Wednesday, 2 August 2017

விருத்தாசலம்

தீ பாவளித் திருநாளன்று அன்னபூரணி மாதாவை வணங்குவது விசேஷம்.
பிக்ஷ£ந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதா அன்னபூர்ணேஸ்வரி
என்று அம்பிகையிடம் வேண்டினால், அவள் வேண்டியது எல்லாம் தருவாள். வேண்டியது மட்டும்தானா? அம்பிகையைச் சரண் புகுந்தால், அதிக வரம் தருவாள். ‘அன்னபூர்ணேஸ்வரியை வணங்க வேண்டுமென்றால், காசிக்குப் போக வேண்டுமே!’ என்று பார்க்கிறீர்களா? காசி என்ன... காசியைவிட மேலான தலம்- காசியில் கிடைக்கும் எல்லாப் பலன்களையும் சற்றுக் கூடுதலாகவே தருகிற தலம்- இதோ பக்கத்திலேயே இருக்கிறது. புறப்படுங்கள்!
16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் குரு நமசிவாயர். திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்ட அவர், இந்த ஊரில் இரவு தங்கினார். கோயிலுக்குச் சென்று சிவ பெருமானையும் அம்பிகையையும் தரிசித்தார். வெளியே வந்தார். மண்டபத்தில் படுத்தார்.
பசிக்கத் தொடங்கியது. பசிக்கும்போதெல்லாம் அம்பிகையிடம் கேட்டு வாங்கிச் சாப்பிடுவது அவரது வழக்கம். பாலுக்கு அழும் குழந்தை போல, பசித்தால் அம்பாளை எண்ணிப் பாடுவார். குழந்தையின் குரல் கேட்டு ஓடி வரும் தாயாக, அம்பிகை அவருக்கு உணவு படைப்பாள்.
அன்றைக்கும் பாடத் தொடங்கினார். அம்பிகையின் பெருமைகள் கண்ணுக்கு முன்னால் வலம் வந்தன. ‘அவள் எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் பெரியவள். அவள் என்றும் நிலையானவள். அவள் அண்ட பகிரண்டத்தையே தன் திருமேனியாகக் கொண்டவள். மலயத்துவசன் மகளாகப் பிறந்தவள். சிவனாரின் இடப் பாகத்தில் குடி கொண்டவள்.’ இவ்வளவு பெருமைகளையும் ஒருசேரப் பாடினார்.
நன்றிபுனையும் பெரியநாயகி எனும் கிழத்தி என்றும் சிவனார் இடக்கிழத்தி - நின்ற நிலைக்கிழத்தி மேனி முழுநிலக்கிழத்தி மலைக்கிழத்தி சோறு கொண்டுவா
என்று பாடி முடித்தார். எப்போதும், அவர் பாதி பாடிக் கொண்டிருக்கும்போதே அம்பிகை ஓடி வந்து விடுவாள். இன்றைக்கோ, பாடி முடித்து விட்டார். ஆனால், அம்பிகையையும் காணோம்... உணவையும் காணோம்! என்னவாயிற்று?
கண் சுருக்கி அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அம்பிகை வருவது தெரிந்தது. அம்பிகைதான்! ஆனால், மெதுவாக, மிக மிக மெதுவாக, நடை தளர்ந்து, நரை தோன்றி, கண்களை இடுக்கி, லேசாகச் சாய்ந்து வந்து கொண்டிருந்தாள். ஆவலுடன் பார்த்தார். சாப்பாடு எங்கே?
அம்பிகை, குரு நமசிவாயரின் அருகில் வந்தாள். ‘‘ஏனப்பா? என்ன பார்க்கிறாய்?’’
குரு நமசிவாயருக்கோ ஒரு புறம் வியப்பு; மறு புறம் யோசனை. ‘என்ன பதில் சொல்வது? அன்னபூரணி தேவிக்கு அடியேன் சொல்லியா தெரிய வேண்டும்!’
அவர் பதில் சொல்லவில்லை. ஆனால், அடுத்த கேள்வியை அம்பிகையே கேட்டாள். ‘‘ஏனப்பா? கிழத்தி, கிழத்தி என்று வாய் ஓயாமல் பாடினாயே, கிழவியால் எப்படிச் சாப்பாட்டையும் தூக்கிக் கொண்டு ஓடி வர முடியும்? இடுப்பைக் குனிந்து பரிமாற முடியும்?’’
(கிழத்தி என்ற சொல்லுக்கு, உரிமை உடையவள், உரிமைக்கு உரியவள் என்றும் அர்த்தங்கள் உண்டு. கிழ என்றால் உரிமை. அதனால்தான், நில உரிமையாளர் நிலக்கிழார் என்றும், வீட்டுத் தலைவி இல்லக்கிழத்தி என்றும் அழைக்கப்பட்டனர். உரிமைக்காரி என்ற அர்த்தத்தில் நமசிவாயர் பாடினார். ஆனால், ‘கிழ’ என்பதற்கு ‘முதிய’ என்ற அர்த்தத்தை, அம்பிகை எடுத்துக் கொண்டாள்.)
பாட்டி வேடத்தில் வந்து பக்குவமாகக் கேள்வி கேட்ட அம்பிகையின் அங்கலாய்ப்பைப் புரிந்து கொண்ட குரு நமசிவாயர், மறுபடியும் பாடினார்.
முத்திநதி சூழும் முதுகுன்று உறைவாளே பத்தர் பணியும் பதத்தாளே - அத்தன் இடத்தாளே முற்றா இளமுலை மேல் ஆர வடத்தாளே சோறு கொண்டு வா
பாட்டி புன்னகைத்தாள். பாலாம்பிகையாக உருவெடுத்தாள். இளமைக் கோலத்தோடு குரு நமசிவாயருக்கு உணவிட்டாள்.
காசி அன்னபூர்ணேஸ்வரிக்கு நிகராக, இந்த இளமை நாயகியாம் பாலாம்பிகையிடம் பிரார்த்தித்தால், பசிப் பிணியை மட்டுமல்லாமல் பாவப் பிணியையும் நீக்கி அருள்வாள்.
வாருங்கள்... பாலாம்பிகையை தரிசிக்கவும் விருத்தநாயகி சமேத விருத்தகிரீஸ்வரரை தரிசிக்கவும் ‘விருத்த காசி’க்குச் செல்வோம். ஆமாம், தமிழகத்திலேயே ‘சீனியர்’ காசியாக விளங்குகிற விருத்தாசலம் செல்வோம்!
அன்னபூரணியாக விளங்கும் பாலாம்பிகை; கேட்ட தெல்லாம் கொடுத்து, பொன்னும் பொருளுமாக இட்டும் தொட்டும் வழங்கும் விருத்தகிரீஸ்வரர்; மனிதர்களே போட்ட சட்டங்களானாலும், ஏமாற்றினால் தக்க தண்டனையும், திருந்தினால் அருளும் வழங்கி, தெய்விக நீதியை நிலை நாட்டும் பழைமலைநாதர்; கணக்குப் பிசகாத ஆழத்துப் பிள்ளையார்; ஆகம முறைகளை அருளித் தரும் கந்தக் கடவுள்... இவர்களையெல்லாம் தரிசிக்க, விருத்த காசியாம் விருத்தாசலம் செல்வோம்.
விருத்தாசலத்தில் வசிப்பவர்களும், விருத்தாசலத்துக்குச் சென்று வந்தவர்களும் காசிக்குச் செல்ல வேண்டியதில்லை என்பது ஐதீகம்.
இறைவனும் இறைவியும் நிகழ்த்துகிற திருவிளை யாடல்கள் ஏராளம். அதிலும், மாதொரு பாதியனாக- அர்த்தநாரீஸ்வரராக- அம்மையப்பனாக- தாயும் தந்தையுமாக- அந்தப் பரம்பொருள் வழங்கும் அருளுக்கு எல்லையே கிடையாது.
அர்த்தநாரீஸ்வர ஸ்வரூபத்தைத் தாங்கி, இறையனார் அருள் வழங்கிய திருநாள்தான், தீபாவளியை ஒட்டி வரும் கேதார கௌரி விரதத் திருநாள்!
அர்த்தநாரீஸ்வர ஸ்வரூபத்தையும், இறைவனுடைய திருவிளையாடல்களின் எளி வந்த தன்மையையும் சேர்த்துப் பாடினார் நீலகண்ட தீட்சிதர் என்ற மகான். சிவலீலார்ணவம் என்கிற தனது நூலில், கிண்டலும் கேலியுமாக அவர், பரமேஸ்வரியிடம் பேசினார்:
‘அம்மா! நீ அன்னையும் அப்பனுமாக அர்த்தநாரீஸ்வர உருவில் இருக்கிறாய். அதனால், உன்னிடம் ஆண் தன்மை பாதி உள்ளது; பெண் தன்மையும் பாதிதான் உள்ளது. நீ மதுரை மாநகரத்தின் அரசி. ராஜ்ய பரிபாலனம் செய்ய வேண்டிய ஆண் தன்மை சரியாக இல்லாததால், மதுரையிலேயே உன் கணவர் அடிபடுகிறார் (பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டாரே, அந்தக் கதை). சரி, நீ அன்னம் பாலிக்க வேண்டிய இல்லத்தரசி; உலகத்துக்கே அன்னமிடுகிறாய் (அன்னபூரணியாக). ஆனால், உன் கணவரோ, பிட்சாடனராகச் சுற்றுகிறார். இரண்டும் சரி யில்லை, தாயே!’
அர்தம் பௌருஷம் அர்தம் ஏவ பவதி ஸ்த்ரைணஞ் ச யத் தாவகம் ஸாம்ராஜ்யம் க்ருஹகர்ம வா கிம் அபி தத் நாயாதி நிர்வ்யூடதாம் த்வம் ராஜ்ஞ மதுராபுரஸ்ய தயிதஸ் தத்ரைவ தே தாட்யதே த்வம் மாதஸ் ஸ்வயம் அன்னதாஸி ஜகதாம் காந்தஸ் து தே பிக்ஷதே
-நீலகண்ட தீட்சிதர் வேடிக்கையாகப் பாடினார் என்றாலும் அம்மையும் அப்பனும் போட்டி போட்டுக் கொண்டல்லவா அருள் வழங்குகிறார்கள். அதுதானே, அர்த்தநாரீஸ்வரத் திருக்கோலத்தின் ஆதார ரகசியம்!
அம்பிகை, இளமைக் கோலம் கொண்டு குரு நமசிவாயருக்கு அருளியதைப் போலவே, விருத்தாசலத்தில் இறையனாரும் இளமைக் கோலம் கொண்ட கதையன்று கர்ண பரம்பரையாக வழங்குகிறது.
