Saturday, 12 August 2017

வாமனன் வணங்கிய திருத்தலம்!


ஸ்ரீமந் நாராயணன் ஒவ்வொரு யுகத்திலும், வெவ்வேறு காரணங்களுக்காக மாறுபட்ட அவதாரங்கள் எடுத்திருக்கிறார். பரித்ராணாய ஸாதுநாம் விநாசாயச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே...
பகவத்கீதை 4:8
வாமன அவதாரம், சக்ரவர்த்தியும் பிரஹலாதனின் பேரனுமான மகாபலியின் செருக்கை அடக்கி, அவனது அறியாமையை உணர்த்த நிகழ்ந்தது.
பொதுவாக ஆலயங்களில் விளக்கேற்றுவது, அவற்றைச் சுத்தம் செய்வது, எண்ணெயிடுவது, திரிகளின் முனையை நன்றாக நிமிண்டி விட்டு மேலும் சுடர் விட்டு எரியச் செய்வது ஆகியவை புண்ணியச் செயல்கள். சிறந்த வள்ளலான மகாபலி, முற்பிறவியில் ஓர் எலியாக இருந்தவர். ஒரு முறை திருமறைக்காடு வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் விளக்கு ஒன்று அணையும் தறுவாயில் இருந்தது. அதிலுள்ள எண்ணெயைக் குடிக்க எலி ஒன்று அங்கே வந்தது. தவறுதலாக அதன் மூக்கு நுனி பட்டு, தூண்டப்பட்டு, திரி பிரகாசமாக எரிந்தது. இந்தச் செயலினால் அந்த எலி, மகாபலியாக மறு பிறவி எடுத்தது. முற்பிறவிப் புண்ணியத்தால், மகாபலி சிறந்த சிவபக்தனாக விளங்கினார்.
ஒரு முறை நர்மதை நதியின் வட கரையில் அசுவமேத யாகம் செய்தார் மகாபலி. அந்த வேள்விச் சாலைக்குள் குள்ள வடிவ அந்தணச் சிறுவனாக எழுந்தருளினார் திருமால். அவரை வரவேற்று உபசரித்தார் மகாபலி. அவரிடம், தவச் சாலையமைக்க தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் என்றார் அந்தணச் சிறுவனாக வந்த திருமால். அசுர குரு சுக்ராச்சார்யார் தடுத்தும் கேளாமல், மகாபலி நீர் வார்த்து திருமாலின் கோரிக்கையை நிறைவேற்றினார். உடனே தன் வடிவை விண்ணுக்கும், மண்ணுக்குமாக வியாபித்து திரிவிக்ரமனாக நின்றார் திருமால். அதன் பின் பூமியை ஓரடியாகவும், வானத்தை மற்றோரடியாகவும் அளந்த அவர், மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டார். அப்போது, மகாபலி அவர் முன் மண்டியிட்டு, தன் தலை மீது வைக்குமாறு கூறினா£ர்.
பெருமான் தன் வலக் காலை மகாபலி தலை மீது வைத்து அழுத்தி அவரைப் பாதாளத்துக்குள் தள்ளினார். மகாபலியைப் பாதாளத்துக்குத் தள்ளிய பாவம் தீர, வாமன உருவில் திருமால் சிவபூஜை செய்த இடமே திருமாணிக்குழி எனும் தலம். இங்கு திருமால், சிவபூஜை செய்வதற்கு இடையூறு எதுவும் நேராதிருப்பதற்காக பீமருத்திரர் காவல் புரிகிறார். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்தத் தலம், கடலூருக்கு அருகே கெடில நதிக் கரையில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள ஈசன்: வாமனபுரீஸ்வரர். அம்பிகை: அம்புஜாட்சி என்கிற பங்கயக்கண்ணி.
பீமருத்திரரின் திருவுருவம் கருவறைக்கு முன்புள்ள திரையில் வடிக்கப்பட்டுள்ளது. பூஜைகள் அவருக்கே செய்யப்படுகிறது. லிங்கத்துக்கு மகா தீபாராதனை மற்றும் பாலபிஷேகத்தின்போது மட்டுமே திரையை விலக்குகின்றனர். எலி திரி தூண்டுதல், அரசனாதல், வாமனர் தானம் பெறுதல் ஆகியவை ஆலய மகா மண்டபத்தில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. வாமன உருவ திருமால் வழிபட்டதை தேவாரத்தில், நித்த நியமத் தொழிலனாகி நெடுமால் குறளனாகி மிகவும் சித்தமது ஒடுக்கி வழிபாடு செய்ய நின்ற இடம்’’ என்று குறிப்பிடுகிறார் திருஞானசம்பந்தர். பெரிய புராணத்தில் சேக்கிழார், போர்வலித் தோள் மாவலி தன் மங்கல வேள்வியில் பண்டு வாமனாய் மண் இரந்த செங்கணவன் வழிபட்ட திருமாணிக் குழி... என்று குறிப்பிட்டுள்ளார். திருமாலுக்கு தானம் செய்த மகாபலியிடம் அதைத் தடுத்த பாவம் தீரவும், இழந்த தன் கண்ணைப் பெறவும் சுக்ராச்சார்யார் வழிபட்ட தலம் திருமயிலை- வெள்ளீசுவரர் ஆலயம்.
சுக்ராச்சார்யாரின் கண்ணைக் குத்திய பாவம் தீர, திருமால் திருமாணிக்குழி திருத்தலத்துக்கு வந்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. இங்கு வாமனரான திருமால், மகாபலி சக்ரவர்த்தி, சுக்ராச்சார்யார், விஸ்வரூபக் காட்சி தந்த உலகளந்த பெருமான் ஆகியோரது உலாத் திருமேனிகள் உள்ளன.
வைகாசி மாதம் நடைபெறும் திருவிழாவில் இந்தத் திருமேனிகள் உலா வரச் செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment