மோட்சம் தரும் ஏழு தலங்களுள் ஒன்று காசி. மற்றவை அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, அவந்தி, துவாரகா ஆகியவை. ‘கஸ்’ என்றால் ‘ஒளிர்தல்’ என்று பொருள். இந்த நகரின் தெற்கே அஸி நதியும், வட கிழக்கே வருணை நதியும் கங்கையுடன் கலப்பதால் இந்தத் தலம் ‘வாரணாசி’ என்றும் அழைக்கப்படுகிறது.


சென்னை-காசி ரயில் பயண நேரம் சுமார் 40 மணி நேரம். கொல்கத்தா மற்றும் டெல்லி வழியாக விமானம் மூலமும் செல்லலாம்.

கிருத யுகம்- திரிசூல வடிவம், திரேதா யுகம்- சக்கர வடிவம், துவாபர யுகம்- தேர் வடிவம், கலி யுகம்- சங்கு வடிவம் என்று காசி நகரம் விளங்குவதாக காசி ரகசியம் நூல் கூறுகிறது.

சிவனும் பார்வதியும் மணம் முடித்து பூமிக்கு வந்த போது பிரளய காலத்திலும் அழியாத காசியை தாங்கள் வசிக்க தேர்ந்தெடுத்தனர் என்றும், அவர்கள் கால் ஊன்றிய இடமே காசி என்றும் காசி காண்டம் கூறுகிறது.

காசியில் உயிர் துறக்கும் உயிர்களின் காதுகளில் காசி விஸ்வநாதர் பிரணவ மந்திரம் ஓதி, மோட்சமடையச் செய்கிறார் என்பது ஐதீகம். இங்கு பல கோடி சிவ லிங்கங்கள் இருப்பதாக பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. பகவான் மகாதேவ், தனது திரிசூலத்தின் மீது நின்று, காசியைப் படைத்தார் என்பது ஐதீகம்.

காசிக்கு அருந்தனா, சுதர்சனா, பிரம்மாவதாரா, பூபவதி, ராமநகரா, மாளநி, காசிபுரா, கேதுமதி ஆகிய பெயர் களும் உண்டு. தவிர மச்ச புராணம் அவிமுக்தா க்ஷேத்திரம் என்றும், கூர்ம புராணம் மற்றும் காசி ரகசியம் ஆனந்தவனம் என்றும் குறிப்பிடுகின்றன. மேலும், ஈசன் இங்கு தங்கி அருளுவதால் ‘ருத்ர வாசம்’ என்றும் ஞானம் வளர்க்கும் பூமி என்பதால் ஞானபுரி என்கிற பிரம்மவர்த்தனா என்றும் ஸ்காந்த புராணம் கூறுகிறது. வெள்ளைக்காரர்களால் ‘பனராஸ்’ என்று குறிப்பிடப்பட்டதும் இந்த நகரமே.

‘முந்தைய ஜன்மங்களில் ஏராளமான ஆலயங்களுக்குச் சென்று வழிபட்ட உயிர்களுக்கு மட்டுமே இந்த ஜன்மத்தில் காசி நகரின் கதவுகள் திறக்கும்’ என்கிறது ஸ்ரீசிவமகா புராணம்.

சிவபெருமான் அருளால் சனி பகவான் நவக்கிரகங்களில் ஒன்றானது இங்குதான்.

காசி மாநகரிலுள்ள சிவலிங்கங்கள்: சுயம்பு லிங்கங்கள்- 11, தேவர்கள் ஸ்தாபித்தது- 46. முனிவர்கள் பிரதிஷ்டை செய்தது- 47, கிரகங்கள் வணங்கியது- 7, கணங்கள் வழிபட்டது- 40. பக்தர்கள் நிறுவியது- 295. திருத்தலங்களது நினைவாக நிறுவப் பட்டவை- 65.

ஞானம் பெற்ற பின் கௌதம புத்தர், தனது உபதேசத்தை துவக்கியது இங்குதான். எனவே, புத்த மதத்தினருக்கும், காசி புனிதத் தலமாகத் திகழ்கிறது. மகாவீரரின் முன்னோடியான பரஸ்வநாதர் என்ற தீர்த்தங்கரர் அவதரித்த இடமாதலால், ஜைனர்களும் காசியை புனிதத் தலமாகக் கருதுகின்றனர்.


மார்க்கண்டேயர், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மத்வர், சைதன்யர், வேதாந்த தேசிகர், கபீர்தாசர், துளசிதாசர், ராமானந்தர், சூர்தாஸ் ஆகிய மகான்களால் காசியின் மகிமை பாடப் பெற்றிருக்கிறது. ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், குருநானக் ஆகியோர் காசித் தலத்துக்கு வந்து இங்குள்ள ஆலயங்களை வழிபட்டுள்ளனர். ஆதிசங்கரர், மணிகர்ணிகா காட் முக்தி மண்டபத்திலிருந்து கங்கா துதி பாடி, அத்வைதத்தை போதித்தார். அன்ன பூர்ணாஷ்டகம், கங்காஷ்டகம், மனீஷா பஞ்சகம் ஆகிய நூல்களையும் இயற்றினார். குமரகுருபரர், காசி கலம்பகத்தையும் துளசிதாசர் ராமச்சந்திரமனஸ் நூலையும் எழுதியது காசியில்தான்.

1934-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி அன்று, காஞ்சி மகா பெரியவர் அலகா பாத் நகரிலிருந்து காசிக்கு பாத யாத்திரையாக சுமார் 130 கி.மீ. தூரத்தைக் கடந்து, அக்டோபர் 6-ஆம் தேதி சனிக்கிழமை அன்று ‘காசி நகர்ப் பிரவேசம் செய்தார். அங்கு அவரை பூர்ண கும்ப மரியாதைகளுடன் காசி மகாராஜா, பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோர் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வரவேற்று உபசரித்தனர்.

சுமார் 25,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது காசி நகரம். முதன் முதலில் கங்கைக் கரையில் வந்து தங்கிய காசியஸ் என்ற மரபினரின் நினைவாக இந்த நகரம், காசி எனப் பெயர் பெற்றது என்றும் கூறுவர். காசா என்ற மன்னர், இந்த நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தபோது காசி என்று பெயர் சூட்டியதாகவும் தகவல் உண்டு.

‘கலையழகு மிக்க அற்புத ஆலயம்!’ என காசி விஸ்வநாதர் ஆலயத்தைப் புகழ்ந்திருக்கிறார் கி.பி.1193-ல் இந்தியாவுக்கு வந்த சீன யாத்ரிகர் யுவான்-சுவாங். ‘கங்கையின் தீர்த்தத்துக்கு, நோய்க் கிருமிகளைக் கொல்லும் சக்தி உள்ளது’ என்று கனடா நாட்டு விஞ்ஞானி எஃப்.சி. நெல்சன் கூறியிருக்கிறார். ‘காசி யில் அதிக அளவில் கடவுள்கள் குடி கொண்டுள் ளனர்!’ என்கிறார் ‘டயானா எக்’ என்ற ஆராய்ச்சியாளர்.

காசி மாநகரின் தெற்கே உள்ள கேதாரக் கண்டத்தில் கேதாரீசுரரும், மத்தியிலுள்ள விச்வேச்வரக் கண்டத்தில் ஸ்ரீவிசுவநாதரும் வடக்கே உள்ள ஓங்காரக் கண்டத்தில் ஓங்காரேஸ்வரரும் அருள் புரிகின்றனர்.

தாட்சாயினியின் இடக்கரம் சிதறி விழுந்த தலம் ஆதலால் காசி நகரம் சக்தி பீடங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

கயிலாயத்தில் ஒரு நாள் உமையவள், பரமனின் இரு கண்களை, 2 நாழிகை நேரம் பொத்தியதால் சர்வ லோகங்களும் இருண்டன. பின் தேவி, தன் கரங்களை நீக்கியபோது, தம் மேனியின் நிறம் மாறுபட்டிருந்ததை உணர்ந்து திடுக்கிட்டாள். இது குறித்து பரமனிடம் அவள் கேட்டபோது, ‘‘நீ எனது கண்களை மூடியதால் ஏற்பட்ட பாவங்களின் திரட்சி இது’’ என்றார்.
‘‘இதற்கு நான் செய்ய வேண்டிய பரிகாரம் யாது?’’ எனக் கேட்டாள் அன்னை.
‘‘பத்ரிகாசிரமம் சென்று, குழந்தை வடிவில் காத்திரு. அப்போது அங்கு வரும் காத்தியாயன முனிவன் உன்னை தனது ஆசிரமத்துக்குக் கொண்டு போய் எட்டு ஆண்டுகள் வளர்ப்பான். பிறகு அவன் தரும் யோக தண்டம், ஜப மாலை, தீப ஸ்தம்பம், இரண்டு குடங்கள், விசிறி, பலகை, வியாக் ராசனம், புத்தகம், வறுத்த பயறு, கங்கை மணல் மற்றும் தீர்த்தம், குடை ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு வறுமையில் தவிக்கும் காசிக்குச் சென்று அன்னதானம் செய். உன் குறை தீரும்’’ என்று அருளினார் பரமன். அதன்படி 12 ஆண்டுகள் அன்னதானம் செய்து அன்னபூரணி என்று பெயர் பெற்றாள் அன்னை.

பஞ்ச கங்கை உள்ள இடம் காசி. புராணங்களில் இடம்பெற்றுள்ள கிரணா, காத பாபா, சரஸ்வதி, கங்கா, யமுனா ஆகியவை இந்த நதிகள். இவை கிருத யுகத்தில்- தர்ம நதிகள் என்றும், திரேதா யுகத்தில்- தூத பாபா என்றும், துவாபர யுகத்தில்- பிந்து தீர்த்தம் என்றும், கலி யுகத்தில்- பஞ்ச கங்கா என்றும் அழைக்கப்படுகின்றன.
மாசி மாதத்தில் பிரயாகையில் உள்ள கங்கையில் நீராடினால் கிட்டும் புண்ணியத்தைவிட கோடி மடங்கு புண்ணியம் இந்த பஞ்ச கங்கையில் நீராடினால் கிட்டும் என்பது ஐதீகம்.இங்கு கங்கை உத்தரவாகினியாக- வடக்கு நோக்கி பாய்கிறது. அதன் கரையில் 64 ஸ்நான கட்டங்கள் உள்ளன. கங்கைக் கரையில் தகனம் செய்து சாம்பலை கங்கையில் கலந்தாலும், கங்கை நீர் தூய்மை கெடாமல் இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது.

காசி மாநகரில் கங்கையின் 64 ஸ்நான படித்துறைகளுள் (காட்) முக்கியமானவை:
அஸி: கங்கை சங்கமமாகும் இடம்.
தசாஸ்வமேதம்: பிரம்மன் பத்து முறை அசுவமேத யாகம் செய்த இடம்.
வருசன: வருணா நதி, கங்கையுடன் கலக்கும் இடம். இங்குள்ள ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயில் மற்றும் மாதவர் தரிசனம் முக்கியமானவை.
பஞ்சகங்கா: கிரணா, தூதபாபா, சரஸ்வதி, கங்கை, யமுனை ஆகிய 5 நதிகள் சேரும் இடம். இங்குள்ள மாதவர் மற்றும் ஸ்ரீபஞ்சகங்கேஸ்வரர் தரிசனமும் முக்கிய மானது. இங்கு கார்த்திகை மாதத்தில் படிக்கட்டுகளில் பெண்கள் அமர்ந்து கங்கா மற்றும் பார்வதி பூஜை செய்கிறார்கள். அதன் பிறகு விளக்கு ஏற்றி மூங்கிலில் பிணைத்து கங்கையில் விடும் காட்சி மனதைக் கவரக் கூடியது.
மணிகர்ணிகா: அன்னையின் திருச்செவிகளிலிருந்து குண்டலம் வீழ்ந்த தலம். அன்னையின் காதணி வீழ்ந்ததால் பீடத்தின் பெயர் மணிகர்ணிகை என்றாயிற்று.
இங்கு நீராடி முன்னோர்க்கு தீர்த்த சிராத்தம் செய்வது சிறப்பு. மகா சங்கல்பம், பிராயச்சித்தம், அனுக்ஞை, பசு தானம் ஆகியவற்றையும் இங்கு மேற்கொள்வது புண்ணியம் தரும். வெள்ளியிலான சிறிய பசு உருவத்துடன், பால் சொம்பு ஒன்றையும் தானமாகக் கொடுக்கிறார்கள். வசதி உள்ளவர்கள் உண்மையான பசுவை வாங்கி, தானம் கொடுப்பதும் உண்டு. ‘மணிகர்ணிகா’ கட்டத்தில் மொட்டை அடித்துக் கொள்வது சிறப்பு பிரார்த்தனை.

ஹனுமான் காட்: இங்கு காம கோடீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கட்டத்தில் உள்ள விஷ்ணு பாதங்கள் வழிபாட்டுக்கு உரியவை. கோயிலுக்கு வெளியே மகாகவி பாரதியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. பாரதியார் மூன்று ஆண்டுகள் ஹனுமான் காட் பகுதியில் வசித்தா ராம். இங்குதான் தலைப்பாகை கட்டும் வழக்கம் அவருக்கு ஏற்பட்டதாம். அவர் சம்ஸ்கிருதம் கற்றதும் இங்குதான்.

கங்கை நதியில் ‘ராஜ்காட்’ படித்துறை வரை படகில் சென்றால், பல கோயில்கள், ஸ்தூபிகள், கட்டடங்கள். துர்கா குண்டம்- துர்காதேவி ஆலயம், பம்பிங் ஸ்டேஷன். கமாச்ரா- சென்ட்ரல் ஹிந்து காலேஜ், கதோலியா- காசி ராஜா சிவாலயம், ஸ்ரீவிஸ்வநாதர் மற்றும் ஸ்ரீஅன்னபூரணி ஆலயங்கள், மந்தாகினி தோட்டம், பிரின்ஸ் ஆப் வேல்ஸ் காலேஜ், விக்டோரியா பார்க், அசதிக்ஷேப க்ஷேத்திரம், ஒளரங்கசீப் கட்டிய மாதவ ராயின் சமாதி, சாரநாத் எனும் தமேஷ் (புத்தரது கால கல்வெட்டுகள் அரசு பாதுகாப்பில் உள்ள இடம்), காசி அரசரது மாளிகை ஆகியவற்றைக் காணலாம்.

இங்கு பிரம்ம சொரூபமாக முப்பத்து முக்கோடி சிவ லிங்கங்கள் உள்ளனவாம். அவற்றுள் சிறந்தது ஜோதிர்லிங்கமான ஸ்ரீவிஸ்வநாதர்.
கங்கையின் மேற்குக் கரையில், மணிகர்ணிகா படித்துறை அருகில், குறுகிய கடைத் தெருவில் உள்ளது ஸ்ரீவிஸ்வநாதர் திருக்கோயில்.

இதன் கோபுரம் சுமார் பதினைந்தரை மீட்டர் உயரமுள்ளது. இதன் மேற்கூரை, மகாராஜா ரஞ்சித் நன்கொடையாக வழங்கிய தங்கத்தால் வேயப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
புராதனமான விஸ்வநாதர் கோயில் அமைந்திருந்த இடத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை. கி.பி.1585-ல் நாராயண பட்டர் என்ற பண்டிதர் சக்ரவர்த்தி அக்பரது சம்மதம் மற்றும் ராஜா தோடர்மால் உதவியுடன் விஸ்வநாதருக்கு ஆலயம் அமைத்தார். கி.பி.1669-ல் ஒளரங்கசீப் இந்த இடத்தில் மசூதி ஒன்றைக் கட்டினார். முந்தைய கோயிலின் மிச்ச மீதிகளை அந்த மசூதியின் பின்புறம் இன்றும் காணலாம்.
தற்போதுள்ள காசி ஸ்ரீவிஸ்வநாதர் கோயில் கி.பி.1780-ல் இந்தூர் மகாராணி அகல்யாபாய் ஹோல்கரால் கட்டப்பட்டது. பழைய கோயிலின் அமைப்பிலேயே ஐந்து மண்டபங்கள் கொண்டதாக இதை நிர்மாணிக்க முடிவு செய்தார். அப்போது எங்கு கருவறை அமைப்பது? என்ற கேள்வி எழுந்தது. இறுதியில் ‘நான்கு வாயில்களுடன் மண்டபம் ஒன்று அமைத்து, அதில் முழுக்க கற்பூரத்தை தூவ வேண்டும். எந்த இடத்தில் கற்பூரம் தானாக பற்றிக் கொள்கிறதோ அங்கு கருவறை அமைத்து லிங்கப் பிரதிஷ்டை செய்யவும்’ என்று அருள்வாக்கு கிடைத்தது. அதன் பிறகு சுமார் 70 ஆண்டுகளாக ‘ஞானவாவி’ என்ற தீர்த்தக் கிணற்றில் கிடந்த ஜோதிர்லிங்கத்தை வெளியே எடுத்து பிரதிஷ்டை செய்தனர்.
ஆண்டு முழுவதும் தடங்கலின்றி அபிஷேகம் நடை பெறுவதற்காக ராமேஸ்வரம் கோடி தீர்த்தத்தை காசி விஸ்வநாதருக்கும், கங்கையின் புனித நீரை ஸ்ரீராமநாதருக்கும் கிடைக்குமாறு திட்டம் ஒன்றை வகுத்தார் மகாராணி அகல்யா பாய். கோயிலின் வலப்பக்கமுள்ள ஞானவாவி கிணற்றை, சிவ தீர்த்தம், ஞான தீர்த்தம், தாரக தீர்த்தம், மோட்ச தீர்த்தம் என்றும் அழைப்பர். இதில் நீர் வடிவில் ஈசன் இருப்பதாக ஐதீகம். இதையட்டிய ஞானவாவி மண்டபம், 1828-ல் பீஜாபாய் சிந்தியா என்பவரால் கட்டப்பட்டது.
ளஇந்தக் கோயிலின் நிர்வாகம் 1983-ஆம் ஆண்டு முதல் உத்தரப் பிரதேச மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ளவிஸ்வநாதர் ஆலயத்தை ‘மோட்ச லட்சுமி விலா சம்’ என்கிறது காசி கண்டம். சிவப்பு நிறக் கற்களால் கட்டப்பட்ட விஸ்வநாதர் ஆலயத்தில் 5 மண்டபங் கள் உள்ளன. கருவறை மண்டபத்தை யட்டி தென்புறம் முக்தி மண்டபம், கீழ்ப் புறம் ஞான மண்டபம், வடக்குப் புறம் ஐஸ்வரிய மண்டபம், மேற்புறம் சிருங்கார மண்டபம்.

முக்தி மண்டபத்துக்கு குக்குட் (கோழி) மண்ட பம் என்றும் கூறுவர். காசி அடைந்து கடைத்தேற விரும்பி இங்கு வந்த ஒருவனை, மகா நந்தன் எனும் காசி நகர அந்தணன் ஏமாற்றி அவனிடமிருந்த பண மூட்டையைக் கவர்ந்து காட்டுக்குள் சென்றான். வழியில் திருடர்கள் அந்தணரிடம் இருந்து அந்த மூட்டையைக் கவர்ந்ததோடு அவரையும் கொலை செய்தனர். உயிர் பிரியும்போது ‘தனது மரணம் காசியில் நிகழ்ந்திருக்கலாமே’ என்று அங்கலா யத்தபடி இறந்ததால் மீண்டும் அவர் காசியில் கோழியாக பிறவி எடுத்தார். இந்தக் கோழி, முக்தி மண்டபமே கதியென கிடந்து சிவபதம் அடைந்தது. எனவே இதற்கு குக்குட் மண்டபம் என்று பெயர்.

விஸ்வநாதர் ஆலயத்தில் ஈசான ருத்திரர் தனது சூலத்தால் கிணறு ஒன்றை உண்டாக்கி சிவனை வழி பட்டார். ‘இதில் நீராடுவோர் ஞானம் பெறுவர்!’ என்பது சிவனாரின் வரம். எனவே, இது ஞானவாவி எனப்படுகிறது. இங்கு அமர்ந்து, ‘நமசிவாய’ என்ற திருநாமம் ஜபிப்பது சிறப்பு.

விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் தண்ட பாணீஸ்வரர், அவிமுக்தேஸ்வரர், வைகுந்தேஸ்வரர், பார்வதி, ஆனந்த பைரவர், போக அன்னபூரணி, சத்யநாராயணர், சனீச்சரேஸ்வரர், நிகும்பேஸ்வரர், கபிலேஸ்வரர், கணபதி, விரூபாக்ஷி கௌரி, விரூபாக்ஷர், வியாசேஸ்வரர், குபேரேஸ்வரர், விஜயலிங்கர் மற்றும் அவிமுக்த விநாயகர் ஆகிய கடவுள்களும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், துர்கை, சண்டிகேஸ்வரர், முருகன், பைரவர் போன்ற பரிவார தேவதைகளும் குடிகொண்டுள்ளனர்.

விஸ்வநாதர் திருக்கோயிலின் பின்புறம் ஆதி விஸ்வநாதர் சந்நிதி உள்ளது. இங்கு ஒரு பெரிய நந்தியும் கிணறும் உண்டு.

இந்த ஆலயப் பிராகாரத்தில் எழுந்தருளி யுள்ள விநாயகரின் பெயர் சாட்சி கணபதி. இவருக்கு எதிரே சகஸ்ர லிங்கம் காட்சி தருகிறார். இங்குள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்கு பின்புறம் பழைமையான ஆலமரம் ஒன்று கம்பீரமாக நிற்கிறது. ‘திரிஸ்தரி’ எனப்படும் பிரயாகை, காசி, கயா ஆகியவற்றை இணைப்பது இந்த மரம். இதன் வேர் பிரயாகையிலும், மத்திய பாகம் காசியிலும், நுனிப் பாகம் கயாவிலும் காணப்படுவதாக நம்பிக்கை.
தெற்கில் உள்ள சிம்ம துவாரம் எனப்படும் பிரதான நுழைவாயிலின் வெளிப் பகுதி வெள்ளி தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இதில் சந்திர- சூரிய, கணபதி மற்றும் துவார பாலகர்களது உருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன.


விஸ்வநாதரின் கர்ப்பக்கிரகத்தின் 4 பக்கங்களி லும் உள்ள எந்த வாயில் வழியாகவும் தரிசிக்கச் செல்லலாம். கருவறை முழுக்க பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. சுமார் பத்துக்கு பத்து பரப்பளவுள்ள கர்ப்பக் கிரகத்தின் வடகிழக்கு மூலையில் மூன்றுக்கு மூன்றடி அளவுள்ள உள்ள தொட்டி போன்ற அமைப்பில் சுயம்புவான ஜோதிர்லிங்கமாகக் காட்சியளிக்கிறார் விஸ்வநாதர். பக்தர்கள் தங்கள் கரங்களால் கங்கை நீரை ஊற்றி, மலர் சாத்தி தொட்டு வணங்கலாம்.

‘விஸ்வம்’ என்றால் உலகு. ஈசர் என்றால் காப்பவர் என்று பொருள். எனவே, இவருக்கு விஸ்வேசுவரர் என்ற பெயர்.

காசி விஸ்வநாதருக்கு வருடத்தில், சிரவண தினம் மற்றும் கார்த்திகை மாத சுக்கில பட்ச பிரதமை ஆகிய 2 நாட்களில் பஞ்சமுக அலங்காரம் செய்யப்படும்.

விஸ்வநாதர் கோயிலில் மாலை நேரத்தில் நகரத்தார் உபயமாக தமிழ்நாட்டின் நாகஸ்வரம் வாசிக்கப்படுகிறது.

ஸ்ரீவிஸ்வநாதர் பிரம்மச்சாரியாக தவம் செய்தார் என்பது ஐதீகம். எனவே, இங்கு விசாலாட்சி அம்மனுக்கு சந்நிதியும் இல்லை; பள்ளியறையும் கிடையாது.


ஸ்ரீவிஸ்வநாதருக்கு ஆறு கால பூஜை நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு மயான சாம்பலைக் கொண்டு நடக்கும் அபிஷேகம் நடைபெறுகிறது. பகலில் ருத்ரம் - சமகம் சொல்லி அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து ‘ராஜ்போக்’ என்ற நிவேதனம் நடைபெறும். அந்தப் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு சந்தியாகால ஆரத்தி நடைபெறும். பல நெய் தீபங்கள் கொண்ட இந்த ஆரத்தி நம் மனதைக் கவரும்.
இரவு 8 மணிக்கு நடைபெறும் சப்த ரிஷி பூஜை யும், இரவு 9 மணிக்கு நடைபெறும் சிருங்கார ஆரத்தி யும் முக்கியமாகக் காண வேண்டியவை.
சப்த ரிஷி பூஜையின்போது, ஏழு அர்ச்சகர்கள் (பண்டாக்கள்) தங்களை ரிஷிகளாக பாவித்து சிவபிரானை சுற்றி அமர்ந்து, மெய்ம்மறந்து பூஜிக்கிறார்கள். அப்போது, ‘ராம் ராம்’ என்ற வார்த்தைகளை வில்வ இலைகளில் எழுதி அவர்கள் மந்திர உச்சாடனம் செய்வதை பார்க்கும் போதே நம் மனம் பக்தி பரவசத்தில் அமிழும்.
இரவு 10 மணிக்கு சயன ஆரத்தி எனும் அர்த்த ஜாம பூஜை. அதைத் தொடர்ந்து பள்ளியறைப் பாடல்கள். கடைசி பூஜைக்குப் பின் லிங்கத்துக்கு சந்தனம், பச்சைக் கற்பூரம் சாத்தப்படும்.

சிவராத்திரி அன்று காசி ராஜ பரம்பரையினர் வழிபட்டு ஆராதித்த பிறகே ஈசனை தரிசிக்க அர்ச்ச கர்களும், பக்தர்களும் அனுமதிக்கப்படுவர்.

விஸ்வநாதருக்கு வில்வம், ஊமத்தங்காய், எருக்கம் பூமாலை, துலுக்க சாமந்தி அணிவித்து இனிப்பு நைவேத்தியத்துடன் தீபாராதனை செய்தல் வேண்டும்.

அதிகாலை 3 மணிக்கு எடுக்கப்படும் மயானச் சாம்பலே சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பக்தர்களுக்கு வழங்கப்படும் இந்தப் பிரசாதத்தை எவரும் வெளியே எடுத்துச் செல்வதில்லை.
காசியில் உள்ள விஸ்வநாதருக்கு குளிர் காலத்தில் கம்பளிச் சட்டை அணிவிக்க நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கட்டளை ஏற்படுத்தியுள்ளனர்.
ளவிஸ்வநாதர் கோயிலில், 1880-களில் ஷெனாய் போன்ற இசைக் கருவிகளுடன் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

விஸ்வநாதர் கோயிலில் நேபாள ராஜாவால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்குகிறது. இங்கு வரும் பக்தர்கள் வெளியேறும்போது கதவில் உள்ள இரும்புச் சங்கிலியைத் தம் உடம்பில் தேய்த்துக் கொள்கின்றனர். எம பயத்தை போக்கிக் கொள்வதே இதன் தாத்பரியம்.


காசியின் தல விநாயகர் துண்டீராச கணபதி. துராசனன் என்ற அசுரனை வதம் செய்ய, அம்பாளின் திருமுகத்திலிருந்து ஐந்து திருமுகங்கள் மற்றும் ஆயுதங்களுடன் தோன்றியவர் துண்டீராச கணபதி. செந்தூர வண்ண துண்டீராச கணபதியின் ஆலயம், அன்னபூரணி ஆலயத்துக்கு அருகில் உள்ளது.

காசியிலுள்ள விநாயகர்களில், மூன்று மூர்த்திகள் ஸ்ரீவிஸ்வநாதர் ஆலயத்துக்கு அருகில் உள்ளனர். இவர்களுள் பிரசித்தி பெற்றவர் டுண்டீ கணபதி. இவர் விஸ்வநாதர் கோயிலுக்கு வாயிற் காப்பாளனாக இருந்து உண்மை பக்தர்களைக் கண்டறிந்து வரவேற்று அருள் பாலிக்கிறார் என்பது ஐதீகம். ஈசனே இவரிடம் உத்தரவு வாங்கி இங்கு வந்ததாகவும் கூறுவதுண்டு.

விஸ்வநாதர் கோயிலில் இருந்து சுமார் ஒரு பர்லாங் தூரத்தில், மீர்காட் பகுதியில் அன்னை விசாலாட்சி கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் ஈசன், கணபதி, சுப்ரமணியர், சண்டேஸ்வரர், நவக்கிரகங்கள், உற்சவ விசாலாட்சி ஆகிய திரு வடிவங்கள் தனித்தனிச் சந்நிதிகளில் இடம் பெற்றுள்ளன. வெள்ளி திருவாசியுடன் கூடிய உற்சவ அம்மனின் தங்க விக்கிரகம் பேரழகு! வடிவில் சிறியதாக விளங்கும் அன்னை விசாலாட்சியின் கோயில் கி.பி.1803-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாம்.

பெருந்தடக்கண், பெருந்தடக்கட் பைந்தேன், நிறைந்த பூங்குழலி, கை வளையவள், என்றெல்லாம் குமரகுருபரரின் காசிக் கலம்பகம் ஸ்ரீவிசாலாட்சியை குறிப்பிடுகிறது.

விசாலாட்சிக்கு மகா சிவராத்திரியில் நான்கு கால அபிஷேகம் உண்டு. இங்கு நவராத்திரி விமரிசை யாகக் கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்று மூலவர் விசாலாட்சி சொர்ண மயமாகக் காட்சி தருகிறாள். அன்று உற்சவ விசாலாட்சி, குதிரை வாகனத்தில்- கையில் ரத்னவேல் பளபளக்கக் காட்சியளிக்கிறாள். அப்போது நடைபெறும் அம்பு போடும் வைபவத்தில் அம்பு யார் மேல் படுகிறதோ அவர்கள் பாக்கியசாலிகளாகக் கருதப்படுகின்றனர். இங்கு ஐப்பசி மாத அன்னாபிஷேகமும் விசேஷம். ஸ்ரீராமநவமியை ஒட்டிய அஷ்டமி அன்னபூர்ணாஷ்ட மியாகக் கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி தோறும் இங்கு விசேஷ அபிஷேக- ஆராதனைகள் உண்டு.

சங்கீத மும்மூர்த்திகளில் சாமா சாஸ்திரியும், முத்துசாமி தீட்சிதரும் தேவியின் தீவிர பக்தர்கள். தீட்சிதரின் பூர்வி கல்யாணி கீர்த்தனையில் அமைந்த காசி விசாலாட்சி... பாடலும், சாமா ராகத்தில் அமைந்த ‘அன்னபூர்ணே விசாலாட்சி.. பாடலும் பிரபலமானவை.

ஸ்ரீவிசாலாட்சி கோயிலில் நாமே அன்னைக்கு குங்கும அர்ச்சனை செய்யலாம்.

காசி விசாலாட்சி, ஸ்ரீவிஸ்வநாதருடன் இணைக்கப்படுவதில்லை. மாறாக இங்குள்ள ஸ்ரீகால பைரவருடன் இணைத்து வணங்கப்படுகிறாள்.

விஸ்வநாதர் ஆலயத்துக்கு அருகில் உள்ளது அன்னபூரணியின் ஆலயம். இதை ‘துளசி மானச மந்திர்’ என்பர். இங்கு உமாதேவி, அன்னபூரணியாக வீற்றிருக்கிறாள். பசிக் கொடுமையை ‘அன்னம்’ எனும் அருமருந்தால் நீக்கி, உயிர்களைக் காப்பதால் அவள் ‘அன்னபூரணி’ எனப்படுகிறாள்.


பிரம்மனின் கர்வத்தை அடக்க, அவன் தலை களில் ஒன்றை கொய்தார் சிவபெருமான். அதனால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானார். பசிப்பிணி அவரைத் தொற்றிக் கொண்டது. இந்த பசிப்பிணி அகல, பரமசிவன் கையில் கபாலம் தாங்கி பிச்சை எடுக்க... அது நிறைந்தால் தோஷம் நீங்கும் என்பது விதி. அதற்காக அன்னபூரணியாக அவதரித்தார் ஆதிசக்தி. ஈசனின் கை கபாலத்தை அன்னமிட்டு நிரப்பினாள். அதனால் சிவனாரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.

அன்னபூரணியின் அருளால் எவரும் பசிக் கொடுமைக்கு ஆளாக மாட்டார்கள். ஒரு முறை வேத வியாசர், சீடர்களுடன் காசி நகரில் பிட்சை ஏற்கச் சென்றார். ஆனால் அங்கு எவரும் பிட்சை இடாததால், உடனே அவர் காசி நகரை சபிக்க நினைத்தார். அப்போது அன்னபூரணி அவருக்குக் காட்சியளித்து அன்னம் இட்டாள்.

மகாராஷ்டிர பேஷ்வாக்களின் காலத்தில் பூனாவைச் சேர்ந்த சர்தார் சந்திரசூடன் குடும்பத் தினரின் முயற்சியால் அன்னபூரணி கோயில் கட்டப்பட்டது. உட்புறம் பளிங்குக் கல்லாலானது. கர்ப்பக்கிரகத்துக்கு எதிரில் 12 தூண்கள் கொண்ட சபா மண்டபம் உள்ளது. அங்கிருந்தே அன்னபூரணியைத் தரிசிக்க இயலும். கிழக்கு நோக்கி, 2 அடி உயர கருங்கல் விக்கிரமாக நிற்கும் அன்னபூரணி இடக் கையில் அன்ன பாயசப் பாத்திரத்தையும், வலக் கையில் கரண்டியும் கொண்டு காட்சி தருகிறாள். இந்த அன்னபூரணியை தரிசித்தால்தான் காசி யாத்திரை பூர்த்தியாகும். அன்னபூரணியின் திருமேனி பெரும்பாலும் மூடப் பட்டிருக்கும். மணிமகுடம், மணிமாலை, நவரத்தின அணிகள், புஷ்ப அலங்காரம் ஆகியன அன்னபூரணிக்கு அழகூட்டுகின்றன.
இவளின் சந்நிதி திரையால் மூடப்பட்டிருப்பதால், பிட்ச துவாரம் மற்றும் தர்மத் துவாரம் ஆகியவற்றின் மூலமே அன்னபூரணியை தரிசிக்கலாம். அன்னையின் பாதங்களுக்கு அருகில், ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரமேரு யந்திரம் உள்ளது. சக்தி பீடமான காசியின் பீட நாயகி இந்த அன்னபூரணியே. கோயிலின் நடு மண்டபம் எண் கோண வடிவிலானது.
ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம் தங்க அன்னபூரணியின் தரிசனம். கோயிலின் முதல் தளத்தில் தங்கியிருக்கும் இந்த தங்க அன்னபூரணி நரக சதுர்தசி அன்று, அதாவது தீபாவளிக்கு முதல் நாள் உப்பரிகையிலிருந்து இறங்கி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறாள். அன்னபூரணிக்கு வலப்பக்கத்தில் ஐஸ்வரிய நாயகி லட்சுமி இடப்புறத்தில் வற்றாத செல்வங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள பூமிதேவி. அன்னபூரணிக்கு முன்னால் பிச்சைக் கேட்க கையேந்தும் வெள்ளிக் கவசம் பூண்ட விஸ்வநாதர்

அன்னபூரணி ஆலயம் அதிகாலை மூன்று மணிக்குத் திறக்கப்படுகிறது. காலை 3 முதல் 4 மணி வரை ஜண்டை, மேளம், டோலக் ஆகிய கருவிகளை முழங்கச் செய்து ஒலி எழுப்புவர். அப்போது ஸ்ரீகாசி விஸ்வநாதர் இங்கு வந்து அன்னபூரணியிடம் உணவு பெற்றுச் செல்வதாக ஐதீகம். நான்கு மணிக்கு மேல்தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.


வெள்ளி அங்கி மற்றும் மலர்க் குவியல்களுக்கு இடையே காட்சி தரும் அன்னபூரணிக்கு, குறிப்பிட்ட சில நாட்களில் பஞ்சலோக திருமுகம் சார்த்தப் படுகிறது. அருகே வெண்கல பாவை விளக்கு. இங்கு ‘லஸ்ஸி’ போன்ற தயிர், பிரசாதமாகத் தரப்படுகிறது. பக்தர்களின் நெற்றியில் அர்ச்சகர்களே குங்குமம் இட்டு விடுகின்றனர்.

கர்ப்பக்கிரகத்துக்கு வெளியே வலப் பக்கம் காளிங்க நர்த்தன கண்ணன். இடப் பக்கம் கஜ லட்சுமி. வட கிழக்கில் குபேரர். அடுத்து கௌரி ஷங்கர். அக்னி பகவானுக்குரிய தென்கிழக்கு மூலையில் சூரிய நாராயணர். அடுத்த சந்நிதியில் அருள் பாலிக்கிறார் சிந்தாமணி கணபதி. வடமேற்கு மூலையில் துளசிதாசர் ஸ்தாபித்த ஆஞ்சநேயர் சந்நிதி. அருகில் ராமருக்கும் சத்யநாராயணருக்கும் சந்நிதிகள் உள்ளன.
அன்னபூரணி ஆலயத்தின் ஒரு பகுதியில் ‘ராம் மந்திர்’ என்ற ராமர் ஆலயம் உள்ளது. இங்கு பளிங்கு கல்லாலான விஷ்ணு, லட்சுமி, ராதா, கிருஷ்ணன், காளி, சிவ- பார்வதி மற்றும் ராமர்-லட்சுமணர் உருவங்கள் உள்ளன. ஆலய நுழைவாயிலின் வலப் பக்கத்தில் சுரங்கம் போன்ற ஓரிடத்தில் ஸ்ரீயந்த்ரேஸ்வரர் லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். படிகள் இறங்கிச் சென்று அவரைத் தொட்டு வணங்கலாம். இந்த லிங்கத்தின் உச்சியில் ஸ்ரீசக்ரம் ஒன்று பொறிக்கப்பட்டிருக்கிறது.
அன்னபூர்ணாஷ்டமி அன்று கன்னிப் பெண்கள் முழுக்க முழுக்க ஸ்ரீஅன்னபூரணி கோயிலிலேயே அமர்ந்து திருமணம் கைகூடுவதற்காக ஸ்தோத்ர பாராயணம் செய்கின்றனர்.

‘கால பைரவர்’ சந்நிதி, ஸ்ரீவிஸ்வநாதர் ஆலயத்திலிருந்து வடக்கில் சுமார் ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது. நாய் வாகனம் கொண்ட இவரே காசி நகரின் காவற்காரர். காசி தரிசனம் முடித்த பக்தர்கள் இந்த கால பைரவரை வணங்கி அவரிடமும் கணக்குச் சொல்லிய பிறகே அங்கிருந்து கிளம்ப வேண்டும்.

காசியில் தங்கத்தாலான கால பைரவர் உற்சவ விக்கிரகம் உள்ளது. தீபாவளி அன்று இந்த உற்சவர் பவனி வருகிறார்.

காசி யாத்திரை செல்பவர்கள் கால பைரவர் கோயில் அருகில் விற்கும் கறுப்புக் கயிற்றை வாங்கி இங்குள்ள பைரவர்க்குச் சமர்ப்பிப்பார்கள். பிறகு அதை பைரவரது பிரசாதமாகக் கட்டிக் கொண்டால் கால பைரவர் காப்பார் என்பது நம்பிக்கை.

பங்குனி மாத ‘சுக்ல ஏகாதசி’யன்று காசி விஸ்வ நாதருக்கு நடப்பது சிருங்கார உற்சவம். அன்று ஸ்ரீஅன்ன பூரணி, துண்டிராச கணபதி, அனுமன் கோயில் மற்றும் ஞானவாவி ஆகிய இடங்களில் இது நடைபெறும்.

காசியில் நவராத்திரியின் 9-ஆம் நாளன்று காசி சித்தத்ரி சங்கடா கோயிலுக்கு அருகேயுள்ள மடத்தில் இடம் பெற்றுள்ள ‘ஸித்தி மாதா’ அம்மனை வழிபடுகிறார்கள். இந்த அம்மன் விக்கிரகத்துக்குக் கீழேயுள்ள வெள்ளித் தொட்டியில் சிவலிங்கம் ஒன்று உள்ளது.

துர்கா, பிரம்மசாரினி, சந்திரமணி, கூஷ் மாண்டா, வாகீஸ்வரி, காத்யாயனி, காளராத்ரி துர்கா, அன்னபூரணி, ஸித்தி மாதா ஆகிய ஒன்பது பேரும் நவராத்திரி விழாவில் பூஜிக்கப்படுபவர்களில் பிரசித்தம் ஆனவர்கள். ஒன்பது நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 10-ஆம் நாளான விஜயதசமி அன்று துண்டி விநாயகர், காசி விஸ்வ நாதர் மற்றும் விசாலாட்சியை தரிசிப்பது வழக்கம்.

காசியிலுள்ள வீரேஸ்வர் சிவலிங்கம் வங்காளி களது விருப்பத்துக்குரிய தெய்வம். இந்த வீரேஸ்வர் லிங்கத்தின் ஆவுடையார் பகுதியில் 28 பைரவர்களின் முகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ‘தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும்’ என விவேகானந்தரின் தாய் இவரி டம் பிரார்த்தனை செய்து பிறந்த குழந்தை ஆனதால், மகனுக்கு இவரது பெயரைச் சூட்டினார் தாயார்.

அரிச்சந்திரா காட் பகுதியிலுள்ள மயானத்தில் தான் அரிச்சந்திரன் வெட்டியானாகப் பணி புரிந்தார் என்கிறார்கள். இங்குள்ள இறைவன் ஸ்ரீஸ்மசானேஸ்வர் எனப்படுகிறார். (ஸ்மசானம்= சுடுகாடு) மயானம் காத்தபோது அரிச்சந்திரன் இந்த லிங்கத்தை ஸ்தாபித்ததாகக் கூறுகிறார்கள்.

கங்கைக் கரையிலிருந்து சற்று ஒதுங்கி திருக் குளத்துடன் அமைந்துள்ள ஒரு கோயில் துர்க்கா மந்திர். இங்கு, சுயம்புவான நின்ற கோலத்தில் அருள் புரியும் சிற்ப வடிவம் ஒன்றும் கருவறையில் ஒன்று மாக துர்காதேவி இரண்டு திருக்கோலங்களில் காட்சி அளிக்கிறாள்.

ராமேஸ்வரத்திலிருந்த ராமர், சுயம்பு லிங்க மாக ஒன்று கொண்டு வருமாறு அனுமனுக்கு கட் டளை இட்டார். காசிக்கு வந்த அனுமனால் சுயம்பு லிங்கத்தை பிரித்தறிய முடிய வில்லை.
பிறகு கருடன் வட்டமிட்டது மற்றும் பல்லியின் குரல் மூலம் அனுமன் சுயம்பு லிங்கத்தை அடையாளம் கண்டார். அதை பெயர்க்க முயற்சித்தபோது, பைரவருக்குக் கோபம் வந்தது. ‘என்னைக் கேளாமல் எடுப்பது தவறு!’ என அவர் அனுமனிடம் சண்டையிட்டார். இறுதியில் ராமனின் கட்டளையாலேயே அனுமான் இப்படிச் செய்ததாகத் தேவர்கள் பைரவரை சமாதானப்படுத்தி, அனுமனை விடுவித்தனர்.
ஆனாலும் கோபம் அடங்காத பைரவர் காசி நகருக்குள் பல்லி ஒலிக்கக் கூடாது; கருடன் வட்டமிடக் கூடாது என்று கட்டளையிட்டாராம். எனவே, இன்றும் காசியில் பல்லி குரலெழுப்பாது. கருடன் வட்டமிடாது.

காசி யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து மணல் எடுத்து சங்கல்பம் செய்ய வேண்டும். யாத்திரை முடிந்து வந்ததும் மறுபடியும் ராமேஸ்வரம் வந்து ராமநாதரிடம் சங்கல்பத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.

காசி விஸ்வநாதர், அன்னை விசாலாட்சி மற்றும் ஸ்ரீஅன்னபூரணி தேவி ஆகியோருக்கு நடைபெறும் பூஜைகளின்போது, மூன்று கால பூஜைக்கான பொருள்களை வழங்குவது நகரத்தார்.
தமிழ்நாட்டைச் சார்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் 19-ஆம் நூற்றாண்டிலேயே காசியில் மடம் ஒன்றை நிறுவி (கி.பி. 1863-ல்), அங்கிருந்து கடந்த 140 ஆண்டுகளுக்கும் மேலாக தினசரி காலை 11 மணிக்கும், இரவு 8 மணிக்கும் நாகஸ்வரம், மேள வாத்தியங்கள் ஒலிக்க, பூஜை பொருட்கள் ஊர்வலமாக திருக்கோயில்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதை சம்போ ஊர்வலம் என்பர். தேங்காய்கள், வாழைப் பழங்கள், கற்கண்டு, நெய், குண்டு மிட்டாய், மஞ்சள், குங்குமம், வெற்றிலைப்பட்டி, ஊதுவத்தி, கற்பூரம், அரிசி, சென்ட் பாட்டில், ஆப்பிள், மாம்பழம், பாதாம், விபூதி, பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், நெல்லித் தைலம், நாட்டுச் சர்க்கரை, பூமாலை, பஞ்சாமிர்தம், பஞ்சில் நனைத்த அத்தர் வில்வ இலைகள் இந்த சம்போ ஊர்வலத்தில் கொண்டு செல்லப்படுகின்றன. விஸ்வநாதரையும், சுற்றி உள்ள இடத்தையும் துடைக்கும் துணி கூட நகரத்து சத்திரத்தால் அனுப்பப்படுகிறது.


ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை செட்டி நாட்டு அன்பர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 3000 கி.மீ. தூரம் நடைபயணமாகக் கடந்து காசியை அடைகின்றனர். இதற்கு சுமார் 4 மாதங்கள் ஆகின்றன. முதல் பயணம் 13 பேருடன் 1983-ஆம் ஆண்டிலும், 19 பேருடன் 1990-லும், 20 பேருடன் 1997-லும், 41 பேருடன் 2004-லும் காசி பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயண முடிவில் அனைவருக்கும் ‘காசிஸ்ரீ’ என்ற கௌரவப் பட்டம் வழங்கப்படுகிறது.

கேதார்நாத் போக முடியாத பக்தர் ஒருவருக்கு கங்கைக் கரையில் காட்சி அளித்தார் சிவபெருமான். அந்த இடமே கேதார்காட். அங்கும் கேதார்நாத் போலவே சுயம்புவான பாறை ஒன்றை சிவலிங்கமாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.
அரிச்சந்திரா கட்டத்துக்கு அடுத்தாற்போல் உள்ளது கேதாரீஸ்வர் கோயில். தமிழ்நாட்டு கோயிலின் பாணியில் கட்டப்பட்ட கோயில் இது. இதன் சுவர்களில் ‘காசிவாசி திருப்பனந்தாள் மடாதிபதி தம்பிரான்’ நிர்வாகத்தினரால் தேவாரப் பாடல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு குருக்களே பூஜை செய்கிறார்கள். பண்டாக்களும் உண்டு. இங்கு அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி ஆகியோரையும் தரிசிக்கலாம்.

காசிப் பயணம் புண்ணியமாக முழுமை பெற அருள்புரியும் கோயில் கௌடி மாதா கோயில். இது பல்கலைக் கழகத்துக்கு அருகில் உள்ளது. இதன் அருகில் விற்கப்படும் சோழிகளை வாங்கி இந்த அம்மன் மேல் போட வேண்டும்.
விஸ்வநாதரை சகோதரனாக பாவித்து வணங்கிய பக்தை கௌடிபாய். ஆசாரமா னவள். விஸ்வநாதரை மற்றவர்கள் தொட்டு வணங்குவதை அவள் விரும்பவில்லை. அவளுக்கு புத்தி புகட்ட விரும்பிய சிவ பெருமான் அவளை சேரி ஒன்றில் வசிக்கப் பணித்தார்.
அவளுக்கு பக்தர்கள் தங்களது புண்ணியத்தில் ஒரு சோழி அளவு கொடுப்பார்கள் எனக் கூறினார். அதன்படி காசி யாத்திரை செய்பவர்கள் இங்கு வந்து எத்தனை நாள் தங்கினோமோ அத்தனை சோழிகள் வாங்கிப் போடுகிறார்கள். அப்போது, ‘காசி பலன் எனக்கு - சோழிபலன் உனக்கு’ என்று சொல்வது மரபு.

கி.பி.17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவதரித்த குமரகுருபரர் 5 வயது வரை ஊமையாய் இருந்து திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறன் பெற்று மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக் கோவை, கந்தர் கலி வெண்பா, சகலகலா வல்லி மாலை, மதுரைக் கலம்பகம், காசி கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றினார். இவர் காசிக்குச் சென்று டெல்லி பாதுஷாவின் இசைவுடன் ஸ்ரீகுமாரசாமி மடத்தை நிறுவி அங்கேயே தங்கி புராண விரிவுரைகள் ஆற்றினார்.
அப்போது கம்ப ராமாயணத்தை இவரிடம் கேட்டறிந்த துளசிதாசர், அதை இந்தியில் 1632-ல் இயற்றினார். அதற்கு துளசி ராமாயணம் என்று பெயர். குமரகுருபரர் காசியிலே முக்தி அடைந்தார். குமாரசாமி மடத்துக்கு அருகில் உள்ள கேதார் கட்டம் இவரால் கட்டப்பட்டது.

மேலும் இங்கே பார்க்க வேண்டிய இடங்கள் ராம் நகர், காசி ராஜா அரண்மனை, சாரநாத் புத்தர் கோயில், காசி பல்கலைகழகத்தில் உள்ள பிர்லாமந்திர், சங்கட மோட்ச அனுமன், துளசிமாலை மந்திர், துர்க்கை கோயில் முதலியவை ஆகும்.
No comments:
Post a Comment