ஊ ர் ஊராகச் சென்று சிவ தரிசனம் செய்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். திருக்கூடலையாற்றூர் சென்று தொழுத பின்னர், திருமுதுகுன்றம் (அதுதான், நம்ம விருத்தாசலம்) சென்றார்.
ஊர்ப்புறத்தே வரும்போது, ஊரின் பெயர் என்ன என்று கேட்டார். ‘முதுகுன்றம்’ என்றனர் (முது- பழைய, முதுமையான; குன்றம்- மலை; இதுவேதான், வடமொழியில் விருத்தாசலம் என்று வழங்குகிறது. விருத்தா- முதிய. அசலம்- மலை).
‘சுவாமி பெயர் என்ன?’ ‘பழைமலைநாதர்’. (பழைய மலை- முதுகுன்ற நாதர்).
சற்று யோசித்தார் சுந்தரர். ஊர் பழைமலை. முதுகுன்றம். சுவாமியும் பழைமலைநாதர்; முதுகுன் றீசர். ஊரும் கிழம்; பேரும் கிழம்!
சுந்தரர் எப்போதுமே இளமையை விரும்பிய அழகு உணர்ச்சிக்காரர். சைவப் பெருமக்களின் திருமேனித் திருப்படங்களைப் பார்த்தாலே தெரியும். சின்னக் குழந்தையாம் திருஞானசம்பந்தர், இறைவன் கொடுத்த தங்கத் தாளத்தைக் கையில் ஏந்தி நிற்பார். வயது முதிர்ந்த போதும், மனமும் எண்ணமும் உதிராமல் உழவாரப் பணி செய்த நாவுக்கரசர் பெருமானோ, தோளில் உழவாரப் படை தாங்கி உருகி நிற்பார். ஆடை-அணிகலன்கள் பிரகாசிக்க, யௌவனம் ஒளி கூட்ட, கல்யாண சுந்தரராகக் காட்சி கொடுப்பவர் சுந்தரர்!
கிழக் கடவுளை, அதுவும் கிழ ஊரில் போய்க் காண்பதா! யோசனையில் ஆழ்ந்த சுந்தரர், இந்த ஊர் வேண்டாமென்று திரும்பிவிட்டாராம்.
பொறுப்பாரா பழைமலைநாதர்! தேவாரப் பாட்டுக் கேட்காமல் அவரால் நிம்மதியாக இருக்க முடியுமா, என்ன! ‘சுந்தரன் உள்ளே வராமல் போகிறானே, என்ன செய்வது?’ சுற்றுமுற்றும் பார்த்தார். ‘சுந்தரனை அழைத்து வர யாரை அனுப்பலாம்?’ மூத்த மகனைப் பார்த்தார். ‘விநாயகன் எழுந்து... நடந்து... ஓடி எந்தக் காலத்தில் போய் சுந்தரனைப் பிடிப்பது?’ இன்னொரு மகனைப் பார்த்தார் ‘இவன் வேகமாக ஓடுவான். இல்லை மயில் மீதேறிப் பாய்வான். இவனை அனுப்பலாம்!’
‘‘சுப்ரமணியா... சுந்தரனுடைய பாடல்களைக் கேட்க வேண்டும். ஆனால், அவன் ஊருக்குள் வராமல் போகிறான். எப்படியாவது அவனை அழைத்து வா!’’
மயிலேறிப் பறந்த முருகன், சுந்தரரை வழியில் மடக்கினார். ‘‘அப்பா, உங்களை அழைத்து வரச் சொன்னார்.’’
மேலும் கீழும் பார்த்தார் சுந்தரர். கையில் வேலும் சேவலும் தாங்கி அழகு கொஞ்ச நின்ற அமுதப் பிள்ளை. ஆனால், அப்பா? ‘பழைமலை நாதராமே! இல்லையென்றால், முதுகுன்றீசர். அதுவும் இல்லையென்றால், விருத்தகிரீஸ்வரர். எல்லாம் கிழத்தனமான பெயர்கள். என்றைக்குத் தோன்றி னார் என்று ஏற்கெனவே தெரியாது. ஆதியும் அந்தமும் இல்லாதவர். அப்படியானால், முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழைமையானவர். அவ்வளவு வயசானவரையா பாடுவது?’ நினைக்க நினைக்க, அவருக்கு ஆதங்கம் அதிகமானது. உள்ளத்தில் இருந்ததை வெளியில் கொட்டினார்.
‘‘உன் அப்பா கிழவனாராயிற்றே! அதுவும் இந்த ஊரில் தொண்டு கிழம் என்கிறார்களே!’’
‘‘இல்லை, அப்பாவுக்கு உங்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பாராமுகம் காட்டினாலும், அவரால் உங்களிடம் பாராமுகம் காட்ட முடியாது. உங்களது பாட்டைக் கேட்கக் காத்துக் கொண்டிருக்கிறார்.’’
‘‘சரி. உன் அப்பாவிடம் போய்ச் சொல்... இளமைக் கோலம் கொண்டு காட்சி தருவாரென்றால், அவரைச் சந்திக்கச் சம்மதிக்கிறேன்.’’
வந்த வேகத்திலேயே திரும்பப் பாய்ந்தார் முருகன். சடுதியில் போய், தந்தையாரிடம் தகவல் சொன்னார்.
‘‘நீங்கள் இளமையாகக் காட்சி கொடுத்தால், சுந்தரர் இங்கு வருவாராம்; உங்களையும் பாடுவாராம்!’’
பாட்டுக் கேட்பதில் எல்லையற்ற பிரியம் கொண்ட பரமனாருக்கு வேறென்ன வேண்டும்! ‘‘வரச் சொல்... வரச் சொல். இப்போதே இளமைக் கோலம் கொண்டு விடுகிறோம்!’’
மீண்டும் மயிலோன் பறக்க, ஐங்கரன் சிரிக்க... வேகவேகமாக இளமை வேடம் கொண்டு இன்முகம் காட்டினார் இறையனார்!
‘‘ உமாதேவி... நீயும் இளமையாக மாறிவிடு. பெரியநாயகி என்ற பெயர் தாங்கி நீ நின்றால், உன்னால் எமக்கும் வயதாகிவிட்டதென்று சுந்தரன் கோபித்துக் கொண்டாலும் கோபித்துக் கொள்வான்!’’
உமைத் தாயாரும் உடனே பாலாம்பாள் கோலம் கொள்ள... பெரிய பழைமலைநாதர், சுந்தரருக்காகச் சிறிய பழைமலைநாதராக மாறி நின்றார்.
சுந்தரரது வரலாற்றைப் பாடும் சேக்கிழார், மேற்கூறிய ‘இளமை விளையாட்டு’ச் சம்பவம் நடந்ததாகச் சொல்லவில்லை. பற்பல தலங்களுக்குச் சென்றுவிட்டு திருமுதுகுன்றம் செல்ல யத்தனிக்கிறார் சுந்தரர். முது குன்றம் நோக்கிப் பயணித்து, ஊரின் அருகிலும் வந்து விட்டார். அப்போது, வயதான அந்தணரும் அவர்தம் மனைவியுமாக சிவபெருமானும் பார்வதியும் எதிர்ப் பட்டனர். அவர்களை ‘யாரோ வழிப்போக்கர்கள்’ என்றெண்ணிய சுந்தரர், ‘‘இன்று யாம் முதுகுன்று எய்த வழி எமக்கு இயம்பும்!’’ என்று வழி கேட்டார்.
கேட்டதற்கு பதில் சொல்லாமல், ‘‘கூடலையாற்றூர் போகிறோம், வா!’’ என்று அழைத்துப் போகிறார் கிழவர். இறைவன் சித்தம் போலும் என்று சுந்தரரும் பின்செல்ல, கூடலையாற்றூர் போனதும் கிழவனும் கிழவியும் மறைந்து போயினர்.
இறைவனே தன்னைக் கூடலையாற்றூருக்கு அழைத்து வந்த மகிமையை உணர்ந்த சுந்தரர், கூடலையாற்றூரில் வணங்கி வழிபட்ட பின் விருத்தாசலம் செல்கிறார். இவ் வளவுதான் சேக்கிழார் சொல்வது.
பின்னே, சேக்கிழார் சொல்லாத கதை எங்கே இருந்து வந்தது? சுந்தரர் உள்ளே வராமல் போனது, சுப்ரமணியர் அவரை விரட்டிச் சென்றது, இறைவனின் இளமைக் கோலத்தை சுந்தரர் விண்ணப்பித்தது, இறையனார் இளமை வேடம் பூண்டது- இவையெல்லாமே, விருத்தாசலம் பகுதியில் உலா வரும் செவிவழிக் கதைகள்!
சுந்தரர் கதை நடந்ததா, இல்லை குரு நமசிவாயருக்காக நடந்த சம்பவத்தின் தாக்கம் இப்படியரு கதையைத் தோற்றுவித்ததா? தெரியவில்லை. விருத்தாசலத்துக்கு வந்து கொண்டிருந்த சுந்தரர், கூடலையாற்றூருக்குத் திரும்பியதால்கூட இப்படியரு கதை தோன்றியிருக்கலாம்.
சுந்தரர் மற்றும் சிவபெருமான் தோழமை, சுந்தரரின் உரிமை, அன்பு போன்றவை கதைக்குச் சுவாரஸ்யத்தைச் சேர்க்கின்றன.
உள்ளூர் குருக்கள், ‘இது நடந்த கதைதான்’ என்கிறார். விருத்தாசலத்திலிருந்து (பெண்ணாடம் போகும் வழியில்) சுமார் 3 கி.மீ. தொலைவில் வேடப்பர் சுவாமி திருக்கோயில் உள்ளது. அருள்மிகு வேடப்பர் சுவாமி என்ற பெயரில் முருகப் பெருமான் கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலத்தில்தான் முருகன் - சுந்தரர் சந்திப்பு நிகழ்ந்தது என்றும் அவர் கூறுகிறார்.
எப்படியோ, சுந்தரருக்குச் சிவபெருமான், தங்கம் தந்த கதை, விருத்தாசலத்தில்தான் நடந்தது.
அந்தக் கதையைப் பின்னால் பார்க்கலாம். இப்போது, விருத்தகிரீஸ்வரர் கோயிலை அடைந்து விட்டோம்.
விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில், மிகப் பெரிய கோயில். வானளாவி நிற்கும் கோபுரங்கள். எல்லாக் கோபுரங்களும், ஏழு நிலைகளைக் கொண்டவை. சுமார் நான்கு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் மூன்று பிராகாரங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். வெளிப் பிராகாரம், கயிலாசப் பிராகாரம் என்றழைக்கப்படுகிறது.
கிழக்கு கோபுர வாயிலில் நிற்கிறோம். வாயிலின் பட்டி கைப் பகுதியில் அற்புதமான தாண்டவச் சிற்பங்கள். பரதம் கூறும் 72 கரணங்களை விளக்கும் புடைச் சிற்பங்கள்.
13-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில், தொண்டை மண்டலப் பகுதியை ஆண்ட மன்னன் - காடவர்கோன் கோப்பெருங்சிங்கன். இசை, நாட்டியத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட இந்த மன்னன், சிதம்பரம் கோயிலுக்கும் இன்னும் பல கோயில்களுக்கும் திருப்பணிகள் செய்வித்தான். சிதம்பரம் கோயில் கிழக்கு கோபுர வாயிலிலும், இதே காடவர்கோன், 108 தாண்டவங்களின் சிற்பங்களைச் செதுக்கச் செய்தான்.
இசைக்கும், நாட்டியத்துக்கும், கலாசாரத்துக்கும் நம்முடைய திருக்கோயில்களைப் பொக்கிஷங்களாக அமைத்துக் கொடுத்த முன்னோர்களை நன்றியுடன் நினைத்துக் கொண்டே, கோயிலுக்குள் நுழைய யத்தனிக்கிறோம். பக்கத்தில் நிற்கும் ஒருவர் கேட்கும் கேள்வி காதில் விழுகிறது.
‘அசலம் என்றால் மலை என்று பொருள். இந்த ஊரில், மருந்துக்குக் கூட மலை இல்லை. பூமிக்கடியில் பாறைகூட இல்லை. ஏன் இப்படியரு பொருத்தமில்லாத பெயர்?’
கேள்வி என்னவோ, பொருத்தமாகத் தெரிகிறது.
ஒருவேளை, ஆதி காலத்தில் இங்கே மலை இருந்ததோ! பின்னர், காணாமல் போயிற்றோ? மலை காணாமல் போகுமா, என்ன?
சிவபெருமானே இங்கே மலை வடிவில் வெளிப் பட்டதாகவும், இறைவனாலேயே தோற்றுவிக்கப்பட்ட பகுதி இது என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், இந்த மலை இறைவன் திருவருளால் அமிழ்த்தப்பட்டுவிட்டது என்றும், அதனால்தான், பூமிக்கடியில் பாறைகள் இல்லையென்றும் கூறுகிறார்கள்.
சற்று நமது சிந்தனையை ஓட்டினால், இன்னொரு தடயமும் புலப்படுகிறது. மலைகள் தோன்றுவதும், பின்னர் குறைவதும், புவியியல் சுழற்சியில் வாடிக்கை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில், இவ்வாறு நிகழும். பற்பல ஆண்டுகளுக்கு முன்னர், இப்போது இமய மலை இருக்கும் பகுதி கடலாக இருந்தது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள். ஒரு காலத்தில் மிக உயரமாக இருந்ததாகக் கூறப்படும் விந்திய மலை, இப்போது மிகச் சிறிய குன்றுப் பகுதியாக மட்டுமே விளங்குகிறது.
அப்படியானால்?...
பெயருக்கேற்றபடி விருத்தா சலம் பகுதியும், மலைப் பகுதி யாக இருந்திருக்க வேண்டும். காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
இதற்குப் பொருத்தமாக, அருகில் (சற்றே மேற்கே), ஆதி மலை என்று வர்ணிக்கப்படும் திருவண்ணாமலை திருத்தலம் உள்ளது. விருத்தா சலத்துக்கு மிக அருகில், நெய்வேலி உள்ளது. இன்னும் சற்று வடக்காக, திருவக்கரை. நெய்வேலியில் நிலக்கரி; திருவக்கரையில் புதை படிவங்கள் - இவையெல்லாமே, மலையும், மரங்களும் பூமியில் புதைவதால் ஏற்படும் கால மாற்றங்கள்.
இப்போது மலை, நம் கண்களுக்குப் புலப்படா விட்டாலும், மலையாகவும், மரமாகவும், மறை பொருளாகவும், அண்ட பகிரண்டமாகவும் விளங்கும் இறையனாரின் அருள் மலையாகத் திகழும் திருக் கோயிலுக்குள் நுழைகிறோம்.
‘ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனைப் பத்தர்மனம் குடி கொண்டானைக் கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானைக் கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத் தான் தெரிந்து அங்கடியேனை ஆளாக் கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த தீங் கரும்பைத் திருமுதுகுன்றுடையான் தன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்தவாறே’ , என்று

முதுகுன்றுடையானை, எல்லாமாகக் கண்டு தொழு தார் அப்பர் பெருமானார். தேவாரம் பாடிக் கொண்டே அவர் முன்னால் போகிறார்; நாமும் பின்தொடர்வோமா!

ரத சாஸ்திர நுணுக்கங்களை அனுபவித்துக் கொண்டே கோபுரம் தாண்டி உள்ளே வந்து விட்டோம். விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஒரு பழைய வழக்கம் உண்டு. அதன்படி, கோயிலுக்கு வடக்கே- வடக்கு கோபுரத்துக்கு எதிரில் இருக்கும் புண்ணிய மடுவில் இறங்கி, வழிபட்டு விட்டுத்தான் கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஒரு காலத்தில் பெரிய ஆறாக ஓடிக் கொண்டிருந்த மணிமுத்தா நதி, இப்போது சிறிய மடுவாக மட்டுமே காணப்படுகிறது. காசியிலுள்ள கங்கையில் நீராடினால் என்ன பேறு உண்டோ, அவ்வளவு பேறு இந்தப் புண்ணிய மடுவில் நீராடுவதாலும் கிடைக்கும்.
கங்கையில் நீராடினால் கயிலாசத் தையே காணலாம் என்பார்கள். இங்கேயும், புண்ணிய மடுவில் நீராடி பின்னர் சற்றே வலமாக வந்து, கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைகிறோம் (வடக்கு கோபுர வழி பெரும்பாலும் மூடப்பட்டிருக்கிறது). நாம் இப்போது நிற்பது எங்கு தெரியுமா? கயிலாசப் பிராகாரம்!
ஒரு பக்கமாக நின்று பிராகாரத்தைச் சுற்றுமுற்றுமாகப் பார்க்கும்போது இப்படித்தான் தோன்றுகிறது - ‘ஒருவேளை கயிலாசத்திலும்கூட இப்படிப் பெரிய பெரிய மண்டபங்கள் இருக்குமோ!’ ஏனெனில், கயிலாசப் பிராகாரம் முழுவதும் அவ்வளவு மண்டபங்கள்!
சிவபெருமான் வாசம் செய்யும் இடத்துக்குத் திருக்கயிலாசம் என்று பெயர். இமய மலைத் தொடர்களின் வடக்குப் பகுதியில் உள்ள கயிலாச மலையை, கண்ணுக்குப் புலனா கும் கயிலாசநாதராக வணங்கும் வழக்கம் உண்டு.
தென் கயிலாசம் என்றழைக்கப் படுகிற காளஹஸ்திக்குச் சென்ற ஞானசம்பந்தர், அங்கிருந்தே மானசீகமாகக் கயிலாசத்தை நினைத்து வணங்கினார். அப்பர் சுவாமிகளோ, கயிலாச யாத்திரையாக வடதிசையில் பயணப்பட்டு, பின்னர் இறைவன் அருளால் திருவையாற்றிலேயே கயிலைக் காட்சியைக் கண்டார். சுந்தரரோ, திருஅஞ்சைக்களத்திலிருந்தே ஐரா வண யானை மீதேறி, கயிலையை அடைந்தார்.
ஆனால், இந்தக் கயிலாசப் பிராகாரத்தில் நிற்கும்போதே, கயிலைக் காட்சியைக் கண்டுவிட்டது போன்ற பரமானந்தம் நம் உள்ளத்தை நிறைக்கிறது.
கயிலாசப் பிராகாரத்துக்கும் கயிலாசத்துக்கும் ஓர் ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது. கயிலாச மலைக்குப் பக்கத்தில், சுமார் 32 கி.மீ. தொலைவில் மானசரோவர் ஏரி இருக்கிறது. கயிலைக்குச் சென்று வந்தவர்கள் ஒன்று கூறுவார்கள். கயிலாச மலைப் பகுதியில், ஹோரே என்னும் இடம் இருக்கிறதாம்; இந்த இடத்துக்குப் பக்கத்தில் சென்று பார்த்தால், கயிலாச மலையின் பிம்பம், பளிங்கு போன்று பளபளக்கும் மானசரோவர் ஏரியில் தெரியுமாம். நீர்ப்பரப்பை ஆவுடையாராகவும், பிம்பமாகத் தெரியும் கயிலை மலையை லிங்கபாணமாகவும் கண்டு, மனதில் கொண்டு வணங்குவது மரபு.
கயிலாசப் பிராகாரத்தில் ஓரமாக நின்று கொண்டு, மண்டபங்களையும் பிராகாரத்தையும் பார்க்கிறோம். நிலமே ஆவுடையாராகவும், மண்டபங்களே லிங்கபாணங்களாகவும் தெரிகின்றன. என்ன அழகு! என்ன அழகு!
திருமுதுகுன்றமாகிய விருத்தாசலம் கோயிலுக்குத் திருப்பணி செய்த மன்னர் கள் ஏராளமானோர். அதே போல, இந்தக் கோயிலின் மண்டபங்களையும் பற்பலர் கட்டியுள்ளனர். நூற்றுக்கால் மண்டபத்தை அரசர் நாராய ணன் ஆளப் பிறந்தான் வீரசேகர காடவராயரும், மடைப் பள்ளியை ஏழிசை மோகன கச்சி ராயரும், உற்சவ மண்டபத்தை வையப்ப கிருஷ்ணம நாயக்கரும், மகாஸ்நபன மண்டபத்தை (கரு வறைக்கு முன்னால் அர்த்த மண் டபம். அர்த்த மண்டபத்துக்கு முன்னால் ஸ்நபன மண்டபம். அதற்கு முன்னால் மகா மண்ட பம். சில ஆலயங்களில் மகா மண்டபமும் ஸ்நபன மண்டபமும் சேர்ந்தே அமைந்திருக்கும்.) ஆளப்பிறந்தான் ஏழிசை மோகன குலோத்துங்க சோழ காடவர் ஆதித்தரும் கட்டியதாகக் கல்வெட்டுச் செய்திகள் காணப்படுகின்றன. இப்போதுள்ள கோயிலில் பெரும்பாலான கல் கட்டுமானங் களை, கண்டராதித்த சோழரது பட்டமகிஷியும், உத்தம சோழப் பேரரசரின் தாயாரும், ராஜராஜ சோழப் பேரரசரின் பெரிய தாயாருமான செம்பியன் மாதேவியார் கட்டியதாகத் தெரிகிறது. பார்த்துப் பார்த்து இழைத்து இழைத்துப் பரமனார்க்குத் திருக் கோயில் அமைத்த இந்தப் பெரியவர்களையும் மன தார வணங்கிக் கொண்டே, பிராகார வலத்தைத் தொடங்குகிறோம்.
எப்படிக் கயிலாச மலையைச் சிவபெருமானாகக் கண்டு வணங்கு கிற மரபு இருக்கிறதோ, அப்படித் தான், விருத்தாசல பழைய மலையையும் இறையனாராகக் காணும் மரபு இருந்திருக்கிறது. கயிலைநாதருக்குக் கயிலாசநாதர் என்கிற திருநாமம் போலவே, இங்குள்ள சிவபெருமானுக்கும் பழை மலைநாதர் என்பது திருப்பெயராக அமைந்துள்ளது. மலை இப்போது இல்லையென்றாலும், இந்த ஊர் முழுவதையுமே சிவபெருமானாக வணங்குதல் வழக்கம்.
சிவபெருமானையுடைய சிறப்புமிக்க ஆயிரத்தெட்டுத் தலங்களில், நான்கு தலங்கள் மிக முக்கியமானவை; அவற்றுள், விருத்தாசலமும் ஒன்று (காசி, சிதம் பரம், காளஹஸ்தி ஆகியவை ஏனைய மூன்று). சிதம்பரம் திரு நடனத்துக்கான தலம்; காசி பக்தியை மெச்சி அருளுவதற்கான தலம்; காளஹஸ்தி பக்தர்களோடு விளையாடுதற்கான தலம் என்றால், பக்தியை மெச்சி, பக்தர்கள் கேட்டதைக் கொடுத்து, அவர்களோடு விளையாடி, அருளி எம்பெருமான் வீற்றிருக்கும் தலம் விருத்தாசலம் என்பதாக ஐதீகம்.
கோபுர வாயில் கடந்து உள்புகுகிறோம். வாயிலின் எதிரே முதலில் இருப்பது பதினாறு கால்கள் கொண்ட தீபாராதனை மண்டபம். அதற்கு அடுத்து, இரண்டாம் பிராகாரத்துக்குப் போகும் வாயிலுக்குப் பக்கத்தில் இருப்பது நந்தி மண்டபம். ஆடிப் பூரத்தில், சுவாமிக்கு நடைபெறுகிற திருக்கல்யாண உற்சவம் இங்குதான் நடைபெறும்.
இந்த மண்டபங்களைக் கடந்து சென்றால், அடுத்தொரு மண்டபம் - விபச்சித்து முனிவர் மண்டபம். மாசி மாதத்தில் கோயில் பிரம்மோற்சவம் நடைபெறும். அப்போது ஆறாம் நாள் விழாவில், பெரிய நாயகர் என்றழைக்கப்படுகிற உற்சவத் திருமூர்த்தி இங்கு எழுந்தருளுவார். விபச்சித்து முனிவருக்குக் காட்சி வழங்குவார். விபச்சித்து மண்டபத்துக்கு நேர்கிழக்கே, கோயில் தீர்த்தங்களுள் ஒன்றான அக்னி தீர்த்தம் இருக்கிறது. தென்கிழக்கு மூலையில் அரசமரம், அதன் கீழ் நாகர்.
பிராகார வலத்தில், தெற்குப் பகுதியை அடைந்து விட்டோம்; சுற்று மதிலும் கோபுரமும் கொண்ட தனிக் கோயில். யாருடைய கோயில்? இந்தத் தலத்துக்கே உரியவரும் தல விநாயகருமான ஆழத்துப் பிள்ளையார், இங்கே கொலுவீற்றிருக்கிறார். இவரை நாம் ஏற்கெனவே ஒரு முறை சந்தித்திருக்கிறோம். இவரை நமக்கு அறிமுகம் செய்து வைத்தவர், திருவாரூர் கமலாலயக் குளக்கரை மாற்று உரைத்த விநாயகர்! இரண்டு பேரும் கணக்கு வழக்கில் மன்னர்கள்.
என்ன, அந்தப் பழைய கதை நினைவிருக்கிறதா? விருத்தாசலத்துக்கு வந்த சுந்தரர், சிவபெருமானிடம் பன்னிரண்டாயிரம் பொற்காசுகள் கேட்டாரே, அந்தக் கதை!
“ஊரும் பழசு, பேரும் பழசு, பாட மாட்டேன்!’’ என்று சுந்தரர் சொன்னாரா இல்லையா என்பது சரியாகத் தெரியாது. ஆனால், பழைமலைநாதரிடம் காசு வாங்கினார் என்பது மட்டும் நன்றாகவே தெரியும். சுந்தரர் பாடினால், சும்மாவா பாடுவார்! பாவம், பழைமலைநாதர். சுந்தரர் கேட்ட கேள்விகளை யெல்லாம் நினைத்தே, அவருக்கு விழி பிதுங் கிப் போயிருக்க வேண்டும். ஆனால், அந்தப் பாடல்களையும் ரசித்து ரசித்துக் கடைசியில், பன்னிரண்டாயிரம் பொற்காசுகளை அள்ளி அள்ளிக் கொடுத்து விட்டார். என்னவெல்லாம் பாடுகிறார் தெரியுமா சுந்தரர்? ‘நெய்யையும் பிற பொருள்களையும் வாரிக் கொட்டி வேள்விகள் வளர்க்கப்படுகிற இடம் திருமுதுகுன்றம் - வேள்வி நாயகனான நீர், பிச்சை வாங்கப் போகலாமா?’
... குறத்திகள் முன்றிலிடைப்பிடி கன்றிடும் முதுகுன்றரே! 
- மன்றிலிடைப் பலி நேரப்போவது வாழ்க்கையே..
 .
பொருள்: ‘முதுகுன்றத்துக் குறத்திப் பெண்கள், தங்களது வீடுகளில் பெண் யானையையும் கன்றையும் கட்டி வைத்துப் பராமரிக்கின்றனர். ஆனால், நீர் வீடு வீடாகப் போய் பிச்சை கேட்கிறீரே? இது நியா யமா?’
எத்திசையும் திரிந்து ஏற்றக்கால் பிறர் என்சொலார் பத்தியினால் இடுவார் இடைப்பலி கொள்மினோ...
பொருள்: ‘சரி, போவது போகிறீர். எல்லா வீடுக ளுக்கும் போகாதீர். பக்தியோடு கொடுப்பவர் வீடுகளுக்கு மட்டும் போங்கள்’.
ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகம்தொறும் பாடிப்படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ...
பொருள்: ‘அடியாரையும் சேர்த்துக் கொண்டு, வீடு வீடாகச் சென்று நீர் பாடியும் ஆடியும் சேர்த்த பொருளெல்லாம் உம் தேவி உமையாருக்கு மட்டும்தானா?’ (எங்களுக்குத் தர மாட்டாயா என்பது மறைமுகமான கேள்வி போலும்!)
இப்படிக் கேட்டு விட்டாரே சுந்தரர், அதன் பின்னரும் ஒன்றும் கொடுக்காமல் இருப்பாரா என்ன சிவபெருமான்! பன்னிரண்டாயிரம் பொன் கொடுத்தார். பன்னிரண்டாயிரம் பொற்காசுகளையும் தன்னந்தனியே எப்படித் திருவாரூர் வரை கொண்டு செல்வது? அதனால், திருவாரூருக்கு எடுத்துச் செல்வதற்கான உதவி கேட்டார் என்றும், எடை மிக்க அச்சு அசல் ஆடகப் பொன்னை ஆற்றிலிட்டுப் பின் திருவாரூர் குளத்தில் எடுத்துக் கொள்ளச் சொன்னார் சிவனார் என்பதும் ஊர் வரலாறு. சேக்கிழார் இதை வேறு விதமாகச் சொல்கிறார். ஊர்க்காரர்களுக்கு வியப்பு தோன்றி, இறையனாருடைய அற்புதங்களை அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக, முதுகுன்றத்தில் கொடுத்த பொன், திருவாரூருக்கு வர வேண்டும் என்று சுந்தரர் விண்ணப்பம் வைத்தாராம். அதன்படி சம்மதித்த சிவனாரும், மணிமுத்தா நதியில் அந்தப் பொற்காசுகளைப் போட்டு, திருவாரூர் கமலாலயக் குளத்தில் எடுத்துக் கொள்ளச் சொன்னாராம்.
அருளும் இத்தகை எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர் மருள் உற வியப்ப அங்கே வரம்பெற வேண்டும்’ என்னத் தெருள் உற எழுந்த வாக்கால் ‘செழுமணி முத்தாற்று இட்டு இப் பொருளினை முழுதும் ஆரூர்க்
குளத்தில் போய்க் கொள்க’ என்றார் - என்பது சேக்கிழார் பாட்டு. தங்கக் காசுகளை வாங்கிக் கொண்ட சுந்தரர், மச்சத்துண்டு (தங்கத்தின் மாற்று சரியாக உள்ளதா என்று பார்ப்பதற்கானது) வெட்டிப் பையில் போட்டுக் கொண்டு, பன்னிரண்டாயிரம் பொற்காசு களை மணிமுத்தா நதியில் கொட்டி விட்டுப் புறப்பட்டார்.
சேக்கிழார் இதோடு நிறுத்தி விட்டாலும், சுந்தரர் வெறுமே கிளம்பியிருப்பாரா என்று எண்ணத் தோன்றுகிறது.
சுந்தரர் வெறுமே போகவில்லை என்பதற் கான சாட்சியாக இருக்கிறார் ஆழத்துப் பிள்ளை யார்.
பெயருக்கேற்றாற்போல இவருடைய சந்நிதி, தரை மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 18 அடி ஆழத்தில் இருக்கிறது. இறங்குவதற்குப் படிக்கட்டுகள் உண்டு.
அதென்ன ஆழத்துப் பிள்ளையார்? சுந்தரர் பன்னிரண்டாயிரம் பொற்காசுகளை நதியில் போட் டார். போடும்போது ஒரு சந்தேகம் வந்தது. இங்கு பன்னிரண்டாயிரம் கொடுத்துவிட்டு, ஆற்றில் போடச் சொல்கிற அம்பலவாணர், திருப்பித் திருவாரூரில் கொடுக்கும்போது குறைத்துக் கொடுத்து விட்டால்? கணக்கு வைத்து, சாட்சியும் வைக்க வேண்டாமா? அறிவுபூர்வமான இந்த யோசனைக்கு உடனே ஓடிவந்து உதவுவதற்கு விநாயகர் காத்துக் கொண்டிருந்தார். ஆற்றின் ஆழத்தில் உட்கார்ந்து கொண்டு, காசுகளை ஒவ்வொன்றாகப் போடப் போட அவற்றை எண்ணி, பன்னிரண்டாயிரம் சரியாகக் கணக்குப் பண்ணிச் சொன்னார் பிள்ளையார் - அவர்தான் ஆழத்துப் பிள்ளையார்!
சுந்தரர் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டு கால கட்டத்தில், மணிமுத்தா நதி மிகப் பெரியதாக, நொப்பும் நுரையுமாகப் பாய்ந்திருக்கிறது. அது மட்டுமில்லை; மு த்தி முத்தாறு வலம் செய்யும் முதுகுன்று- என்றே சுந்தரர் பாடுகிறார். முதுகுன்றத் திருக்கோயிலைச் சூழ்ந்து கொண்டு, முத்தாறின் கிளைகள் ஓடியிருக்கின்றன.
சுந்தரருக்குப் பொற்காசுகள் எண்ணிக் கொடுத்த ஞானக் கொழுந்தனை நெஞ்சாரத் தொழுது நிற்கிறோம்.
ஆற்றிலிட்டது குளத்தில் வரும்- ஆண்டவனை வணங்கினால் வரும் என்னும் ஆணித்தரமான நம்பிக் கையை நினைவூட்டிக் கொண்டு தொழுகிறோம். எங்கே, எது, எப்படி, எப்போது, யார் யாருக்குக் கிடைக்க வேண்டுமோ, அங்கே, அது, அப்படி, அவரவருக்குக் கிடைக்கும் (அது மட்டும்தான் கிடைக்கும். ஆனால், கண்டிப்பாகக் கிடைக்கும்) என்கிற உலகப் பெரும் உண்மையைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டு, தும்பிக்கையைச் சுழித்துக் காட்சி தருகிறார், ஆனந்த விநாயகரான ஆழத்துப் பிள்ளையார்.
வேழ முகத்தானை, வித்தக விநாயகனை வணங்கி வெளிவந்து, பிராகார வலத்தைத் தொடர்கிறோம்.
கயிலாசப் பிராகாரத்தில்தான், மற்றொரு முக்கியத் தீர்த்தமான சக்கர தீர்த்தம் இருக்கிறது. திருமால் ஏற்படுத்தியதாகக் கருதப்படும் இந்தத் தீர்த்தத்தைச் சுற்றி, நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது.
கயிலாசப் பிராகாரத்தின் வடமேற்கு மூலையில், ஆகமத் திருக்கோயில் உள்ளது. சைவ ஆகமங்கள் 28 என்று கணக்கு. சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள். ஐந்து முகங்களிலிருந்தும் ஆகமங்கள் தோன்றின.
சத்யோஜாத முகத்திலிருந்து காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம் ஆகிய ஐந்தும், வாமதேவ முகத்திலிருந்து தீப்தம், சூட்சுமம், சகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம் ஆகிய ஐந்தும் தோன்றின. இவை பத்தும் சிவபேத ஆகமங்கள் ஆகும்.
அகோர முகத்திலிருந்து விஜயம், நிக்வாசகம், சுவாயம்புவம், அநிலம், வீரம் என்னும் ஐந்து, தத்புருஷ முகத்திலிருந்து ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம் என்னும் ஐந்து, ஈசான முகத்திலிருந்து புரோத்கீதம், வணிதம், சித்தம், சந்தானம், சர்வோத்திரம், பாரமேஸ்வரம், கிரணம், வாதுளம் என்னும் எட்டு - ஆக பதினெட்டும் ருத்ர பேத ஆகமங்கள். மொத்தமாக, இவை 28 ஆகும்.
‘ஆகம’ என்கிற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு ‘வந்து கொண்டிருப்பது’ என்று பொருள்; வழிவழியாக வரும் அறிவு, வழிவழியாக வரும் செல்வம், தோற்று வாயின் ஆதாரம் என்றெல்லாம் இதை விரித்துச் சொல்லலாம்.
இறைவனை வழிபடும் முறைகள், வழிபாட்டுக்கான கோயில் கட்டும் முறைகள், வழிபடுகிற வகைகளைச் சொல்லும் முறைகள் என்று நெறிமுறைகளின் தொகுப்புகளாக ஆகமங்கள் விளங்குகின்றன. 28 ஆகமங்களையும், 28 சிவலிங்கங்களாக உருவகப்படுத்தி, முருகப்பெருமான் விருத்தாசலத் தில் வழிபட்டார். அப்படி அவர் வழிபட்டதால் தோன்றிய கோயிலே, இந்த ஆகமக் கோயில்.

காமிகேஸ்வரர் (காமிகம், ஆகமம் - சிவலிங்கத் திருமேனியாகி விட்டபடியால், காமிகேஸ்வரர்) முதலாக வாதுளேஸ்வரர் ஈறாக 28 சிவலிங்கங்கள், கண்கொள்ளாக் காட்சி தருகின்றன. முறை தரும் நாயகரை முறையாக வழிபட்டு வெளி வந்து, பிராகாரத் திருச்சுற்றில் தொடர்ந்து நடக்கிறோம்.
கமத் திருக்கோயிலின் நடுவில் காட்சி தரும் வள்ளி- தெய்வானை உடனாய முருகப் பெருமானையும், அந்த முருகப் பெருமான் ஸ்தாபிதம் செய்த ஆகம சிவலிங்கங்களையும் வணங்கினோம். பிராகாரத்தின் வடக்குத் திருச்சுற்றில் வலத்தைத் தொடர்கிறோம்.
வடக்கு கோபுர வாயிலருகே, கிழக்கு நோக்கியபடி ஒரு தனிக் கோயில். அருள்மிகு விருத்தாம்பிகை சந்நிதி. விசாலமான முன் மண்டபத்துடன் இருக்கும் சந்நிதி. நிறையச் சிற்பங்களுடன் காட்சி தரும் தூண்களையும், முன் மண்டபத்தையும் தாண்டி உள்ளே நுழைந்தால், பெரிய பிராகாரம். பிராகாரம் என்று சாதாரணமாகச் சொல்லக் கூடாது. இரட்டைத்தளப் பிராகாரம் என்று சொல்வதே சரி. அம்பாள் சந்நிதி பிராகாரம், அற்புதமான அமைப்போடு விளங்குகிறது.
பிராகார வலத்தைத் தொடங்குகிறோம். நாம் நடக்கத் தொடங்குகிற அதே பரப்பில் தொடர்ந்து நடக்க வசதியாக ஒரு தளம். கோஷ்டச் சுவரை ஒட்டினாற் போல, இரண்டு மூன்று படிகள் கீழிறங்கி நடப்பதற்கு மற்றொரு தளம்- இதுதான் இரட்டைத் தள அமைப்பு. பல்லவர் காலத்து அகழிக் கட்டு மானத்தைச் சற்றே விரிவுபடுத்திக் கட்டியது போல் இருக்கிறது. கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி மற்றும் பைரவர். அம்பாள் கோஷ்டத்தில் பைரவர் காட்சி தருவது சற்றே புதுமையான அமைப்பு. பைரவரைத் தாண்டி வந்தால், இன்னொரு கோஷ்ட மூர்த்தமாக, அஷ்ட புஜ துர்க்கை. தனி மண்டபத்தில் சண்டிகேஸ்வரியும் இருக்கிறார். இந்தப் பிராகாரத்தின் சுற்றுச் சுவர் முழுவதும், விதவிதமான அம்பாள் திருவுருவங்களை வண்ண ஓவியங்களாகத் தீட்டி வைத்திருக்கிறார்கள். பார்க்கப் பார்க்கக் கண்கொள்ளாத காட்சியாகத் திகழும் உருவங்களை தரிசித்துக் கொண்டே சந்நிதிக்குள் நுழைகிறோம்.
இங்கு ஒரு விசேஷம் தெரிகிறது. அம்பாள் சந்நிதிக்குத் தனியான கொடிமரமும், வாகனமாக நந்தியும் உள்ளன. இப்போது, பிராகாரத்தில் இருந்து சந்நிதிக்கு நுழையும் வாயிலிலும் நந்தி. சாதாரணமாக அம்மனுக்குச் சிம்ம வாகனம்தான் காணப்படும். வெகு சில கோயில்களில், அம்மனுக்கும் நந்தி வாக னமே இருப்பதுண்டு. அருள்மிகு விருத்தாம்பிகை, அருள் ஸ்வரூபமாகக் காட்சி தருகிறாள். நான்கு திருக்கரங்கள். பாசாங்குசம் தாங்கி, அபயமும் வரமும் காட்டி, நின்ற திருக்கோலத்தில் அருளாசி வழங்குகிறாள். குரு நமசிவாயரிடத்தில், வேடிக்கை காட்டி விளையாடிய இந்தத் தாயை வணங்கி நிற்கிறோம். காணக் காணத் தெவிட்டாத திருக்கோலத்தைக் கண்டு கண்டு தொழுகிறோம். மீண்டும் முன் மண்டபத்தை அடைகிறோம்.
மண்டபத்தின் ஒரு பக்கத்தில், முருகப் பெருமான் சந்நிதி. இன் னொரு பக்கத்தில் கிழக்குப் பார்த்தபடி சிவலிங்கம். சிறிய தனிச் சந்நிதியாக உள்ளது. விருத்தாசலம் தலத்தில் நிறைய மகான்கள் வாழ்ந்து வழிபட்டு இறைவனை அடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நாதசர்மா. அவர் அமைத்த சிவலிங்கம் தான், நாம் பார்க்கிற முன்மண் டப லிங்கம். அம்பாள் சந்நிதி முன்மண்டபம், கோயிலின் வடக்கு கோபுரத்தை ஒட்டி அமைந்துள்ளது. சொல்லப் போனால் கோபுரத்துக்குச் செல்லும் படிக்கட்டு, மண்டபத்திலேயே உள்ளது.
