|
கர்நாடக மாநிலம்- தலக்காடு! காவிரிக் கரையில் அமைந்த இயற்கை எழிலார்ந்த இந்தத் திருவிடம், புராணப் பெருமைகள் மிக்க ஐந்து சிவாலயங்களையும் தன்னகத்தே கொண்டு, பஞ்சலிங்க க்ஷேத்திரமாகவும் திகழ்கிறது.
சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 58 கி.மீ. தொலைவில் உள்ளது தாளவாடி. அங்கிருந்து சி.எஸ். நகரம் என்ற ஊருக்கு (சுமார் 23 கி.மீ. தொலைவு) நிறைய பேருந்துகள் உண்டு. இந்த ஊரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தலக்காடு! 11-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை கங்கர்களின் தலைநகராக திகழ்ந்த தலக்காடு... புராணம் மற்றும் சரித்திரச் சிறப்புகள் நிறைந்தது.
ராஜவுடையார்- விஜயநகரப் பேரரசுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர். தனது நாட்டின் எல்லையை விரிவுபடுத்த எண்ணிய இவர், பல்வேறு படையெடுப்புகளை நிகழ்த்தினார். ஸ்ரீரங்கப்பட்டினமும் கைப்பற்றப் பட்டது. அப்போது இந்தப் பகுதியை ஆட்சிசெய்தவர் ஸ்ரீரங்கராயர். இவருடைய இரண்டு மனைவியரில், அலமேலம்மா என்பவள், தாயார் ஸ்ரீரங்கநாயகியின் பக்தை. செவ்வாய்- வெள்ளிக் கிழமைகளில்... அலமேலம் மாவின் நகைகள் தாயாரின் திருமேனியை அலங்கரிக்கும். மற்ற நாட்களில் அலமேலம்மாவிடம் இருக்கும்.
இதையெல்லாம் அறிந்த ராஜவுடையார், அலமேலம்மா தங்கியிருக்கும் மாலங்கி எனும் இடத்துக்கு தனது படைகளை அனுப்பி, நகைகளை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார். அலமேலம்மா மறுத்தார்; நகைகளுடன் தப்பி ஓடியவர் தலக்காடு எனும் இடத்தில் ஒரு நீர்நிலையில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டார். அதற்கு முன்னதாக... 'தலக்காடு மண்ணாகப் போகட்டும், தான் தங்கியிருந்த மாலங்கி தண்ணீரில் மூழ்கட்டும், உடையார் வம்சத்துக்கு வம்சம் தழைக்காமல் போகட்டும்!' என்று சபித்தார்.
இவரின் சாபப்படி... கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியாகத் திகழும் தலக்காடு கிராமத்தின் சுற்று வட்டாரப் பகுதிகள், பாலைவனம் போல் மணல் மேடுகள் நிறைந்து காணப்படுவதாகக் கூறுகின்றனர்!
இந்தப் பகுதியில் பிரசித்தி பெற்றுத் திகழும் பஞ்சலிங்க தலங்களில் முதன்மையானது ஸ்ரீவைத்யநாதேஸ்வரர் ஆலயம். பஞ்சபூதங்களில் நீருக்கு உரிய ஆலயம்; திசைகளில் கிழக்கு திசையைக் குறிப்பிடுவது என்கின்றனர். இந்த ஆலய ஈஸ்வரனை வழிபடுவதால், காசி மற்றும் ராமேஸ்வரம் சென்று வழிபட்ட பலனைப் பெறலாம் என்பது ஐதீகம்.
 அடுத்து தரிசிக்க வேண்டியவை, ஸ்ரீமரலேஸ்வரர் மற்றும் ஸ்ரீபாதாளேஸ்வரர் திருக்கோயில்கள். இவற்றில் ஸ்ரீமரலேஸ்வரர், சுமார் 5 அடி உயர அளவில் மண் லிங்கமாக தரிசனம் தருகிறார். இவரது ஆலயம் காற்று க்ஷேத்திரம்; வடக்கு திசைக்கு உரியது. இங்கே, ஒரே கல்லில் வடிக்கப்பட்ட... சூரியபகவானும் அவரைச் சுற்றி மற்ற கிரக மூர்த்தியரும் அமைந்துள்ள சிற்பத் தொகுப்பு மிக அழகு. ஸ்ரீபாதாளேஸ்வரர் ஆலயம்- பஞ்சபூதங்களில் நிலத்துக்கு உரியதாம்; தெற்கு திசை சார்ந்தது என்கின்றனர். இந்த இரண்டு கோயில்களும் மணல் மேடுகள் நிறைந்த பகுதியில் அமைந்திருப்பதால், பலத்த காற்றின் காரணமாக இந்த ஆலயங்களை மண் மூடிவிடுமாம். பிறகு திருவிழாக் காலங்களில், மண் அகற்றப்பட்டு வழிபாடுகளைத் தொடர்வார்களாம். 1938-ஆம் ஆண்டு வரை இந்த நிலையே தொடர்ந்திருக்கிறது. தற்போது, சுற்றிலும் உயர்ந்த கற்சுவர்களை எழுப்பியுள்ளனர்.
ஸ்ரீவைத்யநாதேஸ்வரர் முதலான இந்த மூன்று சிவாலயங்களையும் தரிசித்த பிறகு, ஏறத்தாழ இந்த மூன்று கோயில்களுக்கும் நடுவே அமைந்துள்ள ஸ்ரீவிஷ்ணு ஆலயத்தை தரிசிக் கலாம். ஆலயத்தைச் சுற்றிலும் அழகிய சிற்பங்கள் சிதிலமடைந்த நிலையில் கிடக்கின்றன!
தொடர்ந்து வனத்துக்குள் பயணித்தால், அருள்மிகு சௌடாம்பிகையின் ஆலயத்தை அடையலாம். சிவபெருமானைப் போன்று மூன்று கண்களுடன் இந்த அம்பிகை காட்சிதருவதும், சிம்மவாகினியான இவள் ஸ்ரீசக்ரத்தில் எழுந்தருளியிருக்கும் அமைப்பும் மிக விசேஷம்.ஸ்ரீசக்ரத்துக்கு என்றே தனியே சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தலக்காடு ஆலயங்களை தரிசித்த பின், பேருந்தில் சுமார் 3 கி.மீ. தூரம் பயணித்தால், முடுக்குத்துறை மலைக் கோயிலை அடையலாம். ராஜகோபுரத்துடன் அற்புதமாக அமைந்துள்ளது ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம்.
சோமநாதன் என்ற மகரிஷியும் அவரது சீடர்களும் முக்தி வேண்டி சிவனாரைப் பிரார்த்தித்தனர். அவர்களுக்கு, 'காவிரிக் கரையில் தவம் செய்தால் உங்கள் விருப்பம் நிறைவேறும்' என்று அசரீரியாக அருள்பாலித்தார் சிவபெருமான். அதன்படி, ரிஷியும் சீடர்களும் காவிரிக் கரைக்கு பயணித்தனர். வழியில் யானைக் கூட்டத்தைக் கண்டு பயந்தவர்கள், அவற்றை விரட்டும் நோக்கில் அடித்துத் துன்புறுத்தினராம். இதனால் கோபம் கொண்ட சிவனார், ரிஷியையும் சீடர்களையும் யானைகளாகும்படி சபித்தார்.சாபம் பலித்தது. யானைகளாக மாறியவர்கள், தினமும் காலை- மாலை இரண்டு வேளையும் அருகில் இருந்த புருக மரத்தடியில் ஒன்றுகூடி, அதன் இலைகளைப் பறித்து அர்ச்சித்து, சிவபூஜை செய்து வந்தனர்.
 இந்த நிலையில், அந்த வழியே வந்த வேடர்கள் இருவர் புருக மரத்தை வெட்ட... இடியோசையாக பேரொலி கேட்டது! வியப்பும் அச்சமும் கொண்ட அந்த வேடர்கள், மரத்தடியில் இருந்த புதர்களை விலக்கிப் பார்க்க... ரத்தம் வழியக் காட்சி தந்தது ஒரு சிவலிங்கம். அதைக் கண்டு வேடர்கள் பதறினர்.
அப்போது ஓர் அசரீரி, ''வேடர் களே... பயப்பட வேண்டாம். உங்களுக்கு அருளவே இங்கே குடி கொண்டுள்ளேன். புருக மரத்தின் இலைகளையும் பூக்களையும் சேர்த்து அரைத்து, ரத்தக் காயத்தில் வைத்துக் கட்டுங்கள். லிங்க மேனியில் இருந்து வரும் ரத்தம் பாலாக மாறும். அதை அருந்துங்கள். உங்களுக்கு முக்தி கிடைக்கும்'' என்று ஒலித்தது. அதன்படியே செய்து முக்தி பெற்றனர் வேடர்கள். யானைகளும் அந்தப் பாலை பருக... யானை உருவம் நீங்கி, சுயரூபம் அடைந்தனர் ரிஷிகளும் சீடர்களும்! இவர்கள், திருவருள் பெற்ற அந்தத் திருத்தலம் ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம். எல்லா தலங்களிலும் லிங்கத் திருமேனியராக அருளும் ஈசன், இங்கே உருவத் திருமேனியுடன் காட்சி தருகிறார். இந்தக் கோயிலை ஆகாயத் தலமாகவும், மேற்கு திசைக்கு உரிய கோயிலாகவும் போற்றுகின்றனர்.
இந்தத் தலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஅரகேஸ்வரர் ஆலயம். இந்த மூர்த்தியும் சிறந்த வரப்பிரசாதி ஆவார். இவர் கோயில் கொண்டிருக்கும் விஜயபுரத்தை நெருப்புத் தலமாக போற்றுவர். இவரது ஆலயம் கிழக்கு திசைக்கு உரியதாம்!
பஞ்சலிங்க தரிசனம் என்பது பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் ஐந்து திங்கட்கிழமைகள் வரும்போதோ, புரட்டாசி மாதம் ஐந்து சனிக்கிழமைகள் வரும்போதோ மட்டுமே பஞ்சலிங்க தரிசனம் கிடைக்குமாம்.
தவிர, கார்த்திகை மாதம் கடைசி திங்கட்கிழமையுடன் அமாவாசையும் சேர்ந்துவர... இந்த நாளில் விசாகம், அனுராக, ஜ்யேஷ்ட ஆகிய மூன்று நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்று இணைந்தால்... பஞ்ச லிங்கேஸ்வரர்களுக்கு திருவிழா எடுக்கப் பட்டு, தொடர்ந்து 18 நாட்கள் கொண்டாடப்படுகிறது!
|
No comments:
Post a Comment