பாவங்கள் தீர்க்கும் திருத்தலம்
‘‘மூ ணு வருஷங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது... ‘என்ன குருக்களே... இந்த வருஷமாவது மாசி மக தீர்த்தவாரிக்கு நம்ம நதியில கங்கை பெருக்கெடுத்து வருவாளா?’னு ஆபத்சகாயேஸ்வரரின் பக்தர்கள் ஏக்கத்தோட கேட்டா. வெயில் சக்கைப் போடு போடுற நேரம். பக்தர்களின் இந்தக் குறையோட ஆபத்சகாயேஸ்வரர் முன்னாடி போய் நின்னு, ‘ஆபத்சகாயா... மாசி மக தீர்த்தவாரிக்கு நதியில கங்கை பொங்கி வரணும். நீர் சுழிச்சுண்டு ஓடணும். மக்கள் ஆனந்தமா குளிச்சு தங்களோட பாவங்களைப் போக்கிக்க ணும்!’னு வேண்டினேன்.
தவிர, ஏதோ ஒரு தைரியத்துல ‘மாசி மகத்தன்னிக்குத் தீர்த்தவாரி’னு ஊர் முழுக்க போஸ்டர் போட்டு அறிவிப்பும் செய்தேன். பிறகு நடந்ததுதான் அதிசயம்... தீர்த்தவாரிக்கு முதல் நாள் வரைக்கும் நதியில தண்ணி வர்றதுக்கான எந்த அறிகுறியும் இல்ல. வெறும் மணல்தான். மறு நாள் விடிகாலையில ஊர்க்காரங்க என் கிருகத்துக்கு ஓடி வந்து, ‘சாமீ... ஆத்துல நொப்பும் நுரையுமா தண்ணி கரை பொரண்டு ஓடுது. ஆபத்சகாயேஸ்வரர் இன்னிக்கு ஆத்துல எறங்கிடுவார்’னு சந்தோஷமா சொன் னாங்க. பிறகென்ன... ஜாம்ஜாம்னு அன்னிக்குத் தீர்த்தவாரி அமர்க்களப்பட்டுது. அது சரி... திடீர்னு நதியில தண்ணி வந்த அதிசயம் என்னன்னு சொல்ல வேண்டாமா? முத நாள் ராத்திரி கும்பகோணத்துல பேய் மழையாம். அந்தத் தண்ணிதான் இங்கே பெருக்கெடுத்து ஓடி, என் பிரார்த்த னையைப் பலிக்க வெச்சுது...’’ என்று உருக்கமாகச் சொன்னார் ஆபத்சகாயேஸ்வரர் ஆலய அர்ச்சகர் ராஜா குருக்கள்.
இங்கே ‘நதி’ என்று அவர் குறிப்பிட்டது அரிசிலாற்றை (அரசலாறு). இது காவிரியின் உபநதி. ஆபத்சகாயேஸ் வரர் குடி இருக்கும் ஆலயம், ருத்ரகங்கை கிராமத்தில் இருக்கிறது. ருத்ரகங்கை, புராண காலப் பெயர். தற்போது இதன் பெயர் ‘கொத்தவாசல்’. எங்கே இருக்கிறது இந்த ருத்ரகங்கை? மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் இருக்கிறது பூந்தோட்டம். புகழ் பெற்ற கூத்தனூர் சரஸ்வதி ஆலயம் இங்கு தான் இருக்கிறது. இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் இருக்கிறது ருத்ரகங்கை கிராமம். இனி, ருத்ரகங்கை என்ற பெயர் வரக் காரணமான புராணக் கதை.