காசிக்கு நிகராக விருத்தாசலம் கருதப்படு கிறது என்று பார்த்தோம் இல்லையா! காசியில் நடைபெறுபவை அனைத்தும் இங்கும் நடைபெறுவதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
கந்த புராணம் பாடிய கச்சியப்பர், முருகப்பெருமான் தேவகிரியிலிருந்து புறப்பட்டு பூமிக்கு வந்த சம்பவத்தைக் குறிப்பிடுவார். திருக்கேதாரம், காசி, திருவேங்கடமலை, திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவெண்ணெய்நல்லூர், சிதம்பரம் என்று வரிசையாக வணங்கிக் கொண்டே வந்த முருகன், திருமுதுகுன்றம் கண்டு வணங்கியதையும் கூறுவார். அப்படிக் கூறுகையில், திருமுதுகுன்றமாம் விருத்தா சலத்துக்கு அவர் கூறும் பெருமை என்ன தெரியுமா? விருத்தாசலத்தில் ஒருவர் இறக்க நேர்ந்தால், அவருடைய உயிரை இறையனார் தம் தொடை மீதிட்டு மடியில் கிடத்திக் கொள்வாராம்; அந்த உயிரின் காதுகளில் இறையனாரே பஞ்சாட்சரம் கூறி மந்திர உபதேசம் செய்ய, அம்பிகையோ முந்தானையால் விசிறி இளைப்பாற்றுவாளாம். இவ்வாறு உபதேசமும் உபசரிப்பும் தந்து, அந்த உயிரைத் தீமையற்றதாக்கித் தமது காட்சி யும் கோலமும் தந்து, இறையனார் ஆட் கொள்வாராம்.
தூசினால் அம்மை வீசத் தொடையின்மேல் கிடத்தித் துஞ்சும் மாசிலா உயிர்கட்கெல்லாம் அ செழுத்து இயல்பு கூறி ஈசனே தனது கோலம் ஈந்திரும் இயல்பால் அந்த காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்.
அம்மையும் அப்பனுமே ஆன்ம விடுதலைக்கு வழிகாட்டும் புண்ணியத் தலமான விருத்தாசலம், கோயில் அழகாலும் மனதைக் கொள்ளை கொள்கிறது. புண்ணிய மடுவில் நீராடி வந்தால், நாம் உள்ளே நுழையக் கூடிய வடக்கு வாயிலைப் பார்த்துக் கொண்டே நகர்கிறோம்.
அம்மன் சந்நிதிக்கு நேர் முன் னால், மேற்குப் பார்த்தபடி இன் னொரு சிறிய சந்நிதி. இங்கும் ஒரு சிவலிங்கம். நாதசர்மா போலவே இங்கே வாழ்ந்து முக்தியடைந்தவர்களில் ஒருவர் அநவர்த்தனி. அவர் வணங்கி வழிபட்ட லிங்கம், அநவர்த்தினி லிங்கம். அடுத்தது குபேர தீர்த்தம். குபேரன் ஏற்படுத்தியது. அடுத்து யாக சாலை மண்டபம். வடக்குத் திருச்சுற்றை முடித்து, மீண்டும் கிழக்குச் சுற்றுக்குள் வந்து விட்டோம்.
பிராகார வலத்தைத் தொடங்கும்போது பார்த் தோமே, நந்தி மண்டபம், அந்த மண்டபத்தை அடைந்து விடுகிறோம். கொடிமரமும் நந்தியும் இருப் பதால், நந்தி மண்டபம் என்று பெயர் வழங்கினாலும், உண்மையில் இது நூற்றுக்கால் மண்டபம். தூண்களில் நிறையச் சிற்பங்கள். கூடவே துணைத் தூண்கள்.
மண்டபத்தின் ஒரு பகுதி, தனியாகத் தெரிகிறது. மேடை போன்ற அமைப்பு. உற்சவ நேரத்தில், சுவாமியை எழுந்தருளச் செய்கிற இடம். இந்த அழகையெல்லாம் பார்த்துக் கொண்டே தலையைக் கீழே சாய்க்கும்போதுதான், மண்டபத் தின் முழுமையான சிறப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. வெறும் மண்டபம் இல்லை; வெறும் மேடை இல்லை; தேர்த்தட்டு, சக்கரங்கள்... ஏன், குதிரை கள் பூட்டப்பட்டு, கன ஜோராகக் காட்சியளிக்கும் தேர் மண்டபம்.
விருத்தாசலம் கோயில் மிக மிகப் பெரி யது; அதனால், ஆங்காங்கே நிறையவே மண்டபங்கள் அமைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், நிறைய நிறையச் சிற்பங்களையும் அமைக்கும் முயற்சி நடந்திருக்கிறது.
கிழக்கு ராஜ கோபுரத்தில் உள்ள பொம்மைகள், பல்வேறு புராணக் கதைகளை விளக்குகின்றன. மேற்கு கோபுரத்தில் விதவிதமான சிற்பங்கள் இருக்கின்றன. இந்தப் பக்கத்தில் ஒரு கல்யாணக் காட்சி என்றால், அந்தப் பக்கத்திலும் ஒரு கல்யாணம். இந்தப் பக்கத் தில் ஒரு முனிவர் என்றால், அந்தப் பக்கத்திலும் மற்றொரு முனிவர் என்று ரசனையோடு அமைத்திருக்கிறார்கள். அதிலும், ஒரு சமுத்திரக் காட்சி... அப்பப்பா... வாசுகிப் பாம்பின் வாலைப் பிடித்துக் கொண்ட தேவர்களும், தலைமாட்டில் நிற் கும் அசுரர்களும்... நாமும் கூடச் சேர்ந்து கடல் கடையலாம் என்று தோன்றுகிறது (தலைமாடோ, வால்மாடோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை).
வடக்கு- தெற்கு கோபுரங்களில் அவ் வளவு சிற்பங்கள் இல்லை; இருப்பவையும் சாதாரணக் காட்சிகள்தாம். வெளிச்சுற்றுப் பிராகார வலத்தை நிறைவு செய்துவிட்டு, அடுத்த சுற்றுக்குள் நுழைகிறோம்.
விருத்தாசலம் ஊருக்குள் நுழைந்து, மணிமுத்தா நதியைக் கடக்கும்போது, வெளியிலிருந்து கோயில் கோபுரங்களும் சுற்று மதிலும் தெரியும். அப்போது, ஐந்து கோபுரங்கள் கண்ணுக்குத் தெரியும். நான்கு வாயில்களிலும் நான்கு கோபுரங்கள்... ஐந்தா வது? வெளிப் பிராகாரத்திலிருந்து இரண்டாவது பிராகாரத்துக்குள் நுழையும் கிழக்கு வாயிலில் அமைந்திருப்பதுதான் கண்டராதித்தன் கோபுரம். இது தான், ஐந்தாவது கோபுரமாகத் தெரிவது. கண்டராதித்த சோழரின் திருவாட்டி செம்பியன் மாதேவியார் கட்டிய கோயில் அல்லவா (கோயிலின் பல பகுதிகளுக்கும் திருப்பணி செய்து, கல் கட்டுமானங்களை எழுப்பிக் கோயிலை விரிவு செய்தவர் செம்பியன்மாதேவியார்)- அதனால்தான், இந்தக் கோபுரத்துக்குக் கண்டராதித்த கோபுரம் என்று பெயர்.
தமிழகத்தின் கோயில் கட்டடக் கலைக்கும், பண் பாட்டுப் பெருமைக்கும் சோழர்கள் நிறையவே பங்களித்திருக்கிறார்கள். முறையே ராஜராஜ சோழனும், அவர் மகன் ராஜேந்திர சோழனும் எடுப்பித்த தஞ்சை பெருவுடையார் கோயிலும், கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு, இன்றளவும் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன. சோழப் பேரரசர்களிடம் இருந்த பண்பாட்டுச் சிந்தனைகளைத் தூண்டி விடுவதற்கு, செம்பியன் மாதேவியின் அறக் கருத்துகளும் அவர் மேற்கொண்ட கோயில் திருப்பணிகளும் முக்கியக் காரணங்களாக இருந்திருக்கின்றன. கண்டராதித்த சோழரின் ஆன்மிக அணுகுமுறையும் பலம் தந்திருக்கிறது. வருங்காலத் தலைமுறைகள் வளமோடு வாழ வேண்டும் என்பதற்காகப் பணி செய்த அந்தப் பெருமக்களை எண்ணிக் கொண்டே கண்ட ராதித்த வாயிலுக்குள் நுழைகிறோம்.
நாம் இப்போது நிற்பது, கோயிலின் இரண்டாம் பிராகாரம் - வன்னியடிப் பிராகாரம் என்று பெயர். இந்தப் பிராகாரமும் பெரியதாகவே உள் ளது. உள்ளே இருக்கும் சந்நிதிக்கு முன்பாக, பலிபீடம்; கொடிமரம்; நந்தி.
கிழக்குச் சுற்றில் நடக்கத் தொடங்கினால், முதலில் மடப்பள்ளி. தென்கிழக்கு மூலையில், தல விருட்சமான வன்னி மரம். மரத்தைத் தனியாக வலம் வரலாம். இந்தத் தலத்தில் வழிபட்டவர்களெல்லாம், சிறு சிறு சிலைகளாக வன்னி மரத்தடியில் நிற்கிறார்கள் - விபச்சித்து முனிவர், ரோமச மகரிஷி, விதர்க்கணச் செட்டியார் ஆகியோர். கூடவே இருக்கும் ஒரு சிலை கருத்தைக் கவர்கிறது - குபேரன் தங்கை!
பாஞ்சால தேசத்தில் வாழ்ந்தவர் விதர்க்கணர். அந்த தேசத்துச் செட்டி வணிகர் ஒருவரின் பொருள்களைச் சுமந்து வியாபாரம் செய்யப் போன விதர்க்கணர், மணி முத்தா நதியை அடைந்து, அங்கு ஸ்நானம் செய்து, பழைமலைநாதரையும் வழிபட்டார். அதன் பயனாகப் பெரும்பேறு பெற்றார். கோசல நாட்டு மணிபிங்கலை நகர வேதியரான விபச்சித்து, எதேச்சையாக விதர்க்கணரைச் சந்திக்கிறார். மணிமுத்தா தீர்த்தப் பெருமைகளை விபச்சித் துவுக்கு விதர்க்கணர் சொல்ல, உடனே பழைமலை அடைகிறார் விபச்சித்து. மணிமுத்தா நதியில் நீராடி, பழை மலைநாதரைப் பூசிக்கிறார்.
இதெல்லாம் சரி. குபேரன் தங்கை எங்கிருந்து வந்தாள் என்கிறீர்களா? தேவ மாதருள் ஒருத்தியான குபேரன் தங்கை, தன் தோழிப் பெண்களுடன் மணிமுத்தாவில் தீர்த்தமாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளுடைய மூக்கணி (மூக்குத்தி) காணாமல் போய்விட்டது. அதைத் தேடி அவள் கலங்கிக் கொண்டிருக்க, அங்கு வந்த விபச்சித்து, அதைத் தேடிக் கொடுக்க... மகிழ்ந்து போன அவள், விபச்சித்துக்கு பல்வேறு ஆபரணங்களைப் பரிசாக வழங்க, அவற்றைக் கொண்டு ஆலயத் திருப்பணி செய்து, உற்சவமும் நடத்தினார் விபச்சித்து முனிவர்.
விருத்தாசல புராணம் கூறும் இந்தக் கதைகளின் வெளிப்பாடாகத்தான், வன்னி மரத்தடியில் இவர்களெல்லாம் காட்சி தருகிறார்கள். வன்னி மரத்துக்கு அடுத்திருப்பது பிரம்ம தீர்த்தம். அடுத்தது ஊஞ்சல் மண்டபம். வன்னி மரத்தடி பிராகாரத்திலேயும் நம்மை சில அதிசயங்கள் வரவேற்கின்றன.
இரண்டாம் பிராகாரத்தின் தெற்குச் சுற்றில்தானே நாம் இப்போது நிற்கிறோம் - இந்தத் திருச்சுற்றில், உள் மதிலை ஒட்டினாற் போல ஒரு கொடிமரம் மேற்கு முகமாகக் காணப்படுகிறது. யாருக்கான கொடிமரம் என்று யோசித்துக் கொண்டே பிராகார வலத்தைத் தொடர்கிறோம். சோழர் கட்டுமானத்தை மீண்டும் நினைவூட்டுகிற விதத்தில், இந்தப் பிராகாரத்தில் திருச்சுற்றுத் திருமாளிகைகள் உள்ளன.
தென்மேற்கு மூலையை அடைகிறோம். மேற்குச் சுற்றில் வரிசையாகச் சந்நிதிகள். தென்மேற்கு மூலையில் பஞ்சலிங்கங்கள். அடுத்து வல்லப கணபதி. அடுத்து மீனாட்சி சொக்கேசர். தொடர்ந்து விசாலாட்சி - விசுவநாதர். நடுநாயகமாக பன்னிரு திருக்கரங்களுடன் மயிலேறும் பெருமானாக சண்முகர். இந்தச் சுற்றில் நிறைய சிவலிங்கங்கள். பலவற்றிலும் விசுவநாதர் என்றே எழுதிப் போட்டிருக்கிறது. சஹஸ்ரலிங்கச் சந்நிதி தனி யாக உள்ளது. அடுத்து வரிசையாக ஏகாம்பரேஸ்வரர், சம்புலிங்கேஸ்வரர், அண்ணாமலையார்.

ரண்டாம் பிராகாரத்தில் வடமேற்கு மூலையை அடைந்து விட்டோம். தெற்குச் சுற்றில், மேற்கு முகமாக ஒரு கொடிமரம் இருப்பதைப் போலவே, மேற்குச் சுற்றில் மேற்கு முகமாக (சண்முகர் சந்நிதியைப் பார்த்தபடி) ஒரு கொடிமரம். வடக்குச் சுற்றுக்குள் திரும்ப யத்தனிக்கி றோம். வடக்குச் சுற்றிலும் ஒரு கொடிமரம். மேற்குமுக மாகத்தான் இதுவும் இருக்கிறது.
இத்தனை கொடிமரங்களை வேறெந்தக் கோயிலிலும் பார்த்ததில்லையே என்று எண்ணிக் கொண்டே பார்வையைத் திருப்பினால்... வடமேற்கு மூலையில், திருமாளிகைத் திருச்சுற்றுச் சுவர்களில், கோயில் விசேஷங்கள் பலவற்றை எழுதிப் போட்டிருப்பது தெரிகிறது; கொடிமரக் கேள்வி களுக்கும் அங்கு விடை கிடைக்கிறது.
பஞ்சமுகங்கள் (ஐந்து முகங்கள்) கொண்டவரான சிவப் பரம்பொருளை பஞ்சபூத வடிவில் வணங்குவது மரபு. ஜாக்ரம் (விழிப்பு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்), துரியம் (நான்காம் நிலை), துரியாதீதம் (துரியத்துக்கும் மேம்பட்டது) என்னும் ஐந்து நிலைகள் (அவஸ்தைகள்) சித்தாந்தத்தால் விளக்கப்படுகின்றன. ஐந்து அவஸ்தைகளிலும் ஓர் ஆன்மா, இறைவனைப் பற்றிய எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஐந்து வகை மன்றங்களில் (பஞ்ச சபைகள்) ஆனந்தத் திருநடனம் ஆடுகிற ஆடல்வல்லானாம் அற்புதப் பரம்பொருளை, ஐம்புலன்களும் வணங்க வேண்டும். இத்தகைய மரபின் வழியாகவே, விருத்தாசலத்துக்கும் பற்பல பெருமைகளை ஐந்தைந்தாக அடுக்கி இருக்கிறார்கள்.
ஐந்து பிராகாரங்கள்: ஆலயப் பிராகாரம் மூன்று, தேரோடும் வீதி மற்றும் பஞ்சவர்ணப் பிராகாரம் (மானசிக ஆன்மப் பிராகாரம்).
ஐந்து கோபுரங்கள்: நான்கு கோபுரங்கள் மற்றும் கண்டராதித்த கோபுரம்.
ஐந்து கொடிமரங்கள் : வெளிப் பிராகாரத்தில் நந்தி மண்டபக் கொடி மரம், வன்னியடிப் பிராகாரத்தில் பிரதான கொடிமரம், தெற்கு, மேற்கு மற்றும் வடக்குச் சுற்றுகளில் உள்ள மூன்று கொடிமரங்கள்.
ஐந்து தீர்த்தங்கள்: அக்னி, சக்கர, குபேர, மணிமுத்தா நதி மற்றும் நித்யானந்த கூபம் (இறைவ னோடு இணையும் ஆனந்த ஆன்ம அனுபவம்).
ஐந்து விநாயகர்கள்: ஆழத்துப் பிள்ளையார், வல்லப விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், தசபுஜ விநாயகர், முப்பிள்ளையார்.
ஐந்து தேர்கள்: விநாயகர், பழைமலைநாதர், பெரிய நாயகி, சுப்ரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்கள்.
ஐந்து தேவர்கள் வழிபட்ட தலம்: திருமால், பிரம்மா, இந்திரன், குபேரன் மற்றும் குபேரனின் தங்கை.
ஐந்து ரிஷிகள் வழிபட்ட தலம்: சுக்கிரன், யாக்ஞ வல்கியர், அகத்தியர், அத்திரி மற்றும் காசியபர்.
ஐந்து மண்டபங்கள்: தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபச்சித்து மண்டபம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் இசை மண்டபம் (கோயில் முகப்பில் இருக்கும் மண்டபம், அம்மன் சந்நிதி முன் மண்டபம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்தால் இன்னும் அதிகமாகும்).
ஐந்து மகான்கள் வழிபட்ட தலம்: விபச்சித்து, ரோமசர், நாதசர்மா, அநவர்த் தனி மற்றும் குமாரசர்மா.
விருத்தாசல மகிமைகளை அசை போட்டுக் கொண்டே வடக்குச் சுற்றின் வலத்தை நிறைவு செய்கிறோம். இந்தச் சுற்றிலிருந்து பெரியநாயகி கோயிலுக்கு (மூன்றாம் பிராகாரம்) போகவும் வழி இருக்கிறது. கிழக்குச் சுற்றில் திரும்பினால், நமக்கு இடப் புறம் நவக்கிரகச் சந்நிதி. அடுத்து, மலை தண்டாயுத பாணி சந்நிதி. வடக்குச் சுற்றில் வரும்போதே, நடராஜ சபையின் விமானம் தெரிகிறது. மலை தண்டாயுதபாணி சந்நிதிக்கு எதிர்ப்புறத்தில் தெற்குப் பார்த்த நடராஜ சபை.
வன்னியடிப் பிராகாரமான இரண்டாம் பிராகாரத் தில்தான் இருக்கிறோம். ஆனால், கொடிமரத்துக்கும் மூலவர் வாயிலுக்கும் இடையிலுள்ள இடம், இரண்டு படிகள் மேலேறுகிற மாதிரியான மண்டப அமைப்பில் உள்ளது. மண்டபத்தின் வடகிழக்குப் பகுதியில் நடராஜ சபை. மண்டபத்தின் தென்கிழக்குப் பகுதி விசேஷமானது. இதற்கு இசை மண்டபம் அல்லது அலங்கார மண்டபம் என்று தனிப் பெயரே உண்டு. ஏழிசை மோகன குலோத்துங்க சோழ காடவராதித்தர் என்பவர், கி.பி. 1193 வாக்கில் (குலோத்துங்க சோழன் காலத்தில்) திருப்பணி செய்த மண்டபம் என்பதால் ஏழிசை மோகன மண்டபம் என்றும் பெயருண்டு (இதுதான் கல்வெட்டுகள் சொல்லும் மஹா ஸ்நபன மண்டபமாக இருக்க வேண்டும். கிருஷ்ணம நாயக்கர் கட்டிய உற்சவர் மண்டபம் என்பதுதான் வன்னியடிப் பிராகார ஊஞ்சல் மண்டபம் என்கிறார் உள்ளூர்க்காரர் ஒருவர்). எந்தப் பெயராக இருந்தாலும் சரி, இந்த மண்டபத்தில்தான் அருள்மிகு பெரியநாயகர், உற்சவத் திருமேனியில் காட்சி தருகிறார். அருகிலேயே அருள் மிகு பெரியநாயகி.
சிவபெருமானார், பெரியநாயகர் என்ற திருநாமத்து டன் உற்சவத் திருக்கோலத்தில் எழுந்தருளியிருப்பது பற்றியும் ஒரு கர்ண பரம்பரைக் கதை உள்ளது. மது- கைடபர்கள் அரக்கர்களாகத் தோன்றினர். இவர்களை வதம் செய்யத் தலைப்பட்ட திருமால், சிவனாரை வழிபட்டார். இறையனார், விருத்த வேதியராக(வயதான அந்தணராக)த் தோன்றி அருளினார் என்றும், வழிபாடு செய்த திருமால் தம்முடைய சக்ராயுதத்தால் ஏற்படுத்திய தீர்த்தமே சக்கர தீர்த்தம் என்றும், தம்பதி சமேதராகத் திரு மாலுக்குப் பெரியநாயகியும் பெரியநாயகரும் காட்சி கொடுத்தனர் என்றும் கூறப்படுகிறது.
பெரியநாயகரும் பெரியநாயகியும் அழகோ அழகு. கொள்ளை அழகோடு அருள் வழங்குகிறார்கள். திருமஞ்சனச் சிறப்புக்கு உரியவரான பெரியநாயகர், உற்சவரானாலும், வருடத்துக்கு ஒரு முறை மட்டும் தான் (மாசி மகப் பெருவிழாவில் ஆறாம் நாள் மட்டும்), வெளியில் உலா வருவார். மற்ற விழாக்களிலெல்லாம், சிறிய பழைமலைநாதர்தான் உலா வருவார். பெரிய நாயகரைப் பௌர்ணமி நாட்களிலும் பிரதோஷ காலங்களிலும் வழிபடுவது வெகு சிறப்பு.
சொல்லுக்கு அடங்காத பேரெழிலுடன் காட்சி தரும் பெரியநாயகரை வணங்கி, மூலவர் சந்நிதிக்குள் நுழைய முயல்கிறோம். அடுத்த வாயிலைக் கடந்து உள்ளே போனால், இன்னொரு பிராகாரம்- உள் பிராகாரம் அல்லது அறுபத்துமூவர் பிராகாரம். தெற்குச் சுற்றில் அறுபத்துமூவர், ரிஷபாரூடர்; தென்மேற்கு மூலையில்... ஒரு தனிச் சந்நிதி. கிழக்கு நோக்கிய இந்தச் சந்நிதியில்தான், சின்ன பழைமலைநாதர் கொலுவீற்றிருக்கிறார். இவருக்கு வலப் புறத் தில், மாற்றுரைத்த விநாயகர். சுந்தரருக்குப் பன்னிரண்டாயிரம் பொற்காசுகளை சிவ பெருமான் கொடுத்தாரல்லவா - எல்லாக் காசுகளும் அச்சு அசல் தங்கம்தானா என்று மாற்று உரைத்துப் பார்த்தவர் இந்த விநாயகர்; மணிமுத்தா நதியில் போட்ட காசுகளை எண்ணிக் கணக்கு வைத்துக் கொண்டவர் ஆழத்துப் பிள்ளையார்; திரும்பவும் திருவாரூர் குளத்தில் எடுத்தபோது, அங்கே வந்த காசுகளின் மாற்றைச் சரிபார்த்தவர் கமலாலயக் குளக்கரை மாற்றுரைத்த விநாயகர் - அப்பப்பா! பக்தர்களுக்காக இவ்வளவெல்லாம் செய்வாரா இறை வன்!
அடுத்து சுப்ரமணியர், வல்லபை கணபதி, பிந்துமாதவப் பெருமாள், வள்ளி- தெய்வானை சமேத சுப்ர மணியர்; வடமேற்கு மூலையை அடைந் தால், தனிச் சந்நிதியில் அருள்மிகு பாலாம்பிகை. பெரிய நாயகிதான் இளமை நாயகியாக வந்தாலும் கூட, பக்தர்கள் மனங்குளிரத் தனிக் கோலம் கொண்டாரில்லையா, எனவே தனிக் கோயில்!
வடக்கு உள்சுற்றில் திரும்பினால், கஜலட்சுமி, பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். தனியாக ஒரு சந்நிதி, பன்னிரு திருமுறைகளுக்காகவும் இருக்கிறது. திருமுறைகள் பன்னிரண்டையும் பீடத்தில் வைத்திருக்கிறார்கள். கிழக்குச் சுற்றில் திரும்பி சூரியலிங்கத்தையும் சூரியனையும் தரிசித்து, மூலவர் கருவறைக்குத் திரும்புகிறோம். மண்டபங்களைக் கடந்துதான் மூலவர் கருவறைக்குச் செல்ல முடியும். முதலில் மகா மண்டபம். அடுத்ததாக இருப்பது ஸ்நபன மண்டபம் (இந்த ஸ்நபன மண்டபம், செம் பியன் மாதேவியார் கட்டியது).
ஸ்நபன மண்டபமா? ஸ்தபன மண்டபமா? ஸ்நபனம் என்றால் அபிஷேகம் அல்லது நீராட்டுதல். இறைவனுக்குத் அபிஷேகம் நடக்கும் காலங்களில், நின்று பார்க்கும் இடம் என்பதும், உற்சவ காலத்தில் உற்சவருக்கும் சிறப்பு விக்கிரகங்களுக்கும் அபிஷேகம் நடைபெறுகிற இடம் என்பதும், இந்தச் சொல் வருவதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். சிலர், ஸ்தபன மண்டபம் என்கிறார்கள். பக்தர்கள் நின்று இறைவனை தரிசிக்கும் இடம் என்பதால், இதுவும் சரியாகவே இருக்கிறது.
துவார பாலகர்களை வணங்கிச் சென்று, அர்த்த மண்டபத்தில் நின்று, உள்ளே இருக்கும் மூலவரை தரிசிக்கி றோம். அருள்மிகு பழைமலைநாதர்; விருத்தகிரீஸ்வரர்; முதுகுன்றீசர் - எல் லாம் இவர்தாம்! சிவலிங்கத் திருமேனி; வட்ட வடிவ ஆவுடையார். வெகு கோலாகலமாகக் காட்சி கொடுக்கிறார். கல்வெட்டுகளில், ‘நெற்குப்பை திருமுதுகுன்றம் உடையார்’ என்று குறிக்கப் பெறுகி றார்.
மத்தா வரை நிறுவிக்கடல் கடைந்த அவ்விடமுண்ட தொத்தார் தருமணி நீண்முடிச் சுடர் வண்ணனது இடமாம் கொத்தார் மலர் குளிர் சந்தகில் ஒளிர் குங்குமம் கொண்டு முத்தாறு வந்தடி வீழ் தரு முதுகுன்று அடைவோமே!’
என்று சம்பந்தர் போற்றி வணங்கிய பழைமலை நாதரை வணங்கி நிற்கிறோம். மூலவர் கருவறையை மறுபடியும் வலம் வந்தால், கோஷ்ட மூர்த்தங்களை தரிசிக்கலாம். கோஷ்டத்தில் முப்பிள்ளையார். ஆமாம்; மூன்று பிள்ளையார்கள். மூன்று விநாயகர் களை ஒருசேர தரிசிப்பது புண்ணியத்திலும் புண்ணியம் என்று ஆகமங்கள் கூறும். அடுத்து தட்சிணாமூர்த்தி. தொடர்ந்து லிங்கோத்பவர்; பிரம்மா; கங்காதரேஸ்வரர். தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர்.
மன நிறைவான தரிசினம் கிடைத்த திருப்தியில் வெளியே வருகிறோம். இந்தக் கோயிலுக்கு ஏரா ளமான கல்வெட்டுகள் உள்ளன. கடனைத் திருப்பித் தராதவனுக்குக் கோயில் விளக்கெரிக்கும் பணி வழங் கப்பட்டதைப் பற்றி ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. பல்லவ மன்னன் கோப்பெருசிங்கன் (தாண்டவச் சிற் பங்களை அமைத்த காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கன்) பற்றியும் ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. போர்க்களத்தில் பலரைக் கொல்ல வேண்டிய கட் டாயத்துக்கு ஆளானான் இந்த மன்னன்; அந்தப் பாவம் நீங்க, பழைமலை நாதருக்கு வைரமுடி செய் தான்; வைரமுடிக்கு அவனியாளப் பிறந்தான் என்று பெயர் சூட்டினான். திரும்பி வராத கடனைப் பெறுவதற்கும், சொத்துப் பிரச்னைகள் தீர்வதற்கும் விருத்தகிரீஸ்வரருக்கு நேர்ந்து கொண்டால் போதும் என்பதற்கான உள்ளூர்க் கதைகள் நிறையவே உள்ளன. விருத்தாம்பிகையையும் விருத்தகிரீஸ்வரரையும் வணங்கிக் கொண்டு வெளிப் பிராகாரம் அடைகி றோம். விபச்சித்து மண்டபம் எதிரில் வந்து நின்ற வுடன், மாசி மாசப் பெருவிழாவின் ஆறாம் நாளில் இங்குதானே பெரிய பழைமலைநாதர் காட்சி கொடுப்பார் என்பது நினைவு வருகிறது.
விருத்தாசலம் கோயிலில் இருக்கும் பற்பல சிறப்பு கள் போலவே, சுவாமி- அம்பாள் எழுந்தருள்வதிலும் ஒரு சிறப்பு உண்டு. பெரிய நாயகர் - பெரியநாயகி இரு வரும் உற்சவர்கள்; அருள்மிகு விருத்தாம்பிகைக்கும் உற்சவத் திருமேனி உண்டு; பாலாம்பிகைக்கும் உற்சவத் திருமேனி உண்டு. உற்சவ நேரத்தில், விருத்தாம்பிகையும் பாலாம்பிகையும் உற்சவத் திரு மேனிகளில் எழுந்தருளிவிட்டால்... பெரிய நாயகியும் அருகிருக்க... மூன்று சக்திகளுடன் சுவாமி காட்சி கொடுப்பார். ‘இச்சா சக்தியும் கிரியா சக்தியும் ஞான சக்தியும் எல்லாமும் அந்த அம்மையப்பனே!’ என்று விளக்குவதாகவே இந்தக் காட்சி அமையும்.
கயிலாசப் பிராகாரத்தில் நின்று கண்டராதித்தன் கோபுரத்தையும், வாயில் திருக்கோபுரங்களையும் ஒரு முறை திரும்பிப் பார்க்கிறோம். கயிலாசப் பிராகாரத் துக்குத் தளம் போட்டவர், ஓர் ஆங்கிலேயர். தென் ஆற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ஹைட். விருத்தாசலம் இறைவரால் ஈர்க்கப்பட்ட ஹைட், பிராகாரத்துக்குத் தளம் அமைத்துக் கொடுத் தார். இன்னும் சில திருப்பணிகளும் கூட ஹைட் செய்துள்ளார். யாத்திரீகர்கள் தங்குவதற்காக ஹைட், சத்திரம் ஒன்றும் கட்டியுள்ளார்.
விருத்தாசலம் கோயிலை விட்டு வெளியில் வருகி றோம். ஆற்றிலிட்டால் குளத்தில் வருமா? வரும். யார் யாருக்கு எது எது எப்போது வர வேண்டுமோ, அதது அப்போது வரும்! எப்போதும் புதியவராக காட்சி தரும் பழைமலைநாதரை மீண்டும் வணங்கி மீள்கிறோம்!

No comments:

Post a Comment