Wednesday, 2 August 2017

கல் விக்கிரகமாக ஸ்ரீ நடராஜர்!

 
பொதிகை மலை நோக்கி தென்திசையில் பயணித்த அகத்தியர், ஒரு நாள் உச்சிகால நேரத்தில் ஓர் ஏரியில் நீராடி விட்டு, கரையில் மணலால் ஒரு லிங்கம் உருவாக்கி, அதற்கு உச்சிகால பூஜை செய்து வழிபட்டுச் சென்றார். அந்த லிங்கத்துக்கு அகஸ்தீஸ்வரர் என்று பெயரிடப்பட்டு ஆலயம் எழுப்பப்பட்டது.
ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேதராக ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் அருள் பாலிக்கும் இந்தத் திருக்கோயில், புதுக்கோட் டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள எட்டியத்தளி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது 9-ஆம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
தாமரைகள் நிறைந்த ஒரு குளத்தின் கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயி லில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு இரண்டு விக்கிரகங்கள். பல ஆண்டு களாக இங்கு வழிபடப்பட்டு வந்த ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி விக்கிரகத்தின் ஒரு கரம்சேதமாகிவிட, புதிய விக்கிரகம் ஒன்று செய்து அதை பிரதிஷ்டை செய்ய கோயிலுக்குள் கொண்டு வந்தனர். அப்போது சில அமங்கலமான காரியங்கள் நிகழ்ந்தன. ‘இது அம்பாளின் உத்தரவே!’ என்று கருதி, பழைய விக்கிரகத்தை அப்புறப்படுத்தாமல், தற்போது வரை இரண்டு விக்கிரகங்களுக்கும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இங்கிருக்கும் நவக்கிரகங்களுக்கு தனிச் சிறப்பு உண்டு. திருநள்ளாறு உட்பட பல ஆலயங்களிலும் காக்கையின் முன் நின்ற கோலத்தில் சனீஸ்வரர் விக்கிரகம் அமையப் பெற்றிருக்கும். ஆனால், இந்தத் திருத்தலத்தில் சனீஸ்வரர், காக்கையின் மீது அமர்ந்த கோலத்தில் அருள் புரிகிறார். வடதிசைக்கு அதிபதியான கேதுவும், தென்திசைக்கு அதிபதியான ராகுவும், அந்தந்த திசைகளை நோக்கியவாறு அமைந்திருப்பது ஒரு சிறப்பு. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு நேர் எதிரில் நடராஜர் விக்கிரகம் உள்ளது. பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் உற்சவ மூர்த்தியாக, பஞ்சலோகத்தில் அமையப் பெற்றிருக்கும் நடராஜர் விக்கிரகம் இங்கு கல்லால் ஆன விக்கிரகமாக உள்ளது. இந்த விக்கிரகம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், சற்றுச் சிதிலமடைந்திருந்தாலும் கம்பீரம் குறையாமல் திகழ்கிறது. சுற்றுவட்டாரம் எங்கும் மலைகள் இல்லாததால், பல கி.மீ. தொலைவிலிருந்து கருங்கற்கள் கொண்டு வரப்பட்டு இந்தக் கோயிலின் பிராகாரமும், சுற்றுச் சுவர்களும், விக்கிரகங்களும் அமைக்கப்பட்டனவாம்.
திருமணத் தடைகள் மற்றும் புத்திர பாக்கியத்துக் கான பரிகார வழிபாடுகள் இந்த ஆலயத்தில் நடைபெறுகின்றன.

No comments:

Post a Comment