பாஸ்கரர், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய முனிவர்கள் மூவரும் சிவனை நோக்கி தவம் இருந்தனர். அதன் பலனாக சிவ தரிசனம் பெற்று சிதம்பரத்தில் பதஞ்சலியும், திருவாரூரில் வியாக்ரபாதரும் சிவபதம் அடைந்தனர். ஆனால் பாஸ்கரருக்கு சிவபதம் கிடைக்கவில்லை. அவர் ஆசிரமம் அமைத்து தங்கியிருந்த தலம், அரிசிலாற்றங்கரையில் (ருத்ரகங்கை) உள்ள வில்வ வனம். பாஸ்கரர் தினமும் அரிசிலாற்றில் ஸ்நானம் செய்து, அருகே எழுந்தருளி உள்ள பரிமளேஸ்வரரைத் தொழுது வந்தார்.
அப்போது தாரகாசுரன் எனும் அரக்கன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தான். இது குறித்து, ‘‘நான்முகனே... தாரகா சுரனின் கொடுமையில் இருந்து எங்களைக் காத்தருளுங்கள்’’ என்று பிரம்மாவிடம் சென்று வேண்டுகோள் விடுத்தனர் தேவர்கள். அவர்களை ஆறுதல் படுத் திய பிரம்மன், ‘‘பரமசிவனுக்கும் பார்வதிக்கும் பிறக்கும் குழந்தையால் தான் தாரகாசுரன் அழிவான். கயிலைநாதனிடம் சென்று முறை யிடுங்கள்!’’ என்று கூறினார்.
கயிலைநாதனைக் கண்டு வணங்கிய தேவர்கள், தங்களது அவலத்தைச் சொன்னார்கள். பரமேஸ்வரன் புன்னகைத்தார். முன்னொரு காலத்தில் தன்னை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று வில்வ வனத்தில் (ருத்ரகங்கை) தவம் இருந்த பார்வதிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவும், தேவர்களின் இன்னலை நீக்கவும், தன்னையே எண்ணி நெடுங்காலம் தவம் இருக்கும் பாஸ்கரருக்கு சிவபதம் அருளவும் தீர்மானித்த சங்கரன், ‘‘கவலைப்படாதீர்கள். எனக்கும் பார்வதிக்கும் பிறக்கும் மைந்தன் கந்தவேள் உங்கள் கஷ்டங்களைத் தீர்த்து வைப்பான்!’’ என்று ஆசீர்வதித்து அனுப்பினார்.
இமவானின் மகளாக பிறந்துள்ள பார்வதிதேவியான கௌரியை மணக்க அந்தணர் ரூபத்தில் பூலோகத்துக்கு வந்தார் பரமேஸ்வரன். அப்போதுதான் கயிலைநாதனுக்கு அந்த ஐயம் எழுந்தது. ‘ஆஹா... நம் தலையில் கங்கை குடி கொண்டிருக்கிறாளே... பெண் கேட்டுச் செல்லும்போது, ஏற்கெனவே ஒருத்தியைத் தலையில் தாங்கி வருகிறான் என்று இமவானுக்குத் தெரிந்தால் பார்வதிதேவியைத் திருமணம் செய்து வைக்க மறுத்து விடுவாரோ?’ என்று யோசித்தார் சிவபெருமான்.
அதன் பிறகு வில்வ வனத்துக்கு வந்த ஈசன், கங்கை நல்லாளை ஓர் அழகிய பெண்ணாக மாற்றி, அரிசலாற்றங் கரையோரம் இருந்த பாஸ்கரரின் ஆசிரமத்துக்குள் நுழைந்தார். அந்தணர் ஒருவரைக் கண்ட பாஸ்கரர் எழுந்து வரவேற்றார். அவரிடம் பரமேஸ்வரர், ‘‘தவசீலரே... தீர்த்த யாத்திரையாக காசி, ராமேஸ்வரம் போன்ற தலங்களுக்குச் செல்ல இருக்கிறேன். இப்போதைய நிலை யில் இவளை அழைத்துச் செல்ல இயலவில்லை. எனவே, நான் திரும்பி வரும் வரை இவளைப் பாதுகாக்க வேண்டும்’’ என்று வேண்டினார்.
