ஸ்ரீ சுதன்மனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒரு பக்கம், அரசர் கேட்பது சரியென்று தோன்றியது; இன்னொரு பக்கம், தனது சுயமரியாதைக்கே பங்கம் ஏற்பட்டது போலத் தோன்றியது.
ஊரின் பழைய வழக்கம் என்று அப்படியே கடைப் பிடித்தது, சிக்கலைத் தோற்றுவித்து விட்டது. கோயில் சங்கதிகளில், ஸ்ரீசண்டேஸ்வரர் பெயரை வைத்துக் கணக் குப் பார்ப்பதே ஊர் வழக்கம். கோயில் கணக்குகளுக்கு ஸ்ரீசண்டேஸ்வரரே அதிபதி. தப்பாகக் கணக்கு காட்டினால், சண்டேஸ்வரர் சும்மா விட மாட்டார்.
இப்போதும் அப்படித்தான். கொட்டையூர்க்காரர் ஒருவர் கல்லும் காரையும் கொண்டு வந்து கொடுத்தார். மேல்தோட்டப் பண்ணையார், தோட்டத்து மரங்களை வெட்டிக் கொள்ளச் சொன்னார். சிற்பி ஒருவர் தனது கைங்கரியமாக, மண்டபச் சிற்பங்களைச் செதுக்கித் தருவதாக ஒப்புக் கொண்டார். இப்படியாக ஒவ்வொருவர் ஒவ்வொன்று கொடுக்க, திருப்பணி கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது.
கொடுப்பவர்கள், ஸ்ரீசண்டேஸ்வரர் திருமுன் வந்து நின்று, கொடுப்பதைச் சொல்வார்கள். செய்பவர்கள், ஸ்ரீசண்டேஸ்வரர் திருமுன் நின்று செய்வதைச் சொல்வார்கள். அவ்வளவுதான், வாக்கை நிறை வேற்றுவர். என்னென்ன வேலைகள் மீதமோ, அவற்றையெல்லாம், சுதன்மனும் சண்டேஸ்வரர் திருமுன் நின்று சொல்வார். இரண்டொரு நாட்களி லேயே, இறை அருளால் அந்த வேலைகளுக்கும் வழி கிடைத்து விடும்.
நேற்றுதான், இந்த வழக்கத்தில் சிக்கல் வந்தது. நேற்றைய தினம் திருக்கோயிலுக்கு வருகை புரிந்த சோழப் பேரரசர் திருப்பணிகளை பார்வையிட்டார். உறையூரிலும் முடிகொண்ட சோழநல்லூரிலும் சமீப காலமாகக் கையாள்கிற வழக்கப்படி, கணக்கு வழக்குகள் எழுதப்பட்ட பேரேடுகளைக் கேட்டார்.
அங்குதான் சிக்கல். இங்கே, எழுதி வைத்த கணக்குகள் இல்லை. சில மாதங்களுக்கு முன்பாக உதவியாளர்களான அட்சர சுத்தனும் நல்லாதனும், ‘இனிமேல் கோயில் திருப்பணிகள், ஊர் பொது மன்றங்கள் போன்றவற்றின் கணக்கு வழக்குகளைப் பேரேடுகளில் எழுதி வைத்துக் கணக்குக் காட்ட வேண்டும்!’ என்று சோழப் பேரரசர் ஆணையிட்ட செய்தியைப் பற்றி, சுதன்மனிடம் சொன்னார்கள். இருந்தாலும், சுதன்மன் கவலைப்படவில்லை. அவரது கவனமெல்லாம், எவ்வளவு விரைவாகவும் நேர்த்தியாகவும் திருப்பணிகளைச் செய்வது என்பதில் இருந்ததே தவிர, எழுதி வைக்கிற சிந்தனை வரவில்லை. ஆனால், அரசர் ஏற்கவில்லை. பேரேடுகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவு இட்டு விட்டுப் போய்விட்டார். கையைப் பிசைந்து கொண்ட சுதன்மன், இறையனார் திருமுன் நின்று இறைஞ்சினார். ‘ஐயனே, என்ன செய்வேன். அரசர் கேட்டதைத் தரவில்லையானால், ஊருக்கே கெட்ட பெயர் வரும். திருப்பணிக் கணக்குகளில் எந்தத் தவறும் கையாடலும் நடக்கவில்லை என்பதை எப்படி அரசருக்கு விளக்குவது?’
அன்று இரவெல்லாம் உறக்கம் வரவில்லை. ‘எப்படிக் கணக்கு எழுதுவது, எங்கேயிருந்து தொடங் குவது, அவ்வப்போது கொண்டு வந்து கொடுத்த தொண்டர்களது கைச்சாத்துகளுக்கு (கையப்பம்) இப்போது எங்கே போவது, குத்துமதிப்பாக எழுதிக் கொடுத்தால் தவறாகி விடுமே!’ _ குழப்பத்தில் தவித்த சுதன்மன், பித்துப் பிடித்தது போல, மண்டபத்திலேயே கிடந்தார். ஒரு மணி, இரண்டு மணியல்ல... கிட்டத்தட்ட நான்கு நாட்கள் அப்படியே கிடந்தார்.
அட்சரசுத்தனின் ஒலியைக் கேட்டு எழுந்த சுதன்மன், ஒன்றும் புரியாமல் விழித்தார். ‘அரசர் ஏதாவது பரிகாசம் செய்கிறாரா?’
பரிகாசமும் இல்லை, ஒன்றும் இல்லை. சுதன்மன் மண்டபத்தில் விழுந்து கிடந்தது உண்மைதான். ஆனால், சிவபெருமான் விட்டு விடுவாரா, இல்லை அவருடைய பிரதான கணக்கர் சண்டேஸ்வரர்தாம் விட்டு விடுவாரா? இருவரும் புறப்பட்டனர். சிவனார், சுதன்மனாக வேடமேந்தினார்; கீழ்க் கணக்கரானார் (உதவிக் கணக்கர்). சண்டேஸ்வரர், ஊர் தலைமைக் கணக்கர் ஆனார். இருவரும், பேரேட்டுக் கட்டுகளையும், நிவந்தக் கணக்குகளையும் தூக்கிக் கொண்டுபோய், சோழப் பேரரசர் முன் சமர்ப்பித்தனர். கணக்குகளின் துல்லியத்தையும் நேர்த்தியையும் பார்த்த அரசர் வியந்து போனார். தனது கீழ்க் கணக்கரான சுதன்மன், துல்லியமாகக் கணக்கிடுவதில் சமர்த்தர் என்று தலைமைக் கணக்கர் சான்றிதழ் வாசிக்க, உறையூர்க்காரர்களையும் அரண்மனைக் கணக்கரை யும், சுதன்மனிடம் கணக்குக் கற்றுக் கொள்ள அனுப்பிவிட்டார் அரசர்.
கீழ்க் கணக்கராகச் சென்று அரசரிடம் கணக்கு கொடுத்து ஏற்பிக்கச் செய்த சிவனார் எங்கே இருக்கிறார்? வாருங்கள், அவரை வணங்கப் புறப்படுவோம்.
கும்பகோணம்- திருவையாறு பாதையில், புளியஞ்சேரி என்று ஓர் இடம் வரும். அங்கிருந்து வலப் பக்கமாக, ‘திருப்புறம்பியம்’ என்று வழிகாட்டப்பட்டிருக்கும். அந்தத் திருப்பத்தில் திரும்பி, சுமார் 2 கி.மீ. சென்றால், இன்னம்பூர் எனும் ஊரை அடையலாம் (இன்னம்பூரிலிருந்து மேலும் சுமார் 3 கி.மீ. சென்றால், திருப்புறம்பியம்). இந்த இன்னம்பூர்தான், நாம் தேடி வந்து கொண்டிருக்கும் திருத்தலம். இன்னம்பூர், இன்னம்புர் என்றெல்லாம் மக்கள் வழக்கில் வழங்கும் இந்தத் திருத்தலம், தேவாரத்தில் ‘இன்னம்பர்’ என்று குறிக்கப்படுகிறது. ‘எண் திசைக்கும் புகழ் இன்னம்பர்’ என்று சம்பந்தரும் ‘இன்னம்பரான்’ என்று நாவுக்கரசரும் இந்தத் திருத்தல நாதனை புகழ்ந்துள்ளனர்.
ஊருக்குள் நுழைந்து செல்லும்போது, சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய ராஜ கோபுரம், ஐந்து நிலைகளுடன் கம்பீரமாக நிற்கிறது. சிற்பங்கள், பொம்மைகள் என்று நிறைய இல்லையென்றாலும், பழங்காலக் கட்டுமானம் கருத்தைக் கவர்கிறது.
கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால், நடுவில் விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபம். வலப் பக்கத்தில் சுகந்த குந்தளாம்பிகை சந்நிதி. இதுவே வெளிப் பிராகாரம். இந்தப் பிராகாரத்தில் சந்நிதி கள் ஏதுமில்லை. தொடர்ந்து, உள் வாயிலைத் தாண்டிச் சென்றால், உள் பிராகாரம்; விசாலமாக இருக்கிறது. பிராகார வலத்தைத் தொடங்குகிறோம்.கிழக்குச் சுற்றில், முதலில் சூரியன். தென் கிழக்கு மூலையில் மடப்பள்ளி. தெற்குச் சுற்றுக்குள் திரும்பி நடக்கிறோம். தென்மேற்கு மூலைக்குச் சற்று முன்பாக, சைவ நால்வர் சந்நிதி. தென் மேற்கு மூலையில் கன்னி மூல கணபதி. அடுத்ததாக, மேற்குச் சுற்றில், வாகனங்கள் வைப்பதற்கான இடங்கள். மூலவருக்கு நேர் பின்னால் இருக்கும்படியான சந்நிதி யில், அருள்மிகு பாலசுப்பிர மணியர். தொடர்ந்து லிங்கங்கள். அடுத்து மகா லட்சுமி சந்நிதி. வடக்குச் சுற்றில், தெற்கு நோக்கிய விஷ்ணு துர்கை சந்நிதி. சற்றுத் தள்ளி, மாடத்தில் உறையும் ஸ்ரீநடராஜர். வடக்குச் சுற்றிலிருந்து கிழக்குச் சுற்றுக்குள் திரும்பும் இடத்தில், பைரவர் சந்நிதி. அடுத்து சந்திரன்.
உள்பிராகார வலத்தை நிறைவு செய்து விட்டோம். உள்ளே செல்வதற்காக நிற்கிறோம். திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் பதிகங்கள் நான்கும் இந்தத் திருத்தலத்துக்கு உள்ளன.
இந்திரனது யானையான ஐராவதம் பூசித்த தலம் இது. பாற்கடலில் தோன்றியதும், நான்கு கொம்புகளை உடையதுமான ஐராவதம் ஒரு முறை, துர்வாசருக்குத் தக்க மரியாதை காட்டாத காரணத்தால், சாபம் பெற்று காட்டு யானையானது. தனது சாபம் தீர வழியைத் தேடியது. ‘இன்னம்பரில், தீர்த்தமொன்றை ஏற்படுத்தி, அதில் நீராடி, இறைவனை வழிபட்டால், சாபம் தீரும்’ என்பதை அறிந்து, இன்னம்பர் அடைந் தது. தீர்த்தம் ஏற்படுத்தியது. சாபம் நீங்கப் பெற்றது. திருக்கோயிலுக்கு முன்பாக உள்ள ஐராவத தீர்த்தத்தில் நீராடி வழிபடுபவர்கள், அனைத்துக் குறைகளும் நீங்கப் பெறுவார்கள் என்பது கண்கூடு.
முன்னர் இந்தப் பகுதி முழுக்க செண்பக மரங்களாக இருந்ததாம். அதனால், செண்பகக் காடு (சம்பகாரண்யம்) என்று பெயர். காட்டு யானை ஒன்று, செண்பக மரத்தடியில் வந்து தீர்த்தம் தோண்ட முனைந்தது. அப்போது, அந்த இடத்திலிருந்து வெடித்து வெளிப்பட்டார் இன்னம்பரான் என்று போற்றப்படுகிற சிவலிங்கப் பெருமானார். யானை, அருகிலேயே தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டது என்பதாகவும் ஐராவத வரலாறு வழங்கப்படுகிறது. பாவங்கள் மற்றும் சாபங்கள் ஆகியவற்றைத் தீர்க்கும் தலமாகவும் இன்னம்பர் புகழப்படுகிறது.
இன்னம்பரின் பெருமைகளை அசை போட்டுக் கொண்டே, உள் பிராகாரத்திலிருந்து மூலவர் சந்நிதி நோக்கி நகர்கிறோம். உள்ளேச் செல்லும் முகப்பில், தூண் ஒன்றில்... நடனமாடிக் கொண்டிருக்கும் நர்த்தன விநாயகர். அண்டமெல்லாம், ஆகாசமெல்லாம், சபையெல்லாம் ஆடுகிற நடராஜப் பெருமானின் திருமகனாயிற்றே... ஆடுவதற்குக் கற்றா கொடுக்க வேண்டும்! இந்த ஆடல் விநாயகரை வணங்கி, உள்ளே நகர்கிறோம். முகப்பு மண்டபம் போன்ற பகுதியின் வலப் பக்கத்தில், அம்பாள் சந்நிதி. ‘ஏற்கெனவே, வெளிப் பிராகாரத்தில் அம்பாள் சந்நிதி ஒன்றைப் பார்த்தோமே!’ என்கிறீர்களா? உண்மை. இந்தக் கோயிலில் இரண்டு அம்பாள் சந்நிதிகள்.
