடைத்தது’’ என்றார் சுவாமிஜி. அவருக்கு வழிகாட்டியது சாட்சாத் ஸ்ரீகுமரி பகவதியம்மனே!
 விவேகானந்தர் தியானம் செய்த பாறையில் அவரது நினைவாக கலைக் கோயில் ஒன்றை எழுப்பி இருக்கிறார்கள். அங்கு 4 அடி உயரமுள்ள பீடத்தில் எட்டு அடி உயரத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை ஒன்றும் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாதேவி உருவச் சிலைகளுடன் தியான மண்டபம் ஒன்றும் புத்தகாலயம் ஒன்றும் உள்ளன.
 காஞ்சி மகா பெரியவாள் விருப்பப்படி கன்யாகுமரியில், பகவதியம்மனின் ஆலயத்தின் பின்புறம் தென்திசை நோக்கி ஆதிசங்கரருக்கு அழகிய மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டது. அதன் மையத்தில் சலவைக் கல்லில் வடிக்கப்பட்ட ஆதிசங்கரரது விக்கிரகம் ஸ்ரீமடத்துப் பண்டிதர்களால் வைதிக முறைப்படி 31.5.1964 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவருக்குச் சுற்றிலும் அவரது சிஷ்யர்களான சுரேச்வரர், தோடகர், பத்மபாதர், ஹஸ்தாமலகர் ஆகியோரது உருவங்களும் அமைக்கப்பட்டன. சுமார் 35,000 ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த மண்டபத்தில் உருவச் சிலை கைங்கர்யம் செய்தவர்கள் நாகர்கோவில் அன்னம் கிருஷ்ணய்யர் குடும்பத்தினர்.
 தமிழகம் வந்த காந்திஜி 1937-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் நாள் குமரிமுனையில் நீராடினார். பின்னர் அவர் கன்யாகுமரி அம்மனை தரிசிக்க விரும்பினார். ஆனால், கடல் கடந்து சென்றவரை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி அவரை நிராகரித்து விட்டது திரு விதாங்கூர் சமஸ்தானம்.
 காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு அவரது அஸ்தி கலசம் இங்கு கொண்டுவரப்பட்டு கடற்கரையில் காந்தி நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது. இங்கு காந்தி ஜெயந்தியன்று அஸ்திகலச மேடை மீது சூரிய ஒளிபடும்படி அமைக்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பு.
 கன்யாகுமரியிலிருந்து வடக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பெருவழி அருகே உள்ளது ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில். இதையட்டி உள்ளது சக்கரக் குளம். குமரி பகவதியம்மன் ஏவிய சக்கராயுதம் பாணாசுரனை அழித்த பிறகு இங்கு வீழ்ந்து நிலத்தைக் கீறியதால் நீரூற்று ஒன்று தோன்றியது. அதுவே சக்கரக் குளம் என்கிறது தல புராணம். இதன் கிழக்கில் சுடுகாடு ஒன்று உள்ளது. இப்படி கோயில்- குளம்- சுடுகாடு ஆகியவை கொண்ட இந்த தலம், காசி மாநகரில் உள்ள கோயில் அமைப்பை நினைவூட்டுகிறது
 2004-ஆம் வருடம் சுனாமி பேரலைகள் தமிழ்நாட்டைத் தாக்கியபோது நடந்த சம்பவம்:
குடும்பத்துடன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், குமரி மாவட்ட தலைமை நீதிபதியும் மற்றும் உயர் காவல் துறை அதிகாரிகளுடன் நீதிமன்ற அலுவலர்களும் கன்யாகுமரிக்கு வந்து எல்லோரும் கன்யாகுமரி பகவதி அம்மனை தரிசித்தனர். பிறகு படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்தை அடைந்தனர். அப்போது சுனாமி பேரலை விபத்து நிகழ்ந்தது. சுமார் 5 மணி நேரம் மேற்குறிப்பிட்ட எல்லோரும் விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து அம்மனை பிரார்த்தித்தனர். அதன் பலனாக சுனாமி அலைகளது சீற்றம் தணிந்தது. அதன்பின் பத்திரமாக கன்யாகுமரி கடற்கரையை அடைந்த அவர்கள் மீண்டும் கோயிலுக்குச் சென்று தங்களைக் காப்பாற்றிய அம்மனுக்கு நன்றிக்கடனாக அபிஷேக- ஆராதனைகள் செய்தனர். முழு மனதுடன் வேண்டினால் பக்தர்களைக் காப்பாற்றுவாள் குமரி பகவதி அன்னை என்பதற்கு இது நிதர்சனமான ஓர் எடுத்துக்காட்டு.
|
No comments:
Post a Comment