Saturday, 5 August 2017

ஆலங்காட்டு ஆடல்வல்லான்!


ந்தத் திருநடனத்தால் அண்ட பகிரண்டமும் நடுங்கின. தென்னாடுடைய ஈசனும், அகோர காளியும் போட்டிப் போட்டுக்கொண்டு அல்லவா ஆடுகிறார்கள்! சரி... ஏன் இந்தப் போட்டி?!
சும்ப- நிசும்பன் என்ற அரக்கர்கள் இரண்டு பேர்... ''நாங்கள் யாருடன் போரிட்டாலும், மண்ணில் விழும் எங்களின் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் ஓர் அசுரன் உருவாக வேண்டும்'' என்று வரம் பெற்றனர். பிறகு சும்மா இருப்பார்களா? தங்களின் அட்டூழியத்தை ஆரம்பித்தனர். அதன் தொடர்ச்சியாக, ஆலமரத்தடியில் சுயம்புலிங்கத்தை பூஜித்துக் கொண்டிருந்த தேவர்களை வதைத்தனர். மற்ற தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி சிவனாரிடம் வந்து முறையிட்டனர். அவர்களின் அல்லல் தீர்க்க திருவுளம் கொண்ட சிவனார், தன் பிராட்டியை நோக்கினார். அவரின் குறிப்பை பார்வதியாளும் புரிந்துகொண்டாள். மறுகணம் தன் பார்வையாலேயே காளி தேவியை உருவாக்கினாள்.
எட்டுக் கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து அசுரர்களை அழிக்கப் புறப்பட்டாள் காளி. அசுரர்களது இருப்பிடத்தை அடைந்து அவர்களுடன் போரிட்டாள். அவர்களின் ரத்தம் தரையில் சிந்தினால்தானே அதிலிருந்து அசுரர்கள் தோன்றுவார்கள்?! ஒரு துளி ரத்தம்கூட தரையில் சிந்தாமல், தன்னுடைய ஒரு கரத்தில் இருந்த கபாலத்தில் அசுரர்களின் ரத்தத்தை ஏந்தினாள். கபாலம் நிரம்பியதும் பருகினாள்; தொடர்ந்து சண்டையிட்டாள். போரின் முடிவில் அசுரர்கள் அழிந்தனர். ஆனாலும் இன்னொரு பிரச்னை ஆரம்பமானது!
அசுர ரத்தத்தைப் பருகியதால் காளிக்கும் அசுர குணம் மேலோங்கியது. மீண்டும் தேவர்கள் தொல்லைக்குள்ளானார்கள். காளியைக் கட்டுப்படுத்த வந்த சிவனார், அவளுடன் நடனப்போட்டியில் பங்கேற்க நேர்ந்தது!
சிவனாரின் தாண்டவம் தொடர்ந்தது. இவர் ஒரு தாண்டவத்தை ஆடிக்காட்ட, காளிதேவியும் அதே போல் ஆடிக்காட்டினாள். 17 தாண்டவங்கள் ஆடி முடித்தாயிற்று. அடுத்த தாண்டவம்... தன்னுடைய வலக்காதில் இருந்த குண்டலத்தைத் தவறவிட்ட சிவனார், சட்டென்று இடது காலால் அந்தக் குண்டலத்தை எடுத்து, அதே காலை உயரத் தூக்கி, குண்டலத்தை கரத்தில் வாங்கி அணிந்துகொண்டார்.
காளிதேவியால் இப்படி காலை உயரத் தூக்கி ஆட முடியாததால், சிவனார் வெற்றிபெற்றார்.
இந்தப் போட்டி நடைபெற்ற தலம் திருவாலங்காடு; சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில், சுமார் 65 கி.மீ. தொலைவில் உள்ளது.
சரி... இந்தப் போட்டிக்கு தலைமையேற்று நடத்தி வைத்தவர்கள் யார் தெரியுமா? சுனந்த முனிவரும் கார்கோடகனும் (நாகம்).