இது அருள்மிகு நித்தியகல்யாணி அம்மனின் திருச் சந்நிதி. நின்ற திருக்கோலத்தில், அழகு வதனத்தில் அருள் பொங்கி வழிய தரிசனம் தருகிற அம்மன். எப்போதும் மங்கலம் தருகிற இந்த அம்மனுடைய புன்னகையின் எழில் சொல்லி மாளாது. அம்பாளின் திருப்பாதங்களைப் பணிந்து, மூலவர் சந்நிதி நோக்கித் திரும்புகிறோம். அர்த்த மண்டப வாயிலில் இருக்கும் விநாயகரையும், துவார பாலகர்களையும் வணங்கி உள்ளே நுழைகிறோம். கருவறைக்குள், அருள்மிகு எழுத்தறி நாதர். பெயரே சற்று வித்தியாசமாக இருக்கிறதே!
‘எழுத்தறிவித்தவன் இறைவன்’ என்பார்கள்; ஆனால், இங்கே இறைவனுக்கே எழுத்தறிநாதர் என்று பெயர். வினோதமாகத்தான் இருக்கிறது. சுதன்மன் எழுதாமல் எழுதி வைத்த கணக்கை அறிந்தவர் அல்லவா, அதனால் இந்தப் பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். எழுதி யதும் எழுதாததும் அறிந்தவரான சர்வேஸ்வரனுக்கு, இத்தகைய பெயர் ஏற்பட, மற்றொரு காரணமும் உண்டு. வடமொழியில், இந்த சுவாமி ஸ்ரீஅட்சரபுரீஸ்வரர் எனப்படுகிறார்.
அகத்தியர் பெரிய மேதை என்பதை நாமறிவோம். ‘நெற்றி உமிழ் செங்கண் தழல் புரை செங்கடவுள் தந்த தமிழ் தந்தான்’ என்று சிவபெருமானிடமிருந்து தமிழைப் பெற்று, அதை அகத்தியர் உலகுக்குக் கொடுத்த மேன்மையைப் பாடுவார் கம்பர். வடமொழியும் வண்ணத் தமிழும் சர்வ ஞானமும் சர்வ வல்லமையும் கொண்டவரான அகத்தியர், இன்னம்பருக்கு வந்து, இங்கேதான் இலக்கணம் கற்றாராம். தமிழைத் தந்த சிவனார், அதன் பெருமை செம்மையுற வேண்டும் என்பதற்காக, அகத்தியருக்கு இலக்கணம் பயிற்றுவித்தார் போலும்! இலக்கணம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் என்பதால், இவருக்கு அட்சரபுரீஸ்வரர் என்று திருநாமம். சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால், தான்தோன்றீஸ்வரர் என்றும் திருநாமம் உள்ளது.
‘‘படிப்பிலும் கல்வியிலும் சிறப்பு பெற வேண்டும் என்பதற்காக இங்கு பிரார்த்திப்பது, நல்ல பலன் தரும்’’ என்கிறார் கோயில் அர்ச்சகர். தொழில்நுட்பத்தின் உச்சத்துக்குப் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நாட்களிலும், மேல்படிப்பு வேண்டுபவர்கள், தொழில் கல்லூரிகளில் இடம் தேடுபவர்கள், வெளிநாடு சென்று பயில விரும்புப வர்கள் என்று பல நிலைகளில் கல்வியை நாடுபவர் களும் இந்த எழுத்தறிநாதரை நாடி வந்து நலம் பெறுகிறார்கள். சரியாகப் பேச்சு வராதவர்களுக்கும் இந்த ஈசர் அருள் வழங்குகிறார். பேச்சுத் தடங்கல் உள்ளவர்களை இங்கு அழைத்து வந்து, அவர்களின் நாக்கில் மலரால் எழுதினால், அவர்கள் பேச்சுத் திறன் பெறுவது திண்ணம் என்கிறார்கள். சின்னக் குழந்தைகளுக்கு வித்யா ஆரம்பமும் (கல்வி தொடக்கம் - அட்சராப்பியாசம்) இங்கே செய்வது வழக்கம்.
‘எண்டிசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய வண்டிசைக்கும் சடையீரே வண்டிசைக்கும் சடையீர் உமை வாழ்த்துவார் தொண்டிசைக்கும் தொழிலோரே’
_ என்று சம்பந்தர் போற்றிய அருள்மிகு எழுத்தறி நாதரை வணங்குகிறோம். பெரிய ஆவுடையார்; பெரிய லிங்க பாணம். ஆஜானுபாகுவாகக் காட்சி கொடுக்கும் அருள்மிகு எழுத்தறிநாதரைக் காணக் காண மகிழ்ச்சி மேலோங்குகிறது. மேலே ருத்திராட்ச விமானம் குடை பிடிக்க, சிவலிங்கனார் மெலிதான புன்னகையோடு முகம் காட்டுவது போலத் தோன்றுகிறது. சிவப்பரம்பொருளே இங்கு அட்சரபுரீஸ்வரராக இருப்பதால்... அவரேதாம் சரஸ்வதி, அவரேதாம் பிரம்மா. அதுமட்டுமில்லை, பாவங்களும் சாபங்களும் போக்குவதால், அவரேதாம் நவக்கிரகங்களும்கூட!
அட்சரபுரீஸ்வரரை வழிபட்டு, மீண்டும் உள் பிராகார வலம் வருகிறோம். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, காட்சி கொடுத்த ஈசர் மற்றும் துர்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர். ஓ! இவர்தாம் தலைமைக் கணக்கர். வெளிப் பிராகாரத்தை அடைகிறோம்.
வெளிப் பிராகாரத்தில்தான், அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை சந்நிதி. முகப்பு மண்டபம் தாண்டி உள்ளே போக, நின்ற திருக்கோலத்தில், சதுர்புஜ நாயகியாக (நான்கு திருக்கரங்களுடன்) அம்பாள். இந்த அம்பாளே, திருக்கோயிலின் பிரதான அம்பாள். சுகந்த குந்தளாம்பிகை என்ற வடமொழிப் பெயரோடு, கொந்தார் பூங்குழல் அம்மை (நறுமணம் தரும் கூந்தலைக் கொண்டவள்) என்றும், மின் கொம்பனையாள் (மின்னல் கொடிக்கு நிகரானவள்) என்றும் அழகிய தமிழ்த் திருநாமங்களும் இந்த அம்பிகைக்கு உண்டு.
வெளிப் பிராகாரத்தில் வந்து நின்று காணும்போது, மூலவர் விமானத்தின் அழகு தெரிகிறது. இந்த விமானம், கஜ பிருஷ்ட விமானம். விமானத்தின் பின்புறமும், பக்கவாட்டுகளும் வளைந்து அரை வட்டம் போலத் திகழ, முன்பக்கம் நேரான சம பரப்பாக இருக்கும். பின்புறம் இருந்தும் தொலைவிலிருந்தும் பார்க்கும்போது, யானை ஒன்று படுத்துக் கொண்டிருப்பதுபோலத் தோன்றும். இதை, தூங்கானை மாடம் என்பார்கள்.
காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்றான இன்னம்பர் திருக்கோயில் சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களாலும் திருப்பணி கண்டுள்ளது. திருநாவுக்கரசு சுவாமிகள், இன்னம்பரில் இறையனார் கீழ்க்கணக்கர் என்பதைச் சுட்டுகிறார்.
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்(று) அழுது காமுற்று அரற்றுகின்றாரையும் பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும் எழுது கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே
அழுது புரண்டு தொழுகின்றவரையும், வெறுமே பொழுது போக்குபவர்களையும் இன்னம்பர் இறைவன், கீழ்க் கணக்கு எழுதிக் கொள்கிறாராம். சுதன்மனுக்காகக் கீழ்க் கணக்கு எழுதிய சம்பவத்தை, இந்த வரிகள் கோடிட்டுக் காட்டினாலும், நமக்காக இறையனார் கீழ்க் கணக்கு எழுதுகிறார் என்பதையே மிக ஆழமாகப் புலப்படுத்துகின்றன. எப்படி?
கீழ்க் கணக்கு என்பதற்கு கணக்கெழுதுவது என்பது தவிர வேறொரு பொருளும் உண்டு. இது, சிறு சிறு வரிகளாக எழுதிக் கொள்ளும் குறிப்பு. நம்மைப் பற்றிச் சிறு குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்கிறாராம் ஈசன். அதனால் என்ன என்கிறீர்களா? நல்ல குறிப்பானால் அப்படியே வைத்துக் கொள்வார்; நமது தவறுகளைப் பற்றிய குறிப்பானால், அவர் கால்களில் பணிந்து இறைஞ்சினால், குறிப்புகளைத் தூக்கிப் போட்டு விடுவார். அபயமும் அருளும் தருவார். சிறு குறிப்புகளைத் தூக்கிப் போடுவது சுலபமல்லவா! அதனால்தான் அவர் கீழ்க் கணக்கர்!
‘ஐயனே, எங்கள் கணக்கு எப்போதும் நல்ல கணக்காகவே இருக்கச் செய்!’ என்று வேண்டிய படியே வெளியே வருகிறோம்.
No comments:
Post a Comment