Saturday, 5 August 2017

ஸ்ரீபஞ்ச நதன நடராஜர்!


'தாடி வைத்தவரெல்லாம் தாகூர் இல்லை; மீசை வைத்தவரெல்லாம் பாரதி இல்லை' என்று சொல்வோம் இல்லையா? இதேபோல்தான் புராணத்திலும் நிகழ்ந்தது அந்தப் பிரச்னை.
'உனக்கும் ஐந்து தலை; எனக்கும் ஐந்து தலை' என்று சிவபெருமானுக்கு முன்னே நெஞ்சு நிமிர்த்தி, கர்வம் காட்டினார் பிரம்மா. இவரின் ஐந்து தலைகளிலும் ஏறியது கர்வம்.
''ஐந்து தலை இருந்துவிட்டால் நீயும் நானும் ஒன்றா? உனது இந்த ஆணவம் அழிவைத் தரும்; தலைக்கனத்துடன் இருந்தால், பதவியே பறிபோகும். இது உனக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும் பொருந்தும். இதை இப்போதே உலகுக்கு உணர்த்துகிறேன்'' என்று பொங்கி எழுந்த சிவனார், பிரம்மனின் ஒரு தலையைக் கொய்து போட்டார். அவரது படைப்புத் தொழிலையும் ஸ்தம்பிக்கச் செய்தார்.
'படைப்பாளி' எனும் பதவியையும் ஐந்தில் ஒரு தலையையும் இழந்த பிரம்மா, சிவதோஷத்துக்கு ஆளானார். இந்த தோஷத்தில் இருந்து விமோசனம் பெற சிவபெருமானை எண்ணி, வில்வ வனத்தில் கடும் தவம் இருந்தார். உலகத்தின் அத்தனை புண்ணிய தீர்த்தங்களையும் கொண்டு வந்து ஓரிடத்தில் கொட்டினார். 'எல்லா அசுத்தங்களும் தண்ணீரில்தான் சுத்தமாகின்றன. என் இந்த தோஷமும் கர்வமும் இந்தப் புனித தீர்த்தத்தில் கரையட்டும்; மனதின் கறையை நீக்கி அருளுங்கள் ஸ்வாமி' என்று பிரார்த்தித்தபடி, தீர்த்தத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டார்; தலையில் தெளித்துக் கொண்டார்; இரண்டு கைகளிலும் அள்ளி அள்ளிக் குடித்தார்.
அந்தத் தீர்த்தம் இருந்த இடம், இன்னும் இன்னும் பள்ளமானது; கிணறு போல் பள்ளமாகிக் கொண்டே போனது. அடிஆழத்தில் இருந்து ஊற்றெனப் புறப்பட்டபடியே இருந்தது தண்ணீர். அங்கே... வில்வ மரத்தடியில் இருந்து சுயம்புவாக, லிங்க மூர்த்தமாகத் தோன்றி, காட்சி தந்தார் சிவபெருமான். தோஷம் நீங்கப் பெற்றார் பிரம்மன். இழந்த பதவியும் கிடைத்தது.
ஊற்றெனத் தீர்த்தம் பீறிட்டதால் இந்த வில்வவனம் ஊற்றத்தூர் என்று அழைக்கப்பட்டது.
காலங்கள் ஓடின!
சிவபக்தியில் திளைத்து, எந்நேரமும் சிவபெருமானையே மனதுள் நினைத்துக் கொண்டிருக்கும் மன்னன் அவன்!
'சக்கரவர்த்தி உங்கள் ஊரான ஊற்றத்தூருக்கு வருகிறார்' என பறை அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டு ஊரே துள்ளி குதித்தது; பரபரப்பானது. தெருவை சுத்தம் செய்தது; வாழைமரங்களை வெட்டி வந்து தோரணம் கட்டியது. மன்னரின் தேரும் படைவீரர்களின் குதிரைகளும் நிறுத்து வதற்கு இடம் வேண்டுமே என்று கவலைப்பட்டது. வில்வமும் புல்லுமாக காடாக இருந்த இடத்தை சுத்தம் செய்வது என தீர்மானித்தது.
ஊரில் உள்ள ஆண்கள் புல்லை வெட்டினர்; பெண்கள் கூடையில் புல்லைச் சுமந்து சென்று ஊருக்கு வெளியே கொட்டினர். அப்போது, மன்னர் பக்கத்து ஊருக்கு வந்துவிட்டது தெரிவிக்கப்பட்டது. இன்னும் வேகமானார்கள் மக்கள். 'ம்... சீக்கிரம் சீக்கிரம்' என்று ஆளாளுக்கு விரட்டி விரட்டி வேலை பார்த் தனர். அப்போது, ஒருவர் மண்வெட்டியை ஓங்கி மண்ணில் வெட்ட... 'ணங்' என்று சத்தம். அதிர்ந்து, ஓடிவந்து சூழ்ந்து கொண்டனர். அங்கே... குபுக்கெனக் கிளம்பியது ரத்தம். உறைந்து போனார்கள். 'தெய்வக்குற்றமாகிவிடக் கூடாதே' என்று கவலைப்பட்டனர்; 'மன்னர் வரும் நேரத்தில் இப்படி நடந்துவிட்டதே... இது நல்லதா கெட்டதா?' என்று கலங்கினர்.
பறை முழக்கம் கேட்டது; அமைச்சர் பெருமக்கள் மற்றும் பரிவாரங்கள் புடைசூழ, மன்னர் வந்து சேர்ந்தார். மக்களைக் கண்டு குதூகலத்துடன் இறங்கி வந்தார். அனைவரின் முகத்திலும் அச்சம்; கவலை! இதை அறிந்த மன்னர் விசாரிக்க... முழு தகவலும் சொல்லப் பட்டது. தன் படைவீரர்களை அழைத்து, அந்த இடத் தைச் சுட்டிக்காட்டி, தோண்டச் சொன்னார்.
