Wednesday, 2 August 2017

வராஹீஸ்வரர் திருமேனியில் சங்கு, சக்கரம்!

 
து மகா பிரளய காலம். வானம் பிளந்தது போல் பெரும் இடிச் சத்தம் கிடுகிடுத்தது. கண்களைக் குருடாக்கி விடும் ஒளி போல் மின்னல் கீற்றுகள். வானம் பொத் துக் கொண்டு விட்டதோ என்று கருதும் அளவுக்கு கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தது மழை. ‘இதுதான் மகா பிரளய காலம்!’ என்று பூலோகத்தில் வாழ்ந்த அனைவரும் உணர்ந்தனர். இனி தங்களைக் காப்பாற்றிக் கொள்வது அரிதான விஷயம் என்பதை உணர்ந்து, நடப்பதை இறைவனின் தீர்ப்புக்கே விட்டு விட்டனர். அனைவரையும் மரண பயம் கவ்வியது.
இந்த மகா பிரளய காலத்தில் ஹிரண்யாக்ஷன் என்னும் அரக்கன், பூமாதேவியையும் அவளின் செயல்பாடுகளையும் முற்றிலும் சிதைத்து விடத் தீர்மானித்தான். பொங்கிப் பெருக்கெடுக்கும் பிரளய வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த பூமாதேவியை, ஒரு பாயைப் போல் சுருட்டிக் கொண்டு கடலுக்கடியில் புகுந்து ஓர் ஆழமான பகுதியில் ஒளித்து வைத்தான். கூடவே, பூமாதேவியை எவரும் வந்து மீட்டுக் கொண்டு போய் விடாமல் இருப்ப தற்காக, தானே காவலாக அங்கே அமர்ந்தான்.
பூமியையே ஒளித்து வைத்தால் அங்கு வசிக் கும் உயிரினங்கள் என்னாகும்? அல்லோல கல்லோலப்பட்டன. உயிர் வாழ முடியாமல் தவித்தன. தேவர்கள் ஒன்று கூடி, மகா விஷ்ணுவிடம் சென்று முறையிட் டனர். பூமாதேவியின் பதி ஆயிற்றே! சீறிக் கொண்டு புறப்பட்டார். கடலுக் குள் ஊடுருவிச் செல்ல வேண்டும் என்பதற்காக, வராஹ (பன்றி) அவதாரம் பூண்டார். கடல் நீருக்குள் புகுந்து ஹிரண்யாக்ஷனால் காவல் காக்கப்படும் பூமாதேவியைத் தேடினார். ஒரு கட்டத்தில் அரக்கன் இருக்கும் இடம் தெரிந்தது. பூமா தேவியை மீட்க, வராஹத்துக்கும் அரக்கன் ஹிரண்யாக்ஷனுக்கும் கடும் போர் மூண்டது. இறுதியில் அரக்கனைக் கொன்று, பூமாதேவியை மீட்டார் வராஹ வடிவில் இருந்த பெருமாள். தேவர் களும் முனிவர்களும் மகிழ்ந்தனர்.
பூமாதேவியின் செயல்பாடுகள் வழக்கம்போல் துவங்கின. ஆனால், இதற்கென எடுத்த வராஹ அவதாரம் முற்றுப் பெறாமல், பன்றி ரூபத்திலேயே பூமியில் அலைந்தது. பிரமாண்ட வராஹ வடிவில் இருந்த ஸ்ரீமகாவிஷ்ணுவை தேவர்களும் முனிவர்களும் போற்றித் துதி பாடினார்கள். அதன் பின் தேவர்கள், ‘‘மாலவா... தங்கள் அவதார நோக்கம் முடிந்தது. வழக்கம்போல் தாங்கள் இனி வைகுந்தத்தில் எழுந் தருள வேண்டும்’’ என்று இறைஞ்சினர்.
வராஹதாரி, வைகுந்தம் வர மறுத்து விட்டார். ‘இந்த நிலையில் நான் வைகுந்தம் வந்தால், அது பாழ்பட்டு விடும்’ என்றது வராஹம். என்ன செய்வதென்று யோசித்த தேவர்கள், ‘வராஹ வடி வில் இருக்கும் எம்பெருமானான ஸ்ரீமகாவிஷ்ணு, வைகுந்தத்தில் எழுந்தருள வேண்டும்’ என்று எல்லாம் வல்ல சர்வேஸ்வரனிடம் சென்று முறையிட்டனர். வராஹத்தின் பிரமாண்ட உருவைக் குறைக்க வேடன் உருவில் தோன்றினார் சிவபெருமான். தன் கையில் இருந்த பெரிய சூலத்தை பன்றியின் மார்பில் பாய்ச்சினார் ஈஸ்வரன். அடுத்த கணமே வராஹம், மகாவிஷ்ணுவாக ஆனது. அப்போதுதான் சுயநினைவுக்கு வந்த மகாவிஷ்ணு, ஈஸ்வரனைப் பார்த்து, ‘‘ஹிரண்யாக்ஷனைக் கொன்ற பாவத்துக்கு நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?’’ என்றார்.
‘‘நானும் நீயும் இந்த க்ஷேத்திரத்தில் லிங்க வடிவிலேயே எழுந்தருளி அருள் புரிவோம். இங்கு வந்து தொழும் பக்தர்களுக்கு நல்ல செல்வாக்கை நீ கொடு. நீலோற்பல மலர் கொண்டு என்னை அர்ச்சிக்கும் பக்தர்களின் பாவங்களைப் போக்கி நான் அருள் புரிகிறேன்’’ என்றார் ஈஸ்வரன்.
அந்த வாக்குப்படியே இந்த தாமல் க்ஷேத்திரத்தில் ஸ்ரீவராஹீஸ்வரராக எழுந்தருளினார். இந்த வராஹீஸ்வரர் லிங்கத் திருமேனியின் பாணப் பகுதியில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. இவை சுயம்புவாகத் தோன்றியதாம். தீப வழிபாடு செய்யும்போது ஆலய அர்ச்சகர் சங்கு, சக்கரத்தை நமக்குக் காட்டுகிறார்.
சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் வடமேற்குத் திசையில் அமைந்துள்ள அழகான கிராமம் தாமல். சென்னையில் இருந்து சுமார் 85 கி.மீ. தொலைவு. தேசிய நெடுஞ்சாலையிலேயே அமைந்திருக்கும் தாமல் கிராமத்தில் இருந்து இடப் பக்கம் சுமார் ஒரு கி.மீ. தூரம் பயணித்தால், ஸ்ரீவராஹீஸ்வரர் ஆலயம் வந்து விடுகிறது.
பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர மன்னர்களின் கட்டட கலைப்பாணிகள் கலந்து கலை அழகுடன் விளங்கும் இந்தத் திருக்கோயில் சிற்பங்களின் நேர்த்தி, குறிப்பிட வேண்டிய ஒன்று. காஞ்சி வரதராஜர் கோயிலில் இருப்பது போன்று, கல்லால் செதுக்கப்பட்ட அழகான சங்கிலி ஒன்றும் இந்த ஆலய கோபுரத்தின் உட்கூரையில் முன்பு இருந்து வந்ததாம்! கோயிலின் சிற்பத் தொகுப்புகளைப் பார்க்கும்போது பல்லவர் காலத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்பட்டாலும், சோழ அரசர்களான இரண்டாம் குலோத்துங்கன் மற்றும் இரண்டாம் ராஜராஜன் காலத்தில் (கி.பி. 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டுகளில்) கோயில் புதுப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. விஜய நகரப் பேரரசர்களான திருமலைராயர் மற்றும் அச்சுத ராயரால் கி.பி. 1524, கி.பி. 1532 ஆகிய வருடங்களில் இந்தக் கோயிலின் விமானம், மூலவர் சந்நிதி மற்றும் அர்த்த மண்டபம் ஆகியவை சீரமைக்கப்பட்டன. விஜயநகர கால கல்வெட்டின்படி இந்த ஆலய ஈஸ்வரர் ‘ஸ்ரீபன்றீஸ்வரமுடையார்’ என அழைக்கப்பட்டு வந்ததாக அறிய முடிகிறது.
காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் தாமல் ஸ்ரீவராஹீஸ்வரர் கோயிலுக்கும் இடையே ஒரு சுரங்கப்பாதை முன்பு இருந்து வந்தது. அந்நியப் படையெடுப்பின்போது ஆலயம் சம்பந்தப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் அணிகலன்கள் அந்நியர் வசம் சிக்காமல் இருப்பதற்காக இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஸ்ரீவராஹீஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமாக நகை மற்றும் ஆபரணங்கள் எதுவும் இல்லை. கொள்ளையர்கள் அவற்றைக் கவர்ந்து சென்றிருக்கலாம். வெவ்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்த அந்நியப் படையெடுப்பின்போது இந்த ஆலயம் பல முறை கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் ஆலயப் பகுதிகள் ஆங்காங்கே சிதைக்கப்பட்டிருக்கின்றன.
வி.என். கௌரீஸ்வரி அம்மாள் என்பவர் தற்போது ஸ்ரீவராஹீஸ்வரர் ஆலயத்தின் அன்றாட நடவடிக்கை களைக் கவனித்து வருகிறார். விழாக் காலம், உற்சவம் என்றால், இவரே பொருட்களைத் திரட்டி வைபவங்களைத் திறம்பட நடத்தி வருகிறார். இவர், இதே தாமல் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த ஆலயத்தைக் கவனித்துக் கொள்ளுமாறு கௌரீஸ்வரிக்கு உத்தரவிட்டவர் காஞ்சி ஸ்ரீமகா பெரியவர். அந்தச் சம்ப வத்தைப் பற்றி கௌரீஸ்வரி நம்மிடம் சொன்னார்:
‘‘ரொம்பவும் சுமாரான பராமரிப் போட இந்த ஆலயம் இருந்த காலத்துலேர்ந்தே தினமும் போயிண்டு வந்திட்டிருந்தேன். மிகுந்த சிறப்புகள் வாய்ந்த இந்தக் கோயில் பத்தி பலருக்கும் தெரியணும்னு எனக்கு ஆசை உண்டு. அந்த நேரத்துல காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் என்னைப் பத்தித் தெரிஞ்சுண்டு கூப்பிட்டு அனுப்பினார். மகா பெரியவாளே கூப்பிடறாரேனு பதறியடிச்சுண்டு ஓடினேன். ‘தாமல் வராஹீஸ்வரர் கோயிலை நீதான் இனிமே பொறுப்பா பாத்துக்கணும்’னார். ஒரு பக்கம் சந்தோஷம்; இன்னொரு பக்கம் வீட்டை யார் பாத்துப்பாங்கனு கவலை. ‘பெரியவா! கோயிலைப் பாத்துக்கறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா, என் குடும்பத்தை யார் பாத்துப்பா?’னு ஒரு கேள்வியைக் கேட்டேன். ‘கவலைப்படாத... உன் குடும்பத்தை ஆண்டவன் பாத்துப்பான்’னு சொன்னார். மகா பெரியவா வாயிலேர்ந்து வந்த அந்த வார்த்தைகளை மகேஸ்வரன் வாயிலேர்ந்து வந்ததா நினைச்சு, இந்தக் கோயிலுக்குன்னு என்னை முழுமையா அர்ப்பணிச்சேன். என் பசங்க, தானா முன்னுக்கு வந்தாங்க. பசங்கல்லாம் வெவ்வேறு இடத்துல இன்னிக்கு இருக்காங்க. ஆனா, நான் மட்டும் இந்தக் கிராமத்திலேயே இருந்து கோயிலைப் பராமரிச்சுண்டு வர்றேன்.
பெரியவா சொன்ன வார்த்தைக்காக என் ஆயுசு முழுக்க இங்கேயே இருந்து கோயிலுக்கு அர்ப்பணிக் கணும்னு நினைச்சு செயல்பட்டு வர்றேன். எனக்கு எல்லோருமே ஒத்துழைப்பு கொடுக்கறாங்க. இந்த வராஹீஸ்வரர் கோயிலோட பல தேவைகளை இன்னிக்கு காஞ்சி மடம் குறைவில்லாம நிறைவேத்திண்டு வர்றது.
கோயிலின் கும்பாபிஷேகம் 2.7.2001 அன்று நடந்தது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் இருக்கிற விநாயகர், சுப்ரமணியர் சந்நிதிகள் மற்றும் அம்மன் சந்நிதி போன்றவற்றைக் காஞ்சி மடம் கட்டிக் கொடுத்தது. இந்தக் கோயிலோட சிறப்புகள் இன்னும் வெளியுலகுக்குத் தெரியாமல் இருக்கு. விஷ்ணு அம்சம் நிறைந்த இந்த ஸ்ரீவராஹீஸ்வரர் லிங்கத் திருமேனி மேலே அப்பப்ப சர்ப்பங்கள் வந்து சூழ்ந்து கொள்ளும். ஆலயக் குருக்களும் நானும் பல தடவை இதைப் பார்த்திருக்கோம். ஸ்ரீவராஹீஸ்வரருக்குக் கற்பூர தீபம் காட்டியவுடனே சர்ப்பம் தானாகவே மெள்ள வெளியே நகர்ந்து விடும். இந்தத் தலம் கேதுவுக்கான பரிகாரத் தலம். ஆலயத்தின் விதானங்களில் பல சர்ப்ப உருவங்களை இன்றைக்கும் தரிசிக்கலாம். இங்குள்ள சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீசரபேஸ்வரர் சந்நிதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை அன்றும் விசேஷ அபிஷேகம், அலங்காரங்கள் நடக்கும்’’ என்றார் கௌரீஸ்வரி அம்மாள்.
இனி, ஆலய தரிசனம் செய்வோமா?
இது மேற்கு நோக்கிய சிவாலயம். ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம் முன்பு கம்பீரமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், நாட்பட நாட்பட ராஜ கோபுரம் தன் வலுவை இழந்தது. ஆங்காங்கே இடிபாடுகள் தோன்றின. ஆலயத்துக்கு வருகை தந்த அதிகாரிகள், ‘ராஜ கோபுரத்தை உடனே இடிக்கா விட்டால் அசம்பாவிதம் நேரலாம்’ என்று சொன்னதால் இடிக்க ஆரம்பித்தார்கள். 1968-ஆம் ஆண்டு நேர்ந்த இந்த இடிப்புப் பணிக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவானதாம். தற்போது நாம் காண்பது மொட்டைக் கோபுரமே!
வெளியே விநாயகர், சுப்ரமணியர், வராஹமூர்த்தி, சிவபெருமான் ஆகியோரின் சுதை உருவங்கள் முகப்பில் காணப்படுகின்றன. மொட்டைக் கோபுர நுழைவாயில் முழுவதும் கருங்கல்லால் ஆனது. வாயிலின் இரண்டு பக்கங்களிலும் கங்காதேவி, யமுனாதேவி மற்றும் சிவனின் பல வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோபுரத்தின் உட்புறத்தில் இரு புறமும் உள்ள பிரமாண்ட கல் தூண்களில் கஜலட்சுமி, சிவனின் வடிவங்கள், கணபதி, முருகன், விஷ்ணு, மார்க்கண்டேயர், கிருஷ்ணர், ஏகாம்பரநாதர், சண்டிகேஸ்வரர், லட்சுமி நாராயணர் ஆகியோரின் வடிவங்கள் மிக நேர்த்தியாக வடிக்கப் பட்டுள்ளன.
மொட்டைக் கோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைகிறோம். வலப் பக்கம் விநாயகர், இடப் பக்கம் ஸ்ரீசுப்ரமணியர் ஆகியோருக்குத் தனித் தனி சந்நிதிகள். இந்த இரண்டுமே புதிதாகக் கட்டப்பட்டவை. பழைய சந்நிதிகள் இடிந்து போய் விட்டதால், புதிதாகக் கட்டப்பட்டனவாம். ஸ்ரீசுப்ரமணியரின் பழைய சந்நிதியில் இருந்த மயில் வாகனம், அவருடைய புதிய சந்நிதியின் வெளியே கம்பீரமாகக் காணப்படுகிறது.
பலிபீடம். பிரதோஷ நந்திதேவருக்கான நான்கு கால் மண்டபம். அடுத்து வருவது பெரிய, வெளிப் புற முகப்பு மண்டபம். இதன் இடப் பக்கம் அம்மன் சந்நிதி. வலப் பக்கம் நவக்கிரகங்கள். இந்த மண்டபத்தில் ஏராளமான தூண்கள். ஒவ்வொரு தூணிலும் வியக்க வைக்கும் சிற்பங்கள். ராமர், சீதை, லட்சுமணன், ராவணன், கோபிகைகளுடன் கண்ணன், மான்- மழு ஏந்தி சிவ அம்சத்துடன் ஆஞ்சநேயர், எட்டு வகையான தட்சிணாமூர்த்தி வடிவங்கள், எட்டு வகையான பைரவ மூர்த்தி வடிவங்கள் (சில வடிவங்கள் உள் சுற்றுப் பிராகாரத்தில் காணப்படுகின்றன), அசோகவனக் காட்சி, சூடாமணியை சீதையிடம் காண்பிக்கும் அனுமன், வாலில் தீயுடன் ஆஞ்சநேயர், அரக்கியின் வாய் வழியே புகுந்து காது வழியே வெளி வரும் ஆஞ்சநேயர், வராஹ அவதாரம், நரசிம்ம அவதாரம்... இப்படி ஏராளமான சிற்பங்கள் பார்த்து ரசிக்க வேண்டிய அம்சங்கள்.
துவாரபாலகியரைத் தாண்டி ஸ்ரீகௌரி அம்மன் தரிசனம். தெற்கு நோக்கி அருள் பாலித்து வருகிறாள். கௌரி அம்மனின் பழைய சந்நிதி சிதிலமடைந்ததால், புதிதாகக் கட்டி இருக்கிறார்கள். அபய, வரத முத்திரைகள் கொண்ட நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில், தன்னை நாடி வரும் பக்தர்களை வாழ்வித்து வருகிறாள். திருமணப் பேறு அருளும் அம்மன். பௌர்ணமி தினத்தில் கௌரி அம்மனுக்கு விசேஷ அர்ச்சனை செய்து, சுமங்கலிகளுக்குத் தாம் பூலம் கொடுத்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது இந்தத் தலத்தின் ஐதீகம். திருமணம் தடைப்படுபவர்களும் இதைச் செய்யலாம். இங்கு அம்மனின் வாகனமாக யானை காணப்படுகிறது.
உள்ளே நுழைகிறோம். ஸ்ரீவராஹீஸ்வரர் சந்நிதியின் உள் சுற்றுப் பிராகாரத்தை முதலில் வலம் வருவோம். இடப் பக்கம் துவக்கத்தில் நாகர் விக்கிரகங்கள். அதன் எதிரே காஞ்சி ஸ்ரீமகா பெரியவரின் ஆளுயர உருவப் படம் ஒன்று, அழகான மண்டபத்தில் காட்சி தருகிறது. மகா பெரியவர் உருவப் படம் இங்கு வந்த கதை பற்றி கௌரீஸ்வரி அம்மாள் நம்மிடம் சொன்னார்: ‘‘ஒரு நாள் என் கனவில் மகா பெரியவர் வந்தார். ‘உன்னை இந்தக் கோயிலுக்கு சேவை பண்ணச் சொல்லி அனுப்பிச்சேன். நானும் இந்தக் கோயில்ல எப்பவும் இருக்கணும். அதுக்கு ஒரு ஏற்பாடு பண்ணு’னு சொன்னார். காஞ்சி மடத்துல இதுபத்தி சொன்னேன். மகா பெரியவா படம் ஒண்ணை வாங்கி வெக்கச் சொன்னா. உடனேயே மகா பெரியவாளோட உருவப் படத்தை வாங்கி வெச்சேன். கோயில்ல இந்தப் படம் மட்டும் தனியா இருக்கறதைப் பார்த்த இந்த ஊரைச் சேர்ந்த ஆறுமுகம்ங்கிற ஆசாரி ஒரு மண்டபம் செஞ்சு கொடுத்தார்.’’
மேற்கு நோக்கிய ஈஸ்வரன் சந்நிதி என்பதால், பிராகார வலத்தின்போது கோஷ்டத்தில் முதலில் தரிசனம் தருபவள் துர்க்கை. அதன்பின் பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, நித்திய கணபதி ஆகிய வடிவங்களை தரிசிக்க முடிகிறது. கோஷ்ட தெய்வங்களைவிட சற்றே உயர்ந்து காணப்படும் இந்தப் பிராகாரத்தின் மேல்புறம் முற்றிலும் கருங்கல் தளத்தால் மூடப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்களிலும் பல சிற்பங்கள். அதில் ஒன்று- சர்ப்ப வடிவில் காணப்படும் கேது பகவான். தவிர, கண்ணப்ப நாயனார், கிருஷ்ணனின் லீலைகள், சிவபுராணக் கதைகளில் இருந்து சில காட்சிகள் போன்ற வையும் தென்படுகின்றன.
பிராகார வலம் முடிந்து மூலவரை தரிசிக்க வருமுன் ஸ்ரீவராஹீஸ்வரர் சந்நிதியின் மகா மண்டபம். இங்குள்ள தூண்களில் நடராஜர், நர்த்தன கணபதி, வீரபத்திரர் போன்ற உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஆலய உற்சவர் விக்கிரகங்களான விநாயகர், பிரதோஷ நாயகர், சந்திர சேகரர் போன்றவை இந்த மண்டபத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. சூரிய பகவான் விக்கிரகம். இடப் பக்கம் ஒரு மேடையில் மூஞ்சூறு வாகனத்துடன் விநாயகர், நந்தி வாகனத்துடன் அஷ்டோத்ர லிங்கம் (இதன் லிங்கப் பகுதியில் 108 சிறு லிங்கங்கள் வடிக்கப்பட்டுள்ளன), அருள்மிகு சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீசரபேஸ்வரர் ஆகிய விக்கிரகங்கள் காணப்படுகின்றன.
லிங்க வடிவில் சரபேஸ்வரர். லிங்கத்தில் நாக வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து சம்ஹாரம் முடிந்து தன்னிலை மறந்து நெடுநேரம் உக்கிரத்துடன் காணப்பட்டார். அப்போது நரசிம்மத்தின் உக்கிரம் தணிப்பதற்காக சிவபெருமானே சரப அவதாரம் எடுத்து மகாவிஷ்ணுவை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தார். அந்த ஈஸ்வர கோலமே சரபேஸ்வரர்.
இந்த ஆலயத்தில் வராஹீஸ்வரருடன் சரபேஸ்வரரும் சேர்ந்திருப்பது சிறப்பான ஒன்று. தொண்டை மண்டல நவக்கிரக ஆலயங்களில் இது கேதுவுக்கான பரிகாரத் தலம். எனவே, காளசர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்பம் சம்பந்தமான எந்த தோஷங்களுக்கும் இங்கு வந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்கிறார்கள். இதற்காக வெளியூர்களில் இருந்தும் இங்கு வந்து ஹோமம், சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை போன்றவற்றை ஸ்ரீசரபேஸ்வரருக்கு செய்து விட்டுச் செல்கிறார்கள். கேது பகவானுக்கான பரிகாரங்கள் சரபேஸ்வரருக்குத்தான் நடக் கின்றன (ஆலயத்தின் பல இடங்களில் சர்ப்பம் சம்பந்தப்பட்ட சிற்பங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன). உடன் ஸ்ரீசொர்ணாம்பிகா.
ஞாயிற்றுக்கிழமை தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30- 6.00) சரபேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.
‘‘சரபேஸ்வரருக்குப் பதினோரு ஞாயிற்றுக் கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால், நாம் நினைக்கும் எந்த ஒரு நல்ல காரியமும் நடக்கும்’’ என்கிறார் ஆலய அர்ச்சகர் சரவண குருக்கள்.
துவாரபாலகர்களைத் தாண்டி அர்த்த மண்டபம். கருவறை. மூலவர் ஸ்ரீவராஹீஸ் வரர். வெளியே இவருக்கான நந்திதேவர். பலிபீடம். நாகாபரணம் தரித்து, கம்பீரமான லிங்க பாணத்துடன் காட்சி அளிக்கிறார் ஸ்ரீவராஹீஸ்வரர். சங்கு, சக்கர உருவங்க ளைத் தன் பாணப் பகுதியில் தாங்கிக் கொண்டிருக்கிறார். மகாவிஷ்ணு, வராஹ அவதாரம் எடுத்து அவதார நோக்கம் முடிந்த பின் அவர் இங்கு சிவனை வழிபட்டதற்குச் சாட்சியாக இது விளங்குவதாகத் தல புராணம் சொல்கிறது. உள்ளே இறைவன் திருமேனி மேல் சர்ப்பங்கள் சகஜமாக ஏறிச் செல்லுமாம். கும்பாபிஷேகப் பணிகளுக்காக ஆலயத்தைச் சீரமைத்தபோது வராஹீஸ்வரருக்கு மேல் உள்ள உள் விமானப் பகுதியில் எதுவுமே கை வைக்கவில்லையாம். வெளிப் பக்கம் மட்டுமே வேலை செய்தார்களாம். காரணம் மூலவருக்கு மேலே உள்ள பகுதியில் சர்ப்பங்கள் அரூபமாக வாழ்ந்து வருகின்றனவாம். பல சித்தர்களும் சர்ப்ப வடிவில் இங்கு வந்து வணங்கிச் செல்வார்களாம்.
மாசி மாத மகா பிரதோஷம், மகா சிவராத்திரி, அமாவாசை ஆகிய தினங்களில் மாலை நேரத்தில் (4.30- 6.00) சூரிய பகவான் தனது கிரணங்களால் ஸ்ரீவராஹீஸ்வரரை வழிபடுவாராம். இது சிறப்பான ஒரு தரிசனம். ‘‘மனோவியாதி, திருமணத் தடை போன்றவற்றுக்கு ஸ்ரீவராஹீஸ்வரரைப் பிரார்த்தித்தால் அருள் பெறலாம். பேச்சு வராத ஒரு குழந்தைக்கு, ஓலைச் சுவடி மூலம் படிக்கக் கேட்டு இங்கு வந்து தேனால் அபிஷேகம் செய்தார்கள். சில நாட்களிலேயே வராஹீஸ்வரர் அருளால் குழந்தை பேசத் தொடங்கியது’’ என்றார் சரவண குருக்கள்.
ஸ்ரீவராஹீஸ்வரர் தரிசனம் முடிந்து வருகிறோம். அடுத்து, வெளிப் பிராகாரச் சுற்று. செடி, கொடிகள் நிரம்பிக் காணப்படுகிறது. ஆலய மதிலின் பணி அரைகுறையாகக் காணப்படுகிறது. ஸ்ரீவராஹீஸ்வரர், கௌரி அம்மன், விநாயகர், முருகன் ஆகியோரின் விமானங்களை தரிசனம் செய்கிறோம். பிராகார இறுதியில் மடப்பள்ளி. ஸ்தல விருட்சம்- வில்வம். வெளியே ஆலயத் திருக்குளம்.
கௌரீஸ்வரி அம்மாள் நம்மிடம் சொன் னார்: ‘‘எனக்கு வயசு எழுபதுக்கு மேலே ஆயிடுச்சு. இப்பவும் எனக்கு ஒரு ஆசை இருக்கு. இந்தக் கோயிலுக்கு ராஜ கோபுரம் கட்டிப் பார்க்கணும். செடி, கொடிகள் நிரம்பி இருக்கிற வெளிப் பிராகாரம் சீராகணும். திருக்குளம் பொலிவாக இருக்கணும். கேது பகவானுக்குப் பரிகார ஸ்தலமாக இருக்கிற இந்த வராஹீஸ்வரர் கோயில், காஞ்சி மாவட்டத்திலேயே பிரபலமாக வரணும். அதுக்காக இன்னமும் பல பேரைத் தேடிப் போயிண்டிருக்கேன். அதுக்கான ஒரு நல்ல நேரமும் வரும். நம்பிக்கையோட காத்திண்டிருக்கேன்!’’
ஸ்ரீவராஹீஸ்வரரும் ஸ்ரீசரபேஸ்வரரும் அதற்கான சூழ்நிலையையும் நேரத்தையும் அருளட்டும்!
தகவல் பலகை
தலத்தின் பெயர் : தாமல்.
மூலவர் : அருள்மிகு கௌரி அம்பாள் சமேத ஸ்ரீவராஹீஸ்வரர், அருள்மிகு சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீசரபேஸ்வரர்.
அமைந்துள்ள இடம் :
சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் வரும் ஊர் தாமல். இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீவராஹீஸ்வரர் கோயில். தேசிய நெடுஞ்சாலையிலேயே தாமல் கிராமம் இருக்கிறது.
எப்படிச் செல்வது?:
காஞ்சிபுரத்தில் இருந்து ஆற்காடு, வேலூர், பனப்பாக்கம், செல்லும் பேருந்துகள் தாமல் நிறுத்தத்தில் நின்று செல்லும். அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள ஆலயத்துக்கு நடந்தும் செல்லலாம். ஆட்டோவிலும் செல்லலாம்.
போன்: 044-2724 6636

No comments:

Post a Comment