சிவதாண்டவத்தைக் காண வேண்டும் எனும் ஆவலில், தலையில் நாணல் வளரும் அளவுக்கு கடும்தவம் செய்தாராம் சுனந்த முனிவர். அதன் பலனால் திருவாலங்காட்டில் சிவ தாண்டவம் காணும் வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு.
அதேபோல், ஈசனின் கைகளில் ஒருமுறை விஷத்தை கக்கியதால் சாபம் பெற்ற கார்கோடகன், இங்கு வந்து சாப விமோசனம் பெற்றாராம். அதனால், இங்குள்ள ஸ்ரீநடராஜர் இடக்கரத்தில் பாம்பை ஏந்தியபடி காட்சி தருகிறார்.
அதுமட்டுமா? மற்றொரு இடக்கரத்தில் அக்னியையும், வலக்கரங்களில்- உடுக்கை, சூலம் போன்றவை திகழ... உயரத் தூக்கிய பொற்பாதத்துடன் கனகம்பீரமாக காட்சி தருகிறார் ஆலங்காட்டு ஆடல்வல்லானாம் ஸ்ரீரத்னசபாபதீஸ்வரர்!
அருகிலேயே ஸ்ரீசமீசீனாம்பிகை (வியந்திருந்து அருகிருந்த நாயகி என்று பொருள்). ஸ்வாமி அருள்புரியும் ரத்தின சபை, ஒருகாலத்தில் ரத்தினங்களாலேயே இழைக்கப்பட்டிருந்ததாம்!
ஈசனுடன் ஆடலில் போட்டிப்போட்ட காளிதேவியின் தனிக்கோயில், திருக் குளத்துக்கு வடக்கு திசையில் உள்ளது. முதலில் இவளை வணங்கிவிட்டே ஸ்ரீநடராஜபெருமானைத் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
காரைக்கால் அம்மையாருக்கு முக்தி கொடுக்க, இந்தத் தலத்துக்கு வருமாறு பணித்தாராம் இறைவன். பழையனூரில் இருந்த காரைக்கால் அம்மையாருக்கு, இறைவன் லிங்க வடிவிலேயே வழிகாட்ட... அவர் நடந்து சென்ற பாதையில் கால் பதிக்கக் கூடாது என்பதால், காரைக்கால் அம்மையார் தலையாலேயே பயணித்து திருவாலங்காட்டை அடைய, அவருக்கு திருநடனக் காட்சி காட்டி, முக்தி கொடுத்தாராம் பரமேஸ்வரன்.
ஆலயத்தின் மூலவராம் ஆலங்காட்டு ஈசனுக்கு ஸ்ரீவடவாரண்யேஸ்வரர், ஆலவன ஈசர், தேவர் சிங்கப் பெருமாள் என்றெல்லாம் திருநாமங்கள் உண்டு. அம்பிகை- ஸ்ரீவண்டார் குழலி
வருடம்தோறும் ஸ்ரீநடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள் விமரிசையாக நடைபெறும். அவற்றுள் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (இந்த வருடம் ஜூன் 19-ஆம் தேதி) நடை பெறும் அபிஷேக (ஆனித் திருமஞ்சன) வைபவமும் தரிசிக்க வேண்டிய ஒன்று. இந்தத் திருநாளில் நாமும் திருவாலங்காடு சென்று, ஸ்ரீநடராஜரின் திருவடியைப் பணிவோம்.

சுயம்புவாய் தோன்றிய நடன நாயகன்!
எட்டு அடி உயரம்... கைரேகைகள், தேமல், மச்சம்... என மனிதருக்கே உரிய அங்க அடையாளங்களுடன் திகழும் விக்கிரகத் திருமேனி... நான்கு திருக்கரங்களும் விரிசடையுமாக, தரிசிக்கும் நம்மை வியக்க வைக்கிறார் கோனேரிராஜபுரம் ஸ்ரீநடராஜபெருமான்!
கும்பகோணம்- காரைக்கால் பாதையில், எஸ்.புதூர் எனும் ஊருக்கு அருகில் உள்ளது கோனேரிராஜபுரம். இங்கு ஸ்ரீநடராஜர் குடிகொண்ட வரலாறு அற்புதமானது!
சோழ தேசமெங்கும் பல ஆலயங்களில் கலையம்சத்துடன்கூடிய தெய்வ விக்கிரகங் களைப் பிரதிஷ்டை செய்து வந்தார்கள் சக்கரவர்த்தி கண்டராதித்தரும் அவருடைய மனைவி செம்பியன்மாதேவியும். கோனேரிராஜபுரம் கோயிலிலும் ஸ்ரீநடராஜ சிற்பம் அமைக்க தீர்மானித்து, ஸ்தபதி ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.
நாட்கள் நகர்ந்தன... எவ்வளவு முயன்றும் சிலை முழுமையடையாமல் பணி இழுத்துக் கொண்டே போக, செய்வதறியாமல் திகைத்தார் ஸ்தபதி. பணி தாமதமாவதை அறிந்த மன்னன், ஸ்தபதியை கடிந்துகொண்டான். 'நாளைக்குள் சிலை தயாராகவில்லை எனில் தண்டனை நிச்சயம்' என்று எச்சரித்தான். ஸ்தபதியும் அவருடைய மனைவியும் கவலையில் ஆழ்ந்தனர். அப்போது, அவர்களது இல்லத்தைத் தேடி வந்த வயதான கணவனும் மனைவியும் ''உண்ணவோ பருகவோ ஏதேனும் கிடைக்குமா'' என்று கேட்டனர். ஸ்தபதியோ விரக்தியுடன், ''காய்ச்சி உருக்கிய உலோகக் குழம்பைத் தவிர வேறு எதுவும் இல்லை'' என்றான். அத்துடன் தனது நிலையையும் விவரித்தான். இதைக்கேட்ட அந்தத் தம்பதி, சிலை வடிக்க வைத்திருந்த உலோகக் குழம்பை அப்படியே எடுத்துப் பருகினர். மறுகணம்... அங்கே இரண்டு விக்கிரகங்களாக மாறினர். ஆமாம்! ஸ்தபதி எதிர்பார்த்தது போன்றே அழகிய விக்கிரகங்களாக காட்சி தந்தனர். வந்தது இறைத் தம்பதியே என்பதை அறிந்து சிலிர்த்தான் ஸ்தபதி.
விக்கிரகங்கள் தயார் என்பதை அறிந்த மன்னன், அவற்றைக் காண ஓடோடி வந்தான். அவனிடம், விக்கிரகங்கள் சுயம்புவாகத் தோன்றியதை ஸ்தபதி விவரிக்க... அதை நம்பாத மன்னன், உளியால் விக்கிரகத்தைத் தட்டினான். மறுகணம் விக்கிரகத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. மன்னனின் கை-கால்கள் செயலிழந்தன. தவறுணர்ந்த மன்னன், ஆலயம் சென்று வலம் வந்து இறைவனை வேண்ட, அவனது அங்கங்கள் குணம் பெற்றன. கோனேரிராஜபுரம் ஸ்ரீநடராஜர் விக்கிரகம் உருவானது இப்படித்தான்.
தானே தோன்றியவர் என்பதால், தம்முடைய மேனியில்... மனிதனுக்கு உள்ளது போன்றே ரேகைகள், மச்சங்களுடன் திகழ்கிறாராம்! ருத்ராட்ச பந்தலின் கீழ், ஸ்வாமி தெற்கு நோக்கி அருள, இவரை தரிசனம் செய்தபடி நால்வர்
பெருமக்கள் காட்சி தருகின்றனர். ஆனித் திருமஞ்சனத் திருநாளில் இங்கு வந்து ஸ்ரீநடராஜரையும் ஆலயத்தின் மூலவராம் ஸ்ரீபூமிநாதரையும் வழிபடுவது சிறப்பு. ஸ்ரீபூமிநாதரின் அருளால் நிலப் பிரச்னைகள் தீரும், வீடு- மனை அமையும் யோகம் உண்டாகும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment