Friday, 4 August 2017

பூங்காநகர் ஸ்ரீசென்ன மல்லீஸ்வரர் , ஸ்ரீசென்னகேசவ பெருமாள்



பூங்கா நகர் 
ஸ்ரீசென்ன மல்லீஸ்வரர்
செ ன்னை நகரின் பூங்கா நகர் பகுதியில் என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் அமைந்துள்ளது இந்த ஆலயம். சைவத்தின் பெருமையை விளக்கும் சிவத் தலமும் வைணவத்தின் மகிமைகளை விளக்கும் கேசவப் பெருமாள் தலமும் அடுத்தடுத்து ஒரே கட்டட அமைப்புக்குள் விளங்குவது இதன் சிறப்பு.
இந்த இரண்டுக்கும் ஒரே தேர்; திருக்குளம். குறிப்பிட்ட சில நகைகளும்கூட ஈசனுக் கும் பெருமாளுக்கும் பொதுவானவை. வைகாசி மாத உற்சவத்தில் பெருமாளை அலங்கரிக்கும் அதே நகைகள், பங்குனி மாத உற்சவத்தின்போது கயிலைநாதனை அலங்கரிக்கும்.
‘ஸ்ரீசென்ன மல்லீஸ்வரர் மற்றும் ஸ்ரீசென்னகேசவ பெருமாள் தேவஸ்தானம்’ என்கிற பெயர்ப் பலகையைத் தாங்கி நிற்கும் பிரமாண்ட தேவஸ்தானத்துக்குள் ஹரனையும் ஹரியையும் தரிசிக்க பக்திப் பெருக்கோடு செல்கிறோம்.
இந்தப் பகுதி, பரபரப்பான வியாபார ஸ்தலம்! கண்ணாடிக் கடைகள்; இரும்பு சாமான் கடைகள்; நாட்டு மருந்துக் கடைகள்; ஆபரணக் கடைகள்... இப்படி கடைகள் அணி வகுக்கும் பூங்கா நகரின் மையத்தில் இந்த ஆலயங்கள் இரண்டும் அமைந்துள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள்தான் சென்ன மல்லீஸ்வரருக்கும் சென்ன கேசவ பெருமாளுக்கும் பிரதான பக்தர்கள். ‘பட்டணம் கோயில்’ என்றும், ‘பூக்கடைக் கோயில்’ என்றும் இவை அழைக்கப்படுகின்றன.
இங்குள்ள சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவ பெருமாள் மற்றும் பரிவார தெய் வங்கள் சிலவும் வேறோர் ஆலயத்தில் இருந்து இங்கே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப் பட்டவை. ஆன்மிக அன்பர் ஒருவரின் முயற்சி யால், இங்கு அந்த தெய்வங்கள் கோயில் கொண்டுள்ளன. சரி... பழைய கோயிலுக்கு என்ன ஆயிற்று? புதிய கோயில் எப்படி முளைத்தது?
சுவாரஸ்யமான அந்த வரலாற்றைப் பார்ப் போம். சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு, இன்று உயர்நீதிமன்றம் அமைந்துள்ள இடம்தான் சென்னை நகரின் ஆரம்பம். ‘சென்னப் பட்டணம், சென்னபுரி’ என்றெல்லாம் அழைக்கப்பட்டது சென்னை. வியாபாரத்துக்காக இங்கு வந்து காலூன்றிய கிழக்கிந்திய கம்பெனியினருக்கு (ஆங்கிலேயர்கள்), இன்றைய கோட்டைப் பகுதியை வழங்கினார் சென்னப்ப நாயக்கர் எனும் மன்னர்.
அங்குதான் சென்ன மல்லீஸ்வரரும், சென்ன கேசவப் பெருமாளும் கோயில் கொண்டிருந்தனர். சரியாகச் சொன்னால், தற்போது ரிசர்வ் வங்கி (தலைமைச் செயலகத்துக்கு அருகே) அமைந் திருக்கும் இடத்தில்தான் மேற்குறிப்பிட்ட ஆலயங்கள் இரண்டும் அமைந்திருந்தன.
வியாபார கேந்திரங்களை அதிகப்படுத்திய ஆங்கிலேயர்கள், ராணுவத்தையும் பலப்படுத்தினர். அதற்காக, கோட்டையை ஒட்டிய கடற்கரை பகுதியில் அதிக இடம் தேவைப்பட்டது. அவர்களுக்கு, சென்ன மல்லீஸ்வரர் மற்றும் சென்ன கேசவப் பெருமாள் ஆலயங்கள் சட்டென்று கண்ணில் பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்களது உணர்வை மதிக்காமல், முன்னறிவிப்பு இன்றி ஒரு நாள் அந்த ஆலயங்களை தரை மட்டமாக்கினர்.
இதைக் கண்டு துடிதுடித்தனர் பக் தர்கள். ஒன்று திரண்ட அவர்கள், பெரும்பலத்தோடு ஆங்கிலேயர்களது அட்டூழியங்களை எதிர்த்தனர். நகரின் பல பகுதிகளில் கலகம் செய்தனர். அப்போது பிக்கோட் எனும் வெள்ளைக்கார துரை ஆட்சியில் இருந்தார். கலகத்தை எப்படி அடக்கலாம் என்று யோசித்தார் அவர்.
அப்போது ஆங்கிலமும் தமிழும் அறிந்த தமிழர்கள் சிலர், ஆங்கிலேயர்களிடம் பணி புரிந்து வந்தனர். அவர்களுள் மணலி முத்துகிருஷ்ண முதலியாரும் ஒருவர். செல்வந்தரான இவர், சிறந்த பக்தரும்கூட. பிக்கோட் துரையிடம் மொழித் தரகராக இருந்து வந்தார். வெள்ளைக்காரர்களின் சரக்குக் கப்பல் சேதாரம் இல்லாமல் சென்னைத் துறை முகத்தை அடைந்தால், குறிப்பிட்ட ஒரு தொகை முதலியாருக்கு சன்மானமாகக் கிடைக்கும். கப்பலுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், குறிப்பிட்ட பணத்தை முதலியார் அரசாங்கத்துக்குக் கட்ட வேண்டும் (தல வரலாற்றில் இது பற்றிய செய்தி இருக்கிறது).
எனவே, ஆங்கிலேயர்களின் சரக்குக் கப்பல்கள் நல்லபடியாகத் துறைமுகத்துக்கு வந்து சேர வேண்டும் என்று முத்துகிருஷ்ண முதலியார் கடற்கரையில் குடி கொண்டிருக்கும் சென்ன மல்லீஸ்வரரிடம் வேண்டிக் கொள்வார். ஈஸ்வரனும் முதலியாரின் வேண்டுதலை நிறைவேற்றி விடுவார். கப்பல் கரை சேர்ந்த மகிழ்ச்சியில், ‘மல்லீசா... கேசவா... என் பிரார்த்தனையை நிறைவேற்றி விட்டீர்கள்!’ என மனமுருகி வழிபடுவாராம்.
முத்துகிருஷ்ண முதலியாரின் பக்தியை பிக்கோட் துரை நன்றாக அறிவார். எனவே, கோயிலை இடித்ததால் கலகம் உருக் கொண்ட காலத்தில், முத்துகிருஷ்ண முதலியாரை அழைத்தார் பிக்கோட் துரை.
‘‘முதலியார் அவர்களே... படை பலத்தைப் பெருக்குவதற்கு இந்த நிலப் பகுதியில் நிறைய இடம் எங்களுக்குத் தேவைப்பட்டது. அதனால், இந்த ஆலயப் பகுதிகளை இடித்துத் தள்ள உத்தரவிட்டேன். எங்கள் வேலை சுலபமாயிற்று என சந்தோஷப்பட்டேன். ஆனால், இப்போது உங்கள் நகர மக்கள் கலகத்தைக் கையில் எடுத்து விட்டார்கள். கலகத்தை அடக்கும் வழியைக் கூறுங்கள். எங்களுக்கு உதவி செய்யுங்கள்’’ என்றார் பிக்கோட் பவ்வியமாக.
‘‘துரையவர்களே... படையை முன்னுக்கு வைத்து பக்தியைப் பின்னுக்குத் தள்ளி விட்டீர்கள்... அதுதான் பக்தர்களது தீராத கோபத்துக்குக் காரணம். காலம் காலமாக எங்களைக் காத்து வரும் மல்லீஸ்வரரையும், கேசவரையும் காப்பதற்குத் தாங்கள் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. படைக்கு இடம் வேறு எங்காவது தேடி இருக்கலாம். போகட்டும்... எல்லாமே காலம் கடந்து விட்டது. தற்போதைய கலகத்தை ஒடுக்குவதற்கு ஒரே வழிதான் இருக்கிறது...’’ என்று முத்துகிருஷ்ண முதலியார் சற்று நிறுத்த... பிக்கோட் துரை நிமிர்ந்தார்.
‘‘சொல்லுங்கள் முதலியாரே... என்ன வழி அது?’’
‘‘தற்போது இடிக்கப்பட்ட ஆலயத்தின் கற்களைக் கொண்டே, வேறோர் இடத்தில் கோயிலை எழுப்பி விடலாம். இதே மூலவர் விக்கிரகங்களை புதிய இடத்துக்கு எடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்து விடலாம்’’ என்றார்.
முதலியாரின் எண்ணத்தை அறிந்த பிக்கோட், பெரிதும் மகிழ்ந்தார். புதிய ஆலயம் அமைக்க இடம் ஒதுக்கித் தந்தார். நிதியும் தர முன்வந்தார். ஆனால், இடத்தை மட்டும் அன்போடு ஏற்றுக் கொண்டு, நிதியைப் பெற மறுத்து விட்டார் முத்துகிருஷ்ண முதலியார். சிறந்த ஆஸ்திகரான அவர், தனது சொந்தச் செலவிலேயே சென்ன மல்லீஸ்வரருக்கும், சென்ன கேசவப் பெருமாளுக்கும் தற்போது இருக்கும் ஆலயங்களை அமைத்தார். மூலவர் விக்கிரகங்கள் எடுத்து வரப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுகள் துவங்கின. பக்தர்கள் பெருமளவில் இந்த ஆலயங்களுக்கு வர ஆரம்பித்தனர்.
இந்த ஆலயங்களுக்குத் தற்போது பரம்பரை அறங்காவலராக இருந்து வருபவர்- மணலி முத்துகிருஷ்ண முதலியார் வழியில் வந்த மணலி டாக்டர் ஆர்.சீனிவாசன்.
தேவராஜ முதலித் தெருவில் இருந்து நோக்கினால் இடப் பக்கம் சென்ன கேசவ பெருமாள் கோயில்; வலப் பக்கம் சென்ன மல்லீஸ்வரர் கோயில். இரண்டுக்கும் நடுவே ஆலயத் திருக்குளம்.
இந்த இதழில், சென்ன மல்லீஸ்வரர் திருக்கோயிலைப் பற்றிப் பார்ப்போம். பூக்கடை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் சில அடிகள் நடந்து சென்றால், சென்ன மல்லீஸ்வரர் ஆலய நுழைவாயில் வந்து விடுகிறது. ராஜ கோபுரம் இல்லை. முகப்பில் உயரமான- அழகான ஒரு மண்டபம். பூமாலைகள் வியாபாரம். மலர்களின் மணத்துடன் மல்லீஸ்வரரை தரிசிக்கச் செல் கிறோம். உள்ளே நுழைந்தவுடன், பக்தர்கள் எவருக்கும் பிரமிப்புதான் முதலில் ஏற்படும். காரணம்- நெருக் கடியான இந்தப் பூங்கா நகர் பகுதியில் இவ்வளவு விஸ்தாரமான கோயில்களா என்று! சிந்தனையும் செயலும் ஒரு சேர மல்லீஸ்வரரை நினைந்து பிரார்த் திக்கின்றன.
உள்ளே நுழைவாயிலுக்கு இடப் பக்கம் சற்றுத் தள்ளி கொடிமரம். பலிபீடம். தனி மண்டபத்தில் நந்தி தேவர். இடப் பக்கம் சற்றே சாய்ந்த நிலையில்- வாகாக அமர்ந்துள்ளார் நந்தி தேவர். இவருக்கு பிரதோஷ வைப வங்கள் விமரிசையாக நடந்தேறி வருகின்றன.
மொத்தம் இரண்டு பிராகாரங்கள். வெளிப் பிராகாரம்; மல்லீஸ்வரர் சந்நிதியின் உள் பிராகாரம். முதலில், வெளிப் பிராகாரத்தை வலம் வந்து வணங்கி விட்டு உள்ளே செல்வோம்.
பிராகார வலம் துவங்கும் இடத்தில் சூரியன் சந்நிதி. பிரசன்ன விநாயகர் சந்நிதி. இயல்பான அமைப்பை விட சற்று பெரிய வடிவில் தரிசனம் தருகிறார். இவரை வலம் வரலாம். பின்புறம் மடப்பள்ளி. கிணறு. அபிஷேகத் தீர்த்தத்தை இங்கிருந்து எடுத்துச் செல்கிறார்கள். இதை அடுத்து, பசுமையான ஒரு பலா மரம். பங்குனியில் இந்த மரம் காய்க்குமாம். இதன் பழங்களைக் கொண்டு பிரம்மோற்சவத்தின்போது சென்ன மல்லீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வார்களாம்.
சற்று நடந்தால், இடப் புறம் ஒரு வழி காணப் படுகிறது. உள்ளே சென்றால், சென்ன கேசவ பெருமாள் ஆலயம்.
சென்ன மல்லீஸ்வரரின் வெளிப் பிராகார வலம் தொடர்கிறது. இடப் புற வலம் முடியும் இடத்தில், மாடியில் ஆலய அலுவலகம். தொடர்ந்து நடந்தால், வில்வ மரம். ஸ்தல விருட்சம்.
அடுத்து வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமணியருக்குத் தனி சந்நிதி. அழகான வடிவினர். கச்சியப்ப முனிவர், இந்தப் பெருமானைப் பாடி பரவசப்பட்டிருக்கிறார். தனயனை அடுத்து தாயின் சந்நிதி. ஆம்! அம்பாள் உறையும் ஆனந்த சந்நிதி. இங்கு கிழக்கு நோக்கிக் குடி கொண்டுள்ள அம்பாளின் திருநாமம் அருள்மிகு பிரமராம்பிகை.மனதில் இருத்தி வணங்கத் தக்க அரிய வடிவம்.
மல்லிகேஸ்வரரிடம் உயர்ந்த அருள் மணம் உள்ளது. அதை முகர்ந்து மணத்தை அனுபவிக்கும் வண்டுதான் இந்த தேவி. சிறந்த வரப்ரசாதி. திருமணத்துக்கும், பிள்ளைப் பேறுக்கும் அருளும் மங்கல நாயகி. பூங்கா நகரைச் சுற்றி இருக்கும் செட்டியார் இனத்தவர்களில் பெரும்பாலானவர்கள் இங்குதான் திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சைத் துவக்குவார்களாம். நல்ல முடிவை இந்த அம்மனின் முன்னால்தான் எடுப்பார்களாம்.
‘இரவு வேளைகளில் அம்மன் இங்கே உலா வருவாள். அப்போது சலங்கைச் சத்தம் சன்னமாகக் கேட்கும்!’ என்கிறார் ஆலயத்தின் அருகே வசிக்கும் பக்தர் ஒருவர்.
அடுத்து வருவது, அனுபூதி மண்ட பம் மற்றும் அருணகிரி நாதர் சந்நிதி. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்று காலை நேரத்தில் திருப்புகழ் பாராயணம் நடக்கிறது. அதன் பின், அறிஞர் பெரு மக்களின் சொற்பொழிவு. அருணகிரிநாதருக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை என்று சிறப் பாக இன்றளவும் தொடர்ந்து நடைபெறுகிறது. திருப்புகழ் திருவிழாவை இங்கு தொடங்கி, சுமார் ஐம்பது வருடங்கள் ஆகி விட்டதாம்.