‘‘தைரியமாகச் சென்று வாருங் கள்!’’ என்று வழியனுப்பினார் பாஸ்கரர்.
அப்போது பரமேஸ்வரன், ‘‘ரிஷியே... ஒரு விஷயம்! தயவு செய்து ஆறு, குளம் போன்ற இடங்களை இவள் கண்ணில் காட்டி விடாதீர்கள்!’’ என்று பாஸ்கரரை எச்சரித்து விட்டுப் புறப்பட்டார்.
ஒரு நாள்... அரிசிலாற்றில் நீராடச் சென்ற பாஸ் கரர், நித்ய பூஜைக்கு உரிய ஒரு பாத்திரத்தை எடுக்க மறந்ததை உணர்ந்தார். எனவே, கங்கையைப் பார்த்து உரக்கக் குரல் கொடுத்து, பாத்திரத்தை எடுத்து வரச் சொல்லி விட்டு, ஆற்றில் இறங்கினார். பூஜைப் பாத்திரத்தை எடுத்து வந்த கங்கை, பாஸ்கரரைத் தேடினாள். அவர் ஜலத்துக்குள் மூழ்கி இருந்தார். ‘சலசல’வென்று குதித்தோடும் தண்ணீரைக் கண்ட கங்கைக்குக் குஷி பிறந்தது. மெள்ள அடி வைத்து ஆற்றுக்குள் இறங்கினாள்... தண்ணீருக்குள் மூழ்கி, மறைந்தே போனாள்.
தண்ணீருக்குள் மூழ்கி இருந்த பாஸ்கரர் எழுந்தார். கரையில், பூஜா பாத்திரத்தைப் பார்த்தவர் அங்கே கங்கை இல்லாமல் இருப்பதைக் கண்டு பதறினார். ‘கங்கா.. கங்கா...’ என்று குரல் கொடுத்தார். கங்கை, கரையில் இருந்தால்தானே?! துடித்தார். கலங்கினார். தன்னை நம்பி ஒப்படைத்த அந்தணர் வந்து கேட்டால் என்ன பதில் சொல்வது என்று புலம்பினார். அந்த பரிமளேஸ்வரனிடமே பிரார்த்தித்தார்.
இந்த நிலையில், தேவர்கள் புடைசூழ... பூத கணங்கள் அணிவகுக்க... முனிவர்கள் வாழ்த்திசைக்க... பரமேஸ்வரனுக்கும் பார்வதிக்கும் இமாலய பர்வதத்தில் திருமணம் முடிந்தது. இதன் பின் இவர்களுக்கு உதித்த கந்தவேள், அரக்கன் தாரகாசுரனை வதம் செய்தது தனிக் கதை. அந்தணர் ரூபத்தில் வந்த பரமேஸ்வரனிடமே மீண்டும் வருவோம்.
ஒரு தினத்தில் பாஸ்கரரின் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார் அந்தண வடிவ பரமேஸ்வரன். இவரைப் பார்த்ததுமே பயம் பற்றிக் கொண்டது பாஸ்கரருக்கு. ‘‘தவசீலரே... யாத்திரை சுபமாக முடிந்து விட்டது. இனி, நான் என் ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான். கங்கையை ஒப்படையுங்கள். பாவம், நான் இல்லாமல் அவள் என்னமாகத் தவிக்கிறாளோ!’’ என்றவர், பாஸ்கரரின் பதிலை எதிர்பார்க்காமல் உள்பக்கம் திரும்பி ‘‘கங்கா...’’ என்று குரல் கொடுத்தார்.
பதில் சொல்லத் தெரியாமல், தினமும் தான் வணங்கும் பரிமளேஸ்வரரின் லிங்கத் திருமேனியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறினார் பாஸ்கரர்.
பக்தனின் தவிப்பைப் பார்த்துப் பரிதாபப்பட்ட பரமேஸ்வரர், லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு, கல்யாணசுந்தரராக அவருக்குக் காட்சி தந்து ஆட்கொண்டார். நடந்ததை விளக்கி, பாஸ்கரருக்கு சிவபதம் அருளினார்.
அப்போது பரமேஸ்வரனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் பாஸ்கரர். ‘‘பரிமளேஸ்வரரே... ஆபத்தில் இருந்து என்னைக் காத்த நீர் இனிமேல் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயரில் இங்கு எழுந்தருள வேண்டும். தவிர, கங்கை தன்னை மூழ்கடித்துக் கொண்ட அரிசிலாற்றில் மூழ்குபவருக்கு கங்கையில் ஸ்நானம் செய்த பலன் கிடைக்க வேண்டும்! இந்த ருத்ரகங்கை தலத்துக்கு வருபவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்க அருள் புரிய வேண்டும்!’’ என்று பிரார்த்தித்தார்.
அதன்படி வில்வ வனத்தில் பாஸ்கரர் தொழுத ஈஸ்வரன், ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்றும், ருத்ரனின் கங்கை வசித்த இடத்துக்கு ‘ருத்ரகங்கை’ என்றும் பெயர் வழங்கப்படலாயிற்று.
இன்றைக்கும் ருத்ரகங்கையில் இருக்கும் சிவாலயத்தில் ஆபத்சகாயேஸ்வரர் லிங்கத் திருமேனிக் குப் பின்னால், கல்யாண கோலத்தில் இறைவன் காட்சி தருகிறார். பார்வதி- பரமேஸ்வரருடன் முருகப் பெருமானும் இங்கு எழுந்தருளி இருப்பது விசேஷம்.
‘‘அரிசிலாற்றில் மூழ்கியெழுந்து, மூன்று இரவுகள் இந்தத் தலத்தில் தங்கினால், அதுவரை செய்த பாவங்கள் தொலையும்!’ என்கிறது புராணம். இந்தத் தலம் பற்றிய தகவல்கள் பிரும்மாண்ட புராணத்தில் இருக்கிறது. இந்தத் தலத்தில் உள்ள நீர்நிலைகளில் கங்கை எழுந்தருளி இருக்கிறாள். தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லை. எனவே, ஆலயத்தில் உள்ள கிணற்றில் நீர் எடுத்துத் தெளித்துக் கொண்டாலும் அதற்குக் கங்கையில் ஸ்நானம் செய்த பலன் உண்டு!’’ என்றார் ராஜா குருக்கள்.
இனி, ஆலய தரிசனம்.
அழகான, கச்சிதமான ஆலயம். நுழைவாயில் தாண்டியதும் வலப் பக்கம் அம்மன் சந்நிதி. நேரே மண்டபம் ஏறினால் ஆபத்சகாயேஸ்வரர். இடப் பக்கம் திரும் பினால் பிராகாரம்.
வலம் வருவோம். கோஷ்டத்தில் சனகாதி முனிவர்கள், பிரம்மா- சரஸ்வதி உடன் இருக்க ஸ்ரீதட்சிணாமூர்த்தி அருள் பாலிக்கிறார். இவர் ஞானகுரு எனப்படுகிறார். ஒரு சாபத்தின் காரணமாக ஏற்பட்ட இன்னல்களிலிருந்து பிரம்மாவும் சரஸ்வதியும் இங்குள்ள இறைவனைத் துதித்து நிவர்த்தி பெற்றார்களாம்.
‘‘இங்கிருந்து சாப விமோசனம் பெற்ற சரஸ்வதி தேவி நடந்து செல்லும்போது அருகே உள்ள ஊரில் ஒட்டக்கூத்தர் என்ற புலவர் தன் பெயரை துதித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். அதன் பிறகே கூத்தனூரில் குடி கொண்டாள்!’’ என்கிறார் உள்ளூர்க்காரர் ஒருவர். பிரும்மா- சரஸ்வதி உடன் இருக்கும் ஞான குருவை வணங்குதல் சிறப்பு!