வீரர்கள் தோண்டத் தோண்ட... மண்ணுக்குக் கீழே இருப்பது மெள்ள மெள்ள மேலே தெரிந்தது. 'என் சிவனே... என் சிவனே' என்று தலைக்கு மேலே கைகூப்பி, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். அது... பிரமாண்டமான சிவலிங்கம்; பிரம்மன் வழிபட்ட லிங்க ரூபம். 'சோழம் சோழம் சோழம்' என்று உற்சாகத்தில் கூவினர் வீரர்கள். 'சிவபாதசேகரன் நீடூழி வாழ்க' என்று கைகூப்பி வேண்டினார்கள் மக்கள். 'சோழ தேசத்தின் விடிவெள்ளியே! உனது திருப்பாதம் எங்கள் ஊர் மண் ணில் பட்டதும், உன்னை வரவேற்று ஆசீர்வதிக்க அந்த சிவபெருமானே லிங்கவடிவில் வந்து விட்டார் போலும்' என்று மெய்சிலிர்த்தனர்.
அந்த மன்னர்... ராஜராஜபெருவுடையார்! அங்கே... பிரமாண்டமாக கோயில் எழுப்பும்படி பணித்தார்; மானியங்களை வாரி இறைத்தார். ஊற்றத்தூர் எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிரமாண்டமாக எழுந்தது ஆலயம். இப்போது, அந்த ஊர்... ஊட்டத்தூர் என வழங்கப்படுகிறது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ஊட்டத்தூர்.
அழகிய இந்த கிராமத்தில் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர். மாசிலாமணி என்றும் இவருக்குப் பெயர் உண்டு அம்பாளின் திருநாமம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி. ராஜராஜ சோழனால் நிர்மாணிக்கப்பட்டு, ராஜேந்திர சோழன், பிற்காலச் சோழர்கள், பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், போசல மன்னர்கள் திருப்பணி செய்துள்ளதைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் உள்ளன.
இந்த ஆலயத்தின் முக்கிய அம்சம்... பிரம்ம தீர்த்தம். ராஜராஜ சோழன் உடல்நலம் குன்றி இருந்தபோது, பிரம்ம தீர்த்தத்தை அருந்தி நோய் நீங்கப் பெற்று, ஆயுளுடன் வாழ்ந்தார் என்கிறது கல்வெட்டு ஒன்று. இதனால் இந்தத் தலத்தில் ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் சந்நிதியில் சஷ்டியப்த பூர்த்தி (அறுபதாம் கல்யாணம்), சதாபிஷேகம் (எண்பதாம் கல்யாணம்) ஆகியவற்றைச் செய்வது விசேஷமாம். தவிர... புனிதமான பிரம்ம தீர்த்தக் கிணறு, நந்திக்கு அருகில் அதாவது சுத்தரத்தினேஸ்வரரின் நேரடிப் பார்வையில் அமைந்திருப்பது அபூர்வ அம்சம் என்கிறார்கள். பிரம்ம தீர்த்தத்தை எடுத்துச் சென்று, வீட்டில் உள்ள குடிநீரில் கலந்து, தினமும் அருந்தி வர... நோய்கள் நீங்கும்; பாவங்கள் விலகும்.
ஏழு நிலை ராஜகோபுரம்; பிரமாண்டமான பிராகாரங்கள்; அழகிய தூண் சிற்பங்கள் என ரம்மியமாகத் திகழ்கிறது ஆலயம். இங்கு அருளும் ஸ்ரீநடராஜர் விசேஷமானவர். பொதுவாக சிவாலயங்களில் பஞ்சலோக விக்கிரகமாகக் காட்சி தரும் ஸ்ரீநடராஜர், இங்கே... பஞ்சநதன நடராஜராக அருள் கிறார். பஞ்சநதனம் என்பது விசேஷக் கல் வகையைச் சேர்ந்தது. ஆலிங்க நதனம், பஞ்ச நதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என ஐந்து வகை உண்டு. இதில் சூரியப் பிரகாசம் கொண்ட பஞ்ச நதனக் கல்லைக் கொண்டு, நடராஜரின் திருமேனி உருவாக்கப்பட்டுள்ளது.
தேவாதிதேவர்கள் பலரும் தங்கள் பதவியை இழந்த வேளையில், பஞ்சநதன நடராஜரை வழிபட்டு அருள்பெற்றதாகச் சொல்கின்றன புராணங்கள். இவருக்கு வெட்டிவேர் மாலை சார்த்தி பிரார்த்திக்க, இழந்த பதவியைப் பெறுவர்; இந்த வேரினை தண்ணீரில் இட்டு, அந்த நீரைக் குடித்து வந்தால் சிறுநீரகப் பிரச்னைகள் யாவும் தீரும் என்பது ஐதீகம்!
மூலவரின் கண் முன்னே தீர்த்தம்; பஞ்ச நதன நடராஜ தரிசனம்... என அற்புதங்கள் நிறைந்த ஊட்டத்தூர் சிவாலயத்துக்குச் சென்று வழிபடுங்கள்; நல்லன எல்லாம் தந்தருள்வார் ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர்!

ஸ்ரீநடராஜருக்கு ராகுகால பூஜை!
ஞ்சநதன நடராஜருக்கு, வெள்ளிக் கிழமை ராகுகாலத்தில் சம்மேளன அர்ச்சனை செய்து, 11 நெய் தீபங்கள் ஏற்றி, பாசிப்பயறு பாயசம் நிவேதித்து, 11 முறை பிராகார வலம் வந்து பிரார்த்தித்தால் திருமணத் தடை நீங்கும்; நல்ல வரன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு ருத்ர ஜபம் சொல்லுங்கள்!
ழகிய திருமேனியராகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியும், ஆலயச் சிறப்புகளில் ஒன்று. வளர்பிறை பஞ்சமி திதியில், ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சார்த்தி, ருத்ரஜபம் செய்து பிரார்த்தித்தால் குருபலம் கூடும்; கல்வி-கேள்வியில் சிறக்கலாம் என்கின்றனர்.
சத்ரு பயம் நீங்க ஸ்ரீவீரபத்திரர் வழிபாடு!
ஆலயப் பிராகாரத்தில் ஸ்ரீவீரபத்திரர் சந்நிதி உள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில், வீரபத்திரருக்கு எலுமிச்சை மாலை சார்த்தி வழிபட்டு வந்தால், எதிரிகள் தொல்லை ஒழியும்; தைரியம் பிறக்கும் என்கின்றனர் பக்தர்கள். இந்த நாட்களில் திருச்சி, பெரம்பலூர், லால்குடி முதலான ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வீரபத்திரரை வழிபட்டுச் செல்கின்றனர்.
ஸ்ரீகாலபைரவரும் விசேஷம்!
தேய்பிறை அஷ்டமியிலும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமையின் ராகுகால வேளையிலும், ஸ்ரீகாலபைரவருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ள, ஆரோக்கியம் கூடும்; நீண்ட ஆயுள் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
எங்கே இருக்கிறது?
திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது பாடாலூர். இங்கிருந்து பிரியும் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவு பயணித்தால், பிரமாண்ட மான ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் ஆலயத்தை அடையலாம். பைபாஸ் சாலையில் இருந்து ஆட்டோ வசதி உண்டு. திருச்சி மற்றும் பெரம்பலூரில் இருந்து பஸ் வசதி குறைவுதான்!

No comments:

Post a Comment