இதை அடுத்து, ஒரு சிவலிங்கத் திருமேனி மற்றும் நாகர் வடிவங்கள் சில. இந்த சிவலிங்கத் திருமேனிக்கு எவர் வேண்டுமானாலும் நீர் மற்றும் பால் ஊற்றி அபிஷேக- ஆராதனை செய்யலாம். வட நாட்டவர் அதிகம் வசிக்கும் பகுதி ஆதலால், அவர்கள் பாணியி லேயே இப்படி ஓர் அமைப்பு.
அடுத்து, வள்ளி- தெய்வானையுடன் சண்முகர் உற்சவர். ஏனைய உற்சவர் விக்கிரகங்கள் ஆலயத்தின் உள்ளே மல்லீஸ்வரர் உள் பிராகாரச் சுற்றில் வீற்றிருக்க... இவர் மட்டும் இங்கே தனிச் சந்நிதி கொண்டுள்ளார். பக்கத்திலேயே பைரவர். சிலா திருமேனியுடன் தனிச் சந்நிதி. தொடர்ந்து, ஸ்ரீஆதி சங்கரரின் உற்சவர் விக்கிரக சந்நிதி.
பக்கத்திலேயே, கல்யாண மண்டபம். உற்சவ காலங்களில் ஸ்வாமி விக்கிரகங்களை அலங்கரித்து இங்கே வைத்து வழிபடுவது வழக்கம். கல்யாண மண்டபம் என்பதாலோ என்னவோ, இங்கே ஒரு விநாயகர் வீற்றிருக்கிறார். பெயர்: கல்யாண விநாயகர். இந்த மண்டபத் தூண்களில் கலைமகள், கண்ணப்ப நாயனார், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, மாணிக்கவாசகர், சந்திரசேகரர், நர்த்தன விநாயகர், மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்திருக்கும் விநாயகர் என்று ஏராளமான சிற்பங்கள் கலைநயத்துடன் அமைந்திருப்பதைக் காணலாம்.
பிராகார வலம் முடிந்து, கொடிமரத்தைச் சுற்றிக் கொண்டு மூன்று படிகள் ஏறி ஆராதனை மண்டபத்தில் நுழைகிறோம், மல்லீஸ்வரரை வணங்க! துவாரபாலகர்கள். சிறு பலிபீடம். நந்தி தேவர். உள்ளே அர்த்த மண்டபம் தாண்டி சென்ன மல்லீஸ்வரர் உறையும் கருவறை. ஈஸ்வரரை வணங்குமுன், உள் பிராகார வலம் வரலாம்.
விநாயகர். ஈசான லிங்கம். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என நால்வர் சந்நிதி. பொல்லாப் பிள்ளையார். அடுத்து, அறுபத்துமூவரின் சிலா திருமேனிகள். தொடர்ந்த திருவலத்தில் மஹா கணபதி, தத்புருஷ லிங்கம், அகோர லிங்கம், வாமதேவ லிங்கம், சத்யோஜாத லிங்கம். சண்டிகேஸ்வரர். பாலமுருகன் பாணலிங்கம் மற்றும் நாகருடன் ஒரு சந்நிதி. பிட்சாடனர், இரு திருக்கர பிரமராம்பிகை, சோமாஸ் கந்தர், சண்டிகேஸ்வரர், சிவகாமியுடன் நடராஜர் என உற்சவர் விக்கிரகங்கள் அனைத்தும் பளீரென காட்சி தருகின்றன. அடுத்து பள்ளியறை. கருங்கல் கட்டுமானத்தில் அழகாகக் காட்சி தருகிறது ஆலயம். பிராகார வலத்தில் கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை ஆகியோரை தரிசிக்கலாம்.
வலம் முடியும் இடத்தில் நவக்கிரகங்கள். இதை ஒட்டி ஒரு தூணில் ஆஞ்சநேயர் விக்கிரகம். ‘‘நவக்கிரகங்களையும் ஆஞ்சநேயரையும் ஒன்றாக இங்கு தரிசனம் செய்யலாம். இது ஒரு சிறப்பான அமைப்பு’’ என்கிறார் ஆலய அர்ச்சகரான ரவி குருக்கள். இந்த மண்டபத் தூண்களிலும் சிற்பங்கள். இனி, மூலவர் தரிசனம். ஆதியில் இடம் பெயர்ந்து அருளை வழங்கும் செல்வரான ஈஸ்வரரின் திருமேனி தரிசனம் பரவசப்பட வைக்கிறது.
கிழக்குத் திசை நோக்கி வீற்றிருந்து உலகைக் காத்து ரட்சிக்கும் மல்லீஸ்வரரை மனம் குளிர வழிபடுகிறோம். உள்ளே- இவருக்கு எதிரே கருவறைக்குள் சிறிய வடிவில் லிங்கத் திருமேனியைப் பார்த்த வண்ணம் இருக்கிறாள் அருள்மிகு பூரணியம்மை. போக சக்தியின் வடிவம். மனோன்மணி(யம்) என்று சொல்கிறார்கள். எந்த நேரமும் சிவனையே தரிசித்த வண்ணம் இவள் காட்சி தருவதால், எத்தகைய ஒரு பிரார்த்தனைக்கும் இவளை மனமார நினைந்து வழிபடுதல் சிறப்பு. இந்த பூரணியம்மைக்கு விளக்கேற்ற எண்ணெய்- நெய் கொடுத்தால், அந்த அன்னையின் முன் நமது நலத்துக்காக தீபமேற்றி வைக்கிறார் அர்ச்சகர். இங்கு திருவிழாக்களுக்குக் குறை வில்லை. எல்லாமே நிறைவாக நடந்து வருகின்றன. வருடம் முழுதும் விழாக் கோலம்தான்!
தென்னாடுடைய இந்த சிவனை- சென்ன மல்லீஸ்வரரைப் போற்றி வணங்குவோம். அவன் திருவடி தொழுவோம். அடுத்து  நாம் தரிசிக்க இருப்பது- பாற்கடல் வாசனான அந்த பரந்தாமனை! சென்ன மல்லீஸ்வரருடன் இணைந்து கோயில் கொண்டிருக்கும் அந்த சென்ன கேசவ பெருமாளை! ஒரு விதத்தில், மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்வாமியையும் இங்கு தரிசனம் செய்யலாம்.
தரிசனத்துக்குத் தயாராகுங்கள்!



                                                                  பூங்கா நகர் 

            ஸ்ரீசென்னகேசவ பெருமாள்


பூங்கா நகர் சென்ன மல்லீஸ்வரரை  ஆனந்தமாக தரிசித்தோம். அவன் அருள் பெற்றோம். சென்ன மல்லீஸ்வரர் கோயிலை ஒட்டியே அமைந்துள்ள சென்னகேசவ பெருமாளை  பக்திப் பெருக்குடன் தரிசிப்போம்.
அடுத்தடுத்து அமைந்த சென்ன மல்லீஸ்வரர் மற்றும் சென்னகேசவ பெருமாள் ஆகிய இரண்டு ஆலயங்களுமே ஒரே காலகட்டத்தில் உருவானவை. அதாவது சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு வேறோர் இடத்தில் இருந்து, இடிக்கப்பட்ட கட்டுமானப் பொருட்கள், சிலா விக்கிரகங்கள் முதலானவை எடுத்து வரப்பட்டு, பூங்கா நகர் பகுதியில் என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் (தேவராஜ் முதலித் தெரு) புதிதாக உருவாக்கப்பட்டன.
வெள்ளைக்கார துரையிடம் பணி புரிந்து வந்த முத்துகிருஷ்ண முதலியார் என்ற ஆன்மிக அன்பரின் பெரும் முயற்சியால் இந்த ஆலயங்கள் அன்றைய தேதியில் கம்பீரமாக எழுப்பப்பட்டன. இதைப் பற்றிய தகவல்களை சென்ற இதழில் விரிவாக எழுதி இருந்தோம்.
இனி, மங்களா சாசனம் செய்யும் பேறு பெற்ற- பெருமாள் உற்சவர் விக்கிரகத்தைத் தன்னகத்தே கொண்ட ஸ்ரீசென்னகேசவ பெருமாளை மனம் குளிர சேவிப்போம்... வாருங்கள் பூங்கா நகருக்கு! ‘என்னது... ஆலயம் இங்கே அமைந்து சுமார் 250 வருடங்கள்தான் ஆகி இருக்கிறது என்று சொல் கிறீர்கள்... மங்களா சாசனம் செய்யும் பேறு பெற்ற உற்சவர் விக்கிரகமா? ஆழ்வார்களது காலம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாயிற்றே?’ என்று குழம்ப வேண்டாம். இதற்கான விளக்கம் பின்னால் வருகிறது.
கம்பீரம், அழகு, அமைதி- இவை அனைத்தும் ஒருங்கே குடி கொண்டதுதான் சென்னகேசவ பெருமாள் திருத்தலம். கடந்த 1941, 1997 ஆகிய வருடங்களில் மஹா சம்ரோட்சணம் நடந்துள்ளது இந்தப் பெருமாள் ஆலயத்துக்கு. தேவராஜ் முதலி தெருவில் தனி நுழைவாயில். ஆலயத்துக்குள் செல்லு முன் பெரிய மண்டபம். பூமாலைகள் கட்டுவது உட்பட பல வியாபாரங்கள் இங்கே நடைபெறுகின்றன. மண்டபத்துக்கு வலப் புறம் திருக்குளம். இடப் புறம் உற்சவர் புறப்பாட்டுக்கான வாகனங்களைப் பாதுகாத்து வைக்கும் இரண்டு பெரிய கிடங்குகள்.
உள்ளே நுழைகிறோம். இங்குள்ள தூண்களில், ஆலயத்தின் முன்னாள் தர்மகர்த்தாக்களான மணலி கிருஷ்ணசாமி முதலியார் மற்றும் சரவண முதலியார் ஆகியோரது உருவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. தீபஸ்தம்பம். பலிபீடம். தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரம். படிகளுடன் கொண்ட மண்டபத்தில் ஏறினால், கேசவபெருமாள் கண் கொள்ளா தரிசனம் தருகிறார்!
அந்த நாராயணனை வணங்குவதற்கு முன் பிராகார வலம். இங்கு அருள் பாலித்து வரும் ஆழ்வார்கள் சந்நிதிகளையும், ஆண்டவன் சந்நிதிகளையும் வணங்குவோம்.
முதலில், மடப்பள்ளி. சக்கரத்தாழ்வார். அவரின் பின்புறம் யோக நரசிம்மர். அடுத்து, பக்த ஆஞ்சநேயர். சில அடிகள் நடந்தால் முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் சந்நிதிகள். மூலவரும் உற்சவரும் ஒன்றாக தரிசனம் தருகிறார்கள். தொடர்ந்து திருமழிசைப்பிரான், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் சந்நிதிகள். தொடரும் பிராகார வலத்தில் திருக்கச்சி நம்பிகள், பராசர பட்டர், வேதாந்த தேசிகன் சந்நிதிகள்.
மேற்குப் பிராகார ஆரம்பத்தில் கிழக்கு நோக்கியவாறு ஸ்ரீராமபிரான் சந்நிதி. சீதாதேவி, லட்சுமணர், பரதர், சத்ருக்னர் ஆகியோருடன் ஸ்ரீராமபிரான் மூலவராகவும் உற்சவராகவும் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.
ஸ்ரீராமபிரான் சந்நிதிக்கு அடுத்து, தாயார் சந்நிதி. ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார் என்பது திருநாமம். பெரும்பாலும் இந்த சென்னகேசவ பெருமாள் ஆலயத்தில் உள்ள அனைத்துச் சந்நிதிகளிலும் மூலவரும் உற்சவரும் ஒன்றாகவே எழுந்தருளி தரிசனம் தந்து அருள்வது சிறப்பு என்றே சொல்ல வேண்டும்.


பிராகார வலத்திலேயேதான் இன்னும் இருக்கிறோம். தெற்கு நோக்கிய சொர்க்க வாசல். பரத மண்டபம். பெருமாளின் பாத தரிசனம். அடுத்தடுத்து, கிழக்குத் திசை நோக்கியவாறு இங்கு மூன்று சந்நிதிகள். முதலில், ஸ்ரீருக் மணி- சத்யபாமாவுடன் நவநீத கிருஷ்ணன். இரண்டாவது சந்நிதியில், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் நாச்சியார் அருள் பாலிக்கிறார். மூன்றாவது சந்நிதியில் பிள்ளை லோகாச்சார்யர் எழுந்தருளி இருக்கிறார். இதே சந்நிதியில் மணவாள மாமுனிகளும் காட்சி தருகிறார்.
வடக்குப் பிராகாரத்தின் கிழக்குக் கோடியில் நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், நாதமுனிகள் ஆகியோரின் தரிசனம். இதை அடுத்து கண்ணாடி அறை, யாகசாலை, கல்யாண மண்டபம். பிராகார வலம் முடிந்தது.
கலி யுகத்தில் பக்தர்களைக் காக்கும் கேசவபெருமாளை வணங்குவதற்காக படிகள் ஏறி மகா மண்டபத்தை அடைகிறோம். திருவிழா காலங்களில் பெருமாளின் உற்சவர் விக்கிரகங்களை இங்குதான் அலங்காரம் செய்து வைக்கிறார்கள். மேற்குப் பார்த்தவாறு பெருமாளை வணங்கிய வண்ணம் காட்சி தருகிறார் கருடாழ்வார். இந்த மண்டபத்தின் தென் புறத்தில் சேனை முதலியார் சந்நிதி. இவரை அடுத்து பெரியாழ்வார் மற்றும் ஆளவந்தார் சந்நிதிகள். இதே மண்டபத்தின் வட புறத்தில் கூரத்தாழ்வார், ராமானுஜர், முதலியாண்டான் ஆகியோருக்கான சந்நிதிகள்.
ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் அனைவரையும் வணங்கி விட்டோம். அடுத்து ஜெயன், விஜயன் என்ற துவாரபாலகர்களைத் தாண்டி கருவறையில் குடி கொண்டுள்ள ஸ்ரீசென்னகேசவ பெருமாளை தரிசிக்கச் செல்கிறோம். ஸ்ரீதேவி- பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார்- கேசி என்ற அரக்கனை அழித்ததால் கேசவன் என்று அழைக்கப்பட்ட பெருமாள்; வண்டின் நிறமுள்ள அழகான ஜடை போல் தொங்கும் கேசத்தை உடையவன். இன்பமாக தரிசித்து விட்டு வெளியே வருகிறோம்.
இந்த உலகத்தைக் காத்து அனுக்கிரகிக்கும் சக்தி சென்னகேசவ பெருமாள் ஆலயத்துக்கு உண்டு. எப்படித் தெரியுமா? உலகத்தை அனுக்கிரகித்துக் காக்கும் சக்தி, பஞ்சபேரர்கள் ஆக பெருமாள் எழுந்தருளி உள்ள திருக்கோயில்களுக்கு உண்டு. மூலவர், கௌதுகர் (இவர் மூலவருக்கு அடுத்தவர். மூலவர் போலவே இவரும் அசைய மாட்டார். மூலவருக்கும் இவருக்கும் உள்ள வித்தியாசம்: மூலவர், சிலா திருமேனி; கௌதுகர், உற்சவ மூர்த்தி), உற்சவ பேரர் (வீதி வலம் வருபவர் இவர்), சயன பேரர் (பள்ளியறை செல்பவர்), பலி பேரர் (ஆலயத்தில் உற்சவம் இல்லாத நாட்களில் பிராகாரத்தை திருவலம் வந்து, துஷ்ட தேவதைகள் எதுவும் அணுகாதபடி காப்பவர்). இவை தவிர, ஸ்ரீசக்கரத்தாழ்வாரும் உற்சவ காலங்களில் முன்னால் செல்பவர். இந்த அனைத்துத் திருமேனிகளையும் ஒரே நேரத்தில் மூலஸ்தானத்தில் தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கிறது.
சரி... ‘ஒரு வகையில் மங்களா சாசனம் செய்யப் பட்ட பெருமாள் இவர்’ என்று கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டோமே... அந்தச் செய்தி என்ன என்று பார்ப்போமா? வெள்ளைக்காரர்களிடம் இருந்து அனுமதி பெற்று தேவராஜ் முதலித் தெருவில் ஆலயம் அமைத்தார் தனவந்தரும் பரங்கியர்களிடம் பணி புரிந்தவருமான முத்துக்கிருஷ்ண முதலியார் என்று ஏற்கெனவே பார்த்தோம். அப்படி ஆலயம் அமைத்தபோது அனைத்து விக்கிரகங்களும் இங்கு வந்து சேர்ந்து விட்டன. பெருமாளுக்கான உற்சவர் விக்கிரகம் மட்டும் கிடைத்த பாடில்லை. முதலியார் பல இடங்களிலும் விசாரித்துப் பார்த்தார். கடைசியில்தான் ஒரு செய்தி அவருக்குத் தெரிய வந்தது.
அதாவது, ஹைதர் அலியின் ஆட்சிக் காலத்தில் பாதுகாக்கும் பொருட்டு இந்த விக்கிரகம் வேறிடம் சென்றிருக்கலாம் என்பதுதான் அந்தத் தகவல். முதலியாரும் கொஞ்சம் தோண்டித் துருவி விசாரித்தபோது, சென்னைக்கு அருகே பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ள திருநீர்மலை திவ்யதேசத் திருத்தலத்தில் இந்த உற்சவர் இருக்கிறார் என்ற இனிய சேதி கிடைத்தது. பாரிமுனையில் ரிசர்வ் வங்கி இருக்கும் இடத்தில் சென்னகேசவப் பெருமாள் இருந்த போது, ஹைதர் அலியின் கொள்ளைக்கு பயந்து, இந்த விக்கிரகத்தைக் கொண்டு போய் திருநீர்மலையில் ஒளித்து வைத்து விட்டாராம் அப்போதைய பட்டாச்சார்யர். ஆனால், துரதிர்ஷ்டம் பாருங்கள்... இதன் பிறகு சில நாட்களிலேயே அவர் பரமபதம் அடைந்து விட்டார். 
இதனால், திருநீர்மலை கோயிலுக்குச் சொந்தமான நான்கு பெருமாள் உற்சவர் விக்கிரகங்களோடு சேர்த்து வைக்கப்பட்ட சென்னகேசவ பெருமாள் ஆலயத்தின் உற்சவர் விக்கிரகம் எது என்று எவராலும் குறிப்பிட்டு அடையாளம் காட்ட முடியவில்லை. திருநீர்மலை ஆலய நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகும், சென்னகேசவ பெருமாள் யார் என்று தீர்மானிக்க முடியவில்லை. எனவே, அங்கிருந்த ஒரு நரசிம்மரைச் சுட்டிக்காட்டி, ‘இவர்தான் சென்னகேசவராக இருக்க வேண்டும்’ என்று முடிவெடுத்து, அந்த விக்கிரகம் ஒரு நன்னாளில் பூங்கா நகர் ஆலயத்தை வந்தடைந்தது.
திவ்யதேசத் திருத்தலமான திருநீர்மலையில் இருந்து மங்களாசாசனம் செய்யப்பட்டு இங்கு வந்த உற்சவர் விக்கிரகம், பின்னாளில் ‘மங்களா சாசனம்’ செய்யப்பட்ட பெருமைக்கு உரியதாகப் போற்றி வணங்கப்பட்டது. பழைய கேசவர் உற்சவர் விக் கிரகம், திருநீர் மலையிலேயே தங்கி விட்டது என்கிற அதிகாரபூர்வ தகவல், பின்னர்தான் அனைவருக்கும் தெரிய வந்தது.
பெருமாளின் திருவுளம் இப்படித்தான் என்றால் அதை யாரால் மாற்ற இயலும்? இன்றைக்கும் திரு மங்கையாழ்வார் பாடிய குறிப்பிட்ட சில பாசுரங்கள் இங்கே இசைக்கப்படுகின்றன. அதேபோல், திருவாராதனை காலத்தில், பூதத்தாழ்வாரின் இரண்டு பாசுரங்கள் பெருமாளிடத்தில் இசைக்கப்படுகிறது. எனவே, ‘மங்களா சாசனம்’ செய்யப்பட்ட பெருமை இந்த ஆலயத்துக்கும் உண்டு என்று பெரியோர் கருதுகின்றனர்.
இது குறித்து தற்போதைய ஆலய அர்ச்சகரான சந்தான பட்டாச்சார்யர் நம்மிடம் சொன்னார்: ‘‘ஹைதர் அலியின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் உள்ள பல ஆலயங்களின் உற்சவர் விக்கிரகங்களுக்கு ஆபத்து வந்தது. விலை மதிப்பில்லாத பொக்கிஷங்களான அந்த விக்கிரகங்களைக் கொள்ளை அடித்துச் சென்றனர். இதற்கு பயந்து அப்போது அர்ச்சகர்களாக இருந்தவர்கள், தங்கள் ஆலய உற்சவர்களை இரவோடு இரவாக மூட்டை கட்டி எடுத்துச் சென்று வெவ்வேறு இடங்களில் மறைந்து வாழ்ந்தார்கள்.
ஒரு கட்டத்தில், கொள்ளை பயம் எல்லாம் நீங்கி அமைதி திரும்பியது. எனவே, அர்ச்சகர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் ஆலய உற்சவர்களை, எந்த இடத்தில் பாதுகாத்து வந்தனரோ அங்கே சென்று பத்திரமாக மீட்டு, ஆலயத்திலேயே பழையபடி கொண்டு வந்து வைத்தனர். பெருமாளின் ஆசீர்வாதத்தோடு அனைத்து ஆலய உற்சவர் விக்கிரகங்கள் இப்படி வந்து சேர்ந்து விட்டன.
ஆனால், சென்னகேசவ பெருமாள் ஆலய உற்சவர் விக்கிரகம் மட்டும் வந்து சேரவில்லை. அதன் பின்தான் திருநீர்மலையில் இந்த ஆலய உற்சவர் விக்கிரகம் பாதுகாக்கப்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்தது. விக்கிரகம் மாறியதால் மங்களா சாசனப் பெருமையும் கிடைத்து விட்டது.
தவிர, இந்தப் பெருமாளுக்கும் பக்கத்தில் இருக்கிற உயர் நீதிமன்றத்துக்கும் ஒரு வித சம்பந்தம் அன்றைக்கு இருந்தது. இதற்காக இங்கிருந்து ஒரு வட்டிலில் பிரசாத தீர்த்தமும், துளசியும் ஹைகோர்ட்டுக்குக் கொண்டு செல்லப்படும். உயர்நீதிமன்றத்தில் வரும் வழக்குகளில், சம்பந்தப்பட்ட சாட்சிகள் தீர்த்தம் மற்றும் துளசியின் மீது ‘நான் சொல்வதெல்லாம் சத்தியம்’ என்பது போல் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகுதான் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள். இது பல நாட்களுக்கு அங்கு நடைமுறையில் இருந்தது!’’ என்றார்.
தற்போது, சென்னகேசவ பெருமாள் ஆலயத்தில் உலக நன்மைக்காக ஸ்ரீசுதர்சன ஹோமம் தொடர்ந்து 108 மாதங்களுக்கு (ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று) நடத்தத் தீர்மானிக்கப்பட்டு, தற்போது 90 மாதங்களுக்கும் மேலாக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த ஹோமம் ஞாயிறு தினத்தின் காலை சுமார் ஒன்பது மணியளவில் தொடங்கப்பட்டு, மதியம் நிறைவுறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.
பெருமாள் அலங்காரப் பிரியர் ஆயிற்றே! உற்சவங்களுக்கும் இங்கு குறைவில்லை. ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் பிரம்மோற்சவத்தை ஒட்டி இங்கு கொடி ஏறும். பிரம்மோற்சவ காலத்தில் நித்ய பூஜை, யாகசாலை பூஜை, பெருமாள் உலா, திருவீதி உலா என்று கோலாகலமாக இருக்கும். வைகாசியில் வசந்த உற்சவம், ஆனியில் ஜேஷ்டாபிஷேகம், ஆடியில் ஆண்டாளின் திருவாடிப் பூரம், ஆவணியில் பவித்ர உற்சவம், புரட்டாசியில் நவராத்திரி, மார்கழியில் பகல்பத்து மற்றும் ராப்பத்து உற்சவம், மாசியில் தவன உற்சவம், பங்குனியில் உத்திர உற்சவம், ஸ்ரீராமநவமி, அனுமத் ஜெயந்தி என்று வருடத்தின் அனைத்து நாட்களும் விழாக் கோலம்தான்!
‘‘சென்னை நகரத்தின் பிரதான பகுதியில் இருக்கும் இந்த ஆலயத்தை வணிக நிமித்தமாகப் பலரும் கடந்து செல்வார்கள். ஆனால், இதன் மகிமைகள் அவர்களுக்குத் தெரியாது. எத்தனையோ சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு பெருமாள் இங்கே எழுந்தருளி இருக்கிறார் என்கிற விவரம் அவர்களுக்குத் தெரியாது. இந்த ஆலயத்தின் பெருமை மேலும் ஓங்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை. கலி யுகத்தில் இந்த கேசவனை தேடி பக்தர்கள் பலரும் வர வேண்டும். தன்னை நம்பி வந்து விட்ட எந்த ஒரு பக்தரையும் கைவிட மாட்டார் இந்த சென்னகேசவ பெருமாள்!’’ என்று, நாம் புறப்பட இருந்த நேரத்தில் உருக்கமாகச் சொன்னார் உள்ளூர் பக்தர் ஒருவர்.
சென்னகேசவரை வணங்கி, செல்வ வளம் பெறுவோம்!

தகவல் பலகை
தலத்தின் பெயர் : பூங்கா நகர் அருள்மிகு சென்ன மல்லீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : அருள்மிகு சென்ன மல்லீஸ்வரர்; அருள்மிகு பிரமராம்பிகை.
அமைந்துள்ள இடம் : சென்னையின் மத்தியப் பகுதியான பாரிமுனையில் பூக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகே, என்.எஸ்.சி. போஸ் சாலையில்! (84, தேவராஜ முதலி தெரு)
எப்படிச் செல்வது? :
சென்னை நகரத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் பாரிமுனையை அடைவது எளிது. அங்கிருந்து நடை தூரத்தில் திருத்தலம்.
மின்சார ரயிலில் பயணித்தால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் (பூங்கா நகர்) மற்றும் கோட்டை நிறுத்தத்தில் இறங்கி னால் சுமார் 15 நிமிட நடை தூரம். ஆட்டோ மற்றும் ரிக்ஷா மூலமும் செல்லலாம்.

No comments:

Post a Comment