அடுத்து ஜுர விநாயகர். ஜுரம் மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப் பட்டவர்கள், இவருக்கு பதினோரு குடம் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து, மிளகு போட்டு பொரிச்ச ரசம் மற்றும் புழுங்கல் அரிசி சாதத்தை நைவேத்தியம் செய்தால், நோய் நொடிகள் பறந்து விடுமாம். கங்கையே இந்த ஜுர விநாயகருக்கு அபிஷேகம் செய்திருக்கிறாளாம்.
அடுத்து ரிக் வேத லிங்கம், யஜுர் வேத லிங்கம், சாம வேத லிங்கம், அதர்வண வேத லிங்கம், வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமண்யர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, சனி பகவான், அமர்ந்த கோலத்தில் துர்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், சந்திரன், சூரியன், லட்சுமி நாராயணர், ஸ்ரீவரதராஜ பெருமாள், ஆஞ்ச நேயர்... என மேலும் சில சந்நிதிகள்.
பிராகாரம் முழுக்க, ஆலயத்தின் புராணப் பெருமையைக் குறிக்கும் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
வலம் முடிந்து படிகள் ஏறி, ஸ்ரீஆபத்சகா யேஸ்வரரை தரிசிக்கச் செல்கிறோம். முதலில் நின்ற கோலத்தில் விநாயகர். பொதுவாக, நின்ற கோலத்தில் விநாயகரைப் பார்ப்பது அரிது. ஆலயத்துக்கு வருபவர்களை உட்கார வைக்க, இவர் நின்று கொண்டு வரவேற்பதாக விளக்கம் சொல்கிறார்கள்.
ஆபத்சகாயேஸ்வரர் லிங்கத் திருமேனி. கௌரீஸ்வரர், வில்வவனேஸ்வரர், பரிமளேஸ் வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு ருத்ர ஹோமமும் ருத்ராபிஷேகமும் செய்தால் மிகுந்த சிறப்பாம்.
லிங்கத் திருமேனியின் பின்புறம் ஸ்வாமி, அம்பாளுடன் முருகன் இணைந்த சோமாஸ்கந்த வடிவம். இங்கு ஸ்வாமியின் தலையில் கங்கை குடி கொண்டிருக்கிறாள். தீபராதனையின்போது அர்ச்சகர், கங்கை குடி கொண்டுள்ள இடத்தை பக்தர்களுக்குச் சுட்டிக் காட்டுகிறார். காரிய ஸித்தி, மாங்கல்ய தோஷத்துக்கு ருத்ராபிஷேகம் செய்து பின் ருத்ர ஹோமம் செய்ய வேண்டுமாம். இங்கு பௌர்ணமி வலமும் சிறப்பாக நடைபெறுகிறதாம்.
வெளியே வந்தால் இடப் பக்கமாக அம்பாள் சந்நிதி. பரிமளநாயகி. நறுமணம் வீசும் மலர்களையும், வாசனை மிகுந்த திரவியங்களைக் கொண்டு தேவியானவள் இங்கு இறைவனை பூஜித்ததால், இறைவனுக்கு பரிமளேஸ்வரர் என்றும், இறைவிக்கு பரிமளநாயகி என்றும் பெயர் வந்தது என்கிறார்கள்.
அக்கம் பக்கத்தில் உள்ள பல ஊர்க்காரர்களுக்கும் இந்த ஆபத்சகாயேஸ்வரர் குல தெய்வமாம். எனவே, நாள் கிழமை மற்றும் விசேஷ தினங்களில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகிறது.
கங்காதேவி உறையும் ருத்ரகங்கையை தரிசனம் பண்ண புறப்படுவோமா?!
|
Saturday, 12 August 2017
மயிலாடுதுறை அருகே.. ஆற்றில் இறங்கிய கங்காதேவி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment