தனது உணர்ச்சிகளைத் தானே எடைபோட முடியாமல் தவித்த நம்பிஆரூரர் (சுந்தரர்), அப்படியே உட்கார்ந்து விட்டார். ‘சாமி, என்ன உக்காந்துட்டீங்க?’ _ கூட வந்தவர்களில் ஒருவரது குரல். நேற்றும் ஆரூராரின் கையைப் பிடித்து உதவியவர் இவர்தான் போலும்!
‘ஒன்றும் புரியவில்லை... ஐயன்- என் அருமைத் தோழன் என்ன நினைக்கிறானோ தெரியவில்லை. எல்லாம் தெரிந்திருந்தும், என்னுடன் சரிக்குச் சரி விளையாடும் அவனே இப்படி நடந்து கொண்டால், நான் என்ன செய்வேன்?’ _ நம்பிஆரூரர் பேசுவது எதுவும் விளங்காமல் போக, கண் கொட்டாமல் அவரையே பார்த்தார் அடுத்தவர்.
தன்னைக் கைத்தாங்கலாகப் பற்றிக் கொண்ட அந்த கரத்தைப் பிடித்து எழுந்த நம்பிஆரூரர், மெள்ள நடக்கலானார். அவர் மனம் எல்லாவற்றையும் அசை போட்டது.
திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கண்டதும் மனம் அவர்பால் ஈடுபட்டது. அவரை அணுகுவதற்காக தியாகேசனை தூது போகச் சொன்னது... தூது போன தியாகேசன் திரும்பி வந்து, ‘நம்பி, திருவொற்றியூரி லேயே தங்க வேண்டும்!’ என்று சங்கிலி நாச்சியார் கேட்ட சத்தியத்தை தன்னிடம் சொன்னது... தான், சத்தியம் செய்து தரும் உபாயத்தைச் சிந்தித்தது... சத்தியம் செய்யும் வேளையில் தியாகேசனை ‘மகிழ’ மரத்தடிக்குப் போகச் சொன்னது... அவர், சங்கிலியை ‘மகிழ’ மரத்தடியில் வைத்து சத்தியம் வாங்கச் செய்தது... வரிசையாக எல்லாம் நினைவுக்கு வந்தன.
திருவொற்றியூரிலேயே தங்கி இருப்பதாகச் சத்தியம் செய்ய வேண்டும் என்று சங்கிலி கேட்டு விட்டார். அதை அப்படியே வந்து நம்பியிடம் சொன்னார் தியாகேசர். நம்பிக்கு என்ன செய்வதென்று புரியாத நிலைமை. திருவொற்றியூரிலேயே தங்குவதாக எப்படி சத்தியம் செய்வது? திருவாரூரில் பரவை நாச்சியார் தன்னையே நம்பி வாழ்கிறார்; திருவாரூர் தியாகேசரும் தனக்காகக் காத்துக் கொண்டிருப்பார். இதையெல்லாம் விட்டுவிட்டு எப்படி இங்கேயே தங்குவதாகச் சொல்வது?
ஆனாலும், அந்தப் பெண் கேட்டு விட்டார். ‘மாட்டேன்’ என்றால் தன் மீதே ஐயம் வரலாம். எல்லாவற்றையும் விட, அந்தப் பெண் மீதான காதல் அதிகப்பட்டுக் கொண்டே போனது. அப்படியானால், அவரைத் திருமணம் புரிய வேண்டுமானால், சத்தியம் செய்ய வேண்டும்.
ஆனால், ‘சத்தியம் செய்யும் வேளையில் சந்நிதியில் இருக்காதே; மகிழ மரத்தடிக் குப் போய் விடு’ என்று தியா கேசரிடம் கேட்க, அவரும் அப்போதைக்கு ‘சரி’ என்று தலையாட்டி விட்டு சங்கிலியிடம் போய், மகிழ மரத்தடியில் வைத்து சத்தியம் வாங்கும்படி சொல்லிக் கொடுத்து விட்டார். மறுநாள், சங்கிலியும் அவ்வாறே கேட்க, வேறு வழியில்லாமல் மகிழ மரத்தடியில் சத்தியம் செய்தார் நம்பி. அப்போது, அந்த மரத்துக்குப் பின்னிருந்து மெள்ளத் தலையை நீட்டி தியாகேசர் கண் சிமிட்டினாரே பார்க்கணும்!
சங்கிலியின் அன்பு, அரவணைப்பு, அவரது இறைத் தொண்டு, அனைத்துக் கும் ஆதரவாக தியாகேசனின் அருள்... என திருவொற்றியூர் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. ஊர் உலகத்தை மறந்து அங்கேயே இருந்திருக்கலாம்தான். ஆனால், வசந்தம் வந்தபோது திருவாரூரை எண்ணாமல் இருக்க முடியவில்லை. வசந்த விழா நினைவுகளுக்கு இடையே, திருவாரூர் தியாகேசனும் வந்து நின்றார். ‘என்ன அருள், என்ன வாஞ்சை, என்ன உரிமை, என்ன தோழமை’ - திருவாரூர் தியாகேசனை காண்கிற ஆசை நம்பிக்கு மிகுந்தது. திருவாரூர் தியாகேசர் செய்ததெல்லாம், நம்பியின் சிந்தையில் நடமாடின.
பரவையாரை நம்பிக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக அடியாரிடம் பேசி யது... குண்டையூர் நெல்லைக் கொண்டு வர கணங்களை அனுப்பியது... புகலூரில் பொன் அருளியது... பொதிசோறு இட்டது... ஏன், தேவாஸ்ரய மண்டபத்தில், தான் வணங்காமல் போனபோதுகூட, அடியார்களது பெருமையை உணர வைத்து, அன்புடன் அருளியது... இப்படி திருவாரூர்க்காரரது பெருமையெல்லாம் நினைவை நிறைக்க, அவரைக் காணும் விருப்பத்தில், சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டுப் புறப்பட்டு விட்டார் நம்பி.
இப்போதுள்ள சிக்கலெல்லாம் அங்கேதான் ஆரம்பம்! திருவொற்றியூர் எல்லையைத் தொட்ட உடனேயே நம்பிஆரூரரின் பார்வை கெட்டது. சத்தியத்தை மீறியதும், சங்கிலியை விட்டு நீங்கு வதுமே, கண் பார்வை கெடுவதற்கான காரணங்கள் என்பதைப் புரிந்து கொண்டாலும், நம்பியால் திருவாரூர் செல்வதை விட முடியவில்லை. அந்த எண்ணமே மிகுந்துபோக, கண் பார்வை இல்லாமலேயே நடக்கத் தொடங்கினார். இருப்பினும் தனது துயரத் தைப் போக்கும்படியாக திருவொற்றியூரானையே நினைந்து பாடினார்.
‘வழுக்கிவீழினும் திருப்பெயரல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம் ஒழுக்க என் கணுக்கொரு மருந்து உரையாய்ஒற்றியூர் எனும் ஊ கட்டனேன் பிறந்தேன் உனக்காளாய்க் காதல் சங்கிலி காரணமாக எட்டினால் திகழும் திருமூர்த்தி என் செய்வான் அடியேன் எடுத்துரைக்கேன்’
என்று பலவாறு பாடித் துதித்தார். கண்ணுக்கு மருந்து கேட்டார். ‘எனது பிழை பொறுக்க மாட்டாயா?’ என்று உரிமை சொன்னார்.
தட்டுத் தடுமாறிக் கொண்டே, பிறர் வழிகாட்டத் திருமுல்லைவாயில் திருத்தலம் அடைந்து வழிபட்டார். நம்பி ஆரூரர் எவ்வளவோ கேட்டும், திருவொற்றியூரிலோ திருமுல்லைவாயிலிலோ இறையனார் எதுவும் செய்ய வில்லை. திருமுல்லைவாயிலில் இருந்து மேலும் மேற்கு நோக்கி பயணத்தைத் தொடர்ந்த நம்பி ஆரூரர், வழிப்போக்கர்கள் உதவியுடன் திருவெண்பாக்கம் அடைந்தார். கோயில் வாசலில் கொண்டு போய் நிறுத்தினர். கைகளைத் தலைமேல் கூப்பி வழிபட்டார். கைகளைக் கீழே இறக்கும்போது, ஏதோ தட்டுப்பட்டது. தடவிப் பார்க்க... அடடா, கோல்! திருவொற்றியூரில் கேட்ட கோல், வெண்பாக்கத்தில் கிடைத்தது.
பிறகு, கையில் ஊன்றுகோலை வைத்துக் கொண்டே கேட்டார்: ‘பிழை செய்தால் பொறுத்துக் கொள்வாய் என்று எண்ணினேன். பிழை பொறுக்காமல், படலத்தால் எனது கண்களை மறைத்து விட்டாய். கோயிலுக்குள்தான் இருக்கிறாயா?’
பக்தன் கேள்வி கேட்டால், பகவான் பதில் சொல்வார் தானே! பதில் சொன்னார்: ‘உளோம்; நீங்கள் போங்கள்.’
கண் தெரியாததாலும், கையில் கோல் கொடுத்ததாலும், இப்படிச் செய்கிறீரே என்ற ஆதங்கத்தாலும் ‘உள்ளீரோ?’ என்று கேட்டால், விட்டேற்றியாக, ‘உளோம், போகீர்’ என்று விடை தருகிறீரே, நியாயமா?
பிழையுளன பொறுத்திடுவீர் என்றடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய் குழைவிரவு வடிகாதா கோயிலுளாயே என்ன உழையுடையான் உள்ளிருந்து உளோம் போகீர் என்றானே
மான் போன்ற சங்கிலியை எனக்குத் தந்து, நற்பயன்களும் தந்து, கூடவே இப்படிப்பட்ட சிக்கல்களையும் தந்து, வெண்கோயில் இங்கு உள்ளாயோ என்று கேட்க, கோலைக் கையில் கொடுத்து ‘ஆம், உளோம், போகீர்’ என்று கூறுகிறீரே, நியாயமா?
சுந்தரரான நம்பி ஆரூரர், கோல் பெற்ற தலமான வெண்பாக்கம் செல்வோமா?
சற்றே கடினம்தான். ஏன் தெரியுமா? இப்போது, ‘வெண் பாக்கம்’ நாம் செல்லும் வகையில் இல்லை. நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது. ஆனால், வெண்பாக்கத்து வெண்கோயில் என்று சுந்தரர் பாடிய கோயில் இருக்கிறது.
இதென்ன புதிர்?
தீரர் சத்தியமூர்த்தி சென்னை (அப்போதைய மதராஸ்) நகர மேயராக இருந்த காலகட்டம். சென் னையின் குடிநீர் தேவைக்கான திட்டங்கள் பலவும் வகுக்கப்பட்டும், பரிசீலிக்கப்பட்டும், திருத்தங்கள் செய்யப்பட்டும் வந்த காலம். பூண்டி நீர்த் தேக்கம் அந்தக் காலகட்டத்தில்தான் செயல் வடிவம் பெற்றது.
பூண்டுகள் (குட்டைச் செடி வகைகள்) நிறைய மண் டிக் கிடந்ததால், இந்த இடம் ‘பூண்டி’ என்ற பெயர் பெற்றது. சுமார் 12 சதுர மைல் பரப்பளவில் இருக்கும் பூண்டி நீர்த்தேக்கத்தை அமைக்கும்போதுதான் சிக்கல் எழுந்தது. 17 கிராமங்களின் இடம் இதற்குத் தேவைப்பட்டது. கிராம மக்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அந்த கிராமங்களில் ஒன்று, நம் (சுந்தரர் பெருமானுடைய) வெண்பாக்கம். கோல் கொடுத்த கோலபிரானுடைய காலடியிலேயே நீர் தரும் பொறுப்பையும் போட்ட பெரியவர்கள், வெண்பாக்கத் திருக்கோயிலை மொத்தமாகப் பெயர்த்தெடுத்து வேறு இடத்தில் அமைத்தார்கள்.
நீர்த் தேக்கத்தின் கரையில், பூண்டி கிராமத்தின் நடுநாயகமாக, பூண்டி அரசு பள்ளிக்கூடத்தின் எதிரில், பெரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது புதிய வெண்பாக்கத் திருக்கோயில்.
வாருங்கள், பூண்டி வெண்பாக்கம் செல்வோம்.
பூண்டி வெண்பாக்கம். வெண்கோயில் என்று கோயிலின் பெயரைச் சுந்தரர் குறிப்பிடுகிறார். ஊர்ப் பெயர் வெண்பாக்கம் என்று இருந்திருக்க வேண்டும். ஆனால், ஆவணங்கள் பலவும் திருவிலாம்பூதூர் என்றே ஊர்ப்பெயரைக் குறிப்பிடுகின்றன. ‘உளோம் போகீர்’ என்று இறைவன் சொன்னது உளம்பூதூர் என்றாகி, விலாம்பூதூர் என்றாகி விட்டதாம். இப்போது இருக்கும் ஊர் பூண்டி.
விசாலமான இடத்திலேயே கோயில் அமைக்கப் பட்டுள்ளது. 1942-ல் திட்டமிடப்பட்டுத் தொடங்கப் பட்ட மறு நிர்மாணத்தின் விளைவாக, 5.7.1968 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. சமீபத்திய கும்பாபிஷேகம் 2000-ல் நடைபெற்றது.
கோபுரம் இல்லை. கிழக்கு முகமாக ஒன்று; தெற்கு முகமாக ஒன்று என இரு வாயில்கள் உண்டு. கிழக்கு வாயில் அருகே புதர் மண்டிக் கிடப்பதாலும், தெற்கு வாயில் பிரதான சாலையில் இருப்பதாலும், மக்கள் வழக்கத்தில் தெற்கு வாயிலே முக்கிய வாயில்.
ஒருவேளை நாம் அந்த வழியாக வந்திருந்தால், உள்ளே நுழைந்ததும், வலப் பக்கத்தில் சிறியதாக பைரவர் சந்நிதி. வாயிலுக்கு நேரே, சற்றே உயரமான மண்டபத்தில் அழகான நந்தி. உயரமாக அமைந்த பலிபீடம். கொடி மரம் இல்லை. சுற்றி வந்து, மீண்டும் தெற்கு வாயிலை அடைகிறோம்.
கோயிலுக்குள் நுழைவோமா? நீர்த்தேக்கப் பிரதே சம் என்பதாலோ என்னவோ, கோயிலைச் சற்றே உயரமாகக் கட்டி இருக்கிறார்கள். படிகள் ஏறி உள்ளே நுழைய, கோயில் வாயிலில், இடப் பக்கம் வலம்புரி விநாயகர். வலப் பக்கம் சிறிய மாடம். இந்த வாயிலில் இருந்து நேரே நோக்கினால், எதிரில் அம்மன் சந்நிதி. இடப் பக்கத்தில், கிழக்கு நோக்கிய சுவாமி சந்நிதி. இரண்டு சந்நிதிகளையும் ஒரு பெரிய மண்டபத்தில் வைத்தது போன்ற அமைப்பில், கோயில் உள்ளது. இரண்டு சந்நிதிகளையும் தனித்தனியாக வலம் வருவ தற்கான வசதிகளும் உள்ளன.
வலம்புரி விநாயகரை ஏற்கெனவே வழிபட்டு விட்டோம் இல்லையா? அவரைத் தாண்டி, கிழக்கு முகமாக இருக்கும் மூலவர் சந்நிதி முன் சென்று நிற்கிறோம்.
இந்தக் கோயிலைப் பற்றி ஒரு தகவலைத் தெரிந்து கொள்வது அவசியம். இங்கே இருக்கும் சிலா திருமேனிகள், சிற்பங்கள், மண்டபத் தூண்கள் ஆகியவை யாவும் பழைய கோயிலில் இருந்து பெயர்த்துக் கொண்டு வரப்பட்டவை. துவாரபாலக- துவாரபாலகியர் மட்டுமே புதியவர்கள்.
மூலவருக்கு முன்னால் பலிபீடம்- நந்தி. பலிபீடத் துக்குப் பக்கத்தில், நின்ற கோலத்தில், இறைவனைப் பார்த்தபடி ஒருவர். வேறு யார்? சாட்ஷாத் சுந்தரர் தாம். கையில் இறைவன் கொடுத்த கோலைத் தாங்கிக் கொண்டு நிற்கிறார். சுந்தரர் முகத்தில் ஒரு திவ்ய அழகு. நந்தி அழகோ அழகு; ஆனால், வலக் கொம்பு உடைந்திருக்கிறது.
மெள்ளத் திரும்பி மூலவரை நோக்குகிறோம். மூலவர் சந்நிதியின் ஒரு புறம் விநாயகர்; மற்றொரு புறம் வள்ளி- தெய்வானை உடனாய சுப்பிரமணியர். மூலவர் அருள்மிகு ஊன்றீஸ்வரர். சுந்தரருக்குக் கோல் கொடுத்ததால், இப்படியரு திருநாமம். ஆமாம், அதற்கு முன்னால் என்ன பெயர்? அருள்மிகு வெண் பாக்கநாதர்; வெண்கோயிலீசர். உயரத்தில் குட்டையாக, வட்ட வடிவ ஆவுடையாருடன் அருள் காட்சி தருகிறார். நாம் போனபோது, அழகாக அலங்காரம் செய்து கொண்டு, ஐந்து தலை நாகக் குடையோடு சொக்க வைக்கிறார். ‘ஊன்றீசா! வாழ்க்கையில் எங்களுக்கு நீதானேப்பா ஊன்றுகோல்; நாங்கள் தள்ளாடும்போதெல்லாம் எங்களுக்கு ஊன்றுகோலாக நீதானே இருக்கிறாய்; எப்போதும் எங்களைத் தாங்குவது நின் கடன்; நின்னை வணங்குவது எங்களது கடன்’ என்று வழிபடுகிறோம். ஊன்றீசரை வணங்கி, மூலவர் சந்நிதியை வலம் வருகிறோம். சிறிய பிராகாரம். ஆனால், ஆகம முறைகளை அப்படியே கையாண்டிருக்கிறார்கள். தென்மேற்கு மூலையில், மகா கணபதி சந்நிதி. மேற்குச் சுற்றின் நடுவில், வள்ளி -தெய்வானை உடனாய ஆறுமுகர் சந்நிதி. வடமேற்கு மூலையில் மகாலட்சுமி சந்நிதி.
பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தங்களையும் காணலாமா? மூலவர் கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை. சிறிய மண்டபத்தில் சண்டேஸ்வரர். முதலிலேயே பார்த்தோமில்லையா, இந்தக் கோயிலின் சிற்பங்களும் சிலா ரூபங்களும் வெகு அழகு! மூலவர் கோஷ்டத்தில் இருக்கும் லிங்கோத்பவர் இதற்கொரு அத்தாட்சி. லிங்கோத்பவர் சிலாமேனியில், நடுவில் லிங்கோத்பவர் இருப்பார்; மேலே பிரம்மா அல்லது அன்னம்; கீழே திருமால் அல்லது வராகம். இதுதான் வழக்கமான அமைப்புமுறை. இங்கேயும் அப்படித்தான். லிங்கோத்பவர், மேலே அன்னம், கீழே வராகம். கூடுதலாக, அன்னத்துக்கு மேலே எழில்மிக்கதொரு தாழம்பூ. ஆஹா, பொய் சொன்ன தாழம்பூ இதுதானா?
மூலவர் பிராகாரத்தை வலம் வந்து, அப்படியே நேரடியாக அம்மன் சந்நிதி முன்பாகவும் வந்து விடலாம். எதிரில் சிறிய சிங்க வாகனம். உள்ளே, அருள்மிகு மின்ன லொளி அம்மை. மின்னொளி அம்மை என்றும் சொல்லலாம். குட்டையான சுவாமிக்குத் தோதாக, சற்றே குட்டையான அம்மன். நின்ற திருக்கோலம், நான்கு திருக்கரங்கள்; பாசாங்குசமும், அபய- வர ஹஸ்தங்களும் தாங்கிய தாய். சரி, அம்பாளுக்கு இதென்ன பெயர்?
சுவையான காரணம்தான். சுந்தரர் பார்வை கெட்டவராக இங்கு வந்தார். படலம் படர்ந்த அவர் கண்களுக்கு அவ்வப்போது மின்னலாகத் தோன்றித் தோன்றி அம்மன் வழிகாட்டினாராம். அதனால், மின்னல் ஒளி அம்மன்.
சுந்தரரின் வெண்பாக்க அனுபவத்தைப் பாடுகிற சேக்கிழார், சுந்தரர் தலைமேல் கரம் குவித்ததைச் சொல்கிறார்; ‘கோயிலில் உள்ளீரோ’ எனக் கேட்டதைப் பாடுகிறார்; கோல் கொடுத்ததையும் ‘உளோம் போகீர்’ என்றதையும் குறிப்பிடுகிறார்; வெண்பாக்க நாதனைப் பாடி, ‘பிரான் அருள் இங்கு இத்தனை கொலாம்’ என்று எண்ணி அங்கிருந்து சுந்தரர் அகன்றார் என்கிறார். ஆனால், கோலால் நந்தி தட்டப்பட்டது, அம்மன் மின்னலாக வழிகாட்டியது ஆகியவற்றைச் சொல்லவில்லை.
சேக்கிழார் சொல்லாவிட்டால் என்ன, கோயில் அர்ச்சகர் சுவையாகவும் விரிவாகவுமே சொல்கிறார். சுந்தரர் கோலைத் தட்டியதால் நந்தி கொம்பு உடைய வில்லையாம். ‘கண் கேட்டால் கோல் கொடுக்கிறாரே’ என்று கோபமான கோபமாம் சுந்தரருக்கு; அதனால், கோலைத் தூக்கி வீசினாராம்; பிரான் மீது கோல் பட்டுவிடக்கூடாதே என்று நந்திதேவர் குறுக்கே பாய்ந்து தாங்கிக் கொண்டாராம். கோபத்தில் அம்பாளிடம் முறையிட்டாராம் சுந்தரர்; உடனே, அம்பாள், ‘ஐயன் ஆணையை மீறமுடியாதே’ என்று சொல்லி, இடைப்பட்ட நிலையில், ‘வேண்டுமானால் உனக்கு மின்னலாக அவ்வப்போது தோன்றி வழிகாட்டு கிறேன்’ என்றாராம்.
அம்பாளை மின்னலுக்கு நிகராகச் சொல்கிற மரபு உண்டு. ஒரு கணம் தோன்றி வழி காட்டும் மின்னல் போல, வேண்டியபோது வழி காட்டி வழிநடத்துவாள் அம்மை என்பதாக ஐதீகம். அம்பாள் சந்நிதி பிராகாரத்தை வலம் வந்து பணிகிறோம். சுந்தரர் வரலாற்றுக்கு முன்னதாக, அம்பா ளுக்கு கனிமொழி அம்மை என்றும் கனிவாய் குழலி என்றும் திருநாமங்கள் வழங்கப்பட்டனவாம்.
சுவாமிக்கும் அம்பாளுக்கும் இங்கு தேனபிஷேகம் வெகு சிறப்பு. கண்ணிழந் தவருக்கு ஊன்றுகோல் தந்ததாலும், பிரிந்த குடும்பங்கள் சேர்வதற்கு உதவியதாலும், கல்யாணத் தடைகள் நீங்கவும் கண் நோய்கள் தீரவும் இங்கு வழிபட்டால் நலம் பயக்கும். கொம்பை ஒடித்துக் கொண்டாவது ஐயன் அருளுக்கு நந்தி வழிகாட்டுவதால், பிரதோஷ வழிபாடு தடைகளை நீக்கி உயர்வு தரும்.
அம்பாள் சந்நிதியில் இருந்து அப்படியே கிழக்கு முகமாக நகர்கிறோம். பிரதான கிழக்கு வாயிலில் வந்திருந்தால், இப்படித்தான் நுழைந்திருப்போம். அம்பாள் சந்நிதியை அடுத்து, உற்சவ மண்டபம். உற்சவர் சிலா திருமேனிகள், பாதுகாப்புக்காக, திருவேற்காடு கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. பூண்டி வெண்பாக்கக் கோயில், தற்போது திருவேற்காடு ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்ததாக உள்ளது.
கோயிலின் வடகிழக்குப் பகுதியில் (அதாவது கிழக்கு வாயிலுக்கு வலப் புறத்தில்), மூலையில், தெற்கு நோக்கிய கால பைரவர். அஷ்ட புஜங்களோடு (எட்டுக் கரங்கள்) கூடிய கால பைரவர். இங்கு இவர் அருள்கோலம் காட்டும் நாயகர். வெகு விசேஷமா னவர். தேய்பிறை அஷ்டமி நாட்களில் இவரை வழிபடுவது சிறப்பானது.
பக்கத்தில் மேற்குப் பார்த்தபடி சைவ நால்வர். அருகில் அருணகிரிநாதர். கிழக்கு வாயிலின் இடப் புறத்தில், சூரியன். சற்று தள்ளி நவக்கிரகங்கள். வழிபாடுகளை நிறைவு செய்து, ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வந்து நிற்கிறோம். சுவாமி விமானம் கண்ணைக் கவர்கிறது.
சுந்தரர் வரலாற்றைச் சொல்கிற சேக் கிழார், ‘வண்டு உலாமலர்ச் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண்பாக்கம்’ என்று சுட்டுகிறார். மாட- மாளிகைகள் இருந்தனவா, தெரியாது; ஆனால், வண்டு உலாவும் இயற்கை அழகு இப்போதும் இருக்கிறது.
அழகும் அமைதியுமாகப் புதுமைக்குள் நிற்கும் பழைய வெண்பாக்கம் மனமெல்லாம் நிறைகிறது. பிரிய மனம் இல்லாமல் பிரிகிறோம்.
No comments:
Post a Comment